மறையட்டும் தீயசக்தி மலரட்டும் தீபஒளி
உகாண்டா விமான நிலையத்திற்குள் நுழையும் போது கணேசனுக்கு தலையை வலித்தது போல இருந்தது. நேராகப் போய் பிளாஸ்டிக் கப்பில் டீ வாங்கிக் கொண்டு பயணிகளுக்காக போட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
செல்போன் ஒலிக்க, எடுத்துக் கேட்டான். “கணேசன் அம்மா பேசுகிறேன். நாளை மறுநாள் தீபாவளி எப்போது கிளம்புகிறாய்?” அம்மா தேவிகா கேட்டாள்.
“அம்மா நான் ஏர்போர்ட்டிற்கு வந்து விட்டேன். இங்கிருந்து துபாய் போய், அங்கிருந்து நாளை காலை மதுரை விமானத்தில் வருகிறேன். நீங்கள் கருங்குளம் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் என் நண்பன் சுகுமார் டாக்ஸியை பிடித்துக் கொண்டு தங்கையையும் அழைத்துக் கொண்டு, மதுரை விமான நிலையத்திற்கு நாளை காலை பத்து மணிக்கு வந்து விடுங்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? தங்கை தமிழரசி எப்படி இருக்கிறாள்? தங்கைக்கு வரன் பார்த்தீர்களே என்னாச்சு” என்று கேட்டான்.
“அனேகமாக அந்தப் பள்ளிக் கூட வாத்தியார் பையன் வசந்தன் சம்பந்தம் முடிந்து விடும்.”
“அத்தை மகள் சுகுணா எப்படி இருக்கிறாள்?”
“ம்…உன்னையே தேடிக் கொண்டிருக்கிறாள்.”
“சரியம்மா, நாளைக்கு நேரில் பேசலாம்.”
போன் தொடர்பைத் துண்டித்து பையில் போட்டுக் கொண்டு டீயை தொடர்ந்து சிகரெட் எடுத்து வாயில் வைத்து நெருப்புக்கு தீப்பெட்டி தேடிய போது, தமிழ் சினிமா ஸ்டைலில் குறுந்தாடியுடன் ஒருவன் வந்து லைட்டரைக் கொளுத்தி சிகரெட்டைப் பற்ற வைத்தான்.
“நன்றி, நீங்கள் யார்?” ஆங்கிலத்தில் கேட்டான் கணேசன்.
“பெயரா முக்கியம். ஒரு உதவி செய்யமுடியுமா?” என்று தமிழில் கேட்டான் குறுந்தாடி.
“ஓ! தமிழா, என்ன விசயம் சொல்லுங்க?”
“நீங்கள் மதுரைக்குத் தானே போகிறீர்கள். பயணிகள் வரிசைப் படிவத்தில் பார்த்தேன். கணேசன், என் அம்மா மதுரை ஏர்போர்ட் வருவார்கள். அவர்களிடம் இந்த பார்சலை ஒப்படைக்க முடியுமா?” என்று குறுந்தாடி கேட்ட போது திரும்பவும் செல்போன் ஒலிக்க, “எதையும் பேச வேண்டாம். உங்களைச் சந்திக்கும் நபர் ஒரு பெரிய குற்றவாளி. அவன் போதைப் பொருளை கடத்துவதற்கு உங்கள் உதவியை நாடியுள்ளான். அதனால் அவரை உடனடியாக போலீஸாரிடம் ஒப்படைத்தால் நீங்கள் தப்பிக்கலாம்” என்று ஆங்கிலத்தில் பேசி விட்டு தொலை பேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது.
கொஞ்சம் சுதரித்துக் கொண்ட கணேசன் “சார், உங்கள் பெயர், விலாசம் சொன்னீர்கள் என்றால், ஒரு வேளை உங்கள் அம்மா வரவில்லை என்றாலும் உங்கள் பார்சலைத் திருப்பிக் கொண்டு தர முடியுமில்லையா?” என்றான்.
“அது…கண்டிப்பாக அம்மா வந்து விடுவர்கள்” என்றான் குறுந்தாடி.
கொஞ்சம் கடுமையாக “நீங்கள் விலாசமும் தொலைபேசி எண்ணுமடங்கிய அடையாள அட்டை கொடுத்தால் மட்டுமே நான் இந்தப் பொருள்களை இந்தியாவிற்கு கொண்டு போய் உங்கள் அம்மாவிற்கு கொடுக்க முடியும்” என்றான் கணேசன்.
“ஏன் கணேசன், என் மேல் சந்தேகப் படுகிறீர்களா?” என்றான் குறுந்தாடி.
“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை” என்ற போது உகண்டா நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் அருகில் வந்தார். ரமணன்(குறுந்தாடி) கொஞ்சம் ஆடிப் போனான்.
“இந்தியா போகிறீர்களா?” என்று அந்தப் போலீஸ் அதிகாரி ரமணனிடம் பாஸ்போர்ட்டை காட்டச் சொன்னார்.
“நான் இந்தியா போகவில்லை. நண்பர் போகிறார். அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்” என்றான் ஆங்கிலத்தில்.
அருகில் ரமணன் கொடுத்த பார்சல் இருந்ததை எடுத்து “யாருடையது” என்றார் போலீஸ் அதிகாரி.
ரமணன் கொஞ்சம் தயங்க, “நண்பர் அவருடைய அம்மாவிடம் கொடுப்பதற்காக தந்த பார்சல்” என்றான் கணேசன்.
“என்ன இருகிறது?”
“கொஞ்சம் துணிகள்.”
பார்சலை திரும்பக் கொடுத்து விட்டுப் போனார் போலீஸ் அதிகாரி.
“ம்… கணேசன் இந்தாருங்கள் என்னுடைய விசிடிங்க் கார்டு. இது என் தொலைபேசி எண். என் பெயர் ரமணன். இப்போது என் மேல் நம்பிக்கை வந்து கண்டிப்பாக இந்தப் பொருளை என் அம்மாவிடம் கொடுத்து விடுவீர்கள் என்று நம்புகிறேன்.” என்றான் விசிடிங் கார்டை கொடுத்தவாறு.
“ஒரு நிமிடம் ரமணன். பொருட்களைப்பார்த்துக் கொள்ளுங்கள். நான் கழிவறைக்குப் போய் விட்டு வருகிறேன்.” என்றான் கணேசன்.
கண்ணிமைக்கும் நேரத்தில் கணேசனின் இடுப்பில் ஒரு உலோகக் குழாய் உரச, “மிஸ்டர் கணேசன், நீங்கள் போலீஸுக்குப் போன் பண்ண விரும்புகிறீர்கள். என்னால் உங்கள் முகத்தைப் படிக்க முடிகிறது. இந்த பார்சல் உங்களிடம் இருக்கும் வரை யாரும் என்ன என்று கேட்க மாட்டார்கள்.
நானும் உங்களோடு துபாய் வந்து மதுரை வருகிறேன். அதுவரை அமைதியாக வந்தால் உயிரோடு ஊர் போய் சேர்வீர்கள். இல்லையெனில் என் துப்பாக்கிக்கு இரையாகி எமலோகம் போய்ச் சேர வேண்டியது தான்.” என்று துப்பாக்கியை அமுக்க, “சரி” என்று நெர்வஸாகச் சொல்லிக் கொண்டு தன்னுடைய உடைமைகளோடு ரமணனின் பர்சலையும் எடுத்துக் கொண்டு கணேசன் கிளம்பினான்.
ரமணன் அவனோடு ஒட்டிக் கொண்டு வர, எப்படியோ சமாளித்துக் கொண்டு செக்கிங்கிலிருந்து தப்பி விமானத்தில் ஏறினான்.
விமானம் துபாய் விமான நிலையத்தில் இறங்கிய போது, அங்கு வேலை செய்யும் ராஜசேகர், “கணேசன் என்ன ஊருக்கா?” என்று கேட்டார்.
“ஆமாம் சார்.”
“யாரு கூடவே ஒட்டிக் கொண்டு…உங்கள் நண்பரா?”
“ஆமாம்.”
கணேசன் கைகுலுக்கிய போது கிழிந்த டிக்கெட்டின் துண்டு ராஜசேகரின் கைக்குமாற, கவனிக்காதவாறு ரமணனோடு கூட நடந்தான் கணேசன்.
பேப்பரைத் திருப்பிக் கொடுக் கமுனைந்த ராஜசேகர், அதிலிருந்த வார்த்தையைக் கவனித்து அதிர்ச்சியடைந்தார்.
“உதவி.” “காவல்துறை” என்றுஎழுதியிருந்தது.
ராஜசேகர் உடனடியாக விமான தளத்திலிருந்த போலீஸாரைத் தொடர்பு கொண்டு கணேசன் அருகே வர, போலீசார் ரமணனை கோழிக் குஞ்சு அமுக்குவது போல வந்து தூக்கிக் கொண்டு போக, கணேசன் பார்சலை ஒப்படைத்தான்.
போலீஸ் விசாரணை ஆரம்பிக்க விமானத்திற்கு நேரமாகிக் கொண்டிருந்தது.
ராஜசேகரிடம் “நான் நாளை தீபாவளிக்கு வீட்டிற்கு வருவதாய்ச் சொல்லியிருக்கிறேன். என் வீட்டிலும், மாமா மகள் சுகுணாவும் தேடிக் கொண்டிருப்பார்கள்.” என்றான்.
“முடியாது. நீங்களும் உடந்தையா என்பதை நாங்கள் தெரிந்தாக வேண்டும்.” என்றார் போலீஸ் அதிகாரி.
உடனடியாக ராஜசேகர் உயரதிகாரியிடம் தொடர்பு கொண்டு பேச முயற்சிக்க, சுகுணாவிடமிருந்து செல்போன் அழைப்பு வந்தது.
“என்ன அத்தான், இன்று ஊருக்கு வருகிறீர்களல்லவா?” என்று கேட்டாள்.
“இங்கு சிறிய குழப்பத்தில் மாட்டிக் கொண்டேன். துபாய் ஏர்போர்ட்டில் நிற்கிறேன். தீபாவளிக்குள் வந்து விடுவேனா என்று தெரியவில்லை.”? என்ற கணேசன் அருகில் வந்த ராஜசேகரைப் பார்த்து போனில் “சுகுணா ஒரு நிமிடம்” என்று சொல்லி விட்டு “என்ன ராஜசேகர், உங்கள் போலீஸ் அதிகாரிகள் என்னை ஊருக்குப் போக விடுவார்களா, மாட்டார்களா?” என்று கேட்டான்.
“நீ போகலாம். விமானம் உனக்காக காத்திருக்கிறது. தாமதிக்காமல் செல்…” என்றார் ராஜைசேகர்.
“ஏய் சுகுணா, நான் இன்று ஊர் வருகிறேன்” என்றான் மகிழ்ச்சியாக போனில்.
“ரொம்ப சந்தோசம் அத்தான்” என்றாள் எதிர்முனையில்.
போனைத் துண்டித்து விட்டு “ரொம்ப நன்றி ராஜசேகர். உன் உதவியை என்றும் மறக்க மாட்டேன். தீபாவளி வாழ்த்துகள்” என்று சொல்லி ராஜசேகரிடம் கைகுலுக்கி விட்டு மதுரை விமானத்திற்கு கிளம்பினான் கணேசன்.