சுட்டேன், சுடுகிறேன், சுடுவேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 13, 2024
பார்வையிட்டோர்: 6,222 
 
 

அது – 1600, பென்ஸில்வேனியா அவென்யூ. ஆமாம், வெள்ளை மாளிகையின் முகவரிதான்! அங்கே நடந்ததை நான் எழுதியிருக்கிறன்னே…நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.

ஒரு நாள் காலை 7 மணி. காலை இளம் வெயில். பறவைகளின் மகிழ்ச்சிக் குரல். வித விதமான பூக்கள் வெள்ளை மாளிகை தோட்டத்தை அலங்கரித்தன.

அமெரிக்க ஜனாதிபதி வழக்கம்போல சீக்கிரமே எழுந்துவிட்டார். தனக்குரிய சுறுசுறுப்புடன் மேசையில் அன்று குவியப்போகும் வேலையை முடிக்க வேண்டும் என்ற வேகத்துடன் ‘ஓவல் ஆபீசில்’ தன்னுடைய கம்பீரமான இருக்கைக்கு விரைந்தார். ஆனால் சட்டென்று உட்காராமல், சன்னலுக்கு வெளியே பார்த்தார். ‘அடடா, என்ன அருமையான காலை இது’ என்று இயற்கையின் வண்ணக் கோலங்களைப் பார்த்து மனத்துக்குள் ரசித்து மகிழ்ந்தார். சன்னல் கதவுகளை இலேசாகத் திறந்தார்.

‘ம்…ம்…’ – வசந்தத்தின் வாடையை இழுத்து சுவாசித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார். ‘அமெரிக்கா எப்படிப்பட்ட நாடு! இந்த நாட்டின் தலைவரான எனக்கு காலை அழகை வெளியே ஓடி அனுபவிக்க முடியவில்லையே…என்ன சுதந்திரமான நாடு இது?’ என்று ஒரு விநாடி நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

நேரம் நகர்ந்தது. மணி பத்து. காப்பி தட்டுடன் ஒரு பெண் உள்ளே வந்தாள். அவள் வெளியே போனதும், ஜனாதிபதி காப்பியை கோப்பையில் ஊற்றி பருக ஆரம்பித்தார்.

‘ம்…என்ன இது? காப்பிக்கு எப்பவும் இல்லாத அலாதியான ஒரு வாடை வருதே…’ என்று குடிப்பதை நிறுத்தினார். கோப்பையை மூக்குக்கு அருகில் எடுத்து முகர்ந்து பார்த்தார். காப்பி வாசனையேதான்! ஆனால், குடிக்கலாம் என்று மீண்டும் வாயருகில் கோப்பையை வைத்தபோது அந்த அலாதியான வாடை கலந்தது. கோப்பையை சட்டென்று வைத்துவிட்டு எழுந்தார்.

அந்த வாடை இதுவரை அமெரிக்கத் தலைவர் அறிந்திராத ஒரு வாடை. இப்போது நன்றாகவே வீசியது. சன்னலண்டை போய்ப் பார்த்தார் – சன்னல் வழியாகத்தான் உள்ளே வாடை வருகிறது என்பது புரிய சில விநாடிகள்தான் ஆகின. என்ன விநோதமான வாடை இது? எங்கிருந்து வருகிறது? கேள்விகள் அவர் மூளையைத் துளைக்க, வாடை அவர் மூக்கைத் துளைத்தது. என்ன வாடை என்பது தெரியா விட்டாலும், அந்த வாடையில் வெங்காய மணம் இருப்பது தெரிந்து விட்டது. அவருக்கு ரொம்பப் பிடித்த வெங்காய மணம்! அடடா!!

போனை எடுத்து ஒரு எண்ணை தட்டினார். சீக்ரட் செர்வீஸ் ஆட்கள் நாலுபேர் பறந்து வந்தனர். “இந்த அறைக்குள் வாடை ஒன்று வருகிறதே, அது புதிதாக தெரியவில்லையா?” என்றார் தலைவர். நால்வரும் ஓவல் ஆபிசில் எல்லா மூலை முடுக்குகளையும் தேடி முடித்தனர். அவர்கள் முகங்களில் கேள்விக்குறிதான் மிச்சம்.

“ஏன் மூலை முடுக்கை தேடறீங்க? சன்னல் பக்கம் போய் நின்று பார்த்தாலே போதுமே” எனறு சன்னல் பக்கம் கையைக் காட்டினார் தலைவர்.

சன்னல் பக்கம் போய் பார்த்த நால்வரும் மூக்கில் விரல் வைத்தனர். “ஆமாம், தலைவரே…இது வெளியேயிருந்து வரும் வாடைதான்…சந்தேகமேயில்லை” என்று ஒப்புக் கொண்டனர். சரியான சீக்ரட் செர்வீஸ்!

“இப்பவாவது தெரிந்ததே. நீங்கள் உடனே வெளியே போய் இது என்ன வாடை என்று பாருங்கள். தெரிந்ததும் வந்து ரிப்போர்ட் பண்ணுங்க…” தன் வேலையை அவர் மீண்டும் கவனிக்கப்போக, வந்த நால்வரும் வெளியே ஓடினார்கள்.

வெள்ளை மாளிகையின் பின்புற வாசல் வழியாய் பென்ஸில்வேனியா தெருவுக்கு வந்த சீக்ரட் செர்வீஸ் ஆட்கள் சுற்றும் முற்றும் பார்த்தனர். வெள்ளை மாளிகையை போட்டோ எடுப்பவரும், உள்ளே பார்த்தால் ஜனாதிபதி தென்படுவாரா என்று கதவுக் கம்பிகளைப் பிடித்து நைப்பாசையுடன் நிற்பவரும், அணு ஆயுதங்களை எதிர்த்து வருடக்கணக்காக மறியல் நடத்தும் சிலரும் – இப்படி வழக்கமான சந்தடிதான். அங்கே சின்னச்சின்ன கூண்டு வண்டிகளில் ‘சுவ்நியர்’ விற்பவரும், ‘ஹாட் டாக்’ ‘சோடா’ விற்பவரும் தங்கள் வேலையை கவனித்துக்கொண்டிருந்தனர். அந்தப் பக்கம் போன சீக்ரட் செர்வீஸ் ஆட்களுக்கு வெங்காய வாடை பலமாகவே அடித்தது. வாடை வந்த திசையில் வேகமாக நடக்க ஆரம்பித்தனர். சற்று தூரத்தில் ஒரே கூட்டம்…

பதினைந்தாம் தெருவில் இருந்த கூண்டு வண்டிகளுள் ஒன்றாக மருதப்பனின் வண்டியும் நின்றிருந்தது. மருதப்பன் மும்முரமாக மாவை உருட்டி, எண்ணையில் போட்டு மசால் வடை சுட்டுக் கொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் பத்து வடை…சூடான வடைகள் வெந்து, வெளியே வந்து, எண்ணை வடிந்து தட்டில் கொட்டப் பட்டதும், பத்து பத்தாக வடைகள் பறந்தது, பற்றாக்குறை ஏற்பட்டது. நல்ல வியாபாரம்! மருதப்பன் முகத்தில் பெருமிதம்!! வாஷிங்டனில் அந்த பக்கம் வந்த எவரும் இதுவரை சுவைத்திராத மசால்வடை மருதப்பனின் மசால்வடை!

கூட்டம் பெருகியது. ஒரு டாலருக்கு ஒரு வடை. கூட உதவிக்கு ஆளலில்லாத மருதப்பனுக்கு ‘இந்த கூட்டத்தை எப்படி சமாளிக்கறது’ என்ற தருணத்தில் ஜனாதிபதியின் அந்த நாலு ஆட்கள் வந்து சேர்ந்தனர். அதில் ஒருவன் கேட்டான்…

“இங்கே என்ன இவ்வளவு கூட்டம்?”

“மசால்வடை”

“அப்படின்னா என்ன?”

“இது தமிழ்நாட்டின் முக்கிய சிற்றுண்டி…நான் வாஷிங்டனுக்கு அறிமுகப் படுத்தறேன்”

“நீ யார்?”

“மசால்வடை மருதப்பன்” – தானாகவே டைட்டில் போட்டுக்கொண்டான்.

“இதுலே வெங்காயம் உண்டா?”

“வெங்காயம் இல்லாத மசால்வடை ஜனாதிபதி இல்லாத அமெரிக்கா மாதிரிங்க!”

“என்ன சொன்னே? ஜனாதிபதிக்கும் மசால்வடைக்கும் என்ன சம்பந்தம்?”

“நான் அவரைப் பாத்தது கூட இல்லீங்களே”

குரலில் சற்று கடுமை.

“ஆனா, அவருக்கு உன் மசால்வடை பத்தி தெரிஞ்சிடுச்சு”

“நான் இன்னிக்கி தானுங்களே முதல் முதலா இங்கே மசால்வடை சுடறேன்”

“இதுவரைக்கும் எங்கே சுட்டே?”

“நியூ யார்க்கில சுட்டேன்…டைம் சுயர்ல”

“என்னது? டைம் சுயரா?”

“எனக்கு அந்த வார்த்தை சரியா சொல்ல வராதுங்களே அதாங்க டீவீயில காட்டுவாங்களே… அங்கேதான்!”

“இனிமே எங்கே சுடுவே?”

“இங்கே நல்லா வியாபாரம் ஆவுதுங்களே…இங்கேயேதான் சுடுவேன்”

“நீ இனிமே இங்கே சுடக்கூடாது!”

“ஏனுங்க?”

“ஜனாதிபதிக்கு ஓவல் ஆபிசுல வேலை செய்ய முடியலை”

“நான் மசால்வடை சுட்டா அவர் வேலை ஏனுங்க தடைபடுது? எனக்கு விளங்கலே”

“வெங்காய வாடைன்னா அவருக்கு ரொம்பப் பிடிக்கும்…உன் மசால்வடையின் வாடை ஓவல் ஆபிஸ் வரைக்கும் ஓவரா அடிக்குது”

“என் மசால்வடை அவ்வளவு மணத்தோட இருந்தாத் தானுங்களே வியாபாரம் நாலுபக்கமும் பரவும்”

“நீ பேசாதே! நேரா எங்ககூட வா!”

“ஐயோ! என் வியாபாரம்? என் வண்டி?” மருதப்பனுக்கு தலை சுற்றியது.

“அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. ஜனாதிபதியை பாத்து நீயே நேர்ல பேசிக்க…ம்..புறப்படு”

சீக்ரட் செர்வீஸ் ஆட்களுடன் மருதப்பன் வண்டியைத் தள்ளிக்கொண்டே வெள்ளை மாளிகையை நோக்கிப் போனான். அவர்கள் பின்னாலேயே ஒரு கூட்டம் நகர்ந்தது. அதற்குள் மீடியா ஆட்களும், டீவீ கேமராக்களும் சூழந்து கொண்டன. ‘நேஷனல் நெட்ஒர்க்’குகளில் மசால்வடை மருதப்பன் பற்றி செய்தி காட்டுத்தீ போல பரவியது. நிமிடத்துக்கு நிமிடம் கூட்டம் பெருகியது.

வெள்ளை மாளிகைக்குள் வண்டியைத் தள்ளிக்கொண்டே மருதப்பன் போய் நின்றான்.

“வண்டி இங்கேயே இருக்கட்டும். நீ சுட்ட நாலு மசால்வடையை எடுத்துகிட்டு எங்க கூட வா…”

மருதப்பன் இப்போது உண்மையிலேயே பயந்துவிட்டான்…பதில் பேசாமல், நாலு மசால்வடையை எடுத்துக்கொண்டு அந்த ஆட்களுடன் போனான். ‘இவ்ளோதான்…கஷ்டப்பட்டு வாங்கின ‘இம்மிக்ரேசன் விசா’ இத்தோடு போயிடும்’ என்று வருத்தப் பட்டுக்கொண்டே போன மருதப்பனுக்கு தன் கண்களையே நம்ப முடியாத காட்சி!

அமெரிக்க ஜனாதிபதியேதான்!

“ஐயா…மன்னிக்கணும்” காலில் விழாத குறை. ‘நம்ம ஊரா இருந்தா சட்டுனு காலில் விழுந்தே யிருக்கணும். இது அமெரிக்கா. பொழைச்சேன்டா சாமி…’ மருதப்பன் மனசோடு சொல்லிக் கொண்டான். அமெரிக்காவில் அரசியல் தலைவர்கள் காலில் யாரும் விழுந்து மருதப்பன் அதுவரை பார்த்ததில்லை.

மசால்வடையை விண்டு ஒரு துண்டை வாயில் போட்டுக் கொண்ட ஜனாதிபதிக்கு அதன் ருசியை நம்பவே முடியவில்லை!

“ஆகா! என்ன அற்புதமான ருசி. இதில் இருக்கும் வெங்காயத்தின் வாடைதான் சன்னல் வழியா வந்து என் மூக்கை துளைத்ததா!!”

“ஐயாவுக்கு மசால்வடை பிடிக்குதுங்களா?”

“பிடிக்குதா? அருமை… அருமை…காலையிலேருந்து என்னால வேலையை கவனிக்க முடியாம சன்னல் பக்கமே நின்னுகிட்டு இருந்தேனே!”

சீக்ரட் செர்வீஸ் ஆட்களின் முகத்தில் ஈயாடவில்லை. மருதப்பனின் மசால்வடைக்கு வெள்ளை மாளிகையில் இவ்வளவு வரவேற்பா? அவனை ஜெயிலில் தள்ள தயாராக இருந்த அவர்களுக்கு நம்பவே முடியவில்லை.

“அந்த பாக்கி மூணு வடையையும் இப்படி கொடு” ஜனாதிபதி வாங்கிக் கொண்டார். சுவாரசியமாக இரண்டாவது வடையையும் முடித்துவிட்டு, மற்ற இரண்டையும் தன் மனைவிக்கு தரப்போவதாக எடுத்துக் கொண்டார்.

“ஐயா, நான் போகலாமுங்களா?” மருதப்பன் தயங்கியபடிதான் கேட்டான்.

“நீ எங்கேயும் போக முடியாது”

“என்னை ஜெயல்லே தள்ளப் போறீங்களா?”

“இல்லை. இனிமே வெள்ளை மாளிகயிைலேயே சமையல்காரர்களுடன் நீயும் ஒருத்தன் ஆயிடணும்”

“வேண்டாங்க…” ஜனாதிபதியின் கோரிக்கையை எதிர்த்து எப்படியோ சொல்லிமுடித்தான்.

“ஏன்?”

“வாஷங்டன் வர்ர மக்க எல்லாருமே என் மசால்வடையை ருசிக்கணும்னு நான் ஆசைப் படறேனுங்க”

“நீ சொல்வது சரி. நல்ல சுதந்திரமான கருத்து. அமெரிக்காவுல மசால்வடை சாப்பிட எல்லாருக்குமே சுதந்திரம் இருக்கணும். அப்படின்னா, எனக்கு நீ ஒரு காரியம் செய்யணும்…”

“என்னங்க?”

“தினம் காலையிலே பத்துமணிக்கு எனக்கு சூடா நாலு மசால்வடையை அனுப்பிடு…” என்று சொல்லிவிட்டு சீக்ரட் செர்வீஸ் ஆட்களைப் பார்த்தார். அவர்கள் தலையை பலமாக ஆட்டினார்கள்.

மருதப்பன் மதப்புடன் வெள்ளை மாளிகையை விட்டு வெளியே வந்தான். அவனையும் அவன் வண்டியையும் டீவீ ஆட்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களுக்கு மசால்வடையின் மகத்தான வாடையைப் பற்றி விளக்கமாக சொன்னபோதுதான் அவனுக்கு முன்பல் மூன்று இல்லை என்பது டீவீயில் பெரிதாக தெரிந்தது. ஆனால் அவனுக்கு முன்பல் இல்லாத விஷயம் பெரிதாக படவேயில்லை!

வாழ்க மசால்வடை மருதப்பன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *