லெச்சுமி அக்கா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 12,196 
 
 

‘ஆஹா, எவ்வ‌ள‌வு பெரிய‌ த‌ப்புப் ப‌ண்ணிட்டோம். இத்த‌ன‌ பேர‌க் கூப்பிட்டு, அக்காவுக்கு ஒரு போன் கூட‌ போட்டு சொல்ல‌லையே !’ என‌ வ‌ழ‌க்க‌ம் போல‌ என் ம‌ற‌தியை நினைத்து வ‌ருந்தினேன்.

மதுரையில் இருந்த வரைக்கும் பக்கத்து வீட்டுக்காரங்க என்ற நினைப்பே இல்லாமல், கூடப் பிறந்த சகோதரியாய் நினைத்தவர் லெச்சுமி அக்கா.

வீட்டில ஏதாவது ப்ரச்சனை, இல்ல எங்களோடு சேர்ந்து விளையாட, இல்ல தீபாவளி, பொங்கல்னு எல்லாத்துக்கும் பொசுக்கு பொசுக்கென்று வந்து எங்க வீட்டில் ஒருத்தரா இருந்து அம்மாவிற்கு உதவியும் செய்வார்.

அப்புறம் படிப்பு முடிந்து அயலகம் பறந்தபோது, பெற்றோரும் ஊருக்கே குடி பெயர, அக்காவின் நினைப்பும் மெல்ல அகல ஆரம்பித்தது என்னில்.

எனது திருமணத்திற்கு வந்தபோது, “டேய் சுபி. கல்யாணத்துக்கு இந்த அக்காவ கூப்பிடக் கூட மறந்திட்ட, பரவால்ல, பரவால்ல. அடுத்த வருஷமே பிள்ளை பிறந்து, காது குத்துக்காவது கூப்பிடுவியா ?” என்று மணமேடையில் இடித்துச் சிரித்தார்.

ஏதோ பக்ஷி சிறகடித்து இந்த செய்தியை இப்போது நினைவுபடுத்த, அப்ப தான் புரிந்தது, அவர் எந்த நிகழ்ச்சிக்கு அழைக்க சொல்லியிருந்தாரோ, கரெக்டாக அதை மறந்தது.

‘போச்சு அவ்வளவு தான் ! இனி கூப்பிட்டா நல்லா இருக்குமா ? இப்ப சொன்னா கூட அவர் கிளம்பி வரவும் நேரம் ஆகுமே. வந்து ஒரு பிடி பிடிக்கப் போறாரே. இல்ல, வராம விட்டுட்டா … கடவுளே அப்படி அவர் சொல்லிடக் கூடாது ….’

‘என்ன ஆனாலும் பரவாயில்லை’ என்று அவர்கள் எண்ணிற்கு அழுத்தினேன். பதிலே இல்லை பல முறை !! கடவுளே, என்ன சோதனை இது. “ஏம்மா அக்கா நம்பர் சரிதானே ?!” என்று அம்மாவை நோக்குகையில் …

“லெச்சுமி வாம்மா …” என அக‌மகிழ்ந்து வரவேற்றார் அம்மா. திடுக்கிட்டுத் திரும்பி, வாசல் பக்கம் பார்த்தேன். ‘அதெல்லாம் நாங்க முன்னாடியே சொல்லிட்டோம்’ என்பது போல் அம்மாவின் பார்வை இருந்தது.

‘அமெரிக்கா ஐரோப்பானு போயி நீங்க தான் மாறீட்டீங்க. நாங்க அப்படியே தான் இருக்கோம் !!’ என்பது போல் கள்ளம் கபடமின்றி உள்ளே சென்று, ‘வாடா செல்லம்…’ என்று என் மகளைத் தூளியில் இருந்து அள்ளிய‌‌ அக்காவை அசைவற்று பார்த்து நின்றேன் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *