வசந்தம் வந்து போய்விட்டது
கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 14, 2026
பார்வையிட்டோர்: 186
(1997ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14
அத்தியாயம் – 13

இப்போது சாந்திக்கும் ராஜனுக்கும் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட நின்று விட்டது. ஒரு பின்னேரம் சாப்பாடு கொடுக்கும்போது ஒரு கடிதமும் கொடுத்தான் ராஜன்.
“நீ என்னுடன் பேசமாட்டேன் என்கிறாய், நான் சொல்ல வேண்டிய எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன”
தன்னை முறைத்துப் பார்க்கும் சாந்தியைப் பார்த்துச் சொன்னான் ராஜன்,
“நீ உனது ஆங்கிலச் சினேகிதிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஆண்கள் எல்லாரையும் திட்டிக் கொண்டிருக்கிறாய், நான் சொல்வதைக் கேட்டு விட்டு நீ எதையும் முடிவு செய்து கொள்”
அவள் மௌனமாய் நின்றாள். அலிஸன் அவளுடைய கணவன் டேவிட்டைத் திட்டி விட்டு பார்பராவுடன் போய்விட்டதைக் கேள்விப் பட்டிருப்பான் போலும்.
“கோபமாய் இருக்கம் போது எல்லாம் குழப்பமாய்த் தானிருக்கம், சாந்தி தயவு செய்து இந்தக் கடிதங்களைப் படித்துப் பார்”
சாப்பாட்டுப் பார்ஸலுடன் கடிதத்தையும் வைத்து விட்டுச் சென்று விட்டான்.
உடனடியாக வந்த கோபத்தில் அந்தக் கடிதத்தைச் சின்னா பின்னாமாகக் கிழித்து எறிய வேண்டும் போலிருந்தாலும் அவன் பார்வையில் தெரிந்த சோகத்தின் ஆழம் அவளைக் கொஞ்சம் நிதானிக்கப் பண்ணியது.
குழந்தை உஷா இன்னும் அப்படியே அடித்து விட்ட மரம் மாதிரிக் கிடக்கிறாள். அவள் நிலையைப் பற்றியழுவதா அல்லது தனது துயரை நினைத்து அழுவதா என்று தெரியவில்லை.
எமிலி வந்திருந்தாள்,குமாரை உஷாவுடன் இருக்க விட்டு அவர்கள் இருவரும் பக்கத்துப் பார்க்குக்குப் போனார்கள்.
“அலிஸன் பார்பராவுடன் ஓடிப் போனதுக்கு நான்தான் காரணம் என்று திட்டப் போகிறாயா”
எமிலியின் முகத்தில் குறும்பு.
சாந்தி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
”எனக்கென்னவோ உங்கள் கலாச்சாரம் விளங்கமாட்டேன் என்கிறது. கல்யாணம் செய்து இரண்டு குழந்தைக்குத் தாயாகும் வரை அலிஸனுக்கு இருந்த அறிவு எங்கே போய் விட்டது”
சாந்தி அலுத்துக் கொண்டாள்.
எமிலிக்கும் சாந்தியின் குழப்பத்தைப் பார்க்க வேடிக்கையாயிருந்தது. இயற்கையாகவே மிகவும் சங்கோஜமான பிறவி சாந்தி. இப்போது அலிஸன் பார்பரா என்ற பெண்ணைக் காதலிக்கிறாள் என்பதைத் தெரிந்ததும் அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்கினாள்,
“என்ன சாந்தி ஒன்றும் புரியாத குழந்தை மாதிரி முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறாய்? எங்கள் கலாச்சாரத்தில் மட்டுமல்ல எல்லார் கலாச்சாரத்திலும் இப்படியான காதல்கள் இருக்கின்றன. சமயத்தின் பெயரிலும் கலாச்சாரத்தின் பெயரிலும் அதை எல்லாம் மறைத்து வாழ்கிறார்கள். லண்டனில் இதெல்லாம் பெரிய சகஜம், மனிதர்கள் நேர்மையாக வாழப் பழகுகிறார்கள்”
“ஒழுக்கம் ஒன்று கிடையாதா”
“உனக்கு ஒழுக்கமற்றது என்கிற விஷயம் அலிஸனுக்கு ஒழுக்கமாகத் தெரிகிறது. ஒழுக்கமும் பண்பாடும் ஒவ்வொரு தனிமனிதனின் அனுபவத்தையும் அறிவையும் பொறுத்தது.”
சாந்தி பெருமூச்சு விட்டாள்,
தன் கணவரைப் பற்றி இதுவரை எமிலியிடம் எதுவும் சொல்லவில்லை. இப்போது அவன் கொடுத்த கடிதம் கையிற்கனத்தது.
“எமிலி…” சாந்தி ஏதோ சொல்ல நினைத்தாள், பின்னர் சாந்தி களைப்புடன் சோர்ந்து போய் உட்கார்ந்தாள். ஆகஸ்ட் மாதக் கடைசியில் வெயில் கொழுந்து விட்டெரிந்தது.
“வசந்த காலம் வாட்டி எடுக்கிறது” எமிலி தன் கறுப்புக் கண்ணாடியை மாட்டிக் கொண்டாள்.
இருவரும் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார்கள், “ராஜனுக்கும் உனக்கும் என்ன பிரச்சினை” எமிலி சாந்தியை உற்றுப் பார்த்துக் கேட்டாள். சாந்தி திடுக்கிட்டு விட்டாள்.
“உனக்கு எப்படித் தெரியும்?”
எமிலி மெல்லமாகச் சிரித்துக் கொண்டாள்.
“பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமென்ன இருண்டு விடுமா”
சாந்திக்கு அதன் பின் தன் சோகத்தை அடக்கி வைக்க முடியவில்லை, பகிரங்கமான இடத்தில் உட்கார்ந்திருப்பதையும் மறந்து விம்மி விம்மியழுதாள்.
“எமிலி… என் கணவன் ….” சாந்தியால் எப்படித் தொடர்வது என்று தெரியவில்லை.
“யாரோ ஒருத்தி அவனது ஒவ்வீசில் முந்தானை விரிக்கிறாளா” எமிலியின் கண்களில் இன்னும் குறும்பு.
எங்கே தொடர்வது?
கொஞ்சம் கொஞ்சமாக ஸேராவைப் பற்றிச் சொன்னாள். பின்னர் ஸேராவுக்கும் ராஜனுக்கும் பிறந்த கிருஷ்ணாவைப் பற்றிச் சொன்னாள்.
இப்போது கணவன் தனது பழைய கதையை விவரித்து எழுதிய கடிதத்தைப் பற்றிச் சொன்னாள்.
“என்ன செய்யப் போகிறாய்? கடிதத்தை வாசிக்காமல் எறியப் போகிறாயா”
சாந்தி மறுமொழி சொல்லவில்லை.
“அலிஸனின் அவசர முடிவு மாதிரி நீயும் ஓடப் போகிறாயா?”
எமிலி தன் சினேகிதியின் கையைத் தடவி விட்டாள், அந்த அன்பான ஸ்பரிசம் சாந்தியை இன்னும் அழப் பண்ணியது.
“உணர்ச்சிவசப்பட்டு எதையும் முடிவு செய்யாதே….”
“எனக்கு உதவி செய்ய யாருண்டு. பெரியண்ணா சங்கர் ராதிகாவின் காலடியில் கிடக்கிறார், சின்ன அண்ணா எந்தநேரமும் அடியும் குடியுமாகக் குடும்பத்தைப் பயங்கரமாக நடத்துகிறார். தம்பி குமார்….” சாந்தி இப்போது எமிலியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
எமிலிக்குத் தெரியும் சாந்தி என்ன கேள்வி கேட்கப் போகிறாள் என்று.
“என்ன சாந்தி உனது தம்பி குமாருக்கும் எனக்கும் என்ன உறவு என்று கேட்கப் போகிறாயா”
சாந்தி வாயால் கேட்கத் தேவையில்லை. பார்வையில் ஆயிரம் கேள்விகள்.
“என்ன உறவாக இருக்கலாம் என்று நினைக்கிறாய்”
சாந்தி மென்று விழுங்கிக் கொண்டாள். எதையும் மேலே கேட்க விரும்பவில்லை.
தமயன் சேகர் எப்படித் துள்ளுவான் என்று அவளுக்குத் தெரியும். சங்கர் பேசாமலிருப்பான்.
“நாங்கள் இதைப் பற்றி விபரமாக ஒரு நாளைக்குப் பேசிக் கொள்வோம்” எமிலி எழுந்தாள். சாந்தி தொடர்ந்தாள். அவளுக்கு எல்லாமே குழப்பமாக இருந்தது.
ராஜனின் கடிதம் மிகவும் பணிவாக ஆரம்பிக்கப் பட்டிருந்தது. அப்பாவியான சாந்திக்குத் தான் கொடுக்கும் தொல்லைகளுக்கு மன்னிப்புக் கேட்டு ஆரம்பித்திருந்தான்.
அதைத் தொடர்ந்து எப்படிச் ஸேராவைச் சந்தித்தான், உறவு தொடர்ந்தது, காதல் வந்தது, பிரமிளா என்ன நாடகம் ஆடினாள். அவள் செய்த சதியால் ஸேரா அமெரிக்காவுக்கு ஓடிப் போய் விட்டாள். அவன் மனமுடைந்து போய் இரண்டு வருடங்கள் உலகம் வெறுத்துப் போயிருந்தான் என்பதை எல்லாம் எழுதியிருந்தான்.
“சாந்தி நான் இதெல்லாம் உனக்கு எழுதத் தேவையில்லை. எனது பழைய வாழ்க்கையைப் பற்றி உனக்கென்ன அக்கறை என்று நான் உன்னிடம் கேட்கலாம். அப்படி எல்லாம் முட்டாள்த்தனமாகவோ முன் கோபமாகவோ விசயங்களை நான் எடுத்துக் கொள்வதில்லை. ஸேரா எனது வாழ்க்கையில் ஒரு பகுதியாயிருந்தவள். இப்போது அவள் சரித்திரம். ஆனால் கிருஷ்ணா எனது மகன். பரிசுத்தமான அன்பின் பிரதிபலிப்பு. அந்தப் பாசத்தை நான் மறைத்து வைக்கப் போவதில்லை. பிரமிளா செய்த கொடுமைக்கு அந்தக் குழந்தை ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? அந்தக் குழந்தைக்கும் தனது தகப்பன் தன்னிடம் அன்பு காட்ட வேண்டும் என்ற ஆசை இருக்குமென்று உனக்குத் தெரியும். இதெல்லாவற்றையும் ஏன் எழுதுகிறேன் என்றால் உன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதற்காக அல்ல. என்னை நீ உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே. அப்படி என்னை நீ உணர்ந்து கொள்ளத் தயாராகவில்லை என்றால்…?
அவன் அந்த வசனத்தை முடிக்கவில்லை.
“என்னிடம் என்ன எதிர்பார்க்கிறான்? நான் எங்கே போவேன்? எமிலி மாதிரி தனியாக வாழ என்னால் முடியுமா? அலிஸன் மாதிரி யாரிடமாவது ‘உதவி’ கேட்டு ஓடமுடியுமா”?
சாந்தி இரவில் அமர்ந்திருந்து ஆறாக அழுது கொட்டினாள். எமிலி இன்னும் சில நாட்களில் ஹொஸ்பிட்டலை விட்டுப் போய் விடுவாள். அதன் பின் மனம் விட்டுப் பேசக் கூட யாருமில்லை.
குழந்தையின் அருகில் அமர்ந்தபடி அழுது கொண்டிருந்தாள். இரவு நகர்ந்து கொண்டிருந்தது. அவளுக்கு நித்திரை வரவில்லை.
உஷாவைப் பார்த்துக் கொள்ளும் நேர்ஸ் அன்புடன் தேனீர் கொண்டு வந்தாள்.
பெற்றோர் அறையில் T.V பார்த்துக் கொண்டிருந்த ஒரு தாய் அழுது கொண்டு ஓடி வந்தாள். “நியூஸ் தெரியுமா… இளவரசி டயானாவும் டொடி அல் வையாட்டும் கார் விபத்தில் மரணமடைந்து விட்டார்களாம்”
“ஐயோ” என்றலறினாள் அடுத்த தாய்,
நேர்ஸ்மார் எல்லோரையும் ஆறுதல் படுத்தினார்கள், “வாழ்க்கை மிகவும் குறுகியது, நாளை நடப்பதை யாரறிவார்’. அந்த அன்பான நேர்ஸ் சொன்னாள்.
“உனக்கும் அந்த தடிச்ச வெள்ளைக்காரிக்கும் என்ன தொடர்பு” சேகர் தம்பியைப் பார்த்து உறுமினான்.
“எமிலி ஒன்றும் தடிச்சியில்லை.. நல்ல அழகான பெண்” குமார் வழக்கம்போல் குறும்புத்தனமாகச் சொன்னான்.
ராதிகாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. மாலதி வழக்கம்போல் கதவுக்குப் பின்னால் ஒதுங்கி நின்றாள்.
சங்கர் பேசாமல் உட்கார்ந்திருந்தான்.
“என்ன அவன் ஆடிக் கொண்டு திரியிறான் நீங்கள் பேசாமல் இருக்கிறிகள்” ராதிகா கணவனிற் பாய்ந்து விழுந்தாள்.
“எல்லாம் கடவுள் விட்ட வழி”
சங்கர் முணுமுணுத்தான்,
“அவளுக்கு எத்தனை வயது” சேகர் அருவருப்பாகக் கேட்டான்.
“அடக்கி வைக்கத் தேவையில்லாத வயது”
குமார் எடுத்தெறிந்து சொன்னான்.
“உன்னை விட அவளுக்கு வயது கூட…”
சேகருக்கு அடுத்ததாக என்ன சொல்லலாம் என்று தெரியவில்லை போலும், கைகளை மேசையில் அடித்துத் தன் கோபத்தைக் காட்டிக் கொண்டான்.
“காலாகாலத்தில் ஒரு கட்டுப் போடாமல் சுதந்திரமாய்த் திரிய விட்டதற்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்” ராதிகாவின் குரல் உயர்ந்தது.
“ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் கட்டுப் போடலாம் மனிதர்களுக்குத் தேவையில்லை” குமார் வாதம் செய்தான்.
“இலங்கையில் எத்தனையோ தமிழ்ப் பிள்ளைகள் மாப்பிள்ளை இல்லாமல் ஏங்குதுகள்….” ராதிகா தொடர்ந்தாள்.
“கல்யாணம் இரு மனிதர்களின் அன்பில் வளர்வது…” குமார் முடிக்கவில்லை.
சேகர் துள்ளி எழுந்தான்.
”ஓகோ, பெரிய கல்யாணமும் கட்டுற யோசனையோ ஏதோ ஆசைக்கு அலையுறாய் என்று பார்த்தால் அவளைக் கல்யாணமும் கட்டிப் புதினம் காட்டப் போகிறாயோ”
“ஏன் கல்யாணம் செய்யக் கூடாது? எமிலிக்குக் கல்யாணங்களில் நம்பிக்கையில்லை, அவளுக்கு என்னைக் கல்யாணம் செய்ய விருப்பமென்றால் அதில் என்ன தர்க்கம் செய்ய வேண்டிக் கிடக்கு”
கோர்ட்டில் வாதாடும் குற்றவாளி போல் தன் குடும்பத்துடன் வாதாடிக் கொண்டிருந்தான் குமார்,
“அடக்கி வைத்து வளர்க்காமல் கடைசிச் செல்லப் பிள்ளை என்று செல்லம் கொடுத்தபடியாற்தான் இந்தப் பிரச்சினை எல்லாம்” ராதிகா கணைகள் மாதிரி வசனங்களை வீசிக் கொண்டிருந்தார்கள்.
“நீங்கள் சங்கர் அண்ணாவை வேண்டுமென்றால் அடக்கி வைத்துக் கொள்ளுங்கள். என்னை என் பாட்டுக்கு விடுங்கள்” குமார் எரிச்சலுடன் எழுந்து கொண்டான்.
கடந்த சில வாரங்களாக அவன் எமிலியுடன் நெருங்கிப் பழகுவது இவர்களுக்குத் தர்மசங்கடத்தையுண்டாக்கி விட்டது என்று அவனுக்குத் தெரியும்.
அவனுக்கு எமிலியில் ‘ஆசை’ ஒன்றும் வழிந்து கொண்டவில்லை. அளவிடமுடியாத மரியாதைதான் இருந்தது. அந்த மரியாதைக்குப் பின்னால் அவளிடம் ஒரு ‘கவர்ச்சி’ அவனுக்கில்லை என்று சொல்ல நினைத்தால் அத பொய்யாகும்.
எமிலி தன் வாழ்க்கையில் இவனுக்குச் சொல்ல வேண்டிய விடயங்களைச் சொல்லி விட்டாள். ஆனந்த் பற்றி அவள் சொல்லும்போது அவனில் இன்னும் எத்தனை அன்பு வைத்திருக்கிறாள் என்பது தெரிந்தது.
இலங்கை, இந்தியப் பெண்கள் தாங்கள் ஒரு காலத்தில் காதலித்த மனிதனைப்பற்றி இப்போது தன்னிற் கவரப் பட்டலையும் ஒருத்தனிடம் இப்படி மனம் விட்டுப் பேசுவார்களா?
டேவிட் பற்றி அவள் சொல்லும் போது அவனின் அரசியற் கொள்கையில், அவனின் கவர்ச்சியான தோற்றத்தில் தனக்கு ஒரு ஈடுபாடு தவிர அவனிடம் தன்னைப் பகிர்ந்து கொள்ளும் எந்த உணர்வுமிருக்கவில்லை என்று நேர்மையாகச் சொன்னாள்.
டேவிட் இப்போதெல்லாம் சோகமாய்த் தெரிகிறான். ஆங்கிலேயர்கள் மிகவும் மனத்துணிவு உள்ளவர்கள் என்று அவன் நினைத்தது மிகவும் பிழை என்று குமார் தெரிந்து கொண்டான். குமாரை ஒரு நாள் டேவிட் ஹொஸ்பிட்டலில் வைத்துச் சந்தித்தான்.
என்ன பேசுவது என்று தெரியவில்லை போலும். குமாரை மேலும் கீழும் ஏறிட்டுப் பார்த்தான்.
குமாருக்குத் தர்ம சங்கடமாக இருந்தது.
“பியர் குடிப்பாயா” டேவிட் கேட்டான்.
“இல்லை” குமார் தலையாட்டினான்.
“எமிலிக்குச் சரியான ஆள்தான். அவள் மரக்கறி சாப்பிடுவாள். மது தொட மாட்டாள்…. இந்தியாவில் வாழ வேண்டியவள் இங்கிலாந்தில் பிறந்து விட்டாள்”
டேவிட்டுக்கு யாரிடமாவது பேச வேண்டும் போலிருந்தது என்பது தெரிந்தது.
“பியர் குடிக்காவிட்டால் என்ன. தோடம்பழத்தண்ணி குடிக்கிறேன்”
இருவரும் பார் ஒன்றுக்குள் நுழைந்தார்கள்.
“அலிஸன் என்னை விட்டு ஓடிவிட்டாள்…. எமிலி என்னை வேண்டாமென்கிறாள்….”
டேவிட் மூன்றாம் பியர் ரின்னை முடித்துவிட்டு உளறினான்.
“ஆங்கிலேயனுக்குத் தங்கள் பெண்களைத் திருப்திப் படுத்தத் தெரியாது என்று நினைக்கிறாயா” டேவிட்டின் கேள்வி குமாருக்குத் தர்ம சங்கடத்தையுண்டாக்கியது. டேவிட்டுக்கு நல்ல செய்தி.
“அரச குடும்பத்தில் பிறந்த டையானா, கடைக்காரனான அராபுக்காரனுக்கு ஆசைப்பட்டாள், என் மனைவி பெண் ஒருத்தியுடன் இன்பம் காணப் போகிறாளாம். எமிலிக்கோ இந்திய ஆண்களைத்தான் பிடிக்குமாம். இங்கிலிஸ்காரன் என்ன பிழை செய்தான்”
குமார் மறுமொழி சொல்லவில்லை.
“நான் லண்டனை விட்டுப் போகப் போகிறேன்”
டேவிட் குமாருக்குச் சொன்னான்.
“நீ அதிர்ஷ்டசாலி.. எந்தப் பெண்ணையும் எந்த ஆணும் அனுபவிக்கலாம் ஆனால் எமிலி போன்ற இன்ரலிஜன்ட் ஆன பெண்ணை அடைவது…” டேவிட்டின் கண்கள் திடீரென பனித்தது.
“You are Lucky to have Emily… Enjoy her treat her nicely… good luck to your future”
டேவிட் சட்டென்று எழுந்தான்.
அதன் பிறகு அவனுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. தென் அமெரிக்க நாடொன்றுக்குப் போவதாகத் தனக்கு எழுதியதாக எமிலி சொன்னாள்.
“டேவிட்டிலிருந்து தப்பத்தான் என்னுடன் பழகுகிறாயா” குமார் கேட்டான்.
“நான் யாருக்கும் தப்பி வாழத் தயாராயில்லை. எனக்கு என்ன வேண்டும் என்று தெரியும். எப்படி வாழ வேண்டும் என்று தெரியும்… என் பாதையில் என்னுடன் நீங்கள் துணைவரத் தயாராயிருந்தால் நான் மிகவும் சந்தோசப்படுவேன்..” எமிலி வழக்கம் போல் தெளிவாகச் சொன்னாள்.
“ஏன் அந்தப் பெண்ணுடன் அலைகிறாய்” சங்கர் வழக்கம் போல் தனது ஆறுதலான குரலிற் கேட்டான்.
தமயனைப் பார்க்க அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. ராதிகாவின் வாழ்க்கைக்கு இந்த மனிதன் மாடாக உழைத்துத் தேய்வதாக அவன் நினைத்தான்.
மற்றவர்களுக்காக வாழ்ந்து முடிக்கும் சில மனிதர்களில் ஒருத்தன் சங்கர்.
“நான் அந்தப் பெண் எமிலியுடன் அலையவில்லை. அவளை மிகவும் நெருக்கமாய் நேசிக்கிறேன்”
“இதெல்லாம் மாயை… பருவக் கோளாறு” சங்கர் முணுமுணுத்தான்.
“மாயைகள் சில வேளை வாழ்க்கைக்கு இன்றியமையாதது.”
“உனக்கு… குழந்தை குட்டிகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில்லையா” சங்கர் தம்பியின் முகத்தைப் பார்த்துக் கேட்டான்.
“ஏன் எமிலிக்கும் பிள்ளை பிறக்காது என்று நினைக்கிறீர்களா”
“அவளுக்கு உன்னைவிட வயது கூட” சங்கர் முகத்தைத் திருப்பிக் கொண்டு சொன்னான்.
“தங்களுக்குத்தேவையாக, அடக்கிக் கொள்ளத் தக்கதாக ஆசைக்குப் பாவித்துக் கொள்வதற்காகத்தான் ஆண்கள் பெண்களை இளமையுடன் எதிர்பார்த்தார்கள், ஒரு தம்பதிகள் சரிசமமாக ஒருத்தரை நினைக்கும்போது இந்த வித்தியாசங்கள் வராது அண்ணா”
ஆண்களின் இச்சையை அனுபவித்து முடிக்க இளமைப் பெண்கள் தேவைப்படுகிறார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தைகள் பெற்றுக் கொள்ள இயற்கை வசதி செய்து கொடுத்திருக்கிறது. அந்த நியதியின் படி எமிலிக்கு விருப்பமென்றால் இன்னும் பத்துக் குழந்தைகள் பெற்றுக் கொள்வாள். ஆனால் தனக்குள்ள ஒரு மகனுக்குப் பணிவிடை செய்வதில் திருப்தி காண்பவள் அவள். அத்துடன் உலகத்துக் குழந்தைகளை தன் குழந்தைகளாய்ப் பார்ப்பவள் அவள். நீங்கள் பார்க்கும் குறுகிய குடும்ப அமைப்புக்குள் அவளின் அன்பை அடக்கிவிடாதீர்கள். ஆழ்கடல் போல் மிகவும் ஆழமானது அவள் அன்பு” குமார் தமயனுக்கு மேலும் விளக்கம் சொல்ல விரும்பாது நடந்தான்.
எமிலிக்குக் குமாரின் குடும்பத்தினரின் குழப்பம் தெரிந்தது. அவனும் ஆனந்தும் குடும்பம் நடத்த முயன்றிருந்தால் இந்தப் பிரச்சினைகள்தான் வந்திருக்கும்.
கிழக்கும் மேற்கும் காணும் வித்தியாசமான உலகமிது. எல்லாவற்றிற்குமே காரணங்கள் கண்டுபிடிக்க முயலும் கண்ணாமூச்சி விளையாட்டு.
மனித உணர்வுகளுக்கு காரணம் கண்டு பிடிக்க முயன்றால் உலகில் இத்தனை பிரச்சினைகள் வந்திருக்குமா? எமிலிக்கு ராதிகாவின் காழ்ப்புணர்ச்சி விளங்கியது. மாலதியின் தடுமாற்றம் புரிந்தது. சேகரின் வெறுப்பு அவள் எதிர்பார்த்தது. சங்கரின் தத்துவங்கள் காலம் கடந்தது. சாந்தி எமிலியைப் புரிந்து கொண்டாள். அதுவே எமிலிக்குத் தேவை.
பிரமிளாவும் கணவரும் உஷாவைப் பார்க்க லண்டனுக்கு வந்திருந்தார்கள். சாந்தி அப்போதுதான் ராஜனின் கடிதத்தை படித்து முடித்திருந்தாள்.
பிரமிளா சாந்தியின் முகத்தைப் பார்க்காமல் உஷாவின் நிலையை விசாரித்துக் கொண்டிருந்தாள். பிரமிளா ஒரு டொக்டர். அவள் உஷாவின் டொக்டரிடம் நிறையக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள். பிரமிளாவின் கணவர் வழக்கம் போல் மனைவியின் வார்த்தைகளுக்குத் தலையாட்டிக் கொண்டிருந்தார்.
சாந்தி தன் மைத்துனியை மெளனமாக அளவிட்டாள். இவள் தலையிடாமலிருந்தால் இன்று கிருஷ்ணா தன் தகப்பன் ராஜனுடன் எவ்வளவு சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருப்பான்?
பிரமிளாவின் மகன் இப்போது என்ன செய்து கொண்டிருப்பான்? பிரமிளாவின் மகன் தினேஸ் தன் ‘போய் பிரண்டுடன்’ தனிக் குடித்தனம் செய்கிறான். பிரமிளாவுக்கு இரண்டு குழந்தைகள். அவளின் மகள் தன்னுடன் பொலிட்டிக்கல் சயன்ஸ் படித்த ஆபிரிக்க இளைஞனைத் திருமணம் செய்து கொண்டதால் தாய் தகப்பனுடனுள்ள உறவு முறிந்து விட்டது.
“எங்கள் கலாச்சாரத்தின்படி எப்படியும் தங்கள் குழந்தைகளைப் படிப்பிக்க வேண்டும்” என்று ஓயாமற் சொல்லிக் கொண்டிருந்த பிரமிளாவின் மகள் தங்கள் கலாச்சாரத்துக்குப் புறம்பான ஒருத்தனைச் செய்ததால் தாய் தகப்பன் அவளை ஒதுக்கி வைத்து விட்டார்கள். மகன் தினேஸ் எப்போதும் அம்மா செல்லம். தகப்பனைப் பிடிக்காது. மனைவியிடம் காட்ட முடியாத சண்டித்தனத்தை மகனிடம் காட்டுவார் அவர். இளம் வயதிலிருந்தே ஒரு சங்கோஜப் பிறவியாக வளர்ந்து விட்டான் தினேஷ்.
தினேஷ் வளர்ந்ததும் ஊரிலிருந்து ஒரு நல்ல பெண்ணை எடுத்துக் கல்யாணம் செய்ய பிரமிளா ஓடித் திரிந்தாள். மகள் தங்கள் கலாச்சாரத்திற்கு அப்பால் ஓடிப் போனதுபோல மகனும் ஓடிப் போகக்கூடாது என்று அவள் அங்கலாய்த்தாள்.
“இவனுடன்தான் என் எதிர்காலத்தைச் செலவழிக்கப் போகிறேன்” என்று தன் சினேகிதனைத் தாய்க்கு அறிமுகம் செய்தபோது இருதயம் நின்று விட்டது போலிருந்தது பிரமிளாவுக்கு.
“இருபத்திரண்டு வயது மகனை என்னவென்று திருத்துவது?”
மனைவியைக் கணவன் திட்ட, கணவனை மனைவி வைய ஒன்றிரண்டு நாட்கள் வீட்டில் மிகவும் நீண்ட களேபரம்.
“என்னவென்று என் குடும்பத்தின் முகத்தில் விழிப்பேன்” பிரமிளா ஸ்டெடஸ்கோப்பைச் சுழட்டியபடி அழுதாள்.
“காலம் கெட்டுப் போச்சு இப்படி எல்லாம் ஏன் நடக்கிறது” அவள் மகனைக் கட்டிக கொண்டழுதாள்.
“அம்மா அன்புக்கு வரையறையில்லை. நான் ஸிரிவனை மிகவும் விரும்புகிறேன். அவனை என் வாழ்க்கைத் துணைவனாக ஏற்றுக் கொள்ளப் போகிறேன். ஆசீர்வாதம் தாருங்கள்” தினேஷ் நேர்மையுடன் சொன்னான்.
லண்டனில் – இங்கிலாந்தில் ஹோமோசெக்சுவல் பிராக்டிஸ் மிகவும் சாதாரணம். தமிழ்ச் சமுதாயம் இப்போதுதான் எதிர்கொள்கிறது.
லண்டன் gay clubs-ல் சந்தோசம் அனுபவிக்கும் ஆசிய ஆண்களில் 40% கல்யாணமாகிப் பிள்ளை குட்டி வைத்திருப்பவர் என்று அறிக்கைகள் சொல்வதைத் தெரிந்து கொள்ளாத ஆசிய சமூகத்தில் பிரமிளாவும் ஒருத்தி.
தனது குழந்தைகள் தாங்கள் நினைத்தபடி போய் விட்டப்படியால் பிரமிளா தங்கள் குடும்பத்தினருடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளாமல் கொஞ்ச நாள் அஞ்ஞாத வாசம்செய்தாள். ஸ்கொட்லாந்தில் வாழ்வது மிகவும் வசதியாயிருந்தது. லண்டனிற்தான் பெரும்பாலான சினேகிதர்களும் உறவினர்களும் வாழ்கிறார்கள்.
எத்தனையோ வருடங்களின் பின் இன்றுதான் தனது தம்பியின் மகள் உஷாவைப் பார்க்க லண்டனுக்கு வந்திருக்கிறாள்.
”நீ மிகவும் மெலிந்திருக்கிறாய்” பிரமிளா தன் மைத்துனியைப் பார்த்துச் சொன்னாள்.
இவளுக்கு என்ன சொல்வது?
நீ துரத்திவிட்ட ஸேரா இன்று என் வாழ்க்கையில் பூதமாய் முளைத்திருக்கிறாள். அதுதான் நான் சோகம் தாங்காமல் இளைத்திருக்கிறேன் என்று சொல்வதா அல்லது எனது ஒரே ஒரு மகள் உஷா உயிருக்குப் போராடுகிறாள் அந்தத் துயரில் களைத்து விட்டேன் என்பதா? அல்லது இன்னும் ஒரு குழந்தை என் வயிற்றில் வளர்கிறது அதுதான் சாப்பிட முடியாமல் மெலிந்து விட்டேன் என்ற சொல்வதா?
“ஸேரா லண்டனில் நிற்கிறாள்” தனக்குள் மெல்லிக் கொண்டிருந்த விடயத்தைத் தன் மைத்துனிக்குச் சொன்னாள் சாந்தி.
பிரமிளாவின் முகத்தில் பேயடித்தது போலிருந்தது. அவள் கணவர் பக்கத்துக் கடைக்குப் பேப்பர் வாங்கப் போயிருந்தாள். பிரமிளாவும் சாந்தியும் உஷாவின் கட்டிலுக்கருகில் உட்கார்ந்திருந்தார்கள்.
“அவளுக்கு ஒரு மகன் இருக்கிறான். கிருஷ்ணா என்று பெயராம். ராஜனுக்குப் பிடித்த பெயராம்” சாந்தியின் குரல் அடைத்தது.
பிரமிளா இந்த இடிகளை எதிர்பார்த்து வரவில்லை. லண்டனில் யாரும் தங்கள் குழந்தைகளைக் கேட்டு தர்ம சங்கடங்களைத் தந்து விடுவார்களோ என்று வந்தவனுக்கு எப்போதோ புதைத்து விட்ட பிணம் தனக்கு முன்னால் எழுந்திருந்து சிரிப்பது போலிருந்தது.
“நான் என்ன செய்வது என்று யோசிக்கிறேன்…. உழைக்க வசதியிருந்தால் உங்கள் தம்பியை விவாகரத்துச் செய்து விடுவேன், வயிற்றில் ஒரு குழந்தை, கட்டிலில் அரைகுறையாக இன்னொரு குழந்தை…. நான் என்ன செய்வேன்? ….” சாந்தி அழுகையை அடக்கிக் கொண்டு சொன்னாள்.
அத்தியாயம் – 14
லண்டன் சோகத்தில் ஆழ்ந்து கிடந்தது. இளவரசி டையானாவின் அகால மரணம் உலகத்தையே மிகவும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி விட்டிருந்தது. மைல் கணக்கான வரிசையில் மக்கள் காத்து நின்று தங்கள் இளவரசிக்கு மலர்க் கொத்துக்களை அர்ப்பணித்தார்கள்.
“வாழ்க்கை மிகவும் குறுகியது,அந்த உண்மை தெரியாமல் மனிதர்கள் ஒருத்தரை ஒருத்தர் குரூரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.”
எமிலி பெருமூச்சுடன் சொன்னாள். டேவிட் ஊரை விட்டுப் போன செய்தி அவளை மிகவும் கலக்கியிருந்தது.
“என்னைக் காணாமலிருந்தால் டேவிட் இன்னும் அலிஸனுடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்திருக்கலா மல்லவா?”
எமிலி இந்தக் கேள்வியை எத்தனையோ தரம் கேட்டு விட்டாள்.
“உன்னைக் காணாவிட்டால் வேறு யாரையோ அவன் கண்டிருக்கலாம்” சாந்தி சினேகிதியைத் தேற்றுவதற்குச் சொன்னாள்.
“டேவிட் மிகவும் பலவீனமான மனிதன்”
எமிலி பரிதாபப்பட்டாள்.
“இங்கிலிஸ்காரர் மிகவும் வலிமையானவர்கள், உலகத்தை ஆண்டவர்கள்” சாந்தி சொன்னாள்.
“வலிமையற்ற மனிதர்கள், தூரத்தில் நின்றபடி பீரங்கியால் எதிரியை அழித்து வெற்றி கண்டவர்கள். உணர்வுகளை முகம் கொள்ளத் தெரியாதவர்கள் என்பது என் கருத்து” எமிலி விளக்கம் கொடுத்தாள்.
“அலிஸன் பார்பராவுடன் போனது டேவிட்டுக்கு அவமானமாக இருந்திருக்க வேண்டும்.”
“ஆண்கள் தங்கள் காதலிகள், மனைவிகள் வேறு யாரையும் பார்த்தால் தங்கள் ஆண்மைக்குச் சவால் என்று நினைக்கிறார்கள். அதிலும் வாட்ட சாட்டமான தன்னை ஒதுக்கி விட்டு பார்பராவுக்குப் பின்னால் அலிஸன் ஓடியது அவனுக்கு அவமானமாக இருந்திருக்க வேண்டும்”
சினேகிதிகள் பேசிக் கொண்டிருக்கும்போது இவர்களை நோக்கி யாரோ வந்தார்கள். மிகவும் எடுப்பான உடையணிந்த ஒரு ஆங்கிலேயப் பெண் உஷாவின் கட்டிலை அணுகி வந்து கொண்டிருந்தாள்.
சாந்தியிடம் நேராக வந்து “எனது பெயர் ஸேரா” என்றாள். எமிலியும் சாந்தியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.
“உனது குழந்தையை ஒரு தரம் பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்தேன். அனுமதி தருவாயா”
ஸேராவின் குரல் வீணையை மீட்டுவது போலிருந்தது. அவள் ஒரு ஓவியம் வரையும் பெண் என்று ராஜன் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறாள், இந்த அழகிய ஓவியத்தில் இவள் கணவன் மட்டுமல்ல உலகத்தில் அரைவாசி ஆண்களுமே அடிபணிந்திருப்பார்களே! இந்த வீணையை மீட்ட தேவர்கள் விரல்கள் துடித்திருக்குமே, இந்த புன்னகையைக் கண்டு முல்லைகள் வெட்கியிருக்குமே, இந்த நடைகண்டு அன்னம் அஞ்சியிருக்குமே, இவள் இடை கண்ட மின்னல் மனம் புழுங்காதா? இந்தக் குரலுக்கு ஏழு ராகங்களும் ஏவல் செய்யாதா?
இவளையா என் கணவன் காதலித்தான்?
இவளுக்கு முன்னால் நான் யார்?
இவளுக்குள்ள அழகு, எளிமை, கலைத்தன்மைக்கு முன்னால் நான் யார்?
ஸேராவின் பொன்னிறத் தலை வசந்தக் காற்றில் செல்லம் பண்ணியது.
சாந்தியின் கண்கள் பனித்தன.
“பின்னர் சந்திக்கிறேன்” எமிலி நழுவி விட்டாள், சாந்தியின் பிரமை இன்னும் தீரவில்லை.
“நான் நாளைக்கு என் கணவரிடம் போகிறேன். உன்னைச் சந்திக்காமல் போனால் நிம்மதி யாயிருக்காது.”
எந்த ராகத்தில் இவள் குரல் இயங்குகிறது.
இவளின் இந்த இனிய குரலில் தேனா குழைந்திருக்கிறது?
“நான் வந்ததற்கு என்னை மன்னித்துக் கொள்… ராஜனின் குழந்தை உயிரோடு போராடும்போது என்னால் பார்க்காமல் போக முடியாது. இந்தப் பெண் என் மகனின் தங்கையில்லையா” ஸேரா அமைதியாகக் கேட்டாள்.
சாந்தி கஷ்டப்பட்டுக் கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.
“உனக்குப் பிடிக்கவிட்டால் நான் போய் விடுகிறேன்” ஸேராவின் கண்கள் என்ற பொன்வண்டுகள் சாந்தியின் கலங்கிய முகத்தில் வட்டமிட்டன.
“அப்படியில்லை… உங்கள் வரவை நான் எதிர்பார்க்கவில்லை….” சாந்தி தடுமாறினாள்.
ஸேரா உஷாவின் நெற்றியைத் தடவி விட்டாள். “அப்படியே கிருஷ்ணாவின் முகபாவனை உஷாவிடமிருக்கிறது” ஸேரா கனிவுடன் உஷாவின் முகத்தைத் தடவினாள்.
பின்னர் சாந்தியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்.
“சாந்தி…..” ஸேரா கொஞ்சம் மெளனம் சாதித்தாள்.
என்ன சொல்ல நினைக்கிறாள்?
இந்த உஷாக் குழந்தை என் வயிற்றில் பிறந்திருக்க வேண்டியவள் என்று சொல்ல நினைக்கிறாளா?
“பிரமிள ளா வந்திருந்தாள்” சாந்தி தடுமாறிக் கொண்டு சொன்னாள்.
பிரமிளா செய்த கொடுமைக்கு நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன் என்று சாந்தி சொல்ல நினைக்கிறாளா?
ஸேரா முகத்தைத் தாழ்த்திக் கொண்டு உஷாவைத் தடவி விட்டாள். தனது கண்ணீரை மறைக்கத் தான் அவள் பார்வையைக் குழந்தையில் படரவிடுகிறாள் என்பது தெரிந்தது.
அவளைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் போலிருந்தது சாந்திக்கு. இப்படியான ஒரு நல்ல பெண்ணைத் தன் தம்பியின் துணையாக்காமல் பிரமிளா செய்த கொடுமை சாந்தியால் தாங்க முடியாதிருந்தது.
இவளைத்தானே சாந்தி “எந்தத் தேவடியாளுடன் ஆடினீர்கள்” என்று ராஜனிடம் கேட்டுச் சண்டை பிடித்தாள்?
“குழந்தைக்குக் கட்டாயம் சுகம் வரும்..” ஸேரா குழந்தையைத் தடவி விட்டப்படி சொன்னாள். “மூளையதிர்ச்சியால் சிலர் மாதக்கணக்காக ‘கோமா’ (coma) என்ற நிலையிலிருப்பார்கள். இருந்தாற்போல் ஒரு நாளைக்கு எழும்பி அம்மா என்று உன்னைக் கூப்பிடப் போகிறாள்”
ஸேரா நம்பிக்கையுடன் சொன்னாள்.
“உங்கள் வார்த்தை பலிக்க வேண்டும் ஸேரா” நீர் பனிக்க வசனங்களை உதிர்த்தாள்.
“ராஜன் ஒரு நல்ல மனிதன். அவர் தெரிந்தெடுத்த நீயும் அவரைப் போலத்தான் இருப்பாய் என்று நம்புகிறேன். உங்களுக்குக் கடவுள் தேவையில்லாத சோதனைகளைத் தரமாட்டார் என்று நம்புகிறேன்”
ஸேரா சிரித்தாள்.
வேதனையான சிரிப்பு. சாந்தியின் இடத்தில் தான் இருந்திருக்கலாமே என்ற நப்பாசையின் எதிரொலிப்பா அந்தச் சிரிப்பு?
“பிரமிளா எப்படி இருக்கிறாள்”
பேச்சை மாற்றுவதற்காகவோ என்னவோ ஸேரா திடீரென்று சாந்தியிடம் கேட்டாள்.
எப்படிச் சொல்வது?
தினேஷ் ஒரு ஹோமோசெக்சுவல் என்பதிலிருந்து ஆரம்பிப்பதா? மகள் சீதா ஆபிரிக்க இளைஞனுடன் செம்பாபுவே நாட்டுக்குப் போய்விட்டாள் என்பதைச் சொல்வதா? பிரமிளாவின் கணவர் போத்தலும் கையுமாக இருக்கிறார் என்பதைச் சொல்லலாமா?
“தினேஷ் பற்றி ராஜன் சொன்னார்”
ஸேரா தானே சொன்னாள்.
சாந்தி மெளனம் சாதித்தாள்.
“செக்சுவாலிட்டி ஒவ்வொருத்தரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைப் பொறுத்தது. தாய் தகப்பன் தேவையற்ற பிரச்சினையுண்டாக்கக் கூடாது என்று நினைக்கிறேன்”.
எத்தனையான பெருந்தன்மையான மனம் இவனுக்கு?
அப்போது குமார் வந்து கொண்டிருந்தான்.
ஸேராவை யார் என்று ஊகித்திருப்பான். எமிலிக்குச் சாந்தி எல்லா விடயத்தையும் சொல்லியிருக்கிறாள்.
குமார் “ஹலோ” சொன்னான்
“ஹலோ.. நான் ராஜனின் சினேகிதி ஸேரா” ஸேரா தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.
‘நான் சாந்தியின் தம்பி” குமார் கை குலுக்கிக் கொண்டான்.
“உங்களை இவ்விடம் இருக்க விட்டு நாங்கள் ஒரு தரம் கோப்பிக் கடைக்குப் போகலாமா”
குமாரை உஷாவுடன் துணையாக இருக்கவிட்டு ஸேராவும் சாந்தியும் கோப்பிக் கடை நோக்கி நடந்தார்கள்.
“ஏன் ராஜனை வருத்த வேண்டும்” ஸேரா நடந்த படி கேட்டாள்.
சாந்தி மறுமொழி சொல்லவில்லை.
“பழைய கதைகளைச் சொல்லாத கோபமா”
ஸேரா கேட்டாள்.
சாந்தி இன்னும் பதில் சொல்லவில்லை.
“அவருடன் பேசவே மாட்டேன் என்கிறாயாம்” உரிமையுடன் அவள் ராஜனின் பெயர் சொல்வதைக் கேட்க சாந்திக்கு என்னவோ செய்தது.
“இருவரும் அந்த மனிதனைப் பகிர்ந்து கொண்டவர்கள் ராஜனைப் புரிந்து கொண்டவர்கள்…நீ இப்போது ராஜனைப் பிரிந்து போவது என்று நினைக்கிறாய் என்று கேள்விப் பட்டேன்… என்ன செய்யப் போகிறாய்”
சாந்திக்குக் கோபம் வந்தது. ஸேராவில் கோபமா அல்ல ஸேராவிடம் எல்லாவற்றையும் சொல்லும் ராஜனிடமா என்று தெரியாது.
“என்ன கோபம் வருகிறதா? என்னைத் தவிர ராஜனுக்கு இப்போது நெருக்கமாய் யாருமில்லை”
ஸேரா இப்படிச் சொன்னதும்சாந்தி தன் நடையை நிறுத்தி விட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
“நெருக்கம் என்பதை வித்தியாசமாய் எடுத்துக் கொள்ளாதே. அவரின் துயர்களைச் சொல்லியழ நான்தான் அகப்பட்டிருக்கிறேன். அதற்குமேலாக ஒன்றும் நெருக்கமில்லை. நான் திருமணமானவள். என் கணவரை மிகவும் அன்பாக நேசிக்கிறேன்.
ஒரு காலத்தில் ராஜனுடன் காதலாய் இருந்தேன் என்பதால் இப்போதும் அப்படியில்லை. என் மகனின் தகப்பன் அவர். அதே நேரம் அமெரிக்காவில் எனக்கு இரு பெண் குழந்தைகளும் கணவருமிருக்கிறார்கள். என் தகப்பனின் மரணச் சடங்குகளுக்காக வந்தேன். உனது கணவரைச் சந்திக்க எந்த ஆசையுமிருக்கவில்லை. அவர் லண்டனில் இருக்கிறார் என்பதே எனக்குத் தெரியாது. பிரமிளா சொன்னபடி அவுஸ்திரேலியாவில் இருப்பதாகத்தான் இன்னும் நினைத்துக் கொண்டிருந்தேன்.”
ஸேரா விளக்கமாகச் சொன்னாள்.
சாந்திக்கு விளக்கமாக எதையும் எடுத்துச் சொல்லத் தெரியவில்லை.
ஸேரா சொல்வதெல்லாம் உண்மை என்று தெரிந்தது.
“நாளைக்கு நான் அமெரிக்காவுக்குப் போகிறேன். நீயும் ராஜனும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். எனது வருகையால் உங்கள் வாழ்க்கையில் பிரச்சினை வரக்கூடாது என்று பிரார்த்திக்கிறேன். உஷாவின் நிலையில் நீங்கள் இருவரும் உங்கள் ஒன்றுபட்ட அன்பை அந்தக் குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். ஆத்மீக பலம் மிகவும் வலிமையானது. தாய் தகப்பன் அன்பு எந்தக் குழந்தையின் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது.”
ஸேரா போய்விட்டாள்.
இளவரசி டையானவுக்கான அழுகை இன்னும் ஓயவில்லை. லண்டனில் மலர்க்குவியல் மலையாகக் குவிந்து கொண்டிருந்தது.
ஸேரா வந்து போன அன்றிரவு நேர்ஸஸ் டையானாவின் தொண்டு பற்றிப் பேசினார்கள். அவளின் நேர்மை பற்றிப் பேசினார்கள். “சில பெண்கள் தூய்மையுடன் தொண்டில் ஈடுபடுவதனாற்தான் உலகம் இன்னும் நின்று பிடிக்கிறது. இல்லாவிட்டால் இந்த உலகம் எப்போதோ சிதறி வெடித்திருக்கும்” ஒரு நேர்ஸ் சொன்னாள்.
சில பெண்கள் தூய்மையான உணர்வுடன் வாழ்கிறார்கள் என்பதற்கு எமிலி, ஸேரா என்போர் உதாரணம் என்று நினைத்துக் கொண்டாள் சாந்தி.
அன்றிரவு குழந்தையைப் பார்த்துக் கொண்டு எதையோ வெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தாள். அடுத்த நாள் இளவரசி டையானவைப் புதைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அழகு மலர் கருகிவிட்டது, ஓவியம் கலைந்து விட்டது, கவிதை அழிந்து விட்டது, பெண்மை பிணமாகி விட்டது.
பஞ்ச வர்ணக்கிளி பேச்சிழந்து விட்டது. ஆடும் மயில் நொண்டியாகி விட்டது. பாடும் குயில் குரலிழந்து விட்டது. கவிதை சொனன கண்கள் மண்ணில் புதையப் போகிறது. டையானவுக்காக உலகமே அழுதது.
ஆகஸ்ட் மாதம் முடிந்து செப்ரம்பர் தொடங்கிவிட்டது. 97ம் ஆண்டின் வசந்த காலத்தின் பெரும்பகுதியை சாந்தி ஹொஸ்பிட்டலிலேயே முடித்து விட்டாள்?
வயிற்றில் வளரும் குழந்தையால் வாந்தியும் குமட்டலும் தலைச்சுற்றும் தாங்க முடியாதிருந்தது.
அன்றிரவு உஷாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். சாந்தியின் பிரமையோ என்னவோ உஷாவின் கைகள் அசைவது போலிருந்தது. இத்தனை நாட்களும் ஒரு அசைவுமின்றி இருந்த உடல் அசைந்தது.
“நேர்ஸ்” சாந்தி சந்தோசத்தில் நேர்ஸ் ஒருத்தியைக் கூப்பிட்டாள்.
நேர்ஸ் வந்தாள். அவள் முகத்தில் சந்தோசம். அன்றிரவு டியூட்டியாய் இருந்த டொக்டர் உஷாவைப் பரிசோதித்தார்.
உஷாவின் நிலை சீராகிக் கொண்டு வருவதாகவும் மெஷின் இல்லாமல் உஷா சுவாசிக்க முடியும் என்றும் சொன்னார்.
அன்றிரவு சாந்தி நித்திரையின்றி எத்தனையோ யோசனைகளால் குழம்பிப் போயிருந்தாள்.
ஸேரா வந்து போனது இன்னும் கனவு போலிருக்கிறது. அவள் வந்ததும் குழந்தை சுகமாக வருவாள் என்று சொன்னதும் ஏதோ கடவுள் வாழ்த்துப் போலிருக்கிறது.
தன்னைச் ஸேரா எப்படிக் காப்பாற்றினாள் என்று ராஜன் எழுதியிருந்தான். அவனை இப்போது நம்பினால் ஸேரா ஒரு நல்ல பெண். ஆத்மீகமாக மற்றவர்களை நேசிப்பவள். அவள் வந்ததும் உஷாவின் நிலை சீரடைவதும் ஏதோ தற்செயலான செயலாக இருந்தாலும் ஏதோ தெய்வ அனுக்கிரகம் என்று நம்பினாள் சாந்தி.
தமயன் குடும்பம் வந்திருந்தது. அவர்களுக்குச் ஸேராவைப் பற்றித் தெரியுமா?
குமார் சொலலியிருப்பானா?
அவை பற்றி அவள் சிந்திக்கவில்லை.
ராதிகா எப்போதும் போல் பட்டும் நகையும் பூண்ட கப்பல் போல் வந்திறங்கினாள்.
மாலதி கணவனுக்குப் பின்னால் ஏதோ ஒரு கொத்தடிமையாய்க் குறுகிக் கொண்டிருந்தாள்.
எல்லோரையும் ஒரு நாடகம் பார்ப்பது போற் பார்த்தாள் சாந்தி. இவர்களோடு ஒப்பிடும்போது என் வாழ்க்கை எவ்வளவு வித்தியாசமானது?
டேவிட், சங்கர், சேகர், குமார், ராஜன் எல்லோரையும் பற்றி ஒரு கொஞ்ச நேரம் சிந்தித்தாள் சாந்தி.
டேவிட், சங்கர் இருவரும் பரிதாபத்துக் குரியவர்கள். எப்படியோ வாழ நினைத்து எதுவுமேயற்று நிற்பவர்கள்.
குமாரை நினைத்ததும் அவள் முகத்தில் ஒரு குறும்பு சிரிப்புத் தவழ்ந்தது. எமிலியும் குமாரும் எதிர்கால மனிதர்கள். நிகழ்காலப் பரிமாணத்தில் தங்களுக்குத் தேவையானவற்றைத் தெரிந்தெடுப்பவர்கள், இறந்த காலத்தின் குப்பைகளைப் பற்றி அக்கறைப்படாதவர்கள். நியாயத்தில், நேர்மையில் நம்பிக்கை கொண்டவர்கள், வாழ்க்கையை ரசிப்பவர்கள்.
“அம்மா” யார் கூப்பிடுவது?
சாந்தி திடுக்கிட்டு எழுந்தாள். உஷா மெல்லமாய் முனகினாள்,
சாந்தி மகளை ஆற்றிக் கொண்டாள்.
வசந்த காலம் முழுதும் வாடிய நாராய்க் கிடந்த அவள் குழந்தை ‘அம்மா’ என்று சொன்னது ஒரு அற்புதக் குரலாகக் கேட்டது
ராஜன் வந்தான். மனைவியையும் மகளையும் ஏறிட்டுப் பார்த்தான். குழந்தை கலக்கத்தில் தகப்பனின் கைகளைப் பற்றிக் கொண்டது.
அவன் ஒரு கையால் மனைவியை அழைத்துக் கொண்டு மற்றக் கையால் மகளை அள்ளி எடுத்தான்.
இவனின் அணைப்பில் ஸேராவும் கிருஷ்ணாவும் இருக்க வேண்டியவர்கள் என்ற நினைப்பு சாந்தியின் மனத்தில் வந்தோடியது.
வெளியில் வசந்த மலர்கள் வாடத் தொடங்கி விட்டன. இயற்கையின் நியதியில் அடுத்த பருவகாலம் வரப் போகிறது.
கணவனின் அன்பில் கட்டுண்டு தவித்தாள் சாந்தி. “சாந்தி, நாளைக்கு கிருஷ்ணாவைக் கூட்டிக் கொண்டு வரட்டுமா” அவன் அவள் பதிலை எதிர்பார்த்தான்.
அவன் அவளின் உலகம். அந்த உலகின் அரசி அவள். சம்மதத்துடன் அவன் மார்பில் தலைசாய்த்தாள் சாந்தி.
(முற்றும்)
– இந்த நாவல் 1997-1998 ஆம் ஆண்டுக்குரிய இலங்கை சாகித்திய அகாடமி பரிசைப் பெற்றது.
– வசந்தம் வந்து போய்விட்டது (நாவல்),முதற் பதிப்பு: டிசம்பர் 1997, குமரன் பதிப்பகம் , சென்னை.
![]() |
இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அவள்
நாகரத்தினம் கிருஷ்ணா
July 14, 2026
சங்கர்லால் வந்துவிட்டார்!
தமிழ்வாணன்
July 14, 2026
மகாசூன்யச் சுழல்
வேங்கடேஷ் புருஷோத்தம்
July 14, 2026
