மாமன் உறவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 18, 2024
பார்வையிட்டோர்: 607 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சில விஷயங்களை என்னால் கண்கொண்டு பார்க்க முடிவ தில்லை. ஒடுக்கு விழுந்த அலுமினியக் கிண்ணங்களைத் தூக்கிக் கொண்டு ராப்பிச்சைக்கு வரும் குழந்தைகளைப் பார்க்க நேரும்போது சாப்பாடு தொண்டைக்குள் இறங்க மறுக்கிறது. இளம் பெண் ஒருத்தி அல அவள் கையில் விறகு நெருப்பைக் கொண்டு சூடு வைத்த வண்டிக்காரனைப் பார்க்கச் சகிக்காமல் ஓட வேண்டியிருக்கிறது. என் அறைக்குள்ளேயே ஒருநாள் இரவு பாம்பைப் பார்க்க நேர்ந்தது. கை அளவு நீளம். கறுப்பும் மஞ்சளும் கலந்த நிறம். அடுத்த சில நாட்கள் எதைச் சாப்பிட்டாலும் வாந்தி எடுத்தேன். 

என் உறவுக்காரர்களில் சிலர் என்னால் சகிக்க முடியாதவர் களாகப் போய்விட்டார்கள். அவர்களில் முதலில் நிற்பவன் என் மாமன். தாய் மாமன். நேற்று காலை அவனும் அவன் மகனுமாக எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அப்பா வீட்டில் இல்லை. அம்மா மட்டும் இருந்தாள். நான் என் அறையில் படித்துக் கொண்டிருந்தேன். 

மாமனின் குணத்தைப் போலவே அவன் குரலும் ஒரு விசேஷம். அது ஆணுடையதாகவும் இருக்காது. பெண்ணுடையதா கவும் இருக்காது. நீருக்குள் சிக்கிக் கொண்டவன் திகிலில் எழுப்பும் ‘அஃப்’ ‘தஃப்’ என்கிற ஒலிக் குறிப்பாகவே இருக்கும். கேட்பவர்களே சிரமப்பட்டுப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கும். படித்துக் கொண்டி ருந்த என்னை, அந்நியக் குரல் உசுப்ப, ஜன்னலண்டை வந்து நின்று கவனித்தேன். எனக்கு முதுகைக் காட்டிக் கொண்டு மாமனும் அவன் மகனும் உட்கார்ந்திருந்தார்கள். 

மாமன் பக்கவாட்டில் திரும்பி அம்மாவோடு பேசிக் கொண்டி ருந்தான். கோல்ட் பிரேம் போட்ட கண்ணாடி போட்டிருந்தான். நான் அறையில் இருப்பது தெரிந்தால் அவன் உள்ளே வருவான். கதவைத் தட்டாமலே வருவான். வந்து படுக்கையில் சம்மணம் போட்டு உட்காருவான். பிறகு படுத்தும் கொள்வான். இதெல்லாம் கூட பரவாயில்லைதான். என் கஷ்டம் அவன் முகம் பார்த்துப் பேசுவது என்பதுதான். நான் சட்டையை மாட்டிக் கொண்டு சத்த மில்லாமல் வெளியேறினேன். 

அப்பா அம்மாவைச் சொந்தத்தில் கொள்ளவில்லை. புதிய உறவுதான். அப்பாவின் முன்னோர்கள் அனைவரும் சொந்தத்தில் கிளைத்துக் கொண்டவர்கள். அப்பாதான் முதலில் புது உறவைக் கொண்டார். எங்கள் ஊரில் இருந்து பாசஞ்சர் வண்டியில், மூன்று மைல்களுக்கு ஒருமுறை குறுக்கிடும் ஸ்டேஷன்களில் நின்று நின்று ஆறு மணி நேரம் பயணம் செய்தால் அம்மாவின் ஊருக்குப் போய்ச் சேரலாம். அப்பா தன் பந்து ஜனங்களோடு போய் இருந்து அம்மாவைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு ஊர் திரும்பினார். 

சிவப்பு முக்கோணம் கண்டு பிடிக்கப்படாத காலத்தில் அம்மா பிறந்தவள். அவளோடு ஏழு சகோதரிகளும், மூன்று சகோதரர்களும் பிறந்தார்கள். அத்தனை பேருக்கும் மூத்தவள் அம்மா. அம்மாவும் அப்பாவும் பெண்ணும் மாப்பிள்ளையுமாய் தாத்தா வீட்டை விட்டுப் புறப்படும்போது அவர்களுக்குப் பின்னால் அஞ்சு வண்டி கள் வந்தனவாம். இரட்டை மாட்டு வில் வண்டிகள். முதல் மூன்று வண்டிகளில் அண்டா, குடம், குத்து விளக்கு போன்ற சீர் வரிசைகள். மீதி ரெண்டு வண்டிகளில் அம்மாவின் சகோதர சகோதரிகள், எல்லோரோடும் அப்பா ஊர் வந்து சேர்ந்தார். 

கல்யாணம் ஆகும் போது அம்மாவுக்குப் பதினைஞ்சு வயசு. பெண் ரொம்பவும் முதிர்ந்து போய்விட்டதாகப் பாட்டி அந்தக் காலத்தில் சொல்லிக் கொண்டு இருப்பாளாம். ஏனெனில் பாட்டி தாத்தாவுக்குப் பாரியை ஆகையில் அவளுக்கு வயசு ஏழு. 

அம்மாவுக்கு அடுத்தவன் வேதாசலம். இந்தக் கதையின் நாயகன். இவனுக்கு அடுத்தவள் பச்சை என்கிற பச்சையம்மாள். பச்சைக்கு அடுத்து கனகம். பிறகு முதுமலை. முதுமலைக்கு அடுத்தவள் சுப்புலட்சுமி. சுப்புலட்சுமிக்கு அடுத்து இரட்டைக் குழந்தைகளாகிய வரலட்சுமி, வேதவல்லி. தொடர்ந்து வந்தவள் அலமேலு. அலமேலுக்கு அடுத்தவளும் என்னோடு சின்ன வயசில் விளையாடியவளும், மூன்று வயசே ஆன என் சின்னம்மா அங்காள பரமேஸ்வரி. அப்புறம் காமாட்சி. கடைக்குட்டி கிருஷ்ணன். அம்மா கல்யாணம் ஆகும் போது அவள் தம்பி ஆறு மாசக் குழந்தை. 

ஆக, பெரும் சுற்றமும் நட்பும் சூழத்தான் அப்பா தன் இல்லறத்தைத் தொடங்கி இருக்கிறார். எங்கள் பூர்வீகத் தொழிலைத் தான் அப்பாவும் செய்தார். ரெண்டு கள்ளுக் கடைகளையும், ஒரு சாராயக் கடையையும் அப்பா கான்டிராக்ட் எடுத்திருந்தார். பிதுரார்ஜித சொத்தாகத் தோப்பும் நிலமும் ஏராளமாக இருந்தன. 

அப்போது நாங்கள் இருந்த வீடு நாலு கைத் தாழ்வாரமும் ரெண்டு பின் கட்டுகளும் உள்ள வீடு. எல்லாத் தாழ்வாரங்களிலும் நெல்லும், தேங்காய்களும் சிதறிக் கிடக்கும். நெல்லை மிதித்துக் கொண்டுதான் நாங்கள் விளையாட வேண்டியிருக்கும். தேங்காய்கள் எல்லாம் யாழ்ப்பாணத்துக் காய்கள். என் சின்ன வயசில் நெல் புழுக்கிய வாசனையை நான் நிறைய சுவாசித்திருக்கிறேன். காயவைத்த நெல்லைக் காலால் உரசிக் கொண்டே நடப்பது எனக்கு அலுக்காத விளையாட்டுகளில் ஒன்று. 

காலை மூன்று மணிக்கெல்லாம் அடுப்பைப் பற்ற வைத்து ராத்திரி பத்து மணிக்கு அணைப்பாளாம் அம்மா. விருந்தாடிகள், சினேகிதர்கள், மரமேறிகள் என்று சதா கூடத்தில் யாராவது சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். உறவுக்காரர்களுக்கு மட்டும் அம்மா சோறு போடுவாள். மற்ற மனிதர்களுக்குப் பாட்டிதான் இலை போடுவதிலிருந்து எல்லாமும். கல்யாண வீடு மாதிரி வெளியே எச்சில் இலைகள் குவியும். குறவர்கள் சண்டை போட்டுக் கொண்டு இலையை வழித்துக் கொண்டிருப்பார்கள். 

கள் சாராயக் கடைகளுக்கும் சேர்த்தே வீட்டில் சமையல் நடக்கும். நாளைக்குப் பத்து ஆட்டுத் தலையாவது வேகும். இரத்தம், மீன், எறா-எல்லாமும் தனித்தனியாகத் தயாராக வேண்டும். எங்கள் வீட்டுச் சமையல் அறை எப்போதும் கரி மண்டி கன்னங்கரே லென்று காட்சி அளிக்கும். பொங்கல் சமயங்களில் வீட்டுக்கு வெள்ளை அடிப்பார்கள். எவ்வளவு சுண்ணாம்பு பூசினாலும் அடுப்புக் கரி மட்டும் அகன்றதே இல்லை. 

இந்தச் சூழ்நிலையில் வளர்ந்தவன் என் மாமன். அம்மாவோடு வரும்போது அவனுக்கும் அவளுக்கும் ஒரு வருஷமே வித்தியாசம். ஆனாலும் அதுவரை அவன் பள்ளிக்கூடம் போனவன் இல்லை. தாத்தா அம்மாவைப் பெற்றவர் – வீட்டுக்கு வெளியேயும் உள்ளே யும் பிரதானமான தொழிலாக ஜோஸ்யத்தை வைத்திருந்தார். ஒழிந்த வேளைகளில் அரசாங்க உத்தியோகமாகிய மணியக்காரத் தொழிலை யும் புத்திரோற்பத்தியையும் சேர்த்துக் கவனித்து வந்தார். 

ஜோஸ்யம், மணியம் இரண்டிலும் முதலாவதிலேயே அவருக்குச் சில்லறையும் மதிப்பும் தட்டுப் பட்டதால், நாளடைவில் இரண்டாவதைப் புறக்கணித்து ஜில்லாவிலேயே பெரிய ஜோஸ்யராகப் பிரக்யாதி பெற்றார். கோடை விடுமுறையில் நான் தாத்தா வீட்டுக்குப் போகும் போதெல்லாம் பார்ப்பேன். வாசலில் எந்நேரமும் மாட்டு வண்டிகள் அவரைக் கூட்டிச் செல்லக் காத்துக் கொண்டிருக்கும். மாடுகள் அசையும் போதெல்லாம், அவற்றின் கழுத்து மணியும், கொம்புச் சலங்கையும் கிணு கிணுக்கும் கோயில் மணி மாதிரி அச்சப்தத்தை நாள் முழுதும் கேட்கத் தோன்றும். 

நன்றாகப் போஷிக்கப்பட்டுப் பசி அறியாத மாடுகளை நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அரியலூர், நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம் என்று பல திக்குகளிலிருந்தும் தாத்தாவுக்கு அழைப்பு வரும். சரிகை அங்க வஸ்திரத்தைப் போட்டுக் கொண்டு தாத்தா அலைந்தவாறிருப்பார். அந்த அலைச்சலில் அவர் பிள்ளைகளைப் பற்றி யோசிக்க அவருக்கு நேரம் எங்கே இருக்கப் போகிறது? 

மாமனை அப்பா தன்னோடு அழைத்து வந்தது, வேரோடு செடியைப் பிடுங்கிப் புதிய மண்ணில் பயிர் செய்ததைப் போலத் தான் அப்பாவுக்கு இருந்தது. அந்த வயசு வரையிலும், மாடு மேய்க்கும் பையன்களோடு கூட்டாளியாக இருந்து மேய்த்ததும், நிழலுக்கு மர மட்டைகளில் ஒதுங்கிப் புரண்டதும், மாங்காய், புளி அடித்து எச்சில் ஊற ஊறத் தின்றதும் தவிர வேறு அறியாதவன். 

அப்பா அவனுக்கு டவுசரும் சட்டையும் தைத்துக் கொடுத்தார். டவுசர் தைப்பது என்றாலே எங்களுக்குக் கிலி அடித்துப் போகும். அப்பா வீட்டில் இருக்கும் ஆண் பிள்ளைகளை யெல்லாம் தையல் கடைக்கு அழைத்துப் போவார். ஒரு பட்டாளம் போல, ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு ஓரமாகவே கடைத் தெருவுக்குப் போவோம். துணிக்கடைக்காரர் ஏற்கெனவே அப்பாவுக்குப் பரிச்சயமானவராகவே இருப்பார். 

இருப்பதிலேயே முரட்டுத்தனமான துணியையே தேர்ந் தெடுப்பார். ஒரு கலர், ஒரு தரம். எங்கள் யாருக்கும் வித்தியாசம் காட்டுவதில்லை அவர். தையல் கடையில் அப்பா சொல்வார். ‘வளருகிற பிள்ளைகள். அளவு கொஞ்சம் கூடவே வைங்க.’ தையல்காரர் இடுப்புக்கும் முட்டிக்கும் அளவு வைத்து எடுப்பார். நாங்கள் தொடைவரை போதும் என்று அவர் மட்டும் கேட்கும் வரைக்கும் கெஞ்சுவோம். 

அவர், ‘எனக்குத் தெரியும் தம்பி. நான் தைச்சுக் கொடுக்கிறத பேசாமப் போட்டுக்கோ. சும்மா தெருவில போறவன் கைதட்டிக் கூப்புட்டுப் பொண்ணுக் கொடுப்பான்’ என்று சத்தம் போட்டுச் சொல்வார். 

இடுப்பில் இருந்து முட்டி வரைக்கும் நீண்ட, அகலமான ஒரு முக்கால் பேண்ட்டை, அரைக்கால் சட்டையாகப் போட்டுக் கொண்டுப் பள்ளிக்கூடம் போகவே அவமானமாக இருக்கும். பள்ளிக்கூடத்தில் சிரிக்காத பையன்கள் யாருமே இருக்க மாட்டார்கள். 

அம்மா தன் தம்பி தங்கைகளை என்னைப் போலவே வளர்த்தாள். என்னைக் காட்டிலும் அன்பாக வளர்த்தாள். கோபம் வந்தால் தொண்டை அடைக்கக் கத்துவாள். அடுத்த அரைமணி யில் எல்லாவற்றையும் மறந்துவிடுவாள். அவள் கை அள்ளி அள்ளிப் போடுவதைத் தவிர வேறு எதையும் அறியாதது. 

கூடத்தில்தான் நாங்கள் சாப்பிடுவோம். காலை பலகாரத்துக் காகப் போட்ட பந்திப்பாய் ராத்திரி வரைக்கும் சுருட்டப்படாமல் அப்படியே கிடக்கும். வரிசையாக எல்லாரும் உட்காருவோம். மாமன் என் பக்கத்தில்தான் உட்காருவான். வடை போட்டிருந்தால் எனக்கு எவ்வளவு வைக்கிறாளோ அதே எண்ணிக்கையில் அவனுக்கும் வைக்க வேண்டும். 

மாமன் தன் தட்டைப் பார்த்துச் சாப்பிடுவதைக் காட்டிலும் என் தட்டைப் பார்த்துச் சாப்பிட்டதே அதிகம். தன் பிள்ளைக்கும் சகோதரர்க்கும் எந்த வித்தியாசத்தையும் காணாத அம்மாவை சமயங்களில் அவன் ஹிம்சைப் படுத்துவதைப் பார்க்க எனக்கு எரிச்சலாய் இருக்கும். கறி, மீன், காய் எது இலையில் போட்டாலும், என்னைக் காட்டிலும் குன்றிமணி அவன் இலையில் குறைந்தாலும் எட்டி இலையை உதைப்பான். சாப்பிடாமல் பள்ளிக்கூடம் போவான், அப்பாவிடம் சொல்லி, அப்பாவே சாப்பாட்டுப் பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடத்துக்கு அனேக தடவை வந்திருக்கிறார். 

கூடத்தில்தான் நாங்கள் படுத்துக் கொள்வோம். வரிசையாக கூடத்தின் ஒரு முனை தொடங்கி மறுமுனை வரைக்கும் நாங்கள் வியாபித்துக் கொள்வோம். அங்கிருந்து படுத்தவாறே பார்த்தால் வானம் தெரியும். நிலா தெரியும். தூக்கம் வருகிற வரைக்கும் அம்மா எங்களோடு படுத்துக்கொண்டு இருப்பாள். அம்மாவுக்குப் பக்கத்தில் யார் படுப்பது என்பது குறித்து எங்களுக்குள் பெரும் போட்டி நடக்கும். அம்மா தான் இந்த விவகாரத்தைத் தீர்த்தாள். 

ஒரு நாளைக்கு ஒருத்தர் என்று முறை வைத்துப் படுத்துக் கொள்வோம். அம்மா கதை சொல்வாள். பயங்கரமான கதைகள். ராஜகுமாரன், ராட்சசன் கதைகள். ஒவ்வொரு ராஜகுமாரன் கதையிலும் ராட்சசர்கள் வருவார்கள். ராட்சசர்கள் வேலையே ராஜகுமாரிகளை தூக்கிக் கொண்டு போவதாகும். ராஜகுமாரர்கள் வேலை அவர்களை மீட்டு வருவதாகும். 

ராட்சசர்கள் பொதுவாக ஏழுகடல் தாண்டி, ஏழாவது கடலின் நடுவில் உள்ள தீவில் குடியிருப்பார்கள். அங்கே திகு திகுவென்று கொதித்துக் கொண்டிருக்கும் குளம் ஒன்று இருக்கும். அதன் நடுவில் ஒரே ஒரு தாமரைப் பூ இருக்கும். அந்தப் பூவின் நடுவில் ஒரு வண்டிருக்கும் வண்டின் வயிற்றில் ராட்சசர்களின் உயிர் இருக்கும். ராஜகுமாரர்கள் அந்த வண்டை நசுக்கி, ராட்சசர்களைக் கொன்று, ராஜகுமாரிகளைச் சிறை மீட்டு ஊர் திரும்பும்போது நாங்கள் தூங்கியிருப்போம். 

நான் படித்த பள்ளிக்கூடத்தில்தான் மாமனும் படித்தான். அப்பாவின் செல்வாக்கு பத்து வகுப்பு வரைக்கும் அவனுக்குத் துணை செய்தது. மெட்ரிகுலேஷன் பரீட்சையில் அப்பாவின் செல்வாக்கு செல்லுபடியாகவில்லை. தட்டுத் தடுமாறிக் கொண்டு மாமன் பரிட்சை எழுதி பயிற்சிக்குப் போய் வாத்தியாராகவும் ஆனான். அப்பாவின் பணம் உத்தியோகம் சம்பாதிக்கவும், கல்யாணம் பண்ணவும் தனி வீடு ஏற்பாடு செய்யவும், குடித்தனம் வைக்கவும் என பலவகையில் மாமனுக்குப் பயன் தந்தது. அம்மா மாமன் கல்யாணத்துக்கு ஆன பெருந்தொகையை, பின்னாளில் பசித்த போதெல்லாம் கணக்குப் பார்ப்பாள். 

மாமனுக்கு வாய்த்த மாமியும் சொந்தத்தில் இல்லாமல், புது உறவில்தான் அப்பா பார்த்து ஏற்பாடு செய்தார். 

மாமன் புதிதாக உத்யோகம் பார்க்கும் ஊருக்கு நாங்கள் குடும்பத்தோடு போனோம். அப்பா, அம்மா, நான், என் சின்னம்மா, மாமன்மார்கள் எல்லோரும். ஓர் ஆற்றங்கரையை ஒட்டிய சிமிழ் மாதிரியான வீடு. அண்டா முதற்கொண்டு தேக்கரண்டி வரைக்கும் எடுத்துக் கொண்டு போயிருந்தோம். வீட்டு வாசலில் ஒரு வயசான கொடுக்காப் புளி மரம் இருந்தது. ஏராளமான சுளைகள். முதலில் பயந்து கொண்டே தான் கல் எறிந்தோம். யாரும் கேட்கவில்லை. தைரியமாகக் கல்லை விட்டு சுளை அடித்துச் சாப்பிட்டோம். 

கொல்லைப் பக்கம் வந்து விட்டதாகச் சொல்லி ஒரு சிறுவன் சாரைப்பாம்பை அடித்துக் கொன்று அதன் கழுத்தில் சுருக்கிட்டு தெருத் தெருவாக இழுத்துச் சென்றான். நான் பார்க்காமல் ஓடி வந்து விட்டேன். வீட்டுக்கும் பள்ளிக் கூடத்துக்கும் கொஞ்சம் தூரம் என்றானாம் மாமன். அப்பா பிரஞ்சு சைக்கிள் வாங்கிக் கொடுத்து அனுப்பினார். பிரஞ்சு சைக்கிள் கன்றுக்குட்டி போல இருக்கும். 

மாமனும் மாமியும் செய்த சம்சாரம் ரொம்ப விசேஷமானது. மாமன் ஊரில் உள்ள பெரியதனக்காரரோடே பழக்கம் வைத்துக் கொள்வான். பெரிய தனக்காரர்கள் பொதுவாக எழுதப் படிக்கத் தெரியாதவர்களாகப் பெரும்பாலும் இருக்க நேர்வதால் ஒரு வாத்தியாரின் உறவு அவர்களுக்கும் தேவையாகவே இருக்கும். தாசில்தார் ஆபீசு, பத்திரங்கள் பதிவு பண்ணும் ஆபீசு போன்ற அவர்கள் போக வேண்டிய விவகாரங்களுக்கெல்லாம் மாமன் போவான். இது அவன் கையில் பணம் புழங்க ஏதுவாகியது. 

பெரியவர்கள் வீட்டு வெள்ளாமையில் மாமன் பங்கு கணிசமாக இருக்கும். அறுவடையாகி, உரியவர்கள் வீட்டுக்கு நெல் மூட்டைகள் போகும்போது மாமனுக்கு ஒன்றாவது கிடைக்கும். ஒருமுறை பள்ளிக்கூடத்துக்கு லீவு போட்டு விட்டு பெரியவர் வீட்டு செக்கில் எண்ணையாட்டினான். செக்கில் மாமனே உட்கார்ந்து சுற்றிச்சுற்றி வந்ததை நானே பார்க்க நேர்ந்தது. சாயங்காலம் ஆள் ஒருத்தன் சின்ன செம்பு ஒன்றில் நல்லெண்ணெய் கொண்டு வந்து மாமியிடம் கொடுத்தான். மாமனிடம் படித்த மாணாக்கர்கள் அளவுக்கதிகமான குரு பக்தி வாய்ந்தவர்கள். மாமனின் கோரிக் கையை ஏற்றுக் கொண்டு அவர்கள் அவர்களால் முடிந்த அவர்கள் வீட்டுத் தோட்டத்துக் காய்கறிகளைக் கொண்டு வந்து காணிக்கை செலுத்தினார்கள். 

வாத்தியார் உத்யோகத்தில் லீவு ஓர் விசேஷம் அம்ச ஆகை யால், மாமன் அவன் விடுமுறையைப் பயன் உள்ள முறையில் கழித் தான். பயன் அவனுக்குத்தான். விடுமுறைக் காலங்களில் வீட்டைப் பூட்டிக் கொண்டு குடும்பத்தோடு கிளம்பி விவான். மாமியையும், பிறந்த குழந்தையையும் தன் மாமனார் வீட்டில் விட்டு விடுவான். மாமன் மட்டும் தனியாகக் கிளம்பி, தன் பந்து ஜனங்கள் எல்லோருடைய வீட்டுக்கும் விஜயம் செய்வான். பெரும்பாலோர் வீடுகளில் வயதுக்கு வந்த பெண்ணோ அல்லது பெண் தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களோ இருக்கவே செய்தார்கள். மாமன் ஜாதகங்களை வாங்கிக் கொண்டு மாப்பிள்ளைகளையும் பெண் களையும் தேடிக் கொண்டு அலைவான். 

இந்த விதமான யாத்திரைகளுக்கென பெண்ணைப் பெற்றவர் கள் அரும்பாடுபட்டு உழைத்துச் சேர்த்த பணத்தை வைத்துக் கொண்டு மாமனின் வருகைக்குக் காத்திருந்தார்கள். மாமன் சௌகரியமாகக் காலம் தள்ளுவான். இது மாதிரியான பொதுப் பணிகளில் மாமனுக்கு, வாகன யோகம், பணப் பிராப்தி, முதலி யவை கிடைக்க விடுமுறை இனிதே கழியும். கால் பரீட்சை லீவு சமயங்களில் தீபாவளி வரும். அரைப்பரிட்சை லீவு சமயங்களில் பொங்கல் வரும். 

பண்டிகைக் காலங்களில் மாமன் குடும்பத்தோடு எங்கள் வீட்டுக்கு வந்து விடுவான். பண்டிகைக்காகப் புதுத்துணிகள் வாங்க அப்பா மாமனையும் எங்களையும் அழைத்துக் கொண்டு கடைக்குப் போவார். எல்லாருக்கும் புதுசு எடுத்துக் கொடுப்பார் அப்பா. முழுப்பரிட்சை லீவு காலங்களில் மாமன் குடும்பத்தோடு எங்கள் வீட்டில்தான் இருப்பான். அந்தக் காலத்தில் முழுப்பரிட்சை லீவு என்பது மூன்று மாதம் முழுசாக வரும். மாசத்தின் முதல் நாள் அம்மாவிடம் அஞ்சு ரூபாய் வாங்கிக் கொண்டு தான் வேலை பார்க்கும் ஊருக்குப் போய் சம்பளத்தை வாங்கி, பாங்க்கில் போட்டுவிட்டு சாயங்காலம் ஊர் திரும்பி விடுவான். அம்மா சொல்லி எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஒவ்வொரு முழுப்பரிட்சை முடிந்து வேலைக்குச் சேர்ந்த போதெல்லாம் மாமன் மூன்று பவுன் வாங்குவானாம். மாமி ஒரு காசு மாலை போட்டிருப்பாள். அதில் மூணு பவுனையும் சேர்த்து விடுவானாம். 

அப்பா இப்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக இளைத்துக் கொண்டு வருவதாக எனக்குப் பட்டது. நான் பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த நேரம். அப்பா வீட்டில் பெரும்பாலும் சாய்வு நாற்காலியில் படுத்துக் கிடந்தார். அம்மா சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். அப்பா தோற்றுப் போனார். இருந்த சொத்துக்களையெல்லாம் விற்று, கடன்கள் எல்லாவற்றையும் அடைத்தார். 

அதற்கு முன்னமேயே என் சின்னம்மாமார்கள் அனைவரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட கணவர்மார்களின் கைவிரல்களைப் பற்றிக் கொண்டு கரையேறி விட்டிருந்தார்கள். அப்பாதான் கரையேற்றி வைத்தார். 

இல்லாமை வீட்டில் குடிபுகுவதை நான் என் கண்களால் அந்தக் காலத்தில் பார்த்தேன். திடுதிப்பென வீட்டில் இருள் புகுந்தது போல, வீடு முழுக்கவும் கொத்துக் கொத்தாக இருட்டு மண்டி யிருந்தது. எத்தனை விளக்கு வைத்தாலும் போகாத இருட்டாய் இருந்தது அது. அலமாரிகள் எல்லாம் வயசான கிழவன் பிரயாசைப் பட்டு நிற்பதுபோல நின்றிருந்தன. வீட்டுச் சுவர்கள் இற்று விழுந்தன. அம்மா அப்பாவின் சட்டையை நாள் முழுக்கக் கிழிசல் தைத்துக் கொண்டிருந்தாள். மாமன் இப்போதெல்லாம் விடுமுறைகளில் வருவது நின்றிருந்தது. அப்பாவுக்கு ரொம்பவும் வருத்தம். அம்மா, ‘மரம் பழுக்கல்லே. வெளவாலும் வரல்லே’ என்றாள் ஒரு நாள். அப்பா சுருட்டை இழுத்து விட்டுக் கொண்டு சொன்னார். ‘என்ன இருந்தாலும் அவன் தான் என் மூத்த மகன்.’ பிறகு இருமினார். 

அப்பா எனக்குக் கல்யாணம் ஏற்பாடு செய்தார். நிச்சயதார்த் தத்துக்கு மாமன் வரவில்லை. அம்மா சொன்னாள். பணம் கேட்போம் என்று அவன் வரவில்லை என்று. கல்யாணத்துக்குப் பத்திரிகை வைக்க அப்பா மட்டும் மாமா ஊருக்குப் போனார். அம்மா வர மறுத்துவிட்டாள். வெயிலில் பஸ்ஸைவிட்டு இறங்கி தலையில் துண்டைப் போர்த்துக் கொண்டு மாமன் வீட்டுக்குப் போயிருக்கிறார். 

மாமனின் மாமனார் மட்டும் இருந்திருக்கிறார். மாமி, புதுசாக வாங்கிய நிலத்தைப் பார்வையிடப் போயிருந்தாளாம். சொல்லி அனுப்பி மாமனை வரவழைத்திருக்கிறார்கள். அப்பா வைத்த பத்திரிகையை வாங்கிக் கொண்டு மாமன் ‘லீவு கிடைக்கிறது கஷ்டம். கிடைத்தால் வருகிறேன்’ என்றானாம். 

மாமனின் மாமனார் மட்டும் அப்பாவை வழியனுப்ப பஸ் ஸ்டாண்டு வரைக்கும் வந்தாராம். வரும்போது அவர் சொன்னாராம். ‘அண்ணாச்சி! நன்றி கெட்ட உலகம் அண்ணாச்சி இது. நீங்க மட்டும் இல்லேன்னா, இவனெல்லாம் நடுத்தெருவில் நின்று இரந்து கஞ்சி குடிக்க வேண்டியவனுக. உங்களால படிச்சு, கல்யாணம் பண்ணிக்கிட்டு, ஆளாவும் ஆயிட்டான் என் மாப்பிள்ளை. இப்ப நீங்க நொடிச்சுப் போயிட்டீங்க. உங்களுக்குக் கொடுத்து உதவ வேண்டியது அவன் கடமை. கூசாமே பணமே இல்லேன்னு உங்க முகத்தைப் பார்த்துச் சொல்ல முடியுது பாருங்க… அண்ணாச்சி! நேத்துதான் வீடு ஒன்னு பாருங்கன்னு என்கிட்டே பத்தாயிரம் கொடுத்து வச்சிருக்காரு. ஊம்…. என் மாப்பிள்ளையா இருந்தா என்னா. நியாயம் பொது அண்ணாச்சி. இதுக்கு அவரு அனுபவிப்பாரு.’ நீங்களே உங்க கண்ணால பாப்பீங்க…’ என்று குறையாகச் சொன்னாராம் கிழவர். 

‘ஒருத்தனிடம் பணம் இருந்தா நமக்கு அதை தரணும்னு விதியா? நான் அவனுக்குச் செஞ்சது ஒரு தகப்பன் மகனுக்கு செய்யற மாதிரிதான் கடன் இல்லே. அதை அவன் திருப்பி அடைக்க வேண்டிய கட்டாயமில்லே’ என்று அப்பா சொல்லி விட்டு வந்தாராம். 

எனக்குக் கோயிலில்தான் கல்யாணம் நடந்தது. ஐயர் அம்மான் வரிசை என்றதும் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த என் ஒன்றுவிட்ட தாய் மாமன் யதார்த்தமாக என் விரலைப் பிடித்து மோதிரம் போட்டு விட்டார். என் கல்யாணத்துக்குத் தனியாக வந்த என் மாமனுக்கு அது அவமானமாகப் போய் விட்டதாம். 

முறையான தாய்மாமன் தான் இருக்க, யாரோ ஒருவன் எனக்கு முதல் மரியாதை செய்தது தன்னைத் திட்டமிட்டு அவமானம் செய்வதாக இருக்கிறதாம். மாமன் கூரைக்கும் தரைக்குமாகக் குதித்தான். பிறகு எனக்கென்று செய்துகொண்டு வந்திருந்த வரிசை களைத் தான் திரும்ப எடுத்துக் கொண்டு போவதாகச் சொல்லி விட்டுப் போய்விட்டான். 

அப்பாவுக்குத்தான் ரொம்ப வருத்தம். அம்மாதான் சொன் னாள். ‘போகட்டும் விடுங்க அவன் நோக்கம் எனக்குத் தெரியும். நானும் அவனும் இருந்த வயிறு ஒன்னுதானே! ஏதாவது சாக்கு கிடைக்காதான்னு அலைஞ்சுகிட்டு இருந்தான் அவன். யதார்த்தமா நடந்ததைப் பிடிச்சுகிட்டு உறவை அறுத்துக்கிட்டு போயிட்டான். பிள்ளைக்கு மோதிரம் போடறது தப்பிச்சுட்டுது. பிள்ளையும் பெண்ணையும் அழைச்சுக்கிட்டுப் போயி விருந்து பண்ணி வைச்சு துணி எடுத்துக் கொடுக்கிறதும் இப்ப இல்லாமப் போச்சு. ஆக மொத்தத்தில் ஒரு ஐநூறு ரூபாய் அவனுக்கு மிச்சம். ஆனா நமக்கு? இந்தக் கழுதைங்கள்ளாம் நம்மை விட்டு ஒழிஞ்சுதுன்னு நிம்மதி’ என்றாள். முந்தானையை வாயில் பொத்திக் கொண்டாள். 

மாமன் உறவு மண்ணோடு போச்சென்று இருந்தேன். இதோ மீண்டும் பல வருஷங்களுக்குப் பிறகு வந்திருக்கிறான். ராத்திரி சாப்பிட்டு முடித்து காற்றுக்காக அம்மா வாசலில் வந்து உட்கார்ந்த போது நான் கேட்டேன். அப்பா வாசலில்தான் சாய்வு நாற்காலியில் படுத்திருந்தார். 

‘இன்னிக்கு உன் தம்பி வந்திருந்தானே காலையில் என்ன விசேஷம்?’ 

‘ஆமா காலைல வந்தான் கடன்காரன். இவனுகளுக்கு செஞ்சு அழிஞ்சது போதாதுன்னு, இவன் பிள்ளையைப் படிக்க வைக்கணு மாம். இந்த ஊருலதான் நல்ல பள்ளிக்கூடம் இருக்குதாம். காலேஜ் இருக்குதாம் என்னை ஆளாக்கின மாதிரி என் பிள்ளையையும் ஆளாக்கி விடுங்கன்னான்.’ 

அப்பா இடைமறித்தார். 

‘என் கிட்ட சொல்லவே இல்லையே இத…’ 

‘ஆமா. ஒரு பெரிய மனுஷன் விவகாரம்தான் இது உங்ககிட்ட சொல்லறதுக்கு. நன்னி இல்லாத பய எந்த முகத்தை வைச்சுக் கிட்டு உள்ளே வந்தேடா பாவின்னே. அக்கா, அக்கான்னு அழுதான். போதும் அக்கா, தம்பி உறவெல்லாம் அன்னைக்கே போச்சு போடா ஒரு மனுஷன் கிடைச்சா அவரை கடைசி வரைக்கும் கசக்கிப் பிழிஞ்சுதான் விடுவீங்களான்னேன். பசியோ பட்டினியோ கொஞ்ச நாளைக்கு நாங்க இப்படியே இருந்து காலத்தைக் கழிச்சிடறோம் உங்க காத்துக்குக் கூடக் கொள்ளிக் கண்ணு – வேண்டாம். உங்க சங்காத்தமேன்னேன் – ஒரு வழியா போயித் தொலைஞ்சான். 

‘நல்ல காரியம் பண்ணே நீ இன்னிக்கு’ என்று நான் சொன்னேன். 

அப்பாவின் கருத்தை அறிந்து கொள்வதில் எனக்கு அக்கறை. அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பா சுருட்டில் ஆழ்ந்திருந்தார். பிறகு சொன்னார். 

‘நீ செஞ்சது தப்பு. அவன் சின்னப் பையன். அறியாமே தப்பு பண்ணிட்டான். நாமளும் அதே தப்பைப் பண்ணக் கூடாது. பெரியவங்க பெரியவங்களா நடந்து கிட்டாதான் நல்லது’ என்றார் அப்பா. 

‘ஆமா வேதாந்தம் பேசியே வீணாப் போயிட்டீங்க நீங்க— என் தம்பி எனக்கே வேணாம்னுட்ட பின்னால நீங்க ஏன் சேத்து சேத்துப் பிடிச்சக்கிட்டு நிக்கிறிங்க. பேசாம சட்டி சுட்டது கைவிட்டதுன்னு கெடங்க…’ என்றாள் அம்மா. 

அம்மாவுக்குக் கோபம். இனிமேல் எதுவும் பேசமாட்டார். நான் வானத்தைப் பார்த்தேன். வானத்தை அடைத்துக் கொண்டு நட்சத்திரங்கள் கிடந்தன. ஒற்றை நட்சத்திரம் சர்ரென்று கீழ் இறங்கி அப்படியே நின்றது. 

அடுத்த நாள் மத்தியானம் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போயிருந்தேன். அப்பா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் பதினாலு பதினைஞ்சு வயசுப் பையன் ஒருவன் உட்கார்ந்து குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். 

அம்மா என்னைக் கிணற்றுப் பக்கம் அழைத்துப் போய்ச் சொன்னாள். 

‘ஆனாலும் உங்க அப்பாவுக்கு இந்த வைராக்கியம் ஆகாதுடா. விடிஞ்சதும் விடியாம எழுந்து எங்கியோ போரார்னு பார்த்தேன். நேரா உங்க மாமா வீட்டுக்கு போய் இருக்காரு. பையனை கையோட அழைச்சுகிட்டு உடனே வந்திட்டாரு- உங்க அப்பாவை மீறி நான் என்ன பண்ண? படியேறி வந்துட்டான் குழந்தை. கிடக்கட்டும். குழந்தைங்க மந்தையாட்டம் இருந்த இடத்துல ஒன்னாவது இருந்துட்டுப் போவட்டும்… என்ன சொல்றே…’ 

அம்மா ஏதோ என் அனுமதிக்குக் காத்திருப்பது போல நின்றாள். நான் பதில் பேசாமல் கூடத்துப் பக்கம் வந்தேன். பையன் கவிழ்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இலையில் பெரிய மீன் தலையும், இரண்டு துண்டங்களும் இருந்தன. அப்பா உடம்புக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று எப்போதோ மீன் சாப்பிடுவதை நிறுத்தி விட்டிருந்தார். அப்பா வற்றலைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டார். 

– 1980

– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *