யாருமா இவங்க?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 31, 2021
பார்வையிட்டோர்: 5,032 
 
 

“அம்மா யாருமா இவங்க? இப்படி இருக்காங்க!”

“ஓய்… சத்தம் போட்டுப் பேசாத.. அவங்க அசிங்கம்… அவங்களப்பத்தி பேசறோம்னு தெரிஞ்சா நம்மல அசிங்க அசிங்கமா திட்டுவாங்க.. அவங்க பக்கம் பார்க்காத?”

“அப்ப அவங்க மனுஷங்க இல்லையாமா?”, என்று கேட்ட விக்னேஷின் கேள்விக்கு, பதில் சொல்லத் திணறி, ‘உஷ்’ என்று உதட்டின் மேல் கைவைத்து அடக்கினாள் கோமதி.

***

அடுத்த நாள் கடைவீதியில் விக்னேஷுடன் நடந்து கொண்டிருந்தாள் கோமதி. கைப்பைக்குள் ஆஸ்பத்திரியில் கட்ட வேண்டிய ரெண்டு லட்ச ரூபாய் இருந்தது. விக்னேஷின் அப்பா ஒரு வாரமாய் ஆஸ்பத்திரியில், பெரிய வாகன விபத்திற்குப்பின் சிகிச்சையில் உள்ளார். ஒரு மேஜர் ஆப்ரேஷன் பண்ணினால் தான் பிழைப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில், எப்படி எப்படியோ கஷ்டப்பட்டு இந்த ரெண்டு லட்சத்தை புரட்டியிருந்தாள் கோமதி. கைப்பையை பத்திரமாக கைக்குள் அடக்கித்தான் நடந்து கொண்டிருந்தாள். அப்படியும் ஒரு திருடன், அந்த கைப்பையை பறித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தான்.

“திருடன் திருடன்”, என்று கத்திக்கொண்டே பத்து அடி கூட அவளால் ஓட முடியவில்லை. கால் தடிக்கி விழுந்தவள் ‘ஓ’வென கதற ஆரம்பித்து விட்டாள். அம்மாவின் அழுகை கண்ட விக்னேஷிக்கும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. ஆனால் யாரோ அவனை துரத்திக்கொண்டு ஓடுவதாய் கண்ணில் பட்டது.

சுற்றிலும் கூடிய கூட்டம், பாவமாய் இருவரையும் பார்த்துவிட்டு நகர ஆரம்பித்தது.

அப்போது மாதாக்கோவில் மணி ஒன்பது முறை அடித்து ஓய, ‘ஒன்பதரைக்குள் பணம் கட்டிவிடுவேன்’ என்று நேற்று டாக்டரிடம் கோமதி சொன்னது ஞாபகம் வர இன்னும் பதட்டம் பற்றிக்கொண்டது.

அப்போது ஒரு குரல் கேட்டது.

“மேடம் இந்தாங்க உங்க பேக்”

சட்டென பெருமழை கொட்டியது போல உடம்பு முழுதும் சந்தோஷம் பொங்க தலையில் கைவைத்து அமர்ந்திருந்த கோமதி தலை நிமிர்ந்து பார்த்தாள்.

அன்று பார்த்த அதே திருநங்கை, மூச்சு வாங்கிய படி சிரித்த முகத்துடன் நின்று கொட்டிருந்தார்.

படாரென கன்னத்தில் அடி வாங்கியது போல உணர்ந்தாள் கோமதி.

“ரொம்ப நன்றிங்க”, எனச் சொல்லி தனது பேக்கை வாங்கிக்கொண்டாள்.

“உள்ள இருக்கற‌தெல்லாம் சரியா இருக்கானு பார்த்துக்கோங்க”

“பரவாயில்லைங்க, எல்லாம் சரியாத்தான் இருக்கும்.. விக்னேஷ் இவங்களுக்கு கை கொடு”

சிரித்த முகத்துடன் கை குலுக்கிய விக்னேஷ் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.

“யாருமா இவங்க?”

“நம்ம தெய்வம்பா!”, என பதில் சொன்ன அம்மாவை வினோதமாகப் பார்த்தான் விக்னேஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *