மித்ரா!




(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சுமித்ரா வேகமாக ஓடி வந்து ஈட்டி எறிந்தாள். உடனே டேப் வைத்திருந்தவர்கள் அவள் எறிந்த இடத்திலிருந்து ஈட்டி வந்து விழுந்த இடம் வரை அளந்தனர். சுமித்ரா வியர்த்த இடத்தில் டர்க்கி டவலால் துடைத்துக் கொண்டு பயிற்சியாளர் சீனுவிடம் வந்தாள்.

“என்னாச்சு மித்ரா? ஏன் முன்னேற்றமில்லை. ஒழுங்காக பயிற்சி எடுக்கவில்லையா? நேற்று முன்தினம் நீ ஐஸ்க்ரீம் வாங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
உனக்கு உடல் கட்டுப்பாடு மிக்கத் தேவை என்று சொல்லியிருக்கிறேன். பார் இந்தத் தடவை ஆசிய தடகளப் போட்டியில் ஈட்டி எறிதலிலும் டிஸ்க் (தட்டு) எறிவதிலும் கண்டிப்பாகத் தங்கப் பதக்கம் வாங்க வேண்டும் என்பதை மறந்து விடாதே” கொஞ்சம் அதிகமாக உரிமை எடுத்துக் கொண்டு கோபத்தோடு பேசினார்.
“மாஸ்டர் ஒரு ஐஸ்க்ரீம் தின்னதுக்கான இவ்வளவு கத்துறீங்க” கொஞ்சம் வருத்தமாகக் கேட்டாள் சுமித்ரா.
“பார் மித்ரா. போன முறை உன்னை மாநில அளவில் பரிசு பெறச் செய்வதற்கு எத்தனை தடவை சிபாரிசு செய்ய வேண்டியதாகி விட்டது. யோசித்துப் பார். ஒரு பருக்கைச் சோறு கூட, அதிகமாக உன்னைத் தின்ன விடாமல் பாதுகாத்தது நினைவிருக்கும். உடம்பில் சதை போட்டு விட்டால் அதிக வேகமாக ஓட முடியாது. பார் இந்த முறை அந்தக் கொரியா பெண் எவ்வளவு உடம்பைக் குறைத்து ஈட்டி எறிவதை உனக்கும் தேவகிக்கும் டி.வி.யில் போட்டுக் காட்டினேன்.
ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். நீ ஓடும்போது காற்றில் உன் உடல்பறக்க வேண்டும். அந்த வேகத்தில் நீ எறியும் ஈட்டி பாய்ந்து சென்று அதிக தூரத்தில் போய்க் குத்திக் கொண்டு நிற்க வேண்டும். தேவகியும் கூட கொஞ்சம் கெத்தாகத்தான் திரிகிறாள். எனக்குப் புரியவில்லை. அப்புறம் இந்தியாவிற்கு எப்படி தங்கம் வாங்கித் தரப் போகிறீர்கள்? இந்த ஆசிய தடகளப் போட்டிக்கு புவனேஸ்வருக்கு மூன்று நாள் முன்னதாகவே போக வேண்டும். அங்கு போன பிறகு எந்த அளவிற்கு பயிற்சிகள் செய்ய முடியும் என்று தெரியவில்லை.
ஒன்று மட்டும் தெரிந்து கொள். மாநில அளவில் விளையாடும் போது இந்திய வீரர்களுக்குள் தான் போட்டி நடந்தது. எளிதாகத் தங்கப் பதக்கம் வாங்க முடிந்தது. இப்போது…”
“சரி, மாஸ்டர். பல நாட்டின் பெண் வீராங்கனைகளோடு போட்டி போட வேண்டும் எனப் புரிகிறது. வருத்தப் படாதீர்கள். இரண்டு மாதத்திற்குள் உடலைக் குறைத்து விடுகிறேன்” என்றவள் ‘இவனுக்கெல்லாம் வேற வேலை இல்லை’ என மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டு, “சார், புவனேஸ்வர் என்றைக்குக் கிளம்ப வேண்டும்” என்றாள்.
“யோசிப்போம். மித்ரா உன்னை அன்றைக்கு சாப்பிட்டதை சொன்னதற்காக இவ்வளவு சலித்துக் கொள்கிறாயே? உன்னை அழைத்தச் சென்று போய் தோல்வியடைவதை விட முதல்வரிடம் சொல்லி அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் எனச் சொல்லப் போகிறேன்” என்றார் சீனு கோபத்தோடு.
துடிதுடித்துப் போன தேவகி, “ரொம்ப சாரி சார். கண்டிப்பாக புவனேஸ்வர் போய் வரும் வரை நீங்கள் சொல்லும் உணவு தான்” கண்ணீர் வர பதிலளித்தாள்.
பள்ளி முதல்வர் அலுவலக பணியாள் வந்து “முதல்வர் உங்களைக் கூப்பிடுகிறார்கள்” என்றான்.
“ஏற்கனவே முதல்வரின் சொந்தக் காரரைத்தான் இந்தப் போட்டிக்கு அனுப்ப எனக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நீ வேறு…” எனக் கத்தி விட்டு முதல்வர் அலுவலகத்திற்குச் சென்றார் சீனு.
“வாய்யா உட்கார். இளநீர் சாப்பிடு. நாகேஷ், அவருக்கும் ஒரு இளநீர் வெட்டு…என்ன புவனேஸ்வருக்கு என் அக்கா பொண்ணு சீதாவை தானே கூட்டிப் போறே?” என்றார் முதல்வர்.
“சார், உங்களுக்கு நன்றாகத தெரியும். மித்ரா ஏற்கெனவே ஈட்டி எறிதல், தட்டு எறிதலில் இந்திய அளவிலே பரிசு வாங்கினவ. இந்தத் தடவையும் அவள் ஆசிய தடகளப் போட்டிக்குப் போனா இந்தியாவிற்கு இரண்டு தங்கம் வாங்கி வருவாள். சீதா போனால்… அது உங்களுக்குகேத் தெரியும்” என்றார் சீனு பணிவோடு.
“அட, நீ ஒண்ணு. சும்மா ஒடஞ்ச ரெக்கார்டு மாதிரி திருப்பித் திருப்பிச் சொல்லிட்டு… பாரு… எதிரிலே புதுசா ஒரு விளையாட்டு ஆசிரியர் வந்திருக்கார். நீ முடியாதுன்னு சொன்னா, அவரை வேலையிலே சேர்த்துட்டு நான் சீதாவை புவனேஸ்வர் விளையாட்டு மைதானத்துக்கு அனுப்பி விடுவேன். உன் வேலையும் போயிடும். மித்ராவும் அங்கே போக முடியாது” என்றார் முதல்வர்.
“சார். உங்கள் பள்ளி. நீங்கள் என்ன நினைத்தாலும் செய்யலாம். நாம சீதாவை அனுப்பினா ஒரு வெண்கலப் பதக்கம் கூட கிடைக்காது.”
“என்ன, நீ எதுத்துப் பேசிகிட்டே இருக்கே. போய் அக்கவுணுட்ஸ்லே உன் பணத்தை வாங்கிக் கொண்டு போயிட்டே இரு. எனக்கு அக்கா வீட்டிலயிருந்து வர்ற பிரஷர் உனக்கெங்கே தெரியப் போகுது” என்று கத்தினார்.
எழுந்து நின்று கொண்டிருந்த சீனுவைப் பார்த்து, “போய் ஆக வேண்டியதைப் பாரு. நான் சீதாவை அனுப்பிக்கிறேன்” எனப் புதியதாக அந்த விளையாட்டு ஆசிரியரிடம் பேச ஆரம்பித்தார்.
வெளியே காத்திருந்த சுமித்ராவும், தேவகியும் நடந்ததை உணர்ந்து கோபத்தில் “இனி என்ன செய்யப் போகிறீங்க சார்?” என்றனர்.
மனதில் மிகவும் பிடிவாதமான இறுக்கத்துடன் “என்ன செய்யப் போகிறோம்னு கேளுங்க சுமித்ரா” என்றார்.
“என்னது?” ஆச்சரியத்துடன் திரும்பிய சுமித்ரா, “ஏற்கனவே எனக்கும் உங்களுக்கும் ஒரு இது. அதனாலே தான் எனக்கு ஸ்பெஷல் பயிற்சி கொடுக்கறீங்கன்னு முணுமுணுக்க ஆரம்பிச்சாச்சு. இதிலேவேற இனி என்னப் பண்ணப் போகிறோம்னு வேற யோசிக்கணுமா?” கண்களில் கண்ணீர் வர கேள்வி எழுப்பினாள்.
அவள் கண்களைத் துடைத்த தேவகி “இந்தியாவிற்கு தங்க மெடல் வாங்க என்ன செய்யணும் சார்?” துடிப்புடன் கேட்டாள்.
“இனி நாம் பள்ளி மூலமாக அந்த ஆசிய தடகளப் போட்டியில் கலந்து கொள்ள முடியாது. நீங்கள் உங்கள் பெற்றோர்களிடம் அனுமதி கேட்டு இரவே புவனேஸ்வர் புறப்படத் தயாராகுங்கள்.
நான் விளையாட்டுத் துறை மந்திரி அலுவலகத்தில் என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரைப் பார்த்துவிட்டு வருகிறேன்” என்றார் பயிற்சியாளர் சீனு.
“கண்டிப்பாக புறப்படுகிறோம் சார்” என கிளம்பினர்.
போட்டி நடக்க வேண்டிய நாள் அதிகாலையில் மைதானத்தில் சுமித்ராவும் தேவகியையும் பார்த்த பள்ளி மேலாளர் அருகில் நின்ற சீனுவை அணுகி, “என்னப்பா போட்டியைப் பார்த்துவிட்டுப் போகலாமுன்னு வந்தீங்களா?” எனக் கிண்டலாகக் கேட்டார்.
சீனுவும் வாய்க்குள்ளே சிரித்துக் கொண்டு “ஆமாம் சார்” என்றார்.
“அப்புறம் எதற்கு பயிற்சி. மண்ணாங்கட்டிண்ணுட்டு…”
”சார், இனி அடுத்த ஆண்டு வருவதற்கு தயார் செய்கிறார்கள்” என்றார் சீனு.
போட்டி தொடங்கியதும் ஒருவர் ஒருவராக ஈட்டி எறிய, மித்ரா ஃப்ரம் இந்தியா என அறிவுப்பு வர சுமித்ரா ஈட்டி எடுத்து வேகமாக எறிய, அங்கே அளந்து விட்டு சுமித்ரா முதல் பரிசு பெற்றதாக அறிவித்தார்கள்.
முதல் பரிசு வாங்கி விட்டு தங்கப் பதக்கத்தை தோளில் சுமந்து ஓடி வந்த சுமித்ரா, “எப்படி சார்?” எனக் கேள்வி எழுப்பினாள்.
“நான் நேராக விளையாட்டு மந்திரி அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பனிடம் உதவிகேட்க அவனும் அமைச்சரிடம் அழைத்துச் சென்றான். அமைச்சரே, ஏற்கெனவே விளையாட்டில் நம் நாடு மிகவும் பின் தங்கியிருக்கிறது. நமக்கு இந்த விளையாட்டில் வாங்கும் தங்கம் பெண் போட்டியில் அனுமதிக்கப்பட வேண்டுமா? இல்லை வேற ஏதாவது சிபாரிசு…” என நான் முடிப்பதற்குள் அந்த அமைச்சரின் நடவடிக்கைகள்…ஓ… என்னை ஆச்சரியப்படுத்தி விட்டன. இவ்வாறு நல்ல அமைச்சர்கள் நாட்டில் இருந்தால் உண்மையிலேயே இந்தியா சொர்க்கபுரியாகி விடும்” எனப் பேட்டியளித்தார் சீனு.
எதிர் முனையில் பென்ஸ் காரில் மேலாளர் அவனை முறைத்துக் கொண்டே போக, தொலைக்காட்சியில் “சீனு எனும் பயிற்சியாளரின் துணிச்சல் நடவடிக்கையால் இந்தியாவிற்கு அதிகமாக ஒரு தங்கப் பதக்கம் கிடைத்தது” என செய்தி வெளிவந்தது.
– 2019