வரிசைப் பணம்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 5,623 
 
 

மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. தலைக்கு இருநூறு ரூபாய் வீதம் ஆறு தங்கைகளுக்கும் மொத்தம் ஆயிரத்து இருநூறு ரூபாய் முழுசாய் தீபாவளி வரிசைப் பணம் கொடுக்க வேண்டும். மணியார்டர் செலவு தனி. கையில் பைசா இல்லை.!!

வீட்டில் ஆண் பிள்ளையாய்ப் பிறந்தது பெரிய தப்பு. பொங்கல், தீபாவளிக்கு வரிசை. அது இல்லாமல் விருந்தாளிகளாய் வந்தால் நல்லது கேட்டதென்று ஏகப்பட்ட செலவுகள்.

மாதச் சம்பளம் என்றுதான் பேர். வீட்டு வாடகை, மளிகை, பால், காய்கறி, பிள்ளைகள் படிப்பு, என்ற நீண்ட பட்டியலுக்கே பட்ஜெட்டில் துண்டு. சேமிப்பு என்பது கிடையாது.

என்ன செய்யலாம். .? வரிசைப் பணம் செய்யாமல் விடுவது கவுரவக் குறைச்சல். தங்கைகளுக்கு இடி சொல். !!

பிறந்த வீட்டு வரிசைப் பணத்தை வைத்துதான் பண்டிகைகள் கொண்டாட வேண்டிய நிலையில் தங்கைகள் இல்லை. என்னதான் நல்ல நிலையில் இருந்தாலும். …

” என்ன ! வரிசைப் பணம் வந்ததா. .? ” என்று கணவன் மனைவியைக் கேட்பான். அவன் மட்டுமல்லாமல் தங்கைகளும் எதிர்பார்ப்பார்கள்.

புக்ககம் போன பெண் எப்படி வாழ்கிறாள் என்பதைக் கவனிக்கவும், கண்காணிக்கவுமே இந்த வரிசை பழக்க வழக்கங்கள்.

நல்ல நோக்கம்தான். ஆனால். ..நாளடைவில் அதுவே ஒரு சடங்காகி விட்டது.

யோசித்துப் பயனில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

எழுந்தேன்.

புறப்பட்டேன் சந்திரசேகரன் வீட்டை நோக்கி.

அவன் வீட்டில்தான் இருந்தான். என் ஆத்மார்த்த நண்பன் அவன். உத்தியோகத்தில் உச்சாணி கொம்பில் இருப்பவன். முதல்தர அரசாங்க சம்பளக்காரன். என் கஷ்டம், நஷ்டம் உணர்ந்து, தெரிந்து உதவி செய்பவன். ஆபத்பாந்தவன்.

” வாடா. ..! ” என்று வாய் நிறைய வரவேற்றவனிடம் தயங்கித் தயங்கி விசயத்தைச் சொன்னேன். தொகையையும் சொன்னேன்.

” அதுக்கென்ன. .! தாராளமாய்த் தர்றேன். ! ” என்று சொல்லி நான் கேட்ட மொத்த தொகையையும் கொண்டு வந்து கொடுத்தான்.

வாங்கினேன்.

” நன்றிடா. ..! ” விடை பெற்றுக்கொண்டு தபால் நிலையம் சென்று பணத்தை அனைத்து தங்கைகளுக்கும் அனுப்பிவிட்டு திருப்தியாய் வீடு வந்தேன்.

சாய்வு நாற்காலியில் சாய்ந்தேன்.

” இந்தாங்க. ..” வெயிலில் களைத்து வந்த எனக்கு மனைவி மோர் கொண்டு வந்து கொடுத்தாள்.

குடித்தேன்.

” வரிசைப் பணம் அனுப்பியாச்சா. .? ” அவளிடமிருந்து கேள்வி வந்தது.

” அனுப்பியாச்சு ! ”

” எப்படி. .? ” அடுத்த கேள்வி.

விபரம் சொன்னேன்.

” நமக்கு பண்டிகை சாமான்கள் எப்போ வாங்கப்போறீங்க. .? ”

” வாங்குவோம். .! ”

” பண்டிகை நெருங்கிக்கிட்டு இருக்கு. ரெண்டு நாட்களுக்குள் மளிகை சாமான்கள் எல்லாம் வாங்கித் தந்தால்தான் பலகாரங்கள் செய்ய சரியாய் இருக்கும். .! ”

‘ உண்மைதான் ! ‘ என்று நினைத்தபடி. ..அவள் கையைப் பார்த்தேன்.

விரலில் ஒரு பவுன் மோதிரம் பளிச்சிட்டது.

நான் எப்போதோ வாங்கிப்போட்டது. அவசரம், அத்தியாவசியத்திற்கெல்லாம் அதுதான் அடிக்கடி அடகு கடைக்களுக்குப் போகும்.

என் மனதை உணர்ந்த மனைவி. …

” இன்னைக்குச் செவ்வாய்க்கிழமை. நாளைக்கு வச்சு பணம் வாங்கி வேலையை முடிங்க. ” சொன்னாள்.

‘ எப்படிப்பட்ட மனைவி !! ‘ எனக்கு சிலிர்ப்பாய் இருந்தது.

சொன்னபடியே புதன்கிழமை காலையிலேயே மோதிரத்தைக் கழட்டிக் கொடுத்துவிட்டாள்.

கடை திறந்ததும். …கடன்காரன் போல வாசலில் நிற்க வேண்டாம். கொஞ்சம் தாமதமாக சென்றால் சரியாய் இருக்கும் ! எண்ணத்தில் வேலையைப் பார்த்தேன்.

” சார் ! ”

நிமிர்ந்து பார்த்தேன்.

தபால்காரர்.

” என்ன கடுதாசியா. .? ”

” இல்ல சார் மணியார்டர் ! ”

‘ நமக்கும் வரிசைப் பணம் வந்து இருக்கு ! ‘ – குதூகலமாய் கூவ ஆவல் ஆசை. அடக்கிக்கொண்டு. ..

” எவ்வளவு. ..? ” கேட்டேன்.

” ஆயிரத்து எட்டு நூறு ! ”

‘ அவ்வளவு பணமா. .? ‘ – எனக்குள் திகைப்பு.

பணத்தைக் கொடுத்துவிட்டு கையெழுத்து வாங்கிக்கொண்டு அவர் புறப்பட்டார்.

வீட்டுக்குள் வந்ததும் தபால்காரர் கொடுத்துவிட்டு சென்ற கடிதத்தைப் பிரித்தேன்.

‘ அன்பு அண்ணனுக்கு. ..

எங்களுடன் பிறந்த ஒரே காரணத்திற்காக பண்டிகைகள்தோறும் வரிசைப் பணம் அனுப்பி கஷ்டப்படுகின்றாய். இந்த தீபாவளியிலிருந்து நாங்கள் உனக்கு வரிசைப் பணம் அனுப்பலாம் என்று முடிவெடுத்தோம் அதன் முதல் கட்டம்தான் இந்த தொகை.

இப்படிக்கு

அன்பு தங்கைகள். ‘

வரிசைப் பணம் சடங்கு, சம்பிரதாய பணம் மட்டுமல்ல பாசப் பணம் என்பது எனக்குப் புரிய…. உள்ளுக்குள் இனம் புரியாத நெகிழ்ச்சி.

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *