மறதி




கோலாலம்பூர் வீதிகளில் அலைய வேண்டியிருக்கும் என்று சவுமியா நினைத்துப் பார்த்ததில்லை பத்து வருடங்களுக்கு முன்பு.
மலேசியக்காரர் ஒருத்தர் பொண்ணு கேட்கிறார் என்று அவளின் காதுகளில் விழுந்த போது பரவசமாய் இருந்தது. சிங்கப்பூருக்கு உள்ளூரில் இருந்து இரண்டு பெண்கள் வாழ்க்கைப் பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களும் தூரத்து வீதியைச் சார்ந்தவர்கள். நேரிடையாகப் பழக்கமில்லை. மலேசியா அதற்குப் பக்கம் என்று சொல்லிக் கொண்டார்கள்.
பூமிப்பந்தின் சிறு பகுதிக்கு அவள் அரசகுமாரி ஆவது போல் கனவுக்குள் மிதந்தாள். மலேசியக்காரர் இரண்டு மூன்று இடங்களில் கேட்டுப் பார்த்திருக்கிறார் என்றத் தகவலும் வந்தது.
“அவ்வளவு தூரம் எதுக்குப் பொண்ணெக் குடுத்துட்டு” என்பது அவர்கள் வீட்டு வாதமாக இருந்தது.
சவுமியாவின் அப்பா தளர்ந்து போயிருந்தார் நெசவு குன்றிப் போய்விட்டது. பம்பர் கோராவுக்கு போனவர்கள் பிழைத்துக் கொண்டார்கள். கால் பலமில்லாமல் போனது போல் அலுத்துக் கொண்டார்”.
அம்மா இல்லாத பொண்ணு யாராச்சும் நல்லா வெச்சிருந்தா செரி” என்பதுதான் அவர் வாதமாக இருந்தது.
“பெரிய பையா.. யார் என்னன்னு வெசாரிச்சுப் பாரு. உனக்கு சரின்னு பட்டா சொல்லு அவ்வளவுதா எனக்கும் செரி.தூரம் குடுக்கறதுங்கறது நம்ம தலைமுறைக்குப் புதுசு. ”
“என்னமோ அவங்க பூர்வீகம் இந்தப்பக்கமுன்னு, வேர்வுட்டுப் போயிடக் கூடாதுன்னு கேக்கறதா சொல்லிக்கறாங்க. மனசுல செரின்னு பட்டா செஞ்சர்லாம். ” அவள் அப்பா பெரும் பாரம் தன்னை விட்டு விலகுவதாகவே நினைத்தார். அவர்களே கல்யாணச் செலவுக்கும் பணம் தருவதாய் சொன்னார்கள். மாப்பிள்ளையைப் பார்த்து விட்டுத்தான் சொல்வதாகச் சொன்னபின் அவ்வை மகனுடன் கோலாலம்பூரிலிருந்து வந்து சவுமியாவைப் பார்த்தார்கள். பேச்சு முடிந்து பத்து நாள் இடைவெளியில் திருமணம் நடந்தது.
கார்த்தி ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு ஊருக்கு கிளம்பிய போதுதான் பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“துபாய்காரன் பொழப்பு மாதிரி ஆயிடுச்சே… ”
“அது மாதிரியெல்லா இல்லீங்க. போயி ஏற்பாடு பண்றன். ”
பாஸ்போர்ட் பெறுவதற்கே சவுமியா முன்பு அலைய வேண்டியிருந்தது. வெளிநாட்டு மாப்பிள்ளை என்று முன்னர் ஒருவர் வந்தபோது அவர்களே பணம் கொடுத்து எடுக்கச் சொல்லியிருந்தார்கள். பாஸ்போர்ட் செலவுக்கு கார்த்தி கொடுத்திருந்தான். பாஸ்போர்ட்டு ரினியூவல் என்று அலையும் போது “பொண்ணுக்கு கல்யாணமாயிடுச்சுங்க பொண்ண சீக்கிரம் அனுப்பனும் உதவி பண்ணுங்கய்யா. ” என்று பாஸ்போர்ட் அலுவலகம் முதல் காவல் நிலையம் வரை கைகூப்பியே கேட்பார் அவள் அப்பா.
திருமணத்தை பதிவு செய்துவிட்டுதான் கார்த்தி கிளம்பிப் போயிருந்தான். ”இனி விசா கிடைத்தால் போதும்” என்றும் சொல்லியிருந்தான்.
ஆனால் அது அவ்வளவு சுலபமாக நடக்கவில்லை அவள் கர்ப்பம், பிரசவம் என்று அலைந்தபோது கார்த்தி வந்திருந்து உதவி செய்தான்.
“எல்லாம் நல்லதுக்குத்தான்னு இரும்மா.. ” என்று இரண்டாம் முறை வந்திருந்த அத்தை அவ்வை சொன்னாள் குழந்தையை பார்த்து விட்டு அவர்கள் கிளம்பிப் போன பின் சவுமியாவை இருட்டு சூழ்ந்து கொண்டது.
அவர்கள் வருவதும் போவதுமாகத்தான் வாழ்க்கை ஓடுமா .. துபாய்க்கு போனவர்களின் வாழ்க்கை பற்றி இப்படி சொல்வார்கள். மலேசியா சிக்கல் இல்லை என்பார்கள். இதுவும் சிக்கலாகி விட்டதே என்று நொந்து கிடந்தபோது குழந்தைக்கு நான்கு மாதங்கள் முடிந்திருந்தது.
கோலாலம்பூர் அவளுக்கு வசீகரமாகத்தான் தெரிந்தது. கார்த்தி வேலை செய்து வந்த பயர் அண்ட் சேப்ட்டி நிறுவனம் அவனை நிரந்தரமாக்காமல் வைத்திருப்பது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது மிகவும் கவலைப் பட்டாள்.
ஒரு நாள் கார்த்தி குடித்துவிட்டு வந்த போது அதிர்ச்சியடைந்தாள். “சோகந்தா.. இன்னம் நெரந்தரம் ஆகலேன்னு சோகம்தா… நீ இதெ நெனைச்சு கவலைப்படறன்னு சோகந்தா.. ”
“நெரந்தரமாகாதா… ”
“என்ன பெரிசா படிச்சேன். ஆப்கே கடையில திரியற நாலஞ்சு பேரோட சேந்து திரிஞ்சு இப்பிடியாயிட்டான். நீ பெரிசா படிச்சிருந்தா கூட இங்க பிரயோஜனம் ஆகும். ”
“என் ஒன்பதாவது படிப்பு என்ன பிரயோஜனம் ஆகும் ”
“ஆகும்மா… ஆனா கைக்குழந்தை இருக்கே“ என்றாள் அவ்வை தோட்டக் காட்டிலிருந்து கோலாலம்பூருக்கு வந்து தோட்டக்காட்டில் மிச்சம் வைத்த பணத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தகரக் கொட்டாயில் உட்கார்ந்ததில் இருக்க ஓர் இடம் கிடைத்தது அவளுக்கு.மற்றபடி மகனின் சம்பாத்தியத்தையே நம்பியிருந்தாள்.
வீதிகளின் சுத்தத்தையும், பிரமாண்டமானக் கட்டிடங்களின் கவர்ச்சிகளில் சவுமியா சொந்த ஊரை மறந்திருந்தாள்..
சொந்த ஊரை மறப்பது போல் பலதை சுலபமாக மறந்து விட முடியுமா என்பதை நினைத்துப் பார்த்தாள் அவள்.