பிள்ளையார் துணைவன்
கதையாசிரியர்: முத்தமிழ்ப்பித்தன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: June 17, 2026
பார்வையிட்டோர்: 496

பதினைந்து நாட்களுக்கு முன்பு:
காலை உணவை முடித்துவிட்டு, பேராசிரியர் மூர்த்தி அவரது வீட்டின் திண்ணைப் பகுதிக்கு வந்து, சாய்வு நாற்காலியில் சாய்வாக அமர்ந்தார். திண்ணையில் கிடந்த அன்றைய தினமணியை எடுத்து அதில் உள்ள செய்திகளை கொஞ்சம் சத்தமாக வாய் விட்டு வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மகன் நாவுக்கரசும், பக்கத்து வீட்டுப் பையன் மாரிமுத்துவும் அருகில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அன்று விடுமுறை.
“நேற்று இரவு எலிகள் கடித்து இருவர் கவலைக்கிடம். மருத்துவ மனையில் அவசரப் பிரிவில் அனுமதி” இந்தச் செய்தியை கேட்டுக் கொண்டிருந்த நாவுக்கரசு தனது தந்தையிடம் கேட்டான்,
“அப்பா எலி விநாயகரோட வாகனம் தானே பின்ன ஏன் அது நம்மள கடிச்சி வைக்குது?” என்றான்.
“அது விநாயகரோட தப்பும் இல்ல; எலியோட தப்பும் இல்ல; நம்மளோட தப்பு. நாம வீட்டை சுத்தமா வச்சிருந்தா எலிகள் வராது. அது நம்மள விட புத்திசாலி. நாம வீட்ட நித்தமும் இரண்டு வேலையும் கூட்டி சுத்தமா வச்சுக்கணும். அப்புறம் வீட்ல எந்த அடைசலும் இல்லாம பாத்துக்கணும். வீட்ல தேவையில்லாத பொருள்களை கண்ணா பின்னான்னு வாங்கிப் போட்டு வீட்டை குப்பக் கூளமா வச்சுக்கிட்டா எலிகள் தாராளமா வந்துகிட்டு தான் இருக்கும் “இப்படி சொல்லிவிட்டு பேராசிரியர் ஒரு குவளை தண்ணீரைக் குடித்தார். பின்னர் அவர் பேச்சைத் தொடர்ந்தார்.
“வாரத்துக்கு மூணு நாளைக்கு தூபக்கால்ல சாம்பிராணியைப் போட்டு வீடு முழுக்கக் காட்டணும் அந்த வாடைக்கு எலிகள் வராது. அப்புறம் வீட்ல பழங்கள் காய்கறிகளை பத்திரமா கூண்டுகளில் வைக்கணும். முன்னாடி எல்லாம் நம்ம வீடுகள்ல, உரின்னு ஒன்னு இருக்கும் அதுல மோர், தயிர் வச்சிருப்பாங்க. அது மாதிரி நாம காய்கறிகளையும் கூண்டுகள்ல வைத்து உறி மாதிரி தொங்கவிடணும்”
“சரிப்பா ஏன் விநாயகர் போயும் போயும் எலிய தன்னோட வாகனமா வச்சிருக்காரு. நம்மள மாதிரி ராயல் என்ஃபீல்ட் மாதிரியான கம்பீரமான வாகனத்தை அவர் ஏன் வச்சுக்கல?”
“விநாயகர் உலகம் முழுதும் சுத்துறவரு. ராயல் என்ஃபீல்ட் வாகனத்துல அவரு சுத்துனா பெட்ரோலுக்கு அவர் எங்க போவாரு? யார்ட்ட போயி கொள்ளை அடிக்க முடியும்? விநாயகர் எளிமையானவர் மட்டுமல்ல. சிக்கனமானவரும் கூட. அது மட்டுமில்ல வாகனத்துலயோ சிற்றுந்தலயோ போனா சுற்றுப்புறம் நச்சுத்தன்மை ஆயிடும். எலினா அந்தத் தொல்லை எல்லாம் வராது. மேலும் எலின்னா அவர் சொன்னதக் கேட்டுக்கிட்டு எங்கயும் அவரை இழுத்துக்கிட்டு போகும். செலவும் மிச்சமாகும். இந்த பூமியில இருக்கிறவங்க எல்லாம் நச்சுக் காத்து பாதிப்பு இல்லாம நல்லா இருப்பாங்க.”
“சரிப்பா விநாயகர் அவ்வளவு பெரிய உருவம். ஆனால் எலி ரொம்பச் சின்ன உருவம். அந்த எலி எப்படி அவ்ளோ பெரிய உருவத்தை தாங்கிகிட்டு இழுத்துகிட்டு போக முடியும்? இது சுத்த அபத்தமா இல்லையா?”
“நாவுக்கரசு நீ ராமானுஜரோட அத்வைதக் கொள்கையை கேள்விப்பட்டிருக்கியா?”
“அதெல்லாம் எனக்குத் தெரியாதுப்பா”
“இறைவனும் ஆன்மாவும் ஒன்னுதான் அப்படிங்கறது தான் அத்வைதம்.”
“எனக்கு புரியலப்பா. கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க.”
“அதாவது நம்ம உயிர் மாதிரி தான் இந்த ஆன்மாவும். ஆனா அது உயிரை விடப் பெருசு. அதிக சக்தி வாய்ந்தது. நம்ம உயிர் நம்ம உடம்புக்கு உள்ளே
இருந்து நம்மள இயக்குது. ஆன்மா நம்மள வெளியிலிருந்தும் இயக்கும். அப்பப்ப உள்ளுக்குள்ள நுழைஞ்சும் நம்மள இயக்க்கும்.”
“நம்ம உயிரை விட ஆன்மா பெருசு. சக்தி வாய்ந்ததுன்னு சொல்றீங்க. ஆனா அது நம்ம உடம்புக்குள்ள எப்படி நுழைய முடியுது?”
“நாம உயிர் வாழ நமக்கு உயிர் காற்று எனும் ஆக்சிஜன் முக்கியம் இல்லையா? அது இல்லன்னா நாம உயிரோடு இருக்க முடியாது. அப்படிப்பட்ட உயிர் காற்று ஒவ்வொரு நொடியும் நம்ம உடம்புக்குள்ள போயிட்டு வந்துட்டுத்தானே இருக்கு. அது மாதிரிதான் இந்த ஆன்மாவும் காத்து மாதிரி போயிட்டு வந்துட்டு இருக்கு. அதை நாம பொறுமையா இருந்து கவனிச்சாதான் அது புரியும். அந்த ஆன்மாவும் காத்து மாதிரி லேசானது என்கிறது உனக்கு புரியுதா அரசு?”
“இல்லப்பா நான் கேட்ட கேள்விய விட்டுட்டு நீங்க எங்கேயோ வேறப் பக்கம் போற மாதிரி தெரியுது. ஆன்மா லேசா இருந்தா என்ன கனமா இருந்தா என்ன? நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லுங்க? இவ்வளவு சின்ன எலி, அவ்ளோ பெரிய விநாயகர எப்படி இழுத்துகிட்டோ, சுமந்துகிட்டோ போக முடியும்? அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க”
“நாவுக்கரசு நான் ஒன்னும் வேற பக்கம் போகல உனக்கு புரியணும்கிறதுக்காக சில விஷயங்களை சொல்ல வேண்டியதாக இருக்கு. ராமானுஜரின் அத்வைத கொள்கைப்படி ஆன்மாவும் இறைவனும் ஒன்றுதானே? விநாயகர் யாரு கடவுள்; அதாவது இறைவன்.
அப்ப அவரும் ஆன்மாவும் ஒன்னு தானே? ஆன்மா லேசானது என்றால் இறைவனான விநாயகரும் லேசா தானே இருக்க முடியும். அப்படி லேசா இருக்கிற ஆன்மாவை இறைவனை விநாயகரை இந்த எலி இழுத்துகிட்டு போக முடியும் தானே?”
