வளர் பிறை
கதையாசிரியர்: மாறன்
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: April 25, 2026
பார்வையிட்டோர்: 152
(1946ல் வெளியான நவீனம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
1 – சாரதாம்பாள்

இந்தப் பெண் சுந்தரி என்ன இப்படிப் பைத்தியம் பிடித்ததுபோல எப்போதும் மாடி ஜன்னலின் பக்கமே போய் ‘உம்’மென்று உட்கார்ந்திருக்கிறாள். என்ன சொன் னாலும் இவளுக்குக் காதில் ஏறமாட்டேனென்கிறதே. நான் இவளைக் கஷ்டப்படுத்தவா செய்கிறேன்? ஒரு சீமான் வீட்டுப் பெண்ணைக்கூட இவ்வளவு செல்லமாக வளர்க்கமாட்டார்கள். நான் இவளுக்கு என்ன குறை வைத்திருக்கிறேன்? என்ன குறை என்று என்னிடம் சொன்னாலாவது பரிகாரம் தேடலாம்.
ஒரு வேளை காத்துக்கருப்பு ஏதாவது அவளைப் பிடித் திருக்குமோ? பூசாரியைக் கூப்பிட்டுப் பார்க்கச் சொல்ல வேண்டும்.
ஒரு திருப்தி! சுந்தரி நாட்டியக் கலையை நன்றாகப் பயின்று கொண்டாள். ஆனால் ! அதை அபிவிருத்தி செய்யமாட்டாள் போலிருக்கிறதே. அரங்கேற்றத்தன்று எவ்வளவு கும்பல்! எல்லா ஜனங்களும் இவளுடைய ஆட்டத்தைக் கண்டு அப்படியே சொக்கிப்போய் வீட்டார் களே! அதனால் என் மனம் எவ்வளவு பூரிப்படைந்தது! என் கலை, வாழையடி வாழையாகத் தழைத்தோங்கி வருகிறதென்பதை நேரில் காண்பதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு!
அன்று, நாட்டியத்தின் முடிவில், சுந்தரி ஏன் அப்படி முகத்தைத் தொங்க விட்டுக்கொண்டிருந்தாள்? ஏதோ சபைக்கூச்சம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் அப்படி சபைக்கூச்சம் இருந்தால் நாட்டியத்தின்போதே ஜதி பிசகியிருக்குமே. எதற்காக சுந்தரி இப்படி ஏறு மாறாக இருக்கிறாள் என்று என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. எப்படிப்பட்ட ‘கடோற்கஜன் ‘களுடைய மனதையெல்லாம் நான் ஆழம்பார்த்திருக்கிறேன். என் மகளுடைய மனதை மட்டும் என்னால் அறிய முடிய வில்லையே. இவள் என்னிடம் ஏதாவது விரோதமாக நடந்துகொள்கிறாளா? அதுவும் ல்லை. பருவத்துக்குரிய மோகம், காதல், வேட்கை இவற்றினாலும் வள் வருந்து வதாகத் தெரியவில்லை. ஆண்களைக் கண்டாலே வெறுக் கிறாளே! நமது குலத்துக்கு இந்தக்குணம் இருக்கலாமா?
வீட்டில்வைத்து, சுந்தரி என்ன அழகாக வீணை வாசிக்கிறாள். ஒரு சபையில் போய்க் கச்சேரி செய்யென் றால், உடனே இவள் முகம் கோணுகிறதே. ஏன்? நாலு சபைகளில் போய்ப் பாடிக்கொண்டிருந்தாலல்லவா பெயர் பிரபலமாகும்.இவளுடைய அழகிற்கு, கோதண்டரா விடம் சொன்னால், சினிமாவில்கூட நடிக்க ஏற்பாடு செய்ய லாம். ஆனால், இந்தப் பெண்ணின் குணம் இரண்டுங் கெட்டானாக இருக்கிறதே. பண்ணையார் வீட்டுக் கலியா ணத்திற்குப் போய் இரண்டு நலுங்குப் பாட்டுப் பாடிவிட்டு வா, என்றால் இவளுக்கு வெட்கமாக இருக்கிறதாமே! தாசிப் பெண் வெட்கப்படலாமா? சங்கம்பட்டி மைனரை ஒரு நாள் விருந்து சாப்பிட வரவழைக்கலாமென்றால், சுந்தரி அன்று பார்த்து ‘உம்’மென்று உட்கார்ந்து விடுவாளே அதற்கென்ன செய்வது? மெள்ள மெள்ளத் தான் இவள் மனதைச் சரிப்படுத்த வேண்டும்.
சாப்பிடுவதில்கூட இவளுக்குக் கவனமில்லையே. வயிற்று வலிக்காரிபோல இரண்டு உருண்டை சாப்பிடு கிறாள். ஒருவேளை உடம்பில் உள்ளூர ஏதாவது பரம்பரை வியாதி இருந்து தொல்லை கொடுக்கிறதோ? ஓயாமல் படிப்பு என்ன வேண்டியிருக்கிறது இவளுக்கு? பொழுது விடிந்தால் பத்திரிகைதான் இவள் கையில் இருக்கிறது. மாலை வேளையில் முகமினுக்கி, மையிட்டுப் புன்னகை யோடு வீட்டிலிருந்தாலல்லவா லக்ஷ்மீகரம் கூடிவரும். இந்த அசட்டுப் பெண் மாடி ஜன்னலின் எதிரே போய் உட்கார்ந்து எதையோ பறிகொடுத்தவள்போலக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தால் என்ன கிடைக்கும்.
ஒரு சபையில் போய் நாட்டியமாடவோ, பாடவோ வெட்கமாயிருக்கிறதென்று சொல்கிறவள், எங்கேயாவது பிரசங்கம் என்றால் உடனே கேட்கப் புறப்படுகிறாளே! வளுடைய எண்ணம்தான் என்ன? இப்படிப் பிரசங் கம் கேட்டுக்கொண்டும் பத்திரிகை படித்துக்கொண்டுமே தன் வாழ்நாள் முழுவதையும் கழித்துவிடலாமென்று பார்க்கிறாளா? அட பைத்தியக்காரப் பெண்ணே! உலக முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு ஜீவனுக்கும் உழைப்பு உண்டு. தன் பங்கு வேலையைச் செய்யாமல், உலகம் தரும் உணவை உண்டு காலம் போக்குவது பாவம்! கலை வாழ்வு எவ்வளவு மேன்மையானது. நமது குலம் செய்த பாக்யத்தினால்தான் அரிய கலைகளான சங்கீதமும் நாட்டிய மும் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. இதற் காக நாம் எவ்வளவு பெருமைப்படவேண்டும்! மேலும், பெண்மையின் முழு வசீகர சக்தியும் நம்மிடமல்லவா அமைந்திருக்கிறது. பெரிய பெரிய உத்தியோகஸ்தனும், பணக்காரனும் நம்மிடம் வந்து தெண்டனிட்டுக் காதல் பிச்சை கேட்கிறார்களே! இதெல்லாம் தெரிகிறதா இந்தப் பெண்ணிற்கு!
நமது குலத்துப் பெண்ணுக்குக் கொஞ்சம் முக வெட்டும், நளினமான பேச்சும் இருந்துவிட்டால் லக்ஷ லக்ஷமாகப் பணம் குவிக்கலாமே. என் மங்கைப் பரு வத்தில் நான் எவ்வளவு மிடுக்காக வாழ்ந்தேன் ! சுந்தரி யைப் போலவா அழுது வழிந்து கொண்டிருந்தேன்? நான் போகுமிடங்களெல்லாம் முகங்கள் திரும்புமே! நேரத்திற்கொரு உடை உடுப்பேன். வேளைக்கொரு நகை அணிவேன். என் வீடு முழுதும் கூட்டமும் குதூகலமுமாக இருக்குமே. அந்தக் காலத்தையும் இந்தக் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால்! அட அநியாயமே! சுந்தரி வய தடைந்து இரண்டு வருஷமாயிற்றே! இதுவரை ஒரு செப்புக்காசு வரும்படி உண்டா! சுந்தரியின் அழகிற்கும் கலைக்கும், இந்த இரண்டு வருஷத்திற்குள், நான் சம்பாதித்ததைவிட இரண்டு மடங்கு செல்வம் சம்பாதித்திருக்க லாமே! உம்…. இதன் தலை விதி எப்படி எப்படி இருக்கிறதோ!
வைத்தியம் பண்ணிப் பார்க்கலாம் அல்லது குறி கேட்டுப் பார்க்கலாம் என்றால், இவள் ஒன்றுமே வேண்டா மென்கிறாளே! இப்படியும் ஒரு பைத்தியம் உண்டா? சிறு வயதில் எவ்வளவு சூடிகையாக இருந்தாள்! எவ்வளவு லகுவாக நாட்டியமும், சங்கீதமும் கற்றுக்கொண் டாள். இப்பொழுதுதானே இப்படி அசமந்தமாகி விட்டாள்.
இவளைக் கோபிக்கவோ, திட்டவோ எனக்கு மனம் வரமாட்டேனென்கிறது. என்னதான் குற்றம் செய்கிறாள்! ஒன்றும் இல்லை. எதற்கெடுத்தாலும் வெட்கமா யிருக்கிறதென்கிறாள். இவள் மனசு இப்படி இருக்கும் போது, இவளை நான் பயமுறுத்தித் திருப்ப முடியுமா? நான் பயமுறுத்தினால் இவள் யாரிடம் போய் ஆறுதல் பெறமுடியும்? ஒரே பெண்! எவ்வளவோ செல்லமாக வளர்த்துவிட்டேன். ஆகையால் அதன் போக்குப்படியே போய்த்தான் திருப்ப வேண்டும். புதுக்குதிரைகளை வண் டியில் பூட்டியவுடன் மிரளத்தானே செய்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதன் மருட்சியைப் போக்க வேண்டும். இவளுடைய அழகும் பருவமும் வீணாகக் கழிகிறதே! பருவகாலத்தைத் தவறவிட்ட விவசாயிக்கு நல்ல மாசூல் கிடைக்குமா?
நான் தேடிவைத்திருக்கும் பணத்தைக்கொண்டே வள் சுகமாக ஜீவிக்க முடியும். ஆனாலும் இந்தச் சோம் பேறி வாழ்க்கை நமக்கு உதவுமா? இவளே இப்படி இருந்தால் இவளுக்குப் பிறக்கும் பெண் இதைவிடச் சோம்பேறியாகவல்லவா போய்விடும். எங்கள் பரம்பரை யிலேயே இல்லாத புது தினுசாக அல்லவா இருக்கிறது இந்தப் பெண்ணின் குணம்! என் போதனைகள் இவ ளுக்கு வேம்பாகப்பட்டால் இவள் எப்படி சந்தோஷமாக வாழ்வது? எப்படிப் பணம் சேர்த்து நாலு தாசிகளைப் போலப் பெயரெடுப்பது?
குஞ்சரத்தின் மகள் என்ன சுந்தரியைப்போல் அவ் வளவு லக்ஷணமா? சங்கீதமும் ஏதோ ‘கன்னாப்பின்னா என்று பாடுகிறாள். அவளுக்கு எவ்வளவு பவிசு வந்து குவிகிறது. குஞ்சரம் அதையெல்லாம் பார்க்கக் கொடுத்து வைத்த பாக்யவதி. நான் இந்தப் பைத்தியத்தை வைத்துக்கொண்டு கவலைப்பட வேண்டிய அபாக்யவதி! யாருக்கு என்ன பிழை செய்தேனோ ! எனக்கு இப்படிப் பட்ட பெண் வந்து வாய்த்திருக்கிறது. நான் அடிக்கடி தூண்டிக்கொண்டிருக்கவில்லையானால், சங்கீதத்தையும், நாட்டியத்தையும்கூட இவள் அடியோடு விட்டுவிடுவாள். என்ன வாய்ப்பான சாரீரம். உலகத்தில் நன்றாக சோபிக் கக்கூடிய சங்கீத ஞானமும் லகுவாக அமைந்துவிட்டதே. இவளுக்குள்ள சங்கீத ஞானத்தில் அரைக்கால்வாசி இருந் தால், குஞ்சரத்தின் மகள் இந்த ஊரில் பாதியை விலைக்கு வாங்கி விடுவாளே !
பிரகதீஸ்வரா! நீதானப்பா சுந்தரிக்கு நல்ல புத்தி யைக் கொடுக்க வேண்டும். கோவில் பட்டர் அருமையா கப் பிரசாதம் கொண்டுவந்து கொடுத்தால், இவள் அன் போடு வாங்கிக்கொண்டாலல்லவா நன்மைகளெல்லாம் கிடைக்கும். தலையைக் குனிந்து கொண்டே, வேண்டா வெறுப்பாகக் கடவுள் பிரசாதத்தை வாங்கினால் திருவருள் கிடைக்குமா? பட்டர்தான் இதற்கு எவ்வளவு கேலி பண்ணினார்!
வீட்டுக்கு ஒரு மனிதர் வந்தால் இரண்டு நிமிஷமாவது அவரோடு அன்பாகப் பேசினால் அல்லவா நன்றாக இருக் கும். ஆண் பிள்ளைகளைக் கண்டால் பேய்களைக் கண்டது போலப் பயந்து ஓடுகிறாளே! நமக்கு வரவேண்டிய பண மெல்லாம் இந்த ஆண்களிடம் சிக்கியிருக்கிறதென்பதை வள் உணரவில்லையே. சம்பாத்தியம் என்பதில் இவ ளுக்குச் சிறிதுகூட அக்கரை இல்லை.
இனியும் இப்படியே விட்டுவிட்டால் குடிகெட்டுப் போய்விடும். கொஞ்சம் கண்டிப்பாக இருந்தால்தான் சரிப்பட்டு வருவாளோ என்னவோ ! நயமாகச் சொன் னால் ஏறாது. ஆனால் ஒரு வேளை இவள் என்னையே எதிர்த் துப் பேச ஆரம்பித்து விட்டால்! பிறகு அதுவே வழக்க மாகப் போய்விடும். அப்புறம் இவளோடு சதா தகராறு பண்ணிக்கொண்டிருக்க வேண்டியதுதான். நாலு பேர் பார்த்தால் சிரிப்பார்கள். அதற்கும் இடம் கொடுத்து விடக்கூடாது. மெட்டும் தட்டுமாகப் பழகித்தான் இவள் மனதைத் திருப்பவேண்டும். எதற்கும் குறிகாரப் பொன் னனிடம் போய்க் கேட்டுப்பார்க்கலாம். ஏதோ கிரகசாரம் தான் இவளை முன்னேற விடாமல் இப்படி வைத்திருக் கிறது. பரிகாரம் ஏதாவது செய்துவிட்டால், கிரகதோஷம் தீர்ந்துவிடும். பாடவைத்துப் படிக்கவைத்துப் பலனில்லா மல் போய்விட்டால் என்னசெய்வது? நாளைக்கு எனக் கல்லவா அவமானம்.
2 – சுந்தரி
இந்த மாடி ஜன்னல்எனக்கு எவ்வளவு ஆறுதல் அளிக் கிறது! தனிமைக்கே ஒரு சுகம் உண்டுதான். உள்ளே உறைந்துகிடக்கும் எண்ணங்களையெல்லாம் புரட்டிப் புரட்டிக் கொடுக்கலாம். அதோ அந்தப் பனைமரத்தின் ஓலைகள் எப்பொழுதும் ‘சல சல வென்று கதறிக்கொண் டேயிருக்கிறதே! அதற்குக்கூட என்னைப்போன்று ஓயாக் கவலைகள் உண்டோ என்னவோ!
அன்று என் காலில் குத்தியிருந்த கண்ணாடிச் சில்லை இந்த ஜன்னல் வழியாகத் தூர வீசியெறிந்தேன். அது போல என் மனதைக் குத்திக்கொண்டேயிருக்கும் எண் ணக் குமுறல்களையெல்லாம் வீசி எறிவதற்கும் இதுபோல ஒரு சாளரம் இருந்தால் எனக்கு எவ்வளவு நிம்மதியளிக்கும்! என் கவலைகளையெல்லாம் மறக்கவேண்டுமென்று எத்தனை தடவை முயற்சிக்கிறேன்! ஆனால் அவைகள் பழையபடி பழையபடி கடிகார முட்களைப்போல என் நெஞ்சிலேயே சுழன்றுகொண்டிருக்கின்றனவே!
துக்கத்தையும் கவலைகளையும் பிறரிடம் சொன்னால் சிறிது ஆறுதல் கிடைக்குமென்று சொல்வார்கள். என் மனக்கஷ்டத்தை யாரிடம் சொல்வது? சொன்னால் சிரிக் கவல்லவா செய்வார்கள்.
என்தாய் சாரதாம்பாளுக்கு என்னைப்பற்றி, நான் அவள் மகள் என்பதைத்தவிர வேறு என்ன தெரிகிறது! அவளுக்குச் சொன்னால் புரியப்போவதில்லை. தனிமை யிலேயே புலம்பிக்கொண்டும் கவலைக்கு ஒரு முடிவு கா மலுமே என் வாழ்க்கை முழுதும் பாழாகிவிடுமோ?
நான் ஏன் இந்தத் தாசிக் குடும்பத்தில் பிறந்தேன்? சே! நான் சொல்வது தவறு. பிறந்தது என் குற்றமல்ல. இந்தச் சமூகத்தின்பேரில் ஏற்றப்பட்டிருக்கும் அவமானத் தைக் களைந்தெறிய நான் முயற்சிசெய்யவேண்டும். ஆனால் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் நான் மட்டும் முயற்சிசெய்தால் என்ன பயனிருக்கிறது? நூலைக்கட்டித் தேரை இழுத்துவிட முடியுமா?
மற்றச் சமூகங்களெல்லாம் கற்புடன் வாழ்வதற்கு எங்கள் சமூகம் கெட்டுப்போகவேண்டுமாம். ஜனசமுதா யத்தின் அமைப்பு என்ன அழகாக இருக்கிறது! குடும்பப்பெண் கற்புநிலை தவறினால் ஜனங்களுக்கு எவ்வளவு ஆத்திரமுண்டாகிறது ! எங்களுக்கு விபசாரமே தொழி லாம்! இந்த (அ)நீதி ஆதிகாலம்தொட்டு வாழையடி வாழையாகத் தழைத்து வந்திருக்கிறது! ஏன்? எங்கள் தாசி வகுப்பினரும்கூட இந்த வாழ்க்கையையே விரும்பி வாழ்ந்து வருகிறார்கள். ஆண்களை அடிமைப்படுத்துவதில் பெண்மைக்குக் கிடைக்கும் வெற்றியைக் கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள். ஆனால் மற்றச் சமூகங்களின்முன் தங்கள் கௌரவம் எந்த நிலையில் இருக்கிறதென்பதை அடியோடு மறந்து விடுகிறார்கள்.
அன்று சபையில் என் நாட்டியத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அத்தனை ஆண்களும் எனது கலையழகையா மதித்தார்கள்? இந்த ஆண்கள் என் உடலைக் கண்டு என்ன மோகம் கொள்கிறார்கள்! அகத்திலுள்ள காமப் பேயின் ஆட்டத்தை அவர்களுடைய முகங்கள் தான் காட்டி விடுகின்றனவே! ரொம்பக் களரவமான உடைகளை அணிந்துகொண்டு உட்கார்ந்து விடுகிறார்கள். அவர்கள் மனமல்லவா கௌரவமாக இருக்க வேண்டும் !
நாட்டியம் பார்ப்பவர்களைக் குறை சொல்லி என்ன பயன்? நான் நாட்டியம் ஆடினால் அவர்கள் ஏன் பார்க் கக்கூடாது? எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம்தான். ஆடவைத்துப் பார்க்கவேண்டுமென்றே எங்கள் சமூகத் தின்மீது விதித்துவிட்டதே ஜன சமுதாயம்! எனக்குப் பொது மடந்தையென்று சமூக நாமம்! அப்பப்பா! இந்தப் பெயரைச் சொல்லக்கூட எனக்கு அவமானமாக இருக்கிறது!
எங்கள் வீடுகூட்டும் வேலைக்காரிகூட சமுதாயத்தின் முன் கண்யமானவளாக மதிக்கப்படுகிறாள். ஆனால் நானோ ! என்னை யாரும் தீண்டலாம்! அது குற்றமில்லை யாம்! இம்மாதிரியான ஒரு சமூகத்தை நிர்மாணித்த வர்கள் வெறும் காமுகர்களாகவே இருந்திருக்கவேண்டும்.
என் தாயைப்பற்றி நினைத்தால் எனக்கு வருத்தம்தான் உண்டாகிறது. கோபமே வரவில்லை. அவள் என்ன செய்வாள்! சிறந்த நாட்டியக்கலை அவளிடமிருக்கிறது. சாரதாம்பாளின் நாட்டியமென்றால் நாடு முழுவதும் சொல்லுமே! பரம்பரையான கலை நன்கு தழைத்து வளரவேண்டுமென்றே அவள் இதில் எனக்கு நன்றாகப் பயிற்சி கொடுத்திருக்கிறாள். நாட்டியத்தில் தனக்கு மேலாக நான் புகழ் பெறுவேனென்ற நம்பிக்கையும் அவ ளுக்கு இருக்கிறது. கலைக்காகப் பணிசெய்ய நான் தயார் தான். ஆனால் இந்தப் பருவத்தில் பணம் திரட்டவேண்டு மென்று அடிக்கடி அவள் போதனை செய்கிறாளே, அது தான் எனக்குப் பிடிக்கவேயில்லை. பாவம்! என் மனதி லிருப்பதை அவள் எப்படி அறிய முடியும்! கற்புடன் வாழப்போகிறேன் என்றால் அது அவளுக்கு ஏதோ தென்னை மரத்தில் வாழைக்காய் காய்ப்பதுபோல் விபரீத மாகப்படும்.
பண்ணையார் மகனுக்குக் கலியாணமென்றால் எனக் கென்ன? நான் போய் நலுங்குப் பாட்டுப் பாடி சன் மானம் வாங்கிக்கொண்டு வரவேண்டுமாம். கலியாண வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்களைத் திருப்திப்படுத்த நான் போய்ப் பாடவேண்டுமாம். என்னோடு படித்த பெண்களெல்லாம் அங்கே நாணிக்கோணிக் கொண்டு கதவுப் பக்கம் நின்றுகொண்டிருப்பார்கள். நான் மட்டும் லஜ்ஜையில்லாமல் சபை நடுவில் உட்கார்ந்து பாட்டுப் பாடவேண்டுமாம். சபையிலுள்ள எல்லோரும் என்னைப் பார்த்து இளிக்க வேண்டும்! “சோடா வேண்டுமா?” என்று ஒருவன் வருவான். “சுந்தரிக்கு வெத்திலை கொடுடா முதல்லே” என்று ன்னொருவன் உபசாரம் பண்ணுவான். என் மீ து ரொம்ப அபிமானம் காட்டுகிறானாம் அவன் ! சமுதாய வழக்கமல்லவா அவனுக்கு என்மீது அவ்வளவு உரிமை கொண்டாட வசதியளித்திருக்கிறது. சமுதாயத்தில் நான் கெளரவமாக- ஒருவனுடைய மனைவியென வாழ முடியாதா? என் மீது அபிமானம் காட்டும் இந்த ண்களின் கூட்டத்தில் ஒருவனாவது துணிந்து என்னைத் தன் மனைவியாக ஏற்றுக்கொள்வானா? மாட்டான். எல்லோரும் வேஷக்காரர்கள் வஞ்சகர்கள்.
தாசிகளை நரகத்திற்கும் சிலந்திப் பூச்சிக்கும் ஒப்பிட்டுப் பேசும் ஆண்கள், தாங்கள் ஆஷாடபூதிகளாக வாழ்வதை எடுத்துக் காட்டுவதேயில்லை. தங்கள் சுகத்துக்கென்று ஒரு சமூகத்தை நிறுவித்து, அதைப்பற்றித் தாழ்வாகப் பேசுவது; எழுதுவது! ஆனால் இரகசியத்தில் எங்கள் காலடியில் வந்து விழுவது. என்ன கபட நாடகம்! பெரிய சீர்திருத்தவாதிகள் போல, எங்கள் குலத்தினால் சமுதாயத்திற்கு ஏற்பட்டுவரும் கெடுதல்களை அடுக்கு கிறார்களே, அவர்களுடைய சொந்த நிலைமையை நான் நன்றாக அறிவேன். எங்களுடைய ஒரு புன்னகையில், ஒரு கண் வீச்சில், அவர்களுடைய லட்சியங்களெல்லாம் காற்றாய்ப் பறந்துவிடுகிறது. உலகம் உள்ளளவும் இந்தச் சீர்திருத்தப் பேச்சும் இருந்துகொண்டேதான் இருக்கும். கண்ணகியையும் மாதவியையும் சிருஷ்டித்த கதாசிரியன் என்ன நினைத்திருப்பான்! கண்ணகியின் கற்புத்திறமை உலகத்தில் என்றென்றும் பிரகாசிப்பதற்காகவே மாதவி யென்ற ஒரு கதாபாத்திரத்தையும் அருகிலே வைத்திருக் கிறான். கண்ணகியும் பெண். மாதவியும் பெண். கண்ணகிக்கு உயர்வு கொடுக்கிறார்கள். மாதவியைத் தாசியென்று இகழ்கிறார்கள். மாதவி தன் குலத் தொழிலைத்தானே நடத்தினாள். சமுதாயம்தானே அவளைத் தாசியாக்கியது! அதே சமுதாயம், தன் கடமையைச் செய்த அவளை இகழ் கிறது! எச்சில் தம்பலத்தைத் தன் உடையிலேயே துப்பிக் கொண்டு பிறகு அதைப் பார்த்து அசிங்கப்படுவதுபோல இருக்கிறது இந்தப் பைத்தியக்காரச் செய்கை !
சங்கீதக் கலையையும், நாட்டியக் கலையையும் சமுதாயம் எங்களிடம் ஒப்படைத்துவிட்டது. கலை, கலைக்காகத் தானே! நாங்கள் நடத்திவரும் ஈனத் தொழிலுக்கு விளம் பரம் போலவா கலையை வளர்ப்பது? ஆண்டவன் சந்நி தானத்தில் பக்தி பரவசத்தை வெளியிடுவதற்காக ஏற் பட்ட எங்கள் கலைகளை மிகக் கீழ்த்தரமான ரசனையோடு காண ஆசைப்படுகிறார்கள் காமப்பித்தர்கள். எங்கள் கலை யும், எங்கள் கௌரவமும் உயர்வடையக் காலதேவன் அருள் புரிவானா?
எனக்கு மட்டும் இத்தகைய உணர்ச்சி உண்டாவ தற்குக் காரணம் என்ன? என்னைப்போன்ற தாசிகள் எத் தனையோ பேர் இருக்கிறார்களே. அவர்கள் எல்லோரும் இதைப்போல ஏன் எண்ணவில்லை? அவர்களும் இப்படி உணர்வார்களானால் எவ்வளவு சீக்கிரமாக எங்கள் குலத் திற்கு மேன்மை கிடைக்கும் ! அது எந்தக்காலத்தில் நடக்குமோ? ஜனசமுதாயம் எத்தனையோ வழிகளில் முன்னேறிக்கொண்டு போகிறது. காலச்சுழலில் எத்தனை எத்தனை மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன! நான் விரும்பும் இந்த மாறுதலும் ஏன் ஏற்படக்கூடாது? சீர்திருத்தம் செய்யப் பறக்கிறவர்களுக்கு தியாகபுத்தி, சகிப்புக் தன்மை என்ற சிறகுகள் வேண்டும். வீடுவாசல், தாய், சொத்து, சுகம் வைகளையெல்லாம் என் லட்சியத்திற் காக விட்டுச் செல்லவேண்டியிருக்கலாம். எத்தனையோ இன்னல்கள் எதிர்ப்படும். அவைகளைக் கண்டு மலைத்தால் என் லட்சியம் சித்தியாகாது. அவ்வளவு துணிவு என் னிடம் இருக்கிறதா? ஏன் இல்லை ? கடலைக்கடக்க வேண்டுமென்ற இலட்சியம் தோன்றினாலே அதற்குச் சாதனமாகிய கப்பலைச் செய்வதற்கு, அறிவு தீவிரமாக முயற்சிசெய்கிறது. இலட்சிய வேகத்திற்கு ஏற்றபடி அறிவு தீவிரமாகத் துணை செய்யும். நான் செய்யும் முயற்சி இன்று பலனளிக்காவிட்டாலும், பின் சந்ததி யாரின் லட்சியப் பாதைக்கு நான் ஒரு தூண்டுகோலாகவா வது இருக்கமாட்டேனோ! பார்க்கலாம்.
எனக்குக் காதல் வேண்டாம்; கல்யாணம் வேண்டாம். என்னைத் தன் மனைவியென்று ஒப்புக்கொண்டு என்னோடு குடும்பம் நடத்தக்கூடிய தைரியசாலி ஒருவனைத் தேடிப் பிடிக்க வேண்டும். அவனே என் வாழ்க்கைத் துணைவன்; என் கணவன். அப்படி வருபவனுடைய நலத்தை நான் கவனிக்கவேண்டும். அவன் அழகனாகவும் குணசாலியாக வும் இருந்தால் நல்லது. இத்தனை அம்சங்கள் அமைந் திருந்தால் போதுமானது. எந்த ஜாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி. எனக்குத் தெரிந்தவர்களில் இப்படிப் பட்டவன் யாராவது இருக்கிறானா?
என்னோடு பள்ளிக்கூடத்தில் படித்தானே பூக்கார வடிவேலு, அவன் ஏழைதான். ஆனாலும் நல்ல குணம். என் மனதிற்குகந்த அழகன்தான். கலியாணம் முடிந்து இரண்டு வருஷத்திற்குள் மனைவியை இழந்துவிட்டு வருந் துகிறான். தன்னுடைய குழந்தையை வளர்க்க முடியாமல் வேறு திண்டாட்டம் ஏற்பட்டிருக்கிறது அவனுக்கு. அவ னுக்கு நான் மனைவியானால் அனாதரவான அவன் குழந் தையை வளர்த்த பலனும் எனக்குக் கிடைக்கும். சதா மனக் குமுறல்களையே நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் எனக்குக் குழந்தைப் பராமரிப்பு மிகவும் ஆறுதலளிக்கும்.
நான் எப்படியெல்லாமோ மனக்கோட்டை கட்டுகி றேனே ! வடிவேலு இந்த ஏற்பாட்டிற்குச் சம்மதிப்பானோ என்னவோ தெரியவில்லையே! பள்ளிக்கூடத்தில் படிக் கும்போது அவன் என் மீது மிகவும் பிரியமாக இருந்தான். வயது வந்தபிறகு அவன் என்னோடு அவ்வளவாகப் பேசு வதே இல்லை. இப்பொழுது அவனுடைய மனநிலை எப் படியெல்லாம் மாறியிருக்கிறதோ? தினமும் மாலையில் இந்தப் பாதையாகத் தானே வருவான். இன்று அவ னோடு பேச்சுக்கொடுத்துப் பார்க்கலாம்.
“சுந்தரி! சுந்தரி!”
அம்மாவின் குரல்தான். அம்மாவிற்கு என்மீது எவ் வளவு வாஞ்சை ! இவளுடைய இஷ்டத்திற்கு விரோத மாக நடக்கவே எனக்கு என்னவோபோலிருக்கிறது. நான் ஒரே மகள் தானே வளுக்கு ! நான் இவளுடைய கொள்கைக்கு எதிரிடையாகக் கிளம்பிவிட்டால் இவளு டைய மனம் என்ன பாடுபடும்! தியாக புருஷர்கள் எவ் வளவோ பேர் உற்றார் உறவினர்களை விட்டுவிட்டுத்தானே செல்கிறார்கள் ! தாயின் அன்பைவிட சமூகசேவை மேல். அதையே நான் துணிந்து செய்யத் தீர்மானித்து விட்டேன். ஆவது ஆகட்டும்.
3 – வடிவேலு
என் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாறுதல் ஏற் படப்போகிறது! என்னால் நினைத்துப் பார்க்கவே முடிய வில்லை! தகப்பனார் வைரவப் பண்டாரம் இருந்த காலத்தில் பூந்தோட்டத்திலிருந்து ஏராளமாகச் செல்வம் குவிந்துகொண்டிருந்தது. எவ்வளவு சிறப்பாக எனக்குக் கல்யாணம் நடத்தினார்.
என்னை நன்றாகப் படிக்கவைத்துவிடவேண்டுமென்று தகப்பனார் எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் எல்லாம் கொடுத்துவைத்தால்தானே கிடைக்கும்! படிப் பில் எனக்கு மனமே செல்லவில்லை. ஏதோ ஆறாவது வகுப்போடு படிப்பையும் நிறுத்தினேன். எங்கள் தோட் டத்தை மேல்பார்வை பார்த்துக்கொண்டிருந்தேன். புஷ்ப வியாபார நுணுக்கங்களை நான் நன்றாக அறிந்துகொள்வ தற்குள் தகப்பனார் இறந்துவிட்டார். இந்த நிலைமையில் வேலையாட்கள் என்னை ஏமாற்றாமலிருப்பார்களா? ஏதோ தங்கள் கையில் அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டார்கள்.
நல்ல வேளையாகத் தகப்பனார் என்னை நல்ல பிள்ளை யாகவே வளர்த்துவிட்டார். அதனால் வீண் செலவுகள் செய்து நான் ஏழையாகிவிடவில்லை. பிறர் செய்த நம் பிக்கை மோசத்தினால் என் தகப்பனார் தேடிவைத்த பணத் தில் கொஞ்சம் போய்விட்டது. அதனாலென்ன? என் சாமர்த்தியத்தைக்கொண்டு நான் பொருள் தேட முடி யாதா என்ன?
பூ வியாபாரம் பழையபடி நன்றாக நடக்கவேண் டு மென்பதற்காகப் பல முயற்சிகள் செய்துகொண்டு வந் தன். அந்தச் சமயத்தில் மனைவியின் பிரசவம் வந்து சேர்ந்தது. சேச்சே! திரும்பத் திரும்ப அவள் நினைவே தான் மனதில் வட்டமிடுகிறது. எனக்குச் சகல செல்வ மும் அவளாகவே இருந்தாள். எமனுக்கு பொறுக்க வில்லையே! எனக்கு ஆறுதலுக்காக ஒரு ஆண் குழந் தையை மட்டும் விட்டுவிட்டுப் போய் விட்டாள். குழந் தையைப் பார்க்கும்போதெல்லாம் அவள் நினைவுதான் வருகிறது.
என் அக்காள் வீட்டில் அவளுக்குள்ள தொல்லைபோதா தென்று என் குழந்தையையும் கொண்டுவிட்டிருக்கிறேன். அக்காள் எவ்வளவுதான் அருமையாகப் பார்த்தாலும், இதற்கென்று தனியாகக் கவலை எடுத்துக்கொள்ள முடி கிறதா? அவளுக்கும் ஐந்து பிள்ளைகள். அவள் கணவ னும் கொஞ்சம் கோபக்காரர். ஏதோ நடந்தவரையில் நடக்கட்டும் என்றுதான் இருக்கிறேன். நான் இந்தக் கவலைகளோடு புஷ்ப வியாபாரத்தைக் கவனித்து வரு கிறேன். ஆனால் மனம் எங்கெங்கோ வட்டமிட்டுச் சுழ லும்போது சரீரம் தளர்ச்சியடையத்தானே செய்கிறது. மனைவி இறந்த துக்கம், செல்வம் போயிற்றே என்ற ஏக் கம், குழந்தையைப் போஷிக்கவேண்டுமென்ற பொறுப்பு, ஜீவனத்துக்குப் பொருள் தேடவேண்டுமென்ற கவலை எல் லாமாகச் சேர்ந்து என்னை எப்படி உருக்கிவிட்டது. மற் றக் கவலைகள் தீர்ந்தாலாவது வயிற்றுக் கவலைக்காகத் தீவிர முயற்சி செய்யலாம்.
என் கவலையைப் பார்த்துவிட்டு எனக்கு வெகு சீக்கி ரமே இரண்டாந்தாரமாக ஒரு பெண்ணைத் தாலிகட்டி வைத்துவிட வேண்டுமென்று என் அக்காள் முயற்சிக்கி றாள். கலியாணமாம் / முதல் மனைவி இறந்த துக்கம் ஆறுவ தற்குள், கலியாணம் என்ற பேச்சை எடுக்க எப்படித்தான் இந்த ஜனங்களுக்கு மனம் துணிகிறதோ தெரியவில்லை. அவள் போன பிறகு, உலகில் ஒன்றுமே நிலையில்லை என்ற வேதாந்தம் எனக்கு நன்றாகப் பதிந்துவிட்டது. ஆனால் அவளுடைய ஞாபகமாக இருந்துவரும் குழந்தையைப் பாதுகாக்க ஒரு தாய்மை அன்பு வேண்டுமே! அதற்காகவாவது திரும்பவும் கலியாணம் செய்துகொள்ளவேண் டியதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது.
வரப்போகும் அம்மணி என் முதல் மனை வியைப்போல் உடலழகும் குண அழகும் பெற்றிருப்பாள் என்று என்ன நிச்சயம்? எனக்கு அதிர்ஷ்டச் சக்கரம் சுழன்று அடித்துக் கொண்டிருந்த காலத்தில், கலியாணச் சந்தையில் எதிர் பாராமல் கிடைத்த யோகப்பரிசு அவள். ஆனால் இப்பொ முதோ! நான் இருக்கும் நிலமை என்ன? என்னை மதித் துக் கல்யாணம் செய்துகொள்ளப்போகிறவள் முதல் மனைவிக்கு ஒப்பாக இருக்க முடியாதென்பது நிச்சயம். ஏதோ ஒரு பெண்ணை இரண்டாவது தாரமாகத் தாலி கட் டினோம் என்றுதான் கலியாணத்தை முடிக்கவேண்டும். என் குழந்தை முருகன் அதிர்ஷ்டமுள்ளவனானால் அவனை நன்றாகக் கவனிக்கக்கூடியவள் எனக்கு மாலையிடவேண் டும். பத்துப்பதினைந்து நாளாக எனக்கு இதுதான் கவலை.
நேற்றுமாலை நடந்த சம்பவம் உண்மையாக இருக் குமா! அல்லது என் ஆசைகளின் அபூர்வத் தோற்றங் கள்தானா? சுந்தரி எவ்வளவு செல்வாக்குடையவள்! எவ் வளவு அழகி! அவளுடைய கடைக்கண் பார்வைக்காக எத்தனை பணக்காரர்கள் ஏங்கி நிற்கிறார்கள்! அப்படி யிருக்க பணமற்ற, அழகற்ற என்னை அவள் அன்பாகக் கூப்பிட்டு எவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தாள். அவளோடு கொஞ்சகாலம் படித்தேன் என்பதைத் தவிர எனக்கும் அவளுக்கும் வேறு தொடர்பே கிடையாதே! பாடசாலையை விட்டபின் இதுவரை அவள் உலகம் வேறு; என் உலகம் வேறு என்றாகிவிட்டதே. இப்பொழுது திடீரென்று அவளுக்கு என்மீது மட்டும் இவ்வளவு அன்பு ஏற் படக் காரணம் என்ன? நினைக்க நினைக்க இது ஒரு கனவு போலல்லவா தோன்றுகிறது! பாலைவனத்தில் நீர் தேடித் தவித்த மானுக்குத் திடீரென்று பசுமையான புல்தரையும், நடுவே தெள்ளிய தடாகமும் அகப்பட்டது போல் அல்லவா, சுந்தரியின் வார்த்தைகள் எனக்கு ஆறுதல் அளிக் கின்றன. புண்பட்ட மனதுக்கு அமிர்தம் வர்ஷித்தாளே சுந்தரி! அவள் சொல்வதுபோல் நடந்துவிட்டால் என் வாழ்க்கையில் மறுமலர்ச்சி தோன்றுமென்பதில் ஐய மில்லை. ஆஹா Į அவளோடு சம்பாஷித்துக்கொண்டிருந்ததே எவ்வளவு இன்பமாக இருந்தது:-
“வடிவேலு, வடிவேலு” சுந்தரியின் இன்பக்குரல். நான் மாடி ஜன்னலை ஏறிட்டுப் பார்த்து சந்தேகத்துடன், “என்னையா அம்மா கூப்பிடுகிறாய்?” என்றேன்.
“ஆமாம். இங்கே வாருங்கள்”
“ஏது புஷ்பம் வேண்டுமா?”
“புஷ்பம் இருக்கட்டும். உங்களோடு ஒரு விஷயம் பேசவேண்டியிருக்கிறது.”
