கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: December 13, 2024
பார்வையிட்டோர்: 3,123 
 
 

(1957ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21

பதினாறாவது அத்தியாயம்

அதிசய உறவு!

பூதுகன் அவள் சொல்லிய அறையில் கதவுக்குச் சமீபமாக ஒதங்கி மறைந்து நின்றானே தவிர, அந்த இடத்திலிருந்த வண்ணமே வெளித் தாழ்வாரத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க கூடிய வசதி அவனுக்கு இருந்தது. அங்கே மெதுவான குரலில் பேசினாலும் கூட அவன் காதில் விழக்கூடிய நிலையில்தான் இருந்தது. அவன் மறைவிலிருந்தபடியே அங்கு என்ன நடக்கிறது என்பதை எட்டிப் பார்த்த வண்ணம், அங்கு வந்தவன் யார், அவன் எப்படி இருக்கிறாள். அவன் எதற்காக வந்தான் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு இருந்தான்.

தேனார்மொழியாள் உபசாரத்தோடு ஒரு மனிதரை உள்ளே அழைத்து வந்தாள், அந்த மனிதனுக்கு முப்பத்தைந்து வயது இருக்கலாம். மிகவும் கம்பீரமான முறையில் உடை அணித்திருந்தான். அவன் இடையில் அணித்திருந்த பட்டு உடையும். தோளில் போட்டிருந்த பீதாம்பரமும், கழுத்தில் மின்னும் இரத்தின மாலைகளும் காதில் தொங்கிய குண்டலங்களும் அவன் ராஜ வம்சத்தைச் சேர்த்தவன் என்பதை எடுத்துக் காட்டின. அவர் இடையில் தங்க உறையில் இடப்பட்டிருந்த வாள் ஒன்று தொங்கியது. மிகவும் கம்பீரமான உருவம், ஆனால் கண்களில் மாத்திரம் கொடூரமும் வஞ்சனையும்தான் மிதந்தன. அவன் தம்முடைய அடர்ந்த மீசையைத் தன் கைகளால் அடிக்கடி தடவியபடி இருந்தான்.அவன் அலட்சியமாகப் பார்த்துக் கொண்டே ஆடம்பரமாக அங்கிருக்கும் ஆசனத்தில் அமர்ந்து ஒரு தடவை கனைத்துக் கொண்டான்.

தேனார்மொழியாள் மிகவும் அடக்கமும் பயமும் கொண்டவள்போல அவன் எதிரில் நின்று கொண்டிருந்தாள்.

“ஹும்! தேனார்மொழி! இந்த வீட்டுக்குச் சிறிது நேரத்துக்கு முன்னால் யாரோ ஒரு புதிய மனிதன் வந்தானாமே? அவன் எங்கே? அவன் யார்?” என்றான் அந்த மனிதன், கம்பீரமாகவும் அதிகாரத் தொனியோடும்.

“ஆமாம், எங்கள் ஊரிலிருந்து வந்தார், எனக்கு ஒருவிதத்தில் அத்தை மகனாக வேண்டும். நாட்டியக் கலையில் நன்கு தேர்ந்த மனிதர், நட்டு வாங்கத்தில் மிகவும் தேர்ச்சியுள்ளவர். சங்கீதத்திலும் அப்படியே-ரொம்ப மோகம். என்னுடைய பாட்டைக் கேட்க வேண்டு மென்று அவருக்கு அளவற்ற ஆசை. அதற்காகவே குடந்தையிலிருந்து இங்கு வந்தார். இப்பொழுதுதான் வெளியே சென்றார்..” என்றாள்.

“சரிதான்! எல்லாம் உண்மைதான். அவருக்கு நாட்டியத்தில் உள்ள தேர்ச்சியையும், சங்கீதத்தில் உள்ள பற்றையும் எடுத்துச் சொன்னாயே தவிர, அவருக்கு மறுபடியும் இந்த நாட்டில் எப்படியாவது சோழ மன்னர்களின் ஆதிக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டுமென்ற துடிப்பு இருக்கிறது என்பதைச் சொல்ல மறந்து விட்டாயே..?” என்றான் அம்மனிதன்.

உடனே ஒளிந்திருந்த பூதுகனுக்கு அந்த மனிதன் தேனார்மொழியாளைக் கேட்ட கேள்வி மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது. அந்த மனிதன் யாரென்று பார்த்தவுடனேயே தெரிந்து கொண்டான். அவன் தான் சிம்மவர்மன்-பல்லவ மன்னரின் ஒன்று விட்ட சகோதரன், அவனுக்குத் தான் காஞ்சி வந்திருப்பதும் தேனார்மொழியாளின் வீட்டுக்கு வந்திருப்பதும் எப்படித் தெரிந்தது என்பதுதான் பூதுகனுக்கு வியப்பாயிருந்தது. ஆனால் தேனார்மொழியாளின் வீட்டுக்கு வரும்போது எதிரில் சந்தித்த அந்த மனிதனின் ஞாபகம் வரவே அந்த மனிதன்தான் தன்னைப்பற்றித் தெரிந்து கொண்டு சிம்மவர்மனிடம் சொல்லியிருக்க வேண்டும் என்று எண்ணினான். எப்படியோ தான் அங்கு வந்திருக்கும் விஷயத்தையும், தான் யார் என்பதையும் அறிந்து கொண்டதிலிருந்து தன்னுடைய விவகாரங்கள் அவ்வளவையும் அந்த மனிதன் அறிந்திருக்கிறான் என்று பூதுகன் ஒருவாறு உணர்ந்து கொண்டான்.

பூம்புகார் புத்த சேதியத்தில் நடந்த கொலைக்கும் அந்த மனிதனுக்கும் சம்பந்தம் இருக்கத்தான் வேண்டும் என்பதை அவன் உணர்ந்து கொண்டான். அச்சமயத்தில் தேனார்மொழி தன்னைக் காட்டிக் கொடுத்தால் நிச்சயம் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதையும் அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால் அந்த ஆபத்திலிருந்து மெதுவாகத் தப்பிப் பல்லவமன்னருக்கு எதிரிடையாகச் சூழ்ச்சிகள் செய்து வரும் அந்த மனிதனிடம் எப்படியாவது நட்பு காட்டி அவனுடைய உதவியைக் கொண்டே தன்னுடைய லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று அவன் திட்ட மிட்டான். இதற்குத் தேனார்மொழியாளும் சேர்ந்து தனக்கு உதவி புரிந்தால் சிம்மவர்மனின் நட்பு கிடைப்பதோ, அவனைப் பயன்படுத்திக் கொள்வதோ சிரமமான காரியம் ஆகாது என்று அவனுக்குத் தோன்றியது. அவன் மனம் பலவிதமாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தாலும் வெளியே தாழ்வாரத்தில் அவர்கள் என்ன பேசிக்கொள்ளுகிறார்கள் என்பதிலேயே அவன் மிகவும் கவனமாக இருந்தான்.

சிம்மவர்மனின் வார்த்தைகள் தேனார்மொழியாளைத் திகைக்க வைத்தன. சிம்மவர்மன் ‘பூதுகன் யார்? அவன் எண்ணங்கள் என்ன’ என்பது பற்றித் தெரிந்து கொண்டிருப்பது அவளுக்கு மிகவும் வியப்பை அளித்தது.

மறுபடியும் சோழமன்னர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகப்பாடுபடும் ஒருவன் அந்தச் சமயத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தின் தலைநகராகிய காஞ்சியில் வந்து சிக்கிக் கொண்டது எத்தகைய அபாயம்? சிம்மவர்மனின் கவனத்துக்கு இலக்காகிய பூதுகனின் கதி என்ன ஆகுமோ என்று பயந்தாள், தேனார்மொழியாள். அதோடு மட்டுமல்ல, அந்தப் பூதுகனுக்குத் தன் வீட்டிலேயே இடம் அளித்திருப்பது எத்தகைய ராஜத் துரோகம்? இதற்கு எத்தகைய ராஜதண்டனை தனக்குக் கிடைக்கும் என்பதை அவள் யோசித்த போது அவள் உள்ளம் நடுங்கியது. நெருக்கடியான அந்தச் சமயத்தில் எப் படியாவது சிம்மவர்மனின் கண்களில் பூதுகன் படாதவண்ணம் செய்து அவனை அனுப்பிவிட்டால் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணினாள். அவள் கொஞ்சம் நடிப்பில் கைதேர்ந்தவள். தேன்போல் இனிக்கும் அவள் கொஞ்சும் வார்த்தைகளிலும் விழிகளிலும் சாம்ராஜ்யத்தையே கலக்கிவிடும் சக்தி கூட இருந்தன.

அவள் தன் அகன்ற கண்களை உருட்டி விழித்து பரபரப்பும் திகிலும் அடைந்தவள் போல நடித்தாள். பிறகு நடுக்கத்தோடு கூடிய இனிய குரலில், ‘அவர் அத்தகைய மனிதரா? அது எனக்குத் தெரியாதே..? அசட்டு மனிதர்! இத்தகைய மகத்தான பல்லவ சாம்ராஜ்யம் உலகில் திகழும்போது எதற்காக அழிந்து மடிந்து போன சோழர் ஆதிக்கத்தை மறுபடியும் உலகில் நிறுவலாம் என்று கனவு காணவேணும்? இதெல்லாம் எனக்குத் தெரியாது. இதிலெல்லாம் எனக்கு என்ன சம்பந்தம்? அதற்கு நான் ஏன் கவலைப்படப் போகிறேன்? அவர் என்னுடைய அத்தை மகன் என்ற காரணத்தாலும் இசையில் மிகுந்த பற்று உள்ளவர் என்பதாலும். அவரை வரவேற்று உபசரித்தேன். அவரும் தமக்குப் பிடித்தமான தேவாரப் பண்ணைப் பாடும்படி சொன்னார். பாடினேன். அதைக் கேட்டு விட்டுத் தமக்கு ஏதோ அவசர வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஒரு வேளை நாளை அல்லது மறுதினம் வந்தாலும் வரலாம்” என்றாள்.

சிம்மவர்மன் இடி இடித்து ஓய்வது போல் பரிகாசச் சிரிப்புச் சிரித்தான், பிறகு, ”நல்ல வேடிக்கை, பூதுகன் உன்னிடம் தேவாரப் பண் கேட்டானா? இதை இவ்வுலகம் கேட்டால் சிரிக்கும். தேனார்மொழி! என்னிடம் நடிக்காதே. அவனுக்குச் சங்கீதத்தில் பிரியம் இருக்கலாம். ஆனால் அவன் ‘தேவார பண்பாடு’ என்று கேட்டான் என்கிறாயே, அதுதான் வேடிக்கை. பரம் நாஸ்திகனா தேவாரப் பண் பாடு என்று சொல்லுவான்? இந்த இடத்தில்தான் உன் நடிப்பின் மெருகு கொஞ்சம் அழிந்து பல் இளிக்க ஆரம்பித்துவிட்டது. பாவம், என்ன செய்வாய்? பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் ஒரு சைவப் பித்தன், பித்தனை வணங்கும் அப்பித்தனிடம் தேவாரப் பண் பாடி உனக்கு அதே நினைவாகி விட்டது. இந்த நிலையில் பரம நாஸ்திகனான பூதுகனும் ஏதோ தேவாரம் பாடச் சொன்னான் என்று பிதற்றுகிறாய். தேனார்மொழி! அவன் மறுபடியும் பல்லவ மன்னனுக்கு விரோதமாகச் சோழ ஆதிக்கத்தை நிலைநிறுத்தக் கனவு காண்கிறான் என்பது உனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவன் ஒரு நாஸ்திகள் என்பதையும்கூட நீ மறந்து விட்டதுதான் விநோதம். அவன் சாதாரண நாஸ்திகன் இல்லை. கொலை பாதகச் செயல்களைக் கூடத் துணிந்து செய்யக் கூடியவன். ஒரு புத்த சேதியத்தில் துறவு மார்க்கத்தைக் கைக் கொண்ட ஒரு புத்தபிக்ஷுவைக் கத்தியால் கூசாமல் கொலைபுரியும் துணிவு ஒரு நாஸ்திகனுக்குத்தானே ஏற்படும்? அவன் இன்னொரு புத்தபிக்ஷுவையும் கடலில் தள்ளிக் கொல்ல நினைத்தான். அவனுடைய கைவரிசை பலிக்கவில்லை. கடைசியில் தர்ம சிந்தனையும் சாத்விக குணமும் கொண்ட ஒரு புத்தபிக்ஷுவை யாவது கொன்றால்தான் மனம் நிம்மதி யடையும் என்று ஏதுமறியாத ஒரு புத்த பிக்ஷுவைக் கொன்றிருக்கிறான். இப்படி யெல்லாம் செய்ததால் சோழ ஆதிக்கத்தை ஏற்படுத்திவிட முடியுமா? தஞ்சை சிற்றரசர் மாறன் முத்தரையர் சாதாரண மனிதர் அல்ல. பல்லவ சாம்ராஜ்யத்தின் மீது பேரன்பு கொண்ட மகாவீரர், அங்குமிங்குமாகச் சோழ வம்சத்தினர் தலையெடுக்காத வண்ணம் செய்து வருவதிலேயே மிகக் கவனமாக இருக்கிறார். அவருடைய சேனாதிபதி கலங்கமாலரையரும் பெரிய வீரர். சோழவம்சப்பூண்டு எங்கு கிளம்புவதா யிருந்தாலும் அதைத் தம் கால்கட்டை விரலால் தேய்த்துவிடச் சித்தமாயிருக்கிறார். பழையாறை நகரிலிருந்து நம்முடைய சாம்ராஜ்யத்துக்குத் தலை வணங்கிப் பனாதி செலுத்தும் ஒரு பலவீனமான சோழப் பரம்பரையைப் பேர் அரசாக்கி விடலாம் என்று கனவு கொண்டு திரிகிறான் அந்தப் பூதுகன். நமக்கு நல்லவன் போல் நடந்து கொள்ளும் கொடும்பாளூர் அரசன் சோழப் பரம்பரையில் பெண் கொடுத்து, பெண் எடுத்த விஷயத்தில் அவர்களுக்கு ஆதரவு காட்டுவது போல் நடந்து கொள்கிறான். இதெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால் நீ ஏதும் அறியாத பெண். ராஜசபையில் சிறந்த பாடகி என்று பெருமதிப்பு பெற்றவள், உனக்கு இப்படிப்பட்ட ராஜத் துரோக சிந்தை உள்ளவர்களின் நட்பு கூடாது என்பதற்காகத்தான்” என்றான்.

சிம்மவர்மனின் பேச்சுக்கள் தேனார் மொழியாளுக்கு வியப்பையும் திகிலையும்தான் அதிகப்படுத்தின. அங்கு வந்திருக்கும் பூதுகனைப் பற்றிச் சிறிது கேள்வியுற்றிருந்தாளே தவிர, அதிகம் ஒன்றும் தெரியாது. பூதுகனைப் பார்த்ததுமே அவள் மனத்தை அவன் கவரும் உருவமாகிவிட்டான், காரணம் இல்லாமலேயே அவன்மீது அவளுக்கு ஒருவித அன்பும், மதிப்பும், மரியாதையும் ஏற்பட்டுவிட்டன. சிம்மவர்மனின் குணம் அவளுக்கு நன்றாகத் தெரியும். அவன் எவ்வளவுதான் பூதுகனிடம் பழி சுமத்தினாலும் அவன் வார்த்தைகளை அவள் நம்பத் தயாராக இல்லை. பூதுகன் பூம்புகார் புத்த விஹாரத்தில் புத்த பிக்ஷவாக நடித்த ரவிதாசனைக் கொன்றிருப்பான் என்பதையும் நம்பத் தயாராக இல்லை. அப்படி அவனே ரவிதாசனைக் கொன்றிருந்தாலும் நாட்டில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு துரோகியைக் கொன்று நல்ல காரியத்தைச் செய்தான் என்ற திருப்திதான் அவளுக்கு, தவிர, பல்லவ அரச சபையில் பெருமதிப்போடும் கௌரவத்தோடும் அவள் இருந்தாலும் தன் பிறந்த நாட்டின்மீது அவளுக்கு இயற்கையாகப் பற்றுதல் ஏற்படுவது குற்றமா? சோழ நாட்டைச் சேர்ந்த அவள் மனம் பழைய சோழ மன்னர்களின் வீரப் பிரதாபங்களைக் கதை கதையாகக் கேட்டிருக்கிறது. அத்தகைய மன்னர்களின் ஆட்சி மறுபடியும் எப்பொழுது ஏற்படும் என்று சோழநாடு உலகிலேயே தன்சிறந்த நாடாகப் போகிறது என்ற கலவரமும் ஆசையும் அவள் மனத்தில் அடிக்கடி எழுவதுண்டு. பூதுகனைப் போன்ற ஒரு வீர வாலிபன் பாண்டிய, பல்லவ சாம்ராஜ்யங்களுக்கு எதிராக நின்று சோழ மன்னர்களின் பேரரசை நீலை நிறுத்த விரும்புவதற்கு ஆதரவாகத் தானும் இருக்க வேண்டும் என்றுதான் அப்பொழுது அவளுக்குத் தோன்றியது. பல்லவ சாம்ராஜ்யத்தில் உயர்ந்த பதவியில் மதிப்போடு வாழ்ந்து வரும் அவள் இதை ஒரு இராஜத்துரோக நடத்தையாகவே கருதவில்லை. இந்தச் சமயத்தில் அவள் மிகுந்த புத்தி சாதூர்யத்தோடு நடித்துச் சிம்மவர்மனைச் சீக்கிரம் வெளியேற்ற நினைத்தாள்.

“பூதகன் காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு புத்த பிக்ஷுவைக் கொன்று விட்டாரா? பாவம் மகா பாவம், எந்த மதத்தினராக இருந்தாலும். மதத் தவேஷம் கொண்டவரா யிருந்தாலும். கூட ஒரு துறவியைக் கொல்லுவது மகா கொடுமை. அது மிகவும் கோழைத்தனம். இத்தகைய கொடிய செய்கையில் ஈடுபடுகிறவர் தேசத்துரோகி மாத்திரம் அல்ல; கொடிய மதத்துரோகியுங் கூட. எந்த மதமும் கொலையை ஆதரிக்கவில்லை. எந்த மதத்தினனாவது எந்தக் சாரியத்துக்காகவாவது பிறரைக் கொல்லும் காரியத்தில் ஈடுபடுவானானால் அவன் தன்னுடைய மதத்துக்கே துரோகிதான்” என்றாள் கணததுக்குக் கணம் மாறுதலான உணர்ச்சியைக் காட்டும் இனியகுரலில்.

சிம்மவர்மன் சிரித்தான். “பூதுகன் புத்திசாலிதான். அதோடு மட்டுமல்ல. அஞ்சாத வீர நெஞ்சு கொண்டவ னென்றும் தெரிகிறது. எதற்கும் கலங்காத கலங்கமாலரையரைக்கூடச் சிறிது கலக்கம் காண வைத்து விட்டவன் அல்லவா? என்ன இருந்தாலும் அவனிடம் எனக்குச் சிறிது பயம் இருக்கத்தான் செய்கிறது. சாதுர்யமும் ஆண்மையும் இருக்குமானால் ஒரு தனி வீரன மட்டுமே பெரிய சாம்ராஜ்யத்தை அழிக்கவோ படைக்கவோ முடியும் என்பதை நான் நம்புகிறேன். அதனால்தான் அவனிடம் எனக்குச் சிறிது அச்சம் எழுகிறது. இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்துககு எத்திசைய இடுக்கண்ணும் ஏற்படாத வண்ணம் காப்பாற்றுவதற்காக அந்தத் துரோகியான பூதகனை ஒழித்துக் கட்ட வேண்டுமென நினைக்கிறேனே தவிர, எனக்கு அவனைப் பழி வாங்க வேண்டு மென்ற எண்ணம் இல்லை. அதோடு அவன் உனக்கு உறவினன் என்பதை இப்பொழுது அறிந்ததும் அவனிடம் எனக்குச் சிறிது இரக்கம்கூட ஏற்படுகிறது” என்றான் சிம்மவர்மன்.

சிம்மவர்மன் சிறிது மன இரக்கம் கொண்டவன் போல் பேசும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தாள் தேனார் மொழி. அவள் ஒரு மயக்குச் சிரிப்பு சிரித்தாள். அத்தகைய சிரிப்பை அவள் மிகவும் முக்கியமான சந்தர்ப்பங்களில்தான் உபயோகப்படுத்துவது வழக்கம். பூதுகனைச் சிம்மவர்மனிடமிருந்து காப்பாற்றுவது ஒரு கோடிப் பொன்னைவிடச் சிறந்ததாக அவள் நினைத்திருந்தால் தானே இத்தகைய சிரிப்பு சிரித்திருக்க முடியும்? வீர நெஞ்சமும், உறுதியும் படைத்து அகந்தையோடு உயரத்தில் பறக்கும் சிம்மவர்மனின் மனமும் அந்தச் சிரிப்பில் எவ்வளவு எளிதாக வழுக்கிக் கீழே விழுந்து விட்டது என்பது அவனுடைய முகத்திலிருந்து தெரிந்தது.


தேனார் மொழியான் பேச ஆரம்பித்தாள். “பூதுகனை மன்னித்து விடுங்கள். ஆம்! என்னுடைய அத்தை மகன் என்பதற்காக நான் எப்படியேனும் அவருடைய பிசகை அவருக்கு எடுத்துக் காட்டி, அவர் மனத்தை மாற்றப் பிரயத்தனம் செய்கிறேன். அவரை இந்தப் பல்லவ சாப்ராஜ்யத்தைப் போற்றிக் காக்கும் பணியில் ஈடுபடுத்த முயலுகிறேன். சிறந்த புத்தி நுட்பம் மிகுந்த அவர் உங்களுக்கு அனுகூலமுள்ளவராக இருக்க வேண்டு மென்பது தான் என் ஆவல். பெருந்தன்மையுள்ள நீங்கள் அவரிடம் சிறிது கருணை காட்டுங்கள். நாளைய தினம் அவர் வருவார். அவரிடம் எல்லாவற்றையும் சொல்லுகிறேன்” என்றாள்.

தேனாமொழியாளின் சிரிப்பில் வழுக்கி விழுந்த சிம்மவர்மனின் மனம் அவளுடைய இனிய வார்த்தைகளின் கிளுகிளுப்புக்குள்ளாகிச் சுழன்றது.

“தேனார் மொழி! உன்னைப்பற்றி எனக்குத் தெரியாதா? உன்னுடைய சிரிப்பிலோ வார்த்தையிலோ மயங்காத மனிதர் என்று யாரையாவது காட்டினால் அவர்களுக்கு அடிமையாகிவிட நான் சித்தமாயிருக்கிறேன். அப்படி இருக்கும் போது இந்தப் பூதுகன் எம்மாத்திரம்? நீ எப்படியேனும் அவன் மனத்தை மாற்றி அவனை என் வார்த்தைகளுக்கு இணங்கக் கூடியவனாகச் செய்து விட வேண்டும். அப்படி நடக்குமானால் அரச சபையில் அவனை ஒரு உயர்ந்த பதவியில் அமர்த்திவிடுவது பெரிய காரியமில்லை…” என்று கூறினான் சிம்மவர்மன்.

“உங்களால் ஆகாத காரியம் ஏதேனும் உண்டா? நான் எப்படியாவது முயன்று அவரை வசப்படுத்தி விடுகிறேன்” என்றாள் தேனார்மொழியாள்.

“தேனார்மொழி! அவன் இங்கே வந்திருக்கிறான் என்பதை என்னுடைய நண்பன் குஞ்சரமாலன் மூலமாகக் கேள்விப்பட்டேன். அவனுக்குத் தீங்கு நினைப்பதை விட, அத்தகைய புத்தி நுட்பம் உடையவனை எனக்கு நண்பனாக்கிக் கொள்ள வேண்டுமென்பதில் தான் எனக்கு ஆவல் அதிகமாக இருக்கிறது. இதற்காகத்தான் உடனடியாக நான் இங்கு வந்தேன். இதில் உன்னுடைய உதவி எனக்கு மிகவும் அவசியம். உன்னுடைய முயற்சி சித்தியாகு மென்று நினைக்கிறேன்.”

“ரொம்ப சந்தோஷம். உங்களுடைய அன்பும் ஆதரவும் இருக்குமானால் எதையும் நான் எளிதாக முடித்துவிடமுடியும். நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் எதற்காக இருக்கிறேன்? இது என்னுடைய முக்கிய கடமை யில்லையா?” என்றாள் தேனார்மொழியாள்.

“சரி! நான் போய் வருகிறேன். நாளைய தினம் மாலை நான் இங்கு வருகிறேன், அப்பொழுது பூதுகனைச் சந்திக்க ஏற்பாடு செய். எல்லாவற்றையும் சாமர்த்தியமாக முடிப்பது உன்னுடைய சாமர்த்தியம்” என்று சொல்லித் தேனார்மொழியிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றான் சிம்மவர்மன்.

தேனார் மொழியாள் ஏதோ மன ஆறுதலும் நிம்மதியும் அடைந்தவளாக அவனைத் தெருவரையில் கொண்டுபோய் வழியனுப்பி விட்டு உள்ளே வந்தாள்.


அந்த அறையில் இருந்த வண்ணம் வெளித் தாழ்வாரத்தில் நடந்தவைகளை யெல்லாம் தெளிவாக அறிந்துகொண்ட பூதுகன் பலவிதமாகச் சிந்திக்கத் தொடங்கினான். அவனுக்குப் பல உண்மைகள் விளங்கின. காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த கலங்கமாலரையருக்கும் சிம்மவர்மனுக்கும் அதிக தொடர்பு இருக்கிற தென்பதை யறிந்து கொண்டான் பூதுகன். சிம்மவர்மனின் கையாளாகிய ரவிதாசன் கொலை செய்யப் பட்டதிலிருந்து இவர்களுக்கு விரோதமாக வேறு யாரோ இருந்து பல சூழ்ச்சிகள் செய்கிறார்களென்பதும் அவன் மனத்துக்குப்பட்டது. பல்லவ சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பாளன் போல் சிம்மவர்மன் பேனாலும் அவன் பல்லவ சாம்ராஜ்யத்தையே கவிழ்க்க நினைக்கும் துரோகி என்பதை அவனுடைய பூடகமான பேச்சிலிருந்து நன்குணர்ந்து கொண்டான் பூதுகன். அதிலும் தன்னுடைய நட்பைச் சிம்மவர்மன் விரும்புவது எத்தகைய காரியத்துக்காக இருக்கு மென்பது அவனுக்கு நன்கு விளங்கியது. எப்படி இருந்தாலென்ன? சிம்மவர்மன் தானாகவே வந்து தன் பொறியில் சிக்கிக் கொண்டான் என்று தான் பூதுகன் எண்ணினான், தன் லட்சியத்துக்கு, பல்லவ அரசருடைய துரோகியாக விளங்கும் சிம்மவர்மனின் நட்பு அத்தியாவசிய மானதென்று அவன் எண்ணினான். எப்படியோ தேனார்மொழியாளின் மூலம் சிம்மவர்மனின் நட்பைச் சம்பாதித்துக் கொண்டு பல ரகசியங்களை யறிந்து கொள்ளலாமென்று பூதுகன் நினைத்தான். ஒரு சாம்ராஜ்யத்தின் துரோகியும், மற்றொரு சாம்ராஜ்யத்தில் பக்தி விசுவாசமுள்ளவனும் நண்பர்களானால் ஒரு சாம்ராஜ்யம் அழிவதற்கும் ஒரு சாம்ராஜ்யத்தை எழுப்புவதற்கும் வேறு காரணங்கள் வேண்டுமா? பல்லவ சாம்ராஜ்யத்தின் துரோகி ஒருவரின் நட்பு சோழ சாம்ராஜ்பத்தின் உதயத்துக்கு ஆரம்ப முகூர்த்தக் கால் நடுவது போன்ற சுப சூசகமல்லவா?

சிம்மவர்மனை வாசல் வரையில் கொண்டு போய் விட்டு வந்த தேனார் மொழியாள் சிரித்துக் கொண்டே வந்து பூதுகனிடம், “எல்லாவற்றையும் தெரிந்து கொண்டீர்களல்லவா? வந்த மனிதர் யாரென்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே? நாங்கள் பேசிக் கொண்டிருந்தது உங்கள் காதில் விழுந்திருக்க வேண்டுமே?” என்றாள்.

“எல்லாம் தெரிந்து கொண்டேன். எல்லாவற்றையும்விட உன் நடிப்புக் தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னை உன்னுடைய அத்தை மகன் என்று சொல்லி விட்டாயே? பாவம், அந்த மனிதரும் நம்பியதுதான் அதிசயம். உனக்கும் இப்படி ஒரு அத்தை மகன் இருக்க வேண்டியதுதான். ஆனால் இதை உலகம் நெடுநாள் நம்ப வேண்டுமே?…..” என்றான் பூதுகன்.

”ஆமாம், நான்கூட அந்த இடத்தில் ஏதோ பொருத்தமில்லாமல்தான் சொல்லி விட்டேன். அவரும் நம்பி விட்டார். நீங்கள் குலத்தில் அந்தணரல்லவா….?” என்றாள் தேனார்மொழியாள். சட்டென்று நாணம் தோன்றி அவளைத் தலைகுனிய வைத்தது

பதினேழாவது அத்தியாயம்

அன்பே சிவம் ! அருளே சிவம்!

பூதுகன் சிரித்தான். “அந்தணனாவது? அந்தணன் என்றால் என்ன அர்த்தம்? ஒரு குலத்தில் பிறந்ததற்காக ஒருவன் அந்தணனாகிவிட மாட்டான். ‘ஒருவன் அந்தணணாவது முடித்தலையாலல்ல, கோத்திரத்தாலுமல்ல, பிறப்பினாலுமல்ல. எவரிடம் சத்தியமும் தருமமும் நிலைத்துள்ளனவோ, அவன்தான் அந்தணன் என்று புத்தபெருமாள் சொல்லுகிறார். என்னைப் போன்ற சார்வக சித்தாந்திக்குச் சாதி, மதம், குலம், கோத்திரம் போன்ற பந்தங்கள் ஒன்றும் கிடையாது. ஒரு வேளை நீ என்னை அந்தணன் என்று நினைப்பதைத் தவிர வேறுவிதமாக நினைக்க முடியவில்லை யென்றால் நான் சத்தியத்திலும் தருமத்திலும் நிலைத்துள்ளவன் என்பதற்காக வேண்டுமானால் அப்படி நினைப்பதாக வைத்துக்கொள். நான் அக்னி ஹோத்ரம் போன்ற நித்யகரு மானுஷ்டானங்கள் எதிலுமே பற்றுக் கொள்ளாவிட்டாலும், யக்ஞோபவீதம், கோபி சந்தனம் முதலிய குலச் சின்னங்களை அணிந்து கொள்ளா விட்டாலும், நம்மை மீறிய பரத்துவம் ஒன்று இல்லை யென்று சொன்னாலும், பேராசையும், வஞ்சனையும், பொய்யும், கொலை உணர்ச்சியும் நிறைந்த இந்த உலகத்தில் சத்தியத்திலும் தருமத்திலும் நாட்டமுள்ளவனாக இருக்கிறேன் என்பதற்காக என்னை நீ அந்தணன் என்று சொன்னால் அதை நான் ஒப்புக் கொள்கிறேன். அந்தணன் என்ற பெயரில் நான் கோழையாக விரும்பவில்லை. அந்தணன் என்ற பெயரில் ஆயுத பலம் உள்ள எதிரிகளைக் கண்டு அச்சமடைய விரும்பவில்லை. பாரதம் பொய்யோ நிஜமோ, ஆனால் அதில் வரும் துரோணனைப் போலும்-அசுவத்தாமனைப் போலும்-தன் கைக்கோடரியால் ஆயிரக்கணக்கானவர்களின் தலையை வெட்டிக் குவித்த பரசுராமன் போலும் வீரத்தோடு நிகழ நினைக்கிறேன்” என்றான். எவ்வித அங்கியும் அணிந்து கொள்ளாத அவனுடைய அகன்ற மார்பும். இரண்ட புஜங்களும், பிரகாசம் நிறைந்த கண்களும், புன்சிரிப்பும். அலட்சியம் நிறைந்த கணீரென்ற பேச்சும், தேனார்மொழியாளின் மனத்தை ஆழம் நிறைந்த சுழலில் விழுந்த துரும்பு போல் சுழல வைத்தன. இத்தகைய அழகனைத் தன் காதலனாக அடைந்த வைகைமாலை உலகிலேயே சிறந்த பாக்கியவதிதான் என்ற எண்ணம் கண நேரத்தில் அவள் மனத்தில் எழுந்தது. அவள் அவனுடைய கம்பீரமான முகத்தை அள்ளிப் பருகுபவள் போல் ஒருவிதமாகப் பார்த்துக் கொண்டே, “பல்லவ சக்கரவர்த்தியின் சகோதரராகிய சிம்மவர்மருக்குக் கூட உங்களிடம் அச்சம் இருக்கு மென்று நான் நினைக்க வில்லை.உங்களை ஏதோ பழி வாங்க நினைப்பவர் போல் ஆவேசத்துடன் பேசிய அவர் உங்களுடைய நட்பை விரும்புகிறவர் போல் பின்னால் பேசியது எனக்கே கொஞ்சம் வியப்பாக இருந்தது. உண்மையாகவே நீங்கள் எல்லோருடைய மனத்தையும் கவரக் கூடியவராய்த்தா னிருக்கிறீர்கள். உலகத்தில் புத்த பெருமானைப் பற்றிச் சொல்லுவார்கள், அவருடைய உபதேசத்தைக் காட்டிலும் அவரது உருவமே மக்களின் மனத்தைக் கவர்ந்து விட்டதாக. அவருடைய உபதேசங்களைக் கேட்கும் முன்பே அவருடைய பேரொளிமயமான உருவத்தைக் கண்டதுமே ஒவ்வொரு நகரத்திலுமுள்ள ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாகச் சீவர ஆடையணிந்த பிக்ஷுக்களாகவும், பிக்ஷுணிகளாகவும் ஆகி விட்டார்கள் என்று சொல்லுவார்கள். ராஜக் கிருஹத்திலே புத்தபெருமான் தங்கியிருந்த சமயம் கபில வஸ்துவிலிருந்த அவருடைய தந்தை சுத்தோதன மன்னர், ஒன்பது தடவைகள் தமது மந்திரி, பிரதானிகளில் மிகவும் பிடித்தவர்களையும், புத்திசாலிகளையும் அனுப்பி அவர் மனத்தை மாற்றி அரண்மனைக்கு அழைத்துவர முயன்றாராம். ஆனால் புத்தபிரானை அரண்மனைக்கு அழைத்துச் செல்ல வந்தவர்களெல்லாம் புத்த பெருமானின் தெய்விக உருவத்தைக் கண்டதும் தங்கள் எண்ணத்தை மறந்து அவருக்கு அடியார்களாகித் துறவறம் பூண்டு ராஜக் கிருசத்திலுள்ள வேணு வனத்திலேயே தங்கித் தவங் கிடந்தார்களாம். இதனால் மனம் உடைந்த சுத்தோதனர் கடைசி முறையாக, புத்த பெருமானோடு குழந்தைப் பருவத்தில் நெருங்கிப் பழகினவனும், அவர் பிறந்த நாளிலேயே பிறந்தவனும் சகல சாஸ்திரங்களையும் படித்து மேதை என்று திகழ்ந்தவனுமாகிய உதாயி என்ற அந்தண வாலிபனை, போதிசத்துவரிடம் அனுப்பினாராம். உதாயி போடுசத்துவரிடம் போகும்போதே, ‘குழந்தைப் பருவம் முதல் அவரோடு பழகியவனாதலால் அவருடைய உருவம் என்னைக் குலைத்து விடாது. ஆனால் அவருடைய பேச்சு என் மனத்தைக் குலைத்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். அதற்காக அவருடைய வார்த்தைகளைக் கேட்காத வண்ணம் காதில் பஞ்சை அடைத்துக் கொண்டு போகிறேன்’ என்று சொல்லித் தன் இரு காதுகளிலும் பஞ்சை யடைத்துக் கொண்டு புத்தபெருமானிடம் போனானாம். ஆனால் பாவம், அவனுடைய எண்ணத்துக்குப் பழுதாகப் புத்தபெருமானின் உள்ளம் கவரும் அழகு உருவம் காட்சி யளிக்கவே அவனும் காஷாயதாரியாகி வேணு வனத்திலுள்ள ஒரு மரத்தடியில் கண்மூடி யோக நிஷ்டையில் அமர்ந்து விட்டானாம். இதைப்போல உங்கள் உருவமும் பேச்சும்….” என்றாள் இனிய குரலில்.

பூதுகள் சிரித்தான். “நீ சொல்வதைப் பார்த்தால் பெரிய விபரீதமாக இருக்கிறதே? பரம நாஸ்திகனான என்னையும் புத்த பெருமானையும் ஈடு கட்டாதே. என் உருவில் மயங்கி இது வரையில் யாரும் சீவர ஆடை அணிந்து பிக்ஷுக்களாகி விட்டதாகத் தெரிய வில்லை. ஜாக்கிரதை: உனக்கு ஏதாவது என் உருவைக் கண்டதும் மயக்கம் ஏற்பட்டிருந்தால் அதற்காக பிக்ஷுணியாகிவிட வேண்டுமென்று தீர்மானித்து விடாதே. நான் உலகில் யாரும் பிக்ஷுவாவதையோ, பிக்ஷுணியாவதையோ விரும்பவில்லை” என்றான்.

“நான் பிக்ஷுணியாக விரும்பவில்லை. இந்த மனத்தில் ஆசையும் மோகமும் விடாத வரையில் ஒரு பிக்ஷுணி ஆவதனால் என்ன பலன் இருக்கிறது? மாலவல்லியைப் போல் வாழ்விலொருபுறம் மோகமும், இன்னொரு புறம் துறவில் நாட்டமுமாகத் தடுமாறுவதற்கு நான் சித்தமாயில்லை. உங்களிடம் நான் கண்டதைப் பற்றிச் சொன்னேன், அதிருக்கட்டும். நீங்கள்தான் புத்த பிக்ஷு கோலத்தில் இருந்த ரவிதாசனைக் கொன்றதாகச் சிம்மவர்மர் சொல்லுகிறாரே? அவனைக் கொன்றதினால் தோஷமில்லை. ஆனால் அதை நீங்கள் செய்திருப்பீர்களா என்ற சந்தேகம்தான் எனக்கு…” என்றாள்.

“நான் செய்திருக்க மாட்டேன் என்று நீ நம்பினால் சரிதான். செய்திருப்பேன் என்று நீ சந்தேகித்தாலும் அந்தச் சந்தேகத்தை நிவர்த்திக்க நான் தயாராயில்லை. நான் இப்பொழுது முடிவான தீர்மானத்துக்கு வந்த விட்டேன். ரவிதாசனைக் கொன்றவர்கள் கலங்கமாலரையனைச் சேர்ந்தவர்களல்ல. மாலவல்லியோ, அல்லது அவளைச் சேர்ந்தவர்களோ அல்ல. சிம்மவர்மனோ அவனைச் சேர்ந்தவர்களோ அல்ல. இவர்களெல்லோரையும் தவிர வேறு யாரோதான் அவனைக் கொன்றிருக்க வேண்டுமென்று நான் நம்புகிறேன். நான்தான் ரவிதாசனைக் கொன்றிருக்க வேண்டும் என்று சிம்மவர்மன் நம்பும் போது என்னிடமே அவன் நட்புக் கொள்ளப் பிரியப்படுவதுதான் விநோதம்” என்றான் பூதுகன்.

“உங்களிடம் அவர் நட்புக் கொள்ள விரும்புவதும் ஒரு சூழ்ச்சியாக இருக்கக் கூடாதா?” என்றாள் தேனார்மொழி.

“சூழ்ச்சியாக இருக்கக் கூடாதா என்ன? சூழ்ச்சியேதான்.”

“அவர் உங்களோடு நட்புரிமை கொள்ள விரும்புவது ஒரு சூழ்ச்சி என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் போது அவருடைய சிநேகிதத்தை நீங்கள் ஏன் வரவேற்க வேண்டும்? அதனால் உங்களுக்கும் ஏதேனும் ஆபத்து ஏற்படாதா?”

“சிம்மவர்மனோடு நட்புரிமை கொள்வதால் மாத்திரம் எனக்கு ஆபத்து ஏற்படும் என்பதல்ல. எப்பொழுதுமே ஆபத்திடையேதான் நடமாடிக் கொண்டிருக்கிறேன். சிம்மவர்மனின் நட்பு ஒருவகையில் ஆபத்தானதுதான். மற்றெரு புறத்தில் அவனுடைய நட்பு என்னுடைய காரியசித்திக்குப் பல விதத்திலும் உதவியாக இருக்கும். அவனிடமிருந்து சில ரகசியங்களைத் தெரிந்து கொண்டு, அதனால் எனக்கு ற்படும் தீமையிலிருந்து ஜாக்கிரதையாக விலக் கொள்வதுதான் சாமர்த்தியம், எலியைப் பிடிக்கப் பொறிவைத்தால் சாமர்த்தியமான எலி அந்தப் பொறியில் வைத்திருக்கும் பண்டத்தை மட்டும்தின்று விட்டு ஓடிவிடுவது போல…” என்றன் பூதுகன்.

“நீங்கள் சொல்வதெல்லாம் சரி தான். உங்களுக்கு அத்தகைய சாமர்த்தியம் உண்டு, ஆனால் எனக்குச் சிறிது பயமாக இருக்கிறது. நீங்கள் மறுபடியும் சோழ சாம்ராஜ்யத்தை நாட்டில் நிலைநிறுத்தப் பாடுபடுவீர்களென்று அந்தச் சிம்மவர்மனுக்குத் தெரியும். அப்படி இருக்கும்போது அவன் உங்களைக் கொன்றுவிடத்தானே முயற்சி செய்வான்?” என்றாள் தேனார்மொழி.

பூதுகன் அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே, “இவ்வளவு அனுபவம் அடைந்தும் சிம்மவர்மனின் மனோ நிலையையோ சூழ்ச்சியையோ நீ அறிந்து கொள்ளாததுதான் விநோதம், சிம்மவர்மன் நந்திவர்மன் நாட்டையாளுவதை விரும்பவில்லை. தானே பல்லவ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தைப் பெற நினைக்கிறான் என்பதை நீதானே சிறிது நேரத்துக்கு முன்னால் சொன்னாய்? பல்லவ சாம்ராஜ்யத்துக்கு எதிராளியாக இருக்கும் என்னைப் போன்றவர்களுடைய நட்பைச் சிம்மவர்மன் விரும்புவது இயற்கை தானே? என்னுடைய நட் பினால் அவனுடைய சுனவு பலிக்கா விட்டாலும் என்னுடைய காரியத்துக்குச் சாதகமுண்டல்லவா? முதலாவதாக மாலவல்லி எங்கு மறைந்தாள் என்ற விஷயம் அவன் மூலமாகத் தெரியாமல்லவா? அவனுக்கு அந்தரங்க நண்பன் போல் சில காலம் இருந்து எவ்வளவோ விஷயங்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். நீ அவன் கோரியபடி நாளைய தினம் எப்படியாவது எனக்கும் அவனுக்கும் நட்பு ஏற்படுத்த முயற்சி செய்” என்றான்.


தேனார்மொழியாள் ஒரு மோகனப் புன்னகை புரிந்தாள். அவளுடைய அழகான பார்வை ஏதோ கனவு உலகத்திலாழ்ந்திருப்பது போலிருந்தது. அந்தப் புன்னகையையும், பார்வையையும் பூதுகனைப் போன்றவர்கள் புரிந்து கொள்வது கடினமல்ல. அவன் நெடு நேரத்துக்கு முன்பே அதன் பொருள் விளங்கப் பெற்றவனாய்ச் சிறிது விழிப்போடுதான் இருந்தான், “உங்களுடைய வார்த்தை ஒவ்வொன்றுக்கும் நான் கட்டுப்பட்டவளே. நீங்கள் எதைச் செய் என்றாலும் அதைச் செய்யச் சித்தமாயிருக்கிறேன். உங்களைப் பார்த்ததிலிருந்து என்னை உங்களுக்கு அர்ப்பணித்து விட்டேன். இந்த அடிமையின் அன்பை மாத்திரம் நிராகரிக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்…” என்றாள் தேனார்மொழியாள்.

அந்தச் சமயம் அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே பூதுகனுக்குப் புரியவில்லை.அவளால் அவனுக்குச் சில காரியங்கள் ஆகவேண்டியிருந்தன. உண்மைதான். அதற்காக அவள் விருப்பத்துக்கிணங்கித் தன்னுடைய நிலையான உள்ளத்திலும், பரிசுத்தமான வாழ்க்கையிலும் அவன் ஒரு களங்கத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்ப வில்லை. அவன் சிறிது ஏளனமாகச் சிரித்துக் கொண்டே, “இத்தகைய அன்புத் தளையில் என்னைக் கட்டுப்படுத்துவாய் என்று நான் நினைக்கவில்லை தேனார் மொழி! வைகைமாலை உனக்குத் தோழி. அவளும் ஒரு பெண்; வாழ்வில் அவளுக்குரியவன் நான்தான் என்பதை மறத்து விடாதே. எனக்காக அல்ல. உன்னைப் போன்ற ஒரு பெண்ணுக்கு உரியதானதை நீ அபகரிக்க விரும்பாதே. இது உன் தோழிக்கு நீயே நினைக்கும் பெருந் துரோகமாகும்” என்றான்.


தேனார் மொழி புன்னகையோடு பொற்கொடி போன்ற தன் உடலை நெளித்தாள், “நான் தோழிக்குத் துரோகம் செய்யவில்லை. அவள் மிகவும் நல்லவள். என் மன நிலை அறிந்து என்னிடம் இரக்கம் காட்டி என்னுடைய விருப்பத்தை அங்கீகரிப்பாள். நல்ல தோழர்கள் தாங்கள் அனுபவிப்பதைத் தங்கள் தோழர்களும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவதில்லையா? ருசிகரமான உணவைத் தன்னுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து அளிக்காமல் யாரேனும் சாப்பிடுவது உண்டா? பெருந்தன்மையுள்ள வைகைமாலை, என்னிடம் பேர் அபிமானம் வைத்துள்ள வைகைமாலை இதற்காக என்னை மன்னிப்பாள். உங்கள் மனத்தில்தான் அனுதாபத்துக்கும், இரக்கத்துக்கும், அன்புக்கும் கொஞ்சம் இடம் அளிக்க வேண் டும்” என்று கொஞ்சும் மொழிகளால் சொல்லிப் பிறகு மெதுவாக அவனை நெருங்கி அவனுடைய திரண்ட புஜங்களைத் தொட்டாள்.

திடீர் என்று ‘தேனார்மொழி’ என்று யாரோ கூப்பிடும் குரல் கேட்கவே அவள் திகைப்புற்றுத் திரும்பினாள். பூதுகன் பரபரப்போடு விழித்தான்.

எதிர்பாராதவண்ணம் அங்கு வந்து காட்சியளித்த அந்த மனிதரின் உருவமும் அலங்காரமும் அவர் பரம சிவ பக்த சிரோமணி என்பதைத்தான் எடுத்துக் காட்டின. சிம்மவர்மனை வழியனுப்பி விட்டு வந்த தேனார்மொழியாள் கதவைத் தாளிடாமல் வந்து விட்ட பிசகை அப்பொழுதுதான் உணர்ந்தாள். பரங்கிப் பழம் போன்ற சிவத்த குட்டையான உருவம்; மொட்டைத் தலை; இடையில் துல்லியமான ஒரே வெள்ளை வஸ்திரம்: கழுத்தில் பருத்த உத்திராட்ச மாலை; நெற்றியையும் உடம்பையும் பூரணமாக மறைத்திருந்த விபூதிப் பூச்சு, அவருடைய வயதை ஐம்பதுக்கு மதிப்பிடலாம். முதுமை காரணமாகச் சிறிது ஒளி மழுங்கியிருந்த அவர் கண்களில் அப்பொழுது ஏதோ கோபக் வீசியது போலத்தான் இருந்தது.

அந்த மனிதர் தேனார்மொழியாளிடம் நெருங்கிப் பழகினவராகத்தான் தோன்றினார். தேனார்மொழியாள் அவர் கண்களில் தெரிந்த கோபத்தைப் பார்க்கப் பயந்தவள் போல் தலைகுனித்து கரங் குவித்துத் தன்னுடைய வணக்கத்தை அவருக்குத் தெரியப்படுத்தினாள். அந்த மனிதர் தேனார்மொழியாளுக்குச் சமீபமாக நின்ற பூதுகனை ஏற இறங்க ஒரு தடவை பார்த்தார்.

பூதுகன் அவருடைய எதிர்பாராத வரவைக் கண்டு மிகுந்த ஆச்சரியமடைந்தவனாகவோ லட்சியம் செய்தவனாகவோ தோன்ற வில்லை. பார்ப்பதற்குப் பெரிய சிவ பக்தராகத் தோன்றும் அவருக்கு மரியாதையோ வணக்கமோ செலுத்த விருப்பமில்லாதவன் போல், தான் உட்கார்ந்திருந்த ஆசனத்தை விட்டு எழுந்திருக்காமல் வேறு ஏதோ யோசனையில் ஆழ்ந்தவன் போல் இருந்தான்.

சிவ பக்தி மிகுந்த நந்திவர்மனின் ஆட்சியில் இத்தகைய சிவபக்தர்களுக் கெல்லாம் பேராதரவும் மதிப்புமிருக்குமென்று அவனுக்கு நன்றாகத் தெரியும். அதிலும் அங்கு வந்துள்ள மனிதர் அரசனோடு நெருங்கிய உறவு கொண்டவராகத்தான் இருப்பார் என்றும் அவன் எண்ணினான். அரசரோடு மிக நெருங்கிய தொடர்பும். அரசாங்கத்தில் பெருமதிப்பும் கொண்ட சிவபக்தருக்குத் தேனார்மொழியாள் போன்ற ஒரு இசைக் கணிகையிடம் அதிகாரம் செலுத்தக் கூடிய உரிமை ஏற்பட்டிருந்தால், அது அதிசயமான தல்லவா? ஏதோ அவர் தம் அதிகாரத்தைக் காட் டுவதற்குத்தான் தேனார்மொழியாளின் வீட்டை அடைந்திருக்கிறாரென்று அவன் தீர்மானித்தான்.

திடீரென்று ‘தேனார் மொழி’ என்று உரத்த குரலில் கூப்பிட்ட வண்ணம் தோன்றிய அந்த மனிதர் எதிர்பாராத வண்ணம் அங்கு ஏதோ காட்சியைக் கண்டவர் போல் பிரமிப்படைந்து நின்று விட்டார். அவர் மறுபடியும் ‘நமச்சிவாய’ என்ற தொடக்கத்தோடு பேச ஆரம்பித்தார். “தேனார்மொழி! பிறை சூடிய பெருமானையே தன் குல தெய்வமாகக் கொண்ட மன்னர் பிரானது இசைக் கணிகையாகிய நீ தகாத சில செய்கைகளில் ஈடுபட்டுள்ளாய் என்று கேள்விப்பட்டு நான் வந்தேன்.”

பூதுகன் அந்தச் சினடியாரின் பேச்சை மிகக் கவனத்தோடும் ஆர்வத்தோடும் கேட்டவனாகவோ, கேட்காதவனாகவோ தோன்றவில்லை. அவன் இன்னும் ஏதோ ஆழ்ந்த யோசனையில் உட்கார்ந்திருப்பவன் போலத் தோன்றினான். தேனார்மொழியாள் குவித்த கரத்தோடு தலை குனிந்த வண்ணமே நின்று கொண்டிருந்தாள். இந்தச் சமயத்தில் அவன் எப்படி அந்தச் சிவபக்தரின் வரவை எதிர்பார்க்க வில்லையோ, அப்படியே அவர்களின் வார்த்தையையும் எதிர்பார்க்கவில்லை. வேறொரு சந்தர்ப்பமாக இருந்தால் தேனார்மொழி குற்றஞ் செய்தவளாக இருந்தாலும் அந்தக் குற்றத்தை மறுத்துப் பேசும் துணிவு அவளுக்கு ஏற்பட்டிருக்கும். ஆனால் இந்தச் சந்தர்ப்பம் அவளாக எந்தக் குற்றத்திலும் படாதவளாக இருந்தாலும் ஏதோ குற்றம் செய்து விட் டவள் போன்ற உணர்ச்சிதான் அவளை அழுத்தியது. பயம் நிறைந்த குரலில், ”சுவாமி! அன்பே சிவம் என்ற கொள்கையையுடைய நாம் யாரை உலகத்தில் வெறுக்க முடியும்? அதிலும் நான் பெண்- அடிமை, எனக்கு அரசாங்க சம்பந்தமாக நடக்கும் சூழ்ச்சிகளோ அதற்குக் காரணங்களோ தெரியாது. அரசாங்கத்தில் ஆதரவும் பெருமதிப்பும் பெற்றவர்களுக்கு நானும் மதிப்புச் செலுத்தத்தானே வேண்டியிருக்கிறது? ஆனால் அவர்களுடைய காரியங்களும் சூழ்ச்சிகளும் எனக்கும் தெரியாது. அதில் நான் கலந்து கொள்ளவுமில்லை” என்றாள்.

அப்பொழுது அங்கு சிவனடியார் கோலத்தில் வந்த அந்த மனிதர் வேறு யாருமில்லை. பல்லவ மன்னனும் சிறந்த சிவ பக்தனுமான நந்திவர்மனின் அந்தரங்க தண்பரும் மதாச்சார்யன் போலவும் விளங்கிய அகத்தீசனடியார்தான். சிவபெருமானிடம் பெரும் பக்தி கொண்ட அவர் அரசனிடமும் பேரன்பு கொண்டிருந்தார். எப்பொழுதும் சிவனையே நினைந்திருக்கும் அவருள்ளத்தில் எதிராளிகளின் நடத்தைகளையும் சூழ்ச்சிகளையும் பற்றிய கவலையும் சிறிது உண்டு. சிவனை நினைந்து வாழ்நாளைக் கழித்துவிட வேண்டு மென்ற ஆசை கொண்ட அவருக்கு மன்னனைப் பற்றிய கவலையே உலகில் ஓட்டிய பந்தமாக இருந்தது. அவர் தன்னிடமும் அரசாங்கத்தினிடமும் எத்தகைய கவலைகொண்டிருக்கிறார் என்பதை மன்னன் அறிந்து கொள்ளாவிட்டாலும் அவன் அறியாத வண்ணமே மன்னனுக்கும் ஈசனுக்கும் தாம் கடமைப்பட்டவரென்று எண்ணி அரசாங்க நடவடிக்கைகளின் போக்கைக் கவனித்து வந்தார்.


அன்று மாலை பூதுகன் அந் நகருக்கு வந்ததும் அவன் தேனார்மொழியாளின் வீட்டையடைந்ததும் அவனுக்குப் பின்னர் சிம்மவர்மன் தேனார்மொழியாளின் வீட்டுக்கு வந்து போன விஷயமும் அவர் காதில் எப்படியோ எட்டியிருக்க வேண்டும்.

சிம்மவர்மனின் சூழ்ச்சிகளில் அவ ருக்குக் கவனம் உண்டு. பூதுகனின் கொள்கைகள் பற்றியும் அவர் ஓரளவு அறிந்து தானிருக்க வேண்டும். இந் நிலை யில் சிறந்த சிவபக்தை போல் விளங்கும் இசைக் கணிகையாகிய தேனார் மொழியாள் இத்தகையோரிடம் நட்பு கொண்டிருப்பதுபற்றி அவருக்குக் கவலை ஏற்படாதா? வரும்போது அவர் சிறிது கோபத்தோடு வந்தார். அதுவும் பூதுகனும் தேனார்மொழியாளும் இருந்த நிலைகண்டு அவருடைய கோபம் இன்னும் அதிகரித்தது. ஆனால் அவருடைய கோபம் படிப்படியாக எவ்வளவு அதிகரித்ததோ அப்படியே படிப்படியாகத் தணிந்தது. அதற்குக் காரணம் அங்கு அமர்ந்திருந்த பூதுகன் நிலையை அவர் பார்த்ததினால் தான் என்று சொல்லி விடலாம். பூதுகன் இருந்த நிலையிலிருந்து அவன் கொஞ்சங் கூட நெஞ்சை இளகவிடாத பக்குவ நிலையில் உள்ளவன் என்பதையும் கணப் பொழுதில் உணர்ந்து கொண்டார். “தேனார் மொழி! பூம்புகாரிலிருந்து பூதுக னென்ற நாஸ்திகவாதி யொருவன் காஞ்சிக்கு வந்திருக்கிறான் என்று அறிந்தேன். அதிலும் அவன் உன் வீட்டில் தங்கியிருக்கிறன் என்பதை அறிந்ததும் எனக்கு மிகவும் சங்கடம் ஏற்பட்டது” என்று சொல்லி அங்கு ஆசனத்தில் கம்பீரமாக வீற்றிருந்த பூதுகனைச் சந்தேகக் கண்களோடு பார்த்தார்.

அவர் சொல்லிய வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொள்ளாதவன் போல் வேறெங்கோ பார்த்தவண்ணம் அசையாமல் உட்கார்ந்திருந்தான் பூதுகன்.

தேனார் மொழியாள் சிறிது அச்சம் நிறைந்த குரலில், “தாங்கள் சொல்லும் பூதுகன் இவர்தான். எங்கள் ஊராகிய குடந்தைக்குச் சமீபமுள்ள திருப்புறம்பயத்தைச் சேர்ந்தவர். எனக்கு ஒரு முறையில் அத்தை மகனாக வேண்டும். இசையில் மிகவும் பற்றுதல் உள்ளவர்………” என்று சொல்லிக் கொண்டு வரும்போதே பூதுகன் சட்டென்று எழுந்தான். ”ஆம், எனக்கு இசையில் மிகப் பற்றுதல் உண்டு. பாடுவதிலும் யாழ்வாசிப்பதிலும் சிறிது பயிற்சி உண்டு” என்று சொல்லிக் கொண்டே அவருடைய பதிலை எதிர்பார்க்காமல் சட்டென்று அங்கு தேனார் மொழியாள் வைத்திருந்த வீணையை எடுத்து வைத்துக் கொண்டு மீட்டிய வண்ணமே “அன்பே சிவம், அருளே சிவம், என் போல் ஈனர்க்கு இரங்கும் சிவமே ” என்று பாடத் தொடங்கினான். பூதுகனின் பொருளும் சுவையும் நிறைந்த இசையைக் கேட்டதும் அகத் தீசனடிகள் அப்படியே திகைப்படைந்து நின்று விட்டார்.

பதினெட்டாவது அத்தியாயம்

எனக்கு ஆபத்தா?

பரம நாஸ்திகவாதம் பேசும் பூதுகன் பரமேசுவரனைக் குறித்து இவ்வளவு பக்தி பரவசமாகப் பாடுவானென்று அவர் நினைக்கவேயில்லை. எத்தகைய இனிய குரல்! அவன் கைகள் எவ்வளவு லாகவமாக வீணையை மீட்டுகின்றன. அவர் உள்ளம் உருகி ரோமாஞ்சனம் ஏற்பட்டது. கரங்களைக் குவித்துக் கண் மூடிக் கொண்டு நின்றார். தேனார்மொழியாளுக்குக் கூடச் சிறிது ஆச்சரியமாகத் தானிருந்தது. ஆம்! அவளுக்கு இரண்டு விதத்தில் ஆச்சரியம். நாஸ்திகவாதம் பேசும் அவன் பரமேசுவரனைக் குறித்து உருகிப் பாடுவது மட்டும் ஆச்சர்யமல்ல; அதைவிட ஆச்சர்யம் அவன் இவ்வளவு இனிய குரலும் உயர்ந்த இசைஞானமும் பெற்றவன் என்பதை அறிந்து கொண்டதுதான் ஆச்சரியம். அதிலும் அவன் மகேந்திர பல்லவன் கண்டுபிடித்த பரிவாதினி என்னும் வீணையை மீட்டுவதிலும் தேர்ச்சி பெற்றவனாக இருப்பது அவளுக்கு மிகவும் வியப்பைக் கொடுத்தது. மகேந்திரவர்மனுக்குப் பின் அத்தகைய யாழைக் கரங்களால் தொடத் தேனார்மொழியாள் ஒருத்திக்குத்தான் யோக்கியதை உண்டு என்பதை உலகம் அறியும். அப்படியிருக்கப் பரிவாதினி யென்னும் யாழை வாசிப்பதில் இன்னொருவரும் தேர்ச்சி பெற்றிருக்கிறர் என்பதை அவள் அறிந்தபோது அவளுக்குச் சிறிது பொருமையும் கலக்கமும்தான் ஏற்படடன. நிச்சயம் அந்த யாழை வாசிப்பவள் ஒரு பெண்ணாக இருந்தால் அப்பொழுது அந்த இடத்திலேயே அந்தப் பெண்ணை அடித்துக் கொன்றிருப்பாள். ஆனால் அவன் ஒரு ஆண்மகன். அதோடு அவள் யாரிடம் உள்ளத்தைப் பறி கொடுத்து மயங்கி நின்றாளோ அந்த மனிதரல்லவா யாழையெடுத்து மீட்டுகிறார்? அவளுக்கு ஏற்பட்ட பொறாமையைவிட ஆளந்தந்தான் அப்பொழுது அதிகமாக இருந்தது. யாழ் மீட்டிக் கொண்டே பாடும் பூதுகளின் அழகுருவில் மயங்கி அவனையே ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டு தன்னை மறந்து நின்றாள் தேனார்மொழியாள்.

அவன் பாட்டை முடித்து விட்டான். யாழை மெதுவாகக் கீழே வைத்து விட்டு அகத்தீசனடிகளின் முகத்தையும், தேனார்மொழியாளின் முகத்தையும் பார்த்தான்.


பூதுகன் தன் பாட்டை முடித்துக் கொண்டாலும் அகத்தீசனடியார் காதில் ‘அன்பே சிவம், அருளே சிவம்’ என்ற இசையோடு குழைந்த சொற்கள் சில வினாடிகள் அப்படியே ரீங்காரம் செய்துகொண்டுதா னிருந்திருக்கவேண்டும். அவர் குவித்த கரத்துடனேயே கண்களை மூடியவண்ணம் சில வினாடிகள் இருந்து விட்டுச் சட்டென்று ஏதோ கனவு உலகத்திலிருந்து விழித்தவர் போல் கண்களைத் திறந்து பூதுகனை ஆவலோடு பார்த்தார். பிறகு “அபசாரம், அபசாரம், எம்பெருமானின் பெருமையை இவ்வளவு பரவசத்தோடு பாடும் ஒரு மகா புருஷரை நான் பரம நாஸ்திகன் என்று நினைத்து விட்டது பெரிய அபசாரம்” என்றார்.

பூதுகன் சிரித்துக் கொண்டே எழுந்து அங்கிருந்த ஆசனத்தில் அமர்ந்து, “என்னை நாஸ்திகனென்று நினைத்ததில் அபசாரம் எதுவுமே இல்லை. நான் நாஸ்திகன்தான். நான் பாடியது சிவபெருமானிடம் எனக்கேற்பட்ட பரம பக்தியினாலல்ல. எனக்கும் இசை ஞானமுண்டு என்பதைக் காட்டுவதற்காகத் தான். இசைக்கே இயற்கையான மனத்தை உருக்கும் வன்மையுண்டு. அதிலும் சில மனிதர்களுக்குப் பிடித்த பாட்டைப் பாடிவிட்டால் நிச்சயம் அந்த மனிதர்களின் மனம் இளகும். சிவனைப் பற்றிப் பாடினால் உங்கள் மனம் உருகுமென்று எண்ணிப் பாடினேன். என்னுடைய பாட்டைக் கேட்டு நீங்கள் பக்தி பரவசராகி விட்டீர்கள். நீங்கள் நினைப்பது போல் நான் பக்திச் சுழவில் சிக்கித் தடுமாறவில்லை. இசைச் சுழலில் தான் சுற்றிக் கொண்டிருந்தேன்” என்றான்.

“உங்கள் கொள்கை எப்படிப்பட்ட தாயினும் இருக்கலாம். ஆனால் சிவசிவ என்ற இனிய வாய்ச் சொல் மனத்தை, பக்தி பரவசத்துள் ஆழ்த்திவிட்டது” என்றார் அகத்தீசனடிகள்.

பூதுகன் ஏளனமாகச் சிரித்தான். “என் கொள்கை இதுதான். எல்லா சமயமும் அன்பை வளர்க்கப் பாடுபடுகிறது. நானும் அந்த அன்பைத் தான் வளர்க்கப் பாடுபடுகிறேன். எப்படி யிருந்தாலென்ன? அன்பே சிவமானால் என்னிடம் நீங்கள் அன்பு செலுத்த முயற்சி செய்யுங்கள். துவேஷத்தைக் களையப் பாடுபடுங்கள். துவேஷத்தைக் களைந்தெறித்து அன்பை உலகில் நிலை நிறுத்திவிட்டால் இவ்வுலகமே சுவர்க்கமாகிவிடும்…” என்றான்.

“அன்பு வழியையே கைக்கொள்ள வேண்டும் என்பதுதான் சிறந்தது என்று நான் உணர்கிறேன். நீங்கள் நாஸ்திகவாதியா யிருங்கள். உங்கள் கொள்கைகளைப்பரப்பப் பாடுபடுங்கள். ஆனால் குழப்பத்தை உண்டாக்கி அரசைக் கவிழ்க்க முயற்சி செய்யாதீர்கள். இதுதான் மனத்துக்குப் பிடிக்காம லிருக்கிறது” என்றார் அவர்.

“தாங்கள் இத்தகைய பல்லவ சாம் ராஜ்யத்தை அழிக்கச் சதி செய்யும் கூட்டத்தில் ஒருவனாக என்னையும் நினைத்து விட்டதுதான் பரிதாபம். எங்கள் நாட்டை ஆண்ட சோழ மன்னர்கள் யாவரும் சைவ சமயத்தைச் சேர்த்தவர்கள். பிற மதத்தினரிடம் துவேஷ மனப்பான்மை பில்லாதவர்கள். இதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டாம். கடந்த கால வரலாறுகள் உங்களுக்குச் சொல்லும். அத்தகைய பெரிய வம்சம் இன்று சிலருடைய சாம்ராஜ்ய ஆசையால் உருக்குளைந்து போயிருப்பதைச் சோழ நாட்டில் பிறந்தவன் என்று சொல்லிக் கொள்ளும் யாராலும் சகித்துக் கொண்டிருக்கமுடியாது, சாம்ராஜ்ய ஆசையின் காரணமாகத் தெற்கிலிருந்து படையெடுத்து வரும் பாண்டியர்களும், வடக்கிலிருந்து படை யெடுத்து வரும் பல்லவர்களும் ஒருவரோடு ஒருவர் மோதிப் போர்புரியும் குருக்ஷேத்திரம் போலாகி விட்டது, சோழவள நாடு. பெரிய பண்டாரமும் சிறைக் கோட்டமும் இருக்கும் குடந்தைப் பதியில் சிறைக் கோட்டம் தான் நிறைந்திருக்கிறது. பொக்கிஷம் துடைத்திருக்கிறது. பஞ்சம் ‘இதோ வந்துவிட்டேன்; இதோ வந்து விட்டேன்’ என்று பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. பல்லவர்க்கு அடங்கித் தஞ்சையை ஆளும் முத்தரையர்களுக்குப் பதவியைக் காத்துக் கொள்ளப் போதிருக்கிறதே தவிர மக்கள் துயரைப் போக்க மனத்தைச் செலுத்த முடியாமல் இருக்கிறது. இந்தச் சிற்றரசர்களுக்குள்ளும் எவ்வளவோ பேதம். ஒருவர் பௌத்தர், ஒருவர் சமணர். ஒருவர் சைவர் – இப்படி. இந்த அரசர்களைத் தங்கள் வசப்படுத்திக் கொண்டு மதக்கொள்கைகளைப் பிரபலமாக்க மதவாதிகள் விரும்புகின்றனரே தவிர மக்களை நேரடியாக வந்து தாக்கும் வறுமையையும், பிணியையும் சிந்திப்பவர்களாக இல்லை. இந்த நிலையில் இங்கு ஒரு ஸ்திரமான அரசு இல்லையே என்று மக்கள் ஏங்குவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது?” என்றான் பூதுகன்.

“நீங்கள் சொல்வது யாவும் எனக்குப் புரிந்தது. ஆனால் மறுபடியும் சோழ வம்ச அரசத்தினர் ஆட்சிபுரிய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள். இல்யைா?” என்றார் அகத்தீசனடிகள்.

“நான் விரும்புவது மட்டுமில்லை. மக்களின் விருப்பமும் அப்படித்தான். பழையாறை நகரை பாண்ட சோழ வம்சத் தினனாகிய சிற்றரசன் குமாராங்குஜனைத் தஞ்சையை ஆளும் முத்தரையரின் ஏவலாட்கள் வஞ்சனையாகக் கொன்றிருக்கின்றனர். வீரத்திலும், தர்மத்திலும், ஒழுக்கத்திலும் சிறந்த அம்மன்னன் மக்களின் மதிப்பைப் பெற்றிருக்கிறான் என்ற பொருமையின் காரணமாகத்தான் தஞ்சை முத்தரையரும்-மற்றும் சில சிற்றரசர்களும் வஞ்சனையாகக் கொன்றிருக்கிறார்கள் என்பது உறுதி. இப்பொழுது பழையாறை நகரில் அவனுடைய விதவைக் கோலம் பூண்ட மனைவி கங்கமாதேவி சோழர் குலமணியாக விளங்கும் தன் ஒரே புதல்வனை வளர்த்துக் கொண்டிருக்கிறாள். தங்கள் அரசராகிய குமாராங்குஜரிடம் வைத்த பெரு மதிப்பாலும் பக்தியாலும் பழையாறை மக்களும் அரசாங்கப் பிரதானிகளும் அக்குழந்தையைப் பத்திரமாகக் காப்பாற்றி வருகின்றனர். பெருநற்கிள்ளி, கரிகாலன், செய்கணன், நல்லடி போன்ற சோழ அரசர்களின் குலத்தில் உறித்த அவ் வீரக் குழந்தையையும் வஞ்சனையால் மாய்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருக்கின்றனர், சில துரோகி கள், இந்திலையில் சோழ நாட்டின் சாதாரணப் பிரஜையாக என்னை நீங்கள் கருதிக் கொண்டு என் விருப்பம் எப்படிப்பட்ட தாக இருக்கும் என்பதையும் நீங்கள் சிந்திக்கத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான். நீங்கள் ஆழ்ந்த சிவ பக்தி யுள்ளவர்கள். சமயப் பூசலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக உங்களிடம் நான் இதைச் சொல்லவில்லை, உங்கள் சமயப் பெரியாராகிய திருகாவுக்கரசு அடிகள் பழையாறை வடதளியில் எழுந்தருளியிருக்கும் இறைவனை த் தரிசிக்கச் சென்ற சமயம் தஞ்சைப் பேரரசன் முத்தரையரின் ஆதரவு பெற்ற சமணசமயத்தினர் சிலர் பழையாறை நகரில் அத்துமீறிப் பிரவேசித்து அத்திருக் கோயிலிலிருந்த சிவலிங்கத்தைப் பெயர்த்துக் கொண்டு மறைந்து விட்டனர். வலிமையுடைய தஞ்சை மன்னரின் ஆதரவு இருக்கிற தென்று அச்சமயம் இக்கொடுமையை அறிந்த திருநாவுக்கரசர் பழைபாறையை ஆண்ட குமாராங்குஜனிடம் முறையிடவே, அம்மன்ளன் சமணர்களைத் துரத்திச் சிவலிங்கத்தை மீட்டுத் திருநாவுக்கரசு அடிகள் மனத்தையும் மகிழ்வித்தான். இத்தகைய சைவப் பேரன்பு கொண்ட அரச பரம்பரையினரின் ஆட்சி நிலவ வேண்டுமென்று என்னைப் போன்ற நாஸ்திகன்கூட விரும்பினால் நீங்கள் மகிழ்ச்சியல்லவா கொள்ள வேண்டும்? அத்துமீறித் தன் நாட்டில் நுழைந்து கோவிலில் இருந்த லிங்கத்தை ஒளித்த சமணர்களைத்துரத்தியதின் காரணமாக அன்றிலிருந்து சமண சமயத்தின் ஆதரவாளராக இருக்கும் முத்தரையருக்கும் சோழ மன்னர்களுக்கும் பகைமை ஏற்பட்டது. எப்படி யாவது பழையாறை நகரையாளும் சோழ மன்னரின் குலத்தையே பூண்டோடு அழித்துவிட வேண்டுமென்று முத்தரையர்கள் முயன்றுவருகின்றனர். இது பேரரசாகிய பல்லவ மன்னருக்குத் தங்களைப் போன்றவர்கள் எடுத்துச் சொன்னால் தானே விளங்கப் போகி றது….? அப்படியே சமயப் பூசலின் காரணமாக அரசினருள் குழப்பங்கள் ஏற்பட்டு மக்கள் அல்லல் படுவதை நீங்கள் வரவேற்கிறீர்களா?” என்றான்.

அகத்தீசனடிகள் சிறிது நேரம் யோசித்தார். “நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையே. சோழமரபினர்கள் தீயவர்கள் என்ற உணர்ச்சி என்றும் மக்களின் மனத்தில் ஏற்படக் காரணமில்லை. சோழர்களின் பெருமையையும் அவர்களின் சீலத்தையும் தான் நன்கு உணர்த்தவன். அவர்களை ஆதரிக்க வேண்டியதுதான். ஆயினும் இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தை அடியோடு அழித்து ஒழித்துவிடாத வண்ணம் காப்பாற்ற வேண்டிய கடமையும் என்னைப் போன்றவர்களுக்கு உண்டு, சோழ மரபினர் நல்லவரென்பதற்காக அரசனைக் கொண்டு அவர்களைப் பாதுகாக்க ஏற்பாடு செய்யலாமே தவிர வேறு எதற்கும் வழியில்லை. சமயம் நேர்ந்த போதெல்லாம் சோழ மரபினருக்கு உதவியைச் செய்ய நான் எப்பொழுதும் காத்திருக்கிறேன். அதற்காக இந்தப் பேரரசைக் கவிழ்க்கும் வேலைகளில் யார் ஈடுபட்டாலும் நான் பொறுக்க மாட்டேன்” என்றார்.

“இவ்வளவுதூரம் தங்கள் மனம் இரங்கியது பற்றி மிக்க வந்தனம், என்னைப் போன்றவன் சோழ பரம்பரைக்கு நலம் செய்ய வேண்டு மென்பதற்காகச் சதி வேலைகளில் சம்பந்தப்பட்டு ஏதேனும் செய்வேனென்று தாங்கள் நினைக்க வேண்டாம். குலத்தில் பிறந்த கோடரிக் காம்பு போல பல்லவ அரசினருக்கு அழிவைத் தேடப் பல்லவ மன்னரைச் சேர்ந்தவர்களே சித்தமாக இருக்கின்றனர் என்பதைத் தாங்கள் மறந்துவிட வேண்டாம். அவர்களுக்கு உதவியாகக் காஞ்சியிலிருந்து மதுரை வரையில் சதிகாரர்கள் திரித்து கொண் டிருக்கிறர்கள் என்பதையும் மறக்க வேண்டாம். நீங்கள் உங்கள் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டுவதெல்லாம் ஒன்றுதான். ‘மகாதேவா, என்றவது இந்தப் பல்லவ சாம்ராஜ்யம் சிதைந்து போகுமானால் அந்த இடத்திலேயே சோழர்களின் அரசு உதயமாக வேண்டும்’ என்பதுதான் அது” என்றான்.

அகத்தீசனடிகள் அந்தச் சமயத்தில் எதுவும் பேசவில்லை, அவர் ஆழ்ந்த யோசனையிலிருந்து விட்டு, “சரி, பார்ப்போம். எல்லாவற்றுக்கும் இந்த ஊரில் நீங்கள் அதிக நாட்கள் தங்குவது உங்களுக்கு மிகுந்த அபாயத்தை உண்டாக்கும். சிம்மவர்மனின் சூழ்ச்சிகள்தான் உங்களுக்கு அபாயத்தை உண்டாக்கு மென்பதல்ல, நீங்கள் இந்த நகருக்கு வந்தது அரசாங்கத்தினரின் கவனத்துக்கும் வந்திருக்கிறது. அவர்களாலும் உங்களுக்கு அபாயமுண்டு. அரசாங்கத்து உளவாளிகள் நீங்கள் அரசாங்கத்துக்கெதிரிடையாகச் சூழ்ச்சிகள் செய்வதாகத்தான் உணர்ந்திருக்கின்றனர். இதனால் நீங்கள் அரசாங்கத்தின் தண்டனைக்கும் உள்ளாக நேரும். ஆகையால் அதிசீக்கிரமே நீங்கள் இந்நகரைவிட்டுப் போய்விடுவது நலம்…” என்றார்.

”நானும் அதையெல்லாம் உணர்ந்து தானிருக்கிறேன். ஆனால் என்னுடைய நட்பை விரும்பும் சிம்மவர்மர் எனக்கு ஏதேனும் ஆபத்து நேர்த்தாலும் அதிலிருந்து காப்பாற்றி விடுவாரென்று நினைக்கிறேன்” என்றான் பூதுகன்.

இதைக் கேட்ட அகத்தீசனடியார் சிறிது கலக்கமும் திகைப்பும் அடைந்தார். “சிம்மவர்மன் உங்கள் நட்பை விரும்பலாம். ஆனால் உங்களுக்கு அவனுடைய நட்பு தகாது. இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தை யார் சீர்குலைக்க நினைக்கிறார்களோ, அவர்களிடமே நீங்கள் நட்பு பாராட்ட விரும்புவது நீங்களும் தகாத செயல்களில் ஈடுபட்டவர் என்பதைத்தான் காட்டுகிறது ” என்று கூறினார் அகத்தீசனடிகள்.

“நான் இவ்வளவு சொல்லியும் நீங்கள் என்னைப் புரித்து கொள்ள வில்லையே என்றுதான் வருந்துகிறேன். நான் நெடு நாட்கள் இந்த ஊரில் தங்கியிருக்க விரும்பவில்லை. ஆனால் நான் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளாத வரையில் இங்கிருந்து போய்விடுவதும் சரியாகாது. என்னைப்போலொரு காரியத்தில் இறங்கியவன் எதற்கும் பயப்படுவதில் அர்த்தமில்லை” என்றான் பூதுகன்.

அதற்கு மேல் அவனிடம் அதிகமாகப் பேச விரும்பவில்லை அகத்தீசனடிகள். எப்படியோ அவருக்கு அவன்மீது அன்பும் அனுதாபமும் ஏற்பட்டன. அவன் செயல்குறித்து பச்சாத்தாபப்பட்டார். அதேசமயத்தில் அவருக்கு அவனிடம் சிறிது வெறுப்புணர்ச்சியும் ஏற்பட் டது. “உங்கள் சாமர்த்தியத்தில் உங்களுக்கு நம்பிக்கை யிருப்பது நல்லதே” என்று சொல்லிவிட்டுத் தேனார்மொழியாளைப் பார்த்து, “உன் அத்தை மகன் என்று சொல்லிக் கொள்ளும் இவரைக் காப்பாற்ற வேண்டியது உன்னுடைய பொறுப்பும் கடமையும் ஆகும், அம்மா, நான் சென்று வருகிறேன். நமச்சிவாய” என்று சொல்லி விட்டு மெதுவாக நடந்தார்.


தேனார்மொழியாள் அவரை வாசல் வரையில் கொண்டுபோய் விட்டுவிட்டுக் கதவைத் தாளிட்டுக் கொண்டு உள்ளே வந்தாள். அவளுக்கு ஏதோ பெரிய பந்தத்திலிருந்து நீங்கியது போல் இருந்தது: பூசை சமயத்தில் கரடிபுகுந்தாற் போல் அகத்தீசனடிகள் திடீரென்று தோன்றியது அவளுக்கு மிகவும் தரும சங்கடத்தைத்தான் விளைவித்தது. அவர் வந்த வேகத்தில் என்ன நடைபெறுமோ என்று அஞ்சியே நடுங்கினாள் அவள். ஆனால் பூதுகன் மிகவும் சாமர்த்தியமாக நடந்து கொண்டது அவளுக்கு மிகுந்த ஆறுதலை அளித்ததோடு, அவன் மீது அவளுக்கு ஏற்பட்டிருந்த மதிப்பை யும் காதலையும் அதிகமாக்கி விட்டது. அகத்தீசனடிகள் எப்பொழுது செல்வார் என்று துடிப்போடு காத்திருத்த அவள் ஒரு மோகனப் புன்னகை புரிந்த வண்ணம் ஆர்வத்தோடு பூதுகனை நெருங்கி மெதுவாக அவன் தோளில் தன் மெல்லிய கரத்தை வைத்தாள். “நீங்கள் இவ்வளவு அழகாகப் பாடுவீர் கெளென்று நான் நினைக்க வில்லை. அதிலும் மகேந்திர பல்லவர் சிருஷ்டித்த யாழாகிய இந்தப் ‘பரிவாதினி’யை என்னைத் தவிர வேறு யாராலும் தொடக் கூட முடியாதென்ற கருத்தோடு நான் இருந்தேன். எதிர்பாராத வண்ணம் கணப் பொழுதில் கற்கோட்டைபோல் எழும்பி இருந்த என்னுடைய கர்வத்தை இடித்துத் தூள் தூளாக்கி விட்டீர்கள். அதனால் எனக்கு ஆத்திரமோ பொருமையோ இல்லை. ஆனந்தம்தான். நான் மனதார விரும்பும் ஒரு மனிதர் என்னைப் போலவே நாத வித்தைகளில் தேர்த்தவராய் இருப்பது எனது பாக்கியம்தானே!” என்று சொல்லி அவன் முகத்தைப் பார்த்தாள்.

பூதுகன் தன் தோள்மீதிருந்த அவள் கரங்களை எடுத்து அப்பால் விட்டு, “தேனார்மொழி உனக்காக நான் இரக்கப்படுகிறேன். ஆனால் உலகில் எதையும் சிந்திக்காமல் யாரும் உணர்ச்சிகளுக்குப் பலியாகிவிடகூடாது. அதுவும் பெண்கள் உணர்ச்சி வசப்பட்டுத் தடுமாறி விட்டால் மிருந்த அபாயமாக முடியும். வைகைமாலை என்னிடம் அளவில்லாத பற்றுதலுள்ளவள். நான் அவளிடம் எல்லையற்ற பற்றுதலுடையவன், என்னுடைய இலட்சியமும் அவளுடைய இலட்சியமும் ஒன்று. அவள் அந்த இலட்சியத்துக்காகத் தன்னைத் தியாகம் செய்யச் சித்தமாய் இருக்கிறாள். நானும் அப்படியே. இத்தகைய உன்னத நோக்கத்திலுள்ள நாங்கள் மனத்தை ஒரு கணம்கூட வேறு எதிலும் சிதறவிடச் சித்தமாயில்லை, தேனார்மொழி இதை நீ உணர்ந்து கொள். உன்னுடைய மன ஆவலை அடக்கிக் கொள்வதுதான் உத்தமமான காரியமாகும்” என்றான்.

தேனார்மொழிக்குப் பூதுகனின் வார்த்தைகள் பெருத்த ஏமாற்றத்தை யளித்தன. உள்ளத் எழில் கொண்ட அவள் எந்த ஆண்பிள்ளையிடமும் இதுவரை காதற் பிச்சை ஏந்திச் சென்றதில்லை. மன்னாதி மன்னாகளெல்லாம் அவளிடம் காதற் பிச்சைக்குக் கையேந்தி நின்றிருக்கிறார்கள். இந்த ஏமாற்றம் அவளுக்குப் பெருத்த அவமானத்தை உண்டாக்கியதில் அதிசயமென்ன? மோகலாகிரி வீசும் அழகான விழிகள் கோபத்தால் சிவந்து விகாரமடைத்தன. சிவந்த உதடுகள் துடிக்க மார்பு பொருமி யெழ, ” நான் நேசத்தோடும் ஆர்வத்தோடும் உங்களிடம் சமர்ப்பிக்க வந்த அன்பு மலரை நீங்கள் காலால் தேய்த்து நாசமாக்கி விட்டீர்கள். நீங்கள் மிகவும் சுயநலக்காரர். உங்களுடைய காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக என்னை நாடி வந்திருக்கிறீர்கள். உங்களுக்காக எதையும் செய்யச் சித்தமா யிருக்கும் என் அன்பை நீங்கள் நிராகரித்தது பெரிய பாதகம்; போகட்டும் — இனிமேல் உங்களிடம் அன்புப் பிச்சை கேட்க மாட்டேன். எனக்குப் புத்தி வந்தது. நீங்கள் பல்லவ சாம்ராஜ்யத்தின் கோட்டையாகிய இந்தக் காஞ்சிமா நகரில் வந்து ஆபத்திடையே சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். நிச்சயம் இதை மாத்திரம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தத் தேனார்மொழியாளை அலட்சியம் செய்து விட்டு இந்தக் காஞ்சிமா நகரில் ஒரு கணம்கூடப் பத்திரமாக வாழ முடியாதென்பதை…” என்று படபடப்போடு சொல்லிப் பூதுகனின் முகத்தைப் பார்த்தாள்.

பூதுகன் அதிர்ச்சியோ பயமோ அடைந்து விடவில்லை. “தேனார்மொழி! ஆத்திரமோ கோபமோ நன்மை யளிக்காது. ஆத்திரமும் கோபமும் அடைவதைவிடச் சிந்தித்து உணர்ந்து கொள்வது எவ்வளவோ நல்லது. நீ எனக்கு விரோதியாகி விட்டதனால் பெரிய ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. என் மனம் அசைந்து விடாது. எனக்கு மதத் துறையிலும் எத்தனையோ விரோதிகள் உண்டு. பத்தோடு பதி னொன்று என்பது போல் நீயும் ஒருத்தி என்றுதான் நான் கருதுவேன். நம்முடைய பகைமை உச்ச நிலை அடைவதற்கு முன்னால் உன்னிடமிருந்து தான் விடை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்று சொல்லிச் சட்டென்று ஆசனத்திலிருந்து எழுந்தான்.

அவனுடைய அமைதி நிறைந்த வார்த்தைகள் தேனார்மொழியாளின் உள்ளத்தை உருக்கிவிட்டன. தான் சிறிதும் பொறுமை காட்டாமல் உணர்ச்சிப் பெருக்கினால் ஏதேதோ வார்த்தைகளைக் கொட்டி விட்டோம் என்பதை அப்பொழுதுதான் அவள் உணர்ந்தாள். தன்னுடைய தவறுதலுக்காக மன்னிப்புக் கேட்டு அவனைச் சமாதானம் செய்ய வேண்டு மென்று அவளுக்குத் தோன்றியது.

“என்னை மன்னித்து விடுங்கள். உணர்ச்சி வேகத்தில் ஏதேதோ சொல்லி விட்டேன். இந்த இரவு வேளையில் எங்கே கிளம்பிவீர்கள்? நீங்கள் எங்கும் போக வேண்டாம். இங்கேயே தங்கியிருங்கள். என்னுடைய நாட்டிலிருந்து வந்த ஒரு அதிதியை இந்த வேளையில் நான் வேறெங்கும் அனுப்பமாட்டேன். அதுவும் உங்களுக்கு ஆபத்து சூழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் உங்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் என்னுடையது ” என்று சொல்லிக் கொஞ்சும் முகத்தோடு அவன் இரு கரங்களையும் பிடித்துக் கொண்டாள்.

அவன் சட்டென்று அவளுடைய கரம் களை உதறித் தள்ளிவிட்டு வெளியில் வேகமாக நடந்தான். தேனார்மொழி அவனுக்கு முன்னதாக ஓடி வாசற் கதவின் தாளை அவன் இறந்து வெளியேறாத வண்ணம் கதவில் சாய்ந்து கொண்டு, “போகாதீர்கள், ஆபத்து. வெளியே சென்றால் வஞ்சகர்கள் கையில் சிக்கிக் கொள்வீர்கள். நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன். இங்கிருந்து போக வேண்டாம். என்னைத் தவறாக நினைக்காதீர்கள்..” என்றாள்.

”ஆபத்தா? இங்கு இருப்பதுதான் எனக்குப் பேராபத்தாக இருக்கும் போலிருக்கிறது! வீண் பிடிவாதம் காட்டாதே. உன் ஆசை அளவில் வீழ்ந்து சாகும் விட்டில் பூச்சியல்ல நான்” என்று சொல்லிச் சட்டென்று அவள் தோள்களைப் பிடித்து அப்பால் தள்ளி, தாளை நீக்கிக் கதவைத் திறந்து கொண்டு அவ்விடத்தை விட்டு வெளியேறினான் பூதுகன்.

– தொடரும்…

– மாலவல்லியின் தியாகம் (தொடர்கதை), கல்கி வார இதழில் 1957-01-13 முதல் 1957-12-22 வரை வெளியானது.

– கி.ரா.கோபாலனின் மறைவுக்குப் பின் அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு ‘மாலவல்லியின் தியாகம்’ தொடரின் கடைசி பத்து அத்தியாயங்களையும் எழுதி முடித்தார் கல்கியில் மற்றொரு உதவி ஆசிரியராக இருந்த ஸோமாஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *