வண்டார்குழலி





(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 06 | அத்தியாயம் 07 | அத்தியாயம் 08
“அரசே சேரனிடமிருந்து வந்த தூதர்கள் காத்திருக்கிறார்கள்” என்று அமைச்சர் அறிவிக்க வரட்டுமே என்றான் அருள்மொழி வர்மன்.
நான்கு பேர் வந்தார்கள். முன்னால் ஒருவன் கம்பீரமாக நடக்க இடையில் பெரிய தாம்பாளத்தைச் சுமந்து கொண்டு இருவர் வர அவர்களுக்குப் பின்னால் ஒருவன் பாதுகாப்பாக வந்தான்.

“இராஜகேசரி அருள்மொழி வர்மர் வாழி; சேரமான் பாஸ்கர ரவிவர்மனின் தூதர்கள் நாங்கள்!”
“நல்லது” என்றான் அருள்மொழி, “செய்தி என்னவோ?”
“எங்கள் மன்னர் தங்களிடம் இவற்றைச் சேர்ப்பித்துவிட்டு வரச் சொன்னார்.”
“பார்ப்போமே” என்றான் அருள்மொழி வர்மன்.
இருவர் சுமந்து வந்த பெரிய தட்டின் மீது மூடியிருந்த பட்டினை விளக்கியதும் முன்னாலிருந்தவன் விளக்கியதும்,
சிலிர்த்தெழுந்தான் அருள்மொழி.
“என்னது!”
“உங்களுக்கு இவற்றை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்று எங்கள் மன்னர் கூறி அனுப்பினார். அவர் ஊகம் பிசகவில்லை என்று தெரிகிறது.”
உடைவாள், இடைக்கச்சு, கங்கண குண்டலங்கள், சில பொற்காசுகள் அனைத்தையும் அருள்மொழி அடையாளம் கண்டுகொள்ளத்தான் செய்தான். ஒருவேளை அவற்றை அவன் மறந்திருந்தாலும் பொன் சரட்டிலே கோக்கப்பெற்ற புலிச் சின்னப் பதக்கத்தையுமா மறக்க முடியும்? அதை அவன் தன் கரத்தாலேயே அணிவித்தல்லவா சிவலோக நாதனை அனுப்பி வைத்தான்! உணர்ச்சிகளை அவன் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்.
“அடையாளம் தெரிகிறது. இவற்றை அணிந்திருந்த சிவலோக நாதனுக்கு ஏதோ ஆபத்தென்றும் புரிகிறது. என்ன ஆனான் என் தூதன்? என்ன நேர்ந்தது அவனுக்கு?”
“தாங்கள் தூதனை அனுப்பவில்லை என்பதும் ஒற்றனை ஏவியிருந்தீர்கள் என்பதும் எமது மன்னர் பாஸ்கர ரவிவர்மனின் துணிபு. அதனால் அவனைக் கைது செய்து சிறை வைத்திருக்கிறார். இதனைத் தங்களுக்குத் தெரிவிப்பதுடன் சிறையில் இருப்போனுக்கு இனி இவ்வுடைமைகள் தேவையில்லை என்பதால் தங்களிடமே சேர்ப்பித்துவிட்டுத் திரும்புமாறு கூறி அனுப்பினார்.”
“அபத்தம்” என்று அதிர்ந்தான் அருள்மொழி. அவையில் விசும்பல் ஒலி எழுவதையும் குந்தவை ஆறுதலாக உதயபானுவைக் கட்டி அணைத்துத் தட்டிக் கொடுப்பதையும் அவன் செவிகள் நுகர்ந்தன. தனக்கே பேசவும் முடியாமல் நெஞ்சை அடைக்கும்போது உதயபானு கண்ணீர் பெருக்குவதில் வியப்பென்ன?
“நான் அரியணை ஏறியதையொட்டிச் சில காலத்துக்கெல்லாம் பல்வேறு நாட்டரசர்களுக்கு நல்லெண்ணத் தூதர்களை அனுப்பினேன். அவர்களில் சேரமானிடம் அனுப்பப்பட்டவன் சிவலோக நாதன்.”
“தூதனல்ல; ஒற்றன் என்று நம்பப் போதிய முகாந்திரம் இருக்கிறதென்பது எனது மன்னரின் தீர்ப்பு.”
“தீர்ப்பு பிழையானது” என்றான் அருள்மொழி கம்பீரமாக.
“விதி தவறினாலும் சேரமானின் நீதி தவறாது. நீங்கள் மெய்யாலுமே நல்லெண்ணத்துடன் செயல்பட்டிருந்தாலும் உமது தூதன் தவறாக நடந்து கொண்டிருக்கலாம் அல்லவா, உங்கள் சொல்லை மீறி?”
”நானறிந்த சிவலோக நாதன் அப்படி ஒரு காலும் நடந்து கொண்டிருக்கவே மாட்டான்!”
“தம்பி! தூதர்களிடம் மேலும் பேசவேண்டியது அவசியம்தானா?” என்று இடைபுகுந்து கேட்டாள் குந்தவைப் பிராட்டி. தன் தோளில் சாய்ந்திருந்த உதயபானுவின் முதுகை வருடியபடியே. அவள் விசும்பல்கள் இன்னும் அடங்கவில்லை.
சகோதரியின் சொல்லில் இருந்த நியாயத்தை ஏற்றான் அருள்மொழி. ‘இவர்களிடம் வாதாடி என்ன பயன்? இவர்கள் அம்புகள். எய்தவனை அல்லவா நாம் குறி வைக்க வேண்டும்!’
“அமைச்சரே! தூதர்களுக்கு உரிய மரியாதை செய்து அனுப்புங்கள். சேரன் செய்த பிழையை நாமும் செய்ய வேண்டாம்” என்று கூறி அரியாசனத்திலிருந்து எழுந்து நடந்தான். சபை கலைந்தது.
“பரிசில்களுடன் நல்லெண்ணத் தூதனை நான் அனுப்புவதாம். பாஸ்கர ரவிவர்மன் அவனுக்கு ஒற்றன் என்ற முத்திரை குத்தி சிறையில் தள்ளுவதாம்! என்ன இறுமாப்பு அவனுக்கு! சிவலோக நாதனின் உடைமைகளை என்னிடமே திருப்பி அனுப்ப என்ன துணிச்சல்! எங்கே அவை?”
“உதயபானு அவற்றைத் தனக்களிக்குமாறு வேண்டினாள். தந்துவிட்டேன். நீ மறுக்க மாட்டாய் என்று தெரியும்” என்றாள் குந்தவை. “பாவம்! அந்தப் பெண் எத்தனை இனிய கோட்டைகளைக் கட்டிக் கொண்டிருந்தாள்!”
“அக்கா! நானும்தான் மனக்கோட்டைகளை எழுப்பினேன். அரியணை ஏறிய சில காலத்தில் பல்வேறு மன்னர்களுக்கும் நல்லெண்ணத் தூதர்களை அனுப்பினேன். அவர்களின் மூலம் எனது நட்புக் கரங்களை நீட்டினேன். போர் தவிர்த்து அமைதி நாடி இறை பணியில் கலை உணர்வோடு ஈடுபட எண்ணினேன். ஆனால் ஈசன் விட்ட வழிவேறாக இருக்கிறது. சோழ நாட்டுக்கு இவ்வளவு பெரிய அநீதியைச் சேரன் இழைத்த பிறகு பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதா? நாடு நகரம் ஊர் உலகமெல்லாம் சிரிக்காதா? படை கிளம்பட்டும் அக்கா! சேரனை வென்று எனது இனிய நண்பன் சிவலோக நாதனைச் சிறை வைத்திருக்கும் நகரையே தரை மட்டமாக்கி அவனை மீட்டு வந்து உன் உயிர்த்தோழி உதயபானுவிடம் ஒப்படைப்பேன்.”
“தம்பி! சோழ மன்னர்கள் என்றுமே பக்திமான்களாக வாழ்ந்தவர்கள்; கலைஞர்களாக இருந்தவர்கள்; வீரர்களாக விளங்கியவர்கள். அந்த மரபில் வந்த நீ மட்டும் வேறு விதமாகவா பேசுவாய்? ஆனால் ஒன்று! முரசு முழங்கட்டும், படை கிளம்பட்டும் என்றால் ஆயிற்றா? நடக்கப் போவது என்ன என்பதை அமைதியாக ஆராய வேண்டாமா? பாஸ்கர ரவிவர்மனை நீ எதிர்க்கிறாய், வெல்கிறாய் அதில் ஐயமில்லை. ஆனால் உன் நோக்கம் என்ன? சிவலோக நாதனை விடுவிக்க வேண்டும் என்பது. அது சாத்தியமாகுமா இம்முறையில்? போரில் தோற்கப் போகிறோம் என்று அறிந்த அடுத்த கணமே பாஸ்கர ரவிவர்மன் என்ன செய்வான்? நீ வென்றாலும் உன் நோக்கம் நிறைவேறக் கூடாது என்ற கருத்தில் சிவலோக நாதனைச் சிறையிலேயே கொன்றுவிட உத்தரவு அனுப்புவான். நீ அவன் பிணத்தைத்தான் காண்பாய்; மீட்டு வருவாய்.”
“அக்கா! அக்கா! அரியணையில் வீற்றிருக்க வேண்டியவள் நீதான்? எவ்வளவு சரியாகக் கூறினாய்! எனக்கிருந்த ஆத்திரத்தில் இது பற்றிச் சிந்திக்கவே தவறிவிட்டேனே! என்ன உபாயம் அக்கா? அதையும் கூறு!”
“பரிசுகளை அறிவித்து ஒரு வீர விளையாட்டுப் பந்தயத்துக்கு ஏற்பாடு செய்! மல்யுத்தம், ஈட்டி எறிதல், மலை ஏறுதல் போன்ற பல போட்டிகளில் முதலில் வருகிறவர்களைக் கொண்ட ஒரு சிறிய தனிப் படை திரட்டு. உன்னிடம் தேவதா விசுவாசமுடைய இருபது முப்பது வீரர்கள் போதும். அவர்கள் எப்படியாவது ரகசியமாகச் சேர நாட்டை அடைய வேண்டும். சிவலோக நாதன் சிறை வைக்கப்பட்டிருக்கும் இடத்தை அறிய வேண்டும். நீ சேரனுடன் நேரடி யுத்தம் நடத்தும்போதே இவர்கள் மின்னல் வேகத்தில் திடீர்த் தாக்குதலை நடத்தி மீட்புப் பணியில் ஈடுபட வேண்டும். சோழ நாட்டின் மானம் காக்க உயிரைக் கொடுக்கவும் அவர்கள் சித்தமாக இருக்க வேண்டும்!”
“அருமையான யோசனை அக்கா! அதுமட்டுமல்ல, சேர நாடு நோக்கி நான் தரை மார்க்கமாகப் படையெடுக்கிறேன், அனைவரும் அறிய. அதே நேரத்தில் நமது கடற்படை ரகசியமாகப் புறப்பட்டு குமரியைச் சுற்றுக் கொண்டு சென்று காந்தளூர்ச் சாலையைத் தாக்கும்! இந்த இரு முனைத் தாக்குதலுக்கிடையில் சேரன் தடுமாறும் போது மீட்புப் படையினரின் மின்னல் தாக்குதலும் சிவாவை விடுவிக்க நடக்கும். சரிதானே?”
“வெற்றித் திருவை மணந்துவா தம்பி!” என்று ஆசிகூறித் திலகமிட்டாள் குந்தவை.
– தொடரும்…