எனக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. தாசியின் வீடு. ஏதாவது குற்றேவல் செய்வதற்காகக் கூப்பிடுகிறாளோ? சுந்தரி என்னை அவ்வளவு கேவல் மாகவா எண்ணிவிட்டாள் என்று சிறிது தயங்கினேன், எதற்கும் போய்ப்பார்ப்போம் என்று வேகமாக நடந்தேன். ஆத்திரத்தோடு வீட்டுக்குள் புகுந்தேன். அவள் மிகுந்த அன்போடு உபசரித்து நாற்காலியைக் கொண்டுவந்து போட்டு அதில் என்னை உட்காரச்சொன்னாள். என் கோப மெல்லாம் பறந்துவிட்டது. ஆனால் புதிய அலை ஒன்று தாக்கியது. தாசி தன் மோக வலைக்குள் சிக்கவைக்க முயற்சிக்கிறாளோ என்ற சந்தேகம்தான். தாசிகளுக்குப் பணத்தின்மீதுதானே மோகம். என்னிடம் பணம் ஒன்றும் கிடையாதென்பதை ஒருவேளை அவள் தெரியாமலேயே, தன் சாகசத்தைக் காட்டுகிறாளோ என்றும் நான் திகைத் தேன். இந்த சந்தேகத்தையும் அவளே போக்கிவிட்டாள்.
“வடிவேலு, உங்களுக்குத் தொடர்ந்து வந்த தொல்லை களை யெல்லாம் நான் கேள்விப்பட்டேன். மனதுக்கேற்ற மனைவியும், செல்வமும் போன பிறகு உங்கள் மனம் மிகவும் உடைந்துபோயிருக்கும்.”
எனது துக்கத்திற்காக வருந்தி,எத்தனையோ பேர் எனக்கு ஆறுதல் சொன்னார்கள். ஆனால் சுந்தரி சொன்ன ஆறுதலைப்போல வேறு ஒன்றுமே என் மனதைக் குளிர வைக்கவில்லை. எனக்கு அழுகையே வந்துவிட்டது. அழுகையோடு அத்தனை துக்கமும் கரைந்து வெளிவந்து விட்டதுபோன்ற உணர்ச்சி உண்டாயிற்று. சட்டென்று ஏதோ நினைத்துக்கொண்டவன்போல “உன் அம்மா எங்கே, சுந்தரி ?” என்று கேட்டேன்.
“அம்மா எங்கேயோ கோடாங்கியிடம் குறி கேட்கப் போயிருக்கிறாள். அவள் இப்போதைக்கு வரப்போவதில்லை. அதிருக்கட்டும், நான் உங்களிடம் மிக முக்கியமான விஷயத்தைப்பற்றி ஆலோசிக்கவே உங்களைக் கூப்பிட்டேன் ” என்றாள்.
ஆலோசனை செய்வதில் நான் என்ன அவ்வளவு கெட்டிக்காரனா என்று எனக்குச் சந்தேகமுண்டாயிற்று. அதைக் காட்டிக்கொள்ளாமல் “என்ன விஷயத்தைப்பற்றி ஆலோசனை செய்யவேண்டும்? ” என்றேன்.
“உங்கள் குழந்தை இப்பொழுது உங்கள் அக்காள் வீட்டில் வளர்ந்து வருகிறதென்பதையும், நீங்கள் அதன் நன்மைக்காகத் திரும்பவும் கல்யாணம் செய்து கொள்ளத் தீர்மானித்திருக்கிறீர்கள் என்பதையும் நான் கேள்விப் பட்டேன்.”
“உனக்கு ஜோசியம்கூடத் தெரியுமா, சுந்தரி?”
“அருமையான மனைவியை இழந்துவிட்டீர்கள். அவள் விட்டுப்போன குழந்தையை வளர்ப்பது உங்கள் கடமை இல்லையா? இதைச் சொல்வதற்கு ஜோசியம் வேறு தெரியவேண்டுமா?”
”நீ சொல்வது உண்மைதான். படிக்கும் போதே நீ யூகசாலியாக இருந்தாயே! இப்பொழுது கேட்பானேன்.”
“பெண் பார்த்தாய்விட்டதா உங்களுக்கு?”
“அக்காள் அநேக இடங்களில் பார்த்துக்கொண்டிருக் கிறாள். இதுவரை ஒன்றும் அமையவில்லையாம்.”
“ஏன் அமையவில்லை?”
“எனக்குச் சொத்து சுகம் இருந்தால்தானே பெண் கொடுப்பார்கள்?”
“நீங்கள் இதற்காக வருத்தப்படவேண்டாம். சொத்து சுகத்தில்தானா வாழ்க்கை அடங்கியிருக்கிறது? யோக்கியதையும் உழைப்பும்தானே சிறந்த செல்வம். அது உங்களிடம் இருக்கிறதே!”
“யோக்கியதையும் உழைப்பும் உலகில் தகுந்தபடி மதிக்கப்படவில்லையே!”
“உலகம் மதித்தால் என்ன; மதிக்காவிட்டால் என்ன? ஆத்மதிருப்தி கிடைக்கிறதே! அது போதாதா?”
“ஆத்ம திருப்தியினால் வயிறு நிறைந்துவிடுமா, சுந்தரி?”
“நான் வளைத்து வளைத்து எதையோ பேசிக்கொண்டு போகிறேனே. தாயார் வருவதற்குள் நான் தீர்மானித்த விஷயத்தைச் சொல்லி விடுகிறேன்.”
“என்ன விஷயம்?”
“நேரடியாகச் சொல்லி விடுகிறேன். உடலை விற்கும் தாசியாக இருக்க நான் விரும்பவில்லை.”
“அப்படியானால்?”
“நான் இந்தத்தாசி வாழ்க்கையை விட்டு வெளியேற விரும்புகிறேன்.”
“நீ சொல்வது விபரீதமாக இருக்கிறதே.”
“ஆமாம். விபரீதம்தான். எத்தனையோ ஆயிர வருஷ காலமாக எங்கள் சமூகத்தில் ஏற்படாத ஒரு மாறுதலைச் செய்ய நான் துணிந்திருப்பது விபரீதமாகத்தான் படும்.”
“உன் தாயார் தை அறிந்தால்!”
“அவளைப்பற்றி இனி எனக்குக் கவலையில்லை!”
“நீ என்ன செய்ய உத்தேசித்திருக்கிறாய்?”
“மற்றச் சமூகத்திலுள்ள பெண்களைப்போல ஒருவனுடைய மனைவியாக வாழ விரும்புகிறேன் நான்.”
“அந்த ஒருவன் உனக்குக் கிடைக்கவேண்டுமே!”
“அந்த ஒருவர் நீங்களாக இருக்க முடியாதா என்ப தைக் கேட்கவே உங்களை நான் இங்கு அழைத்தேன்.”
“நானா? சுந்தரி………!”
“என்ன திகைக்கிறீர்கன்?”
“:திடீரென்று ஒரு ஏழைக்கு முன்னால் லக்ஷம் பவு னும் பின்னால் ஒரு இடியும் விழக் காத்திருப்பதுபோல இருக்கிறது நீ சொல்வது! சுந்தரி, நீ என் மனைவி என்றால் அதைவிட வேறு பாக்யமே எனக்கு உலகில் இல்லை. ஆனால்! ஆனால், சமூகம் என்னை இதற்காக எவ்வாறு தூற்றுமென்பதை எண்ணிப் பார்த்தால் – எண்ணிப்பார்க் கவே முடியவில்லை. சுந்தரி, இதற்கு முதலில் உன் தாயின் சம்மதம்; பின்பு என் அக்காளின் சம்மதம்…..”
“வேண்டாம். உங்கள் சம்மதம் ஒன்றே எனக்குப் போதுமானது. சமூகத்தின் கண்ணில் மண்ணைத் தூவ நான் வழி சொல்கிறேன்.”
“சுந்தரி, உன்னை மனைவியாக ஏற்றுக்கொள்ள நான் மறுப்பேனா?ஆனால் சமூகத்தின் பழிச் சொல்லுக்குத் தப்புவது எப்படி?”
“நாம் இருவரும் நம் குழந்தையுடன் வேறு எங்கா வது போய்ப் பிழைத்துக்கொள்ளலாம்.”
“சுந்தரி, உன் அன்பே அன்பு. ‘நம் குழந்தை’ என்றாய். நீயே நமது குழந்தையை நன்றாய்க் கவனிக்க முடியும். நீ சொல்கிறபடி நான் செய்யக் காத்திருக்கிறேன்.”
“நான் இங்கிருந்து கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டு வருகிறேன். நாம் போகுமிடத்தில் கௌரவமாக ஏதாவது ஒரு தொழில் நடத்திக்கொண்டு குடும்பம் நடத்தலாம்.”
“குடும்பம் நடத்தலாம் என்றால் முதலில் கலியாணம் செய்து கொள்ள வேண்டாமா?’
“ஏது ஏது? பத்திரிகைகூட அச்சடிக்கவேண்டு மென்று சொல்வீர்கள் போலிருக்கிறதே! அதெல்லாம் எதற்கு? கடவுள் முன்னிலையில் நாம் இருவரும் கணவன் மனைவி. இதுவே போதும். நாம் போய்க் குடியேறும் இடத்தில் நீங்கள் எல்லோருமறிய என்னை மனைவியென்று சொல்லவேண்டும் அவ்வளவுதான்.”
“உன் இஷ்டப்படியே செய்வோம்”
“நமது சந்ததியிலிருந்தாவது சம்பிரதாயப்படி பலர றிய மணம் செய்துகொள்ளும் வழக்கம் ஏற்படுமல்லவா?”
“சுந்தரி, நீ இந்த நிமிஷம்முதல் என் மனைவி ! கடவுள் சாட்சியாக நீ என் மனைவி! உன் ஆவலை நான் தெரிந்து கொண்டேன். எனக்கும் சரியான துணை கிடைத்துவிட் டது. நாம் எப்பொழுது இங்கிருந்து புறப்படுவது? எங்கே போவது?”
“இனி அந்தப் பொறுப்பு என்னுடையதல்ல! என் கணவராகிய உங்கள் பொறுப்பு. உங்கள் சொற்படி நடக் கக் கடமைப்பட்டவள் நான்.”
“கணவனுக்கு மந்திரிபோல நீ ஆலோசனை சொல்ல வேண்டுமல்லவா? அந்த முறைபற்றிக் கேட்கிறேன் உன்னை! தெற்கில் நான் சிறுவயதில் சுற்றிப் பார்த்திருக் கிறேன். நாகர்கோவில் நல்ல இடம். அங்கே போய் வசிக் கலாமென்று எண்ணுகிறேன். நாம் அங்கே போய்விட் டால் நம்மை ஒருவரும் கண்டுபிடிக்க முடியாது. அங்கு போவோமா?”
“நாகர் கோவிலுக்கே போவோம். எப்போது இங் கிருந்து புறப்படுவது?”
“அதைத்தான் யோசிக்கிறேன்.”
“இனி யோசிப்பதற்கே நேரமில்லை. அந்தத் தீர்மான மும் இப்போதே முடிவு கட்டப்பட வேண்டும். நீங்கள் ஒன்றுக்குமே யோசிக்க வேண்டியதில்லை. அக்காளிடம் ஏதாவது சாக்குச்சொல்லி நமது குழந்தையை எடுத் துக்கொண்டு நாளை இரவு ஒன்பது மணிக்கு என் வீட்டுக்குப் பின்புறமாக வாருங்கள். நான் பணம் நகை களோடு அங்கு தயாராகக் காத்திருப்பேன். தவறாமல் வரவேண்டும். தாயார் வரும் நேரமாகி விட்டதே! நீங் கள் இங்கிருந்து போய்விடுங்கள். உங்கள் மனம் மாறி விடக் கூடாது. நம் குழந்தையுடன் நாளை இரவு நிச்சய மாக நாம் இங்கிருந்து ரயிலேறிவிட வேண்டும்.”
“சரி. நான் நிச்சயமாக வருகிறேன்” என்று சுந்தரி யிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன்.
எனக்கு உலகமே தலைகீழாகப் புரள்வது போலத் தோன் றியது. ரதி போன்ற சுந்தரி எப்படி என் மனைவி ஆகச் சம்மதித்தாள்! திடீரென்று அதிர்ஷ்டம் வந்தால் மனதில் அதிர்ச்சிதான் ஏற்படுகிறது. எவ்வளவு பெரிய மாறுதல் எனக்கெதிரே இருக்கிறது. நானும் சுந்தரியும் உற்றார் உறவினர் யாவரையும் மறந்துவிட்டு ஒரேயடியாகப் போய் விட வேண்டும். போகிற இடத்தில் என்னென்ன நடக் குமோ! மனிதன் மாறுதல்களை விரும்புகிறான். ஆனால் மாறுதல்களைக் கண்டு மலைக்கவும் செய்கிறான். சுந்தரியே அவ்வளவு தைரியமாக என்னுடன் வரச் சம்மதிக்கையில் நான் மலைப்பதா? நாளை இரவு ஒருவருக்கும் தெரியாமல் இந்த ஊரை விட்டுப்பிரிய வேண்டியதுதான். எதிர் காலம் இன்பகரமான ஒரு வாழ்க்கையுடன் காத்திருக்கிறது. அதில் நான், சுந்தரி, முருகன் மூவரும் திளைத்திருப்போம்.
– தொடரும்…
– வளர் பிறை (நவீனம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1946, கார்த்திகேயினி பிரசுரம், புதுக்கோட்டை ஸ்டேட்.
![]() |
சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம் தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம். நன்றியுரை "ஆனந்த விகடன் " "மணிக் கொடி “வசந்தம்”, யுவன்'', "சக்தி" ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
குங்குமச் சிமிழ்
பூவாளூர் சுந்தரராமன்
April 25, 2026
உன் கண்ணில் நீர் வழிந்தால்….
காரை ஆடலரசன்
April 25, 2026
என் உயிரே… மயூரி..!
ஜூனியர் தேஜ்
April 25, 2026
