யார் முதல்வன்?




பிரபல கம்பெனியின் வளாக தேர்வு மையத்தில் பாலன் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தான். ஒரே ஒரு போஸ்ட். சுளையாக சம்பளம். முதல் வடிக்கட்டுக்கு பிறகு 100 பேர் அடுத்த நிலையான போட்டித் தேர்வுக்கு தயாராக இருந்தனர்.

தேர்வு அலுவலர் தோன்றியதும் ஹாலில் இருந்த கசமுசா சப்தங்கள் அடங்கியது. அலுவலர் மைக்கில் உரக்க ” உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் . இந்த தேர்வு முறை வழக்கத்துக்கு மாறானது. ஓபன் புக் தேர்வின் மறு வடிவம் இது. உங்கள் முன்னாள் உள்ள லேப்டாப்பில் இணையதள வசதி உண்டு. அதை பயன் படுத்தி பதில் கண்டுப் பிடித்து எழுதலாம். 150 வினாக்கள். 150 நிமிடம். தேர்வு முடிந்ததும் பக்கத்து ஹாலில் காத்து இருக்கவும். அரை மணியில் உங்களில் யார் இந்த தேர்வில் முதல்வன் என்று அறிவிப்போம். “
தேர்வு முடிந்து வெளி வந்த எல்லோர் முகத்திலும் ஒரு நிம்மதி காணப் பட்டது. ஒரு சிலரில் அதிகமாகவே மகிழ்ச்சி தென் பட்டது. எல்லோரும் இன்னொரு ஹாலுக்கு வந்து அவர் அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். நினைத்ததை விட தேர்வு எளிதாக இருந்தது ஒரு விதத்தில் கவலை அளிப்பதும் கூட. யாருக்கு முதல் இடம் கிடைக்கும்? இல்லை, இது முன்னரே யாருக்கு என்று முடிவு செய்ய பட்டதா?. எல்லோர் மனங்களில் வகை வகையான எண்ணங்கள். 30 நிமிடம் கழித்து அதே தேர்வு அலுவலர் ஹாலில் நுழைய, மறுபடியும் அமைதி சூழ ஆரம்பித்தது. இதயங்கள் பட படக்கச் செயதன.
தேர்வு அலுவலர் மைக்கில் தோன்றி பேச ஆரம்பித்தார். “பத்தாயிரம் நபர்கள் வடிகட்டப் பட்டு நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். இந்த நூறு நபர்களில் ஒரு நபர் மட்டுமே நாங்கள் வேண்டுவது. ஆனால் 100ல் 9 பேர்கள் முதன்மை மதிப்பெண்கள் பெற்றுள்ளவர்கள். ஒன்பதில் ஒருவரை தேர்வு செய்வது எங்களுக்கு அது சவாலாக இருந்தது. உங்கள் தேர்வின் போது நீங்கள் எத்தனை முறை கூகிள் சர்ச்-யை யூஸ் பண்ணி பதில் கண்டு பிடித்துள்ளீர்கள் என்று அலசித்தோம். அதிக மதிப்பெண் பெற்றவர்களில் ஒருவர் மட்டும் இரண்டே தடவை இன்டர்நெட்டின் உதவியை நாடி உள்ளார். தன்னம்பிக்கையின் சிகரமாக அவர் உள்ளார். எனவே அவர் தான் உங்களில் முதல்வன். வாழ்த்துக்கள், மிஸ்டர் பாலன் அவர்களே.”
பாலன் எழுந்து கொள்ள ஹால் ஆர்ப்பரித்தது.
– குவிகம் மின்னிதழ் ஜனவரி 15, 2023