லட்சியக் காதல்




(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பங்குனி மாதத்துப் பூர்னிமையின் இரவு. சந்திர னுடைய படுக்கை அறையில் ஜன்னல் வழியாகப் பாய்ந்து வந்த நிலவு அவனுடைய படுக்கையின் மீது வியாபித்திருந்தது.
சந்திரனும், அவன் பின்னால் சாமளாவுமாக உள்ளே நுழைந்தார்கள். கையிலுள்ள வெற்றிலைத் தட்டை மேஜை மீது வைத்துவிட்டு “நிலாவைப் பார்த்தேளா, பட்டப் பகலாட்டுமா !” என்று உவகையுடன் கூறிவிட்டு ஸ்விட்சைப் போட்டாள் சாமளா.

அறையில் விளக்கு வெளிச்சம் பரவியது. படுக்கையில் சாய்ந்திருந்த சந்திரன் பலகணி வழியாகத் தெரியும் வெண்ணிலாவைப் பார்த்தபடி “விளக்கை அவித்து விடு சாமளா, நிலவு வெளிச்சமே போதும்” என்றான்.
“வெற்றிலை போட்டுக் கொள்ளுங்கள். அப்புறம் அவிக்கிறேன்” என்று கூறி சந்திரனுக்கு தாம்பூலம் மடித்துக் கொடுத்தாள்.
சந்திரனுடைய பார்வை ஒளி வீசும் சந்திர மண்டலத்தின் மீது தோய்ந்திருந்தது. கவனமின்றியே அவள் கொடுத்த பாக்குப் பொடியையும் வெற்றிலைச் சுருள்களையும் வாங்கி வாயில் போட்டுக் கொண்டான். “பைத்தியம் தான் பிடிச்சுப் போயிடப் போறது உங்களுக்கு” என்றாள் சாமளா.
சாமளாவின் வார்த்தைகளுக்கு பொருள் என்ன என்பது சந்திரனுக்கு அர்த்தமாகாமலில்லை. சற்றுப்பொறுத்து சாமளா வின் முகத்தைப் பார்த்து “வால்மீகிக்கும், காளிதாசனுக்கும், ரவீந்தரருக்கும் பிடித்த பைத்தியம் எனக்கும் பிடிக்காதா சாமளா!”” என்று ஏங்குகிறேன்! பிடிக்கவே காணோமே என்றான் இனிமையாக.
“போங்கள்! கோணல் கட்சி பேசுவதே உங்கள் வழக்கமாகப் போய் விட்டது! எங்க தாத்தா சொல்லிக் கேட்டிருக்கிறேன். நிலாவிலேயே திருஷ்டி செலுத்தி நிலாவிலேயே தூங்கினால் நிச்சயமாக பைத்தியம் பிடிக்குமாம் !” என்று மறுபடியும் புத்தி சொன்னாள் சாமளா.
“சரி, விளக்கை அவி முதலில் ” என்றான் சந்திரன்.
“எப்படியாவது போங்கள்- எனக்கென்ன ?” என்று சலித்துக் கொண்டு படக் கென்று விளக்குப் பொத்தானை அமுத்தி விட்டு, கீழே இறங்கிச் சென்றாள் சாமளா.
சந்திரன் மறுபடி வான் வெளியில் பார்வையைச் செலுத்தினான். அவன் மனதில் எண்ணங்கள் விரிந்தன. மாலையில் ரவீந்திரருடைய “ஊர்வசி ” என்ற காவியத்தைப் படித்தது அவன் நினைவின் கண் நின்றது !
ஊர்வசி !
அப்ஸரஸ்திரீ ! அழகின் அவதாரம் அவள்! அவளுடைய ரசனைகளையும், ரூபத்தையும், தன்மையையும், ஸஞ்சார வர்ணித்த ரவீந்திரரின் காவிய ஊர்வசியை உருவகப்படுத்திப் பார்க்க முயன்றான் சந்திரன் !
தன்னையும் சூழ்நிலையையும் மறந்து சிந்தனையில் ஒன்றி இருந்தான்!
எங்கோ வான் வெளியில் தொலைவில் ஊர்வசி ஆகாய வெளியில் நீந்திச் செல்வது போன்ற காட்சியைக் காண்மித்தது அவன் கற்பனை!
ஆஹா!
நிலாவையும் வானத்து மீனையும்
காற்றையும் நேர்ப்படவைத் தாங்கே
குலாவு மமுதக் குழம்பைக் குடித்தொரு
கோகுல வெறி பிடித்தோம்.
உலாவு மனச் சிறு புள்ளினை
எங்கணும் ஓட்டி மகிழ்ந்திடுவோம்.
பலாவின் கனிச்சுளை வண்டியிலோர்
வண்டு பாடுவதும் வியப்போ !
சந்திரனுக்கு நல்ல ராக ஞானம் உண்டு. இனிமையான குரலில் பாடி முடித்தது அவன் வாய். “ஊம், இந்தாங்கோ” என்று பால் டம்பளரை நீட்டினாள் சாமளா.
நினைவுலகிலிருந்து மீண்ட சந்திரன் அவள் கொடுத்த பாலை வாங்கி அருந்தி விட்டு டம்ளரைக் கொடுத்தான்.
“சாமளாம்பிகைக்கு ரொம்ப கோபம் போலிருக்கிறதே!” என்றான் விளையாட்டாக.
“இல்லையே” என்றாள் அவள் பதிலுக்கு.
“கோபம் தான் ! வா உட்காரு” என்று அவளை அருகி லிழுத்து உட்கார வைத்துக் கொண்டு “சகல ஜீவராசிகளை யும் ரஞ்சகப்படுத்தும் நிலவுத் தேவன் மீது உனக்கு ஏனிவ்வ ளவு அசூயை சாமளீ !” என்று அன்பொழுகக் கேட்டான் சந்திரன்.
சாமளா பதில் சொல்லவில்லை. மறுபக்கம் திரும்பிக் கொண்டாள்.
அவள் முகத்தைத் தன்புறமாகத் திருப்பினான் சந்திரன். அவள் கண்களில் நீர் நிறைந்திருந்தது! ஏன் என்பது போல சந்திரன் தன்னைப் பார்த்ததும் ‘என் அன்பை விட உங்களுக்கு நிலவுத் தேவன் தான் ஓசத்தி…” என்று மேலே பேச முடியாமல் நிறுத்தினாள் சாமளா. ஒரு நிமிஷ நேரத் திற்குப் பிறகு “சாமளா, கவலைப் படாதே. நீ தான் எனக்கு ஒசத்தி; நிலவுத்தேவனல்ல!” என்றான் புன்சிரிப்புடன்.
“ஆமாமா; ரொம்ப நிஜம் !”
“நிரூபித்துக் காட்டினால் சரிதானே ?”
சாமளாவின் அகத்தில் பிறந்த ஆனந்தம் முகத்தில் நிலவியது. இருந்தாலும் “பேசவாவது கற்றுக் கொண்டிருக் கிறீர்களே… என்னை ஏமாற்ற-!” என்று கோணலாகச் சிரித்தாள் சாமளா.
“குடலைக் கிழித்துக் காண்பித்தாலும், ‘இது வாழை நார், என்கிறவர்களை வைத்துக் கொண்டு எப்படி காலட்சேபம் செய்வது?”
“நான் அவ்வளவு பொல்லாதவள்; அப்படித்தானே ?’
“இல்லை! நல்ல ஹ்ருதயம் உன்னிடமிருப்பதால் தான் இது வரையில் எனக்கு பைத்தியம் பிடிக்காமலிருக்கிறது!” என்று சிரித்தான் சந்திரன்.
“பார்த்தீர்களா, பார்த்தீர்களா?” என்று பார்வையை வெட்டிக் கொண்டாள் சாமளா.
“இது கிடக்கிறது சாமளா, உனக்கு ஒரு நல்ல கதை சொல்லட்டுமா?” என்று அவளை அருகிலிழுத்தபடியே கேட்டான் சந்திரன்.
“கதையா, என்ன கதை ?” என்று கேட்டுக் கொண்டே வெற்றிலைத் தட்டை யெட்டி எடுத்து வெற்றிலை போட்டுக் கொள்ளுகிறீர்களா?” என்று கேட்டாள் சாமளா.
“வேண்டாம் என்றால் அதற்கொரு கோபம் வரும் உனக்கு!”
“பைத்தியம் என்கிறீர்கள் மொத்தத்தில்!”
“இல்லவே இல்லை, தெளிந்த மனமுள்ள விவேகி நீ என்பதை எத்தனையோ தடவை உனக்குச் சொல்லியாகி விட்டது!” என்று சிரித்தான்.
“சரி சரி” என்று கூறி சந்திரனுக்கும் வெற்றிலை கொடுத்து தானும் போட்டுக் கொண்டாள். தட்டை யெடுத்து வைத்து விட்டு “கதை என்றீர்களே என்னவோ, சொல்லுங் கள் என்றாள் சாமளா.
“அதுவா, சொல்லுகிறேன். நிஜக்கதை வேணுமா, பொய்க் கதை வேணுமா?”
“நிஜக்கதையே சொல்லுங்கள். பொய்க்கதை ஒன்றும் வேண்டாம்” என்றாள் கொஞ்சலாக.
”பொய்யே உனக்குப் பிடிக்காது. இல்லையா?” என்று சாமளாவைக் கேட்கும் போது சந்திரனுக்குக் குரல் கம்மியது. கலங்கும் தன் கண்களை சாமளா கவனித்து விடக் கூடாதே என்று மறுபுறம் திரும்பிக் கொண்டான். அவன் மனதில் பெரும் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
சந்திரன் வாய் திறவாமலிருந்ததைக் கண்ட சாமளா “சொன்னால் மட்டும் கோபம் வருகிறது…” என்றதும் சட் டென்று மனைவியின் புறம் திரும்பிப் பார்த்து,
“சாமளா” என்றான்.
“ஊம்”
“என் சினேகிதன் கணேசன் என்று ஒருவன்…”
“இம், கதையோ அது?”
“அவன் கதை தான் உனக்கு இப்பொழுது சொல்லப் போகிறேன்.”
“ஐயோ, பாவம்! கதையாகப் போய் விட்டதா உங்கள் சினேகிதர் வாழ்க்கை” என்று கண்களை அகலமாக்கி விழித்தாள் சாமளா,
“ஆமாம், சமுதயாயம் தன் சட்டப்படி அவன் நடக்க வில்லை என்று அவனை தண்டித்து விட்டது!”
“அப்படி யென்றால் ?”
“கேட்டுக் கொண்டே வா ; புரியும். கணேசனுடைய பாட்டனார் ஒரு புரோகிதர்…”
“உங்கள் பாட்டனார் மாதிரி ”
“சாஸ்திரி பிள்ளை டாக்டருக்குப் படித்து டாக்டரானார்… என்ன ?”
“உம்”
“டாக்டர் தன் பிள்ளையை அமெரிக்காவுக்கு அனுப்பினார்.”
“இது கதையா? ”
“ஏன் சுவாரசியப்பட வில்லையோ?”
சாமளா பதில் சொல்லாமல் அவன் முகத்தைப் பார்த்தாள்,
சந்திரன் அதை கவனிக்காமலில்லை. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் மேலே சொல்லிக்கொண்டே போனான் சந்திரன்.
“அமெரிக்காவிலிருந்து வந்து சென்னையில் இறங்கினான். அவன் வரவுக்காக ஆவலோடு காத்திருந்த அவனுடைய காலேஜ் காதலியை மணந்து கொண்டான்…”
சாமளாவின் மனத்தில் சுரீர் என்றது. அவள் முகம் கருத்தது. சந்திரன் மேலே சொல்லிக் கொண்டே போனான்.
அவள் சிறு பிராயத்திலேயே கலியாணமாகி விதந்துவாகிவிட்ட சிறுமி என்பது கணேசனுக்குத் தெரியும். காதலைவிட சீர்திருத்த முறையை அனுசரிக்க வேண்டும் என்ற தீவிர நோக்கத்துடன் தான் அந்தப் பெண்ணை மணந்து கொண்டான். கலியாணமான பிறகு கிரமமாகச் செய்தி எட்டிவிட்டது அவன் வீட்டாருக்கு.”
“அந்தப் பெண் பெயரென்ன ?”
“ஞாபகமில்லை…ஏன்?”
சாமளா பெரிதாகச் சிரித்தாள். “ஞாபகமில்லையா? எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது? ஆனால் அந்தப் பெண் ணுக்குத் தன் வரலாறு ஒரு வருஷத்திற்கு முன்புதான் தெரியும். அன்றிலிருந்து அவள் எப்படிப்பட்ட எதிரியுடன் போராடிக் கொண்டிருக்கிறாள் தெரியுமா ?” சந்திரன் சாமளாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். சாமளா நிறுத்திய பேச்சை மறுபடி தொடங்கி ‘இன்று அந்தப் பெண் வெற்றி பெற்றுவிட்டாள்!” என்றாள் கணீ ரென்று.
சந்திரன் சட்டென்று “எப்படி?” என்றான்.
“பெண்மையின் தன்மையின்படி!” சந்திரன் எழுந்து உட்கார்ந்து கொண்டு “கொஞ்சம் விவரமாகச் சொல்லக் கூடாதா?” என்றான்.
“நாம் ஒருவர் உள்ளத்தை மற்றவர் சுலபமாகப் படிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறோமே-வாயினால் அதைச் சொல்ல வேண்டுமா?”
சந்திரன் வலிக்கும் தன் நெஞ்சைக் கையால் அழுத்திப் பிடித்துக் கொண்டான்.
“சாமளா-நான் உன்னை இழக்கமாட்டேன்.”
“அதற்கென்ன செய்கிறது? விதியின் ஆட்சியில் அதன் கட்டளைப்படி தானே…”
“அதைப் பற்றி எனக்கு லட்சியமேயில்லை.”
“அதை நீங்கள் லட்சியம் செய்தே ஆகவேண்டும்!”
“மாட்டேன்! என் வீட்டாருக்கு என்னைத் தவிர மகன் மகள் எல்லோருமிருக்கிறார்கள். எனக்கு உன்னைத் தவிர யாருமேயில்லை…”
சந்திரன் இதைச் சொல்லும் போது சாமளாவின் இரு கரங்களை இறுக்கிப் பற்றிக் கொண்டான். சந்திரனுடைய கைகள் நடுங்குவதைக் கண்ட சாமளா நெஞ்சுருக “அன்பே, தாங்கள் இனி பெற்றோர் கட்டளைப்படி நடப்பதே…” என்றாள்.
சந்திரன் அவள் வாயைப்பொத்தினான்.
சாமளா அதை மெல்ல அகற்றிவிட்டு “என் மேல் உங்களுக்கு உண்மையாக ஆத்மார்த்தமான அன்பு இருப்பது நிஜமானால்…உங்கள் வாழ்வை சீர்குலைத்துக் கொள்ளக் கூடாது” என்றாள்.
“சீராக வாழ்வது என்பது எப்படி?” இடை மறித்துக் கேட்டான் சந்திரன்.
திணறினாள் சாமளா.
“சொல்லேன், உன்னைத் துறந்து விட்டால் என் வாழ்வு சீர் பெற்று விடுமா?” என்று உடைந்த குரலில் கேட்டான் சந்திரன்.
மறுபடியும் மௌனம் சாதித்தாள் சாமளா. சந்திரன் மீண்டும் பேசத் தொடங்கி “சாமளா, உன் வரலாறை உனக்குச் சொல்லும்படி – நீயாக என்னை விலகிவிட வேண் டும் என்ற உத்தேசத்தில் – செய்தது யார் என்பது தெரியுமா உனக்கு?” என்று கர்ஜித்தான் சந்திரன்.
சந்திரன் குரலிலிருந்து உள்ளுணர்ச்சி கண்டு நடுங்கிப் போனாள் சாமளா.
“அது யார் தெரியுமா?”
“யாராயிருந்தாலென்ன?” என்று மிக மிகத் தாழ்ந்த குரலில் சொன்னாள் சாமளா.
“அதில் தான் இருக்கிறது விசை! யார் என்பது தெரியுமா, தெரியாதா?” சந்திரனுடைய குரல் வர வர ஓங்குவதை கண்டாள் சாமளா.
“அதுதான் நானும் நினைத்தேன்-அந்த கிராதகன் யார் என்றால் உன் தம்பி…”
“என்ன?” என்று தீச்சுட்டவள் போல வீரிட்டாள் சாமளா.
“ஆமாம்,உன் தம்பி-என் தகப்பனார் இந்த இரண்டு பேர்களும் நம் உறவைத் துண்டிக்க ஒரு வருஷமாகப் பாடு படுகிறார்கள். அவர்கள் முயற்சி சாத்தியமாகப் போவதில்லை. நேற்று மாலை என் தகப்பனாருக்கு இதைப்பற்றி தெரிவித்து விட்டேன். ‘வீட்டு சொத்தில் உனக்கு பாத்தியம் கிடை யாது’ என்று பயமுறுத்தினார். ‘வேண்டாம்’ என்று விட் டேன். நாளைக்கு நாம் இதைவிட்டு வெளியேறிவிட வேண்டும்.”
“என் தொடர்பின் காரணமாக அல்லவா?”
“ஆம்!”
“அவ்வளவு தானே ?” என்று ஒரு நெடுமூச்சு விட்டாள் சாமளா.
“அவ்வளவே தான்! இங்கிருந்து நமக்கு ஒன்றுமே தேவையில்லை.”
“இருங்கள்,என்ன சத்தம் கீழே?”
“உங்கள் நியாயம் உங்களோடு இருக்கட்டும். அவன் வீட்டை விட்டுப் போகக்கூடாது.”
“அவனை நான் போகச் சொல்லவில்லையே!”
“அர்த்தமாகிறது. அவன் வேண்டுமானால் அவள் வேண்டும். என் குழந்தையை நான் இழக்க மாட்டேன்.”
“யார் இழக்கச் சொன்னா? போயேன் நீயும் அவனோடு!”
“ஏன் போகணும்? சொத்துக்கு அவன்தான் முதல் வாரிசு. பிதுரார்ஜிதம் – ஞாபகமிருக்கட்டும்.”
“அப்போ நான் வெளியே போக வேண்டியதுதான்!”
“அது உங்கள் இஷ்டம். என் குழந்தை அருமை எனக்கல்லவா தெரியும்! அவனைப் போகச் சொல்லிவிட்டு இங்கு நாம் இரண்டுபேரும் ‘ ஹாய் ‘னு இருக்க வேண்டுமா?”
“பரம்பரையா கியாதியோட இருந்த குடும்பத்திற்கு அனர்த்தம்..”
“குடும்பத்து கியாதி, உங்கள் பிடிவாதம், சாஸ்திர சம்மதம் இதெல்லாம் எனக்குப் பெரிதல்ல. என் வயிற்றில் பிறந்த குழந்தைகள் எனக்குப் பெரிது” என்று தன் தாய் அடிவயிற்றிலிருந்து கிளம்பிய ஆத்திரத்துடன் கத்தியது சந்திரன் காதில் விழுந்தது! “அம்மா” என்று நெடுமூச்செறிந்தான் சந்திரன்.
– உயிரின் அழைப்பு, முதற்பதிப்பு: 1966, சாரதி பிரசுரம், சென்னை.