முக்கோண சிக்கல்!
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 13, 2024
பார்வையிட்டோர்: 9,740
கல்லூரி படிப்பு முடியும் தருணம் வேலை தேடுவதா…? மேற்படிப்புக்குச்செல்வதா…? காதலியை மணம் முடிப்பதா…? எனும் முக்கோண சிக்கலில் மாட்டிக்கொண்டு தவித்தான் சுகன்.
“எங்க வீட்ல எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்க…” உடன் படித்த மனம் விரும்பிய மகியின் கவலையான பேச்சு.
“பார்த்தா கட்டிக்க வேண்டியது தானே…?” விரக்தியுடனான கோபத்தின் வேகத்தில் பேசினான் என்பதை விட பிதற்றினான்.
“இப்படித்தான் பதில் சொல்வாங்களா…?” விசனத்துடன் விசும்பினாள்.
“என்னை என்ன பண்ணச்சொல்லறே…? என்ற எடத்துல நீ இருந்தாலும் இப்படித்தான் பேசுவே. அம்மாவுக்கு ரெண்டு நாளா ஒடம்புக்கு சரியில்லை. அப்பா தெனமும் சம்பாதிக்கிறத குடிச்சிட்டு வீட்டுப்பக்கம் தலைகாட்டறதில்ல. மருந்து வாங்க கந்து வட்டிக்கு கடன் வாங்கிற நிலமை. இப்பப்போயி எப்படி உன்னக்கல்யாணம் பண்ணிக்க முடியும்…? வேலை கெடைக்கனம். சம்பளப்பணம் மிச்சமாகனம். முதல்ல அம்மாவ வேலைக்கு போகச்சொல்லாம ஒடம்பப்பாத்துக்க வைக்கனம். அப்புறம் தான் நம்ம கல்யாணத்தப்பத்தி யோசிக்கனம். அதுக்கு கொறைஞ்சது மூணு வருசம் வேணும்” என்றான் உறுதியாக.
இப்படிப்பட்ட கசப்பான பதிலை அவனிடமிருந்து எதிர்பார்க்காத மகி, கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரைத்துடைத்துக்கொண்டு டக்கென எழுந்தவள், சுகனிடம் செல்வதாகச்சொல்லாமலேயே ஒருவித பதட்டத்துடன் ஸ்கூட்டியை கிளப்பி வேகமாக ஓட்டினாள்.
‘மகி….மகி….’ என சுகன் கத்தும் சத்தம் அவள் காதில் விழுவதற்குள் அவள் ஸ்கூட்டியிலிருந்து கீழே விழுந்திருந்தாள்.
பார்த்ததும் பதறியபடி ஓடியவன் அவளின் மயக்க நிலை கண்டு அதிர்ச்சியடைந்தான். உடனே கூட்டம் கூடி விட்டது. ஆம்புலன்ஸ் வந்தது. மருத்துவ மனைக்கு ஓடினான். மகியின் உறவினர்கள் சுகனை அவளைப்பார்க்க உள்ளே விட மறுத்து விட்டனர்.
சுகன் மன நலம் பாதிக்கப்பட்டவனைப்போல் உண்ணாமல், உறங்காமல், யாருடனும் பேசாமல் ‘மகி…மகி…’என அவளது பெயரையே உச்சரித்துக்கொண்டிருந்தான். ‘தனது பேச்சால் பதட்டமாகித்தான் அவள் தடுமாறி விழுந்துள்ளாள். அதற்குரிய குற்றவாளி தான் தான். இதற்காக அவளிடம் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என முடிவெடுத்திருந்தான்.
அவள் உடல் நிலை சீராக வேண்டி மாரியம்மன் கோவிலில் மொட்டை போட்டுக்கொண்டான். விரும்பிய வேலை கிடைக்கா விட்டாலும், கிடைக்கும் வேலைக்கு செல்வதோடு அவளுக்கு சிகிச்சை முடிந்ததும் எளிமையாகவாவது ஒரு கோவிலில் வைத்து அவளைத்திருமணம் செய்து கொள்ள வேண்டும் என திட்டமிட்டிருந்தான்.
மகிக்கு மருத்துவ மனையில் நினைவு வந்ததும் சுகனைத்தேடவில்லை. மாறாக தன் தந்தையைப்பார்த்தே “நீங்க யாரு..?” எனக்கேட்க, கதறிய படி அவளது தந்தை தனது தலையில் அடித்துக்கொண்டார். ஆம். அவளுக்கு ஹெல்மெட் போடாததால் கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடி பட்டதில் அவளது சுய நினைவை முற்றிலும் இழந்திருந்தாள்.
உடல் நலம் சீரானாலும் மனநலம் சீராகாத மகி ஒரு முறை புரோசான் மாலில் நேருக்கு நேராக அவனைப் பார்த்த போதும் அடையாளம் தெரியாதது போல் கடந்து சென்றதால் தனது இதயம் சற்று நின்று இயங்கியதை உணர்ந்தான் சுகன்.