முதலைகள்
(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஆ!.. என்னங்க.. இங்கே ஓடி வாங்க.. என்னங்க.. என்னங்க.. எங்கிருக்கீங்க?..”
திலகாவின் அலறல் வீட்டையே அதிரவைத்தது.
“என்னம்மா?.. ஏன் இப்படிக் கத்துறீங்க?..”
பதினேழு வயது பிரஷாந்த் ஓடி வந்து திறந்திருந்த வாசற் கதவைப் பார்க்கிறான்.
“அப்பா எங்கேடா?.. சீக்கிரம் போய்க் கூப்பிடு”
பதற்றத்துடன் ஓடுகிறான் மகன்.
“அப்பா குளிச்சுக்கிட்டிருக்காங்கம்மா..”
பிரஷாந்தின் குரல் சமையலறையிலிருந்து கேட்டது.
“மேடம், என்ன ஆச்சு?…”
பணிப்பெண் ஓடி வருகிறாள்.
“இங்கே பாரு சரசு.. பூ ஜாடியை எல்லாம் போட்டு உடைச்சிருக்காங்க… கதவு பூராவும் சிவப்புச் சாயத்துல பூசியிருக்காங்க!.. இதோ இங்கே பாரு.. இப்போ நான் என்ன செய்வேன்?.. ஒண்ணும் புரியலையே.. மணி ஆறாகுது”
தலையில் கையை வைத்துக்கொண்டு தரையில் உட்கார்ந்தாள் திலகா.
“அம்மா என்னம்மா இது?.. யாரும்மா இப்படிச் செஞ்சா?..”
மகள் அனுஷா பள்ளிச்சீருடையில் ஆச்சரியத்தோடு வினவினாள்.
“சீனத்துல ஏதோ எழுதியிருக்குது.. $1000 வெள்ளின்னு எழுதியிருக்குதும்மா! அதோட ‘ஓர் எல்ஸ்’ (or else)… அப்படீன்னு பெரிசா எழுதியிருக்குது..” உற்றுப்பார்த்த அனுஷா உறுதிப்படுத்தினாள்.
“இது கடன் முதலைகளோட வேலையாகத்தான் இருக்கணும்.. எனக்குத் தெரியாமே இவரு யாருக்கிட்டையாவது கடன்கிடன் வாங்கியிருப்பாரோ? அப்படி வாங்கியிருந்தா சொல்லியிருப்பாரே?” என்ற எண்ணம் திலகா மனத்தில் மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தது.
“என்ன? என்ன வாசல்லே நின்னு எல்லாரும் சத்தம் போட்டுக்கிட்டு இருக்கீங்க?.. ஆ!.. இது என்ன கதவு பூரா ஒரே சிவப்புச் சாயம்?..”, என்றபடியே கட்டிய துண்டோடு சோதனை செய்ய ஆரம்பித்தார் நாதன்.
“இங்கே பாருங்க, சீனத்திலேயும் என்னவோ எழுதியிருக்கு. $1000 வெள்ளின்னு வேற போட்டிருக்கு.. நீங்க யாருக்கிட்டேயாவது கடன் வாங்கினீங்களா?” என்று வினவினாள் திலகா.
“இல்லையே! நான் யாருக்கிட்டேயும் கடன் வாங்கலியே..
எதுக்கு நான் கடன் வாங்கணும்.. அதுவும் $1000 வெள்ளிக்கு?”
திரு திருவென்று விழித்தார் நாதன்.
சத்தம் கேட்டுப் பக்கத்து வீட்டுக் கதவு மெல்லத் திறந்தது.
உடனே திலகா தன் வீட்டுக் கதவைத் தாழிட முற்பட்டாள்.
“வா!.. வாட் இஸ் திஸ்? (Wah.. what is this?).. ஹூ டிட் திஸ்? (who did this?)”
எதிர்ப்புற வீட்டுக்காரருக்கும் அது திகைப்பைத் தந்தது.
“வீ.. டோன்ட் நோ மிஸ்டர் டான்.. (we don’t know Mister Tan)..” என்றாள் திலகா.
“ஜ திங்க் யூ பெட்டர் இன்ஃபார்ம் த போலீஸ் (I think you better inform the police)..”
“யா.. ஐ திங்க் சோ.. (Yeah,, I think so)” என்று பதிலளித்தார் நாதன். அண்டை வீட்டுக்காரர் கதவைப் பூட்டிக்கொண்டார்.
“என்னங்க, என்ன இதெல்லாம்?.. என்ன நடக்குது இங்கே? ஏன் திடீர்னு இப்படி? எனக்கு ரொம்பப் பயமா இருக்குது..”
திலகாவின் குரல் தழுதழுத்தது
“திலகா கொஞ்சம் அமைதியா இரு.. எனக்கும் ஒண்ணும் புரியலே.. முதல்லே சரசைக் கூப்பிட்டு இந்தச் சாயத்தைத் துடைக்கச் சொல்லு.. பிறகு என்ன செய்யலாம்னு யோசிப்போம்…” என்று திலகாவைச் சாந்தப்படுத்த முயன்றார் நாதன்.
“போலீசுக்குச் சொல்லலாமா?”, என்று வினவினாள் திலகா.
போலீஸ் என்றதும் நாதன் முகம் லேசாக மாறியதை அவள் உணர்ந்தாள்.
“இல்லே! இப்போதைக்கு வேண்டாம்.. அப்புறம் இல்லாத கேள்விகளையெல்லாம் அவங்க கேட்டுக்கிட்டு இருப்பாங்க” என்று பதிலளித்தார் நாதன். திலகாவின் சந்தேகப் பார்வை அவர் மீது விழுந்தது.
பத்திரிகைகளிலும் தொலைகாட்சியிலும் கடன் முதலைகளைப் பற்றிப் படித்துப் பார்த்தது எல்லாம் நினைவுத்திரையை ஆக்கிரமிக்க, பெருவிரைவுப் போக்குவரத்துப் பயணத்தைத் தொடர்ந்தாள் திலகா. மனம் ஒரு நிலையில் இல்லை. “நெக்ஸ்ட் ஸட்டோப் சிட்டி ஹால். பெசஞ்சர்ஸ்…. (next stop city hall, passengers) என்ற அறிவிப்பைக் கேட்டுத் திடுக்கிட்டாள். தான் தவறுதலாக எதிர்ப்புற ரயிலில் உட்கார்ந்திருப்பதை உணர்ந்தாள். உடனே இறங்கி மறு வண்டிக்கு மாற எத்தனித்தாள்.
“அவர் உண்மையிலேயே கடன் வாங்கவில்லையா? பொய் சொல்கிறாரா? அல்லது வேற ஏதாவது பிரச்சினையிலே சிக்கிக்கிட்டு இருக்கிறாரா? யாரோ ஒரு நண்பருக்குப் பண உதவி செய்யப் போவதாக அன்றோரு நாள் சொன்னாரே.. இவரு ஏதாவது பணம் கடனா வாங்கித் தந்து, இப்படி வம்புல மாட்டிக்கிட்டிருக்கிறாரா?.. அதுவும் வெறும் ஆயிரம் வெள்ளிக்கா? ரெண்டு பேருடைய வருமானம் போதுமே!.. ஒரு வேளை அனுஷாவுக்கு மடிக்கணினி வாங்குவதற்காக இப்படிக் கடன் ஏதாவது வாங்கியிருக்காரோ?..”
எண்ணக் கூட்டங்கள் மேக ஓவியங்களாக உருவம் பெற, அதை ஊடுருவிக்கொண்டு வந்தது அந்தத் தொலைபேசி ஒலி. அதே சமயத்தில் ஏறவேண்டிய ரயில் வண்டியும் வந்தது. அவசரமாக ரயிலில் ஏற முற்பட்டதால் அந்த அழைப்பை புறக்கணிக்க வேண்டியதாயிற்று. ஆலுவலகத்திலிருந்து வந்த அழைப்புதான் அது. பத்து மணிக்கெல்லாம் வந்து விடுவதாக ஏற்கனவே தன் மேலாளருக்குக் குறுஞ்செய்தி அனுப்பி வைத்திருந்தாள் திலகா.
அக்கம் பக்கத்தார் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று மனம் புழுங்கிக்கொண்டிருந்தார் நாதன். குறிப்பாக எதிர்ப்புறத்தில் இருக்கும் திரு டான் நடந்தவற்றை எல்லாம் கண் குளிரப் பார்த்துவிட்டாரே என்ற ஒருவித அவமான உணர்வு ஏற்பட்டது. இதில் போலீஸுக்கு வேறே புகார் செய்யச் சொல்கிறாள் திலகா. எப்படி நான் போலீஸுக்குப் போய்ப் புகார் செய்வேன்? இப்படி மனம் காலையில் நடந்ததை நினைத்து அசைபோட்டது. அதனால், வேலையும் சரிவர ஓடவில்லை. தன்னிடம் பகைமை பாராட்டியவர்களின் பட்டியல் அவர் மனத்திரையில் ஓடியது. ஆனால், இந்த அளவுக்கு அவர்கள் போக மாட்டார்களே என்று அவர் உள் மனம் சொல்லிற்று. பண விஷயமாக இருப்பதால் எங்கேயோ ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று மட்டும் அவருக்கு உறுதியாகத் தெரிந்தது. திடீரென்று, அந்தச் சம்பவம் மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தது.
அன்று ஒருநான் நள்ளிரவு 12 மணி இருக்கும். எதிர்ப்புற வீட்டிற்கு வெளியே, திரு டானிடம் இரு ஆடவர்கள் காரசாரமாக உரத்த குரலில் சீன மொழியில் பேசிக்கொண்டிருந்தார்கள். பேச்சு வெகு நேரம் தொடர்ந்தது. ஒருவேளை அவர்கள்தான் இப்படி வீடு தவறிச் செய்திருப்பார்களோ என்று சந்தேகித்தார்.
பல சிந்தனைகளுடன் குழப்பங்களும் அதிகரிக்க, மேலாளரிடம் அரை மனி நேரம் முன்கூட்டியே வீட்டுக்குக் கிளம்புவதற்கு அனுமதி கேட்டு வீட்டுக்கு விரைந்தாள் திலகா.
வழக்த்திற்கு மாறாக அனுஷாவும் பிரஷாந்தும் வீட்டுக்கு விரைவாக வந்துவிட்டனர். காலையில் நடந்த சம்பவத்தின் பாதிப்பு என்று சொல்லலாம். அதிலும் பிரஷாந்த் சற்று அதிர்ந்தே காணப்பட்டான்.
“அப்பா போலீசுக்குப் போய்ப் புகார் செய்தாரா அம்மா?”, என்று வீட்டுக்கு வந்ததும் வராததுமாகத் திலகாவிடம் கேட்டான் பிரஷாந்த்.
“இல்லை”, என்று சொன்னதும் அவன் முகத்தில் ஒரு நிம்மதி. தன் மகன் மிகவும் பயந்துபோயிருப்பதை அவள் உணர்ந்திருந்தாலும் இந்த அளவுக்கு அவன் பயப்படுவான் என்று அவள் நினைக்கவில்லை.
இதற்கிடையில் நாதனும் வந்துவிட்டார்.
“நீங்களும் வந்துட்டீங்களா.. ஏங்க, போலீசுக்கிட்டே அந்தப் பக்கத்துக்காரரை விசாரிக்கச் சொல்லியிருக்கலாமே! இது நிச்சயமா அவரு சம்பந்தப்பட்டதாத்தான் இருக்கும்.. அன்றைக்கு ஒரே சத்தமா இருந்துச்சே ஞாபகம் இருக்கா?.. எனக்கு நல்லாத் தெரியும் அவரு வீட்டுக்குப் பதிலா நம்ம வீட்டை நாசப்படுத்திட்டுப் போயிட்டானுங்க!”, என்றாள் திலகா.
அவலகத்திலிருந்து அலுத்துப்போய் வந்த நாதன், தொப்பென்று சோஃபாவில் சாய்ந்தார்.
“நானும் அதைப்பற்றித்தான் யோசிச்சேன்.. ஆனால், அவரு எப்போதுமே நமக்கு நல்ல அண்டை வீட்டுக்காரரா இருந்திருக்காரு அவரைப் பற்றி எப்படிப் போலீசுக்குச் சொல்றதுன்னு பேசாம இருந்துட்டேன்… சரி சரி! தலைவலியா இருக்குது, குடிக்கக் காஃபி கொண்டா..”, என்றார் நாதன்.
நள்ளிரவு மணி 12 இருக்கும். திலகாவுக்கு லேசாகத் தூக்கம் கலைந்தது. கண் விழித்தாள். பிரஷாந்த் அறை விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்ததைக் கவனித்தாள். உள்ளிருந்து பேச்சுச் சத்தம் கேட்டது. கதவைத் திறக்க முற்பட்டாள். உள்ளே பூட்டியிருந்தது, கதவை மெல்லத் தட்டினான்.
“பிரஷாந்த், நீ இன்னும் தூங்கலையா? மணி 12 ஆகுது. என்ன செய்ற இவ்வளவு நேரமா? யாருகிட்டே பேசிக்கிட்டிருக்கே?” என்று கதவைத் தட்டிக்கொண்டே கேட்டாள் திலகா.
“ஒன்னுமில்லேம்மா.. கூட்டாளிகூட ஃபோன்ல பேசிக் கிட்டிருக்கேன். நீங்க போய்ப் படுங்க…” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தான் பிரஷாந்த்.
“இந்த நேரத்திலேயா? அப்படி என்ன பேச வேண்டியிருக்கு? எதுவாயிருந்தாலும் நாளைக்குப் பேசிக்கலாம்.. போய்ப் படு..” என்றாள் சிறிது கண்டிப்பாக.
சிறிது நேரம் அமைதி. அறை விளக்கு அணைந்தது. திலகா படுக்கச்சென்றாள். அறையினுள் பேச்சுத் தொடர்ந்தது. இந்த முறை மெல்லிய குரலில்!
கழிவறைக்குப் போவதற்காக எழுந்தார நாதன். பக்கத்திலிருந்த ‘அலார்ம்’ கடிகாரத்தைப் பார்த்தார் பின்னிரவு மனி இரண்டு. பிரஷாந்த் அறை விளக்கு இன்னமும் எரிந்துகொண்டிருந்தது.
“திலகா.. திலகா.. எழுந்திரு.. ஏன் பிரஷாந்த் அறை விளக்கு இன்னும் எரிஞ்சுக்கிட்டிருக்கு?” என்றார் எழுந்தவாறே.
“அப்படியா? நான் முதல்லேயே அணைக்கச்சொன்னேனே!.. என்று கூறிக்கொண்டே கணவருடன் சென்று அறைக் கதவைத் தட்டினாள்.
“பிரஷாந்த், நீ இன்னும் தூங்கலையா?”
“என்ன செய்ற இவ்வளவு நேரமா? கதவைத் திற..” என்றார் நாதன்.
அறையில் நிசப்தம் நீடித்தது. பெற்றோர் மனத்தில் சிறு பதற்றம். இருவரும் கதவைத் தட்டத் தொடங்கினர். சத்தம் கேட்டு அனுஷாவும் பணிப்பெண்ணும் எழுந்துகொண்டனர். நாதன் அறைக் கதவுச்சாவியை எடுக்கச் சென்றார். அம்மாவோடு சேர்ந்துகொண்டு அனுஷாவும் கதவைத் தட்டினாள். நாதன் சாவியை இடுக்கினுள் செலுத்தும் நேரத்தில் கதவு திறந்தது. பிரஷாந்த் தலை குணிந்தவாறே நின்றுகொண்டிருந்தான். எல்லாரும் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டனர்.
சிறிது நேரம் கழித்து மௌனம் கலைந்தான் பிரஷாந்த்.
“அப்பா நான்.. நான்.. ‘ஸ்கூல்ல’ என் நண்பர்கள்கிட்டே பந்து விளையாட்டுல பந்தயம் கட்டியிருந்தேன். அதுல பல முறை தோற்றுப் போனதுனால கடன் வாங்க வேண்டியதாயிடுச்சு.. என் நண்பனுக்குத் தெரிஞ்சவருக்கிட்டே 500 வெள்ளி கடன் வாங்கிப் பந்தயப் பணத்தைக் கட்டிட்டேன்.. அது வட்டியோட இப்போ 1000 வெள்ளிக்கு வந்துடுச்சு போலிருக்குது.. அவரு ‘கடன் முதலைன்னு’ (loan shark) பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது. எப்படியாவது உங்ககிட்டே சொல்லிப் பணத்தைக் கட்டிடலாம்னு நினைச்சேன்… அதுக்குள்ள..”, என்று வாயை மூடியதுதான் தாமதம் , ‘பளார்’ என்று கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. கதி கலங்கவைக்கும் அந்த அறையிலிருந்து மீள்வதற்குள், அவன் கண்களில் தேங்கிக் கிடந்த கண்ணீர்த்துளிகள் ஆறாகப் பெருக்கெடுத்தன. அது வலியாலா அவமானத்தாலா என்று யோசிக்கக்கூட அவனால் முடியவில்லை. திலகா அறைந்ததோடு மட்டுமல்லாமல் ஆத்திரத்தில் அவனைக் கரிச்சுக்கொட்டவும் ஆரம்பித்தாள்.
“கொஞ்சம் பொறுமையா இரு திலகா.. நான்தான் விசாரிக்கிறேனுல்லே.. சரி, யார் அவன்.. எங்கே இருக்கான்?… நடந்தது எல்லாத்தையும் என்கிட்டே சொல்லு… காலையிலேயே முதல் வேலையா அந்தப் பணத்தைக் கட்டிடுவோம்..”
“எட்டு மாசமா அந்தப் பணத்தைத் திரும்பக் கொடுக்காததாலே வீட்டை வந்து இப்படி நாசப்படுத்திட்டாங்க… அதோட நாளைக்குப் பள்ளிக் கூடத்துக்கும் வந்து என்னைத் தாக்கத் திட்டம் போட்டிருக்காங்களாம்.. அதுதான் நாளைக்குப் பள்ளிக் கூடத்துக்குப் போகப் பயமா இருக்குதுப்பா..” விம்மலுக்கிடையே பேசி முடித்தான் பிரஷாந்த்.
“என்ன அண்ணா இப்படி முட்டாள்தனமான காரியத்தைச் செஞ்சிருக்கே..”, அனுஷாவுக்கும் ஆத்திரமாகத்தான் இருந்தது
“என்னங்க, நாளைக்கு முதல் வேலையா போலீசுக்குப் போங்க.. விஷயத்தைச் சொல்லுங்க.. பிறகு பள்ளிக்கூடத்துக்குப் போயித் தலைமை ஆசிரியரைப் பாருங்க..”
“பதினேழு வயதிலேயே இப்படிக் கடன் வாங்கிப் பழகிக்கொண்டால் பிறகு- எதிர்காலத்தில் சிறு சிறு விஷயத்துக்கெல்லாம் பணம் கடன் வாங்க வேண்டி வருமே! இப்படிச் செய்யலாமா7”
“பாருடா, எங்களுக்கு எவ்வளவு சிரமத்தைக் கொடுத்திருக்கேன்னு… படிக்கிற பிள்ளை செய்ற காரியமா இது?”
மகன் செய்த செயல் விமலாவையும் வருத்திப் பிழிந்தது
“என்னை மன்னிச்சிடுங்கம்மா…”
கடன்பட்ட நெஞ்சத்துடன் கலங்கி நின்ற அவன் குரல் தழுதழுத்தது.
– வலை, முதற் பதிப்பு: மார்ச் 2010, ஆர்.யோகநாதன் வெளியீடு, சிங்கப்பூர்.