மாற்றம்..!






வந்து நின்ற அந்த பஸ்ஸில் அடித்துப் பிடித்து ஏறி, ஜன்னலோரமாக அமர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டான் ரவி. அதே வேகத்தில், அரக்கப்பரக்க இடம்பிடித்து அருகில் அமர்ந்தவனைப் பார்த்தான். ஆறுதலாக இருந்தது. அவன் ஒல்லியாக இருந்தான்.
பஸ் பயணம் என்றாலே என்னவெல்லாம் பார்க்க வேண்டி இருக்கு? ஜன்னலோரம், சீட்டின் மறுஓரம் தூண் கம்பி இருக்கக்கூடாது. இருந்தால் நிம்மதியாக உட்கார முடியாது. பக்கத்திலிருப்பவன் குண்டாக இருக்கக் கூடாது. இப்படி எதை எதையோ மனம் தேடுகிறது.

பஸ் புறப்பட்டு, பத்து நிமிடம் கூட ஆகியிருக்காது. பக்கத்திலிருந்தவன் தூங்கித் தூங்கி இவன்மேல் விழுந்தான். பாவமாக இருந்தது. திடீரென்று, ஒருமுறை முன்சீட்டுக் கம்பியில் ‘ணங்க்’ என்று மோதி, ஸ்ஸ்ஸ் ஆ என முணங்கினான். மற்றவர்கள் சிரித்தார்கள். அவன் வெட்கத்தோடு ரவியைப் பார்த்தான். அவன் கண்கள் கோவைப் பழம்போலச் சிவந்திருந்தன.
ரவி அவனிடம், ‘நீங்க வேணா ஜன்னலோரம் வந்துடுங்க, தூக்க கலக்கமா வேற இருக்கீங்க’, இடம் மாறி, அவனுக்கு ஜன்னலோரம் இடம் கொடுத்தான். அவன் நன்றியொடு சொன்னான்..
‘சார், ஃபுல்நைட் ஷிப்ட் முடிஞ்சு வரேன்… பழக்கமில்லை…அதான் தூங்கி விழுந்துட்டேன்..சாரி’ என்றான்.
‘பரவாயில்லை’ என்று சொன்னவன், மனசுக்குள் நினைத்துக் கொண்டான்…’நானும் ஃபுல் நைட் ஷிப்ட் பார்த்துட்டுத்தான் வரேன். கம்பெனியில் ஈவு இரக்கமில்லாமல் வேலை வாங்க வேண்டிய சூப்ரவைசர் வேலை. நானும் மனுஷந்தான்னு காட்ட, இப்படி ஏதாவது செய்தால்தான் உண்டு’ என்று நினைத்தபடி அவனைப் பார்த்தான், அவன் அதற்குள் தூங்கிப் போயிருந்தான்.
– 12.07.2006