முன்போலவே பழைய காகித விற்பனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 2,506 
 
 

ஒருவன் தெருத் தெருவாகச் சென்று, பழைய பேப்பர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருள்களை வாங்கி, கடையில் விற்று, அந்த வருமானத்தில் சாப்பிட்டு வந்தான்.

சில மாதங்களில் அவனுக்குக் கொஞ்சம் பணம் சேர்ந்தது.

பழைய பேப்பர் வியாபாரத்தை விட்டு விட்டு, கண்ணாடிப் பாத்திரங்களை வாங்கி, கூடையில் வைத்து வியாபாரம் செய்யலானான்.

ஒரு நாள் மிகவும் களைத்துப் போய், கூடையை தரையில் வைத்து விட்டு, இளைப்பாறினான். அப்படியே கண் அயர்ந்தான். அதோடு அப்படியே கற்பனையில் , மனக் கோட்டை கட்டத் தொடங்கினான். “பழைய பேப்பர் வியாபாரத்தில் கொஞ்சமாகத் தான் லாபம் கிடைத்தது, இப்பொழுது, கண்ணாடிப் பாத்திர வியாபாரத்தில், கூடுதலாக லாபம் வருகிறது. இன்னும் ஒரு வருடத்தில் ஒரு கடையைத் தொடங்கி, உட்கார்ந்தபடியே, வியாபாரம் நடத்தலாம். கிடைக்கிற லாபத்தில், ஒரு சிறிய வீடு வாங்கலாம். அதன் பின், திருமணம் செய்து கொள்ள வேண்டியது தான். என்ன ஆனாலும். மாமாவின் மகளைத் தான் கட்டிக் கொள்ள வேண்டும்.

அவள் என்னிடம் பணிவோடு கனிவாக நடக்காமல் கர்வத்துடன் நடந்து கொண்டால், “போடி! உங்க அப்பன் வீட்டுக்கு என்று காலால் ஒரு உதை கொடுப்பேன்” என்று எண்ணிக் கொண்டு, ஒரு உதை விட்டான். எதிரே காலடியில் கூடையில் இருந்த கண்ணாடிப் பாத்திரங்கள் எல்லாம் உடைந்து சிதறின.

சத்தம் கேட்டு விழித்துப் பார்த்தான், அவ்வளவும் நொறுங்கிப் போய்விட்டன. அதைக் கண்டு வருந்தி அழுதான்.

பழையபடி பழைய பேப்பர் வாங்கி விற்கத் தொடங்கினான்.

– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *