வசந்தம் வந்து போய்விட்டது
கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 8, 2026
பார்வையிட்டோர்: 197
(1997ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12
அத்தியாயம் – 9

“சாந்தி வீட்டுக்குப் போனது நல்லது. மூன்று நாட்களாக இங்கேயே கிடந்தாள்” எமிலி குமாரிடம் சொன்னாள். தனது மகன் நித்திரையானாலும் உஷாவைப் பார்க்க இன்ரென்ஸிவ் கெயார் யூனிட்டுக்கு வந்தாள் எமிலி.
குமார் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தான். நேர்ஸஸ் வந்து அடிக்கடி உஷாவின் நிலையைப் பார்த்தார்கள்.
சாந்தி தன் தம்பியைப் பற்றிச் சொல்லும்போது அவளின் தம்பி குமார் இலங்கையில் நடக்கும் இன விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவன் என்றும் இப்போது எத்தனையோ பல கசந்த அனுபவங்களுடன் லண்டனுக்கு வந்திருப்பதாகவும் சொல்லியிருந்தாள்.
சாந்தியின் குடும்பத்தினரை எமிலி எப்போதாவது இருந்து சந்தித்திருக்கிறான். எமிலி ஒரு தமிழனின் அன்புக் காதலியாக இருந்திருக்கிறாள் என்று குமாருக்குத் தெரியும்.
உஷாவுடன் ரவி எப்போதும் இணைந்து விளையாடுவான். அந்த உறவு சாந்திக்குப் பிடித்திருந்தது. ரவிக்கு இசையில் இப்போதே ஒரு ஈடுபாடு. அவனது தந்தை ஆனந்த் ஒரு இசைக் குடும்பத்திலிருந்து வந்ததாக எமிலி சொல்லியிருந்தாள்.
“ரவி எப்படி” குமார் தன் புத்தகத்தை மூடி விட்டு எமிலியிடம் கேட்டான்.
“அவனது கிட்னியில் பட்ட காயம் குணமடைவதாக டொக்டர்கள் சொல்கிறார்கள். ஆனால் ரவியின் மனதில் மிகவும் போராட்டம் நடக்கிறது” எமிலியின் குரல் கரகரத்தது.
“தெரியும்” அவளின் முகத்தைப் பார்க்காமல் புத்தகத்தின் தாளம் போட்டான் குமார்.
“எல்லாக் குழந்தைகளுக்கும் அப்பா இருக்கிறார்கள் எனக்கேன் அப்பா இல்லை என்று கேட்கிறான் “அவள் தனிமையான தன் வாழ்க்கையைச் சோகமான குரலிற் பிரதிபலித்தாள்.
“குழந்தைகள் உண்மையானவர்கள், நடிக்கத் தெரியாதவர்கள், மனதிற் பட்டதைக் கேட்பார்கள்” குமார் விளக்கம் சொன்னான்.
“கள்ளம் கபடமற்ற அந்த மனத்தில் தனது தகப்பனுக்குத் தன்னில் அன்பிருந்தால் வந்து பார்த்திருப்பார்தானே என்ற துக்கம் படிந்திருக்கிறது”
எமிலி பக்கத்திலிருந்த கதிரையில் உட்கார்ந்தாள்.
பூரணை நிலா ஹொஸ்பிட்டல் ஜன்னலில் இவர்களை எட்டிப்பார்த்தது.
“என்னைக் கண்டதும் நீங்கள் என் அப்பாவா என்று ரவி கேட்டான்” குமார் புன்னகையுடன் சொன்னான்.
”ஐயாம்சொறி” தன் குழந்தையின் அப்பாவித்தனமான கேள்விக்காக அவனிடம் மன்னிப்புச் சொன்னாள் எமிலி.
“இதில என்ன மன்னிப்புச் சொல்ல வேண்டியிருக்கிறது?…” ஏதோ கேட்க நினைத்தவன்போல் எமிலியை பார்த்தான் குமார்
அவன் என்ன சொல்ல நினைக்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது.
“ரவியின் அப்பாவுக்கு என்ன நடந்தது. அவள் எங்கே இருக்கிறார் என்றெல்லாம் கேட்க யோசிக்கிறீர்களா… அப்படி நினைப்பதில் ஆச்சரியம் இல்லையே”
அவன் தான் அப்படித்தான் கேட்க நினைத்தேன் என்பதுபோல் தலையாட்டிக் கொண்டான்.
“ரவியின் தகப்பன் ஒரு தமிழன், இந்தியாவிலிருந்து இங்கு படிக்க வந்தவர், இப்போது இந்தியாவுக்குப் போயத் திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக இருக்கிறார்”
“பாஸ்ரட்” குமாரின் வசனம் வேகத்துடன் வந்து விழுந்தது. “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்”
“உங்களைக் குழந்தையுடன் தவிக்க விட்டு விட்டுப் போனதுஒரு கொடூரமான விடயமல்லவா?”
“அப்படி நான் சொல்லவில்லையே” அவள் முகத்தில் வெளியிலிருந்து வந்த நிலவு ஒரு பக்கத்திலும் ஹொஸ்பிட்டல் லைட்டின் ஒளி மறுபக்கத்திலும் படிந்து அவள் அழகிய முகத்தை இன்னும் தேஜசுடன் காட்டியது.
“வெளிநாட்டார் பலர் இப்படிச் செய்து விட்டுப் போவதால் எங்களைப் பற்றித் தவறான அபிப்பிராயம் இங்கெல்லாம் இருக்கிறது” குமார் யார் யாருக்கோ மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.
“என்னை ரவியின் தகப்பன் ஆனந்த் ஏமாற்றிவிட்டுப் போய் விட்டார் என்று எப்போது சொன்னேன்?”
“எனக்கு விளங்கவில்லை” குமார் குழப்பத்துடன் அவளைப் பார்த்தான்.
எமிலி சாந்தியின் சினேகிதி. ஆனால் எமிலியின் தத்துவங்கள் சாந்தியால் முழுக்கவும் உணர்ந்து கொள்ள முடியாதவை. அவள் தம்பி குமார் வித்தியாசமானவனாக இருப்பானா?
”குமார், பெண்களைப் பற்றி நீங்கள் என்ன அபிப்பிராயம் வைத்துக் கொள்கிறீர்களோ தெரியாது “அவள் சொல்ல வந்ததை இடையில் நிறுத்தி விட்டு அவனைப் பார்த்தாள்.
“சமுதாயத்தில் பெண்களுக்குக் கொடுக்கும் மதிப்பை நான் கேள்வி கேட்பவன், நாங்கள் அதாவது ஆண்கள் எப்படியும் வாழலாம். எதையும் செய்யலாம், எங்களைச் சமுதாயம் தூக்கி எதிர்த்துவிடப் போவதில்லை, ஆனால் பெண்கள் வாழ்க்கையில் அவர்கள் ஒரு மயிரிழையிற் தவறினாலும் அவளை இந்த உலகம் மன்னிப்பதில்லை. அதிலும் பெண்களே பெண்களைத் தூற்றத் தயங்குவதில்லை”
குமார் சொல்லி முடித்ததும் எமிலி கொஞ்ச நேரம் கண்ணை மூடிக் கொண்டிருந்தாள்.
சாந்தியின் கணவன் ராஜன் மிகவும் அன்பான மனிதன. ஆனால் குமார் மாதிரி ஒரு நாளும் பேசியதில்லை. காரணம் ராஜனுக்கும் குமாருக்கும் பத்து வயது வித்தியாசமிருக்கலாம்.
“ஏன் பெண்களைப் பெண்களே தூற்றுகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆண்களின் வரைவிலக்கணங்களுக்குள் வாழாத பெண்களுக்கு உண்டாகும் கஷ்டங்களால் எத்தனையோ பெண்களின் வாழ்க்கை குட்டிச் சுவராகப் போகிறது. அதனால் ஆணகள் சொல்வதற்கு ஆமாம் சாமி போட்டுத் தங்கள் வாயையும் வயிற்றையும் பார்த்தும் கொள்கிறார்கள் பெண்கள். ஆண்கள் செய்யும் கொடுமைகளை எதிர்க்க வெளிக்கிட்டால் பெண்களுக்கு வாயாடி, ஆட்டக்காரி, தேவடியாள், என்றெல்லாம் பட்டங்கள் சூட்டப்படும். பாவம் பெண்கள் ஒரு பிடிச் சோற்றுக்கும், உடுக்க உடுப்புக்கும், படுக்க ஒரு இடத்திற்கும் தங்கள் உடலை, ஆத்மாவை அப்படியே ஆண்களிடம் இழக்க வேண்டியிருக்கிறது.”
“நீங்கள் உங்களை ரவியில் தகப்பனிடமிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது,”
அவன் பாதி வேடிக்கையாகவும் பாதி உண்-மையாகவும் அவளைக் கேட்டான்.
அவள் கலீரென்று சிரித்தாள். அந்தச் சிரிப்பு அமைதியான அந்தச் சூழ்நிலையில் அமுதகானமாகக் கேட்டது.
“அவர் ஒன்றும் என்னை சிறை பிடிக்கவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற பயத்தில் நான்தான் என்னையவரிடமிருந்து பிரித்துக் கொண்டேன்.’
“நாளை நடப்பது என்னவாக இருக்குமோ என்று பயந்து இன்றைய வாழ்க்கையைக் குழப்பிக் கொண்டால் உலகத்தில் எதுவும் சரியாக நடக்குமா” அவனின் கேள்வி நியாயமானதுதான்.
“எங்கள் வாழ்க்கை, எல்லோருடைய வாழ்க்கையும் ஏறத்தாள ஒரே மாதிரித்தான் உருவாகிறது, உறவாகிறது. உடைகிறது. பின் பதப்படுத்தப்படுகிறது. அதில் அனுபவங்கள் பிறக்கின்றன. கால நேரம், நாடு, நகரம், இனம், மொழி, சமயம், சாதி என்று எத்தனையோ பிரிபாடுகள் இருந்தாலும் மனித உணர்வுகள், ஆசைகள், அபிலாசைகள், ஏக்கங்கள் எதிர்பார்ப்புகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. சில அனுபவங்கள் வாழ்க்கையுடன் போராட வேண்டும் என்ற உறுதியைத் தருகின்றன. சில அனுபவங்கள் வாழ்க்கையிலிருந்து ஒதுங்கிப் போக வேண்டும் என்ற தளர்ச்சியைத் தருகின்றன. எனது அனுபவங்கள் நான் எப்படி என் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பதை உறுதிப் படுத்தின”
“ரவியின் தகப்பன் அவ்வளவு கொடிய அனுபவங்களைத் தந்தவரா?”
“ஏன் ரவியின் தந்தை ஒரு பொல்லாத மனிதன் என்று முடிவு கட்டுகிறீர்கள்”
குமாருக்கு மறுமொழி சொல்லத் தெரியவில்லை. அவள் தகப்பனில்லாமல் குழந்தை வளர்ப்பது அவனைப் பொருத்து. வரையில் ஒரு பிரமாண்டமான பாரமாகத்தான் தெரிந்தது.
“ஆனந்த் ஒரு நல்ல மனிதன். நல்ல உலகத்தைக் கற்பனை செய்பவர். கொடுமைகளைக் கண்டு கொதித்தெழுபவர். குடும்பப் பொறுப்பு மிகவும் பாரமானது என்பதை உணர்ந்து கொண்டவர். லண்டனில் கறுப்பர்களுக்கெதிராக இனத்துரோகம் அவரை மிகவும் துன்பப் படுத்தி விட்டது. இசையோடும் கலையோடும் வாழ்க்கையைப் பிணைத்துக் கொண்ட மனிதனைக் கல்யாணச் சிறைக்குள் பிடித்து வைத்துத் துன்பப் படுத்தவிரும்பவில்லை. நான் தான் அவரைக் கல்யாணம் செய்ய மறுத்தேன். என்னைத் தாயாக்கி விட்டு ஏமாற்றிவிட்டு ஆனந்த் என்னைப் பிரியவில்லை. நான் தாயான விடயமோ அவருக்கு ஒரு குழந்தை லண்டனில் வளர்வதே தெரியாது. தெரியாமலே இருக்கட்டும் என்றுதான் நம்புகிறேன்”
“ரவி பாவமில்லையா” குமாா சோகத்துடன் கேட்டாள்.
“ஏன் பாவம்”
“அப்பா இல்லாமற் தனியே வளர்வது பாவம் என்கிறேன்”
“அப்பா இல்லாத, அம்மா இல்லாத குழந்தைகள் உலகத்தில் ஆ’பிரகணக்காக இருக்கிறார்கள்”
”உங்களின் சுயநலமான சிந்தனைகளுக்காக ரவியின் தகப்பனை அவனிடமிருந்து பிரித்து விட்டதாக நீங்கள் ஒரு நாளும் நினைக்கவில்லையா”
அவனது கேள்வியின் ஆழத்தை அவள் கொஞ்ச நேரம் யோசித்தாள்.
“இரண்டு பெற்றோரும் வளர்த்தாற்தான் குழந்தைகள் சரியாக வளர்வார்கள் என்பதில்லை. சண்டையும் சச்சரவுமான இரண்டு பெற்றோரிடம் வாழும் சூழ்நிலையை விட அமைதியும் அன்புமுள்ள ஒரு பெற்றோர் ஒரு குழந்தையின் மன, உடல் வளர்ச்சிக்கு மிகவும் உதவுவார்கள் என்று நம்புகிறேன்.”
“என்னை அவன் தனது தகப்பனாக நினைத்ததையிட்டு துக்கப் படுகிறேன்”
“குழந்தைக்கு நீங்கள் யாரென்று தெரியாது. அத்தோட ஆனந்தின் படம் பார்த்துப் பழக்கப்பட்ட ரவிக்கு உங்கள் முகத்தோற்றம் படத்திலிருக்கும் தகப்பனின் முகம் போலிருப்பதாகப் பட்டிருக்கலாம்.”
எமிலியின் கண்கள் தாழ்ந்தன. அவளது அன்பன் ஆனந்தை நினைத்துக் கொண்டாள் போலும்.
“என்னைப் பார்த்தால் யாரும் ஒரு தகப்பனுக்குரிய முகபாவம் இருப்பதாக நினைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.”
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். இருவர் கண்களும் மோதிக் கொண்டன. அந்த நேரம் யாரோ வரும் காலடியோசை கேட்டது.
டேவிட் வந்து கொண்டிருந்தான். “உங்கள் மகன் உங்களைத் தேடுகிறான்” அவன் எமிலியிடம் சொன்னான்.
“மீண்டும் உங்களைச் சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்… சாந்தி நாளைக்கு வருவாள் நான் அவளைச் சந்திப்பேன். சீ யு” சொல்லிவிட்டு எமிலி குமாரிடமிருந்து விலகிப் போனாள்.
டேவிட்டுடன் அவள் வார்ட்டுக்குப் போய்ச் சேரும் வரை அவர்கள் இருவரும் ஒருத்தருடன் ஒருத்தர் பேசிக் கொள்ளவில்லை.
குழந்தை ரவியுடன் ஒரு நேர்ஸ் நின்றிருந்தாள். எனது மகனைப் பற்றிய செய்தியை எனக்குச் சொன்னதற்கு நன்றி” டேவிட்டிடம் சொல்லிவிட்டு அவசரமாகத் தன் மகனிடம் ஓடினாள் எமிலி.
குழந்தைகளுடன் நிற்கும் தாய் தகப்பன் வார்ட்டில அங்குமிங்கும் திரிந்தார்கள்,
குழந்தை ரவியின் நோ தீர நேர்ஸ் ஒரு ஊசி பே ட்டான். குழந்தை தாயின் கைகளை இறுக்கிப் பிடித்தபம் தூங்கிப் போனான்.
எமிலி கதிரையிலிருந்தபடி தூங்கி வழிந்தாள்.
வார்ட் மிகவும் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தது. நைட் டியூட்டி நேர்ஸஸ் தங்களுக்குள் ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். எமிலி தன் வாழ்க்கையைக் கனவு கண்டாள்.
அன்றிரவெல்லாம் அழுது அலுத்து விட்டாள் சாந்தி. “யார் அந்தத் தேவடியாள்” என்று அவள் காரிற் கேட்ட கேள்விக்கு “யாரைக் கேட்கிறாய், நீ என்னோட கண்டபெண் வழக்கு விடயமாக என்னைத் தேடி வந்தவள்” என்று அவன் சொல்லியிருந்தால் மிகவும் நிம்மதியாயிருந்திருக்கும்.
வீட்டுக்குப் போய்ப் பேசிக் கொள்ளலாம் என்று அவன் சொன்ன நிமிடமே சாந்திக்கு இருதயத்தில் தேள் கொட்ட ஆரம்பித்து விட்டது.
அவனைப் பேச விடாமல் அவனுடன் சத்தம் போட்டது முட்டாள்த்தனமாகப் பட்டது. ஆனால் கடந்த சில நாட்களான சோர்விலும் நித்திரையின்மையிலும் அவள் நிலை குலைந்து கத்தி விட்டாள்.
சாதாரணமாக அமைதியும் நிதானமுமான பெண் சாந்தி இப்போது இப்படிப் பேய்க் கூக்குரல் போட்டதை அவளாலேயே நம்ப முடியாமலிருக்கிறது.
ஏனோ தானோ என்று வாழ்ந்து முடிக்கிறார்கள் சில தம்பதிகள், இப்படித்தான் வாழ வேண்டுமென்று சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள் சில தம்பதிகள். இவனுக்கு நான், விட்டுக் கொடுக்க வேண்டும் என்று இழுபறி பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சில தம்பதிகள்.
ராஜனும் சாந்தியும் இரண்டாம் தரத்தைச் சேர்ந்தவர்கள். இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒரு வரைவிலக்கணத் துட ன் வாழ்பவர்கள் அவர்கள். பேசிச் செய்த கல்யாணம் என்றாலும் இவளின் உண்மையான அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ளாத வரை தான் ஒரு முடிவும் எடுக்க மாட்டேன் என்று தாய் தகப்பனுக்கு ராஜன் சொல்லியது அவளுக்குத் தெரியும்.
அவனை முதற்தரம் கண்ட நினைவு இன்னும் பசுமையாக இருக்கிறது.
1985ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் தனது இன அழிப்புக் கொடுமை வேலைகளில் கண்ட இடமெல்லாம் தமிழ் இளைஞர்களை ஆடு மாடுகளாய்ச் சுட்டு வீழ்த்திக் கொண்டிருந்தார்கள்.
இப்போது விடுதலைக்குப் போராட வெளிக்கிட்ட தமிழ்க் குழுக்களும் தங்களுக்குள் வளர்ந்த அபிப்பிராய பேதங்களைப் பேசித் தீர்க்கத் தெரியாமல் அல்லது அரசியல் முதிர்ச்சியில்லாமல் ஒரு குழுவை இன்னொரு குழு இதயமற்றுக் கொலை செய்து கொண்டிருந்தது.
இலங்கையிற் தமிழ்ப் பகுதிகளில் இளம் தமிழ் வாலிபர்கள் மிருகங்கள் மாதிரி வேட்டையாடப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.
திருகோணமலையிற் தமிழர் வாழ்க்கை மிகவும் படுமோசமாகவிருந்தது. சொந்த பந்தம் அயல் நாட்டிலுள்ளவர்கள் அவர்களின் உதவியுடன நாட்டை விட்டு ஓடிக் கொண்டிருந்தார்கள்.
சாந்தியின் தமயன் தம்பிகளை வெளி நாட்டுக்கனுப்பத் தாய் தகப்பன் துடியாய்த் துடித்தார்கள். சாந்திக்கு இருபது வயது. ஒரே ஒரு பெண்ணான அவனுக்குப் பெரிய படிப்பு ஒன்றும் தேவையில்லை, நல்ல மாப்பிள்ளை வந்தாற் செய்து விட்டால் நல்லது என்று முடிவு கட்டியிருந்தார்கள்.
ஒருநாள், 1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பின்னேரம் சினேகிதி ஒருத்தியின் வீட்டுக்குப் போயிருந்தாள். அவர்கள் கிறிஸ்தவர்கள். மிகவும் ஏழ்மைப் பட்டவர்கள் அவர்களின் மாமா ஒருத்தர் அமெரிக்காவிலிருந்தார். அந்த மாமா ஒரு கிறிஸ்தவ பாதிரியின் உதவியுடன் எப்போதோ அமெரிக்காவுக்குப் போனவர்.
சாந்தியின் சினேகிதி வரோணிக்கா சாந்தியின் வயதை ஒத்தவள். ஒரு சில தெருக்களுக்கப்பால் வாழ்பவள். நினைவு தெரிந்த நாள் முதல் ஒன்றாய்ப் பழகியவர்கள்.
வரோணிக்காவின் மாமா அமெரிக்காவில் வாழ்பவர். வரோணிக்காவின் குடும்பத்தில் பரிதாபப் பட்டவர், வரோணிக்காவின் தாயின் கெஞ்சலுக்குப் பரிதாபப் பட்டு வரோணிக்காவின் தமயனை அமெரிக்காவுக்கு அழைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.
வரோணிக்காவின் தமயன் அன்ரோனி ஒரு கவிஞன், போலில்லாமல் உலகத்தை சாதாரண வாலிபர்கள் வித்தியாசமாகப் பார்ப்பவன்.
முத்தெடுக்கும் திருமலைக் கடற்கரை காற்று வாங்கி வளர்ந்த மனம் கவிதையில் திளைத்திருந்தது, குப்பையில் ஒரு முத்து, கொடுமைக்குள் ஒரு புரட்சிவாதி, வறுமைக்குள் ஒரு கவிஞன் என்பது போல் அன்ரோனி வளர்ந்தான்.
வறுமையை மறக்க, இல்லாமையின் கொடுமையிலிருந்து மனத்தைத் திருப்ப, சுற்றாடலிலுள்ள அரசியற் கொடுமையிலிருந்து தன்னை மறக்க அவன் தன் உள்ளத்தை கலைத்தாயின் மடியில் அர்ப்பணித்தானோ?
அவன் தாய் அமெரிக்கா போகும் தன் மகன் அன்ரோனியை வழியனுப்ப ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தாள்.
அன்பான, கனிவான மனம் கொண்ட அன்பானதாய் அன்ரோனியின் தாய் மேரி. அன்ரோனியின் சினேகிதர்களை அழைத்துத் தன்னால் முடிந்த ஒரு விருந்து வைக்க அந்தத் தாயுள்ளம் தவித்தது.
அந்த விருந்துக்கு சாந்தியும் அழைக்கப்பட்டாள். வரோணிக்காவுடதும் அன்ரோனியுடதும் திருமலைக் கடற்கரையில் நண்டு பிடித்து விளையாடிய வயது தொடர்பை இப்போது வளர்ந்து, படித்து வாழ்க்கையை ஒவ்வொரு திசையில் திருப்பிக் கொண்டிருக்கும் வரை ஒன்றாய்த் திரிந்தவர்கள்.
வரோணிக்கா வீட்டுச் சாப்பாடு முடிய நேரமாகி விட்டது. வீட்டுக்குப் போக வேண்டும் என்று சாந்தி அவசரப்பட்டாள். கொழும்பிலிருந்து தகப்பனுக்குத் தெரிந்த சினேகிதர் குடும்பம் கோணேஸர் கோயில் பார்க்க வருகிறார்கள் என்றும் அவர்களுக்குத் தங்கள் வீட்டிற் சாப்பாடு கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் அம்மா சாந்திக்குச் சொல்லியிருந்தாள்.
“சாப்பாட்டுக்கு வருபவர்கள் வீட்டுக்கு வரமுதல் நீ வந்து சேர்ந்து விடு” அம்மா அரிசியில் நெல் பொறுக்கியபடி சாந்திக்குச் சொன்னாள்.
அம்மாவின் சொல்லைத் தட்டாதவள் சாந்தி. வரோணிக்கா வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டு விட்டுவர இருள் பரவத் தொடங்கியிருந்தது. வரோணிக்கா வீடு சாந்தியின் வீட்டை விட்டு ஒரு சிலதெருக்கள் தள்ளியிருந்தாலும் சாந்தியைத் தனியாக விட வரோணிக்கா தாய் விரும்பவில்லை.
“நான் கொண்டுபோய் விடுகிறேன், நான் அந்த வழியாக ஒரு சினேகிதனைப் பார்க்க வேண்டியிருக்கிறது” அன்ரோனி மலர்ச்சியுடன் சொன்னான்.
இருவரும் கடற்கரை வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள்,
“சாந்தி நான் அமெரிக்கா போய்விட்டால் என்னை மறந்து விடுவாயா’ நாட்டை விட்டுப் போகும் எந்த மனிதரும் தங்களுக்கு நெருக்கமான மனிதர்களிடம் கேட்கும் கேள்வியிது.
நிச்சயமாக நான் மறக்க மாட்டேன்
சாந்தியின் மனம் உண்மையில் கலங்கியது.
எத்தனை நெருக்கமான உறவு அவர்களுடையது. இரண்டு தமயன்களுடனும் ஒரு தம்பியுடனும் பிறந்தவள் சாந்தி. அந்த ஆண்களுடன் ஒப்பிடும்போது அன்ரோனி வித்தியாசமானவன்.
தமயன் சங்கர் ஒரு குடும்பப் பொறுப்புள்ளவன், அடுத்த தமயன் சேகர் உறவுக்காக ஏனோதானோ என்று பழகுபவன். தம்பி குமார் அப்பா சிறப்புக்களுக்குத் தலையிடி தரும்படி விடுதலை இயக்கமொன்றில் அதி தீவிரமாக ஈடுபட்டிருக்கிறான்.
அன்ரோனி வறுமையிற் பிறந்து கஷ்டப்பட்டுப் படித்து குடும்பத்தைக் காப்பாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டாலும் தன் கலையார்வத்தால் கிடைத்த நேரத்தில் திருமலை கோணேஸர் கோயிற் தலத்தையும், குன்றலையும் கடலையும், மணல் பதிவும் சிறுவர் களிப்பையும் தன் சிறு கவிதைக்குள் சிறை பிடிப்பான்.
வரோணிக்காவும் சாந்தியும் அவனது வாசகிகள். அவனுக்கு இருபத்திரண்டு வயது. வரோணிக்காவுக்கும் சாந்திக்கும் இருபது வயது. இலங்கையில் தமிழன் வாழும் பகுதிகளில் கொந்தளிக்கும் கொடுமையாற் பயப்பட்டு வாழும் ஆயிரக் கணக்கான இடப் பெயர்களில் அவர்களும் சிலர்.
அன்ரோனியின் வயதொத்த எத்தனையோ தமிழ் இளைஞர்கள் வளர்ந்து வாழ்க்கை அனுபவிக்க முதல் காலன் வயப்பட்டு விட்டார்கள். அவர்களின் உயர் இனவெறி பிடித்த இலங்கை அரசாங்க சிப்பாய்களின் சித்திரவதைக்குப் பலியாக்கப்பட்டது.
அன்ரோனியின் தாயின் பிரார்த்தனையும் சொந்தக்காரர்களிடம் கெஞ்சியதின் பிரதிபலிப்பும் அன்ரோனி இலங்கையை விட்டு வெளியேற உதவி செய்தது.
தன் நினைவு தெரிந்த நாள் முதல் வரோணிக்கா குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவள் சாந்தி, அன்ரோனி இலங்கையை விட்டுப் போகிறான். இனி எப்போது மீண்டும் சந்திப்பார்கள்?
சிறு பறவைகள் போல இந்தக் கடற்கரையில் பிறந்து விளையாடிய ஞாபகங்கள் நேற்றைய சரித்திரமாகி விட்டது.
ஓடிவரும் கடலலையைத் தொட்டோடி விளையாடிய இளமைப் பருவம் இனிவராது.
தோணியருகிலமர்ந்து உலகத்து வம்பெல்லாம் அளந்த அந்த குறும்புத்தனம் இனியும் தொடருமா!
“சாந்தி” மணலில் கால் புதைய இவளைத் தொடர்ந்து துணையாய் வந்தவன் இவளைக் கூப்பிட்டான்.
வீட்டுக்கு விருந்தினர் வருவர் என்ற அவசரத்தில் எட்டடி வைத்தவன் இவன் குரலிற் தொனித்த சோகத்தில் நிலைகுலைந்து தலை திருப்பினாள்.
“இதுதான் நாங்கள் இருவரும் சேர்ந்து நடந்து வரும் கடைசி மாலை நேரமாயிருக்குமா” அன்ரோனியின் முகம் இறங்கிச் செல்லும் சூரிய ஒளியின் தங்க நிறத்தில் சாடை காட்டியது.
“இருக்கலாம்” சாந்தி குழந்தைத் தனமாகச் சொன்னாள். அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவுக்கு போகிறவன் எப்போது திரும்பி வருவான்?
திரும்பி வரும்போது இருவர் வாழ்க்கையிலும் எத்தனையோ மாற்றங்கள் நடந்திருக்கலாம், இருவரும் இன்றைய நெருங்கிய சினேகிதர்கள் மாதிரியில்லாமலிருக்கலாம்.
“சாந்தி நீ அவசரமாய் வீட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கிறாய் என்று தெரியும்.. ஆனாலும் ….” அவன் தயங்கினான்.
அவள் அன்ரோனியைப் பார்த்தாள். அவளின் நினைவு தெரிந்த நாள் முதல் ஒன்றாய் விளையாடியவன், காலமும் நேரமும் வர ஒதுங்கிக் கொண்டவர்கள்.
அவள் அவனின் தங்கை வரோணிக்காவின் சினேகிதியாக மட்டும் இணைத்துக் கொண்டு இவனுடன் சம்பிரதாயங்களுக்காகச் சம்பாஷணைகளை வைத்துக் கொள்ளும் நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டாள்.
சாந்தியின் தாய் மகளின் எதிர்காலத்துக்கு இரவும் பகலும் பிரார்த்திப்பவள். மூன்று மகன்களுக்கு ஒரே மகள். அவள் எதிர்காலம் தாயின் கனவும் நனவுமாக இருந்தது.
அன்ரோனி குடும்பம் மீனவர் சாதியைச் சேர்ந்த கிறிஸ்தவ குடும்பம். சாந்தி குடும்பம் உத்தியோகம் பார்க்கும் வேளாள சாதியைச் சேர்ந்தது.
மகளின் எதிர்காலத்துக்குத் தாயின் கனவில் உள்ள மாப்பிள்ளை ஒரு பெரிய உத்தியோகம் பார்க்கும் நல்ல சாதிக்காரன். சாந்திக்கு அது தெரியும்.
சாந்தி அவன் கேட்கிறான் என்பதை உணராதவள் இல்லை.
“கொஞ்ச நேரம் என்னோடு பேசமுடியுமா சாந்தி”
அன்ரோனி நின்றான். அவள் சரியென்று தலையாட்டிவிட்டுப் பக்கத்திலுள்ள தோணியருகில் உட்கார்ந்தாள்.
கடற்கரையில் கிடக்கும் நூற்றுக்கணக்கான தோணிகளைச் சுற்றி எத்தனையோ காதற் சோடிகள் தங்கள் தனியுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.
“சாந்தி நான் நீண்ட நேர பிரசங்கம் செய்து உனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை”
அவள் கேள்விக்குறியுடன் அவனைப் பார்த்தாள். பூரண நிலவை நீலக் கடல் பிரசவம் செய்து பூரிப்புடன் மெல்லலையில் தள்ளாடியது. நட்சத்திரங்கள் சேவகிகளாய்த் தான் ஒரு ளவரசியாய்ப் பூரண நிலா மேகங்களை விலக்கி விட்டு உலகத்தை எட்டிப் பார்த்தது.
அவர்கள் மெளனமாக இருந்தார்கள். அந்த ஒரு சில நிமிடங்கள் ஒரு சில நூறு வருடங்கள் போலிருந்தன.
“சாந்தி நீ கெட்டிக்காரப் பெண், நான் என்ன கேட்கப் போகிறேன் என்று உனக்குத் தெரியும்”
ரோனி எப்போதும் நேர்மையானவன். உள்ளத்துக் கொதிப்பை, சந்தோசத்தை போராட்டங்களைத் தன் கவிதைகளில் வெளிப்படையாக எழுதுபவன்.
“எனது கவிதை பிறக்கக் காரணமாயிருந்த பலரில் விடயங்களில் உன் பங்கும் உள்ளது என்பதை நம்புவாயா”
என்ன மறுமொழி சொல்வதாம்.
கயல்விழி, மான்விழி, அன்ன நடை, மின்னல் இடை, கார்குழல், மதிமுகம் என்றெல்லாம் கவிஞர்கள் பெண்களைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். ரோனி பெண்களைப் புகழ்ந்து பெரிதாக ஒன்றும் எழுதவில்லை. இயற்கையை பற்றி,மனித ஏழ்மையைப் பற்றி, இனக் கொடுமையின் பயங்கரம் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறான்.
“நீ பிறந்த நாளிலிருந்து உன்னைத் தெரியும். எனது மூன்றாவது வயதில் உனது மழலையைக் கேட்டு எல்லோரும் சிரித்தது ஏதோ என் அடிமனத்தில் கனவுகளாக அடிக்கடி வந்துபோகும். உண்மையான சம்பவத்தின் ஞாபகமில்லாமல் என்னுடைய வெறும் கற்பனையின் பிரதிபலிப்பாகவும் இருக்கலாம்….”
அவள் மௌனமாக இருந்தாள்.
விருந்தினர்களை வரவேற்கும் அவசரம் அவள் விரல்கள் கடல் மணலிற் புதைவதுபோல் மனதில் புதைந்து கொண்டிருந்தன. மணற் சூடு உடம்பிலும் மனச்சூடு உணர்விலும் படர்ந்தது.
நான் ஏழை, ஆனால் எதிர்காலமும் அப்படியிருக்காது என்று நினைக்கிறேன்.. எனது சாதி உனது சாதியில்லை… ஆனால் நான் அந்தக் கொடூரமான பரம்பரையை முழுக்க முழுக்க வெறுக்கிறேன்.”
சாந்தி எழும்பி ஓடவில்லை.
அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“நீ எனது மனைவியாகச் சம்மதித்தால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன்”
அவன் மேலதிகமாக ஒன்றும் சொல்லாமல் அவள் முகத்தைப் பார்த்தான்.
“வரோணிக்காவிடம் எனது விலாசமிருக்கிறது..உனது பதில் வந்தால் சந்தோசப்படுவேன்.இல்லை என்றால் உனது எதிர்காலம் பொன்னானதாக இருக்க எனது ஆசீர்வாதங்கள்”
அவன் எழுந்து கொண்டான்.
அவள் வீட்டை நோக்கி நடந்து வந்தார்கள்.
இன்று அவள் வாழ்க்கையின் நடந்து வந்த பாதையில் தொடர்நதவனைப் பிரிந்து விட்டு அவள் தன் வீட்டுக் கேற் திறந்து வீடு சென்றாள்.
அவள் முகம் வாடி தலை குழம்பிப் போயிருந்தது.
“என்ன இவ்வளவு நேரம்” அம்மா அவசரப்பட்டாள்.
“ஓடிப் போய் முகத்தைக் கழுவிக் கொண்டு பௌடர் போட்டுப் பொட்டு வைத்துக் கொள்” அம்மா பரபர வென்று ஓடி ஓடித் திரிந்தாள்.
அவள் வீட்டுக்கு வந்து பத்து நிமிடங்களில் விருந்தினர்கள் வந்தார்கள். வந்தவர்கள் வயிறாரச் சாப்பிட்டு மனதார மகிழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
சாந்தி வந்த விருந்தினர்களில் யாரையும் பொருட்படுத்தி மனம் செலுத்தவில்லை. ஏனோதானோ என்று தாய் சொல்லும் விடயங்களைச் செய்து கொண்டிருந்தாள்.
வந்திருந்த பெரிய மனிதர் சாந்தியின் தகப்பனின் சினேகிதன். ஒரு காலத்தில் ஒன்றாகப் படித்தவர்கள்,இப்போது விருந்தினராக வந்தவரின் குடும்பம் அயல்நாடுகளில் நன்றாக வசிக்கிறார்களாம்.
அம்மா அடுத்த நாள் இதெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள், சாந்தி அன்றிரவு சரியாக நித்திரை செய்யவில்லை.
இன்றோ நாளையோ அன்ரோனி கொழும்புக்குப் போகப் போகிறான். அதன்பின் சில கிழமைகளில் அமெரிக்காவிற்குப் போய் விடுவான்.
வரோணிக்கா தமயனை வழியனுப்பும் அலுவலில் பிஸியாய் இருந்தாள் போலும் சாந்தி வீட்டுப் பக்கம் வரவில்லை.
விருந்தினர் வந்து மூன்றாம் நாள் சாந்தி முன் ஹோலில் ஏதோ வேலையாயிருந்தாள். அன்றைக்கு விருந்து சாப்பிட வந்தவர்கள் அப்பா அம்மாவிடம் சொல்லி விட்டுப் போக வந்திருந்தார்கள்.
சாந்தி இரண்டொரு நாட்களாகச் சரியாகத் தூங்காததால் தலையிடியுடன் கஷ்டப்பட்டாள். வீட்டுக்குப்பின்பக்கம் இரையும் கடலில் ரோனியின் கேள்வியும் சேர்ந்து இரைவதாகத் தோன்றியது. கடற்கரையில்கிடக்கும் ஒவ்வொரு தோணிக்கருகிலும் ரோனி உட்கார்ந்திருப்பது போற் பட்டது.
இருபது வருடகால உறவில் அவன் கேட்ட கேள்விக்குத் தானும் பொறுப்பாக இருந்திருக்கிறேன் என்பது அவனுக்குத தெரியாததல்ல.
அவள் கண்கள் அவன் கவிதை பிறக்கக் காரணமாக இருந்திருக்கலாம், அவள் மெல்லிதழ்கள் இந்தக் கவிதைகளுக்கு இசை போட ஏதுவாக இருந்திருக்கலாம்.
கலகலவென்று சிரிக்கும் அவள் பாவம். அவன் இளமனதில் எத்தனையோ ஏக்கங்களை எழுப்பியிருக்கலாம்.
அவளுக்கு மட்டும் சஞ்சலம் வரவில்லையா? அந்தக் கேள்வியை அவள் தன்னிடம் கேட்கத் தயாரில்லை.
காதலுக்குக் கண்ணில்லை, சாதியில்லை, சமயமில்லை, வர்க்க பேதமில்லை, வயது வித்தியாசமில்லை, இருவர் மனம் ஒருமித்தால் எந்தவிதத் தடையுமில்லை.
ரோனி அவளைக் குழந்தையாய், குமரியாய், ஒரு சினேகிதியாய்க் கண்டவன் இப்போது காதலியாய்க் காண்கிறேன் என்கிறான்.
திருமலைக் கடற்கரையில் அலைகள் குன்றுகள் தடவி இரைந்தன. அவள் மனதில் ரோனியின் வேண்டுகோள் இடைவிடாமல் இரைந்தது.
விடை சொல்லிவிட்டுப் போக வந்த விருந்தினர் ஆரவாரமாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
சாந்தி, அம்மா போட்டுக் கொடுத்த தேனீரைத் தாங்கிய ட்ரேயுடன் ஹோலுக்கு வந்தாள்.
அவளின் தமயன்மார், தகப்பன், வந்திருந்த விருந்தினர் எல்லோரும் ஹோலில் கூடியிருந்தனர்.
இவளைக் கண்டதும் அவர்களின் ஆரவாரம் கொஞ்சம் குறைந்தது. அம்மாவும் குசினிவேலையை விட்டுவிட்டு ஹோலுக்குள் வந்தாள்.
அப்பா இவளைப் பார்த்தார். அவள் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. திரும்பித் தன் அறைக்குப் போகத் திரும்பினாள்.
அன்று அவள் நீலப் பாவாடையும் ஒரு சிவப்புச் சட்டையும் தாவணியும் போட்டிருந்தாள். ஆங்கில முறைப்படி ட்ரெஸ் பண்ணுவது அம்மாவுக்குப் பிடிக்காது. அப்பாவுக்கு தன் ஒரே மகள் சரியான ‘இந்துப் பெண்ணாக’ வாழ வேண்டும் என்று ஆசை.
“மகள் கொஞ்சம் உட்காரேன்” அப்பா மகளிடம் கேட்டார். தமயன் சங்கர் முகத்தில் சந்தோசம்.
“சாந்தி, முன்பின் அறிவிக்காமல் திடீரென்று இப்படி ஒரு சூழ்நிலைக்குள் உன்னிடம் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டியிருக்கிறது”
தமயன் சங்கர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொன்னான்.
அப்பா இன்னம் தன் புன்னகையை முகத்திலிருந்து எடுக்கவில்லை. அம்மா தனக்கும் எல்லாம் தெரியும் என்ற பாவனையில் கதவோடு கதவாய் நின்றிருந்தாள்.
ஒரு சில நூறடிக்கப்பால் கடல் இரைந்து கொண்டிருந்தது.
விருந்தாளியாய் வந்திருந்த மாமி எழுந்து வந்து சாந்தியின் தோளில் கை போட்டு அடுத்த கையால் அவள் நாடியைப் பிடித்துக் கொண்டு “எனது மகன் ராஜன் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறான்.”
உடல் சிலிர்த்தது. உள்ளம் படபடத்தது. வயிற்றில் பட்டாம் பூச்சி வட்டம் போட்டது. தலை சுற்றியது.
அவள் தலையையுயர்த்தி தன் முன்னால் இருக்கும் ராஜனைப் பார்த்தாள். ஒரு சில நாட்களுக்குப் பின் விருந்தாளியாய் வந்தவன் இன்று அவள் வாழ்க்கைத் துணைவனாக வரப் போகிறானாம்.
“நீ பெரிய அதிர்ஷ்ட சாலி சாந்தி” தமயன் குரல் உணர்ச்சி வசப்பட்டுக் கரகரத்தது. தாயின் விசும்பல் அவள் காதைக் குடைந்தது.
ஒரு கொஞ்ச நேரம் மௌனம் எல்லோர் விழிகளிலும் அவளில் மொய்த்தன.
இப்படி ஒரு சந்தர்ப்பத்தை எத்தனை பெண்கள் அனுபவித்திருப்பார்கள்?
அவள் எழுந்தாள்.
முகம் குப்பென்று சிவந்திருந்தது.
ஓடிப்போய்க் குசினிக்குள் அடைந்தாள்.
ஹோலில் மீண்டும் ஆரவாரம்.
வந்திருந்த மாமியின் குரல் கணீரென்று கேட்டது.
“இதுதான் விதி பாருங்கோ லண்டனில் இருந்து வந்து இவ்வளவு நாளும் எங்கட ஆட்கள் இருக்க விடயில்ல. இவனும் எங்களப் பேசிக் கொண்டிருந்தான். ஏதோ இங்க வந்துதான் கோணேசர் அருளால் அவன் மனம் மாறியிருக்கு’
“எப்படித்தான் விஞ்ஞானம் மாறினாலும் மனிதர் விதி மாறாது பாருங்கோ. அவளின் சாத்திரத்தின்படி அவள் வெளிநாட்டிலதான் வாழுவாள் என்றிருந்தது” அப்பா பெருமையுடன் சொன்னார்.
“மாப்பிள்ளையும் தானாக வந்து அவளிடம் சேருவான் என்று சாத்திரத்தில் சொன்னார்கள்” அம்மா ஊதுகுழல் வாசித்தாள்.
ரோனியும் வெளிநாடு போகிறான். அவனும்தான் தானாக அவளிடம் வந்து என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டான்.
அவள் விதி எங்கே இருக்கிறது. அவள் மதியிலா?
அவளின் பின்னால் காலடி கேட்டது.
ராஜன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான்.
“விருப்பமில்லாவிட்டால் நேரே சொல்லலாம், நான் ஒன்றும் அழமாட்டேன்”
அவன் குரலில் குறும்பு தெறிப்பதாகப் பட்டது. அவள் திரும்பினாள்.
அவன் நேரே பார்த்தான். அவள் முகத்தை அவன் கண்கள் வட்டம் போட்டன.
அவள் கைகள் நடுங்கின.
மௌனம் மெளனம், வாய்க்குள் யாரோ ஒரு கல்லைப் போட்டுத் திணித்து விட்ட பிரமை.
”மறுமொழி சொல்ல அவசரப் படவேண்டாம்.. ஆனால் அதற்கு முன் நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன் என்று உனக்கு விளங்கப் படுத்த வேணும்”
அவன் ஆங்கில நாட்டிற் படித்தவன். ஒரு தயக்கமுமின்றிப் பேசினான். இருபது வருடம் அவளைத் தெரிந்த ரோனி அடைத்து வைத்திருந்த உணர்வுகளை மூன்று நாள் முன் கண்ட இவன் பளிச்சென்று அவிழ்த்து விடுகிறான்.
ரோனியின் தயக்கத்துக்குக் காரணம் அவன் ஒரு மீனவன், ஏழை, இவர்களின் வர்க்கத்தைச் சேராதவன் என்றிருக்கலாம்.
இவனின் துணிச்சலுக்குக் காரணம் இவன் மிகவும் படித்தவன், லண்டனில் வாழ்பவன் பெரிய சாதிக்காரன், இவளை விட வசதியானவன் என்பனவாக இருக்கலாம்.
அவள் மறுமொழி சொல்லவில்லை.
மூன்று நாட்கள் முதல் பிஞ்சாக இருந்த மனத்தை ஒருத்தன் மாறி ஒருத்தன் பெண்ணாக உருக்கிவிட்டார்கள்.
இனி ஐம்பது வருடமோ அறுபது வருடமோ ஒன்றாக வாழப் போகிறவர்கள் அந்தக் குசினிக்குள் சந்தித்துக் கொண்டார்கள்.
“பேச விருப்பமில்லையென்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது. வரட்டுமா” அவன் கண்கள் அவள் முகத்தில் ஒட்டிக் கிடந்தது.
வேண்டாம் என்று அவள் கண்கள் சொல்லின. வாய் திறக்க முடியவில்லை. உடம்பில் இன்னும் நடுக்கம்.
அவன் இன்னும் நின்று கொண்டிருந்தான்.
அவள் உடம்பில் மின்சாரம் பரவிக் கொண்டிருந்தது. பார்வையில் கொஞ்சம் தைரியம் வந்திருந்தது.
ரோனியுடன் பழகும்போது உண்டாகாத பரபரப்பு, இனிய உணர்வு, உணர்வில் ஒரு மென்மை, இதுதான் காதலா?
அல்லது இருபது வருட உறவில் உண்டாகாத பரபரப்பு இந்தப் புதிய மனிதன் வித்தியாசமானவன் என்ற படியால் உண்டாகிறதா.
“வெளியில்… கடற்கரையில் ஒரு பத்து நிமிடம் நடக்கலாமா, பேசலாமா” அவன் முகத்தில் குறும்பு. அவளுக்கு வெட்கம் வந்து விட்டது.
“விருப்பமென்றால் வரலாம்” அவன் பழைய படி ஹோலுக்குப் போய் விட்டான்.
அவன் போய் அடுத்த வினாடி அம்மா ஓடோடி வந்தாள். தாயின் முகத்தின் தவிப்பு சாந்தி முன் எப்போதும் சந்திக்காதது.
“என்ன சொன்னார்” தாய் மகளைத் தடவிய படி கேட்டாள்.
“கொஞ்சம் கதைக்க வேண்டுமாம், வெளியில் வர முடியுமா என்று கேட்டார்.” வார்த்தைகள் கிணற்றுக்குளிலிருந்து வருவது போல் கேட்டது.
அவள் குரலை அவளால் நம்ப முடியாமலிருந்தது.
”மகளே, கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள். உன் அதிர்ஷ்டத்தை உதைத்து எறியாதே மகளே” தாயின் உருக்கமான குரல் அவள் மனத்தைப் பிசைந்தது.
இந்த நிமிடம் சாந்தி ரோனியைப் பற்றிச் சொன்னால் இந்தத் தாய் என்ன செய்வாள்?
ஒரு மீனவனை, ஏழையை, அவள் விரும்புகிறாள் என்று சொன்னால் நிச்சயமாக அம்மாவின் பிணம் அடுத்த நாள் இந்தக் கடற்கரையில் ஒதுங்கிக் கிடக்கும். தாயின் விசும்பல் மகளின் உணர்வுகளைப் பிழந்தது.
“என்னவாம் சாந்தி” தமயன் சங்கர் வந்தான்.
“கொஞ்சம் தனியாகக் கதைக்கலாமோ என்று கேட்டாராம்”
“அதெற்கென்ன… போய்ப் பேசுவதுதானே” சங்கர் உத்தரவிடுவது போற் சொன்னான்.
இவனிடம் ரோனியைப் பற்றிச் சொன்னால் என்ன நடக்கும்? “என்னடா உனக்குத் துணிவு” என்று சங்கர் குமுறுவான்.
தமயன் சேகர் என்ன செய்வான்? சேகர் சங்கர் மாதிரி நிதானமானவன் அல்ல.
“என்னடா கரையார நாயே உனக்குப் பணக்காரப் பெண் வேணுமா” சேகர் இப்படிக் கேட்பதுடன் நிற்க மாட்டான், சிம்மமாய் மாறி ரோனியைக் கிழித்து விடுவான்.
சங்கர் உடனடியாகக் குசினியை விட்டு ஹோலுக்குள் போய் விட்டான்,
தம்பி குமார் அப்போதுதான் வீட்டுக்குள் வந்தவன். பதினெட்டு வயது,
விட வீட்டிலுள்ள எல்லாரையும் வித்தியாசமானவன்.
ஹோலைத் தாண்டிக் குசினிக்கு வந்தான். அம்மா மெல்லிய குரலில் தன் கடைசி மகனுக்கு விடயத்தைச் சொன்னாள்,
குமார் தமக்கையை ஏறிட்டுப் பார்த்தான். பின்னர் தாயைப் பார்த்துக் கேட்டான். “ஏன் அக்காவை அவசரப் படுத்துகிறீர்கள்” தாய்க்குக் கோபம் வந்துவிட்டது.
“மடையா, அந்தப் பையன் லண்டனைச் சேர்ந்த பையன். பெண் கொடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு கியுவில் நிற்பினம்… இவளின்ர அதிர்ஷ்டம் உனக்குப் புரியல்லயா”
தாய் இப்போது அழுதுவிட்டாள்.
குமார் ஏதோ முணுமுணுத்துவிட்டுப் போய் விட்டான்.
தகப்பன் வந்தார்.
“என்ன குட்டி மகாநாடு நடக்குதா”
தாயையும் மகளையும் ஏறிட்டுப் பார்த்துக் கேட்டார் தகப்பன்.
“தன்னோடு கொஞ்சம் தனியாகப் பேச வரலாமா என்று ராஜன் கேட்டாராம்” அம்மா தவிப்புடன் சொன்னாள்.
ரோனியைப் பற்றி அப்பாவிடம் சொன்னால் என்ன நடக்கும்? அவரால் அந்தத் திருப்பத்தைத் தாங்க முடியவோ அல்லது சம்மிக்கவோ முடியாது.
தாயை வதைப்பார், தமயன்களை வைவார், தான் பைத்தியமாகி விடுவார். அது நிச்சயம். நிச்சயம்.
“அந்தப் பையனைப் பிடிக்கவில்லயா மகளே” தகப்பனின் குரலிற் கெஞ்சல். அவரைப் பிடிக்கிறது என்று சொல்வேன் என்ற கெஞ்சல்.
கோணேசர் கோயில் மணியோசையோ என்னவோ காதில் கணீரென்ற கோயில் மணியோசை கேட்டது.
இரவைத் தழுவிய கடல் சந்திரனை எதிர்பார்த்து மென்மையாய் இரைந்தது. காகாக்கள் கூடுகள் தேடி ஓடிக் கொண்டிருந்தன. கடற்கரையில் மீனவர்கள் பின்னேர மீன் பிடிப்புக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.
“உன் தலவிதிப் படிதான் எல்லாம் நடக்கும்” தகப்பன் போய் விட்டார்.
“கொஞ்சம் முகத்தைக் கழுவிக் கொண்டு வெளிக்கிடு” தாய் பரபரத்தாள்.
அடுத்த அறைக்குள் ஓடிப்போய் ஒரு நீலச் சேலையை மகளிடம் கொடுத்தாள்.
இயந்திரம் போற் செயற்பட்டுத் தன்னை நீலச் சேலைக்குள் புதைத்துக் கொண்டாள் சாந்தி.
“சாந்தி ரெடிபோல கிடக்குது” சங்கர் ராஜனுக்குச் சொன்னான்.
வந்திருந்தோர், வீட்டிலிருந்தோர் எல்லோரும் பார்த்திருக்க வீட்டுக்குப் பின்னாலிருந்த கேற்றை ராஜன் திறந்து கட்றகரையில் கால் வைக்க அவள் அவனைப் பின் தொடர்ந்தாள்.
“நான் இன்னும் உன் குரலைச் சரியாகக் கேட்கவில்லை தெரியுமா” அவன் திரும்பிப் பார்த்துச் சொன்னான்.
வெட்கத்துடன் தலைகுனிந்தாள் சாந்தி. இன்னும் வாய்திறக்கவில்லை.
“இது பெரிய அதிர்ச்சியான விஷயம் தெரியுமா” அவன் மெல்லச் சிரித்துக் கொண்டான்.
அவன் நடந்துபோய் ஒரு தோணியருகில் நின்றான். அவள் உள்ளம் படபடத்தது.
அவளும் ரோனியும் உட்கார்ந்திருந்த அதே இடம். அதே தோணி.
‘கடவுளே இந்த மனிதனை இந்தத் தோணியிடத்தில் இருக்கப் பண்ணாதே’ அவள் மனம் வேண்டிக் கொண்டது.
கடவுளும் அவனுடன் சேட்டை விட்டிருக்க வேண்டும்.
மூன்று நாட்களுக்கு முன் எந்தத் தோணியருகில் இன்னொருத்தனுடனிருந்தாளோ இன்றும் ஏதோ விதி துரத்தி விட அதே இடத்தில் அவன் உட்கார அவளும் உட்கார்ந்தாள்.
கொஞ்ச நேரம் அமைதி. அவன் கண்கள் கடலைப் பார்த்தன. கடல்வயிற்றைக் கிழித்துக் கொண்டு சந்திரன் பிரசவித்தது.
அவன் இப்போது அவள் முகத்தைப் பார்த்தான். “நீல சாரி உமக்கு நன்றாக இருக்கிறது”
அவள் இன்னும் தலைகுனிந்திருந்தாள்.
“உமக்கு என்னைப் பிடிக்குதா”
அவனின் குரல் அவனுக்குள் ஒரு சிலிர்ப்பையுண்டாக்கியது. உடம்பு பட்டென்று சூடு கண்டது. கைகள் நடுக்கத்துடன் கடல் மண்ணில் கோலம் போட்டன. தொண்டை வரண்டது. கண்கள் தாழ்ந்தன. இதுதான் காதலா?
“நாங்கள் வயது வந்தவர்கள். எனக்கு வயது இருபத்தேழு. உமக்கு வயது இருபது என்று சங்கர் சொன்னான்”
“……” அவள் இன்னும் மௌனம்.
“லண்டனுக்கு வரவிருப்பமா”
அவள் சம்மதம் என்று தலையாட்டினாள்.
அதன் பிறகு அவன் தயங்கவில்லை. மிகவும் அருகில் வந்து இரு கைகளாலும் அவன் அவள் முகத்தை ஏந்தி அவள் கண்களைப் பார்த்தான்.
வானத்து நட்சத்திரங்கள் அவள் கண்களில் பிரதிபலித்தன. “நான் என்னால் முடிந்தவரை உன்னைச் சந்தோசமாக வைத்திருப்பேன்” அவள் காதில் கிசுகிசுத்தான்.
அவள் கண்களில் தாரை தாரையாக நீர் கசிந்தது ஏன் என்று அவனுக்கே தெரியாது, மூன்று நாட்களுக்கு முன் அவளைக் கண்டவன். இன்று அவளுடைய அவனாக விட்டதை அவளால் நம்ப முடியவில்லை.
“நான் என்னைப் பற்றி உம்மிடம் சொல்ல வேண்டும்…” அவன் ஆரம்பித்தான்.
அவளுக்குத் திடீரென்று பயம் பிடித்து விட்டது. அவளும் ரோனியைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?
“வேண்டாம்” அவள் பட்டென்று சொன்னாள்.
“ஏன்”
“….” அவள் மறுமொழி சொல்லத் தடுமாறினாள்.
“எனது விருப்பு வெறுப்புக்களை, கடந்த கால வாழ்க்கையை உனக்குத் தெரிய வேண்டாமா”
“கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து கொண்டால் போதும்” அவள் கிசுகிசுத்தாள்.
இப்போது அவன் மௌனம்
அவளைத் தாங்கிய கைகளை இப்போது மணலிற் புதைத்து அவன் குழைந்து கொண்டிருந்தான்.
“என்னைப் பற்றி உனக்கு எதுவும் தெரியாதே”
“உங்கள் குடும்பத்தை எனது தாய் தகப்பனுக்குத் தெரியும்…. அவர்கள் எடுத்த முடிவு நல்ல முடிவாக இருக்கும்’
அவள் இவ்வளவும் சொல்லி முடிப்பதற்கிடையில் வியர்த்துக் கொட்டி விட்டது.
“அவர்களுக்காகத்தான் உனது சம்மதமா”
“அப்படி இல்ல…”
அவள் குரலில் இப்போது துணிவு.
“என்னைப் பற்றிச் சொல்ல எவ்வளவோ இருக்கு” “அத இப்ப சொல்லத் தேவையில்ல”
“ஏன்”
“அவசியமில்ல”
“ஏன் அவசியமில்ல” அவன் குரலில் குழப்பம். இப்போது அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்க முதல் வாழ்ந்த வாழ்க்கை வேற, இனி வாழப் போகிற வாழ்க்கை வேற…. நீங்கள் சொன்னது போல நானும் உங்களுக்குச் சரியான சந்தோசத்தைத் தரும் துணையாக வாழ என்னால் ஆன முயற்சியைச் செய்வேன். அதற்கப்பால் வேறொன்றும் முக்கியமில்ல என்று நினைக்கிறன்”
அவன் மீண்டும் கொஞ்ச நேரம் மௌனமாகிறான். பின்னர் கொன்னான்.
“நான் லண்டனில் நீண்ட நாள் வாழ்ந்தவன் . என்னைப் பற்றி உனக்குத் தெரியவேண்டும்”
“எனக்குத் தெரிய வேண்டியதைக் காலம் வரும்போது நானே தெரிந்து கொள்வேன்”
“சில விடயங்கள் மிகவும் அதிர்ச்சி தருவதாக இருந்தால்…” அவன் கேட்டான்.
“அதை அப்போது பார்த்துக் கொள்வோம்”
அவள் இப்போது திடகாத்திரமாய்ச் சொன்னாள்.
அவர்கள் திருமணம் மூன்று கிழமையில் நடந்தது.
ஒரு சில மாதங்களில் அவள் லண்டன் வந்துசேர்ந்தாள்.
அவள் கல்யாணம் நிச்சயமானபோது ரோனி கொழும்பில் தனது பிரயாண விடயங்கள் பார்க்கும் அலுவலாகப்
போயிருந்தான்.
வரோணிக்கா வந்து விஷயத்தையறிந்த போது அவன் என்ன பாடுபட்டிருப்பான் என்று சாந்தி யோசித்தாள்.
அவள் திருமணம் நடந்தபோது அவன் அமெரிக்கா போய் விட்டான்.
லண்டனுக்கு வந்து பத்து வருடமாகிவிட்டது. அவன் எப்படி வாழ்ந்திருப்பான் என்று அவள் நினைத்துப் பயப்படும்படி இதுவரையும் எந்த சந்தர்ப்பமும் வரவில்லை.
இப்போது ஒரு குழந்தை உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கும்போது இன்னொரு குழந்தை சிறு உயிராய் வளர்ந்து கொண்டிருக்கும்போது அவனைப் பற்றிய சந்தேகம் வந்திருக்கிறது.
சாந்தி முகத்தை மூடிக் கொண்டழுதாள். தன் மைத்துனிகளை விட, சினேகிதிகளை விடத் தான் பெரிய அதிர்ஷ்டசாலி என்று நினைத்தது எத்தனை அபத்தம்?
இதுதான் தலைவிதியா? அவள் குழம்பிப் போய் விட்டாள்.
அத்தியாயம் – 10
இரவின் தனிமையில் ராஜன் நடந்து கொண்டிருந்தான். நீண்ட நேரம் தனிமையிலிருந்து யோசித்ததாலும் சாந்தி அவன் தலைமயிரைக் கண்டபடி இழுத்துக் குலுக்கியதாலும் அவனுக்குத் தலையிடித்தது.
செயின் அல்பேன்ஸ் நகரின் பெரிய கடைவீதி சன நாட்டமின்றி அன்னியமாகத் தெரிந்தது.
வாழ்க்கையும் இப்படித்தானோ? எங்களுக்குப் பரிட்சயப்பட்ட கோணத்திலிருந்து பார்க்கும்போது எல்லாம் சரியாக அல்லது திருப்பதியாகத் தெரிகிறது.
கோணம் பிழைத்து விட்டாற் கோலங்கள் தடுமாறுகின்றன.
செயின்ட் அல்போன்ஸ் நகரின் மூலை மூடுக்குகளில் வீடற்ற ஏழைகள் முடங்கிப் படுத்திருந்தனர். இவர்களுக்கும் ஒரு காலத்தில் அன்பான குடும்பமும் அம்மா, அப்பா மனைவி குழந்தைகளுமிருந்திருக்கலாம். இப்போது இவர்கள் மூடிக் கொண்டிருக்கும் கந்தையைத் தவிர எதுவும் இவர்கள் சொந்தமில்லை.
இவர்களிற் சிலர் இவனைப்போல் வழக்கறிஞர்களாகவுமிருந்திருக்கலாம். இப்போது இவனைப் போல் தனக்கே வாதம் செய்யத் தெரியாமற் தவிக்கலாம்.
ஸேராவும் சாந்தியும் இவனை நிழலாய்த் தொடர்வதுபோல பிரமை. ஸேராவை இப்போது தான் சந்திக்க வேண்டுமா? பன்னிரண்டு வருடங்களில் எத்தனையோ தரம் அவளைப் பற்றி யோசித்திருக்கிறான்.
எங்கே போனாள், எப்படி வாழ்கிறாளோ என்றெல்லாம் யோசிப்பான். எங்கேயாவது
கண்காட்சிகள் ஆர்ட் நடைபெறுவதானால் அவள் பெயர் தெரிகிறதா என்ற அபிலாஷையுடன் அவன் பார்ப்பான்.
சாந்தியைப் பொறுத்தவரையில் அவன் எப்போதும் அவளது சொந்தம். அவனைக் கணவனாகப் பெற்றதில்தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று வாய்விட்டுச் சொல்வாள்.
எமிலியைப் பற்றிப் பரிதாபப் படுவாள், அலிஸனைப் பற்றி பெருமூச்சு விடுவாள் சாந்தி. அந்த இரு பெண்களையும் வைத்துக் கொண்டு தன் வாழ்க்கையை எடை போடுவாள் சாந்தி.
சுதந்திரப் போக்குள்ள எமிலியைப் பற்றிப் புரிந்து கொள்ள சாந்தி திணறுவாள். எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படும் அலிஸனைப் பற்றி எரிச்சல் படுவாள் சாந்தி.
“டேவிட் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக அலிஸன் திட்டுகிறாள். ஆண்கள் பலர் பெண்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாதவர்கள், சந்தர்ப்பம் வந்தால் தவறி விழத் தயங்காதவர்கள் என்றெல்லாம் அலிஸன் சொல்கிறாள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்” சாந்தி இப்படிக் குழப்பமான கேள்விகளைக் கேட்பாள். மறுமொழி என்ன சொல்வது?
சாந்திக்குத் தன் பழைய வாழ்க்கையைப் பற்றி ஸேராவைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொள்வான்.
காலப் போக்கில், சாந்தியிடம் அவனுக்குள்ள இறுக்கத்தில் பழைய வாழ்க்கை ஒரு இறந்த கால வாழ்க்கையாகி விட்டது. ஏன் எலும்புக் கூடுகளைக் கிண்ட வேண்டும்? உஷாவும் சாந்தியும்தான் அவன் உலகம் என்றாகிவிட்டபின் ஸேராவைப் பற்றி என்ன யோசனை.
சாந்தியைப் பெண் கேட்டது ஒரு நம்பமுடியாத விடயமாக இருப்பதுண்டு.
1987ம் ஆண்டு இந்திய சமாதானப்படை வந்து இலங்கைத் தமிழ்ப்பகுதிகளில் சமாதானம்
சமாதானம் நிலவியபோது தாயின் இடைவிடாத நச்சரிப்பால் இலங்கை போய் வர உத்தேசித்தான்.
அம்மா ஏன் தன்னைப் பிடிவாதமாக அழைக்கிறாள் என்று தெரியும். அக்கா பிரமிளா இடைவிடாமல் போன் பண்ணி ‘இவனுக்கொரு கல்யாணம் பாருங்கள்’ என்று சொல்லியிருப்பாள்.
ஸேராவைப் பற்றிய தகவல் தெரிந்து இரண்டு வருடங்களாகி விட்டன. அவளைப் பற்றிய சோகத்தில் அமைதியிழந்த நாட்கள் மறந்து கொண்டிருந்தன. இவன் வாட்ட சாட்டமான வழக்கறிஞன். வேலை செய்யும் அல்லது வாடிக்கையாளராய் வரும் பெண்கள் இவனின் கவர்ச்சியில் கலங்கித் தடுமாறுவதை இவன் கவனிக்காமலில்லை. ஆங்கிலேயப் பெண்களைக் கண்டால் அவர்களின் கண்கள் இவனை வளைய வருவதைக் கண்டால் எங்காவது ஓடவேண்டும் போலிருக்கும்.
“நீ ஒரு இனவாதி” என்றாள் ஒரு இங்கிலிஸ் பெண்.
“ஏன் அப்படிச் சொல்கிறாய்” இவன் குழம்பிப் போய்க் கேட்டான்.
“எங்களைக் கண்டால் எரிச்சல் படுகிறாய்”
அந்த வார்த்தைகள் அவனைச் சுட்டது.
இன்னொரு ஆங்கிலேயப் பெண்ணை நம்பித்தான் ஏமாற விரும்பவில்லை என்று சொல்லலாமா?
“ஐயாம் சொறி.. நான் யாரையும் கண்டு எரிச்சல் படவில்லை. எட்ட நிற்கப் பழகிக் கொள்கிறேன்” என்று தயவாகச் சொன்னான்.
அந்த ஆங்கிலேயப் பெண்ணுக்கு இவனை விளங்கிக் கொள்ள முடியவில்லை. “நீ ஒரு வித்தியாசமான பேர்வழி” அவள் குரலில் கிண்டல்.
“ஏன் அப்படிச் சொல்கிறாய்”
“பெண்களைக் கண்டால் பேய்களைப் பார்ப்பதுபோல் பார்க்கிறாய்”
”ஐயாம் சொறி, நான் அப்படி ஒரு சங்கடத்தைத் தந்ததற்கு மன்னிக்கவும்” அவன் குழைந்தான்.
அவனிடம் பேசிக் கொண்டிருந்த ஆங்கிலேயப் பெண் இவனின் சேம்பரில் இவனுடன் வழக்கறிஞையாக வேலை செய்பவள். எதையும்நேரே கேட்கும்துணிவு கொண்டவள். இவன் வயதை ஒத்தவள். மிகவும் சுதந்திர மனப் போக்குள்ளவள். இருவரும் சில வழக்குகளில் கலந்து வேலை செய்ய வேண்டியிருந்தது.
ஒரு நாள் கார்டிவ் நகரத்தில் ஒரு இரவைக் கழிக்க வேண்டி வந்தது.
பகலெல்லாம் கோர்ட் கேசுடன் மாரடித்து விட்டு இரவில் சிவப்பு வைனுடன் தன்னை யிழந்து கொண்டிருந்தவள் ஒரேஞ் சாறு குடித்துக் கொண்டிருக்கும் ராஜனை வித்தியாசமாகப் பார்த்தாள்.
“நீ மதுபானம் எடுக்க மாட்டாயா” அவள்கேட்டாள்.
அவன் இல்லை என்று தலையாட்டினான்,
“மகாத்மா காந்தி மாதிரி மது மங்கை மாமிசத்தைத் தொடமாட்டேன் என்று உனது தாய்க்குச் சத்தியம் செய்து கொடுத்தாயா” அவள் கிண்டல் செய்தாள்.
“நான் மாமிசம் சாப்பிடுபவன்” அவன் முணுமுணுத்தான். “மங்கைகளையும் சாப்பிடுவாயா” அவள் போதையில் வார்த்தைகளைக் கொட்டினாள்.
அவன் மறுமொழி சொல்லவில்லை. சட்டென்று ஸேராவின் இனிய முத்தங்கள் ஞாபகம் வந்தது.
“நீ ஹோமோ செக்சுவலா” அவள்கேள்வி எரிசசலாய் வந்தது.
“இல்லை” என்று தலையாட்டினான் இவன்.
“அப்படியென்றால் ஏன் என்னை முத்தமிடக் கூடாது” அவள் தடுமாறி வந்து இவனில் விழுந்தாள். “நிறைய ஆசியர்கள் ஹோமோ செக்சுவலாக இருந்து கொண்டு கல்யாணமும் செய்வார்களாம்” அவன் விலகிக் கொண்டான்.
“நான் இனவாதியில்லை, நான் ஹோமோ செக்சுவல் இல்லை, காதலிற் தோல்வி கண்டவன்” அவன் ஒப்பாரி வைக்கும் நிலைக்கு அவள் அவனைக் குழப்பி விட்டாள்.
“காதலா” அவள் தன் பொன் மயிரைக் குழப்பிக் கொண்டு இவனைக் கேட்டாள்.
“உம்” குழந்தைத் தனமாகத் தலையாட்டினான்.
“முட்டாள், காதலாவது மண்ணாங்கட்டியாவது. படுக்க விருப்பமென்றால் படுத்தெழும்பு, கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டுமென்றால் அதைச் செய்து பார். காதல் கீதல் என்று கண்ணீர் வடிக்க வேண்டாம். அப்படி ஒன்றும் இல்லை. அந்த வார்த்தைகள் கதை எழுதவும் கவிதை வடிக்கவும் உற்பத்தி செய்யப்பட்டது. சாதாரண வாழ்க்கையில் இதெல்லாம் வெறும் கனவு”
அவள் பிதற்றித் தள்ளினாள்.
அவன் அன்றிரவெல்லாம் ஸேராவை நினைத்துத் துயர்பட்டான்.
அந்த சமர் வக்கேசனுக்கு இலங்கை போகச் சொல்லி அக்கா வற்புறுத்திக் கொண்டிருந்தாள். அம்மாவும் அப்பாவும் இடைவிடாமல் போன் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
அவன் ஒரு சாதாரண தமிழன். அம்மா ஏன் அழுது வடிந்து கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறாள் என்று தெரியும். அதற்காக இலங்கைக்குப் போகாமலும் இருக்க முடியவில்லை,
அம்மா இவன் எதிர்பார்த்தபடி கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியுசீலண்ட், இங்கிலாந்து என்ற நாடுகளிலிருந்து தங்களுக்கு வந்திருக்கும் சாதகங்களை எடுத்து விரித்து வைத்தாள்.
அவனுக்கு அடுத்த விமானம் எடுத்து லண்டனுக்கு வரவேண்டும் போலிருந்தது.
அம்மா தன் ஆயுதங்களான, கெஞ்சல், மிரட்டல், கண்ணீர் என்பனவற்றையெல்லாம் பிரயோகித்துப் பார்த்தும் ஒரு பிரயோசனமுமில்லை.
“இவனுக்கு ஏதோ பிழை” அம்மா மூக்கைச் சிந்திக் கொண்டாள்.
“காலமும் நேரமும் வந்தால் எல்லாம் சரியாக நடக்கும்” அப்பா தத்துவம் பேசினார்.
சமாதானப் படை வந்ததாலும் யாழ்ப்பாணம் போய் உறவினர்களைப் பார்ப்பது சாத்தியப்படவில்லை. சில தமிழ் இயக்கங்கள் வவுனியா, பரந்தன் போன்ற பகுதிகளில் பயங்கர இவர்களால் வேலைகளில் ஈடுபட்டுடிருந்ததால் தயக்கமில்லாமல் பிரயாணம் செய்ய முடியவில்லை.
அப்பாவுக்குத் திருக்கேதீஸ்வரமும், திருக்கோணேசமும் மிகவும் பிடித்த இடங்கள். திருமலை போவதாக முடிவு கட்டியபோது அவன் மறுக்கவில்லை.
கொழும்பில் நின்றபோது இவனுக்குச் சொல்லாமல் அம்மா எத்தனையோ குடும்பங்களை, அதாவது இவனுக்கு மணப்பெண்ணாக வரத் தகுதியுள்ள பெண் உள்ள குடும்பங்களைச் சாப்பிட அழைத்தாள்.
அம்மாவின் மறைமுக நாடகம் அவனுக்கு எரிச்சல் வந்தது. “திருகோணமலைக்குப் போய் இந்த நாடகங்கள் போடுவதானால் நான் வரவில்லை” அவன் திட்டவட்டமாகச் சொல்லி விட்டான்.
திருமலைச் சூட்டில் வதங்கிப் போனவனுக்கு நிலாவெளிக் கடற்கரை இதம் தந்தது. கன்னியாவின் வென்னீர் இதய வேதனையைத் தீர்த்தது.
இயற்கையழகில் எப்போதும் மனதைப் பறி கொடுக்கும் அவனுக்கு திருமலைக் கடற்கரையின் ஏகாந்த இரவுகள் மனதின் புண்ணை மாற்றின.
திருமலை வந்து ஒன்றிரண்டு நாட்களில் தனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிட்டார் தகப்பன்,
தகப்பனை ஏறிட்டுப் பார்த்தான் ராஜன்.
“அவர்களுக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். எத்தனை வயதென்று எனக்குச் சரியாகத் தெரியாது” தாய் தர்ம சங்கடத்துடன் சொன்னாள். அதாவது நாங்கள் உனக்குக் கல்யாணம் பேசக் கூட்டிக் கொண்டு போகவில்லை என்ற உத்தரவாதம்.
வழக்கம்போல் சம்பிரதாயமான பேச்சுக்கள். நீலப் பாவாடையும் ஒரு நீலச் சோளிச் சட்டையும் தாவணியும் போட்ட ஒரு இளம் பெண் தேனீர் ட்ரேயைக் கொண்டு வைத்து விட்டுச் சட்டென்று மறைந்து விட்டாள். வனை ஏறிட்டுப் பார்க்கவேயில்லை.
எத்தனை விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள் என்று கூட அவள் கணக்கெடுக்கவில்லை.
இவ்வளவு காலமும் இவன் கண்ட பெண்கள் கிட்டத்தட்ட ஆங்கிலேய நாகரீகத்தைத் தழுவிக் கொண்ட தமிழ்ப் பெண்கள்.
இவனுக்குச் ஸேராவைப் போல் நீண்ட தலைமயிர். ஸேராவுக்கு இந்தியத் துணிகளிலும் நகைகளிலும் அபாரப் பிரியம். அவளின் பாட்டன் இந்தியாவிற் பிறந்து வளர்ந்தவர். ஸேரா குழந்தையாய் இருக்கும் போது இந்தியா போய் வந்தவள்.
வளர்ந்து யூனிவர்சிட்டியிற் படிக்கும்போது கிட்டத்தட்ட எல்லா ஆங்கிலேய மாணவர்களுக்கும் வரும் ஆசைபோல் இந்தியா போகும் ஆசை அவளுக்கும் வந்தது.
போய் வந்தபின் பருத்திப் பாவாடையும் மணிமாலையும் போட்டுத் தன்னை அலங்கரித்துக் கொள்வாள். ஸேராவின் பிடித்த நிறம் நீலம்.
நீல நிறத்தில் சாந்தியைக் கண்டதும் ராஜனின் இருதயம் இரத்தம் வடித்தது. அந்தப் பெண் மற்றைய பெண்கள் போற் தன்னை ஏற இறங்கப் பார்க்காமல் எடுத்தெறிந்து நடத்தியது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அன்றைய சாப்பாடுடன் வயிறும் மனம் நிறைய அம்மா வந்தாள். இவனிடம் அந்தப் பெண் எப்படி என்று கேட்காதது மிகவும சந்தோசமாக இருந்தது.
அடுத்த நாள்ப் பின்னேரம் ராஜன் கடந்த சில தினங்களாகத் தனியாகக் கடற்கரையில் நடந்து செல்வது போல் நடந்தான்.
சாந்தியின் வீடு கடற்கரையை அண்டியது.
கரையோடு நடந்து செல்லும்போது அவர்களின் வீட்டின் பின்னால் அவள் கோழிகளுக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தாள்.
மாலை மயங்கும் நேரம். கரையோரம் கிடந்த ஆயிரக்கணக்கான தோணிகளின் ஒன்றினருகில் அமர்ந்து தன் எதிர்காலத்தைப் பற்றி யோசித்தான்.
திரும்பத் திரும்ப ஸேராவும் சாந்தியும் வானத்து நட்சத்திரங்களாய் அவன் மனவானிற் கண் சிமிட்டினார்கள்.
தூரத்தில் மங்கிய நிலவு வெளிச்சத்தில் வீட்டு வேலை செய்யும் இந்தப் பெண்ணும் உலகமெல்லாம் ஓடித்திரிந்து கலைக் காட்சிகள் செய்து கொண்டு திரியும் ஸேராவும் வித்தியாசமான இரு உலகத்தைச் சேர்ந்தவர்கள்.
இவன் பார்த்துக் கொண்டிருக்கும்போது சாந்தி வீட்டுக் கேற் திறக்கப்பட்டது. சாந்தியும் இன்னொரு இளம்பெண்ணும் வந்தார்கள். இவன் தன்னைத் தோணியோடு மறைத்துக் கொண்டான். இருவரும் இவனைக் கடந்து போய் இன்னொரு தோணியருகிலுட்கார்ந்து ஏதோ அமர்க்களாமாகப் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
மாலை மயங்கிப் போய் நிலவு வந்து விட்டது. கொஞ்ச நேரத்தில் இளம் பெண்கள் இருவரும் சாந்தியின் வீட்டையடைந்து விட்டார்கள்.
அவள் திரும்பியபோது நீண்ட பின்னல் நாகம்போல் சுருண்டடித்தது. அவன் இதயத்தை வருடுவது போலிருந்தது.
அன்றிரவு அவர்கள் தங்கியிருந்த ஹொட்டலுக்கு வந்தபோது அப்பாவும் அம்மாவும் தங்களுக்குத் தெரிந்த ஒருத்தரின் பெண் டொக்டராகத் திருமலை ஆஸ்பத்திரியில் வேலை பார்ப்பதாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இவனுக்குத் தெரியும் அதன் பின்னணியின் கருத்து என்னவாகவிருக்குமென்று.
தாய் தகப்பனுடன் எதையும் நேரடியாகப் பேசுபவன் அவன். கொஞ்ச நேரம் அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டுச் சொன்னான்.
“அப்பா நான் உங்கள் நண்பரின் மகள் சாந்தியை விரும்புகிறேன். அவள் சம்மதித்தால் மிகவும் சந்தோசப் படுவேன்”
தாயும் தகப்பனும் கொஞ்ச நேரம் ஒன்றும் பேசவில்லை. இவனுக்கு இவனைப் போல் ஒரு சட்டப்படிப்பு படித்த பெண்ணையோ அல்லது ஒரு டொக்டரையோ செய்யலாம் என்றிருந்தால்.
இவன் என்ன சொல்கிறான்?
“சாந்தி A லெவலுக்கு மேல் ஒன்றும் படிக்கவில்லை”
அம்மா முணுமுணுத்தாள்.
இவன் கேள்விக் குறியுடன் அம்மாவைப் பார்த்தான்.
”உம்… உனக்கு உன்னைப்போல் ஒரு படித்த பெண்ணைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்”
அம்மா தயங்கித் தயங்கிச் சொன்னாள்.
“அது உங்கள் பிரச்சினை” அவன் சிரித்தபடி சொன்னான். “அவசரப்பட்டு முடிவு செய்ய வேண்டாம்” அப்பா குறுக்கிட்டார்.
“சரியாக முடிவு செய்திருக்கிறேன் என்று நினைத்திருக்கிறேன்” அவன் அவர்கள் விமர்சனத்தை எதிர்பார்த்தான்.
“இரண்டு நாள் யோசித்து முடிவு சொல்” அம்மாவின் அறிவுரை இது.
“அம்மா இதில் ஒன்றம் பெரிதாகயோசிக்க இல்ல. அந்தப் பெண்ணை எனக்குப் பிடிச்சிருக்கு. அவ்வளவுதான்”
“எல்லாம் தலைவிதி” அப்பாவின் பிடித்த வசனமிது.
சாந்தியிடம் ஸேராவைச் சொல்லி அவளுக்குத் தன்னைப்பற்றிச் சொல்ல வேண்டும் என்ற அவன் ஆசையை சாந்தி தடுத்து விட்டாள். “நாங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை மறப்போம். இனி வரப்போகும் வாழ்க்கையை நினைப்போம்” என்றாள்.
தன் வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்தை அப்படிச் சுலபத்தில் மறந்து விட அவன் தயாரில்லை. ஆனால் அவளோ அவன் எப்போதாவது இருந்து பழைய கதைகளைத் தொட்டால் அவள் அவன் இதழ்களில் விரல் வைத்து ‘உஸ்உஸ்’ சொல்லி விடுவாள்.
இப்போது புதைத்து வைத்த பிணம் உயிரெடுத்து ருத்திரதாண்டவமாடுகிறது.
இந்த நேரம் பார்த்தா ஸேரா மீண்டும் வரவேண்டும்?
வசந்த காலமென்ற படியால் காலை நான்கு மணிக்கே விடியத் தொடங்கி விட்டது. அவன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது அவளும் தூங்கவில்லை என்று தெரிந்தது.
பெட்டிகளில் உடுப்புக்களைப் போட்டுக் கொண்டிருந்தாள். “என்னை விட்டுப் பிரிவதாக உத்தேசமா” அவன் வாசற்படியில் நின்று கேட்டான்.
அவள் மறுமொழி சொல்லவில்லை.
“மற்றவர்களுக்கு நாடகம் காட்ட முதல் எங்கள் பிரச்சினையை நாங்கள் பேசித் தொலைத்தால் என்ன”
மௌனம், மௌனம், மௌனம்!
சில தினங்களுக்கு முன் இதேயறையில் இதே படுக்கையில் ஒருத்தருக்குள் ஒருத்தரை இணைத்துக் கொண்டவர்கள் இப்போது எதிரிகளாய் வாதம் செய்து கொண்டிருந்தார்கள்.
ரவியைப் பார்க்க மிஸ்டர் ஸிம்சன்-எமிலியின் தகப்பன் வந்திருந்தார். உயர்ந்து வளர்ந்த அந்த ஆங்கிலேயன் சுருண்டு படுத்திருக்கும் தனது ஆசியப் பேரனை அணைத்துக் கொண்டார்.
“தாத்தா நீங்கள் ஏன் நேற்று வரவில்லை” ரவி தாத்தாவின் திடகாத்திரமான கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டான்.
“நான் வருவது உன் தாய்க்குப் பிடிக்காமல் இருக்கலாம் என்றுதான் வராமல் விட்டேன்” கிழவன் பேரனின் கன்னத்தை வருடிவிட்டுச் சொன்னார்.
“ஏன் என் அம்மாவுக்கு என் அப்பாவையும் பிடிக்காது தன் அப்பாவையும் பிடிக்காது” குழந்தை தன் மெல்லிய குரலாற் கேட்டான்.
தாய் எமிலி குழந்தையின் அப்பாவித் தனமான குரலைக் கேட்டு வேதனையுடன் சிரித்தாள்.
“மகனே எனக்கு எனது தகப்பனில் ஒரு நாளும் கோபமில்லை, உனது தகப்பனில் மிகவும் பிரியம். ஆனால் சந்தர்ப்ப வசத்தால் இப்படியாகி விட்டது”
எமிலி தகப்பனைப் போல மனஉறுதி கொண்டவள். தன் மகனின் குழப்பமான கேள்விகளுக்குத் தகப்பனின் சுற்றிவளைப்பான மறுமொழிகளை அவள் விரும்பவில்லை.
தகப்பன் ஒரு நியாயமான மனிதனாக இருந்தால் ஏன் தன் தாய் தற்கொலை செய்து கொண்டாள்? இளவயது எமிலி எத்தனையோ தரம் கேட்ட கேள்வியது.
கத்தோலிக்கத் தாயைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர் தனது தந்தை என்று தெரிந்தபோது எமிலிக்குப் பதினேழுவயது. தாயை ஆறுவயதில் இழந்தவனுக்குத் தாய் வழிப்பாட்டி சொன்ன கதைகள் சில ஞாபகம் வருகின்றன.
மிஸ்டர் ஸிம்சனின் குடும்பம் நூற்றுக் கணக்கான வருடங்களாக நன்றாக வாழ்ந்த குடும்பம். எமிலியின் தாய் ஐம்பதாம் ஆண்டளவில் லண்டனுக்கு நேர்ஸிங் செய்ய வந்த நூற்றுக்கணக்கான ஐரிஸ் பெண்களில் ஒருத்தி.
உடுப்புக் கடை முதலாளியான மிஸ்டர் ஸிம்ஸனின் கம்பீரத் தோற்றமும், லாவகமாகப் பெண்களைக் கவரும் பேச்சும் நேர்ஸ் மேரியைக் கவர்ந்தது.
சாதி, சமய, நாட்டு வேறுபாடுகளையறுத்துக் கொண்டு அவர்கள் காதல் வளர்ந்தது.
மிஸ்டர் ஸிம்சன் குடும்பம் தங்கள் மகன் கத்தோலிக்க – ஐரிஸ் குடும்பத்தில் நுழைவதை விரும்பாவிட்டாலும் தடுக்க முடியவில்லை.
சில வருடங்களில் எமிலி பிறந்தாள். கணவனின் போக்கில் மாறுதல்கள் கண்ட மேரி கேள்விகள் கேட்கத் தொடங்கி விட்டாள்.
கேள்விகளுக்குப் பதில் மௌன சாட்டைகளாய் விழுந்தன. தன்னை வீட்டிலும் இன்னொருத்தியைக் கடையிலும் கணவன் அனுபவிப்பதை மேரியாள் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனத்துயரின் பிரதிபலிப்பு மனநோயாய் மாறியது. ஆழ்ந்த சோகத்திலிருப்பதாக டொக்டர் சொன்ன நிற நிறமான, பெரிய சிறிய குளிசைகளைக் கொடுத்தார்.
குழந்தை எமிலிக்கு ஆறுவயது. உலகத்தில்நிறைய விடயங்களில் ஒன்றிரண்டைத் தவிர மிகுதியைப் புரிந்து கொள்ள முடியாத வயது.
ஒரு பின்னேரம், பனிபெய்யும் குளிரில் நடுங்கிக் கொண்டு பாடசாலை வாசலில் நின்றது கனவு போலிருக்கிறது. சினேகிதியின் தாயின் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்ததும் தாய் நித்திரையாயிருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டு தாயின் இறந்த பிணத்தின் அருகில் நித்திரையானதும் இளம் எமிலியால் மறக்க முடியாத நிகழ்ச்சிகள்.
தகப்பன் வந்து கதவைத் திறந்ததும் “அம்மா எழும்பமாட்டாளாம்” ஆறுவயது மழலை அழுதது. பிணம் விறைத்துக் குளிர்ந்து போய்க் கிடந்தது.
மிஸ்டர் ஸிம்ஸன் மகளைத் தூக்கித் தேற்றினார். அம்மாவை விட இன்னொரு நல்ல அம்மாவைக் கொண்டு வருவதாக உறுதி சொன்னார்.
அவரது காதலியும் அவளது இரு பொல்லாத மகன்களும் எமிலியின் தாயும் சகோதரர்களுமானார்கள். எமிலியின் பாட்டி எமிலியைத் தன் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளச் சட்டப்படி எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் மிஸ்டர் ஸிம்சனின் பணத்திற்கு முன்னால் எந்த வாதத்துக்கும் எடுபடவுமில்லை, வெற்றி பெறவுமில்லை, எமிலி தன் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டாள்.
கல்யாணம் என்ற போர்வைக்குள் தன் தாயனுபவித்த துயர்களைப் பாட்டியைக் காணும்போது தெரிந்து கொள்வாள். அவளுக்குப் பதினாறு வயது வரைக்கும் மிஸ்டர் ஸிம்சன் அவளைப் பாட்டியிடம் செல்ல அனுமதிக்கவில்லை.
எமிலி லெவல் முடித்துக் கொண்டு A லெவல் செய்ய கல்லூரி ஒன்றுக்குப் போனபோது தகப்பனுக்குச் சொல்லாமல் பாட்டியிடம் தொடர்பு கொண்டாள்.
மிஸ்டர் ஸிம்ஸன் ஏன் மேரியை அப்படி நடத்தினார் என்று பாட்டியிடம் கேட்பாள் எமிலி. பரமண்டலத்திலிருக்கும் பரமபிதாவிடம்தான் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என்று பதில் சொல்வாள் எமிலியின் பாட்டி.
எமிலியின் சிறியதாய்க்கு இரண்டு பையன்கள். சிறிய தாய் விஸ்கியில் எழும்பி, பிராண்டியில் முகம் கழுவி, வொட்காவில் பல் கழுவி, ஜின்னில் கண் துடைப்பவள்.
போத்தலும் கையுமாக இருப்பாள். எமிலியைத் திட்டுவாள். ஏன் தன்னை இந்தச் சிறிய தாய் திட்டுகிறாள் என்று எமிலிக்குப் புரியாது.
தகப்பன் தனது உறுதியில் தனது சொத்தை எமிலிக்கு எழுதி வைத்திருப்பதுதான் காரணம் என்பது ஏழுவயது எமிலிக்குத் தெரியவில்லை,
சிறிய அன்னையுடன் வந்த தமயன்கள் எமிலியை விடப் பெரியவர்கள். தாயின் குடிப்பழக்கத்தால் மிகவும் சீரழிவாக வளர்க்கப் பட்டவர்கள்.
சேட்டையும் விளையாட்டுமாக எமிலியின் உடம்பின் தடவத் தடைப்பட்ட சில பாகங்களைத் தடவ வந்தபோது எமிலி சிறுகுழந்தை, ஓடிப் போய் ஒழிந்து விடுவாள்.
சிறிய தாய் தன் மகன்களின் சேட்டைகளைப் பார்த்து வாய் விட்டுச் சிரிப்பாள்.
கல்லூரிப்படிப்பை முடித்து விட்டு ஒரு நாள் வீடு திரும்பும் போது எமிலியின் தமயன்கள் நல்ல பார்ட்டி ஒன்று வைத்துக் கொண்டு கூத்தடித்துக் கொண்டிருந்தார்கள்.
“”why don’t you join us” ஒருத்தன் வெறியில் உளறினான்.
“அவள் கத்தோலிக்க நாய்களுடன்தான் போவாள் போலும்” இன்னொருத்தன் இழுத்தபடி சொன்னான்.
ஐரிஸ் கத்தோலிக்கர் எல்லாம் I.R.A. யை ஆதரிப்பதாக பிரிட்டிஷ் மனிதர்கள் நினைப்பது சாதாரணம். I.R.A. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் எதிரி. இவளைக் கத்தோலிக்கனுடன் போகச் சொன்னவன் பிரிட்டிஷ் ராணுவ சேவையிலிருப்பவனாக இருக்கலாம்.
தன் வீட்டிலேயே மற்றவர்களால் அவமானப் படுவதை அவளாற் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சிறிய தாயைக் காணவில்லை. ஜின் அன்ட் ரொனிக் வாங்கப் போயிருப்பாளாக்கும்.
எமிலி வெறியில் உளறும் இந்த இளைஞர்களுக்குப் பதில் சொல்லாமல் தன் அறைக்குள் சென்றாள். தகப்பன் வழக்கம் போல் வீட்டில் இல்லை. அவர் எப்போதும் பிஸினஸ் விடயமாகப் போய்விட்டார்.
தனது தந்தை என்னவென்று தன் சிறிய தாயின் உறவை மேற் கொண்டார் என்று எமிலியால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
படிப்பு, அழகு, குடும்ப கௌரவம் நிறைந்த தாய்க்கும் எந்த நேரமும் போத்தலும் கையுமாக இருக்கும் சிறிய தாய்க்கும் தான் எத்தனை வித்தியாசம்?
அழகு வடிவுடன் மனைவியிருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டி தேவையா?
சிந்தனை எங்கோ பறக்க செய்து கொண்டிருந்தவள் காலடியோசை கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
சிறிய தாயின் மகனும் அவனுடன் அவனுடைய சினேகிதன் ஒருத்தனும் இவளைப் பார்த்து வாயெல்லாம் பல்லாக இளித்துக் கொண்டு நின்றார்கள்.
“என்ன வேணும்” எமிலி மிடுக்காகக் கேட்டாள்.
“நீ வேணும்” சினேகிதன் தள்ளாடியபடி சொன்னான்.
“சீ நாயே வெளியே போ” எமிலி சீறிவிழுந்தாள்.
“டேய் பிடியடா அவளை” சினேகிதன் அவளின் சிறிய தாயின் மகனுக்கு உத்தரவு போட்டான்.
வெறி பிடித்த மிருகங்கள் இருவர் இடையில் அகப்பட்ட புள்ளி மானாகத் திணறினாள் எமிலி. தன் வீட்டில் தன் கற்பு பறிபோவதற்குத் தன் சிறிய தாயின் மகனே உதவியா?
“உதவி உதவி” என்று அவள் போட்ட சத்தம் எத்தனை வீட்டுக்குக் கேட்டதோ அல்லது இறைவனுக்குத்தான் கேட்டதோ அடுத்த வீட்டுக்காரன் படபட வென்று கதவைத் தட்டவும் அவள் ஆடையைப் பற்றிய துச்சாதனன் பயத்துடன் பாய்ந்தோடி விட்டான்.
இரவிரவாக வீட்டை விட்டு வெளிக்கிட்டுச் சினேகிதி அறையில் போயிருந்து தன் விதியை நினைத்து அழுதாள்.
தாயற்ற வாழ்க்கை, தகப்பன் பாதுகாப்பற்ற சூழ்நிலை தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஒரு பதினேழு வயதுப் பெண்ணின் வாழ்க்கை தள்ளப்பட வேண்டுமா?
எந்தச் சூழ்நிலையிலும் எந்த ஆணிலும் நம்பிக்கை வைப்பதில்லை என்று முடிவு செய்து கொண்டாள். இந்த வைராக்கியம் ஆனந்தின் கெஞ்சலுக்கும் மசியவில்லை.
காதலுக்குத் தன்னைப் பறி கொடுத்துப் பின் அவன் பிடியில் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தை அவள் உண்டாக்கத் தயாராயில்லை.
ஆனந்துடன் இணையாய்த் திரிந்தது மிஸ்டர் ஸிம்ஸனை ஆத்திரம் கொள்ளச் செய்தது. “அப்படி ஒரு ஆங்கிலேயன் இல்லாமல் ஆசியனைப் பார்க்க வேண்டுமா” என்று மகளைத் திட்டினார்.
“என் சொந்த வீட்டில் உன் வைப்பாட்டியின் மகன் என்னைப் பலாத்காரம் செய்ய முனைந்தபோது வராத பாசம் இப்போது நான் எனக்குப் பிடித்த ஒருத்தனோடு வாழும்போது ஏன் எரிச்சலாக வருகிறது” எமிலி தகப்பனுடன் வாதாடினாள். அதன் பின் அவர்களின் உறவு கசந்து விட்டது. மகளும் தகப்பனும் உறவை அறுத்துக் கொண்டார்கள்.
அதன்பின் அவர் ரவிக்கு அனுப்பும் வாழ்த்து மடல்களும் அன்பளிப்புகளும் கூடிக் கொண்டு வந்தன. எத்தனையோ பேரிடம் சொல்லி ரவியை இரண்டொரு தரம் சந்தித்தார். பேரனில் உயிரை வைத்திருந்தார். மகளுக்கும் தகப்பனுக்குமுள்ள இடைவெளியால் மிஸ்டர் ஸிம்ஸன் ரவியுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருக்க முடியாமற் பண்ணிவிட்டது.
இப்போது தளர்ந்துபோன மனத்துடன் பேரனை அணைத்துக் கொண்டார் கிழவன். கிழவனையும் பேரனையும் தனியாக விட்டு விட்டு கொஞ்ச நேரம் வெளியேறினாள் எமிலி.
பார்பராவும் அலிஸனும் வந்து கொண்டிருந்தார்கள். பார்பராவின் விழிகள் எமிலியை எரிச்சலுடன் முறைத்தன. பார்பரா அலிஸனுடன் ஏதோ ரகசியம் பேசிக் கொண்டாள்.
அலிஸன் உடனடியாக எமிலியைக் பார்பராவுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
“உங்களை நேற்று டேவிட்டுடன் சந்தித்தேன் என்று நினைக்கிறேன்” எமிலி பார்பராவைப் பார்த்துச் சொன்னாள்.
பார்பராவின் முகத்தில் குறும்பு. குரூரமான குறும்பு, “உன்னை எப்போதோ டேவிட்டுடன் பார்த்திருக்கிறேனே” எத்தனை குத்தல் அந்த வார்த்தைகளில்.
எமிலியின் உடல் கூனிக் குறுகிற்று. இந்த பார்பரா சாதாரணமான பெண் அல்ல என்று அவள் மனம் சொல்லிற்று.
“என்ன சொல்கிறாய்” அலிஸன் வழக்கம்போற் தன் கீச்சுக் குரலிற் கேட்டாள்.
“டேவிட்டுடன் எமிலியை ஒரு றெஸ்ட்ரோண்டில் கண்டேன். அப்படித்தானே எமிலி” குழந்தைத் தனமாகக் கேட்டாள் பார்பரா”
ஆயிரம் தேள் ஒரேயடியாய்க் குத்திய வேதனை எமிலிக்கு. தன் புருஷனை நம்ப முடியாது என்று அலிஸனுடன் ஒப்பாரி வைக்கும்போது ஒன்றும் தெரியாமல் இருப்பதுபோல் இருந்தாளே இந்த எமிலி என்று அலிஸன் பதறப்போகிறாள்.
அலிஸனின் கண்களில் நெருப்புப் பொறி.
“என் புருஷனுடன் எப்போதிருந்து படுக்கிறாய்”
வார்த்தைகள் அவலட்சணமாய் வந்து விழுந்தன.
“அலிஸன் தயவுசெய்து என் விளக்கத்தைக் கேள்” எமிலி அவமானத்தால் குன்றிப் போனாள்.
அப்போதுதான் வந்து கொண்டிருந்த டேவிட் மூன்று பெண்களைக் கண்டதும் அவர்களின் முக பாவத்தைக் கண்டதும் என்ன நடந்திருக்கும் என்று ஒரு நிமிடத்தில் ஊகித்துக் கொண்டான்.
“அலிஸன் தயவுசெய்து சீன் போட வேண்டாம்” அவன் கெஞ்சினான்.
எமிலி பயங்கர வேகத்தில் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விட்டாள்.
“பார்பரா நீ செய்வது உனக்கே சரியாக இருக்கிறதா” ஆத்திரத்துடன் கத்தினான் டேவிட்.
“அட கோபத்தைப் பார்… கோபப்படவேண்டியது யாரோ கோபப்படுவது யாரோ” கிண்டலாகச் சொன்னாள் பார்பரா,
”பார்பரா உன்னுடைய சிறிய ஆசைக்கு இப்படி ஒரு குடும்பத்தைப் பழிவாங்கலாமா” அவன் இந்தக் கேள்வியைக் கேட்டு முடிப்பதற்கிடையில் அலிஸன் அழுது கொண்டு தன் மகன் இருக்கும் வார்ட்டுக்குப் போய்விட்டாள்.
“பார்பரா அலிஸன் ஒரு அவசரப் பிரயாணி. அவளை இப்படி ஏன் தூண்டி விடுகிறாய்” அவன் குரலில் ஆத்திரமும் அவமானமும்,
“நீங்கள் போடும் கூத்துக்கு ஒரு முடிவு வரவேண்டும், என் சினேகிதியின் வாழ்க்கையில் நிம்மதி வர வேண்டும் என்றுதான் நான் நேரடியாக விடயங்களைச் சொல்லுகிறேன்.”
“அஹா ஆஹா உன்னுடைய நடிப்புக்கு ஒஸ்கார் தரவேணும். பார்பரா உனக்கு இந்த உலகத்தில் யாருடைய இன்பதுன்பத்திலும் அக்கறையில்லை. உன்னுடைய உடல் இச்சையின் திருப்தி ஒன்றுதான் முக்கியம். உன்னுடன் கட்டிலுக்கு வர மறுத்த என்னைப் பழிவாங்க என் குடும்பத்தை நாசமாக்குவது உனக்கு நல்லதல்ல” டேவிட் ஆத்திரத்தில் கத்தினான்.
அவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்த இடம் ஆஸ்பத்திரி வராண்டா. போவோர் வருவோர் அதை அப்படி ஒன்றும் பிரமாதமாக எடுக்காவிட்டாலும் இவர்களின் வாக்குவாதத்தின் சில பகுதிகள் கேட்போரை ஆச்சரியப் படுத்தாமலிருக்க முடியாது.
“குடும்பமா, குடும்பமா? ஆஹா எவ்வளவு அக்கறையாகக் குடும்பத்தைப் பற்றி ஒப்பாரி வைக்கிறீர்கள். ஆசையாக எமிலியுடன் சுற்றித் திரிந்தபோது ஏன் இந்த குடும்ப தத்துவம் உங்கள் மரமண்டையில் ஏறவில்லை”
“முட்டாளப் பெண்ணே எமிலி நீ நினைப்பது போல் மலிவான தேவடியாளில்லை. மிகவும் சுதந்திர மனம் படைத்த புத்திசாலிப்பெண். அவள் உறவு நீ நினைப்பது போல் வெறும் உடல் இச்சைக்கு இரையான உறவல்ல”
“ஓகோ Intellectual Fucking” பார்பரா எக்காளமிட்டுச் சிரித்தாள்.
“சட் அப் யு பிளடி பிச்” டேவிட் அவ்விடத்தை விட்டு ஓட்டமும் நடையுமாகப் போனான்.
அலிஸன் இப்போது குழந்தை பீட்டரின் கட்டிலருகிலிருந்து ஓலம் வைத்துக் கொண்டிருப்பாள். அதே வார்ட்டில் எமிலியும் குழந்தையுடனிருக்கிறாள். அட கடவுளே என்ன சோதனையிது, பெருமூச்சுடன் நடந்தான் டேவிட்.
– தொடரும்…
– இந்த நாவல் 1997-1998 ஆம் ஆண்டுக்குரிய இலங்கை சாகித்திய அகாடமி பரிசைப் பெற்றது.
– வசந்தம் வந்து போய்விட்டது (நாவல்),முதற் பதிப்பு: டிசம்பர் 1997, குமரன் பதிப்பகம் , சென்னை.
![]() |
இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அம்மா என்றால் அன்பு..!
வளர்கவி
July 8, 2026
சங்கர்லால் வந்துவிட்டார்!
தமிழ்வாணன்
July 8, 2026
ஞானம்
கே.என்.சுவாமிநாதன்
July 8, 2026
