ரிகர்ஸல்
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 22, 2022
பார்வையிட்டோர்: 7,539
(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காரைப் போர்டிகோவில் நிறுத்தினேன். நர்ஸிங்ஹோமின் சுற்றுப்புறம் பசுமையாய் இருந்தது. தென்னை மரங்கள் தோட்டக்காரனின் கார்டியன்ஷிப்பில் உயர்த்துகொண்டிருந்தன.
திறப்பு விழா தேதி சலவைக்கல்லில் ஆழமாய் இருந்தது.
ஒரு வருஷத்தில் நர்ஸிங் ஹோம் செங்கல் செங்கல்லாக, நோயாளிக்கு மேல் நோயாளியாக வளர்ந்து கொண்டிருந்தது. தரையில் மொஸைக் வழுக்கி விட்டது. வழக்கமான வாசனை மிக லேசாக இருந்தது.
முன் ஹாலில் பிரதான டாக்டரின் தந்தை ஜரிகை மாலையில் போட்டோவாக இருந்தார். எதிர்ப் புறத்தில் மூன்றடி உயர்த்தில் பித்தளைக் குத்துவிளக்கு எரிந்து கொண்டிருந்தது.
சுவரைப் பணக்காரக் குழந்தைகள் சிரிப்பில் ஆக்கிரமித்தன. கதவுகள் வார்னிஷ் பள பளப்பில் முகத்தைக் காட்டின. அடுத்த ஹாலில் சிவப்பு கார்பெட் நீண்டிருந்தது.
ரிஸப்ஷனிஸ்ட் நான்கைந்து போன்களில் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் பிளாஸ்டிக் எழுத்துக்களில் அங்கு பணிபுரியும் டாக்டர்களின் பெயர்கள் இருந்தன. இதுவரை என்னென்ன ஆபரேஷன்கள், எத்தனை எத்தனை என்று விவரங்கள் குறிக்கப்பட்டிருந்தன. டி அண்டு சி தான் மெஜாரிட்டியாய் பிரைஸ் வாங்கிக் கொண்டிருந்தது.
“மிஸ்” என்றேன்.
“எஸ்” என்றாள்.
“டாக்டரைப் பார்க்கணும்.”
“பேஷண்டா?” என்றாள்.
“இனிமேல்தான்” என்றேன்,
அவள் எலக்ட்ரானிக்ஸால் இயங்கும் பொம்மை போல் ஒரு செகண்ட் புன்னகைத்து வாபஸானாள்.
சில நிமிடங்கள் நகர்ந்தன.
ரிஸப்ஷனிஸ்ட் போன்களை வைத்துவிட்டு விரல்களைச் சொடுக்கிக் கொண்டாள்.
ஓரிரு நிமிடத்தில் இரண்டு நர்ஸ்கள் தொடர டாக்டர் வந்தார். ஒல்லியாக இருந்தார். தலையில் பத்து வருடத்துக்கு முன்பேயே முடி வாபஸ் வாங்கத் தொடங்கி இருக்க வேண்டும். முகத்தில் கடுமை இருந்தது. மீரை பட்டையாய் அழுத்தமாய்ப் பட்டாக்கத்தி பைரவனுக்கு இருப்பது போல் இருந்தது. அவரைத் தொடர்ந்து ஒரு லேடி டாக்டர்.
என் பார்வையைச் காமிரா போல முழுதாகத் திருப்பினேன். மிட் ஷாட்டிலிருந்து குளோஸப்புக்குக் கொண்டு வந்தேன்.
தலை முடியில் ஷாம்புவினால் பளபளப்பு, நெற்றியில் சின்னப் பொட்டு, புருவங்கா நீண்டு கருமையாய் இருந்தன. கண்களில் தெளிவு. பார்வையில் வயதுக்குரிய இங்கிதம். முகத்தில் பெண்மையும் செம்மையும் இரண்டறக் கலந்திருந்தன.
மிக அருகில் வந்ததும் என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தாள்.
எனக்கு முன்னால் இருந்த நோயாலிகள் உள்ளே போவதற்குத் தயாராயினர். நான் அவசரப்படவில்கள்.
“சிஸ்டர், இப்போப் போன லேடி டாக்டர் பேர் சொல்ல முடியுமா?”
“எதுக்கு?” என்று கேட்பது போலப் பார்த்துவிட்டுச் சொன்னாள் ரிஸப்ஷனிஸ்ட். ”
“சுமித்ரா’
“மிஸ்?”
“யெஸ்”
என் முறை வந்தபோது உள்ளே போனேன்.
டாக்டர் டேபிளில் இன்டர்காம் இருந்தது. டேபிளில் அவரின் தலை பிரகாசித்தது. ஸ்டெதஸ்லை ரெடியாகக் காதில் வைத்திருந்தார். பக்கத்து நாற்காலியில் சுமித்ரா. அவளின் முகத்தில் சிறு தவிப்பு இருந்தது. நான் போனதும் பேசிக் கொண்டிருந்ததற்க்குத் தொடரும் போட்டு நிறுத்தினார்கள்.
என்னைப் பார்த்ததும் டாக்டர் ”பிளீஸ் பீ ஸீட்டட்” என்றார். நான் லேடி டாக்டரைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்தேன்.
அப்போது இன்டர்காம் அழைத்தது.
டாக்டர் எடுத்துப் பேசினார்.
“ம்…இன்னும் டையமாகுமா?…இங்கே சுமித்ரா அர்ஜண்டாப் போகணும். ஆமா… நாலரை மணிக்கு வீட்டில் இருக்கணும்….பொண்ணு பார்க்க வராங்க…சீக்கிரமா வந்திடச் சொல்லு…”
நான் சுமித்ராவைப் பார்த்தேன்.
பெண் பார்க்க வருகிறார்களாம்.
“சுமித்ரா அரை மணிலே கார் வந்திடும். இல்லேன்னா டாக்சியிலே போயிடலாம்” என்றார் டாக்டர். அப்புறம் என் இருமலைப் பற்றி கேட்டுக் கொண்டு, “இருமினா கல் கல்லு சவுண்ட் வருதா? வூபிங் இருக்கா?” என்றார்.
“ரெண்டும் இருக்கு டாக்டர்”.
“ஈவினோபிலியாவாக இருக்கும். இப்போ இன்ஜக்ஷன் ஒண்ணு போடறேன். டெஸ்ட்டுக்கு எழுதித் தரேன். ரிஸல்ட் பார்த்திட்டு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கலாம். சுமித்ரா…நர்ஸ் பார்கவி எங்கே?”
“வந்திடுவா” என்றாள் சுமித்ரா.
“இன்ஜெக்ஷன் இவருக்குப்போட்டுடுங்க.”
நான் எதிர்பார்க்கவில்லை. சுமித்ராவின் பார்வையிலிருந்து அவளும் எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது.
நான் எழுந்து கொண்டேன்,
சுமித்ரா தடுப்புக்கு அந்தப் பக்கம் எழுந்து போனாள். நான் பின் தொடர்ந்தேன். சில வினாடிகளில் மருந்தை சிரிஞ்சில் ஏற்றி என் வலது தோளுக்குக் கீழ் ஊசியைச் செலுத்தினாள். மிக அருகில் நின்றதால் அவள் சுவாசம் என்னுள் கலந்தது.
“உங்க மஸல்ஸ் ரொம்ப ஹார்டா இருக்கு” என்றாள்.
“எக்ஸ்ஸஸைஸ்” என்றேன்.
“காரிலேயா வந்தீங்க?”
“ம்…”
ஊசி போட்ட இடத்தைப் பஞ்சால் தேய்த்து விட்டாள்.
“என் வீட்டுக்கு அர்ஜண்டாப் போகணும்”
“அதுக்கென்ன, வீட்டுல விட்டுட்டுப் போறேன்” என்றேன்.
“தாங்க்யூ” என்றாள்.
டாக்டரிடம் இருவரும் வந்தோம்.
“டாக்டர், இவரோட காரிலே போயிடறேன்” என்றாள் சுமித்ரா.
டாக்டர் எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்தார். ஒன்றும் பேசவில்லை.
“மிஸ்டர், நாளைக்கு வாங்க, வரும் போது டெஸ்ட் ரிசல்ட் கொண்டு வாங்க.”
“வர்றேன்” என்றேன்.
“சுமித்ராவைப் பத்திரமாய்க் கூட்டிட்டுப் போங்க.”
“போகிறேன்” என்றேன்.
“சுமித்ரா உங்க தெருவுக்குப் பக்கத்துத் தெருவிலேயே இறங்கிடுங்க. முன்பின் தெரியாத இவரோடு உங்க வீட்டு முன்னாலே எறங்கினா, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தப்பா நெனச்சுடுவாங்க..”
“அதுவும் சரிதான் டாக்டர். முன் யோசனைக்கு ரொம்ப நன்றி.”
“டாக்டர் வரட்டுமா?” என்றேன்.
“வாங்க.”
இருவரும் காரில் ஏறினோம். ரிவர்ஸில் வந்து போர்டிகோவில் இருந்து மீண்டும் கேட்டைத் தாண்டினேன்.
“வீட்டுக்கு ரொம்ப அவாரமா?”
“யெஸ். ஏன்?”
“டைம் இருந்தால் அன்னபூர்ணாவில் ஒரு காப்பி சாப்பிட்டுவிட்டுப் போகலாம்.”
“வண்டியை நிறுத்துங்க” என்று பதறினாள்.
“என்ன சொல்லிவிட்டேன்?”
“வண்டியை நிறுத்தணும், இல்லைன்னா குதித்துவிடுவேன்” என்று கதவைத் திறக்க முயற்சி செய்தாள்.
வண்டியை நிறுத்தினேன்.
“இறங்க வேண்டாம். உங்க வீட்டுக்கே போய்க் காப்பி சாப்பிடலாம்.”
“உங்க கூட நான் வரலை. இறங்கிக் கொள்கிறேன் பேசாமல் ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு போயிருப்பேன். நீங்க டீஸண்டா இருக்கீங்கன்னு காரில் ஏறினேன்”
“சுமித்ரா!” என்றேன். நான் பேர் சொல்லி அழைத்த விதம் அவளிடம் மாறுதலை ஏற்படுத்தியது.
“உங்களைப் பெண் பார்க்க வரது யார்னு தெரியுமா?”
“தெரியும்”
“யார்?”
“யாரா இருந்தா உங்களுக்கு என்ன?” வெடித்தாள்.
“நான்தான்” என்றேன்.
“என்னது?”
“நான்தான் மெட்ராஸிலிருந்து கோவை எக்ஸ்பிரஸில் வந்தேன். அப்பா, அம்மா எல்லோரும் உன் பெரியப்பா வீட்டில் தங்கி பிருந்துவிட்டு, இப்போது உங்க வீட்டுக்கு வந்திருப்பார்கள். நான் தான் உங்களை நர்ஸிங் ஹோமில் பார்க்கணும் என்று, இப்போது இருக்கிற இருமலைப் பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தேன்…”
“….”
“நம்பலையா?”
அந்தச் சமயம் எதிர்ப்புறத்தில் இருந்து டாக்ஸி ஒன்று வந்தது. எங்களைப் பார்த்ததும் உள்ளிருந்தவர் ஆச்சரியத்துடன் இறங்கினார்.
“என்னம்மா, இங்கே, மாப்பிள்ளையும் நீயும்….இவர் தான் மாப்பிள்ளை..உன்னைக் கூட்டிட்டுப் போகலாம்னு வந்தேன்.”
சுமித்ரா புன்னகைத்தாள். வேறு வழியில்லை.
வந்தவர் அவள் அப்பா.
கைகூப்பினேன்.
“நீங்க ரெண்டு பேரும் இங்கே எப்படி?”
“சொல்கிறேன்” என்றாள்.
எங்கள் கார் புறப்பட்டது. சுமித்ரா என்னுடன் மௌனமாய் முகம் சிவந்து, ஆனால் மனத்துக்குள் ரொம்பப் பேசிக் கொண்டு வந்தாள்.
– 03-02-1980