“எனக்கு மயக்கம் வர்ர மாதிரி இருக்குப்பா. நான் உள்ள போறேன்.” என்று சொல்லிவிட்டு நாவுக்கரசு வீட்டிற்குள் நுழைய மாரிமுத்து அவனது வீட்டுப் பக்கம் சென்றான். பேராசிரியர் மூர்த்தி அருகில் கிடந்த
தினமணி செய்தித்தாளில், அதன் ஆசிரியர் வைத்தியநாதன் அவர்களின் ‘கலா ரசிகனை’ வாசிக்க ஆரம்பித்தார்.
பத்து நாட்களுக்கு முன்பு :
தனியார் கல்லூரி ஒன்றில் விலங்கியல் பேராசிரியராக இருக்கும் மூர்த்தி, காலை உணவை முடித்த பிறகு அவரது வீட்டுத் திண்ணையில் சிறிய எழுது மேசைக்கு முன்பு, சம்மனமிட்டு அமர்ந்தவாறு, சில குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தார். பேராசிரியரின் தந்தை ஒரு மேம்பட்ட விவசாயியாக இருந்தவர்.
திருச்சி வானொலி நிலையத்தில் தொன்னூறுகளில், துகிலி சி சுப்பிரமணியம் மற்றும் வான்மதி கண்ணன் போன்றவர்கள், உழவர் உலகம் நிகழ்ச்சியில், அவர்கள் சில வேளாண் நிபுணர்களுடனும் சில விவசாயிகளுடனும் எலிகள் ஒழிப்பு பற்றி நடத்திய நேர்காணல்கள், கலந்துரையாடல்கள் பற்றிய பேராசிரியரின் தந்தை எழுதி வைத்திருந்த பழைய குறிப்புகளைத் தேடியெடுத்து, அவற்றிலிருந்து தேவையான சில முக்கிய குறிப்புகளை எடுத்து, அவற்றை தனது சிக்காகோ உரைக்கான குறிப்பேட்டில் இணைத்தும், தொகுத்தும் எழுதிக் கொண்டிருந்தார்.
ஒரு வாரத்திற்கு முன்பு:
காலையில் தினமணி செய்தித்தாளை பேராசிரியர் வாசித்துக் கொண்டிருந்த போது அவரது மகன் வந்தான்.
“அப்பா எலிகெல்லாம் கோயிலா இருக்கு?”என்று சந்தேகம் கலந்த வியப்புடன் கேட்டான்
“ ஆமாண்டா அரசு”
“எங்கே போய் அந்த கோயில் இருக்கு?”
“அந்தக் கோயில் ராஜஸ்தான்ல பிர்காணிக்கு பக்கத்துல தேஷ் நக் என்ற இடத்துல இருக்கு. அது உண்மையிலேயே கர்னி மாதா கோயில். அங்க ஆயிரக்கணக்கான எலிகள் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும்
சுத்திக்கிட்டு இருக்கும். அந்த எலிகள் அந்த கோயிலை விட்டு வேற எங்கேயும் வெளில போகாது.”
“அது எப்படிப்பா வெளியில் போகாம இருக்கும்? அதுங்கல என்ன கூண்டுலயா வச்சிருக்காங்க? திறந்து கிடக்கிற கோயில்ல தானே அதுங்க இருக்கு. அப்ப எப்படி வெளியில வராம இருக்க முடியும்? ”
“அந்த எலிகள் வெளியில போக வேண்டிய அவசியம் இருந்தால் தானே போகும்.? பொதுவா எலிகள் நம்ம வீட்டுக்கு பெரும்பாலும் ஏன் வருது தெரியுமா? தண்ணீர் எங்காவது இருக்குதான்னு பாக்கதான் அது வரும். அதுக்கு சாப்பாடு எல்லாம் ரொம்ப தேவை இல்லை. தண்ணிதான் அதிகம் தேவைப்படும். அதனால அந்த கோவில்ல ரெண்டு மூணு இடத்தில நம்ம ஊரு இருப்பு சட்டி மாதிரி பெரிய குழிவான பாத்திரத்துல தண்ணிய வச்சிருக்காங்க. அது தாகம் எடுக்கும் போதெல்லாம் சந்தோசமா வந்து தண்ணிய குடிச்சிட்டு போயிடும்.”
“நீங்க சொல்றது வேடிக்கையாள இருக்கு. சரி அந்த எலிகள் பசிச்சா என்ன பண்ணும்? சாப்பாட்டுக்கு கோவில் நிர்வாகம் என்ன பண்ணி இருக்காங்க, சொல்லுங்க?”
“ அந்த எலிகளுக்கு தேவையான பால், தண்ணி எல்லாம் கோவில் உள்ளேயே ரெண்டு மூணு இடத்தில வச்சிருக்காங்க. அந்த எலிகள் அந்த பால் இருக்கிற அகலமான பாத்திரத்தின் மேல வரிசையா நின்னுகிட்டு உடம்பை சாச்சு வச்சுக்கிட்டு எல்லாம் பொறுமையா குடிச்சிட்டு போயிடும். அந்தக் காட்சி காணக் கிடைக்காத அருமையான காட்சி ஒவ்வொரு எலியும் கருப்பா நல்ல பளபளப்பாக இருக்கும்.”
“ சரிப்பா அந்த எலிகள் அங்க வர்றவங்களை கடிக்காதா?”
“ அந்த எலிகள் அங்க வர்றவங்க யாரையும் கடிக்காது. ஏன்னா அந்த எலிகளுக்கு வைக்கிற பால் சுத்தமான பால். நாம இங்க பயன்படுத்துற வீணாப்போன நெகிழிப்பை பால் மாதிரி கிடையாது. தண்ணியும்
சுத்தமான தண்ணி. நம்ம பயன்படுத்துற சுத்திகரிக்கப்பட்ட தண்ணி மாதிரி ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனப்படாத வெத்து தண்ணி கிடையாது. சுத்தமான பாலை குடிச்சிட்டு வளரதுனால, அந்த எலிகளும் பசு மாடு மாதிரி பதவுசா அமைதியா சாந்தமா இருக்குது. அந்த எலிகளுக்கு அவங்க நெகிழிப்பை பால ஊத்தி வச்சிருந்தாங்கன்னா, இந்நேரம் எல்லா எலிகளும் சுத்தமா செத்து சின்னபின்னமாயி போயிருக்கும்.”
“ சரிப்பா அந்தக் கோயிலுக்கு போறவங்க அந்த எலிகளை அடிக்க மாட்டாங்களா?”
“அந்த எலிகளை யாரும் அடிக்க மாட்டாங்க. அந்த எலிகளை அவங்களோட முன்னோர்கள் என்று நினைக்கிறாங்க. அந்த எலிகள தெய்வமாக வணங்குறாங்க. அந்த எலிகள் போறவங்கள எல்லாம் ஏதோ சொந்தக்காரங்க மாதிரி நினைக்கும் போல. அதனால அவங்க யாரையும் கடிக்கிறது இல்லை. நம்ம ஊர்ல நம்ம முன்னோர்களை நாம குலதெய்வமா நினைச்சு கும்பிடுவோமில்ல, அது மாதிரி தான்.”
“சரிப்பா நம்ம ஊர்ல இருக்கிற எலிகள் எல்லாம் நம்மள அடிக்கடி கடிச்சு வைக் குது. அங்கங்க மின்சார கம்பிகளை எல்லாம் கடிச்சு வைக்குது. நம்ம மூட்ட முடிச்சுகளை எல்லாம் கடிச்சு கொதறி வைக்குது. நிம்மதியா தூங்க முடியல. ராத்திரியில பருட்டு பருட்டுனு எதையாவது கடிச்சுக்கிட்டே இருக்குது. இது ஏம்பா?”
“நாம அவங்களுக்கு கோவிலை கட்டி கும்பிடலைன்னு கோவமா இருக்கலாம்”
“ ஆமாம்பா அப்படியும் இருக்கும்.”
மூன்று நாட்களுக்கு முன்பு:
மனதிற்கு இதமான மாலை நேரம். வழக்கம்போல் பேராசிரியர் தனது வீட்டுத் திண்ணையில் அமர்ந்தவாறு, பக்கத்து வீட்டு சிறுவர்களும்
அவரது மகன் நாவுக்கரசும், வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தார். அந்த சிறுவர்கள் விளையாடி முடித்த பிறகு அவரவர் வீட்டிற்குச் சென்றனர். நாவுக்கரசு பேராசிரியர் அருகில் வந்து அமர்ந்தான். அவன் பேராசிரியரிடம் சில கேள்விகளைக் கேட்டான் அவனது கேள்விகளுக்கு பேராசிரியரும் பதில் அளித்தார்.
“ அப்பா நான் உங்கக்கிட்ட ஒரு கேள்வி கேட்கட்டுமா? “
“ கேளுடா கண்ணா! “
“ நீங்க இதுவரைக்கும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் அடுத்த மாசம் பேசறதுக்காக எங்கெங்கெல்லாமோ போய் விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிகள்ல கலந்து கிட்டு வந்திருக்கீங்க. முதல்ல ஈரோட்டில் நடந்த வேளாண்மை கண்காட்சிக்கு போனீங்க. அடுத்து மதுரை வேளாண்மைக் கல்லூரியில் நடந்த உழவர் தின விழா விற்குப் போயிருந்தீங்க. அப்புறம் திருச்சி தேவர் மன்றத்துல நடந்த வேளாண்மை கருத்தரங்கத்திற்கு போயிருந்தீங்க. அதுக்கப்புறம் பெரம்பலூரில் நடந்த உழவர்களும் உணவு உற்பத்தியும் கருத்தரங்கிற்கு போயிட்டு வந்தீங்க. அங்கெல்லாம் எலிகளை பத்தி என்னென்ன தகவல்களை புதுசா தெருஞ்சுக்கிட்டீங்க. அதை கொஞ்சம் சுருக்கமா சொல்லுங்க? “
“ சரி சொல்றேன். பொறுமையா கேளு. அங்க நெறய பேர் எலிகளப் பத்தி பேசுனாங்க. அதுல பேராசிரியர் சிங்கப்பூர் திருநாவுக்கரசு, ஏடகம் மணிமாறன், அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் க. அன்பழகன், கரந்தை ஜெயக்குமார் போன்றவர்கள் பேசியது எனக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சு. பொதுவா எலிகள், பெருச்சாளி, சுண்டெலி, மூஞ்சூறு என மூணு வகையாக இருக்கு. இதையில்லாம வயலெலி என்கிற இன்னொரு வகையும் இருக்கு. வீட்ல இருக்கிறவங்களும் சரி விவசாயிகளும் சரி எலிகளை அலுமினியம் பாஸ்பைடு, சிங் சல்பேட் போன்ற நஞ்சு கலந்த உணவையும், எலி மிட்டாயையும் வச்சு, அதுங்கள கொல்லக்கூடாது அப்படிங்கிறத ரொம்ப அழுத்தம் திருத்தமாக சொன்னாங்க. “
“ ஏன் கொல்லக்கூடாது? “
“ ஒரு ஜோடி எலிகள் ஒரு வருடத்துல எண்ணூறு எலிகளா மாறுமாம். ஆனால் நாம அதுக்காக பயப்பட வேண்டியதில்லை. அதுல மூனுல
ரெண்டு பங்கு எலிகள் பறவைகளுக்கு உணவாகிடும். மீதி பாம்பு களுக்கு உணவாகிடும். நஞ்சுண்ட உணவை சாப்பிடும் எலிகள் சீக்கிரமா இறந்துடும். அப்படி இறந்த எலிகளை சாப்பிடற பறவைகளும் சீக்கிரம் இறந்துவிடும். இது நாம பறவைகளுக்கு செய்யும் மிகப்பெரிய மோசடி. அதனால நாம எலிகள நஞ்சு வச்சு கொல்லக்கூடாது.“
“ சரி வேற ஏதாவது தகவல் இருந்தா சொல்லுங்க! “
“ இன்னும் நிறைய விடயங்கள் இருக்கு ஆனா உனக்கு அதெல்லாம் தேவையில்லை. “
“ பரவாயில்லை நீங்க சொல்லுங்க. “
“ எலிகள் விவசாயிகளுக்கு நிறைய சேதத்தை ஏற்படுத்திக்கிட்டு இருக்கு. இதுக்கு விவசாயிகள் கிட்டி வைத்து எலிகளைப் பிடிக்கலாம். வயல்ல அதிகமா நீரத் தேக்கி வைக்கலாம். வயல்ல நடவு நடும் போது வரிசை நடவு முறையை பின்பற்றினால் விவசாயிகளுக்கு எலிகளால் ஏற்படும் சேதம் பெருமளவு குறையும். அப்புறம் சூரிய மின்தகடுகளை பயன்படுத்தி இரவு நேரத்தில் வரப்பு ஓரங்களில் அல்லது எலி வரும் எலிகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் விளக்குகளை எரியவிட்டு அதன் மூலமும் எலிகளின் சேதத்தைக் கட்டுப்படுத்தலாம். அடுத்து இரண்டு பங்கு அரிசி மாவு, ஒரு பங்கு மிளகாய்த்தூள் ஒரு பங்கு நாட்டு சர்க்கரை இவற்றை சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து உருண்டையாக்கி அவற்றை மாலை நேரங்களில் வயலில் ஐந்து முதல் பத்து இடங்களில் வைத்தால், இரவில் அவற்றை எலிகள் உடனே சாப்பிட்டு விடும். அப்படி சாப்பிட்ட எலிகள் இறந்து விடாது. ஆனால் அந்த உணவு அதன் குடல் பகுதியில் ஒருவித நமைச்சலை ஏற்படுத்தி விடும். அதன் பிறகு அந்த எலிகள் அந்த வயல் பக்கம் வரவே வராது “
தனது மகன் எலிகளைப் பற்றி இவ்வளவு ஆர்வமாக கேட்பதை நினைத்து பேராசிரியர் மகிழ்ச்சி அடைந்தார். அப்போது வீட்டில் உள்ளே இருந்து நாவுக்கரசுவிற்கு அழைப்பு வர, அவன் வீட்டிற்குள் வேகமாக நுழைந்தான்.
நேற்று:
அடுத்த மாதம் பதினோராம் தேதி சிகாகோ பல்கலைக்கழகத்தில் “இந்திய மண்ணில் எலிகள்” எனும் தலைப்பில் ஒரு பேருரையை நிகழ்த்த
வேண்டும் என சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் மூர்த்தியின் நண்பர் வின்சென்ட் ஞான திரவியம் கடந்த மாதம் அவரிடம் கேட்டுக் கொண்டார். அது சம்பந்தமான தகவல்களை திரட்டும் வகையில்தான் இதுவரை அவர் பல ஊர்களுக்கும் சென்று, பல விழாக்களில் கலந்து கொண்டு வந்துள்ளார். இதுவரை தகவல்கள் ஓரளவு திரட்டப்பட்டு விட்டன என்று தான் சொல்ல வேண்டும். இப்போது இது போதும் என அவர் மனம் சொல்ல, அவரது வெளியூர் பயணங்களை தற்சமயம் அவர் நிறுத்திக் கொண்டார்.
இனி சிகாகோ பல்கலைக்கழகத்தில் சிறப்பாக பேசுவதற்கான தகவல்கள் கிடைக்கப் பெற்றதில், அவரது மனம் நிறைவை நோக்கி நகர்ந்தது. பல மாதங்களாக நீடித்த அவரது பெரும் முயற்சி, இப்போது அவருக்கு மகிழ்ச்சியை அளிக்க நீண்ட நாட்களுக்குப் பின் பேராசிரியர் நிம்மதியாக தூங்கச் சென்றார்.
இன்று:
காலையில் பேராசிரியர் மூர்த்தி வழக்கத்தை விட சற்றுதாமதித்துதான் எழுந்தார். காலை நான்கரை மணி அளவில் எப்போதும் எழுகின்ற அவர் இன்று காலை ஏழரை மணிக்குத்தான் எழுந்தார். வீட்டில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்த ஒரு மண் பானை, இரண்டு கண்ணாடி போத்தல்கள், ரப்பர் வாளி ஒன்று, அலுமினிய குண்டான் ஒன்று, ஆறடி உயரம் உள்ள மூங்கில் தடி குச்சி என பல பண்டங்கள் எல்லாம் உடைந்து உருக்குலைந்து இருந்தன.
பேராசிரியரின் பையனுக்கு கணுக்காலில் பலத்த அடி. அவரது மனைவிக்கு கையில் மணிக்கட்டு பகுதிக்கு அருகாமையில் நல்ல அடி. எல்லாம் நள்ளிரவு ஒரு மணிக்கு பேராசிரியர் வீட்டில் நடந்த எலி ஒழிப்பு ஆர்ப்பாட்டம்தான். இதற்கு தலைமைஏற்று வழிநடத்திச் சென்றது பேராசிரியர்தான். அந்த நள்ளிரவில் பேராசிரியர், அவரது மனைவி, மகன் மூவரும் வீட்டில் நன்கு தூங்கிக் கொண்டிருந்தபோது, இரண்டு முரட்டு எலிகள் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு ஏதோ கண்ணாமூச்சி விளையாடுவது போல் விளையாடி, பேராசிரியர் மூர்த்தியை வெறுப்பேற்ற, அவர் மூங்கில் தடிக்குச்சி கொண்டு அதனை துரத்தி துரத்தி அடிக்க, முடிவு இப்படியாக முடிந்து விட்டது. கடைசியில் மூங்கில் தடிக்குச்சியும் இரண்டாக உடைந்து விட்டது.
எலிகளைப்பற்றி என்னதான் படித்திருந்தாலும், கரைத்தே குடித்திருந்தாலும், மதி நுட்பத்தோடும் அதிநுட்பத்தோடும் அவற்றை அணுகி ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாலும், மனிதர்கள் எலிகளிடம் தோற்றுத்தான் போக வேண்டி உள்ளது. நடைமுறை சிக்கல் என்றால் இதுதான். இப்படித்தான்.
குறிப்பு: இக்கதை எனது “இசையின் எதிரொலிகள்” எனும் சிறுகதைத் தொகுப்பு நூலில் உள்ள 11 கதைகளில் நான் தங்களுக்கு அனுப்பும் 11ஆவது சிறுகதை. இந்த நூல் கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.
![]() |
எழுத்தாளர் பற்றிய குறிப்புகள்: பெயர்: கா. ஆசைத்தம்பி,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil., புனைப்பெயர்: முத்தமிழ்ப் பித்தன் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள்: 1. English for Indian Pupils (2003) 2.மாண்புமிகு மாணவர்கள் (2019) (தொகுப்பு நூல்) 3.எண்பதுக்கு எண்பது (2022) (தொகுப்பு நூல்) 4.இசையின் எதிரொலிகள் சிறுகதைகள்(2025) இதுவரை (15.12.25) மின் இதழ்களில் வெளி வந்துள்ள எனது சிறுகதைகள்: 1. மாமோய் (மயிர்) 2. கருப்பு நிறத்தில் ஒரு மின்னல் (மயிர்) 3. ஆலமரத்தடியில் ஒரு அழகி (மயிர்) 4.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஆயிரத்தோராவது குழந்தையின் அவதாரப்படலம்
திசேரா
June 26, 2026
கோவிட் இடைவேளை
கடல்புத்திரன்
June 26, 2026
பொய்மையும் வாய்மையிடத்து…
கே.என்.சுவாமிநாதன்
June 26, 2026
