கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 26, 2025
பார்வையிட்டோர்: 1,769 
 
 

அதிகாலைப் பொழுதிலேயே வானம் தூறல் போட்டது. மதுமிதாவுக்கு வெளியிலிருந்து வந்த மண்வாசனையும் மழையும் தன்னையும் அறியாமல் ஒரு மனமகிழ்ச்சியை உண்டு செய்திருந்தது. ‘அவளும் நானும் அமுதும் தமிழும்’ என்ற சினிமாப் பாடலை வாய் முணுமுணுக்க இன்று படிக்கவேண்டியது என்ன உள்ளது என மனதிற்குள் கணக்குப் போடலானாள்.

மதுமிதாவுக்கு ஆரம்பத்தில் கல்லூரி போவதில் குதூகலமும் மகிழ்ச்சியும் மிகுதியாக இருந்தது. நாளடைவில் அந்த ஆர்வம் வற்றிப்போனது. தனது சிந்தனைகளுக்கு ஒத்த தோழிகள் அமையவில்லை. அமைந்த சினேகிதிகளும் யாரும் பாய்பிரண்ட் இல்லாமல் இருப்பதில்லை. மதுமிதா பெரிய அழகி இல்லையென்றாலும் லெட்சணமான பெண்தான். எளிமையாக இருந்தாலும் காலத்திற்கேற்ற உடையணிந்து பார்ப்பவர்களைக் கவர்வாள். காட்டன் சுரிதாரிலேயே மிகச் சிறந்த அழகியாகத் தெரிவாள். பல ஆண்கள் அவள் பின்னே சுற்றினாலும் யாரையும் கண்டுகொள்ள மாட்டாள். அவளைப் பொருத்தவரை இந்தக் கல்லூரிக் காலம் அவள் நிம்மதியாக, ஜாலியாக இருக்கும் காலம். இதை அவள் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. யாராவது பையனை விரும்பினால் வீட்டிற்குத் தெரியாமல் அவனுடன் சுத்தவேண்டும். அவனுக்கு அடிமையாக இருக்கவேண்டும். பெற்றவர்களிடம் காரணமில்லாமல் பொய் சொல்லவேண்டும். எப்படியும் அப்பா ஒத்துக் கொள்ளமாட்டார். ஒன்று அவரை எதிர்த்து திருமணம் செய்யணும். இல்லனா காதலிப்பது ஒருத்தனை, திருமணம் வேறு ஒருவரைச் செய்து கொள்ளணும். இது தேவையா? என்பது அவளது எண்ணம். ஆனால் அவளைப் போல அவளுடன் படிக்கும் பிள்ளைகள் இல்லை. அவர்களுக்கெல்லாம் பாய்பிரண்ட் இல்லையென்றால் அது ஒரு கேவலம். தனக்கு ஒரு பாய்பிரண்ட் இருக்கிறான் என்று சொல்வதில் அலாதிப் பிரியம் இருந்தது. அதை ஒரு கெத்தாகவும் நினைத்தனர். அப்படி பிரண்ட் இல்லாவிட்டாலும் இருப்பதாக முகமூடி அணிபவர்கள் அவள் கல்லூரியில் அதிகம்பேர்.

இந்த பாய்பிரண்ட் வைத்துக் கொள்பவர்கள் உண்மையாக இருப்பதில்லை. படிக்கும் காலம்வரை சுற்றி ஜாலியாக இருந்துவிட்டு வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்வர். அப்படி இல்லையென்றால் வாரத்திற்கு ஒரு பையனுடன் ஊர் சுற்றிவிட்டு தனக்கு தேவைப்படும் அலங்காரப் பொருட்கள், சினிமா, பார்க், பீச், செல்லுக்கு ரீசார்ஜ் என அனைத்துச் செலவுகளையும் அவன் தலையில் கட்டிவிட்டு மகிழ்ச்சியாகக் களிப்பர். இது பெண்கள் மட்டுமல்ல. ஆண்பிள்ளைகளுக்கும் இந்தப் பழக்கம் தொற்றுநோய் மாதிரி பரவியிருந்தது. ஆண்களுக்கு என்னவென்றால் தனக்கு பிடித்த ஸ்டைலான பெண்கள் என்றால் அதில் ஒரு குதூகலமும் அவர்களோடு சுற்றுவதில் தனக்கு ஒரு அந்தஸ்தும் கிடைப்பதாக நினைத்தனர். அதற்காக அவளுக்குத் தேவையான செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டனர். வீட்டில் அப்பாவிடம் எவ்வளவு பொய் சொல்லமுடியுமோ அவ்வளவு பொய் சொல்லி காசைக்கறந்தனர். இதற்காக அவர்கள் போடும் வேசம் சொல்லி மாளாது.

மதுமிதாவுக்கு இந்தச் செயல்கள் எல்லாம் அறவே பிடிக்காது. அதனாலேயே கல்லூரியில் அவளுக்குப் பெயர் பழம். அவள் யார் என்னவென்றாலும் சொல்லிக் கொள்ளுங்கள். எனக்குக் கவலையில்லை என்று தனக்கான வேலைகளைச் செய்து கொண்டு படித்துக் கொண்டிருப்பாள். ஆசிரியர்களோடும் நல்ல இணக்கத்துடன் இருப்பாள். ஆசிரியர்களுக்கும் மற்ற மாணவர்களை விட இவளது ஒழுங்கும் நடத்தையும் பிடித்துப்போய் இவளிடம் பழகுவர்.

ஒரு சில பேர் பாய்பிரண்டுடன் சுற்றுவது தெரிந்து வீட்டில் மாட்டிக் கொண்டு மிகுந்த மனஅழுத்தத்துடன் இருப்பர். பாதியில் அவர்களின் படிப்பும் நிறுத்தப்பட்டு, அவசரம் அவசரமாகத் திருமணமும் ஏற்பாடாகிவிடும். பெற்றவர்களைக் கன்வின்ஸ் பண்ணமுடியாமல் அவர்கள் முடிவையும் ஏற்றுக் கொள்ளமுடியாது தவிப்பர். அவர்களைப் பார்த்தால் மதுமிதாவுக்குப் பாவமாக இருக்கும். இப்படித்தான் இவளது கல்லூரியில் மாணவர்கள் இருந்தனர். தன் பேச்சைக் கேட்கும் நண்பர்களுக்கு மட்டும் ஆலோசனை சொல்வாள். இவள் மனதையொத்த பிள்ளைகள் மட்டும் கேட்பர். அதுவும் மிகச் சொற்பம்தான்.

அவளுடன் படிக்கும் பெண்பிள்ளைகள் ஆண்களைக் கவர போடும் அலங்காரமும் நடிப்பும் பெற்றோரிடம் போடும் முகமூடியும் இவளால் சகிக்கமுடியாது. தனது உடலுக்குத் தகுந்த உடையோ அலங்காரமோ கொள்ளாமல் மிகையாகும்போது எதுவுமே அசிங்கமாகத் தெரியும். இப்படியும் பல பேர் பாய்பிரண்டைக் கவர முற்பட்டனர். ஆண்கள் எப்படியென்றால் பெண்பிள்ளைகள் எது அழகு என்று கழுதையைக் காட்டிச் சொன்னாலும் அது போலவே தங்கள் முடியலங்காரத்தை மாற்றிக்கொண்டனர். அது ஒரு சிலருக்கு அழகாகவும் பலருக்கு அலங்கோலமாகவும் காட்சியளித்தது.

இன்னொரு விசயம் பெரியவர்கள் இவர்களுக்குப் புத்தி சொன்னால், தன்னுடைய தவறை உணராமல் அறிவுரை சொன்னவர்களையே தாக்குகிற உத்தியையும் கடைப்பிடித்தனர். ஒரு சிலர் காரணமே இல்லாமல் மிகுந்த மனஅழுத்தத்துடன் இருந்தனர். அதற்கு என்ன காரணம் என்பது ஆய்வுக்குரியதாகவே இருந்தது. ஆகமொத்தம் இக்கால இளையதலைமுறையினர் பலரும் முகமூடி அணிந்த முத்துக்களாகவே காட்சியளித்தனர். ஆனால் இவர்கள் சிப்பிக்குள் பாதுகாப்பாக இல்லாமல், தெருவில் கிடக்கும் முத்துக்களாக மாறியிருந்தனர். இந்த முத்துக்கள் எல்லாம் தேய்ந்து பளபளப்பு மாறி வெறும் கல்லாகவே காட்சியளிப்பதுதான் காலக்கொடூரம். இவர்களைத் திருத்தவேண்டும் என்று நினைப்பவர்களின் மீதும் சேற்றினை வாரிப் பூசுகின்றனர்.

இவற்றில் ஒரு சிலர் மட்டும் தப்பிப்பிழைத்த மதுமிதா மாதிரியான வைரங்களாகக் காட்சியளித்தனர். இவர்களைப் பட்டை தீட்டினால் மட்டும் போதுமானது. ஆசிரியர்கள் அந்தப் பணியைச் செய்தனர். மதுமிதா அதிகநேரம் படிப்பிலும் மற்ற நேரம் தனக்குப் பிடித்த பொழுதுபோக்கு விளையாட்டுகளிலும் கலந்து கொண்டு மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டாள். இதனால் அவளது அகமும் புறமும் அழகாக இருந்தது. ஆரம்பத்தில் இருந்த தொய்வினைத் தனது பணிகளால் சரிசெய்து கொண்டாள்.

கல்லூரியின் இறுதியாண்டு போனதே தெரியவில்லை. படிப்பை முடித்து வேலை தேடியவளுக்கு சீக்கிரமாகவே வேலை கிடைத்தது. வேலைக்கு மிகுந்த ஆர்வமாகப் போனவள் முதலில் திணறினாலும் பிறகு ஆனந்தமாக வேலையைக் கற்றுக் கொண்டாள். அங்கே இவளைச் சுற்றி வந்த ஆண்களைச் சமாளிக்க, கடுஞ்சொல் கொண்டவளாகவும் கண்டிப்பானவளாகவும் மாறிப்போனாள். ஆபிசில் இவள் பெயர் சிடுமூஞ்சி என மாறிப்போனது. இந்தச் சமுதாயத்தில் முகமூடி அணியாமல் செல்கின்ற இடம் அம்மாவின் கருவறை மட்டும்தான் போலிருக்கிறது என எண்ணினாள் மதுமிதா.

சுந்தரிமணியன் அவர்கள் மதுரை அருகே டி.கல்லுப்பட்டியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சோமசுந்தரி. தமிழில் முதுகலைப்பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றவர். கல்லூரியில் பேராசிரியராக மூன்றரை ஆண்டுகள் பணியனுபவம் பெற்றவர். தற்போது ஒரு நிறுவனத்தில் ஆய்வறிஞராகப் பணியாற்றி வருகிறார். முதலில் கவிதைகள் எழுத ஆரம்பித்தவர் பிறகு சிறுகதைகளும் எழுத ஆரம்பித்தார். உலகத் தமிழ் என்ற இணைய இதழின் துணைஆசிரியராகவும் பணியாற்றியவர். இருபதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ள இவர் தனது தனித்துவத்தை வெளிப்படுத்த சிறுகதைகள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *