மைண்ட்ஃபுல்னஸ் – ஒரு பக்க கதை





அமிர்தா ஆவி பறக்கும் ஸ்நாக்ஸ மற்றும் தேநீரோடு வரும்போது எல்லாம் மானேஜர் கரிகாலம் முகம் சுழிப்பார்.
அமிர்தா அலுவலக துப்புறவுப் பணியாளர். அவள் கணவன் அலுவலகத்துக்கு டீ, ஸ்நாக்ஸ் சப்ளை செய்பவன். இவள் வருகைக்குப் பின் அலுவலக ரெஸ்ட் ரூம் அனைத்தும் ஆபரேசன் தியேட்டர் அளவிற்கு அவ்வளவு சுத்தம்.
கை, கால், முகம் அனைத்தையும் அதற்குரிய உறைகளால் கவசமிட்டுக் கொண்டு ‘மைண்ட்ஃபுல்னஸு’டன் கடமையைச் செய்யும் துப்புறவு தேவதை.
சமோசாவின் வாசனை அமிர்தாவின் வருகையைச் சொல்லாமல் சொல்லியது. கணவன் கொண்டு வந்து செக்யூரிட்டி அறையில் வைத்துவிட்டுப் போவதை அமிர்தா ஒவ்வொருவருக்கும் சப்ளை செய்வாள்.
“விக்ரமன் சார்… இந்த லேடி கொண்டு வர ஸ்நாக்ஸையும், டீயையும் அருவருப்புப் படாம எல்லாரும் ருசிச்சிச் சாப்பிடறாங்களே… எப்படி சார்…?” கரிகாலன் கேட்டார்.
கேஷியர் விக்ரமன் சிறிதும் யோசிக்காமல் அதைச் சொன்னார் – “ஸார், குழந்தை நல மருத்துவரான உங்க மனைவி கர்பிணிகளுக்கு எனிமா கொடுத்து, மலம், ஜலம், சீதம், உதிரம் எல்லாத்தையும் தொட்டுத் துடைச்சு பிரசவம் பார்க்கற கையால நீங்க மூணு வேளையும் சாப்பிடறதில்லையா?…அது போலத்தான்…”
ரொம்ப நாள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்த நிம்மதியில் விக்ரமன் இருக்க, “எனக்கும் ஒரு சமோசா, டீ வைங்க…” என்று கேட்ட கரிகாலனை வியப்போடு பார்த்தாள் அமிர்தா. அவள் க்ளவுஸ் அணிந்த கை ஹாட்பாக்கினுள் சென்றது.
– கதிர்ஸ் – ஜனவரி – 1-15 –2021
![]() |
இயற்பெயர்: வரதராஜன் அ புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள் பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு) கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல்…மேலும் படிக்க... |