மாற்றுப் பெண் மாத்திரம் கெட்டவளா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 18, 2024
பார்வையிட்டோர்: 1,496 
 
 

மாட்டுப் பெண், நாட்டுப்பெண், மாற்றுப் பெண் – எது சரி? மாடு மாதிரி சம்சாரத்தில் உழன்றதால் (அந்தக்காலத்தில்) மாட்டுப் பெண் சரி. இந்தக் காலத்திலும், சிலர், தனக்கு ஸ்பெஷல் கொம்பு முளைத்திருப்பதாக நினைப்பதாலும் சரி. நாட்டுப்புறப் பெண்ணைப் போல வித்தியாசமாக இருந்ததால், நாட்டுப் பெண்ணும் சரி. ஆனால், இவை இரண்டும் கொஞ்சம் ‘அவுட் ஆஃப் த வே’ என்பதால் மாற்றுப் பெண்ணுக்குத் தான் என் வோட். ஏனென்றால், என் பெண் வேறொரு வீட்டுக்கு (இந்தக் காலம் போல் இல்லாமல்) மறு மகளாகப் (மரு, மறு- எது சரி?) போனால் அவளுக்கு மாற்றாக என் பெண்ணைப் போலவே, எனக்குப் பாந்தகமாக நடக்கும் பெண் என் மகனுக்கு மனைவியாக அமைவதால், மாற்றுப் பெண் தான் சரி. ஓகே. கதைக்கு வருவோம்.

கலா கல்கத்தாவிலிருந்து பிரசவத்துக்காக மதுரை வந்திருந்தாள். அவளுக்கு பிறந்தகம், புக்ககம் இரண்டும் அங்கு தான் இருந்தன. பொங்கலுக்கு மாமியார் வீட்டுக்கு போய் ஒரு வாரம் இருந்து விட்டு பிறந்தகம் திரும்பினாள். ஒரு நாள் மதியம் அவள் மாமியார் அவள் வீட்டுக்கு வந்ததும் ஏதோ அக்கறையாகத் தன்னைத் தான் பார்க்க வந்திருப்பதாகக் கலா சந்தோஷப் பட்டாள். ஆனால் கதையே வேறு! வந்தவள், “கலா ஒம் பெட்டியக் கொண்டா, நான் பாக்கணும்” என்றதும் இவளுக்கு ஒரே குழப்பம். ஆகவே, ”எதுக்கும்மா” என்று கேட்க “சொன்னதைச் செய், கேள்வியெல்லாம் அப்புறம் வெச்சுக்கலாம்” என்றாள் மாமியார்.

பாவம்! கலா என்ன செய்வாள்? பெட்டியைக் கொண்டு வந்தாள். மாமியார் அதில் இருக்கும் எல்லாப் புடைவைகளையும் உதறிப் பார்த்து ஒன்றுமில்லை எனத் தெரிந்து போட்டது போட்ட வாக்கில் வைத்துக் கிளம்புகையில், கலாவின் தங்கை, ”என்ன மாமி, விஷயம் சொல்லாமப் போறேளே, என்னத்த எங்க அக்கா பெட்டில தேடினேள்?” எனக் கேட்டாள். அதற்கு கலாவின் மாமியார், “ஒண்ணுமில்லடி, என்னோட வைர மூக்குத்தியைக் காணோம். அதான் தவறிப் போய் ஒன் அக்கா பெட்டில வந்துடுத்தோன்னு பார்த்தேன்” என்றாள். அதற்கு கலாவின் தங்கை, “மாமி, எங்க அக்கா வேணா உங்காத்து நாட்டுப் பெண்கிறதால (’இங்கு மாற்றுப் பெண்ணாக மாமியார் நினைக்காததால்’) எல்லாத்தையும் பொறுத்துப்பா. ஆனா எனக்கு ரொம்ப கோவம் வரது. நீங்க எங்க அக்கா பெட்டிய சோதன செய்யறது அவ மேல திருட்டுப் பட்டம் கட்டற மாதிரி இருக்கு. இது துளிக்கூட எனக்குப் பிடிக்கல. நாங்க, பணம் காசு இல்லாமல் இருந்தாலும், கௌரவமா இருக்கோம். எங்களுக்கு அம்மா இல்ல. அப்பாவும் வெளியூர்ல வேல பாக்கறா. அந்த தைரியத்தில நீங்க இப்படி எல்லாம் பண்றேள். மொதல்ல உங்காத்துல நன்னாத் தேடுங்கோ” என்றாள். கலாவுக்குத் தன் மாமியார் எதாவது பிள்ளைக்குச் சொல்லிக் கொடுத்து ரகளை பண்ணப் போறாளே என்று உள்ளூர பயம்.

கலாவின் தங்கை மாலா, தன் அப்பாவுக்கு அவள் மாமியார் செய்ததையெல்லம் விவரமாக எழுதினாள். கலாவின் அப்பா இது பற்றி தன் மாப்பிள்ளை, மணியைச் சந்தித்துப் பேச, அவர் “இந்த பொம்பளைகளே அப்படித் தான் மாமா. முன் யோசனையில்லாம ஏதாவது பண்ணுவா, அப்புறமா வருத்தப்படுவா. இது மாதிரித் தான், எங்க அத்தை வைர மூக்குத்தியை பர்ஸுக்குள் வெச்சுக் கடைக்குப் புடைவை வாங்கப் போயிருக்கா. கடைக்காரரிடம் பணம் குடுக்கிற போது அது கீழ விழுந்தது தெரியல. சாயங்காலம் போட்டுக்கலாம் என்று நினைத்து தேடினா வெச்ச இடம் நெனவு இல்ல. அடிக்கடி வந்து உதவும் பக்கத்து வீட்டு ஏழைப் பெண்ணைச் சந்தேகித்தாள். மண்டையப் பிச்சு யோசிச்சதுல பர்ஸ்ல வெச்சது கடைசில நெனவு வந்தது. பர்ஸ்ல பாத்தாக் காணோம். பக்குன்னு இருந்தது. ’ஐயோ, கடைல விழுந்துடுத்தோ’ன்னு பார்க்கக் கடைக்கு ஓடினா. அப்பத் தான் கடையை பெருக்கிண்டுருந்தான் ஒருத்தன். இவ விஷயத்தச் சொல்லிக் கடைக் குப்பையை நோண்டிப் பாக்கச் சொன்னா. நல்ல வேளை கெடச்சுடுத்து.”

”ஒரு தடவை பட்டா புத்தி வர வேண்டாமா? மறுபடியும் ஒரு நாள், அதே மூக்குத்திய கழட்டி சமயலறைல டம்ளர்ல போட்டு வெச்சிருக்கா. இத யார்கிட்டயும் சொல்லவுமில்ல. மூக்குத்தியக் காணோம்னு தேடோ தேடுன்னு தேடினா. கெடக்கல. கடைசியில் வேலக்காரி மேல பழி. அன்னிக்கு நான் சாப்பிடறச்சே என் தங்கை கொடுத்த தண்ணீர் டம்ளர்ல ஏதோ பளபளன்னு மின்னறதே. கண்ணாடித் தூளோன்னு கையில் எடுத்துப் பார்த்தா வைர மூக்குத்தி. அப்பறமா நான் கத்தினேன், ’நகையோ, பணமோ பத்திரமா ஒரு பெட்டியில போட்டு பீரோவில வெக்காம பிறத்தியார் மேல பழி போடறது என்ன கெட்ட வழக்கம்? இனி மேலாவது ஜாக்கிரதையா இருங்கோ’ன்னு அத்தை கிட்ட சொன்னேன். நீங்க கவலப்படாதீங்கோ, நான் எங்கம்மா கிட்டே அவ பண்ணது தப்புன்னு புரிய வெக்கறேன்,” என்றான்.

மணியின் தம்பி நட்டு, “அம்மா எனக்கு வாட்ச் வாங்கித் தரச் சொல்லி அப்பா கிட்டே சொல்லும்மா, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் போட்டுண்டுருக்கா, எனக்கும் ஆசையா இருக்கு” என்றான். அதற்கு அவள், ”அதெல்லாம் முடியாது. இப்ப ஒனக்கு எதுக்கு வாட்ச்? நீ வேலக்குப் போய் சம்பாதிச்சு வாங்கிக்கோ, ஒருத்தரப் பார்த்துக் காப்பி

அடிக்கறது கெட்ட பழக்கம், நீ அவாளையெல்லாம் விட நன்னாப் படிச்சுக் காமி. அதுல தாண்டா பெருமை,”ன்னு சொல்லவும், இனி பேசிப் பிரயோஜனமில்லைன்னு விட்டு விட்டான். ஆனால் அவன் சும்மா இருந்தானா?

கலாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. புண்யாவாசனம், தொட்டிலுக்கு மாமியார் குடும்ப சகிதமாக வந்திருந்தாள். மாப்பிள்ளை மணியும் வந்திருந்தான். எல்லோரும் சாப்பிட்டு ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தார்கள். கலாவை அவள் நாத்தனார் சுதா தனியாக அழைத்து, “மன்னி, உங்களுக்குத் தெரியுமா? அம்மா மூக்குத்தி கெடச்சுடுத்து, எல்லாம் இந்த நட்டு கடங்காரன் பண்ண வேல. அம்மா வாட்ச் வாங்கித் தர மாட்டான்னு தெரிஞ்சதும் மூக்குத்தியத் திருடிண்டு கடையில விற்கப் போயிருக்கான். கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை, கடைக்காரன் குடுத்த 500 ரூபாயை வாங்கிண்டு வாட்ச் வாங்கி ஸ்கூலுக்கு திருட்டுத்தனமா போட்டுண்டு போயிருக்கான். என்ன இருந்தாலும் சின்னப் பையன் தானே? அவனுக்கு பார தூரம்லாம் தெரியுமா? நட்டுவோட ஃப்ரெண்டின் அம்மா மார்க்கெட்டில் அம்மாவைப் பார்த்து, “மாமி ஒங்க பையனோட வாட்ச் ரொம்ப நன்னாயிருக்கு. அலார்ம் கூட கோழி கூவற மாதிரியே இருக்காம். என் பிள்ளை சொன்னான். அவனுக்கும் அதே மாதிரி வேணுமாம். எங்கே வாங்கினேள்” னு கேட்கவும், அம்மா துணுக்குற்றாலும், பிள்ளையை விட்டுக் கொடுக்காம, ’எங்காத்து மாமாவத்தான் கேக்கணும். அப்பறமா கேட்டுச் சொல்றேன்’னு சொல்லிட்டு வந்துட்டா.”

”அப்பறமா, நட்டுவை அம்மாவும் அப்பாவும் அடிச்சு ஒதச்சுக் கேட்டதுல அவன் உண்மைய ஒத்துண்டு எந்த கடைல வித்தான்கிறதையும் சொல்லிட்டான். உடனே அந்தக் கடைக்கு இவா ரெண்டு பேரும் போய், ’என்னய்யா சின்னப்பையன்னு அவனை ஏமாத்தி 500 ரூபாய்க்கு வைர மூக்குத்திய வாங்கிண்டயா ? நானே போலீஸ்ல தான் வேலையா இருக்கேன். மரியாதையா அந்த மூக்குத்தியக் குடு. இல்லேன்னா அதுக்கான அசல் வெலயக் குடு. ரெண்டும் இல்லேன்னா, நட போலீஸ் ஸ்டேஷனுக்குன்னு’ சொன்னதும் அவன், ’ஐயா, ஒங்க மூக்குத்தி அந்த கால ப்ளூ ஜாகர் வைரம். அது ரொம்ப ஒசத்தி. அதனால விக்கல. வெச்சிருக்கேன். அதக் குடுத்துடறேன். நான் குடுத்த 500 ரூபாயை தந்தாப் போதும்,’ னு சொல்லிக் கொடுத்துட்டான்..”

”அம்மாவுக்குத் தான் தப்பு பண்ணிட்டோம்னு பயம். அதனால அண்ணா கிட்டயோ உங்க கிட்டயோ நட்டு தான் திருடினான்கற விஷயத்த சொல்லல, அப்பாவையும் என்னையும் கூட தடுத்துட்டா. திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி இருந்துட்டா. எனக்கு மனசு கேக்கல. பெண் பாவம் பொல்லாதுன்னு பட்டது. சொல்லிட்டேன். நீங்களும், நான் சொல்லித் தெரிஞ்ச மாதிரி காமிச்சுக்காதேங்கோ,” என்றாள்.

’இது ஒரு பாடம். பிறத்தியாரும் பொல்லாதவா இல்லன்னு புரிஞ்சுக்க, அதுவும் மாற்றுப் பெண்ணும் தன்னைப் போல ஒரு மனுஷிதான்னு மாமியாருக்குப் புரிந்திருக்கும். தன்னிடம் இனிமேல் ஒழுங்கா நடப்பாள். இனி மேலாவது அவள் யார் மீதும் பழி போடுவதற்கு முன் யோசிப்பாள்’ என்று கலா நினைத்துக் கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *