கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,796 
 
 

ஞாயிற்றுக்கிழமை. வசந்த் ஷாப்பிங், பூங்கா, மிருகக்காட்சி சாலை என குதூகலத்துடன் கண்டு களித்துக் கொண்டிருந்தான்.

மிருகக்காட்சி சாலைக்குள் நுழைந்ததும் மகள் சுமி ஆர்வத்துடன் பார்த்து ரசித்தாள்.

அப்பா – அப்பா …அங்கே பாரேன். எத்தனை முயல், வித விதமான கலர்ல…! என ஆரம்பித்து மயில், புலி, சிங்கம், மான் , பாம்பு போன்றவற்றை எல்லாம் வியப்புடன் பார்த்து வந்த சுமி….

”ஏம்பா, வயசான மிருகங்களுக்குன்னு தனி கூண்டு இருக்கா?”

”இல்லடா செல்லம். எல்லா மிருகங்களையும் ஒரே கூண்டுலதான் போட்டு வைப்பாங்க்!”

‘ச்சே…நாமும் மிருகமாகவே பிறந்திருக்கலாம்பா..!”

”என்னடா சுமி, ஏன் இப்படி உளர்ற?”

‘இல்லப்பா, நாம மிருகமா பிறந்திருந்தோம்னா நம்ம தாத்தா, பாட்டியும் நம்ம கூடவே இருப்பாங்க! இப்ப பாருங்க மனுஷனா பிறந்ததால, அவங்க முதியோர் இல்லத்திற்குப்
போயிட்டாங்க…!

சுமியின் வார்த்தை பாம்பாய் கொத்த, குரங்கு முழி முழித்தான் வசந்த்.

– நா.கி.பிரசாத் (16-2-11)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *