யார் அவன்?
கதையாசிரியர்: பே.செல்வ கணேஷ்
கதைத்தொகுப்பு:
கிரைம்
கதைப்பதிவு: January 21, 2026
பார்வையிட்டோர்: 4,119
அந்த ஸ்டேஷனில் உள்ள அனைவரின் முகமும் பயத்தின் வியர்வையில் குளித்திருந்தது.
பின்னே?அமைச்சரின் தலையை அறுத்துக்கொண்டு ஸ்டேஷனிற்கே வந்தவனைப் பார்த்தால் பயம் வராதோ?
கைது செய்தார்கள்!மீடியா ஆட்களோ ஈ மொய்ப்பது போன்று அவனை மொய்த்தார்கள்.
விசாரணைக்கு அவன் உட்படுத்தப்பட்டான்.விசாரணையில் அவன் பெயர் டேவிட் என்று தெரிய வந்தது.
அந்த அறையில் தான் அவனை விசாரணை பண்ணிக்கொண்டிருந்தார் அந்த இன்ஸ்பெக்டர்.
“ஏன் மினிஸ்டரை கொன்ன?”
“கொல்லப்பட வேண்டியவன் கொன்னேன்!”
“கொல்லப்பட வேண்டியவனா?”
“பிறவு,துரோகம்,அநியாயம் செய்றவனை எல்லாம் தூக்கி வெச்சு கொஞ்சுவாங்களா?”
“ஆஊன்னா,அவன் கொல்லப்பட வேண்டியவன்,பாவம் செய்தவன்,துரோகம் செய்தவன்னு ஏதோ ஒரு பிளாஷ்பேக்கை சொல்ல வேண்டியது,சரி சொல்லு அப்படி என்ன உனக்குப் பண்ணாண்ணு பாப்போம்”
“மூனு வருஷத்துக்கு முந்தி மேனகா என்கிற பொண்ணு மூஞ்சை சிதைத்து கொலைன்னு நியூஸ்ல பாத்துருப்பீங்க நியாபகம் இருக்கா?”
என்று கேட்டான் அதற்கு அவனை விசாரணை செய்த இன்ஸ்பெக்டரோ விழித்தான்…
“அவளை கொலை செஞ்சது யார்னு தெரிஞ்சும்,அவங்களை அரெஸ்ட் பண்ணாம வேறு ஒருத்தனை புடிச்சு போட்டு அவனுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது உங்க டிப்பார்ட்மெண்ட்,ஆனால் அவளை உண்மைக்குமே கொலை செஞ்சது நல்லசாமின்னு பேரை வெச்சிக்கிட்டு அயோக்கியத்தனம் பண்ண இதோ இப்போ தலை வேறயா உடல் வேறயா செத்துக் கிடக்குற இந்த மினிஸ்டர் தான்”
என்றதும் அந்த இன்ஸ்பெக்டர் சற்று அதிர்ந்தார்,ஆனால் அந்த அதிர்ச்சியை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் மேலும் அவனிடம் கேள்விகளைக் கேக்க ஆரம்பித்தார்.
“ஸோ,அந்தப் பொண்ணுக்காகத்தான் மினிஸ்டரையே கொலைப் பண்ணியிருக்கே,ஓகே,அந்த பொண்ணுக்காக கொலை பண்ற அளவுக்கு போயிருக்கேன்னா அந்தப் பொண்ணு உனக்கு என்ன வேணும்?”
என்ற கேள்விக்கு அவன் அமைதியாக இருந்தான்.
“தங்கச்சியா?”
“இல்ல”
“லவ்வர்?”
“இல்ல”
“அக்கா,அந்த மாதிரி?”
“நோ”
“அப்போ என்ன மயித்துக்காகடா அந்தப் பொண்ணுக்காக இந்த ஒரு கொலை செஞ்ச?”
என்று அவர் கோபத்துடன் கேக்க,இவனோ அக்கேள்வியைக் கேட்டு அந்த அறையின் நிசப்தத்தை உடைக்கும் அளவிற்கு சிரித்துக்கொண்டிருந்தான்.
அவன் சிரிப்பதைக் கண்டு, அவருக்கு மேலும் கோபம் ஏறியது.
“நான் என்ன கேட்டுக்கிட்டிருக்கேன் நீ அசால்ட்டா சிரிச்சிக்கிட்டிருக்க”
“பின்ன என்ன சார்?ஆறு கொலைகளை பண்ணவனைப் பாத்து ஒரு கொலை செஞ்சேன்னு சொல்றீங்க”
“ஆறு கொலையா?”
என்று அவர் அதிர்ச்சியுடன் வினவ, இன்ஸ்பெக்டரின் செல் முனகியது, எடுத்துப்பேசியவருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.
மயானத்தில் ஆறு தலைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும்,உடலை தேடிக்கொண்டிருப்பதாகவும்,நீங்கள் உடனே வரும்படியாகவும் அவனுக்கு தகவல் தரப்பட்டது!
அதனைக் கேட்டவர் அதிர்ந்து திரும்பினார், அங்கு அவன் அசால்ட்டாக சிரித்தப்படி உட்கார்ந்திருந்தான்.
***
மயானத்தில் இருந்த ஆறு தலைகளுக்குரியவர்கள் உடலும் கண்டெடுக்கப்பட்டது.
போலீஸின் விசாரணை ஆரம்பமாகியது.
விசாரணையின் முடிவில் அவர்கள் ஆறு பேரும் ஆளுங்கட்சியின் பினாமிகள் என்றும்,அவர்கள் ஆறு பேரும் செய்யாத குற்றங்களே இல்லை என்றும் தெரிய வந்தது.
அடிதடி,கட்டப்பஞ்சாயத்து,கொலை,
கொள்ளை,மக்களை ஏமாற்றுதல் போன்ற பல வேலைகள் செய்து வந்துள்ளனர் என்றும் தெரிய வந்தது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக டேவிட்தான் இக்கொலைகள் செய்ததாக அவனே வாக்குமூலம் கொடுத்தான்.
அப்போதுதான் போலீஸார்க்கு இன்னொரு விஷயமும் தெரிய வர,ஒட்டுமொத்த டிபார்ட்மெண்ட்டும் உறைந்தது,அது என்னவெனில்
குற்றம் செய்யப்பட்டதாக கருதி கைது செய்யப்பட்டிருக்கும் டேவிட் ஏற்கெனவே ஒரு பெண்ணை கொலை செய்ததாக கருதி அவனுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு அவன் இறந்துவிட்டான் என்ற தகவலை கேட்டுத்தான் ஒட்டுமொத்த டிபார்ட்மெண்டும் உறைந்திருந்தது.
அவன் இறந்துவிட்டானெனில் இப்போது சிறையிலிருப்பது யார்?
இன்ஸ்பெக்டர் உடனே ஓடிச்சென்று அவன் இருக்கும் சிறையைப் பார்த்தார்.
ஆனால் அவன் அங்கு காணவில்லை,ஆனால் அவன் இருந்த இடத்தில் ஏதோ திரவம் போல் இருந்தது.
மரணித்தவன் எப்படி உயிரோட வரமுடியும்?கொலை செய்ய முடியும்?அப்படியே இருந்தாலும் சிறையிலிருந்தவன் எப்படி மாயமாக முடியும்?
அப்படியானால் வந்தது,கொன்றது எல்லாம் பேயா?அல்லது வேலைப்பழு காரணமாக நானாக உருவாக்கிக்கொண்ட கற்பனையா? என்று மண்டையைப் பிச்சிக்கொண்டார்.
மீடியாக்களுக்கெல்லாம் விஷயம் தெரிந்து ஏதேதோ கதைகளை எல்லாம் கூற ஆரம்பித்தார்கள்.
வழக்கம்போல் பத்தோடு பதினொன்றாக அந்த விஷயமும் ஒருகட்டத்தில் ஆறிப்போனது…
சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட பகுதியை முதல்வர் பார்வையிட்டார்…
பிரபல நடிகையான மந்தாராவிற்கு பிரபல இயக்குனருடன் திருமணம்
அவர் அணிந்திருந்த சேலை மட்டுமே எழுபத்தைந்தாயிரம் என்பதையே பத்து முறை செய்தியில் காட்டிக்கொண்டிருந்தான்.
இதைதான் நியூஸில் ஒளிப்பரப்பு செய்துக்கொண்டிருந்தார்கள்,சமூக ஆர்வலர்கள் என்கிற பெயரைச் சுமந்தவர்களும் அதனைப் பற்றிதான் பேச்சு!இப்படிப்பட்ட நியூஸ்களுக்கு முன்னால் இந்த நியூஸ் எப்படித் தாங்கும்?
அந்த நேரத்தில் தான் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வந்தது.
சிறுமிகளை கடத்தி வெளிநாட்டிற்கு விற்றதாக கருதி கைது செய்யப்பட்ட நாராயணன் என்கிற ரியல் எஸ்டேட் ஓனர்,தனது பணபலத்தை பயன்படுத்தி அந்த கேஸை நிர்மூலமாக்கி ஒரே வாரத்தில் வெளியே வந்தார்.
மக்களுக்கும் தெரியும் இவன் எத்தனை குழந்தைகளின் வாழ்க்கையை நாசம் செய்துள்ளான்?எத்தனை பெற்றோர்களின் கனவை சிதைத்துள்ளான் என்று?ஆனால் மக்களுக்கு தெரிந்த அளவிற்கு சட்டத்திற்கு தெரியவில்லை அல்லவா?
இப்போது அந்த நாராயணனின் உயிர் சிறையிலிருந்து மாயமாய் மறைந்துப் போன டேவிட்டின் கையில் இருந்தது.
அவர் உயிர்பயத்தோடு அங்கும் இங்கும் ஓடுவதைப் பார்த்து சிரிப்பதோடு,அதனை தனது செல்போனில் முகநூல் வழியாக லைவ் வீடியோவாகவும் பதிவு செய்துக்கொண்டிருந்தான்.
லைவ் வீடியோ பார்த்துக்கொண்டிருந்த அத்தனை மக்களும் பயத்தோடு பார்த்துக்கொண்டிருந்தனர்.
எனினும் ஒரு சிலர் “அவனை கொன்னுடு,அவனை கொன்னுடு” என்று சிலர் வாய்கள் முனுமுனுத்தன.
எல்லோரும் அந்த லைவ் வீடியோவையே அடுத்து என்ன நடக்கப்போகிறதென்று பயத்துடனும்,ஆர்வத்துடனும் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவன் மேல் கத்தி ஒன்று பாயந்தது அப்படியே சரிந்து விழுந்தான் நாராயணன்.
அவன் கொன்றதைக் கண்டு மக்கள் ஒரு நொடி அதிர்ந்தனர்.
பிறகு அவன் மெதுவாக தலையைத் திருப்பி,கேமராவை நோக்கி ஒரு குரூரமான சிரிப்பை சிரித்துவிட்டு
“ட்ரை ஆல் யூ வாண்ட்…ஈவென் டெத் கேனாட் டச் மீ.ஐ ஆம் த இம்மார்ட்டல் ஒன்”
என்று கூறியதோடு அந்த லைவ் கட் ஆனது…