முன்பதிவு




தானும், மனைவி மேகலாவும் வேலைக்கு சென்று வருவதால் தன்னுடைய அப்பாவை சரிவர கவனிக்க முடியவில்லை என்ற ஒரு குறை ராகவனுக்கு உண்டு.
மேலும், அவனது மனைவி மேகலாவுக்கும் தற்போதைய நவீன யுக மருமகள்களை போல (விதி விலக்காக தனது மாமனாரை அப்பா போல நடத்தும் மருமகள்களும் உண்டு ) மாமனாரை தங்கள் கூடவே வைத்துக்கொள்வது எட்டிக்காயாக கசந்தது.
இதன் காரணமாக மாமனாரை நேரிடையாகவும், மறைமுகமாகவும் குறை சொல்லிவந்தாள். மேலும் சமீப காலமாக ராகவனிடம் மாமாவை எங்காவது முதியோர் இல்லத்தில் சேர்க்கும்படியும் வற்புறுத்தி வந்தாள்.
மனைவியின் தொல்லை தாங்காமல், தனது தந்தையை நகருக்கு வெளியே அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்து விடலாம் என முடிவு செய்து, அப்பாவிடமும் பக்குவமாக பேசி அவரை இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக்கொள்ள வைத்திருந்தான்.
எனவே, முன்கூட்டியே சென்று விசாரித்து, பணம் கட்டிவிட்டு மறுநாள் தந்தையை கூட்டி வரலாம் என நினைத்து தனது எட்டு வயது மகனுடன் அந்த முதியோர் இல்லத்திற்கு சென்றான்.
முதியோர் இல்ல பொறுப்பாளர் வரவேற்று, அமர செய்தார். பின் ராகவனை பார்த்து, சார், உங்களுக்கு என்ன வேணும்? யாரையும் பார்க்கணுமா? என கேட்டார்.
இல்லை, எனது தந்தையை இந்த முதியோர் இல்லத்தில் சேர்க்க எண்ணியுள்ளேன். அதனால் இன்று விசாரித்து பணம் கட்டிவிட்டு நாளை அப்பாவை கூட்டிவரலாம் என்று நினைத்துள்ளேன் என்றான் ராகவன்.
அவனை உற்று பார்த்த இல்ல நிர்வாகி, sorry சார், நீங்க நினைப்பதுபோல இந்த முதியோர் இல்லத்தில் உடனடியாக யாரையும் சேர்க்க முடியாது.,
இந்த இல்லம் முழுக்க முழுக்க சேவை மனப்பான்மையில் நடத்தப் படுவதால் மிக குறைந்த அளவிலே நபர்கள் சேர்த்து கொள்ளபடுவார்கள்.
எனவே, இந்த இல்லத்தில் சேர்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். நாங்க எப்போது வாய்ப்பு வருமோ அப்போது உங்கள தொடர்பு கொள்வோம் என கூறினார்.
நன்கொடை எவ்வளவு வேண்டுமென்றாலும் தருகிறேன், உடனடியாக அனுமதிக்க முடியுமா? என கேட்டான் ராகவன்.
நாங்கள் யாருடைய நன்கொடையையும் எதிர் பார்க்காமல் டிரஸ்ட் மூலம் இந்த இல்லத்தை நடத்தி வருகிறோம். எனவே, உங்கள் நன்கொடை எங்களுக்கு தேவை இல்லை, வேண்டுமென்றால் உங்கள் தந்தையை சேர்க்க முன்பதிவு செய்துவிட்டு செல்லுங்கள், நாங்கள் விரைவில் அழைக்கின்றோம் என சொல்லிவிட்டு முன்பதிவு படிவத்தை ராகவனிடம் அளித்தார்.
இதையெல்லாம் அருகில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த ராகவனின் மகன், ” அப்பா, இன்னொரு form வாங்கி உங்க பேரையும் எழுதி கொடுத்துடுங்கப்பா, அப்பதான் உங்களையும் இன்னொரு நாள் சேத்துக்குவாங்க ” என புரிந்தோ புரியாமலோ அப்பாவிடம் கூறினான்.
இதை கேட்ட ராகவனுக்கு தலையில் சம்மட்டியால் அடித்தது போலிருந்தது,
உடனே இருக்கையை விட்டு எழுந்த ராகவன், கனத்த இதயத்துடன் தலை குனிந்தவாறு படிவத்தை நிர்வாகியிடம் திருப்பி கொடுத்து விட்டு, என்னை மன்னியுங்கள், தெரிந்தோ, தெரியாமலோ எனது மகன் எனக்கு பாடம் புகட்டிவிட்டான், நான் வருகிறேன் என்று மகனுடன் கிளம்பினான் – என்ன நடந்தாலும் சரி, தனது தந்தையை அவரது இறுதி காலம் வரை தன் கூடவே வைத்துக்கொள்வது என்ற உறுதியுடன்.