மிட்டாய்க்காரன்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 6, 2022
பார்வையிட்டோர்: 14,153
(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கதை கேட்க: https://www.youtube.com/watch?v=bQGHpHHhKkY
வாசலில் உட்கார்ந்திருந்தாள் வேணி. அவளைப் போன்ற சிறுமிகளும், சிறுவர்களும் தெருவில் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் வேணிக்கு மட்டும் என்ன வந்தது? ஏன் எதையோ பறிகொடுத்தவள் போல் அப்படி அமர்ந்திருக்கிறாள்?
சற்றைக்கொரு தரம் அவள் தெரு முனையை வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏன்? யாருடைய வரவையோதான் அவள் அத்தனை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள் சிறிது நேரம் சென்றது.
“மிட்டாய்! மிட்டாய்!” என்ற குரல் தெரு முனையில் கேட்டது. வேணி திடீரென்று எழுந்தாள். உற்றுக் கேட்டாள்.
தெரு முனையிலே ஒரு மிட்டாய்க்காரன். வந்து கொண்டிருந்தான். அவன் ஒரு நொண்டி. ஒரு கையில் ஊன்று கோலுடனும், இன்னொரு கையில் ‘குச்சி மிட்டாய்கள்’ சொருகிய ஒரு கம்புடனும் வேக வேகமாக வந்து கொண்டிருந்தான் அவன். காசை நீட்டி, “ஏய் , மிட்டாய் கொடு!” என்று அதிகாரத் துடன் கேட்ட குழந்தைகளைக்கூட அவன் கவனிக்க வில்லை. அவன் வேக மெல்லாம் ஒரு திசையிலேயே இருந்தது.
வேணியின் முகத்தில் சிரிப்பு தவழ்ந்தது. அவள் காத்துக் கிடந்தது அவனுக்காகத்தானோ?
அவன் வந்து விட்டான். “ஏ , மித்தாய் தாத்தா! ஏன் இன்னிக்கு இத்தனை நாழி?” என்று கோபத்துடன் கேட்டாள் வேணி. அது பொய்க் கோபம் !
மிட்டாய்க்காரக் கிழவன் சிரித்தான். பல்லெல்லாம் தெரிய சிரித்தான். ‘ஏன் பாப்பா , நீ ரொம்ப நேரமா காத்துக்கிட்டிருந்தியா?” என்று கேட்டான்.
“ஆமாம்” என்கிற பாவனையில் தலையை அசைத் தாள் வேணி.
மிட்டாய்க்காரன் மிட்டாய் ஒன்றை எடுத்தான்.
“தாத்தா! தாத்தா! இன்னிக்கு எனக்கு மித்தாய் வேண்டாம்!” என்றாள் வேணி அப்போது.
“ஏன் பாப்பா?” – தினம் தவறாது மிட்டாய் வாங்குவாளே வேணி; ஆனால் இன்றைக்கு மட்டும் என்ன நேர்ந்துவிட்டது? இந்த சந்தேகம் தோன்றி யது மிட்டாய்க்கார கிழவனுக்கு!
வேணியின் முகம் திடீரென்று மாறியது. “இங்கே பாரு தாத்தா!” என்று தன் கையை விரித்துக் காட்டியது. வியர்வை படிந்திருந்த அதனுடைய பிஞ்சுக் கைகளில் எதுவுமே இல்லை. அதாவது, அந்தக் கையில் தினம் தவறாது மாலை நேரத்தில் இடம்பெறும் ‘காலணா’ அப்போது இல்லை.”பாத்தியா தாத்தா , எங்கிட்ட காசு இல்லை. அம்மாவைக் கேட்டேன் ; அப்பாவைக் கேட்டேன், யாருமே தரலே! அதனால் மித்தாய் வேண்டாம்,” என்றாள் வேணி. பாவம், அதன் குரல் தழதழத்துவிட்டது.
மிட்டாய்க்காரன் சிரித்துவிட்டான். வேணியிடம் காசில்லை ; அதற்காக அவன் எடுத்த மிட்டாயை மீண்டும் வைத்துவிடவில்லை. வேணியிடமே கொடுத் தான். “காசு இல்லேன்னா பரவாயில்லை பாப்பா ; சாப்பிடு!” என்றான்.
வேணிக்குக் கொஞ்சம் தயக்கம் தான் நந்தாலும், சாப்பிடாவிட்டால் அந்த மிட்டாய்க்காரனும் போவதாக இல்லை. கடைசியில் வேணி மிட்டாயைச் சாப்பிட்டாள். கிழவன் சிரித்தான் , வேணியும் சிரித்தாள். அது மிட்டாயின் ருசியால் வந்ததல்ல ; கிழவனின் பொக்கை வாய் சிரிப்புதான் அவளையும் சிரிக்க வைத்துவிட்டது.
கிழவன் “மிட்டாய் , மிட்டாய்!” என்று கூவிக் கொண்டே போய்விட்டான். அவன் கண் மறையு மட்டும் பார்த்துக்கொண்டிருந்த வேணி வீட்டுக்குள்ளே ஓடிவிட்டாள்.
ஒரு நாள் அல்ல; இரண்டு நாள் அல்ல. அந்த மிட்டாய்க்கார நொண்டி அந்தத் தெருவிற்குள் அடியெடுத்து வைத்த நாள் முதல் ஒருநாள் கூட மிட்டாய் வாங்கத் தவறியதேயில்லை, வேணி. அந்த மழலைச் செல்வத்தின் ‘உளறல் மொழி’யை ரசித்துக் கொண்டே மிட்டாய் கொடுக்க அந்த நொண்டியும் தவறியதே கிடையாது. அவர்கள் வியாபாரமுறையி லேயா பழகினார்கள்? இல்லை; இல்லை! அதற்கும் அப்பாற்பட்ட ஏதோ ஒரு பாசப்பிணைப்பு அவர்களை ஒன்றாகச் சேர்த்திருந்தது.
“ஏன் தாத்தா , எங்க வீட்ல வண்டி இருக்கே, ஜல் ஜல்ன்னு போகுமே….ஏன் உனக்கு இல்லே ?….” என்று கேட்பாள் வேணி.
கிழவன் சிரிப்பான். “எனக்கு அந்த வண்டி எல்லாம் வேண்டாம் கண்ணு! ஏன் தெரியுமா? அப்புறம் நானும் வண்டியிலேதான் போய்க்கிட்ன். உனக்கு யார் மிட்டாய் தருவர்? என்னை யாரு சிரிக்க வைப்பா?” என்பான்.
“ஆமா ஆமா தாத்தா ! உனக்கு வண்டியும் வேண்டாம்; கெண்டியும் வேண்டாம்!” என்று தலையை ஆட்டிக்கொண்டே சொல்வாள் வேணி.
“எனக்கு மாடும் வண்டியும் இருந்தா நான் ஏன் இப்படி மாடாய் உழைக்க வேண்டும் ; ஓடாய்த் தேய வேண்டும்?” என்று முணுமுணுத்துக்கொண்டே சென்றுவிடுவான் நொண்டி.
இன்னுமொரு நாள் இப்படிக் கேட்பாள் வேணி, “ஏன் தாத்தா, நீ சாமி பார்த்திருக்கியா?”
“எந்த சாமி?” என்பான் கிழவன்.
“அதான் பெரிய கோயில்ல இருக்குமோ எங்கப்பாகூட மந்திரம் சொல்வார்; பூஜை எல்லாம் செய்வாரே! நான் பாத்திருக்கேனே! அது ரொம்ப ரொம்ப நல்ல சாமி ! தினந்தினம் ராத்திரியிலே எங்கப்பாவுக்கு எத்தனை தேங்காய், பழமெல்லாம் தருது தெரியுமா?” என்று சொல்லுவாள் வேணி. அவளுடைய அப்பா பெரிய கோயில் குருக்கள். பாவம், அவர் திரைமறைவில் செய்யும் வேலைகளை எல்லாம் வேணியின் சூதறியா நெஞ்சு இப்படி பறைசாற்றும்.
அதைக் கேட்கும் கிழவன் “சாமியைப் பாக்கவோ கோயிலுக்குப் போகவோ எனக்கெல்லாம் ஏதும்மா நேரம்?” என்பான். நொண்டிக்கொண்டே சென்று மறைவான்.
இப்படி தினம் தினம் ஏதாவது பேசி கிழவனை சிரிக்க வைப்பாள் ; அல்லது சிந்திக்க வைப்பாள் வேணி இப்படி இருந்து கொண்டிருக்கையில் தான் ஒரு. நாள் கிழவனைக் காணோம். மாலை வந்தது ; போனது. ஆனால் வழக்கமாக வந்து போக வேண்டிய கிழவன் எங்கே போனான்? வேணிக்கு ஒன்றுமே புரிய வில்லை. எத்தனை நேரம் தான் காத்துக் கிடக்க முடியும்? உட்கார்ந்து உட்கார்ந்து அலுத்து விட்டது. தன் கைக்குள் புதைந்து கிடந்த காலணாவை ஆயிரம் முறை திரும்பத் திரும்பப் பார்த்து விட்டாள். ஆனாலும் அவனைக் காணவே காணோம். வேணிக்கு அழுகை. அழுகையாக வந்தது. இரவும் வந்து விட்டது கிழவன் வரவேயில்லை. ஆனால் மிட்டாய், மிட்டாய்’ என்று கிழவனின் குரல் எங்கேயோ ஒலிப்பதை, கனவிலே கேட்டாள் வேணி.
மறுநாள் பொழுது விடிந்தது; பொழுது சாய்ந்தது வழக்கம்போல். ஆனால் கிழவனைத்தான் காணோம். இப்படியே நான்கு நாட்கள் ! வேணி என்ன செய்வாள்? என்னவோ. ஏதோ என்ற பயம் அவள் உள்ளத்தில் குழப்பத்தை உண்டு பண்ணி விட்டது.
கிழவன் வராமலே போய்விடுவானா? ஐந்தாவது நாள் மாலை இந்த சந்தேகம் தோன்றிவிட்டது வேணிக்கு . காத்திருப்பதைவிட கிழவனைத் தேடியே போய்விட்டால் என்ன? கிழவனின் வீடு எங்கிருக் கிறது என்றும் அவளுக்குத் தெரியும். ஊர்க் கோடியிலே உள்ள குட்டைக்கு அருகிலே இருக் கிறது அவன் குடிசை. முன்பு ஒரு முறை வேணியின் தொல்லை தாங்காது அவனே சொல்லியிருக்கிறான். அந்த நினைவு வந்துவிட்டது வேணிக்கு. அப்புற மென்ன? வீட்டில் தேடுவார்களே என்ற எண்ணம் கூட தோன்றவில்லை. வேக வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
இருள் சூழ்ந்துவிட்டது. குட்டைக் கரைக்கு வந்துவிட்டாள் வேணி. பக்கத்தில் நிறைய குடிசைகள் இருந்தன. வேணி கிழவனைத் தேடினாள். சற்று நேரம் தான் கிழவனைக் கண்டுபிடித்துவிட்டாள். “ஏ, மித்தாய் தாத்தா!” என்று கத்திவிட்டாள். கிழவன் ஒரு குடிசையின் வாசலில் படுத்திருந்தான். வேணி அவனை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.
தன்மேல் வந்து திடீரென்று விழுந்த வேணியைக் கண்டதும் திடுக்கிட்டுவிட்டான் கிழவன்.
“ஐயோ, என்ன பாப்பா இது? நீ எங்கேம்மா இங்கே வந்தே?” என்றான் படபடப்புடன்.
“போ தாத்தா ! நீ தான் எனக்கு மித்தாய் தரவே இல்லையே ….அதான் நானே வந்துட்டேன்!” என்றாள் வேணி.
“அழாதே பாப்பா ! எனக்கு நாலு நாளா உடம்பு சரியில்லே! நாளைக்கு கண்டிப்பா வருவேன்; அப்புறம் தினம் வருவேன் ; மிட்டாய் தருவேன்! இந்தாம்மா இன்றைக்கு…” என்றான் கிழவன். பழைய தயாரிப்பில் மீதியிருந்த ஒரு மிட்டாயை எடுத்து நீட்டினான்.
வேணி வாங்கிக்கொண்டாள்.தன் கையில் புதைந்து கிடந்த நாலணாவை நீட்டினாள். கிழவன் வேண்டாம்மா ” என்றான். வேணி சடக் கென்று அதை அவனது பொக்கை வாய்க்குள் போட்டு விட்டாள். கைகொட்டிச் சிரித்தாள். கிழவனும் காசை எடுத்துவிட்டுச் சிரித்தான்.
திடீரென்று ஏதோ நினைவுக்கு வந்தவன் போல் “பாப்பா! நீ வீட்டுக்குப் போம்மா! முன்னிருட்டுக் காலம் – இருட்டு வந்துட்டா அப்புறம் பயமா இருக்கும்!” என்றான் கிழவன்.
அதே சமயம் “வேணி! வேணி!” என்ற சப்தத்துடன் குட்டைக் கரைக்கே வந்து சேர்ந்துவிட்டார் வேணியின் அப்பா. அவளையும் பார்த்துவிட்டார். வேணியைத் தேடி துடித்துக் கொண்டு வந்தவர் அவர். வேணிதான் கிடைத்துவிட்டாளே ; அவருக்கு மகிழ்ச்சிதானே தோன்றவேண்டும்! ஆனால் ஏனோ கோபமும் வெறுப்பும் அல்லவா போட்டி போட்டுக் கொண்டு அவரது முகத்திலே ஆட்சி செலுத்துகிறது?
வேணி, தன் அப்பாவுடன் வீட்டுக்குப் போய் விட்டாள்.
மறுநாள் மாலை..
“மிட்டாய் ; மிட்டாய்!” கிழவன் தான் தெருவில் நுழைந்து கொண்டிருந்தான். வேணியிடம் சொன்னது போலவே அவன் வந்துவிட்டான்.
வேணியின் வீட்டையும் நெருங்கி விட்டான் கிழவன். ஆனால் வாசலில் வேணியைக் காணோமே கிழவன் வாசலுக்கருகில் வந்து நின்றான் “மிட்டாய் மிட்டாய்!” என்று கத்தினான். உரக்கக் கத்தினான். ஆனால் வேணி வரவேயில்லை. கிழவன் மறுபடியும் கூவினான்.
வேணிவந்தாள். கிழவனுக்குக் கொள்ளை மகிழ்ச்சி! ஆனால், என்ன ஆச்சரியம்! ஆசையோடு ஓடிவர வேண்டிய வேணி, ‘சடா’ரென்று தெருக்கதவைச் சாத்திவிட்டாள், கிழவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“பாப்பா! பாப்பா! உனக்கு மிட்டாய் வேண்டாமா” என்றான்.
“வேந்தாம், போடா!” – வேணிதான் உள்ளே யிருந்து கத்தினாள். என்ன இது? வேணியா இப்படிப் பேசுகிறாள்? கிழவன் துடித்தே போனான்.
“ஏன் பாப்பா ! உனக்காகப் புதுசா போட்டுக் கொண்டு வந்திருக்கேனே! காசு கூட வேண்டா சும்மாவே தரேன் பாப்பா!” என்று கிழவன் மீண்டும் கத்தினான்.ஆனால், மூடிய கதவு திறக்கப்படவே இல்லை!
“போடா, போ! எனக்கு வேந்தாம் உன் மித்தாய்! உன் மித்தாயைச் சாப்பிடக்கூடாது; சாப்பிட்டா செத்துப்போயிடுவேன்! எங்கப்பா சொன்னாரே! அதிலே விஷம் கலந்திருக்குதாம், விஷம்!”
“ஐயையோ! என்ன பாப்பா இது ”
“ஏன் நடுங்குறே கிழவா! எனக்கு எல்லாம் தெரியும்! இனிமே என்னை நீ ஏய்க்க முடியாது! நீ பறையனாமே! அப்பா எனக்கு எல்லாமே சொல்லிட்டார்! நான் இனிமே உன் மித்தாயைத் திங்கவும் மாட்டேன ; செத்துப்போகவும் மாட்டேன்! போ, நிக்காதே! ஓடிப்போ!” – வேணி கதவைத் திறக்காமலேயே துரத்தினாள். அதைத் தொடர்ந்து வீட்டிற்குள்ளே ஓடும் காலடியோசையும் கேட்டது.
கிழவன் திடுக்கிட்டுவிட்டான். “நீ பறையனாம்!…உன் மிட்டாயிலே விஷம் இருக்குதாம்!…நான் சாப்பிட்டா செத்துப் போயிடுவேன்!” – இந்தப் பொல்லாத வாசகங்கள் அவன் காதுகளில் திரும்பத் திரும்ப ஒலித்தன. கத்தினான் “வேணி! வேணி!” என்று. பலனே இல்லை!
“ஏது மறியா நெஞ்சிலே ‘விஷம்’ தூவப்பட்டு விட்டது!” என்று முணு முணுத்தான் கிழவன். நடந்தான். அதன் பிறகு அந்தத் தெருப்பக்கம் “மிட்டாய்! மிட்டாய்!” என்ற அவனது குரல் கேட்கவே இல்லை!
– புத்தர் பொம்மை, முதற் பதிப்பு: நவம்பர் 1957, தமிழ் நிலையம், புதுக்கோட்டை.
When I read this short story(in Tamil it is said as “SiRu Kathai”. Incidentally I remember that famous story, “Kabuliwallah” beautifully written by the Nobel Peace Prize Manner Sri Rabindranath Tagore belonging to West Bengal, India. Oh ! What a wonderful story? What a narration ? Sri Tagore is famous for writing short stories, poems and novels. Great indeed.He richly deserved for the Nobel Prize for Literature. – “M.K. Subramanian.”