முடிவிலி




திடீர் பெருமழை.சில நிமிடங்களுக்கு முன் உடலை உருக்கிய வெயில் இருந்ததாக நினைவு.மானுட மனதின் மாற்றத்தை ஒத்த வானிலை மாற்றம்!
பொறுத்து கொள்ள முடியாத வயிற்று வலி காலை முதல்…பசியின் வலி …எப்போது சாப்பிட்டேன் என்பது நினைவில் இல்லை! அநேகமாக 3 நாள் இருக்கலாம்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டு உரிமையாளர் வந்து விடுவார். 4 மாத வாடகை தந்தாக வேண்டும்,குறைந்த பட்சம் 5000 ரூபாயாவது இன்று தருவதாக வாக்கு அளித்து இருந்தேன். என்ன செய்வது?
இந்த நினைவு மேல் எழுந்த மறு கணம் மனதின் வலி வயிற்றின் வலியை மிஞ்சி இருந்தது.
இன்றுடன் நான் சென்னை வந்து 5 ஆண்டு ஆகிறது.நாள் கழிந்ததும் நான் அழிந்ததும் தான் அரங்கேறியதே தவிர, முன்னேற்றம் என்பதை அகராதியில் மட்டுமே காண முடிந்தது.
ஊரே பெரிய படிப்பு என சொல்லி திரியும் படிப்பை தான் நானும் படித்தேன்…ஆனால் மனது கவிதைகளில் தான் மையல் கொண்டு இருந்தது!
நான் அதை உணர துவங்கியது கல்லூரியின் இறுதி ஆண்டில்.
நான் நா.முத்துகுமார் மாதிரி ஆக போறேன் னு வீட்ல சொன்னப்ப சில அடிகளும்,பல வசைகளும் விழுந்தன.நடுத்தர குடும்பத்தின் நியாயமான கோவம்!
மறு நாள் காலை சென்னையில் விடிந்தது எனக்கு!
சொல்லாமல் ஓடி வந்ததை பற்றி எனக்கு எந்த வருத்தமும் இல்லை.ஜெயித்து விட்டு காலரை தூக்கி ஊருக்குள் நடக்கப் போவதாக கற்பனை செய்து கொண்டேன். இன்று வரை அது கற்பனையாகவே இருக்கிறது!
எங்காவது நூலகத்துக்கு ஓடி விட வேண்டியது தான் குறைந்த பட்சம் நாளை வரை வீட்டு உரிமையாளரிடம் திட்டு வாங்காமல் தப்பித்து விடலாம் என நினைத்து கொண்டு இருக்கும்போதே உரிமையாளர் வந்து விட்டார்.அவர் வந்ததில் பதற்றம் வந்தாலும் என் நினைவு அறுபடாதது எனக்கு ஆச்சர்யம்!
‘என்ன லே!’ என்றார்…மனதில் கொஞ்சம் நிம்மதி! ஏதாவது அவர் என்னிடம் சொல்ல வந்தால் தான் இப்படி ஆரம்பிப்பார். வசை பாடும் வேளைகளில் ‘டேய் மயிரான்!’ என்று.
‘தந்தி வந்து இருக்கு லே உன்னை தூக்கி வளத்த உங்க சித்தப்பா தவறிட்டாராம்’.
மனதும் உடலும் ஒரு சேர பதறிக் கொண்டு இருந்தது.மயக்கம் வருவதைப் போல ஒரு உணர்வு துக்கத்தாலா? பசியாலா? என்பது விளங்கவில்லை.
எப்படி ஊருக்கு போவது டீ குடிக்கவே காசில்லை?
‘தந்தியோட காசும் சேர்த்து அனுப்பி இருக்கலாம்ல’ என முட்டாள்தனமாக யோசித்து கொண்டு இருந்தேன் இருந்தாலும் அதில் ஒரு ஆறுதல்.
‘இந்தா லே புடி! 200 ரூவா இருக்கு ஊருக்கு போக சரியா இருக்கும்…இங்க இருந்து உன்னால ஒன்னும் கிழிக்க முடியாது ஊருக்கு போய் அம்மை அப்பனுக்காவது ஆதரவா இரு!’
இப்போது என் கண்களில் தாரை தாரையாக நீர்.
‘சரி டா போனவரு போய்ட்டாரு விடு! முதல்ல ஊருக்கு போ மத்தத அப்புறம் பேசிப்போம்’
நான் எதுக்கு அழுதேன்னு எனக்கே புரியலையே அவர் எப்படி புரிஞ்சுக்கிட்டாரு???
பணத்தை வாங்கி கொண்டு எந்த பையையும்,எந்த பொருளையும் எடுக்காமல் ஊருக்கு கிளம்பினேன்.பூமிக்கு நிர்வாணத்துடன் வந்ததைப் போல்.
துக்கம் கலைய துவங்கிய வீட்டில் இருந்து உறவுகளும் கலைய ஆரம்பித்து இருந்தனர். நானும் வந்து இரண்டு நாட்கள் ஆகி விட்டது.கிளம்ப வேண்டும். ஏதோ ஒரு வாய்ப்பு, ஒரு அங்கீகாரம் எனக்காக நீண்ட நாட்களாக காத்து இருக்கிறது.அது இப்போது என் அருகில் வந்து விட்டதாக ஒரு உள் உணர்வு. அது தந்த மன எழுச்சியில் உடனே கிளம்பினேன்.
‘அப்பா நான் கிளம்புறேன்’
‘என்ன என்னமோ மரியாதை இல்லாத வேலைக்குலாம் போறியாம் நம்மூர் பசங்க சொன்னானுங்க! வேணாம் டா. இங்கயே இருடா. ஏன்டா வீணா அலட்டிக்குற?’
‘அதுலாம் முடியாது சரி நான் ஊருக்கு போணும் 200 ரூபா கொடு போயிட்டு அனுப்பி வைக்குறேன்!’
என் பெரியப்பா துக்கத்தின் போதும் இப்படி 200 வாங்கியதும் பின்பு அனுப்பி விட திண்டாடியதும் நினைவுக்கு வந்து தொலைத்தது.
எதுவும் பேசாமல் இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டையும் இரண்டு நூறு ரூபாய் நோட்டையும் கொண்டு வந்து கையில் வைத்தார்.
இரண்டு நூறை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை பூஜை அறையில் வைத்து விட்டு எனக்கான பாதையில், எனக்கான வாழ்க்கையை நோக்கி நடக்க துவங்கினேன்.
நான் சென்னை வந்ததில் இருந்து சரியாக 15 வது நாள் என் தந்தை தவறி விட்டதாக ட்ரங் கால் வந்தது.
நிலைகுலைந்து வீட்டுக்கு போய் சேர்ந்த போது அவரின் இறுதி சடங்கு முடிந்து இருந்தது.
ஊரில் ஏதோ பிரச்சனையாம்,மேலும் கோவில் நடை திறக்க வேண்டுமாம் ஏதேதோ சொன்னார்கள்.
‘அவரை பார்க்க கூட தகுதி இல்லாத பாவி நீ ‘ என சொல்லி இருந்தால் ஆறுதலாவது அடைந்து இருப்பேன்.
அம்மா துக்கத்தினூடும் தெளிவாக இருந்தாள். இயல்பாகவே பாமர பெண்ணுக்கு உரிய துணிச்சலுடன்.
அம்மா எப்படியும் தனியே இருந்து விடுவாள். சில நிலங்கள் எங்களுக்குண்டு. பணத்துக்கு கவலை இல்லை.எப்போவாவது வந்து பார்த்து விட்டு போவோம் என நினைத்துக் கொண்டே பேருந்து நிலையத்தை நோக்கி நகர துவங்கி இருந்தேன் ஒரு வித அமைதியின்மையுடன்.
எனக்கான பேருந்து வந்தது.எனக்கான வாய்ப்பும் இப்படி வரும் என அசட்டு நம்பிக்கையுடன் ஏறினேன்.
கண்களை மூட எத்தனித்தபோது கன்டக்டர் அருகில் வந்தார்.அப்போது தான் என்னிடம் பணம் இல்லாதது நினைவுக்கு வந்தது!!!