மறுபிறவி வேண்டுமா?
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 18, 2024
பார்வையிட்டோர்: 1,339
என்னடா வாழ்க்கை இது? ஏன் எனக்கு மட்டும் இவ்ளோ கஷ்டம், இந்த சமுதாயத்திலும் என் வீட்டிலும் ஏன் நான் அடைக்கப்பட்டுகேன்? இந்த வாழ்க்கை ரொம்ப கொடுமையா இருக்கே! சுத்தி எங்கேயுமே பாதுகாப்பு இல்ல, இது வாழ தகுதியற்ற வாழ்க்கை, இப்படி என் யோசனைகள் அனைத்தும் என் மூளையை பிசக்கி, என் கால்களை கட்டிப்போட்டு என்னை அறியாமலேயே என் வீட்டை நோக்கி நடைபோடத் தொடங்கியது. ”ஆ… ஆ… என்னடா இது.. வலிதாங்க முடியலையே… அட கல்லா..” என்று கல்லை எட்டி தூரம் உதைத்துவிட்டு தலையை நிமிர்த்தி பார்க்கும்போதுதான் உணர்ந்தேன் இவ்வளதூரமாக ரயில் வண்டியை விட வேகமாக நடந்து வந்துவிட்டதை.
என் முன்புறம் அதே மர்ம சுவர். மறுபடியும் எனக்குள்ளே பல கேள்விகள் பரதம் ஆடத்தொடங்கியது. ”அப்படி அந்த சுவருக்கு அந்தப்பக்கம் புதையலா இருக்கு? ஏன் அந்த பக்கம் என்னைய போக விடவே மாட்றாங்க. அதபத்தி தெரிஞ்சிக்கணும்னு நெனச்சாலும் அவ்ளோ குற்றம்னு சொல்லாம சொல்றாங்க. சரி என்னதான் செய்வது என்று என்னை நானே கடிந்துகொண்டு என்னுடைய மூளையை செருப்பை கழற்றுவதுபோல் வீட்டின் வாசலிலையே கழட்டி வைத்துவிட்டு என் முன் இருந்த ஒரு கதவை கடுமையாக தட்டினேன். குழி விழுந்த கண்கள், நரைத்துப்போன முடியுடனும் ஒரு உயரமான மெலிதான உடலுடன் ஒரு பெண்மணி கதவை திறந்து என்னை வரவேற்கிறார். என் அன்பு தாய் சுப்பு தான் அது. சுப்புலெச்சுமி என்பவளை சுப்பு என்று செல்லமாக நான் நக்கல் செய்வது வழக்கம். ”அம்மா இந்தாங்க நீங்கள் கேட்ட உணவுகளைகளை கொடுவந்துள்ளேன்” என்றேன். ”நீ சாப்டியா? வா சேர்ந்து சாப்பிடுவோம்” என்றார். அவர் எப்போதும் இப்படித்தான், இருபத்து நான்கு மணி நேரமும் எங்களை பற்றிய சிந்தனைதான்
அப்பாவின் இறப்புக்கு பின் அயன் லேடியாக தனித்து நின்று என்னையும் என் தம்பியையும் வளர்த்தார். நான் பெண்ணாக பிறந்துவிட்டேன் அல்லவா? வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டுதான் இருக்கவேண்டும். உன்னை கரை சேர்க்க வேண்டும் என்று அடிகடி புலம்பல் போடுவார். அவரை கட்டியணைத்து ”சரி சுப்பு” என்று அவரின் வாயை அடைபதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிடும்.
இரவு உணவை அம்மா எனக்கும் தம்பிக்கும் மாறி மாறி ஊட்டிவிட்ட பின்னரே எஞ்சிருந்தவற்றை வாயில் போட்டார். ஒரு பருக்கை கூட இருந்திருக்காது. அம்மா நீங்க சாப்பிடவில்லையா என்று தம்பி கேட்க நீங்க சாபிட்டதே எனக்கு வயிறு நிரஞ்சிருச்சு தங்கம் என்று புன்முறுவல் விட்டு காலில் சக்கரத்தை சுழற்றிக்கொண்டு வேலையை தொடங்கினார். சாப்பிட்டவுடன் எனக்கு வயிறு கும்மென்று இருந்தது. படுக்கையறையை நோக்கி நடையைக் கட்டினேன். அம்மாவும் தம்பியும் எனக்கருகில் சாய்ந்து படுத்தனர்.
நான் விட்டத்தை நோக்கி என் கண்களை மூடினேன். நல்ல நித்திரையில் பயணம் செய்துக்கொண்டிருந்தேன். ஏதோ ஒரு பயங்கரமான சத்தம். திடுக்கிட்டு எழுந்தேன். தம்பி பயத்தில் அழ தொடங்கினான். அம்மாவோ ஒன்றும் இல்லை ஏதோ பட்டாசு சத்தம் என்று தம்பியை செல்லமாக தட்டிக்கொடுதார். எனக்கு அம்மாவின் முகத்தில் ஒரு பதற்றம் தெரிந்தது. நானும் கண்களை மூடுவதைப்போல மூடிவிட்டு ஓரகண்ணால் என் பார்வையை அம்மாவின் மீது எய்தினேன். அம்மா அந்த மர்ம சுவரையே உற்று நோக்கினார். என் மனம் தான் பொல்லாது ஆயிற்றே. உடனே எனக்குள் ஒரு மனகணக்கை போட ஆரம்பித்தேன். என்ன நடந்தது என்று அறியவில்லை. கோழி கூவிகொண்டிருந்தது. சூரியனோ கண்களை சுட்டெரித்துகொண்டு இருந்தான். அட தூங்கியதும் தெரியவில்லை விடிந்ததும் தெரியவில்லை.
எழும்பவில்லை என்றால் அம்மா ராகம் பாட ஆரம்பித்து விடுவார். சட்டென்று எழும்பி என் காலை கடன்களை முடித்து விட்டு மரங்களை சுற்றி தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் நேற்று நடந்தது ஞாபகத்திற்கு வந்தது. அம்மாவின் பதற்றதிற்கான காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் என்னை காந்தத்தைப்போல் சுவரின் அருகே ஈர்த்துசென்றது. முதலில் அம்மா எங்கே இருக்கிறார் என்று வேவு பார்த்து விட்டு வந்தேன். நல்லவேளை அம்மா வீட்டில் இல்லை. அந்தி சாயும் நேரத்தில் வருவார் என்று தம்பி கூறினான். மனதிற்கு நிம்மதியாக இருந்தது. ஆனால் அம்மா வருவதற்குள் சுவற்றிற்கு ஆங்கே என்ன இருக்கிறது என்று பார்க்கவேண்டும். ஆகவே தம்பியைதான் காவலாளியாக நிக்க வைக்க முடியும் என்று என்னுடைய மனம் ஒரு முடிச்சு போட்டது. சன்மானம் கொடுத்தால்தான் இதற்கு ஒப்புகொள்வேன் என்று அவன் யோசிப்பது அவன் கண்களின் கருவிழியால் என்னை ஊசியை குத்தும் பார்வையால் குத்தியதை வைத்து அறிந்துகொண்டேன்.
அவனுக்கு பிடித்தகோழி இறைச்சியை அவனுக்கு கொடுத்து என் வழிக்கு கொண்டு வந்தேன். முதலில் சுவற்றைச் சுற்றி செல்லும் வழியை தேடினேன். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஒரு பலகை சுவரில் சாய்ந்தவாக்கில் இருந்தது. உயரமாக இருந்தாலும் ஏற்றிவிடலாம் என்ற ஒரு நம்பிக்கை. கொஞ்சம் கொஞ்சமாக என் பலங்களைக் கொண்டு ஏற ஆரம்பித்தேன். முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. மறுபடியும் ஏறும் முயற்சியை தொடங்கினேன்.
ஏறினேன் ஏறினேன் பலகையின் உச்சியை அடைந்தேன். ஏதோ ஒன்றை சாதித்ததுப் போல் அவ்வளவு மகிழ்ச்சி. ஏறி முடிப்பதற்குள் தடியன் இறைச்சியை ஒரு கை பார்த்துவிட்டான். மீண்டும் வேண்டும் என்றும் அடம். இதோ வருகிறேன் என்று சொல்லி முடிபதற்குள் என் கால்கள் தடுக்கி சுவருக்கு அந்த பக்கம் விழுந்தேன். அம்மா என்றுக் கத்தி கூச்சலிட்டேன். என் வலது கையில் சற்று அதிகமாகதான் காயம். நான் மீண்டும் சுவரை ஏற முயற்சித்தேன் என்னால் முடியவே இல்லை. தடியன் இந்நேரம் ஒப்பாரியைத் தொடங்கியிருப்பான். செய்வதறியாது முட்டி போட்டு அமர்ந்தேன்.
எனக்கு முன்னே ஓர் அழகியப்பட்டணம். இவ்வளவு நாள் இப்படிப்பட்ட அழகையா என்னிடம் இருந்து மறைத்து வைத்திருந்தனர். இங்கே எவ்ளோ வசதி எல்லாம் இருக்கு என்று அண்ணாந்துப் பார்த்தபடி அப்பட்டணத்தின் ஒவ்வொரு இடத்தையும் ஆராய ஆரம்பித்தேன். ஆனால் நான் குடியிருந்த இடத்தை விட அமைதியான சூழ்நிலையே இங்கு இல்லை .
அனைவரும் காலில் சுடுதண்ணியை ஊற்றியதுபோல் இங்கும் அங்கும் ஓடிகொண்டே இருந்தனர். அப்படி என்ன அவசரம் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். வசதிகள் கொட்டி கூவியிருந்தாலும் இங்கே ஒருவருக்கொருவர் பேசி கொள்ளவே நேரம் இல்லை என்பதை உணர்ந்துகொண்டேன். என் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. ”ஏன்மா நீ எந்த ஊரு இங்கே என்னமா செய்றே, இது பயங்கரமான இடம் தெரிஞ்சிதான் இங்க வந்தியா”என்று தோல்கள் எல்லாம் சுருங்கி பற்கள் கொஞ்சம் கொட்டி போன நிலையில் ஒரு முதியவர், என்னை அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டார்.
என் அப்பா இருந்திருந்தால் அவர் வயதுதான் இருக்கும்போலும். பல நாட்கள் உணவு இல்லாதது போல் மிகவும் மெலிந்துக் காணப்பட்டார். ”இல்லைங்க” என்று நடந்தவற்றைக் கூறினேன். அவரும் புரிந்ததுப்போல் லேசாக தலையை ஆட்டிவிட்டு. ”சரிமா பயப்படாதே நானும் உனக்கு அப்பா மாதிரி தான்”என்று கூறிய வார்த்தைகள் மனதிற்கு கொஞ்சம் தைரியத்தை மூட்டியது. என்னுடைய பசியை அறிந்திருப்பார் போலும் அவர் வைத்திருந்த உணவை எனக்கு கொடுத்தார். வேண்டாம் என்று சொல்லவும் மனமில்லை. காரணம் பசியை வயிற்றை பிளந்து கொண்டிருந்தது. “நன்றிங்க”என்று சொல்லிட்டு சற்றென்று உணவை வாயில் போட்டு மென்றேன். அவரை பார்க்க சற்று பயமாக இருந்தாலும் நம்பிகையனவராக இருந்தார். என் கைகளுக்கு மருந்தை போட்டு விட்டு, பிறகு பேச தொடங்கினார். “தனியாதான் வந்தியா?” என்றார். ”ஆமாம்” என்று கூறிவிட்டு இவர் ஏன் தனியா வந்திருகியானு கேக்குறாரு என்று என் பயத்தை வெளியே காட்டிகொள்ளாமல், “ஐயா! இங்கே பயப்பட அப்படி ஒன்றும் இல்லையே! பிறகு ஏன் என் அம்மா கூறியதுபோல் நீங்களும் என்னிடம் அதையே சொல்ரீங்க” என்றேன்.
அப்பொழுது அவர் கண்களை ஈரமாக்கியவாரு அவரின் கதையை கூற தொடங்கினார். பல வருடங்களுக்குப் முன் அவரும் அவர் குடும்பத்தாரும் இங்கு தான் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அவருக்கு ஒரு மனைவி இரண்டு பிள்ளைகள் என்றார். அப்போ எல்லாம் எங்க போய்ட்டாங்க, நீங்க ஏன் இப்படி மெலிந்து இருக்கீங்க என்றேன். அவரும், “எல்லாம் இருந்தாங்க. பார்க்க தான் இந்த இடம் சொர்க்கம்மாறி இருக்குமா!ஆனா இது நரக பூமி நம்ப மாறி ஆளுக்கு எல்லாம், என்னுடைய மனைவி குட்டி எல்லாம் கொல்லபட்டுட்டாங்க, அநியாயமா” என்றார். எனக்கு திடுகேன்று வாரிபோட்டது. பிறகு என்னோட சுப்பு ரொம்ப நல்லவள். அவளும் என் தங்கமான இரண்டு குழந்தைகளும் எனக்கு இரு கண்களாக இருந்தனர். இப்போ அவங்க இல்லாம என் வாழ்க்கை இருண்டுப்போச்சுனு சொன்னார். அவர் அவரின் மனைவியை பற்றி கூறிய அனைத்தும் என் அம்மா சுப்புவை போலவே இருந்தது. அவரின் பெயரை வினவினேன். சிவா என்றார். மேலும் அவர் கூற கூற, அவரின் கைகளை பற்றிக்கொண்டு அப்பா என்று அழைத்தேன். அவர் என்னை ஆச்சர்யமாக பார்த்தார். ”அப்போ என் அப்பா சாகல. என் அப்பா சாகல” என்று கத்தினேன். அப்பொழுது என்னமா சொல்ற என்றார். அவரிடம் சுப்புன்னு சொல்றிங்கள அவங்கே தலையில் வலது புறத்தில் ஏதேனும் அடையாளம் இருக்குமா என்று கேட்க, அவர் ஆமாமா அவரின் கையில் கருப்பு நிறத்தில் பெரிய மச்சம் போல் இருக்கும்.
“சரி, உனக்கு எப்படி தெரியும் நீ யார், உனக்கு என் சுப்புவை தெரியுமா?” என்று கண்ணீர் வடித்தார். இவர்தான் என் அப்பா என்பதை உறுதிச் செய்து கொண்டேன். ”அப்பா சுப்பு தான் என் அம்மா. நான் உங்க மகள் தான் அப்பா” என்று அவரை கட்டியணைத்தேன். எங்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என் அப்பா என்னை கட்டி தழுவினார். அப்பாவிடம், “அம்மா நீங்க இறந்து போய்விட்டதாக நினைச்சிட்டு இருக்காங்க. நீங்க வாங்க பா நம்ப வீட்டுக்கு போலாம்” என்று அளவில்லா மகிழ்ச்சியில் அழைத்தேன். “சரி மா வா போலாம்” என்று அளவில்லா மகிழ்ச்சியில் அவர் முகம் நிறைந்திருந்தது. மா என்று எதோ கேட்டு முடிபதற்குள் அதே பயங்கர சத்தம். “அப்பா இது என்ன சத்தம்” என்றுக்கேட்டேன். பதில் வரவே இல்லை. திரும்பிப் பார்கும்போது அப்பா மயங்கி கிழே விழுகிறார். அப்பா என்று அவர் கையை இறுக்கிப் பிடிக்கிறேன். “இங்கே இருக்காத மா, திரும்பி எப்படியாச்சும் உன் அம்மாவிடமே போயிரு” என்றார். “அவனுங்க வந்துட்டானுங்க. உன்னையும் கொன்றுவானுங்க! போ போ” என்று பெரும் மூச்சை விட்டார்.
அவர் உயிர் கொஞ்ச கொஞ்சமாக பரிதாபமாக பிரிந்தது. என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை. அப்பாவை பார்த்ததை நினைத்து மகிழ்ச்சியடைவதா இல்லை அம்மா சொல்லியும் இங்கே வந்ததை நினைத்து வருந்துவதா என்று புரியவே இல்லை. அப்பாவுடன் இருக்க வெறும் 1 மணி நேரமே கடவுள் எழுதி வைத்திருக்கிறானா என்று கதறி அழுதேன். அப்பாவின் கன்னத்தில் முத்தம் இட்டு விட்டு அவ்விடத்தை விட்டு சற்றும் தூரம் ஓடினேன். அந்த சத்தம் தொடர்ந்து வந்தது. மேலும் மூச்சு திணற ஓடினேன். என் மண்டை முழுவதும்.. அம்மாவிடம் சென்றுவிட வேண்டும், அப்பாவை பார்த்ததை கூற வேண்டும் என்பது மட்டும்தான்.
அப்பொழுது ஓடும் வழியில் ஒரு பெண் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். அவளுக்கு உதவ வேண்டும் என்று அவளை நோக்கி ஓடினேன்…அவளை சுற்றியும் அவ்வளவு ரத்தம். அவர் முகம் அந்த பக்கமாக இருந்தது. “அம்மா யார் நீங்கள்?” என்று கேட்கவே அவள் முகத்தை பார்த்தேன். ”ஐயோ இறைவா என்ன பாவம் இழைத்தேன், ஏன் இந்த கொடுமை. என் அம்மா எப்படி இங்க வந்தார்”.” என்று என் நெஞ்சிலே அடித்துக்கொண்டு கதறினேன், ”செல்லம் போயிருமா” என்று அவளும் என்னை பார்த்து கூறிவிட்டு உயிரை விட்டார். என்னை தேடி தான் அம்மா வந்திருக்கிறார். என்னால்தான் எல்லாம். என்ன செய்வதென்றே தெரியவில்லை.அப்பாவை பற்றி கடைசிவரை அவளுக்கு நான் கூறவே இல்லையே. ஏன் இந்த கொடுமை என்று என்னை நானே கேட்டுகொண்டிருந்தேன்..அம்மா அப்பாவை இப்படியே விட்டு எப்படி செல்வேன். அம்மா சூலிய இதுவரை நான் கேட்டதே இல்லை, இதையாவது கேட்போம். எப்படியாவது இந்த சுவரை தாண்டி விடவேண்டும்..யார் இதை செய்வது என்று கோபத்தில் எழுந்தேன். அந்த தோட்டா என்னையும் பதம்பார்த்தது. உயிர் பிரியும் வலி தாங்கவே முடியவில்லை. இன்னும் என்னுடைய பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கவே இல்லை.
அந்த அசூர மனிதர்களை பார்த்தபின்பு உணர்ந்து கொண்டேன். என்னையும் என் இனத்தையும் பிடித்து சுட்டு கொள்ள துடிக்கும் வேட்டையர்கள் என்று. இந்த பிறவியில் தெருக்களை சுற்றி உணவுகளை தேடி வாலை ஆட்டிகொண்டு உணவுக்கு திண்டாடும் எங்களை போன்றவர்களை கொல்வதில் அப்படி என்ன சந்தோசம். சிலர் தூக்கி எரியும் உணவுகளை பொருக்கி தின்றுவிட்டு வாலை ஆட்டி நன்றி கூறிவிட்டு மூளை முடுக்கில் தானே கிடக்கிறோம்.
இந்த ரூபத்தில் பிறந்தது தவறா? அதற்கு வேட்டையாடி எங்களை போன்றவர்களை கொள்வது இந்த மனித ஜென்மத்திற்கு அவ்வளவு நிம்மதியா? அவர்களுக்கும் பிள்ளை குட்டி எல்லாம் இருக்கும்தானே? நாங்கள் எங்கள் இனத்தோடு கிடைப்பதை தின்றுவிட்டு இருப்பது யாருக்கும் பொறுக்கவில்லையா. நாங்கள் யாருக்கும் தீங்கு இழைக்காத போது இந்த மனிதர்களுக்கு மட்டும் ஏன் எங்களையும் எங்கள் இனத்தையும் சுட்டு கொள்வதில் அவ்வளவு மகிழ்ச்சி? உயிர் கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து கொண்டு இருக்கிறது. கடவுள் வந்து மறு பிறவி வேண்டுமா என்றால் இப்படி பட்ட கொடுமையான வாழ்க்கை வேண்டாம் என்பேன். உயிர் பிரிய போகிறது. இதோ கடவுளை நோக்கி என் பயணம் தொடர்கிறது…