யாரோ ஒருவன்





(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நல்ல பெரிய மரங்களும் காற்று வீசும் நிழலும் யாருக்குத்தான் பிடிக்காது? அந்த இடத்தில் சனசமூக நிலையமும் அமைந்திருக்கிறது. நிழலையும் பெரிய மரங்களையும் நினைத்துக்கொண்டு தான் எல்லோரும் அவ்விடத்துக்கு வருகிறார்களோ தெரியாது. ஆனால் நான் அலுவலகத்துக்கு போவதற்காகத் தினசரி பஸ்சிற்குக் காத்து நிற்கவேண்டும். அதற்காக அந்த பஸ் நிறுத்தத்திற்கு வரவேண்டும். பஸ் தரிப்பு நிலையம். அந்த சனசமூக நிலையத்தின் அன்பளிப்பு! அதைவிட எனக்கும் அந்தச் சனசமூக நிலையத் திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
பஸ்சிற்காகக் காத்து நிற்கும் தவிர்க்க முடியாத காரணத்துக் காக அவ்விடத்துக்கு வந்தாலும் எனக்கு அவ்விடம் மிகவும் பிடித்துப் போயிருந்தது.
பஸ் நிறுத்தத்திற்கு மிக அண்மையாக சனசமூக நிலையத்தின் வாசிகசாலை அமைந்திருக்கிறது; கூம்பாக நிமிர்ந்து நிற்கும் நீள மேசையுடன், அதில் பலர் கைகளை முண்டு கொடுத்து நின்று பத்திரிகை வாசிப்பார்கள். அங்கு வந்து எல்லாப் பத்திரிகைகளையும் ஒன்றுவிடாமல் வாசிப்பவர்களைக் காணும்பொழுது இவர்களுக்கு வேறு வேலை இல்லையோ என எண்ணத் தோன்றுகிறது. பிறகு, பத்திரிகைகளை வாசிப்பதற்காகத் தானே போடுகிறார்கள்; அதற்குத்தானே அவர்களும் வருகிறார்கள்… என நினைத்துக்கொள்வதும், வாசகர் கூட்டமும் இவ்வாசிகசாலைக்கு இருப்பதைத் தினமும் வந்து போகும் வழக்கமான ஆட்களிலிருந்து ஊகிக்கமுடியும். தெருவிலே போகிறவர்களும், பஸ்சிற்கு அதிக நேரம் காத்து நின்று சலித்துப் போனவர்களும், ‘அப்பாடா!’ என்று வாசிக சாலையினுள் நுழைந்து பத்திரிகைகளில் மூழ்கிவிடுகிறார்கள்! இதை ஒருபோதும் அங்கத்தவர்களாக இருக்கும் இளைஞர் களோ, பெரியவர்களோ ஆட்சேபிப்பதில்லை போலிருக்கிறது. சொல்லப்போனால் இதை ஒரு பெருமையான விடயமாக அவர்களும் கருதக்கூடும். மக்களுக்குச் சேவை செய்யும் நோக்குடன்தானே அவர்கள் எல்லாவற்றையும் செய்கின்றார்கள்?
சனசமூக நிலையம் மக்களுக்கு நல்ல சேவை செய்கிறதென்றும் கேள்வி. திருவிழாக் காலங்களில் தண்ணீர்ப் பந்தல் போடுகிறார்கள். விளையாட்டுத் திடல் அமைத்திருக்கிறது; மாலை நேரங்களில் கரப் பந்தாட்டம் நடக்கும். பலர் அங்கத்தவர் களாவும் இருக்கிறார்களாம். தினமும் அவ்விடத்தில் கூடும் இளவட்டங்களையும், பெரியவர்களையும் காணும்பொழுது இது உண்மையென்றே தோன்றுகிறது. பஸ்சிற்காக நெடுநேரமாகக் காத்து நிற்கும்பொழுதுகூட வாசிக சாலைக்குள் நுழைய வேண்டு மென்று நான் எண்ணியதில்லை. இது, பத்திரிகையை வாசித்துக் கொண்டிருக்கும்பொழுது பஸ் போய்விடும் என்ற காரணத்துக்காக அல்ல. நான் கூச்சப்பட்ட சுபாவம் கொண்டவன். முன் பின் தெரியாத முகங்களோடு பகிர்ந்து கொண்டு வாசிக்க, அல்லது பிறர் அங்கத்தவராக இருந்து கொண்டு நடத்தும் வாசிகசாலையை, நான் யாரோ ஒருவனாக வந்து பயன்படுத்துவதை விரும்பவில்லை. இந்த நேரங்களில் வாசிகசாலைச் சுவர்களுக்குள் மறைவதைவிட வெளியே நிற்பதைத்தான் மனசு விரும்புகிறது.
சில நாட்களில் இரவிலும், சில நாட்களில் பகலிலும் வேலை நேரம் மாறிவரும். இரவிலானால் மாலையிலும். பகலிலானால் காலை ஏழு மணியளவிலும் பஸ் நிறுத்தத்திற்கு வருவேன், பஸ்சிற்காக நெடுநேரம் காத்து நின்றாலும், பஸ் இன்னும் தாமதமாக வந்தால் நல்லது என எண்ணத் தோன்றும்; விதம் விதமான மனிதர்களின் முகங்கள்…. பார்க்க ஆர்வமூட்டு வதாகவும் தோன்றுகிறது. ஒவ்வொரு முகங்களிலுமுள்ள படங் களைக்கொண்டு அவர்களை அளப்பது கஷ்டமான காரியமாகத் தோன்றவில்லை. பிரச்சினைகள்… சந்தோஷம் அல்லது கவலைகள் இல்லாத ஆட்களே இல்லை. ஒரு நாளைக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டு எப்படியெல்லாம் அவர்களைப் பாதித்துவிடுகிறது! முகங்கள் எல்லாம் எப்படி மாறிப்போய் விடுகின்றன! முதல் நாள் சிரித்தபடி வரும் முகம் அடுத்த நாள் ”உம்” மென்றிருக்கிறது. படு அப்பாவியைப் போலச் சென்ற ஒருவன் இன்னொருநாள் கொலை வெறியனைப் போல வருகிறான். இதுதான் மனித முகம் என ஒன்றைச் சரியாகக் கணிக்க முடியாதவாறு பலவிதக் கோலங்கள்!
சேர்ந்து போகிற ஆட்களில்கூட நிறையக் கதைகளைப் பார்க்க முடிகிறது. கணவனும் மனைவியும் வீட்டில் நடந்த பிரச்சினைக்காக கோபம் சாதித்துக்கொண்டு போகிறார்கள் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கவும் அவர்களால் முடிய வில்லை! பிரச்சினைப்பட்டுக் கொண்டதனால் பிரிந்துபோகவும் அவர்களால் முடியவில்லை! உள்ளுக்குள் ஒருவரை ஒருவர் பெரிய விரோதிகளாகக் கருதிக்கொண்டு… சேர்ந்துபோகும் விசித்திரம்! நல்ல சமூகம், நல்ல சனங்கள்!
இதையெல்லாம் பார்த்து நான் பிரமித்துப்போவதுண்டு! மனிதர்களின் சுபாவங்கள் வேடிக்கையானதாகவும், விநோதமாகவும் இருக்கின்றது. இப்படி அவர்களின் புரியாத செயல்களைக் கவனித்து, யோசனையில் ஆழ்ந்துபோய், சில வேளைகளில் பஸ்சையும் தவறவிட்டு அலுவலகத்துக்குத் தாமதமாகவும் போயிருக்கின்றேன். ஆனால் ‘லேட்’டாய்ப் போவதற்காக நான் கவலைப்படுவதில்லை. ஒவ்வொரு முறையும் அந்த இடத்தை விட்டுப் பிரியும்பொழுதுதான் கவலை ஏற்படும். அந்த அளவுக்கு அவ்விடம் எனக்குப் பிடித்துப் போயிருந்தது.
பஸ் நிறுத்தத்தின் இன்னொரு விசேடம், பெண் பிள்ளைகள். ஆண்களுக்கு யாரும் சளைத்தவரல்ல என்பதுபோல பெண்கள் சகல துறைகளிலும் ஈடுபடுவது எவ்வளவு நல்லதாக இருக்கிறது. பெண்கள் அலுவலகங் களுக்குப் போகின்றார்கள்; வீட்டு மூலைகளுக்குள் பதுங்கிக் கொண்டிராமல் எங்கும் பயமின்றித் திரியக்கூடிய ஒரு காலம் வந்துகொண்டிருக்கின்றது. இப்பொழுது பெண்களுக்காக யாரும் பரிந்து பேசத் தேவையில்லை; பஸ்களில் எழுந்து நின்று இடம் கொடுக்கத் தேவையில்லை. பெண் என்ற காரணத்துக்காக அவள் எந்தக் குறைபாடும் உடையவளல்ல அவளும் ஆண்களுக்குச் சமானமாகச் சீவிக்கக்கூடியவள் என்பது எவ்வளவு உண்மையான விஷயம்! பஸ் நிறுத்தத்தில் கூடும் பாடசாலைப் பிள்ளைகளைக் காணும்பொழுதும் எதிர்காலம் இன்னும் பிரகாசமாக இருக்குமென்றே தோன்றுகிறது. ஆனாலும் பெண்கள் மென்மை யானவர்கள்தான்! நல்ல மலர்கள், அழகான பூக்கள், அந்த இயல்பை அவர்களாலும் தவிர்க்கமுடியாது. பாட சாலைக்குச் செல்லும் பிள்ளைகள் தினமும் பஸ் நிறுத்தத்திற்கு வருகிறார்கள். இவர்கள் எப்பொழுதும் கவலைகளில்லாமல் சிரித்துக்கொண்டு மலர்ச்சியாக இருப்பது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
பஸ் நிறுத்தத்திற்கும் வாசிகசாலைக்கும் இடையில் உள்ள மர நிழலில் இரண்டு சீமெந்து இருக்கைகள். கீழே மணல். வயது வித்தியாசமுள்ள இள வட்டங்கள் மணலிற் கால்களைப் புதைத்துக்கொண்டு அமர்ந்து, பஸ் நிறுத்தத்துக்கு வரும் கல்லூரி மாணவிகளையும், வேறு பெண்களையும் ரசித்துக் கதைப்பார்கள். சிலர் ‘ஜோக்’ அடிப்பார்கள். இன்னும் சிலர் ஏதாவது கதைப்பதற்கும் அல்லது புன்னகைக்கவும் முயற்சிப்பார்கள். பதிலாக சில பெண்கள் கோபக்காரரைப் போல் எரித்துப் பார்ப்பதுண்டு. ஆனால் இன்னும் சில பெண்கள் அந்த ‘ஜோக்’கை ரசிக்கவும், அவர்கள் கதைகளில் நாணிச் சிவக்கவும் அல்லது அதற்குப் பதிலடியாக ஏதாவது கதைக்கவும் பழகியிருந்தார்கள்.
இதற்காகவெல்லாம் இந்த பஸ் நிறுத்தத்தையும், சனசமூக நிலையச் சூழலையும் நன்றாக விரும்பியிருந்தேன். இதற்காகவே மிகவும் நேரத்துடன் வீட்டிலிருந்து புறப்பட்டும் வந்துவிடுவேன். பஸ் நிறுத்தத்தில் காத்து நிற்கும் உணர்வு மனதைச் சலிக்கச் செய்வதேயில்லை. இதனால் இந்தப் பஸ் நிறுத்தத்தின் மேலும் இதனை அமைத்த சன சமூகக்காரர்கள் மேலும் ஒருவிதமான பற்றும் இருந்தது.
சமசமூகக்காரர்களும் எனக்கு ஓரளவு தெரிந்தவர்கள்தான். அன்றாடம் வந்து போவதால் பல முகங்கள் பழகிப் போயிருந்தன. இப்பொழுது என்னைப் பஸ் நிறுத்தத்தில் கண்டால் தலையை அசைக்காமல் அல்லது புன்சிரிப்பை மலர்த்தாமல் போகிறவர்கள் குறைவு – இப்படி இன்னொரு மனிதனைப் பொருட்படுத்துகிற சுபாவங்களைக் காணும்பொழுது நல்ல ஆறுதலும் தோன்றுகிறது. முன்பு பாடசாலையில் என்னோடு படித்த பல நண்பர்களும் இங்கு அங்கத்தவராயிருக்கின்றனர். இது தெரியவந்ததும், இன்னும் இந்த சனசமூக நிலையத்துடன் நெருங்கிவிட்டது போன்ற உணர்வு தோன்றியது. இதை இப்பொழுது தபால்காரனாயிருக்கும் ஒரு நண்பன் மூலம் கேள்விப்பட்டிருக்கிறேன். இவன் மாத்திரம் ஊரோடு இருக்கிறான். மற்றவர்கள் உத்தியோக நிமிர்த்தம் வெளியூர் களுக்குப் போய்விட்டார்கள். அதனால் அவர்களை ஒரு போதும் கண்டதில்லை. தபால்கார நண்பன் மட்டும் மாலைகளில் வருவான்; “எப்படி கிருபானந்தன், சுவாமி?” என்று கேட்பான்.
முதலில் அவன் என்னை அடையாளம் கண்டு பெயர் சொல்லி அழைத்தபொழுது எனக்கு ஆச்சரியமாக இருந்தது, ‘அட! இன்னும் என் பெயரை நினைவு வைத்திருக்கிறானே!’
எனக்கு அவனது பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை. யோகேஸ்வரனோ… யோகநாதனோ? பெயர் மறந்துவிட்டது போலக் காட்டிக்கொள்ளாமல் “யோகா” என அழைத்துக் கொள்வேன்.
“எப்படி கிருபா சுகமா?” – “என்ன வேலைக்குப் போக ஆயத்தமா?” – “என்ன ஐசே, இன்றைக்கு ஒரு மாதிரி இருக்கிறீர்?” போன்ற கேள்விகளில் ஏதாவதொன்றைத் தினமும் கேட்பான். திரும்பத் திரும்ப இவற்றைக் கேட்பதினால் அவனுக்குச் சலித்துப் போவதில்லையோ தெரியாது. அல்லது என்மேல் கொண்டிருக்கும் கரிசனையினால் இப்படித் தினமும் விசாரிக்கிறானோ என்று நினைத்துக்கொள்வேன்.
இப்படி… மணலும், மர நிழலும், மனிதர்களும் மங்கையரும் போக்குவரத்துக்களும் நிறைந்த இடம் எனக்குப் பிடித்துப் போயிருந்தது, நேற்றுவரைதான். பெரும் புயலொன்று வீசி மரங்களையெல்லாம் பாட்டிலே விழுத்திவிட்டது போல, அவ்விடம் ‘கோரமாக’த் தெரிவதுபோல, மனதிலே பெரியதொரு ‘உடைவு’ ஏற்பட்டுவிட்டது. அவ்விடத்தை அண்மிக்கவே பிடிக்கவில்லை. ஆனால் பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டு அவ்விடத்தை ஒதுக்கிவிடவும் முடியாது. நான் அன்றாடம் வேலைக்குப் போகவேண்டும்.
இப்படியொரு தவிர்க்கமுடியாத காரணத்துக்காக க இவ்விடத்துக்கு வந்தாலும் நேற்றைய சம்பவங்கள் மனதை விட்டு மறைய மறுத்தன. இரவு வேலை முடிந்து வந்தபொழுது ஏழு மணியிருக்கலாம். பஸ்சை விட்டு இறங்கியபொழுது, சந்தி அமளிதுமளிப்பட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது.
‘ஆமிக்காரரோ?’
இந்தக் காலங்களில் காரணம் இல்லாத காரணங்களுக்கு எல்லாம் மக்கள் ஆமிக்காரர்களால் தாக்கப்படுவதால் அப்படியும் சந்தேகிக்கத் தோன்றியது. ஆனால், அப்படியாயின் இங்கு இவ்வளவு சனக்கூட்டத்தைக் காணமுடியாது என நினைத்துக் கொண்டு மற்றவர்களைப்போலவே நானும் அவ்விடத்துக்கு விரைந்து சென்றேன்.
ஒருவனுக்குப் பலராகச் சேர்ந்து அடித்துக்கொண்டிருந்தனர். அவனது சாரத்தை ஒருவன் பிடித்து இழுத்தபொழுது அது கிழிந்தது. ‘சேர்ட்’ இன்னொரு பக்கமாகக் கிழிக்கப்பட்டது. முகத்திலே ஓங்கிச் சில அறைகள் விழுந்தன. அவனது மூக்கிலிருந்தும், வாயிலிருந்தும் இரத்தம் வழியத் தொடங்கியது. அவன் தலையைக் குனிந்து ஒரு கையினால் முகத்தையும், ஒரு கையினால் அடிவயிற்றையும் பொத்திக்கொண்டான். அப்படியிருந்தும் உதைகளைச் சமாளிக்க முடியவில்லை. பெரிய எருமையைப் போல அவன் இத்தனை அடிகளையும் தாங்கிக் கொண்டாலும் சமாளிக்க முடியாமல் ஒலமிட்டான்.
“ஐயோ என்னைக் கொல்லுறாங்களே!….”
அவன் கண்ணீர் விட்டு அழுது குளறினான். வாயைத் திறந்து அழுதபொழுது அவனது சில பற்களும் உடைந்திருப்பது தெரிந்தது.
‘ஐயோ… எனக்கு அடியாதையுங்கோ….நான் சொல்லுறதைக் கேளுங்கோ.., எனக்கு ஒண்டுமே தெரியாது.’
அடிகளையும் வேண்டிக்கொண்டு எப்படியோ கைகளைக் கூப்பி அவர்களைக் கும்பிட்டவாறு அவன் ஓலமிட்டான்.
அவன் சொல்வதை யாரும் கேட்க விரும்பவில்லை. அவனைக் கால்களினால் உதைத்தனர். இரு கைகளினாலும் ஓங்கி அறைந்தனர். ‘அவன் மாபாவி! அவன் இந்த உலகத்திலே வாழ்வதற்கே லாயக்கற்றவன்! தொலைந்துபோகட்டும்’ அண்மையிலிருந்த வீடுகளிலிருந்து ஓடிவந்த ஆண்களும், விசயத்தை அரை குறையாகக் கேட்டு, அவனை உதைக்கத் தொடங்கினர்.
“எங்கை வந்து உன்ரை சேட்டைகளை விடலாம் எண்டு பார்த்தாய்? வந்தான் – வரத்தான் எல்லாம் சேட்டை விடுகிறதுக்கு இதுதான் வாய்ச்ச இடமோ?”
விசயம் என்னவென்று எனக்குப் புரியவில்லை. எல்லோரும் அரைகுறையாகக் கதைத்தனர். ஒவ்வொருவரும் வேறு வேறு விதமான காரணங்கள் கூறினர். அவனை அடித்து, தங்களுடைய ஆவேசங்களைத் தீர்த்துக்கொண்டவர்களுக்குக் கூடச் சரியான காரணம் தெரியவில்லை. “ஏனப்பா, இப்ப அவனுக்கு இப்படி மிருகத்தனமாக அடிக்கீறீங்கள்?” என்று கேட்டேன்.
“இப்ப இவருக்குக் குடுத்தால் எல்லாம் சரிவரும். நீர் வாயைப் பொத்திக்கொண்டு இரும்; பெரிய நியாயம் கதைக்க வந்திட்டீர்…?”
அத்தோடு நான் அடங்கிப்போய்விட்டேன். பிறகு, அவர்களது இலக்கு என்பக்கம் திரும்பிவிட்டால் நான் என்ன செய்வது? அதனால் அவனுக்கு உதை விழுவதைப் பார்த்துக் கொண்டு பேசாமல் நின்றேன். எத்தனை அப்பாவிகளாக, எந்தச் சோலிக்கும் போகாத மனிதர்களாக இருந்த அவர்களிடம் இப்பொழுது புகுந்திருக்கும் பூதங்கள் எங்கிருந்து வந்தன? ஒவ்வொரு மனிதர்களுள்ளும் இப்படி இராட்சத குணமுள்ள இன்னொரு மனிதனும் ஒளிந்திருப்பானோ என்று தோன்றியது. பிறகுதான் கவனித்தேன். எனது தபால்கார நண்பனும் அவ்விடத்தில் நிற்பதை – அட அநியாயமே, அவனும் அந்தத் தாக்கப்பட்டவனை இழுத்துப்போட்டு உதைத்துக் கொண்டிருந்தான்.
நன்றாகத் தாக்கப்பட்டவன்போல, நான் ஒரு பக்கத்தில் தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டேன். தனது பங்கைச் செலுத்திக்கொண்டு திரும்பியபொழுது அவனைப் பிடித்துக்கொண்டேன்.
“என்ன நடந்தது?”
“எப்படி ஐசே…. பொம்பிளையள் ரோட்டிலை தனிய வாறது? இவங்கள் குடிச்சுப்போட்டு சேட்டை விடுறத்துக்கு எண்டே திரியிறாங்கள்.”
நான் விடவில்லை. இன்னும் விபரமாகக் கேட்டேன். பஸ் நிறுத்தத்தில் இரண்டு பெண்கள் நின்றிருக்கிறார்கள், இருட்டுகிறபொழுது. சற்று நேரத்தில் மூவர் அந்நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்களும் பஸ்சிற்காக வந்திருக்கவேண்டும். சனசமூகக்காரர்களும் தங்கள் வழக்கமான இடத்திலிருந்து ‘நோட்’ பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். மூவரில் யாரோ ஒருவன் அந்தப் பெண்களுடன் ‘சேட்டை’ விட்டிருக்கிறான். குடிவெறியில் நின்ற இவர்களைப் பார்த்து அவள் பயத்திருக்க வேண்டும். அவள் சத்தம் கேட்டதும் மற்ற இருவரும் ஓடிவிட்டனர். இவன் மட்டும் அகப்பட்டுக்கொண்டான்.
“தான் ஒண்டும் செய்யவில்லை எண்டு அவன் சொல்லுறான்… பிறகு ஏன் போட்டு அடிக்கிறீங்கள்? ஒருத்தனுக்கு கனபேர் சேர்ந்து அடிக்கிறது சரியில்லைதானே?”
“நீர் சும்மாயிரும் ஐசே! குடிச்சாப்போலை மற்றவங்களுக்கு இடைஞ்சல் தாறதா?… நாங்கள் அப்போதைகூட அதிலையிருந்து கவனிச்சுக் கொண்டுதான் இருந்தனாங்கள். பொம்பிளைய ளோடை என்ன பகிடி?”
“அந்தப் பொம்பிள்ளையளிட்டைக் கேட்டனீங்களோ என்ன நடந்ததெண்டு?”
“அதுகள் அப்பவே பஸ் வந்த உடனை ஏறிப்போட்டுகள். அதுகளிட்டை என்ன கேட்கிறது?”
நான் இவனுடன் கதைத்துக்கொண்டிருக்கும் பொழுதே அவன் தாக்குபவர்களிடமிருந்து தப்பி ஓடுவது தெரிந்தது. இவர்களும் சற்றுத் தூரம் துரத்திக்கொண்டு சென்று, பின் திரும்பி வந்தனர்.
பெரிய தடியனாசாமி மாதிரி இருந்த அவன் போய்விட்டான். அவன் அழுதது பற்றி இவர்கள் சந்தோஷித்துக் கதைத்தார்கள். அவனுக்கு இழுத்துப் போட்டு உதைத்தது பற்றி ஒவ்வொருவரும் வீரம் பேசிக்கொண்டு நெஞ்சை நிமிர்த்திக் கதைத்தனர். வீட்டிலும் தங்கள் மனைவிமாருடன், ஒரு பெண்ணின் மானங் காப்பதற்குத் தாங்கள் செய்த ‘வீராவேசமான போர்’ பற்றி கதைத்துக் கொள்வார்களோ தெரியாது. அவர்களுக்கு இன்னும் சில நாட்களுக்கு வாயாராக் கதைப்பதற்கு ஒரு புதிய விஷயம் கிடைத்திருக்கிறது. அவ்வளவுதான்.
அவ்விடத்தை விட்டு நடந்தேன். ஓரளவு தூரம் வந்த பின் ஒரு போஸ்ட் லைட்டின் கீழ் அவன் இருப்பது தெரிந்தது. குடிவெறியினாலும், தாக்கப்பட்ட வலியினாலும் விழுந்து கிடக்கின்றான் என்றுதான் நினைத்தேன். ஆனால் செருகியிருந்த சார மடிப்பை அவிழ்த்து எதையோ தேடுவது போலிருந்தது. அல்லது கிழிந்துபோன சாரத்தைச் சரி செய்கிறானோ தெரியாது!
என்னைக் கண்டதும் சற்று பயந்துவிட்டான். நான் ஆறுதலாக விசாரித்தேன். அவன் ஒரு ‘லொறி ட்றைவர்’. அன்றைய வேலை முடிந்து, லொறியை முதலாளி வீட்டில் விட்டுவிட்டு வந்திருக்கின்றனன். அவனோடு வந்தவர்கள் கிளினரும் ம் இன்னொருவனும். மற்றவர்கள் பஸ்சிலே போகவேண்டும். கொஞ்சம் போட்டுவிட்டுத்தான் வந்து நின்றிருக்கின்றனர்.
“அவங்கள் ஏதாவது சேட்டை விட்டாங்களோ தெரியாது இளம். பொடியள், ஆனால் சத்தியமாய் ஐயா… எனக்கு ஒண்டும் தெரியாது. அந்தப் பிள்ளையளின்ரை வயசிலை எனக்கும் குமர்ப் பிள்ளையள் இருக்க.”
“சரி…இனி என்ன செய்யிறது… வீட்டுக்குப் போவன்.”
“எப்படி ஐயா போறது?…. நாளைக்கு மூத்த மகளைப் பொம்பிளை பாக்க வருகினம், அந்தச் செலவுகளுக்கெண்டு முதலாளியிட்டை ஐந்நூறு ரூபாய் வேண்டி வந்தனான்…. அடிச்ச இடத்தில எல்லாம் பறிபோயிட்டுது!”
வயது வித்தியாசமுள்ள இளைஞர்களும்,சில வயசானவர்களும் வாசிகசாலை முன், மர நிழலில்… மணலில் கால் புதைத்து அமர்ந்திருக்கின்றனர். அந்த மனிதர்களின் முகங்களும், அபிநயங்களும் வடிவாகத் தெரிகின்றன. ஆனால் சம்பாஷித்துக் கொள்வது துளியும் கேட்கவில்லை. ஊமைப் படம் பார்ப்பதுபோல நல்ல வேடிகக்கையாக இருக்கின்றது.
– மல்லிகை, 1982.
– உயிர்க்கசிவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 2010, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் லிட், சென்னை.
![]() |
விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்புனைபெயர்: சுதாராஜ்கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு:முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj)Seacrest Appartment,189/1, 6/1, Mahavithyalaya Mawatha,Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.comrajasinghamsivasamy@yahoo.com படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்) சிறுகதைத் தொகுப்பு பலாத்காரம் - தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977…மேலும் படிக்க... |