ராங்கி – ஒரு பக்க கதை





ஜான்சியின் மகள் தனது குழந்தைகளுடன் கோடை விடுமுறையில் தாய் வீட்டுக்கு வருகிறாள் என்றதும், மருமகள் சாந்தி தனது அம்மா வீட்டுக்கு கிளம்பிவிட்டாள். இது போல் சாந்தியின் பல செயல்கள் ஜான்சிக்கு கடுப்பை ஏற்படுத்தியது.
அப்போது புரோக்கர் பெரியசாமி அங்கு வந்தார். என்னய்யா என் பையனுக்கு பெண் பார்த்து கொடுத்திருக்கே? சாந்தி சரியான ராங்கியா இருப்பா போலிருக்கே என்றார்.
அவசரப்பட்டு பேசாதீங்கம்மா நீங்க என்ன கேட்டீங்க. அம்பது பவுன் நகை, அம்பதாயிரம் ரூபாய் ரொக்கம். டூ வீலர், வாஷிங்மெஷின், பிரிட்ஜ் இதெல்லாம் வேணும்னு கேட்டீங்க. நீங்க கேட்டதெல்லாம் அவங்க கொடுத்துட்டாங்க.
எனக்கு காசு பணம் வேண்டாம். நல்ல குடும்பத்தில் நல்ல குணம் உள்ள பெண்தான் வேணும்னு கேட்டீங்களா? யோசனை பண்ணிப் பாருங்க.
பொரிந்து தள்ளினார் பெரியசாமி.
-எஸ்.முகம்மது யூசுப் (ஏப்ரல் 2011)