மோக பங்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 17, 2025
பார்வையிட்டோர்: 147 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘உங்க மகன்தான்… எல்லாம் சரி, நேத்தைக்கு ராத்திரி நீங்க நடந்துக்கிட்டது கொஞ்சம் கொடூரமாய் விட்டதுண்ணுதான் எனக்குத் தோணுது’ என்று நான் சொல்லக் கேட்டபோது உலகன்னாவின் முகம் சிறுத்தது. 

‘என்ன சார்… நீங்களும் அப்படியா சொல்றீங்க… எத்தனை நாளா நான் சகிச்சுக்கிட்டிருப்பேன். மொதலில் எல்லாம் அவன் அம்மாக்காரி கிட்டெ மட்டும் மத்தாயியை மரியாதையா இருக்கச் சொல்லுண்ணு சொல்வதோடு சரி. நான் கண்டுக்காதது மாதிரி இருந்தேன். ஆனா இப்போ ரெண்டு மூணு நாளா என்னாலெ கொஞ்சமும் சகிக்க முடியாமல் ஆகிவிட்டது. ராத்திரி அவன் வீட்டுக்கு வர ரெண்டு மணி, மூணு மணி. அவன் வரட்டும் கேக்கலாமுண்டு விழிச்சுக்கிட்டிருந்து அசதியில் சித்தெ நான் கண்ணசருகிற நேரத்தில் பூனைபோல்வந்து படுத்துக்கிட்டு காலம்பரெ நான் விழிக்க முந்தி எழுந்திரிச்சுப் போயிடுவான்… இப்படி ஊரைச் சுற்றிக்கிட்டிருந்தா இவன் படிக்க வேண்டிய பாடங்களை அவனுக்குப் பதில் யாரு படிப்பா? அதைத் தட்டிக் கேக்காமெ அப்படியே அவன் போக்குக்கு நான் விட்டிரணு முண்ணா சார் சொல்லுறீங்க?’ 

கோபத்தில் அவர் வார்த்தைகள் படபடத்தன. மேற்கொண்டு நான் ஏதாவது சொன்னால் மேலதிகாரி என்று ஒன்றும் பார்க்காமல் என்மீதும் அவர் பாய்ந்துவிடலாம் என்று நான் அவரையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். 

‘இந்தக் காலத்தில் படிச்சுப் பாஸானாகூட பிழைப்பது கஷ்டம். எங்கே பார்த்தாலும் போட்டியும் பொறாமையும்தான். அவன் கூடப் பொறுப்பில்லாமல் இவன் ஊரைச் சுற்றினால்?’ 

‘இப்போ அப்படி நல்லா படிச்சுப் பாஸானால்கூட என்னா கிடைச்சு விடப் போவுது?’ 

‘சார்… அப்படிச் சொல்லப்படாது… நல்ல முறையில் படிச்சுப் பாஸானவங்க எல்லோரும் ஓஹோண்ணு இல்லாவிட்டாலும் எங்கேயாவதுபோய் ஏதாவது ஒரு வேலையில் தொக்கிக் கொண்டு சுமாராகவாவது வாழத்தான் செய்யுறோம். அதுக்கு மனமில்லாம சோம்பேறியா இப்படி ஃப்ரஸ்ட்ரேஷன் பெர்வர் ஷன் என்றெல்லாம் சொல்லிக்கிட்டு காட்டுமிராண்டியைப் போல் மயிரை வளர்த்திக்கொண்டு ஊரை மேய்கிறதா!’ 

கான்டீன் பையன் டீ கோப்பைகளைக் கொண்டுவந்து மேஜை மீது வைத்துவிட்டுப் போனான். நான் டீயைக் கையில் எடுத்தேன். அவரும் கையிலெடுத்து ஒரு மிடக்கு உறிஞ்சிக் குடித்தார். இப்போது அவர் முகத்தில் ஆத்திரம் சிறிது தணிந்தது மாதிரித் தோன்றியது. 

கோப்பையை மேஜைமீது வைத்துவிட்டுக் கண்ணாடியைக் கழற்றிக் கைக்குட்டையால் முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டார். 

நான் டீயைச் சிறிது சிறிதாய் உறிஞ்சியபடி அவரைக் கவனித்துக் கொண்டிருந்தேன். இத்தனை வயசான பிறகும், நித்தம் செய்யும் க்ஷவரத்தால் ரோஜாப்பூ நிறத்தில் மொழுமொழுவென்றிருக்கும் முகம். நரை விழுந்திருந்தும் எண்ணெய் தேய்த்துப் படிய வாரப்பட்டிருக்கும் கிராப். கடும் நீல நிறத்தில் அகலமான குறுக்குக் கோடுகள் போட்டிருக்கும் ஸ்லாக் சட்டை. தொளதொளண்ணு மின்னும் டெரிகாட்டன் கால் சராய், தோல் அலர்ஜி காரணமாக காலில் போட்டிருக்கும் கான்வாஸ் ஷூஷூ. 

‘எங்க அப்பா சாகிறப்போ எனக்குப் பத்து வயசு. நாங்க மூணு பேரில் நான்தான் மூத்தவன். அடுத்த வருஷம் எங்க அம்மாவின் அப்பாவும் அம்மாவும், அதுதான் எங்க தாத்தாவும் பாட்டியும் எங்க அம்மாவுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வச்சாங்க… அதிலெ எட்டு பேருங்க… அவரும் பாரிச வாயுப் பிடிச்சுப் படுத்த படுக்கை ஆயிட்டாரு. என் அம்மா வயித்தில் எனக்குப் பிறகு பொறந்தவங்க எல்லோரும் எனக்கு ஒண்ணு போலத்தான். எல்லோரையும் படிக்க வச்சேன். பெட்டைகளைப் படிக்க வச்சேன். பெட்டைகளை நல்ல இடத்தில் கெட்டிக் கொடுத்தேன்… இண்ணைக்கு அந்த ஈசோ அருளால் அப்படி ஒண்ணும் பெரிய கஷ்டம் இல்லாமல் வண்டி ஓடுது. பதினாறு வயதில், ரெண்டு வயசு கூட்டிவச்சு சர்வீஸில் வெறும் லைன் மேனாகப் புகுந்தவன் நான். ரிட்டயராக இன்னும் ரெண்டு வருடம்கூட இல்லே. இந்த முப்பத்தியஞ்சு வருஷ சர்வீஸில் வீட்டிலும் வெளியிலும் எதையெல்லாமோ நான் பார்த்து விட்டேன்… அனுபவிச்சுட்டேன். எனக்கெல்லாம் இல்லாத ஃப்ரஸ்ட்ரேஷனும், பெர்வர்ஷனுமா, சமயா சமயத்துக்குக் கையில் கட்டியிருக்கிற கடிகாரத்தில் மணியைப் பார்த்துவிட்டு சாப்பாட்டு மேஜைக்கு முன்னால் தண்டச் சாப்பாட்டுக்கு ஆஜராகும் இந்தப் பயல்களுக்கு?’ 

பியூன் சங்கரன் ‘அர்ஜண்ட்’ ப்ளாக் செருகியிருந்த ஒரு தடியான ஃபைலைக் கொண்டுவந்து வைத்துவிட்டுச் சென்றான். அதைக் கையில் எடுத்து நான் புரட்டியவாறு ‘என்னதான் ஆனாலும் வயசு வந்த பையன் அவன் கிட்டெபோய் இப்ப முரட்டுத்தனமாய் நடந்த உங்களை அவன் எப்படி சும்மா விட்டுட்டாண்ணுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது’ என்று சொன்னபோது அவர் ‘கடகட’வென்று சிரித்தார். 

‘சார்… எனக்கு ரிட்டயராக இன்னும் ரெண்டு வருஷம்கூட இல்லை என்பதெல்லாம் சரிதான். ஆனால், என் ஆரோக்கியமும், மனோ வீரியமும் அப்படி ஒண்ணும் அவன்கிட்டே தோற்றுப் போய் விடுகிற அளவுக்கு மோசமாயிடல்லே…’ 

பெல்லை அழுத்திச் சங்கரனை அழைத்து ஃபைலைக் கொடுத்தனுப்பி விட்டு, ‘ஆமா, ஸலூனுக்குப் போன உங்க மகன் மத்தாயி திரும்ப வராமல் கோவிச்சுக்கிட்டு அப்படியே போய் விட்டிருந்தா நமக்குத்தானே கஷ்டம்…!’ என்றேன். 

இப்போது அவர் முகம் மறுபடியும் சிறுத்தது. ‘என்ன சார்… திரும்பி வராமல் வேறு வழி? இந்தக் காலத்தில் கூட்டாளிகளும் சேக்காளிகளும் எல்லாம் சரிதான். ஆனா தவிச்ச வாய்க்கு ஒருத்தனாவது பச்சைத் தண்ணிகூட ஊத்துவானா? சமயம் கிடைச்சால் எல்லாவனும் சீசறுக்க யூ டுப்ரூட்டஸ்கள்தான். ஆமா… முன்னே நிக்கிறவனை மிதிச்சுத் தள்ளிக்கிட்டு மேலே மேலே போவணுமுண்ணுதான் ஒவ்வொருத்தனுக்கும் வெறி. தான் வாழ்ந்தால் மட்டும் போதாது. பிறர் தப்பித் தவறிக்கூட வாழ்ந்து விடக்கூடாது. அப்படி ஒரு சித்தாந்தம். ஸ்ட்ரகில் பார் எக்ஸிஸ்ட்டன்ஸோ என்ன எளவோ! உம் இங்கே வீட்டிலே செரிக்க சாப்பாடு கிடைச்சுக்கிட்டிருந்தா இதெல்லாம் எங்க தெரியும்? நாலு நாள் வயிற்றில் பாச்சை பிராண்டினால் மோக பங்கத்தை எல்லாம் மூட்டைகட்டி வச்சுவிட்டு மூட்டை தூக்கும்போது எல்லாவனுக்கும் இதெல்லாம் தெரிய வரும்.’ 

‘உலகன்னான! நான் சொல்றேன்ண்ணு நீங்க கோவிச்சுக்கக் கூடாது; பத்து வருஷங்களுக்கு முந்தி நீங்க போட்டுக் கொண்டிருந்த மாதிரி வெள்ளை, லைட் கலர் சட்டையா இப்போ போட்டுக்கிட்டிருக்கிறீங்க?’ 

‘என்ன சார்… இப்படிக் கேக்கிறீங்க… என் தம்பி மகன் வர்கீஸ் அவன் இப்போ ஸ்டேட்ஸில் வேலையாக இருக்கிறான். அவன் அங்கிருந்து அனுப்பி வைச்ச சட்டை இது. அதுதான் போட்டிருக் கிட்டிருக்கேன். அதைப் போலவா இந்தக் கண்றாவிகள்.’ 

‘சரி சரி இதுஎப்படி நடந்தது?’ 

‘நேற்றைக்கு ராத்திரி எத்தனை மணி ஆனாலும் ரெண்டிலெ ஒண்ணு பார்த்துடறதுண்ணு மேரிக் குட்டியிடம் சொல்லி, நல்ல டிக்காஷன் போட்டு ரெண்டு கப் சாயா குடிச்சு விட்டு, கொட்டு கொட்டுண்ணு விழிச்சுக்கிட்டுக் காத்திருந்தேன். ரெண்டரை மணி கழிஞ்சிருக்கும். நான் உறங்கி விட்டதாக நினைச்சுக்கிட்டு மெல்லப் பூனைபோல வந்து கேட்டைத் திறந்துகொண்டு மத்தாயி உள்ளே வந்தான் பொசுக்குண்ணு அள்ளிப் புடிச்சேன். தடிக் களுதே இவ்வளவு நேரம் எங்கேடா போயிருந்தே, ராஸ்கல்? அப்படீண்ணு கேட்டுக் கன்னத்தில் ரெண்டு போட்டேன்… இப்பவும் கை வலிக்குது’ என்று விரலைத் தடவிவிட்டு, மேலே அவர் தொடர்ந்தார். 

‘பிடிச்சிழுத்துக்கிட்டு வராந்தாவில் ஏறித் தயாரா வச்சிருந்த கத்தரிக் கோலை எடுத்து, ‘படுவா ஜூடாஸ் மாதிரி ஹிப்பி வேஷமாடா போடுறே…’ அப்படீண்ணு சொல்லி அவன் தலையிலும் முகத்திலும் எல்லாம் கரடி மாதிரி மதமதண்ணு வளர்ந்து கிடந்த முடியை இங்கேயும் அங்கேயுமா தாறுமாறா, கோணல் மாணலா சிரைத்தேன். பிறகு கையிலெ ரெண்டு ரூபாயைக் கொடுத்து, போடா, போய் முகமெல்லாம் வழிச்சு தலையில் கிராப் வச்சுக்கிட்டு வீட்டுக்குள்ளே வந்தா போதுமுண்ணு ஒரு கெல்தா கொடுத்து அனுப்பினேன்… பிறகு திரும்ப வந்தபிறகுதான் எனக்கு அவன் முகத்தையே பார்க்க முடியுது…’ 

உணர்ச்சி வசப்பட்டு உலகன்னானுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. டெலிபோன் அடித்தது. சூப்பரண்டிங் எஞ்சினியர் குரல்: ‘அந்த எமர்ஜன்ஸி ஃபுட் புரொடக்ஷன் ஃபைலை எடுத்துக்கிட்டு வா…’ 

அந்த ஃபைலையும் எடுத்துக்கிட்டு மாடிப் படியில் விரைந்து ஏறிக் கொண்டிருக்கும்போது மத்தாயியை நினைத்து ஏனோ என் மனசுக்குள் ஒரு கசிவு என்னை அறியாமல் என் கை என் தலையையும் முகத்தையும் வருடிக் கொண்டது. 

– 06.07.1975 – வஞ்சி நாடு 8/1975.

– நாகம்மாவா? (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2014, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *