முற்றத்து மல்லிகை
கதையாசிரியர்: கோவிலூர் செல்வராஜன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 2, 2026
பார்வையிட்டோர்: 9
(2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மத்திய லண்டனிலிருந்து தெற்கு லண்டனுக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தான் சத்தியன். கிழமை நாட்களில் வேலைவிட்டு வீடு திரும்புகின்ற நேரம். எல்லா வீதிகளும் ட்ராபிக் ஜாமாக இருக்கும். இனி சிக்னல் நிறுத்தம். இப்படி பல சிக்கல்களுக்கு மத்தியில்தான் அவன் காரை செலுத்தவேண்டும். சில சமயங்களில் அவனால் அந்த நெருக்கடியை தாங்க முடியாமல் எங்கேயாவது ஒரு சந்தில் காரை திருப்பி விட்டு அவனையே நொந்துகொள்ளுவான். ஏன்தான் இந்த காரில் வந்தோம் என்றும் பேசாமல் ட்ரெயினில் வந்திருக்கலாம் என்றும் அலுத்துக்கொண்டு பாதை கொஞ்சம் சரிவந்த பின் மீண்டும் பயணத்தை தொடர்ந்த சமயங்கள் நிறைய உள்ளன.
இன்று அவன் நேரத்திற்கு வீட்டுக்கு போகவேண்டி இருந்ததால் சோர்ட் லீவில் மூன்று மணிக்கே வீட்டுக்கு புறப்பட்டு விட்டான். வீடுக்கு போன பிற்பாடு அங்கிருந்து மீண்டும் அவன் ஒரு முக்கிய நபரை சந்திக்க வெளியில் செல்ல வேண்டி இருந்தது. ஆம் அவன் தாயகத்தி லிருந்து இன்று வருகின்ற இசைக் கலைஞர் கிருஷ்ணன் அவர்களை வரவேற்க வானூர்தி நிலையத்திற்கு செல்லவேண்டும். அதனால்தான் நேரத்திற்கே புறப்பட்டு விட்டான்.
கிருஷ்ணன். ஆரம்பத்தில் ஒரு இசைக் குழுவை ஆரம்பித்து வடகிழக்கு கோவில் உற்சவகாலங்களில் தனது இசை நிகழ்ச்சியை ஒப்பந்தம் செய்யும் ஊர்களுக்கு தன் கோஷ்டியுடன் சென்று இசை நிகழ்ச்சி செய்து, மக்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்ற இசைக்கலைஞர். இவரை அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நன்றாக தெரியும். நாற்பது ஐம்பது வயதுக்காரருக்கு ஓரளவு தெரியும். இவர் எழுபதுகளில் ஈழத்து பொப்பிசை பாடல்களுக்கு இசை அமைத்தவர். மெல்லிசை பாடல்களுக்கு இசை வழங்கியவர் ஈழத்து தமிழ் திரைப்படங்களுக்கு இசை வழங்கியவர். பல பாடகர்களை உருவாக்கி விட்டவர். நாட்டுப்புற பாடல்கள், பலவற்றை எடுத்து அற்புதமான இசை வழங்கி அவற்றை ஜனரஞ்சகமாக்கியவர் கிருஷ்ணன் அவர்கள். அவரை லண்டனுக்கு கூப்பிட்டு மதிப்பளிக்க வேண்டும் என்று எண்ணிய பலருள் சத்தியனும் ஒருவன். பல வருடங்களுக்கு முன் இவரை கூப்பிட்டு லண்டனில் மதிப்பளிக்க வேண்டும் என்று முயற்சித்த போதும் அது பல காரணங்களால் தடைப்பட்டுப் போனது. இம்முறை வேறு ஒருவர் முயற்சித்து அது வெற்றி பெற்று இருக்கின்றது. அந்தவகையில் சத்தியனுக்கும் அது மகிழ்ச்சியைக் கொடுத்தது.
தாய் நாட்டில் இருந்த காலத்தில் சத்தியன் ஒரு பாடகனாக இருந்தான். பல பாடல்களை கிருஷ்ணன் இசையில் பாடி இருக்கின்றான். அவரோடு இசை நிகழ்சிகள் பலவற்றுக்கும் சென்று தனது பங்களிப்பை செய்திருக்கின்றான். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையால் அவன் புலம்பெயர்ந்து வர வேண்டியதாகப் போய்விட்டது. அவன் மட்டுமல்ல கிருஷ்ணன் அவர்களோடு மிக நெருக்கமாக இருந்த பலர் புலம்பெயர்ந்து பல நாடுகளிலும் வாழ்கின்றார்கள். தாயகத்தில் ஏற்பட்ட அந்த அசாதாரண நிலை, அன்று அரச பயங்கரவாத சட்டம் எல்லாம் சத்தியன் போன்றோரை புலம்பெயர வைத்தன. இப்போது போர் முடிந்து நாட்டில் அமைதி நிலவினாலும் இன்னும் மக்களின் மத்தியில் பல பிரச்சினைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது ஓரளவிற்கு எல்லோருக்கும் தெரிந்த விடயமே.
சத்தியன் தென்கிழக்கு லண்டனில் உள்ள அவனின் வீட்டுக்கு வந்துவிட்டான். அவசர அவசரமாக குளித்து உடைமாற்றிக்கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டு வந்து, பின் ஹைவே எடுத்து வானூர்தி நிலையம் விரைந்தான். அங்கு காரை பார்க் செய்துவிட்டு டேமினால் மூன்று அரைவலுக்கு சென்றான். அங்கு முன்னரே கிருஷ்ணன் அவர்களை லண்டனுக்கு அழைத்திருந்த பிரகாஷ், மற்றும் ஊடக நண்பர்கள் எல்லோரும் நின்று இருந்தார்கள். சத்தியனை எல்லோருக்கும் தெரியும் என்பதால் ஒருவருக்கொருவர் முகமன் கூறிக்கொண்டார்கள். ஒருபத்து நிமிடங்களின் பின்னர் லண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையத்தின் டேமினால் மூன்றின் பிரயாணிகள் வருகை கதவு திறந்தது. இசையமைப்பாளர் கிருஷ்ணன் தன் பெட்டிகளை தள்ளு வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வந்துகொண்டு இருந்தார்.
காத்து நின்ற அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி. அவருக்கு பூக்கொத்து கொடுத்து வரவேற்றுக்கொண்டனர். லண்டன் மாநகரம் எங்கள் தாயக இசை வாருதியை வரவேற்கின்றது என்ற வாழ்த்தும் சொல்லிக் கொண்டார்கள். சத்தியன் அவரை ஆரத்தழுவிக்கொண்டான். சத்தியனை சந்தித்ததில் அவருக்கும் பெரும் மகிழ்ச்சி.
எல்லோரும் வந்து ஒரு கபே ஸ்டாலில் அமர்ந்து கொண்டார்கள். பேசுக்கள் தொடங்கின.
“எப்படி அண்ணை பிரயாணம் எல்லாம் நல்லா இருந்ததே” சத்தியன் கேட்டான்
“ஓ நல்லபடியாக இருந்தது. அப்படி இருக்காட்டாலும் வந்து தானே ஆகவேண்டும் இல்லியே. ப்ளைட்டில் இருந்து குதிக்கவா முடியும்” ‘அண்ணை இனி தொடங்கிடுவார். நக்கலுக்கும் பகிடிகளுக்கும் பஞ்சம் இனி இல்லை. நானும் இரண்டு கிழமை லீவு போட்டுவிட்டு என் மனச் சுமைகளை குறைக்க அண்ணையுடன்தான் இருக்கபோறன்” என்று சத்தியன் சொன்னான்..
சத்தியனும் தனிமையில் இருப்பதால் அவனுக்கும் ஒரு பொழுது போன மாதிரி இருக்கும். இனி இசைவாருதியை மிக புரிந்து வைத்திருப்பவன். கடந்த வருடமும் தாயகம் சென்றபோது இவரை சந்தித்து,பாடல்கள் மூன்று செய்து கொண்டு வந்தவன். மற்றவர்களை விட சத்தியன். கிருஷ்ணன் அவர்களை பார்த்துக் கொள்வதற்கு. மிக பொருத்தமான ஆள். அதே நேரம் கிருஷ்ணனுக்கும் மற்றவர்களை விட சத்தியனை நன்கு தெரியும் ஒன்று. மற்றது அவரின் பகிடிகளை எல்லோரும் சகித்துக் கொள்வார்கள் என்று எப்படி சொல்வது. ஆக அவருக்கும் சத்தியனுடன் இருப்பது பிடித்தமானதே.
“சத்தியன் அண்ணே ஐயாவை நீங்கள் வீட்டில் வைத்திருக்க முடியுமா அண்ணே.” திடீர் என்று கேட்டான் அவரை ஸ்பொன்சர் செய்த பிரகாஷ். “தம்பி.. வித் ப்ளசர். அவரை என்னுடன் வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. ஒன்றும் பிரச்சினை இல்லை.”
“தாங்க்ஸ் அண்ணன் நான் ஐயாவை எங்கு தங்க வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.”
“நானும் இதை பற்றி யோசிக்கல்ல தம்பி. அவரை வைத்திருப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். நான் கூட்டிக்கொண்டு போகின்றேன். இனி உங்களுக்கு கவலை வேண்டாம்”
“பார்த்தீரா பிரகாஷ் இசையும், பாட்டும் சேர்ந்து கொள்ளும். நாம ரசிகர்கள்தானே தள்ளி இருந்து ரசிப்போம்” என்று சொன்னார் ஊடக நண்பர் நாதன். சுவாரஸ்சயமாக பேசுக்கள் சென்று, காப்பியும் குடித்து முடித்த பின்னர் புறப்பட்டார்கள். சத்தியன், கிருஷ்ணன் அவர்களை அழைத்துக்கொண்டு தனது கார் பார்க் பண்ணிய இடத்திற்கு வந்தான் “அண்ணே லண்டன் குளிர் ஒரு வித்தியாசமான குளிர். ஸ்னோ இருக்காது ஆனால் ஸ்னோ இருக்கும் நாடுகளைவிட பயங்கர குளிராக இருக்கும். நல்லா மப்பளரை கழுத்துக்குள் கட்டிக்கொள்ளுங்கள். இந்தாங்க இந்த தொப்பியை போட்டு காதுவரைக்கும் இழுத்து விடுங்கள். குளிர் காதுக் குள்ளாலதான் போகும் கண்டியளே”
“எனக்கு தொப்பியை தந்துபோட்டு நீர் என்ன கையாலையே காதுகளை பொத்தப்போறீர்”
“அண்ணே வேணாம் அண்ணே.. வேணாம். எனக்கு காருக்குள் போனால் தேவையில்லை. வீட்டில் நிறைய தொப்பிகள் இருக்கின்றன.”
“சரி வேணாம் எண்டால் விடவே போறீர்?” என்று சத்தியன் கொடுத்த தொப்பியை வாங்கி போட்டுக் கொண்டார். சத்தியனின் கார் வானூர்தி நிலையத்திலிருந்து புறப்பட்டு எம்.25 ஹைவேயிக்குள் பிரவேசித்தது.
“நல்ல அகலமான ரோடு. போறதுக்கு ஒரு பாதை வாறதுக்கு ஒருபாதை ஒரு பிரச்சினையும் இல்லை. எங்கட ஏ நைனும் இப்போ நல்லா இருக்குதான். நீர் வரும்போது கண்டிருப்பீர்தானே”
“ஓம். நல்லாத்தான் இருக்கு. ஆனால் இப்படி வாறதுக்கும் போறதுக்கும் வெவ்வேறாக இல்லையே. ஒரே ரோட்டு. எப்படி கண்மண் தெரியாமல் ஓட்டுகிறானுகள் நான் வரும்போது உயிரைக் கையில பிடிச்சுகொண்டல்லே வந்தனான்”
“நீர் சொல்றது சரிதான் சத்தியா. கண்டபடி கொன்றோல் இல்லாமல் ஓட்டி நாள்தோறும் ஆக்ஸிடென்ட். இந்த மோட்டார் சைக்கிள் காறங்க ஆக மோசமா இருக்கிறானுகள். அவனுகள்தான் மேலபோக அதிகமாக டிக்கட் வாங்கிற ஆட்கள். சும்மா தும்பி மாதிரியில்ல பறக்குறானுகள். யாழ்ப்பாணத்துக்குள்ளும். பண்ணைப்பாலம் தாண்டியும் இவனுகள் கண்டபடிதான் ஓட்டுறானுகள்” என்று யாழ்ப்பாணம் செல்லும் பாதை பற்றியும், யாழ், மற்றும் தீவுப்பகுதிக்கு செல்லும் பாதை பற்றியும் பேசிக் கொண்டு வர சத்தியனின் வீடும் வந்து விட்டது.
வீட்டுக்குள் வந்ததும், ஹாலில் இசை வாருதி கிருஷ்ணன் அவர்களை இருக்கவைத்துவிட்டு சத்தியன் அவரின் பெட்டிகளை கொண்டு சென்று வீட்டின் மேல்தளதில் உள்ள ஒரு அறையில் வைத்துவிட்டு, அந்த அறையினை அவசரமாக அழகாக தயார் செய்து கட்டிலில் புதிய விரிப்புகள் எல்லாம் விரித்து தலையணைக்கு புதிய உறைபோட்டு கச்சிதமாக அலங்கரித்தபின் கீழே வந்து சொன்னான்.
“அண்ணை வாருங்கள் மேலே போவோம் என்று.” “மேலேயோ என்ன இவ்வளவு அவசரம் இன்னும் கொஞ்சக்காலம் இருந்துவிட்டு போவோமே இப்பதானே எழுபது தாண்டி சில வருடங்கள் ஆகின்றன” என்றார் வழமையான நகைச்சுவையுடன்.
“அங்க போற நேரம் வந்தால் எல்லாரும் போறதுதான் அண்ணே. அது வாற நேரம் வரட்டுக்கும், இப்ப மேல் மாடிக்கு செல்வோம் வாங்க” என்றான் சத்தியன். சத்தியனும் ஈட்டிக்கு போட்டியாக நகைச்சுவையுடன் பேசக்கூடியவனே.
“இதுதான் உங்கள் அறை . உங்கள் பெட்டிகள் இங்கே இருக்கின்றன. நீண்ட பிரயாணம் அல்லே. நல்ல உடல் களைப்பாக இருக்கும். எதிரே குளியல் அறை இருக்கிறது. உடுப்பு மாற்றி, குளித்து விட்டு ரெடியாகுங்கள் நான் கீழே போய் சாப்பாடு செய்யிறன்.”
“என்ன சாப்பாடு செய்யப்போகிறீர் பிரியாணியா, அல்லது சோறு கறியா”
“நக்கல்தானே ..இல்ல இது நக்கல்தானே… நான் என்ன சாப்பாடு செய்யமாட்டன் என்று நினைத்து கதைக்கிறீங்க. அப்படித்தானே பாருங்கள் எப்படி ஒரு உப்புமா கிண்டுகின்றேன் என்று”
“சரி சரி கிண்டு கிண்டு ஆனால் தண்ணி வராமல் பார்த்துக்கொள் இல்லாட்டி தண்ணி வந்திடும்”
“சிவா சிவா. இந்த கிருஸ்ணனை காப்பாற்று” என்ற சத்தியன் கீழே இறங்கி வந்து சமையலறையில் இரவுச்சாப்பாடு செய்யத் தொடங்கினான். அவன் சொன்னபடி உப்புமாதான் செய்தான். இதை செய்வதற்கு அவன் தனது மறைந்த மனைவியிடம் கற்றுக் கொண்டிருந்தான்.
கிருஷ்ணன் அவர்கள் குளித்து முடித்து, உடைமாற்றிக்கொண்டு கீழே வரவும். சத்தியன் சுடச்சுட அவருக்கு முதலில் தேநீர்போட்டு கொடுத்து, தானும் ஒரு கப்பில் எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்து தேநீர் அருந்திக்கொண்டே பேசினார்கள்.
“சொல்லுங்க அண்ணே பிரகாஷ் எப்படி நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருக்கிறாராம் அது பற்றி உங்களிடம் சொல்லி இருக்கிறாரா”
”அவர் ஒரு நிகழ்ச்சி ஒழுங்கு செய்திருக்கிறார். நாளை மறுநாள், அது சனிக்கிழமை இல்லையா”
“ஓம் சனிக்கிழமைதான். நாளைக்கு வெள்ளிக்கிழமை நான் ஊடகங்களுக்கு சொல்லி இருக்கின்றேன். தொலைக்காட்சி பேட்டி நிகழ்ச்சி ஒன்று இருக்கின்றது. அதற்கு செல்வோம் சரிதானே. பேந்து நிகழ்ச்சி முடிந்த பின் லண்டனை சுற்றிப் பார்ப்போம்.”
“பார்ப்போமோ இல்ல சுற்றிக் காட்டுறதா”
“அண்ணே நாங்களும் இப்படி உங்களைப்போல யாரும் லண்டனுக்கு வரும்போதுதான் லண்டன் பார்க்கிறது கண்டியளோ. இல்லாட்டிக்கு எங்களுக்கு ஏது நேரம். வந்தவையோட நாங்களும் கொண்டு காட்டுற சாட்டில் பார்க்கிறதுதான்”
“அப்பிடியே அப்ப சரி பார்ப்போம். முதலில் நிகழ்ச்சி நல்லபடி முடியட்டும் “என்று அவர் சொல்லும்போதே சத்தியனின் அலைபேசி அலறியது.
“வணக்கம் சத்தியன்… ஆ சொல்லுடாப்பா. நாங்கள் வந்து சேர்ந்து விட்டோம். அண்ணையும் குளித்து வந்து ரிலாக்ஸ் பண்ணுறார் இனி சாப்பிட்டுவிட்டு அவரை படுக்கைக்கு அனுப்பத்தான். ஆ சரி கொடுக்கிறன்” என்ற சத்தியன் அலைபேசியை கிருஷ்ணன் அவர்களிடம் கொடுத்தான்.
“ஹலோ. ஆ சொல்லுங்க பிரகாஸ். ஆ… இங்கு நல்ல வசதியாக இருக்கிறன். சத்தியனோடு இருப்பதால் எனக்கு சந்தோஷம். சாப்பாடோ. இங்கு எல்லாம் அந்தமாதிரி இருக்கு. நீங்க சனிக்கிழமை நிகழ்ச்சிய நல்லபடி செய்யப் பாருங்கள்”
“ஓம் ஐயா நாளைக்கு உங்கள் பாடல்களை பாடும் பாடகர்களை ரிஹர்சல் பார்க்க வரச் சொல்லி இருக்கிறன். நீங்கள் சத்தியன் அண்ணாவுடன் டிவி இன்டர்வியூக்கு செல்லுங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும் நான் பார்த்துக்கொள்கிறன்”
“சரி அப்பு நாளைக்கு நான் சத்தியனோடு தொலைக்காட்சி நிலையத்திற்கு செல்கிறேன் பை” என்று பேசி கட் பண்ணிக்கொண்டார். நேரம் சற்று சென்றதும் இரவு சாப்பாடு முடித்து இருவரும் தூங்க போனார்கள்.
அடுத்தநாள் சத்தியன் இசை வாருதி கிருஷ்ணன் அவர்களை கூட்டிக் கொண்டு லண்டன் தமிழ் தொலைக்காட்சி நிலையத்திற்கு சென்றான். இவர்களுடன் சத்தியனின் நண்பன் சேகரும் இணைந்து கொண்டான். சேகரும். இசைவாருதி கிருஷ்ணன் அவர்களும் தாயகத்தில் பரீட்சய மானவர்களே. சேகரும் ஊடகத்துறை, வானொலி, தொலைக்காட்சி என்று பணிபுரிந்துவிட்டே வந்தவன். கவிஞர், பாடகர், நடிகர் என்று பன்முகத் திறமை கொண்டவன். தொலைக்காட்சி நிலையத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் தம்பா அவர்கள் வரவேற்றுக்கொண்டார்.
பின்னர் நேர்காணல் நிகழ்ச்சி இடம்பெற்றது. அந்த நிகழ்ச்சியில் மிக சுவாரசியமான கேள்விகளை கேட்டார் நிகழ்ச்சி தயாரிப்பாளர். குறிப்பாக கிருஷ்ணன் அவர்களின் இசைபயணம் எப்படி,எப்போது தொடங்கியது.? ஆரம்பத்தில் கோவில் திருவிழா காலங்களில் ஊரூராக சென்று கச்சேரி செய்வதையும் அந்த நேரம் கொடுக்கப்பட்ட கொடுப்பனவு எவ்வளவு என்ற தகவல்கள். பாடகர்களை எப்படி தெரிவு செய்து கோஷ்டியில் இணைத்த தகவல்கள். எல்லாம் பேசப்பட்டன. தயாரிப்பாளரின் மற்ற கேள்விகள் ஈழத்து மெல்லிசையில் இசையமைப்பாளரின் பங்கு பற்றியும், அதன்பின் கொழும்பில் தாள வாத்திய கலைஞர் காந்தன் அவர்களை சந்தித்து அவரை தன் கோஷ்டியில் இணைத்து கிருஷ்ணன் காந்தன் இரட்டையர் குழு என்று பல ஈழத்து பாடல்கள் செய்தது பற்றியும். ஈழத்து திரைப்படங்களுக்கு இருவரும் சேர்ந்து இசை அமைத்தமை பற்றியும் இருந்தன. இந்த கேள்விகளுக்கெல்லாம் மிக தெளிவான பதில்கள் கிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்டன. இடையே நிகழ்ச்சி தயாரிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க இசையமைத்த படத்திலிருந்து ஒரு பாடலும் கிருஷ்ணன் அவர்களால் பாடப்பட்டது. இறுதியாக லண்டன் மாநகருக்கு முதன் முதலாக எமது தாயக இசைக்கலைஞர் ஒருவரை வரவழைத்து அவருக்கு மதிப்பளிக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் நல்ல உள்ளங்களை பாராட்டுவதாகவும் நாளை சனிக்கிழமை நடைபெற இருக்கும் நிகழ்ச்சி இனிதே நடந்தேற லண்டன் தமிழ் தொலைக்காட்சி வாழ்த்துவதாகவும் சொல்லி பேட்டியை முடித்துகொண்டார் தயாரிப்பாளர் தம்பா அவர்கள். லண்டன் தமிழ் தொலைக்காட்சி நேர்காணல் நல்லபடியாக நடந்ததில் சத்தியனுக்கும். சேகருக்கும் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியோடு வீடு வந்து சேர்ந்தார்கள். அன்று இரவு ஒரு ரெஸ்டாரென்ட்டில் பல நண்பர்கள் சேர்ந்து கிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு இரவு விருந்து கொடுக்க இருந்தார்கள். அன்று மாலை அதுவும் மிக நன்றாக நடந்து முடிந்தது.
சனிக்கிழமை. மேற்கு லண்டனில் உள்ள ஓர் அரங்கில் நிகழ்ச்சிக் குரிய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள் பெரும்பாலும் முன்னரே விற்கப்பட்டு இருந்தன. அதனால் கூட்டம் மண்டபத்தினுள் நிறைந்துகொண்டு இருந்தது. மேடையில் வாத்திய கலைஞர்கள் தங்கள் வாத்தியங்களை சரிசெய்துகொண்டு இருந்தார்கள். தொலைக்காட்சி, வானொலி மற்றும் எழுத்து ஊடகவியலாளர்கள் எல்லோரும் வந்து இருந்தார்கள். சத்தியனின் வீட்டிலிருந்து இன்றைய விழாவின் நாயகனை அழைத்துக்கொண்டு சத்தியனின் கார் புறப்பட்டது. ஒருமணி நேர பயணத்தின் பின்னர் நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்து கார் தரிப்பு இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே நிறைய கார்கள் பார்க் பண்ணப்பட்டு இருந்தன. அதைப் பார்த்ததும் சதியனுக்கும்,சேகருக்கும் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியோடு விழா நாயகனை அழைத்துக்கொண்டு அரங்கிற்குள் சென்றார்கள்.
விழாவின் அமைப்பாளர் நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்னும்பலர் வரவேற்றுக்கொண்டார்கள். முன் வரிசையில் போடப்பட்டு இருந்த ஒரு சிறப்பு இருக்கையில் இசைவருதி கிருஷ்ணன் அவர்கள் அமர்த்தப் படுகின்றார். நிகழ்ச்சித் தொகுப்பாளர் அவர்கள் இவர்கள் மூவருக்கும் தெரிந்தவர். அங்கு வந்திருந்த அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு திரு.கிருஷ்ணன் அவர்களை நன்கு தெரியும். அனைவரும் அறுபதுகளில் கோவில் திருவிழாக்களில் அவரவர் ஊர்களில் இவரின் இசையைகேட்டும். இவர் அந்த காலத்தில் வாசித்த எக்கோடியன் வாத்தியத்தை கண்டும் களித்தவர்களே. இன்று இந்த அரங்கில் இவரைக் கண்டதும் மிகவும் சந்தோசப்பட்டார்கள். நிகழ்ச்சி தொடங்கியது. தொகுப்பாளர் பேசினார். “வணக்கம் அன்பு உறவுகளே. மிக்க மகிழ்ச்சியுடன் உங்களை வரவேற்றுக் கொள்கின்றோம். முதல் முறையாக ஈழத்து இசைக்கலைஞர் ஒருவரை இந்த லண்டன் மா நகருக்கு வரவழைத்து அவருக்கு மதிப்பும், கௌரவமும் செய்ய போகின்றோம். இந்த நிகழ்வுக்காக திரளாக வந்திருக்கும் உங்கள் அனைவரையும் மீண்டும் இந்த விழா ஏற்ப்பாட்டாளர் திரு.பிரகாஷ் அவர்கள் சார்பில் வரவேற்று மகிழ்கின்றோம். திருபிரகாஷ் அவர்களுக்கும் உங்கள் சார்பாக நன்றியை கூறுவோம். ஒரு ஈழத்துக் இசைக் கலைஞர் கண்டிப்பாக அவர் வாழும் காலத்திலேயே கௌரவிக்கபடவேண்டும் என்று எண்ணி அவரை இங்கு வரவழைத்து உங்கள் மத்தியில் உங்கள் ஆதரவோடு அவருக்கு மதிப்பளிப்பது பாராட்டத்தக்கது. இதுவரை காலமும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கே வாசம் இருக்கும் என்று நினைத்து எங்கள் முற்றத்து மல்லிக்கையை முகராமல் விட்டு விட்டோம். தமிழ் நாட்டு பாடகர்கள், நடிகர்கள் என்றால் அவர்களை முண்டி அடித்து வந்து பார்த்துப்போன எம்மவர்கள் இன்று முதல் முறையாக பெரும் திரளாக இசைவாருதி கிருஷ்ணன் அவர்களை காணவும், அவருக்கு கௌரவம் செய்யவும் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமே. சரி இப்போது இவர் இசையமைத்த பல பாடல்களை இந்த மேடையில் பாடகர்கள் பாட இருக்கின்றார்கள் அவற்றை முதலில் கேட்போம்” என்ற தொகுப்பாளார் அரங்கின் பலத்த கரவொலிக்கு மத்தியில் முதல் பாடகரை அழைத்தார். அப்படி பல பாடகர்கள் சிறப்பாக இவரின் பாடல்களை மேடையில் பாடினார்கள். அதை கேட்டு மன மகிழ்ச்சியுடன் இருந்தார் கிருஷ்ணன் அவர்கள். அவருக்கு ஐம்பது வருடங்களுக்கு முன் இருந்த பரவசம் அது.
இனி விழாவின் உச்சக்கட்டம் இசை வாருதி மதிப்பளிகப்படல். மேடையில் முக்கிய ஒருசிலர் இருக்க மக்களின் பலத்த கரகோசத்திற்கு மத்தியில் திரு.கிருஷ்ணன் அவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு சிம்மாசனம் மாதிரியான ஒரு இருக்கையில் அமரவைக்கப்பட்டார். அதன் பின் நிகழ்ச்சி அமைப்பாளர் பிரகாஷ் உரை நிகழ்த்தினார். அவரும் தனது உரையில், இதுவரை காலமும் இங்கு தென்னிந்திய கலைஞர்கள்தான் வந்து போய் கொண்டிருந்தார்கள். அவர்களை இங்கு அழைப்பதற்கு பெரும் செலவு செய்ய வேண்டி வரும். விமானத்தில் முதல் வகுப்பு இருக்கை தொடக்கம். இங்கு தங்க ஐந்து நட்சத்திர விடுதி வரை கொடுக்க வேண்டி இருந்தது. ஒருசில விதிவிலக்கு இருக்கலாம். இப்போதுள்ள சுப்பர் சிங்கர்கள் கூட இப்படிதான் எதிர்பார்க்கின்றார்கள். இவர்களை விட எங்கள் நாட்டு கலைஞர்களை ஏன் கூப்பிட்டு எமது கலை வடிவத்தையும் ரசிக்க முடியாது என்ற எண்ணம்தான் என்னை ஐயா கிருஷ்ணன் அவர்களை இங்கே அழைக்க தூண்டியது. தொகுப்பாளர் சொன்னதுபோல் எங்கள் முற்றத்து மல்லிகைக்கும் மணமிருக்கின்றது என்பதை இன்று நாம் அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். இந்த மேடையில் இசைக்கப்பட்ட அனைத்து பாடல்களும் தென்னிந்திய பாடல்களுக்கு இணையானவையே. இப்படியான பாடல்களை தந்த ஐயாவை பாராட்டி மதிப்பளிப்போம் ” என்று கூறி அவரை மேடையின் முன்னுக்கு அழைத்து பொன்னாடைபோர்த்தி, பாராட்டு பத்திரம் வழங்கி, பொற்கிழியும் கொடுத்து பெரிய அளவில் கௌரவம் செய்தார்கள். சிறப்பு அதிதிகள் கூட பேசினார்கள். அவர்களும் தாய்நாட்டுக் கலைஞர்கள் அடிக்கடி இங்கு வரவழைக்கப்பட்டு பாராட்டப்படவேண்டும் என்ற கருத்தையே முன் வைத்தார்கள்.
கடைசியில் திரு.கிருஷ்ணன் அவர்களின் ஏற்புரை இருந்தது. அவர் தன் உரையில் “இந்த வயதில் என்னை இவ்வளவு தூரம் வரவழைத்து கௌரவம் செய்தமைக்கு நன்றி புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது மக்கள் மனங்களில் நான் இன்னும் இருப்பது நெகிழ்ச்சியுடன் கூடிய மகிழ்ச்சி தருகின்றது. என்னை இங்கு வரவழைத்த தம்பி பிரகாஷ். என்னை நன்றாக பார்த்துக்கொண்ட சத்தியன் ஆகியோருக்கும் நன்றி. இந்த நிகழ்வை என் வாழ்நாளில் என்றும் மறக்கப் போவதில்லை” என்று தன் ஏற்புரையை முடித்துக்கொண்டார். அதை தொடர்ந்தும், பல பாடல்கள் இசைக்கப்பட்டன. நான்கு மணி நேரத்திற்குப்பின் நிகழ்ச்சி மிக வெற்றியுடன் நிறைவுக்கு வந்தது. முடிவில் பலர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். எல்லோரையும் சந்தோசப்படுத்திவிட்டே சத்தியனும், சேகரும் ஈழத்து இசைவாருதி, நமது முற்றத்து மல்லிகையை அழைத்துக் கொண்டு வீடு சென்றார்கள். செல்லும்போது வழமைபோல் காருக்குள் கிருஷ்ணன் அவர்களின் நகைச்சுவையும், சத்தியனின் பதிலடியும் இருந்தது. சேகருக்கு கொண்டாட்டம் தான். அதே நேரம் தாயாக கலைஞன் ஒருவன் கௌரவிக்கப்பட்டான் என்ற பெருமிதம் அவர்கள் இருவருக்கும் இருந்தது.
– கொத்து ரொட்டி (சிறுகதைத் தொகுப்பு), முதற்பதிப்பு: ஆடி 2018, லக்கி மீடியா, லண்டன்.
![]() |
கோவிலூர் செல்வராஜன் - ஒரு ஈழத்து பாடகர், நடிகர், கவிஞர் மற்றும் பத்திரிகை ஆசிரியர். இலங்கை வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும்,பல்துறைக் கலைஞராகவும் இருந்தவர். இவரது இயற்பெயர் செல்வராஜன் இராசையா. இவர் கிழக்கு மாகாணம்,அம்பாறை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில் என்னும் ஊரிலே 18.09.1952 ல் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை திருக்கோவில் மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும்,பாடசாலைக் கல்வியை திருக்கோவிலில் இருக்கும் தம்பிலுவில் மகாவித்தியாலதிலும் உயர் கல்வியை மட்டக்களப்பிலும், கற்று பேராதனை பல்கலைக்கழகத்தில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கொட்டு மேளம்
தி.ஜானகிராமன்
September 12, 2026
பிடிவாதம்
இரா.கலைச்செல்வி
September 9, 2026
புத்தகம் சுமக்க வேண்டிய கைகள்
எஸ்.மதுரகவி
September 9, 2026
