ராதிகாவின் கண்ணீர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 21, 2026
பார்வையிட்டோர்: 3,716 
 
 

(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பள்ளி அட்டென்ஷனில் நின்றது. கொடியேற்றி, வணக்கம் தெரிவித்ததும் பரிசளிப்பு விழா!

ராதிகாவின் கண்கள், மீண்டும் மீண்டும் வாசலையே நோக்கிச் சென்று, மீள முடியாமல் தவித்த பார்வையைக் கண்ணீர்த் திரையிட்டுத் தடுத்தன.

அம்மாவும் வரவில்லை! அப்பாவையும் காணோம்!

பரிசு வாங்குவது ராதிகாவுக்குப் புதியதல்ல என்றாலும். பரிசு வாங்கும் நேரம் தாய், தந்தையுடன் விழாவில் உட்காரும் மகிழ்ச்சியே தனி!

இது வரையிலும், அம்மா அப்பா இந்தப் பரிசளிப்பு விழாக்களுக்கு வரத் தவறினதே கிடையாது.

இன்று?

பரிசளிக்கவென்று வந்திருந்த ஜில்லா போலீஸ் தலைமை அதிகாரி கொடியேற்றி விட்டு, கம்பீரமாக ஒரு சல்யூட் செய்து விட்டு, மேடைக்குத் திரும்பினார்.

“ராதிகா! ஒரு பரிசு வாங்கினதும் திரும்ப வந்து உட்கார்ந்து விடாதே! நிறையப் பரிசுகள் உனக்கு வைத்திருக்கிறேம்மா! டி.ஐ.ஜி.யே அசந்து விடப் போகிறார் பாரு!” என்று கிளாஸ் டீச்சர் ராதிகாவிடம் செல்லமாகத் தட்டிச் சென்ற போது அவளுக்குப் படபடப்பு அதிகம் தான் ஆனது.

பரிசு வழங்கின போலீஸ் டி.ஐ.ஜி. கிளாஸ் டீச்சர் சொன்ன மாதிரி அசந்து தான் போய் விட்டார். படிப்புக்குப் பரிசு, பாட்டுக்குப் பரிசு, விளையாட்டுக்குப் பரிசு, சமூகப் பணிக்குப் பரிசு என்று ராதிகாவின் பரிசுக் குவியல் அதிகரித்துக் கொண்டே போனதும் அவர், “இனி வரும் வருடங்களில் ராதிகாவுக்குச் சிறப்புப் பரிசு கொடுத்துவிட்டு, மற்றவர்களுக்குத் தனியாகப் போட்டி நடத்தினால்தான் மற்றவர்களுக்குப் பரிசுகள் கிடைக்கும் போலத் தெரிகிறது.” என்று ‘ஜோக்’ அடித்தார்.

ஆனால், அம்மா அப்பா? ராதிகாவுக்குக் கிடைத்த அத்தனை பரிசுகள் அளித்த மகிழ்ச்சியை, அவளுடைய அம்மா, அப்பா வராதது அடியோடு அழித்து விட்டது. வந்தால் என்னவாம்!

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோரும் பாராட்டிச் சென்றனர். ஆசிரியைகள் ஒவ்வொருவராக வந்து கன்னத்தில் தட்டிப் பாராட்டினர். ஆனால் இவையெல்லாம் ராதிகாவின் மனதுக்கு ஒத்தடம் கொடுக்கப் பயன்பட வில்லை. வீட்டிற்குள் பரிசுகளுடன் நுழைந்த போது, பாட்டி பேப்பர் படித்துக் கொண்டிருந்தாள்.

“ராதுக்குட்டி! இத்தனை பிரைஸா? போன வருஷத்தை விட அதிகமா இருக்கே?” என்று பெருமைப் பட்டாள், பாட்டி.

ராதிகாவின் கண்ணில் அணை கட்டி நின்ற நீர் உடைத்துக் கொண்டு. கன்னத்தில் வழிந்ததைக் கண்ட பாட்டி. “ஏய்! ஏன் அழறே?” என்று தலையைக் கோதி விட்டாள்.

“வழக்கமா நான் பிரைஸ் வாங்கும் போதெல்லாம் அம்மா அப்பா வந்திருக்காங்களா இல்லையா?'”

“ஆமாம்! பாட்டிக்கு அழுகையின் காரணம் புரிந்து விட்டது.

“உங்கப்பாவுக்கு எத்தனையோ வேலைகள் ராதிகா! இன்னிக்கு வேலை விஷயமா வெளியில் போனவன் இன்னும் வர வில்லை. உங்கம்மா, பானுவை டாக்டரிடம் அழைச்சிட்டுப் போயிருக்காங்க…”

ராதிகாவின் பிஞ்சு மனசு சமாதானம் அடையவில்லை.

படுக்கையில் கிடந்து அழுதவள், ஏதோ சத்தம் கேட்டு விழித்தாள்.

அப்பாவும், அம்மாவும்தான்… ராதிகாவின் பரிசுப் பொருள்களையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ராதிகா தூங்குவது போல் பாசாங்கு செய்தாள்.

“ஏங்க! நாம்ப ராதிகாவுடன் பிரைஸ் விழாவுக்குப் போகாததனால், அவளுக்கு ரொம்பவருத்தமாம்! உங்க அம்மா சொன்னாங்க…”

அப்பா, “ஏன்? நமக்கு மட்டும் வருத்தம் இல்லையா?” என்று அம்மாவிடம் திருப்பினார் கேள்வியை.

“ஆமாம்! ஆனால்…”

” இதோ பாரு கமலா! ராதிகா பிரைஸ் வாங்கறது நமக்கு மகிழ்ச்சிதான். ஆனா போன வருஷம் பானு இந்த மாதிரி படுத்த படுக்கையாய் இல்லியே. முன்னெல்லாம் பானுவும், ராதுவும் சேர்ந்து போய்ப் பரிசுகள் பெற்று வரும் போது நமக்கு சந்தோஷமாயிருந்தது. இப்போ?…” துக்கம் தொண்டையை அடைக்க ‘போலியோவில்’ தாக்குண்டு விழுந்து கிடந்த பண்ணுவாய் ஜாடை காட்டினார் கைலாசம்- பானு, ராதிகாவின் அப்பா.

“அது சரிங்க! அதுக்காக ராது பிரைஸ் வாங்கக் கூடாதுன்னு சட்டமா?” என்று யதார்த்தமாகக் கேட்டாள் கமலா.

“அப்படியில்லை கமலா. ராது பிரைஸ் வாங்குவதை நாம் ரொம்பவும் கொண்டாடினால், பானுவுக்கு உடல் நிலை, மன நிலை இன்னும் மோசமாகும். நம்மால் வாங்க முடியலியே யென்று ஒரு ஆதங்கம் பொறாமையா மாறும். அக்கா தங்கைக்குள் மன அளவில் வெறுப்பு ஏற்படலாம். அதுனாலதான் இன்னிக்கு ராதுவின் விழாவிற்கு நாம் யாரும் போக வேண்டாமன்னு-தீர்மானம் பண்ணினேன். ராதுவைத் தனியாகப் பாராட்டினால் அவளுக்கும் உற்சாகம். பானுவும் ராது பரிசு பெற்ற நிகழ்ச்சியை சாதாரணமாகத் தான் எடுத்துக் கொள்வாள். வருடம் செல்லச் செல்ல இருவருக்கும் பழகிவிடும்.” கைலாசம் நிறுத்திவிட்டு “புரிந்ததா?” என்று கமலாவிடம் கேட்டார்.

“அப்பா… அம்மா தவறாக நினைத்து விட்டேன். என் சுயநலத்தில், தங்கை பானுவின் கஷ்டத்தையே நினைக்க மறந்தேன் நான். இப்போது புரிந்தது என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டு, நிறைவுடன் திரும்பப் படுத்தாள், ராதிகா.\

– பூந்தளிர், டிசம்பர் 1986.

என்.சந்திரசேகரன் சந்திரசேகரன் (நரசிம்மன்) அவர்கள் புகழ்பெற்ற தென்னிந்திய இந்து பிராமண வழக்கறிஞர்கள் குடும்பத்தில் அரியலூரில் பிறந்தார். மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம்(1976) பெற்று சமூக விஞ்ஞானி ஆவதற்குத் தொடர்ந்தார். கல்லூரியின் சிறந்த ஆல்ரவுண்ட் மாணவருக்கான டாக்டர்.எம்.நஞ்சுண்டராவ் தங்கப் பதக்கம் வென்றார். பார்வை: நான் என்னை ஒரு தலைவர், வழிகாட்டி, ஆலோசகர், வழி கண்டுபிடிப்பாளர், பிரச்சனை தீர்வு காண்பவர், பேச்சுவார்த்தை நடத்துபவர், ஆராய்ச்சியாளர், பொருளாதார…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *