வடக்கே போகும் ரயில்
மொழி தெரியாத ஊருக்கு வந்து விளையாட்டுப் போல எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. இதற்கு முன் வாழ்ந்த திருச்சியும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியும் மட்டுமே திருமுருகனுக்கு அத்துப்படியாக இருந்தது. இப்போது புது இடம் நன்கு பழகிவிட்டது என்றாலும் இப்படி திருச்சியிலிருந்து வடக்கே ஜப்ராபாத்திற்கு அவன் வருவதற்குக்காரணம் இருந்தது.
அன்று..
திருச்சி தெப்பக்குளம் வாசலில் வரிசையாக நிற்கும் ஆட்டோக்களில் ஒன்றினை வங்கிக்கடனில் வாங்கி திருமுருகன் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த போது தான் ஒரு நாள் அந்த ஜாதிக்கலவரம் நடந்தது. தெப்பக்குளகரை ஓரமாய் நின்றிருந்த திருமுருகனின் ஆட்டோவில் ஒருவன் கையில் வீச்சரிவாளோடு வலிய வந்து ஏறிக்கொண்டான். ”அங்கிட்டு மைக்கேல்ஸ் வாசல்ல ஐஸ்க்ரீம் சாப்பிட்டு நிக்கறான் பாரு, அவன்கிட்ட போயி வண்டிய நிறுத்து” என்றான் கட்டளையிடும் குரலில்.

“எ..எதுக்கு? நீங்க முதல்ல கீழ இறங்குங்க” என்று திருமுருகன் பயத்தை மறைத்துக் கொண்டு கேட்டான். கட்டம் போட்ட நீலக்கைலியும், முண்டா வலை பனியனும் போட்டுக்கொண்டு விழிகள் சிவக்க உதடு துடிக்கப் பேசிக் கொண்டிருந்தவன் தான் இப்போது தன் ஆட்டோவில் ஏறி அமர்ந்துவிட்டான் என்பதையும், ஏதோ பிரச்சினை என்பதையும் யூகிக்கமுடிந்தது.
அதனால் மறுபடியும் சற்று அதட்டலான குரலில், ”த பாருங்க.. வம்பு தும்பு பிரச்சினைக்கெல்லாம் என் ஆட்டோ வராது, அதுக்கு வேற ஆளப்பாருங்…” என்று முடிப்பதற்குள் வீச்சரிவாளால் பின் இருக்கை டர்ர்ர் எனக் கிழிபட்டது.
“எர்ரா ஆட்டோவ!. இந்த நாகமணியை யாருன்னு நினச்சே?“என்று கையை ஓங்கியபோது அவன் கரத்தின் நடுவே பாம்பு படம் எடுப்பதுபோன்று பச்சை குத்தியிருப்பதை திருமுருகன் கவனிக்கத் தவறவில்லை.
”வேற ஜாதிக்காரப்பொண்ணை இழுத்துக்கிட்டு ஓடினவன், கண் எதிர இப்ப நிக்குறான் அவனைத் தீத்துக்கட்ட நான் துடிக்குறேன் உனக்கு வண்டிய எடுக்க ஆவாதா? ஆங்? அப்படீன்னா ஒதுங்கு, நானே வண்டிய ஓட்டிக்குவேன்.” என்றான் நாகமணி பெயருக்கு ஏற்றமாதிரி சீறும்குரலில்.
நிலைமை ஆபத்தை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதை உணர்ந்த திருமுருகன் அவன் குறிப்பிட்ட மைக்கேல்ஸ் ஐஸ்க்ரீம் கடை அருகில் இருந்ததால் வேறுவ ழியின்றி அந்தக் கடை இருந்த திசை நோக்கிஆட்டோவை செலுத்தினான்.
நாலடி கடப்பதற்குள் மேலும் இரு முரடர்கள் கையில் ஆயுதங்களுடன் ஆட்டோவில் பாய்ந்து ஏறிக்கொண்டனர். ”நாகமணி அண்ணே!..இன்னிக்கு அவன் கதய முடிச்சே ஆவணும்” என்றனர் கூட்டாளிகள்.
மைக்கேல்ஸ் ஐஸ்க்ரீம் என்ற கடைக்கு எதிர் பக்கம் ஆட்டோ விரைந்தபோதே ‘திருப்பு’ என்றான் நாகமணி.
”ஒன் வே..நேராப்போய்த்தான் திரும்பணும்” என்ற திருமுருகனை விழி சிவக்க பார்த்தவன்,
”ஏய்! இப்பொ என்ன ஒன் வே டூவேன்னுட்டு குறுக்கால ரோடு டிவைடர் மேல ஏத்திக்கிட்டு எதிர்சைடு போடா சர்தான் ”என்று அதட்டிய நாகமணி, ஆட்டோவின் மேல் பாகத்தை அரிவாளால் ஓங்கி அடிக்க அந்தப்பகுதி சின்னாபின்னமானது.
பதட்டத்துடன் ஆட்டோவை விரைந்து செலுத்தியவன், கோபமாக,
“எ…என்…என்ன நெனச்சிட்டு கலாட்டா பண்றீங்க?” என்று வீறிடும்போதே ஆட்டோவினின்றும் அவர்கள் தொப் என கீழே குதித்துவிட்டனர். அந்த வேகத்தில் ஆட்டோவும் நிலைதடுமாறி ஒரு பக்கமாய் சாய்ந்துபோனது.
சாலையில் தூக்கி எறியப்பட்ட திருமுருகன் காயங்களுடன் ஆட்டோவை மெல்லத் தூக்க முற்பட்டான். சிலீர் என ரத்தச்சொட்டு ஒன்றுஅவன் கையில் தெறித்தது. திரும்பிப் பார்த்தபோது ரத்தவெள்ளத்தில் ஒரு இளைஞன் கீழே கிடக்க அங்கே ஒரு ஆணவக்கொலை அரங்கேறி முடிந்திருந்தது. வீச்சரிவாளோடு வந்தவனின் கூட்டம் சட்டென அங்கு வந்து நின்ற காரில் ஏறிக்கொள்ள கார் பறந்தது.
திருமுருகனுக்கு சினிமா பார்ப்பது போலிருந்தது.
அதன் பின்னர் தான் திருமுருகனின் வாழ்க்கைப் பாதையே மாறிப்போனது.
போலீஸ் கோர்ட் கேஸ் என்று அலைய வேண்டியிருந்தது. ’சாட்சி சொன்னால் உன்னோட மகனைக் கடத்திடுவேன்’ என்று நாகமணியின் குரல் போனில் மிரட்டியது.
வழக்கம் போல உண்மை தலைகுனிய, பொய் நிமிர்ந்து கொள்ள ஒரு நாள் வீட்டு வாசலில் முப்பதாயிரம் ரூபாய் அடங்கிய கவர் கிடந்தது. திருமுருகனின் மனைவி நித்யாவிற்கு அதை எடுத்துக்கொண்டு சில காலமாவது கஷ்டப்படாமல் குடும்பம் நடத்த ஆசை எழுந்தது ஆனால் திருமுருகன் அதை அப்படியே கோயில் உண்டியலில் போட்டு விட்டான்.
“பாவப்பட்ட பணம் நித்யா! நமக்கு அது வேணாம்” என்றான்.
இரண்டு மாதங்கள் வாழ்வாதாரத்திற்கான எந்த வசதியும் ஏற்படவில்லை.
அப்போதுதான் நித்யாவிற்கு அவளுடைய மாமா பெண் வனஜாவிடமிருந்து போன் வந்தது. வனஜா குடும்பத்தை எதிர்த்து காதலித்த வடக்கத்திக்காரனுடன் இரண்டு வருடங்கள் முன்பு டில்லி அருகே ஜப்ராபாத்திற்குப் போய்விட்டவள்.
“சொல்லு வனஜா.. குடும்பத்தில் எல்லாரும் உன்னை விலக்கினாலும் நான் விலக்கமாட்டேண்டி.. எனக்கும் உனக்கும் ஒரே ஒற்றுமை ரெண்டுபேருமே ஆட்டோட்ரைவர்களையே கல்யாணம் பண்ணிக்கிட்டதுதான்! உன் வீட்டுக்கார் வடக்கே ஆட்டோ ஓட்டறார் இவரு தெற்கே! ஆனா அதுக்கும் பங்கம் வந்தாச்சி..ஜாதிக் கலவரக்காரங்களால அவரு இப்போ ஆட்டோ ஓட்டமுடியாம மனசளவுலயும் பொருளாதாரநிலையிலும் சோர்ந்துபோயிட்டார். நேர்மையா நாணயமாய் மனிதாபிமானத்தோடு வாழ்வதே சவாலாக இருக்கு வனஜா” என்றாள் .
“நித்யா! அப்படியா விஷயம்! கவலைப்படாதே.ஒருவகையில் இதுவும் நல்லதுதான் இங்கே இனிமே என் புருஷனால ஆட்டோ ஓட்டமுடியாதுடி..ஆறுமாசமா கான்சர் வந்து கீமோதெரபி சிகிச்சைல இருக்குறார் ரொம்ப பலகீனமா இருக்காரு. இதைச் சொல்லத்தான் நானே போன் செய்தேன், இந்த நிலைல எங்களுக்கு.குழந்தை குட்டி இல்லாமல்போனதும் நல்லதுக்குன்னு இப்ப தோணுது, ஏதோ நான் இங்க நர்ஸ் வேலைக்குப் போறேனோ ஓரளவு வருமானம் வருகுதோ! இப்போ எங்களுக்கும் துணையா நீங்க ரெண்டுபேரும் குழந்தையோட இங்க வந்திடுங்க, புது இடமேன்னு தயங்கவேண்டாம், நான் எல்லாம் கவனிச்சிக்கிறேன். இவரோட ஆட்டோவை ஓட்டி அண்ணன் இங்க சம்பாதிக்கலாம். எனக்கும் இந்த இக்கட்டான நேரத்துல நீங்க பக்கத்துல இருந்தா தெம்பா இருக்கும் நித்யா!”
வனஜா கேட்டுக்கொண்டதை நித்யாவும் திருமுருகனும் மிகவும் யோசித்துக் கடைசியில் மகன் செந்திலுடன் வடக்குநோக்கிப் பயணம் செய்ய முடிவெடுத்தார்கள்.
முன்பதிவுசெய்ய கையில் அதிகப்பணம் இல்லாத நிலையில் மூட்டைமுடிச்சுகளோடு சென்னைக்கு வந்து அங்கிருந்து டில்லி செல்லும் ரயிலில் பொதுப்பெட்டியில்தான் பயணம் செய்ய முடிந்தது.
ரயிலில் பொதுப்பெட்டியில் நீண்டதொலைவு பயணம் செய்வது என்பது மரண அவஸ்தைதான். சுற்றிலும் மனிதர்கள் மூட்டைமுடிச்சுக்களோடு உட்கார்ந்து கொண்டு அரட்டை அடிப்பார்கள். கழிப்பறை போகக்கூடவழியின்றி கூட்டம் நெருக்கியடிக்கும். கையில் பணமும் இல்லை என்பவர்களுக்கு பொதுப்பெட்டிப்பயணம் தவிர்க்க இயலாதுதான்.
சென்னையை விட்டுக் கிளம்பிய அரைமணி ஆகியிருக்கும். அந்தப்பெட்டியில் பெரும்பாலும் ஹிந்தியில் தான் பலர் பேசிக்கொண்டிருந்தார்கள்.
சற்று தள்ளி கீழே ஒரு சிறுவனுடன் அமர்ந்திருந்த நடுத்தர வயதுப்பெண், சுற்றுமுற்றும் பார்த்தாள். உடல்மெலிந்து பார்க்கப் பரிதாபமாக தெரிந்தாள். நித்யாவின் வயதுதான் இருக்கும் அவள் தானாகவே வலிய வந்து நித்யாவிடம் பேச்சுக் கொடுத்தாள். தமிழில் அவள் பேசவும் நித்யா வியப்புடன், ”நீங்க தமிழா?“ என்று கேட்டாள். அவள் மடியிலும் செந்திலைப் போலவே ஏழெட்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் மலங்க மலங்க விழித்தபடி அமர்ந்திருந்தான்.
“ஆமாங்க..”
“எங்கே போறீங்க?”
“தெரியலீங்க..டில்லிக்கு போற ரயில்னாங்க டிக்கட் மட்டும் வாங்கி பையன் சட்டைல பத்திரமா வச்சிருக்கேன். எனக்கு எங்க போவறதுன்னு தெரியலீங்க”
“எ…என்ன சொல்றீங்க?”
நித்யா இப்படி அதிர்ச்சியுடன் கேட்டதும் அந்தப்பெண்ணின் கண்கள் கலங்கி போய்விட்டன. தன் சோகக்கதையை அவள் விவரித்ததும் நித்யாவிற்கு தர்மசங்கடமாகிவிட்டது. அவள் மீது மிகுந்த இரக்கம் ஏற்பட்டது. ஏற்கனவே மென்மையான மனம் கொண்ட நித்யாவிற்கு அந்தப் பெண்ணின் வாழ்க்கைக்கதை அந்தப் பெண்ணை தன்னோடு டில்லிக்கு அழைத்து போய் வனஜாவிடம் சொல்லி ஏதாவது வேலை வாங்கித் தரச்சொல்ல வேண்டும் என்கிற அளவிற்குபோய்விட்டது.
திருமுருகன் இவர்கள் பேசியதைக் கேட்க முடியாமல் ஆண்கள் அடங்கிய கூட்ட நெரிசலில் நசுங்கிப்போய் உட்கார்ந்திருந்தான்.
ரயில் போய்க்கொண்டிருந்தது. செந்திலும் அந்தப்பெண்ணின் மகன் அமலனும் சகஜமாக விளையாட ஆரம்பித்துவிட்டனர்.
நடு இரவில் ரயில்பெட்டியே அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தது. பொதுப்பெட்டிகளின் பிரயாணிகளுக்கே உரிய முறையில் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்தபடியும் தரையில் பேப்பரை விரித்து அதில் குழந்தைகளைப் படுக்க வைத்தபடியும், நால்வர் அமரும் இருக்கையில் பத்து பேர் அமர்ந்து அப்படியே களைப்பில் கண் அயர்ந்தபடியும் பிரயாணம் நடந்துகொண்டிருக்க நித்யாவுக்கு நடுநிசியில் முழிப்பு ஏற்பட்டது.
மூட்டைமுடிச்சுகளின் நடுவே செந்திலும் அந்தப் பையனும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி படுத்துக்கொண்டிருந்தனர். பாத்ரூம் போக நினைத்து எழுந்தவள் அருகில் அந்தப்பெண் இல்லாதது கண்டு திகைத்தாள். சுற்று முற்றும் தேடினாள். கணவனை எழுப்பி கிசுகிசுப்பான குரலில் அருகில் வந்தவளைக் காணாத விவரம் சொன்னாள்.
”ஐயோ இப்ப என்ன செய்யறது இந்தப் பையனை அடுத்த ஸ்டேஷனில் போலீசுல ஒப்படைக்கலாமா?”
திருமுருகன் கவலையுடன் கேட்க நித்யா, ”வேண்டாங்க..போலீசுக்கு போனால் இந்தப் பையனை அவன் அப்பா வந்து கூட்டிக்கிட்டு போயிடலாம்.” என்றாள் தயக்கமுடன்.
“அதுதானே முறை?’
“ஆமாங்க ஆனா அவன் அப்பா ஒரு முரடனாம். கொலை கொள்ளைக்கு தயங்காதவனாம். எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் புருஷன் திருந்தலையாம். மனம் நொந்துபோயி அவனை விட்டுப்பிரிஞ்சிவந்ததா அந்த பொண்ணு சொன்னா.. வாழ்வை முடிச்சிக்கலாம்னு நினைச்சேன் ஆனா மகனுக்காக யோசிக்கிறேன்னா.. ஆனா இப்போ விபரீதமா ஏதும் முடிவெடுத்துட்டாளான்னு தெரியலையே. மனசுக்குக்கஷ்டமா இருக்குதே”
”அப்போ இவனை நாம கூட்டிட்டு போகணுமா? யாரோ கொலைகாரன் மகன் என்கிறாயே நித்யா? வெறுத்துப் போயி ஓடற ரயில்லேருந்து குதிச்சாளோ இல்ல வேற ஸ்டேஷன் இறங்கி போயிட்டாளோ இந்தக் குழப்பம் நமக்குத் தேவையா நித்யா? நாம போவதே புது ஊரு, மொழி தெரியாது, கைல பணம் அதிகமில்லை . நம்ம மூணுபேருக்கே எதுவும் போதாத நிலைமை..ஆனா இந்தப் பையனைப் பார்த்தா பாவமா இருக்கு.. இவனை நிர்கதியா விட்டுப்போகவும் முடியாது. டிக்கட் செக் பண்ணவரவர் கிட்ட உண்மையை சொல்லி போலீசுல ஒப்படைக்க சொல்லிடலாம்”
“ஐயோ வேண்டாங்க…பாவம், இவனை நாம கூட்டிட்டு போகலாம்.. அந்தப் பெண்ணின் கதை கேட்டு நான் ஆடிப்போய்ட்டேன்.. அவள் தன் மகனாவது நல்லா இருக்கட்டும்னு விட்டுட்டுப் போயிருக்கா.. “
நித்யாவின் கோரிக்கையில் நியாயம் தெரியவே செந்திலுடனும், அந்த அமலன் என்னும் சிறுவனுடனும் பிங்க் லைன் எனப்படும் டில்லி மெட்ரோவின் பாதையிலிருக்கும் ஸ்டேஷன்களில் ஒன்றான ஜப்ராபாத்திற்கு வந்துவிட்டார்கள்.
வனஜாவின் கணவன் ஓட்டிய ஆட்டோவை திருமுருகன் ஏற்றுக்கொண்டான். தொழிலை ஆரம்பிக்க அவர்கள் இருவரும் உதவியதோடு இல்லாமல் தங்கள் வீட்டின் ஒரு பகுதியிலேயே அவர்களை தங்கவும் வைத்தனர்.
ஓரிரு மாதங்களில் திருமுருகனுக்கு ஊர்,மொழி எல்லாம் பழக்கமானது. அமலனும் தாய் நினைவை மறந்து இவர்களூடன் ஒட்டிக்கொண்டான் அந்தக் குடும்பம் காட்டிய அன்பில் மெல்லத் தன் தாயின் நினைவை மறக்கத்தொடங்கினான்.
அன்று,
வனஜா வேலைக்குச்சென்றிருக்க, திருமுருகனும் ஆட்டோவை எடுத்துக்கொண்டு காலையிலேயே புறப்பட்டுப்போயிருக்க செந்திலுடனும் அமலனுடனும் வீட்டில் இருந்தாள் நித்யா.
ஜப்ராபாத் அதன் அருகிலிருக்கும் பார்பாக், முஜ்பூர்கபீர்நகர் என்று வேற்றுமதத்தினர் அதிகம் வாழும் இடங்களில் எழுந்த கலவரம் அந்தப்பகுதி முழுவதும் பரவ ஆரம்பித்தது.
திடுமென ஒரே கூச்சல். பல பேர் ஓடி வந்தார்கள் வீடுகளில் நுழைந்து ஆண்களையெல்லாம் வயது வித்தியாசம் பாராமல் அடிக்க ஆரம்பித்தார்கள். இழுத்துக் கொண்டு போய் மரண அடி அடித்தார்கள். கடைகளை ஆட்டோக்களை கார்களை உடைத்தார்கள்.
வனஜா போன் செய்து, ”நித்யா! கதவைப் பூட்டிக்கிட்டு உள்ளேயே இரு. பயங்கரக் கலவரம் நடக்குது வெளில போயிடாதே.. முக்கியமா ஆண்களை எல்லாம் அடித்து நொறுக்கிறாங்கன்னு தகவல் வருது. நானும் நிலைமை பார்த்திட்டு ஆஸ்பித்திரிலியே தங்கிட்டு காலைல வரேன்”. என்று எச்சரித்தாள்.
சற்று நேரத்தில் வாசல்கதவு தடதடவென இடிக்கப்பட்டது
உருதுகலந்த ஹிந்தியில், ”தர்வாஜாகோல் தோ” என்று அதட்டல் கேட்டது.
நித்யா, ”அமலா ஆபத்துப்பா. நீ அலமாரிக்குள் ஒளிஞ்சிக்கோ. நான் சொல்ற வரைக்கும் வெளில வராதே“ என்றாள்.
செந்திலை பின்கட்டுவழியே வெளியே ஓடச் சொல்லி ஜாடை காட்டுவதற்குள்…
“சாலா! பச்னேகி கோஷிஸ் கர் ரஹே ஹோ?”
“டேய் தப்பிக்கவாப்பாக்கறே?” என்று கூச்சல்போட்டபடி செந்திலை அலாக்காய் தூக்கிக்கொண்டு ஒருவன் போனான் .
இன்னொருவன், ”அவுர் கித்னே ஆத்மீ லோக் அந்தர் ஹை? (இன்னும் எத்தனை ஆம்பிளைங்க இருக்காங்க வீட்டில?) என்றுகேட்டபடி வரவும் ”யாருமில்லை அவன் என் ஒரே மகன் அவனைத்தான் நீங்க கூட்டிப் போய்ட்டீங்க”என்று ஹிந்தியில் வீறிட்டாள் நித்யா.
சற்று சந்தேகப்பார்வை பார்த்துவிட்டுஅவர்கள் வெளியேறினர்.
அலமாரியை திறந்து அமலனை வெளியே இழுத்துக்கட்டிக்கொண்டாள் நித்யா.
“கண்ணா அமலா நீ வெளியே போயிடாதப்பா..”
மறுபடி வனஜா போனில், ”நித்யா ஆட்டோ, கார்னு ஓட்டிக்கிட்டு வர எல்லாரையும் வெட்டு குத்துன்னு கொல்றாங்களாம்..போர் நடந்தபூமியாட்டம் இருக்குது, பக்கம் பக்கமா நெருப்பு ஜுவாலையா எரியுதாம். போலீசு குவிஞ்சி கிடக்குதாம் வெளியே போன பல ஆண்கள் வீடு திரும்பல போலிருக்குது, திருமுருகன். அண்ணன் எங்க இருக்காரு வீடுவந்தாரா? பயமா இருக்கு” என்றாள் வனஜா திகில் நிறைந்த குரலில்.
“செந்திலை அனுப்பி போய்ப் பார்த்துவர அனுப்பநினச்சேன், அப்ப பார்த்து கலவர ஆளுங்க உள்ள வந்து அவனையும் இழுத்திட்டுபோயிட்டாங்க..என்னாகுமோ தெரியலியே?”
”அடிப்பாவி புருஷனை மீட்க பெத்த பிள்ளையை பலிகொடுத்திட்டியா? அதான் ஒரு இலவச இணைப்பு கூடவே ரயில்ல அன்னிக்கு வந்திச்சே, அதை அனுப்பறதுதானே?” என்று கேட்டவள் ”சரிசரி…நான் யாரையாவது பாக்க சொல்றேன்…”என்றுகோபத்துடன் போனை வைத்தாள்.
நித்யா இடிந்துபோய் அழுதபடி உட்கார்ந்துவிட்டாள்.
“அம்மா என்னாச்சு அம்மா? செந்தில் எங்கம்மா? அப்பா எங்கம்மா?” என்று அமலனும் கூடச்சேர்ந்து அழுதான்.
அரைமணி ஆகி இருக்கும்.
அப்போது டக்டக் என் வாசல் கதவு தட்டப்படவும் பயத்துடன் அப்படியே நின்றவளை, ”அம்மா நாந்தான்” என்ற குரல் கேட்டதும் ஓடிச்சென்று கதவைத் திறந்தாள்..
வாசலில் செந்தில் நின்றுகொண்டிருந்தான். அருகில் வாட்ட சாட்டமாய் ஒரு மனிதனும் நின்று கொண்டிருந்தான். நித்யா அவனிடம், ”என் பையனை விட்டுட்டு விட்டுடு” என்று ஹிந்தியில் கதற ஆரம்பித்தாள்.
செந்தில் சட்டென, ”அம்மா! இந்த அங்கிள் தான் என்னை கலவரக்கார கூட்டத்திலிருந்து காப்பாத்தினார்! அவங்க என்னை நடு ரோடில் வச்சி அடிக்கத்தொடங்கினாங்க.. எங்கேருந்தோ வந்த இவரு அவங்களை அடிச்சி நொறுக்கி என்னை காப்பாத்தினார்மா” என்றான்..
”அப்படியா நன்றி” என்று ஹிந்தியில் சொன்னவளிடம் அவன், ”அம்மா! நான் தமிழன் தான்.. என் மகனைப்பறிகொடுத்து அவனைத்தேடித்தான் இந்த ஊருக்குவந்தேன்…ஆணவக்கொலை பல செய்த அக்கிரமக்காரனோடு வாழப்பிடிக்காமல் பொண்டாட்டி ஒருநாள் எங்கியோ போயிட்டா. மகனையும் அவளையும் இழந்தபிறகுதான் நான் மனுஷனானேன்.. அவங்களை நான் தேடாத இடமில்ல..ஆனால் சமீபத்துல பொண்டாட்டி வடக்கே போகிற ரயில்லேருந்து கீழே குதிச்சதுல தலைல அடிபட்டு கிடந்தவளை நல்ல ஆத்மா ஒன்று காப்பாற்றி ஆஸ்பித்திரில சேர்த்திருக்கு. நாலு வருஷமா அம்னீஷியால இருந்தவ சுயநினைவு வந்து விவரம் சொல்ல அவளை ஆஸ்பித்திரில சேர்த்துக் காப்பாத்தின நல்ல மனுஷங்க எனக்கு நடந்ததை சொல்லி வரச்சொன்னாங்க.. நான் அவளை பாக்க ஓடிப்போனேன்.. என் மேல் உள்ள வெறுப்பில் டில்லி போகிற ஏதோ ஒரு ரயிலில் ஏறினதாயும், நடு ராத்திரி ஓடும் ரயிலிலிருந்து கீழே குதிச்சதாகவும் அதுக்கு முன்னாடி ஜப்ராபாத் போறேன்னு சொன்ன ஒரு நல்ல பெண்மணியின் அருகில் பையனை அப்படியே விட்டுட்டு போனதாகவும் சொல்லி அழுதா.. அவளூக்கு ஜப்ராபாத் அப்படீன்னு..ஊர்பேர் தான் தெரிஞ்சிது வேற விவரம் தெரியாத நிலைமைல ஆறுமாசமா இந்த ஊர்ல ஓட்டல் ரூம் போட்டுக்கிட்டு தெருத்தெருவா என் மகனைத்தேடறேன்மா. என் பையனை தான் கண்டுபிடிக்க முடியல, இந்தப் பையனையாவது இன்னிக்கு தீவிரமாவதிகள் கிட்டேருந்து காப்பாத்திக் கூட்டி வர முடிந்தது”என்று அவன் முடித்தபோது நித்யாவிற்கு ஏதோ புரிய ஆரம்பித்தது. அதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள நினைப்பதற்குள் வாசலில் ஆட்டோவந்து நிற்கும் சத்தம் கேட்டது..
“அப்பா! அப்பா!” என்று அமலனும் செந்திலும் வாசலுக்கு ஓடினர்.
“உச்சிப்பிள்ளையார் அருள்தான் நித்யா..என் ஆட்டோ இன்னிக்கு நெருப்பு பிடிக்காம தப்பிச்சிது… தப்பிச்சி எப்படியோ வீடு வந்தேன்..ஐயோ அங்கங்கே நெருப்பு.. கலவரம் வயித்தைக் கலக்குது”
என்று பேசிக்கொண்டே வந்த திருமுருகன் அப்போதுதான் கூடத்தில் நின்றவனைக் கூர்ந்து பார்த்தான் . கட்டம்போட்ட கைலியும் அரைக்கை சட்டையுமாக நின்றவனின் முகத்தை அவனால் மறக்கமுடியுமா என்ன!
சட்டென பார்வை குனிந்த போது அவன் கரத்தில்தெரிந்தது பச்சைக்குத்தப்பட்ட படமெடுக்கும் பாம்பின் படம்!
”நாகமணி?” என்றான் வியப்புடன். பிறகு,”நீங்.. நீங்க திருச்சில?” என்று கேட்டதும் நாகமணியின் முகம் வெளிறிப்போனது. திருச்சி வட்டாரத்தில் நாகமணி என்கிற ரவுடியைத் தெரியாதவர்களே இல்லைதான்.
”உங்களுக்கு இவரைத் தெரியுமாங்க? நம்ம செந்திலை இவர் தான் காப்பாத்தி வீட்டுக்கு அழைச்சிட்டுவந்தாரு, இவர் மட்டும் இல்லேன்னா நம்ம பையன் இன்னிக்கு என்ன ஆகி இருப்பானோ? நினைக்கவே குலை நடுங்குதுங்க..” அடிகுரலில் விசும்பினாள்.
“செந்திலை அந்த தீவிரவாதிகளோடு அனுப்பி நல்ல காரியம் செய்தாய்! இல்லாவிட்டால் இப்போ நாம் நாகமணிக்கு என்ன பதில் சொல்லி இருப்பது?” என்றான் திருமுருகன்.
குழப்பமுடன் நின்ற நாகமணியைப் பார்த்து, தொடர்ந்தான். “அன்னிக்கு டில்லிபோகிற ரயிலில் இவன் அம்மா-உங்க மனைவி எங்களோடு பயணம் செய்த போது என் மனைவியிடம் கொலைகாரப் புருஷனைப் பற்றிச் சொல்லி அவனோடு வாழப்பிடிக்காமல் மகனை நன்கு வளர்க்க விரும்பி வீட்டைவிட்டுக்கிளம்பி விட்டதாயும் எங்கே போவதெனத் தெரியவில்லை என்றும் சொன்னாங்க. ஆனால் பயணத்தில் பாதிவழியில் காணாமல் போய் விட்டாங்க…அப்போதிலிருந்து உங்க மகன் அமலனை இதுவரை நாங்கள்தான் வளர்த்துவருகிறோம்” என்றவன் அமலனை நாகமணியின் முன்பு கொண்டு நிறுத்தினான்..
நாகமணிக்குக் கண் மலர்ந்தாலும் மனமும் உடம்பும் சட்டென பலமிழந்துபோக,
“திருந்தி வந்தவனுக்கு விருந்து போட்டுட்டீங்க…உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்?. நான் செய்த தப்புக்கு பிராயச்சித்தமாய் இன்னிக்கு உங்க மகனையாவது காப்பாத்தினேன்”என்று நா தழுதழுத்தான்.