ராஜஸ்தானில் ஒரு செவ்வாய் கிரகம்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: July 14, 2024
பார்வையிட்டோர்: 3,815 
 
 

செவ்வாய் கிரக சிமுலேஷன் (simulation) திட்டத்தின் கடைசி நாள் அது. நீண்ட நாட்கள் செவ்வாய் கிரகத்தில் தனிமையில் இருந்தால் அது மனிதர்களை எப்படி பாதிக்கும் என்பதைக் கண்டறிய உருவாக்கப்பட்ட திட்டம் அது.

வீண்வெளி வீரரான ராமச்சந்திரன் கடந்த 256 நாட்கள் ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தில் செவ்வாய் கிரகம் போலவே உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பில் வசித்து வந்தார். செவ்வாய் கிரகத்தில் இருப்பதாகவே பாவித்து நாட்களை கழித்தார். பல்வேறு விதமான சோதனைகளை அங்கு செய்தார். தாவரங்களை வளர்த்தார். சிறு குடில்களை எழுப்பினார். இஸ்ரோ தலைமையகத்தில் இருக்கும் எங்களுடன் அவ்வப்போது இமெயிலில் தொடர்பு கொண்டார். வேண்டுமென்றே முப்பது நிமிடங்களை சேர்த்ததனால் ஒவ்வொரு இமெயிலும் தாமதமாக வந்து கொண்டிருந்தது – செவ்வாய் கிரகத்திலிருந்து வருவது போலவே. தான் ராஜஸ்தானில் இருப்பதாகவே அவர் இமெயிலில் காட்டிக் கொள்ளவில்லை. நாங்களும் அவர் ராஜஸ்தானில் இருப்பதாக காட்டிக் கொள்ளவில்லை. செவ்வாய் கிரகத்தில் அவர் இருப்பது போலவே பாவித்தோம்.

எங்களுடைய மிகப் பெரிய கவலை தனிமை எப்படி ராமச்சந்திரனின் மனதைப் பாதிக்கும் என்பது தான். 256 நாட்கள் ஒரு பாலைவனத்தில் எந்த மனிதர்களையும் பார்க்காது அரை ஏக்கர் வட்டத்தில் பொழுதைக் கழிப்பது என்பது மிகக் கடினம். போன வருடம் இதே திட்டத்தில் பங்கேற்றவர் கிட்டத்தட்ட பைத்தியம் பிடிக்கும் நிலைக்குப் போய், நான்கே மாதங்களில் திட்டத்தைக் கை விட வேண்டியதாயிற்று!

ஆனால் நாங்கள் பயந்தபடி ஏதும் நடக்கவில்லை இந்த முறை. ராமச்சந்திரன் அவ்வப்போது இமெயிலில் தான் தனியே இருப்பது பற்றி சலித்துக் கொண்டாலும், பெரும்பாலான சமயங்களில் உற்சாகமாவே இருந்தார். செவ்வாய் கிரகத்தில் (அதாவது ராஜஸ்தானில்) தான் செய்யும் சோதனைகள் பற்றியும் அங்கு அவர் கண்டறிந்த சில உண்மைகள் பற்றியும் விரிவாக எங்களுடன் இமெயிலில் பகிர்ந்து கொண்டார். அவர் மன நலம் சிதைந்த அறிகுறி ஏதும் அவர் இமெயிலில் தென்படவில்லை. அவர் மன நலம், உடல் நலம் இரண்டுமே மிக ஆரோக்கியத்துடன் இருந்தன.

கடைசி நாளன்று சிமுலேஷன் திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக ராமச்சந்திரனக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு இமெயில் அனுப்பினேன்.

அவரிடமிருந்து வந்த பதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது:

“சிமுலேஷனா? ஹாஹா, நல்லதொரு நகைச்சுவை! திட்டமிட்டபடி நாளை செவ்வாய் கிரகத்தில் இருந்து புறப்பட்டு விடுவேன். ஆறு மாதம் கழித்து பூமி வந்து சேருவேன். உங்கள் எல்லாரையும் மறுபடி சந்திக்க மிக ஆவலாக இருக்கிறேன். குட் பை!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *