மாமரம் – ஒரு பக்க கதை





மாமர நிழலில் அமர்ந்திருந்த பெருமாளின் அருகில் வந்தனர் அவரின் மகன்கள் இருவரும்.
“அப்பா! உங்க நிலத்தை விற்று என்னையும், தம்பியையும் படிக்க வச்சீங்க… நாங்க இப்போ நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கிறோம்… எங்களுக்கு குறைன்னு பார்த்தா வாடகை வீடுதான். இந்த நிலத்தை ரெண்டா பிரிச்சுக் கொடுத்தா நாங்க ஆளுக்கொரு வீடு கட்டிக்குவோம்…’ என்று தயங்கியபடியே பேசிய மகன்களிடம்,
“நீங்க கேக்கறது நியாயம்தான். ஆனா எனக்கு மூணு பிள்ளைங்க இருக்கீங்களே!’ என்றார் பெருமாள்.
“அம்மா இறந்தபிறகு, அப்பாவுக்கு சின்னவீடு தொடர்பு ஏற்பட்டு, அவளுக்கு ஒரு பையன் இருப்பானோ!’ என்று யோசித்தார்கள் மகன்கள் இருவரும்.
“என்னப்பா புரியலையா… பூவும், பிஞ்சுமா பூத்துக் குலுங்குதே இந்த மாமரம், இதையும் நான் ஒரு பிள்ளையாத்தான் வளத்துட்டு வர்றேன்…அதை வெட்டி வீசிடாம, அதுக்கும் ஒரு பாகத்தை ஒதுக்கிட்டு, மத்த இடத்துல நீங்க தாராளமா வீடு கட்டிக்கங்க…’ என்ற அப்பாவை பெருமையோடு பார்த்தார்கள் மகன்கள் இருவரும்.
மாமர மகனும் சந்தோஷமாக தலையசைத்தது.
– ரேவதி நீலமேகன் (மே 2011)