மாமன் மகள்




வங்கிக்குள் வந்த அந்தப் பெண்மணியைப் பார்த்ததும் அவள் சாந்திதான் என்று எனக்குள் பட்சி சொல்லியது.
“எக்ஸ்க்யூஸ் மீ எனக்கொரு மணி டிரான்ஸ்ஃபர் செய்யணும். Can you help me please?” என்று என்னிடம் கேட்டாள்.
“Sure, Shanthi” என்றேன். அவள் முகத்தில் .ஒரு ஆச்சர்யம்.
“மீரு … ” என்று தெலுங்கில் வியந்தாள்.
“நான் வெங்கடேஷ். திருவல்லிக்கேணி”
அவள் முகம் பிரகாசமானது. ” வெங்கட்! Oh my God ! எப்படி இருக்க? வீடு எங்க? கல்யாணம் ஆயிடுச்சா?” என்று கேள்வி மேல் கேள்விகளை அடுக்கினாள்.
“உள்ளே வா பேசலாம்”
உள்ளே வந்தவளுக்கு chair எடுத்துப் போட்டேன். டீ or காஃபி என்றதற்கு நாசூக்காக மறுத்தாள். ” எவ்ளோ நாளாச்சு ” என்றதும் என் நினைவு பின்னோக்கிச் சென்றது.
நான் காலேஜ் படித்துக்கொண்டிருந்த காலம். சாந்தி எங்கள் தெருவில்தான் குடியிருந்தாள். ஆந்திரர்களுக்கே உரிய வெளிர் மாநிறம். அழகிய பெரிய கண்கள். நெகு நெகுவென்ற மேனி. இத்தனை சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவளை எங்கள் இளைஞர் பட்டாளம் கவனிக்காமல் விடுமா?
நாராயணன் என்னும் நானா அவள் ஆந்திர அழகில் மயங்கினான். அவள் பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்தாள். நாங்கள் எல்லாம் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்.

நானா நாலு தெரு தள்ளி சுங்குவார் தெருவில் குடியிருந்தான். அங்கிருந்து மெனக்கெட்டு இவளைப் பார்ப்பதற்காக எங்கள் தெருவுக்கு தினமும் வருவான். என் வீட்டு வாசல் தான் இந்த மன்மதர்கள் கூடும் இடம்.
இதற்காக என் அம்மாவிடம் நான் நிறைய மண்டகப்படி வாங்கியிருக்கிறேன்.
இந்த நானா இருக்கிறானே அவன் ஒரு அபூர்வப் பிறவி. தன் மனதில் உள்ளதை உடனடியாக பிரதிபலிக்கும் முகம் கொண்டவன். கோவமாகட்டும் சந்தோஷமாகட்டும் அவன் முகம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அப்படி இருக்க காதல் மட்டும் பின்னால் நிற்குமா என்ன?
ஒரு திவ்ய நன்னாளில் நானாவின் காதல் எங்களுக்குத் தெரிந்து போனது. எங்கள் மன்மதக் குழுவில் ஒரு எழுதப்படாத ரூல் ஒன்று இருந்தது. அதாகப்பட்டது எவன் ஒருவன் ஒருத்தியை விரும்ப ஆரம்பித்து விட்டானோ அவள் இன்ஸ்டண்டாக மற்றவர்களுக்குச் சகோதரி ஆகிவிடுவாள். அந்த வகையில் சாந்தி எங்கள் எல்லாருக்கும் சகோதரி ஆனாள். வெல், எல்லாருக்கும் என்று சொல்ல முடியாது. ஒருத்தனைத் தவிர.
அவன் சுந்தர் என்னும் சுந்தரேஸ்வரன். அவன் தஞ்சாவூர் பக்கத்துத் தெலுகு பிராமண வகுப்பைச் சார்ந்தவன். அவனுக்கும் சாந்தி பிடித்துப் போனாள். தன்னுடைய தாய்மொழி ஒன்றே அவனுக்குச் சற்று கூடுதல் க்வாலிஃபிகேஷன் என்று திடமாக நம்பினான். அதை வெளிப்படையாக சொல்லவும் செய்தான்.
எங்கள் எல்லார் அட்வைஸும் வேஸ்டாகப் போனது. நானாவுடன் அவனுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது.
இப்படி இருக்க ஒரு நாள் மாலை வேளையில் சாந்தி தன் வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். அவளுக்காகக் காத்திருந்த நானா சுந்தர் இருவர் முகத்திலும் பிரகாசம். நாங்கள் எல்லாரும் பார்த்திருக்க ஒரு அதிசயம் நடந்தது. சாந்தி அவர்கள் இருவரையும் பார்த்து மைய்யமாக ஒரு புன்சிரிப்பு சிந்தி சட்டென்று தன் வீட்டுக்குள் சென்று விட்டாள்.
அந்த அதிர்ச்சியில் இருந்து நாங்கள் மீள்வதற்குள் இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது. திடீரென்று அதுவரையில் நின்று கொண்டிருந்த நானாவும் சுந்தரும் ஒருத்தர் சட்டையை ஒருத்தர் பிடித்துக்கொண்டு சண்டை போட ஆரம்பித்துவிட்டார்கள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
ஒருவாறு அவர்களை விலக்கி விசாரித்ததில் சாந்தி யாரைப் பார்த்துச் சிரித்தாள் என்பதற்காக சண்டையாம். எங்களுக்குச் சிரிப்புத்தான் வந்தது.
இது இப்படி இருக்க, நாளாக நாளாக அவர்கள் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. ஒரு நாள் பீச்சில் வைத்து நானா சுந்தரை அடித்துவிட்டான். அது பெரிய விஷயமாகி அவரவர் வீடு வரை பரவி பெரியவர்கள் தலையிட்டு ரசாபாசமாகிப் போனது. பின்னர் சுந்தர் வீட்டார் வேறு இடம் மாற்றிக்கொண்டு போனார்கள். அவன் அப்பாவுக்கு டிரான்ஸ்ஃபர் என்று கேள்விப் பட்டோம்.
இதனால் நானா வழி காலியானது போலத்தான் தெரிந்தது. இப்படியே சென்ற காலம் ஒரு நாள் எங்கள் அனைவரியும் பிரித்தது. வேலை நிமித்தம். நான் தில்லி லக்னோ என்று போய் லாஜோக்களிலும், சுஷ்மிதாக்களிலும், ஸ்ரீதேவிகளிலும், சுகன்யாக்களிலும் காதல் தேடி இறுதியில் திருமணம் செய்துகொண்டு மனைவியிடம் காதல் கொண்டேன்.
அதற்கப்புறம் இப்போதுதான் சாந்தி!
“என்ன வெங்கட் மலச்சுப் போயிட்ட? நான் அதே சாந்திதான். உன்னைப் பத்தி உங்க க்ரூப் பத்தி நானும் ஹஸ்பெண்டும் அடிக்கடி பேசுவோம் “
“வாவ்! நானா எப்படியிருக்கான்? “
“நானாவா? ” சாந்தி முகம் சுருக்கினாள் . ” நீ தான் சொல்லணும். எனக்கு எப்படித் தெரியும்? “
“அப்ப நீ நானாவக் கல்யாணம் செஞ்சுக்கலியா “
அவள் ஒரு ஆந்திர அதிர்ச்சியுடன் ” இல்லடா I married Sundar ” என்றாள்
எனக்குப் பூமி சுற்றியது.
அசந்தர்பமாக ஏன் என்று கேட்டேன்.
“நானா என்கிட்ட வாயத் தொறந்து எதுவுமே சொல்லல. சுந்தர் ஒரு நாள் என்னத் தேடி வந்து propose செஞ்சான் அதான் ” என்றாள் .
எனக்குத் திடீரென்று என்னுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டு பின்னர் ஒரு சுபநாளில் யாரோ ஒருத்தனைக் கல்யாணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி, ஒரு விசேஷத்துக்காக சென்னை வந்தும் என்னைப் பார்த்தும் பார்க்காதது போல அவாய்ட் செய்த என் மாமன் மகள் நினைவுக்கு வந்தாள்.