மரண விதிகள்




மிகப் பிரம்மாண்டமான டைட்டானிக் கப்பல் தனது முதல் கடல் பயணத்தை இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டனிலிருந்து நியூயார்க் நோக்கிய நெடும் பயணத்தை மேற்கொண்டது.
ஆனால் துரதிருஷ்டவசமாக 1912 ம் ஆண்டு ஏப்ரல் 14-15 தேதிகளில் அந்தக் கப்பல் கடலில் மூழ்கியது.
1500 பயணிகள் கடலில் மூழ்கி இறந்தனர். இந்த விபத்தை மையமாக வைத்து ஏராளமான திரைப்படங்கள் இதுவரை வந்துவிட்டன.
இந்தக் கப்பல் எதனால் மூழ்கியது என்கிற நீண்ட நெடும் சர்ச்சையும், ஆராய்ச்சியும் இன்றளவும் தொடர்கிறது.
ஆனால் அந்தக் கப்பல் விபத்தில் சிக்காமல் பிழைத்த ஒரு குடும்பம் பற்றிய உண்மைக் கதை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
ஸ்காட்லாந்தில் வசித்து வந்த க்ளார்க் குடும்பத்திற்கு ஒரே ஒரு கனவுதான்! க்ளார்க்கும் அவரின் மனைவியும் தங்கள் ஒன்பது குழந்தைகளுடன் (அந்தக் காலத்தில் ஒன்பது குழந்தைகள் என்பது மிக சகஜம்) அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட வேண்டும் என்று நினைத்தனர். அவர்களின் ஒரே கனவு அமெரிக்கா, அமெரிக்காதான்.
கப்பல் பயணத்திற்காக ஆகப்போகும் செலவிற்காக வெகு சிரமப்பட்டு பணத்தை சேமிக்க ஆரம்பித்தனர்.
வருடங்கள் சில ஓடின…
தேவையான பணமும் ஒரு வழியாகச் சேர்ந்தது. பாஸ்போர்ட் ரெடி. அமெரிக்கா செல்லும் கப்பலில் குடும்பத்தினர் அனைவருக்கும் டிக்கெட் ரிஸர்வும் செய்தாகிவிட்டது. ..
குடும்பத்தினருக்கு உற்சாகம் கரை புரண்டது. எப்போது கப்பலில் ஏறப் போகிறோம் என்கிற பரபரப்புடன் அவர்கள் காத்திருந்தனர்.
புதிய நாடு; புதிய இடம்; புதிய வாழ்க்கை; அதுவும் தனி மனித சுதந்திரத்தை போற்றிப் பாதுகாக்கும் அமெரிக்கா என்று ஏகப்பட்ட கனவுகள் அவர்களை ஆட்கொண்டன.
கப்பல் கிளம்ப இன்னமும் எட்டு தினங்கள் மட்டுமே இருந்தன.
அப்போது க்ளார்க் குடும்பத்தில் ஒரு அசாதாரணமான சம்பவம் ஒன்று நிகழ்ந்து விட்டது. ஆம். மிகவும் துரதிருஷ்டவசமாக க்ளார்க்கின் ஒரு மகனை நாய் ஒன்று கடித்து விட்டது. க்ளார்க் பதறியபடி மகனை டாக்டரிடம் தூக்கிச் சென்றார்.
டாக்டர் நாய்க் கடிக்கு தொப்பிளைச் சுற்றி நிறைய ஊசிகள் போட்டார். தவிர கடித்த தொடைப் பகுதியில் ஒரு சிறிய ஆபரேஷன் செய்தார். அத்துடன் க்ளார்க் வீட்டின் வாசலில் ஒரு மஞ்சள் அட்டையையும் தொங்க விட்டார். ‘இது நாய் கடித்த மனிதர் உள்ள வீடு, மிகவும் ஜாக்கிரதை’ என்று அதற்கு அந்த நாட்டில் அர்த்தம்.
யாருக்கும் ரேபிஸ் நோய் வந்துவிடக்கூடாது என்று குடும்பத்தினருக்கு பதினான்கு நாட்கள் தனிமைப் படுத்திக் கொள்ளுதலை அதாவது க்வாரண்டனை டாக்டர் அறிவித்தார்.
இதனால் க்ளார்க் குடும்பத்தினரின் கனவு பொடிப் பொடியாக நொறுங்கிப் போனது.
எவ்வளவு வருடங்கள் காத்திருந்தனர். ஒரு கணத்தில் அனைத்தும் கலைந்து போனது. க்ளார்க் ஏமாற்றத்தால் மிகவும் மனமுடைந்து போனார். தன் இளைய குழந்தையின் மீது அடங்காத கோபம் கொண்டார். கப்பல் கிளம்பும் நாளன்று அது கிளம்புவதைப் பார்க்க க்ளார்க் துறைமுகம் சென்றார். என்ன ஒரு ஆர்ப்பாட்டம்? ஆர்ப்பரிப்பு?
கப்பல் கிளம்பியது. அங்கேயே க்ளார்க் ஏக்கத்துடன கண்ணீர் சிந்தினார். தன் மகனைச் சபித்தார்; இறைவனிடம் முறையிட்டு நொந்து போனார்.
ஐந்து நாட்கள் கழிந்தன…
திடீரென்று ரேடியோவில் ஒரு ப்ரேக்கிங் நியூஸ். அமெரிக்காவிற்குப் பயணப்பட்ட பிரம்மாண்டமான அந்தக் கப்பல் கடலில் மூழ்கியது என்று அந்தச் செய்தி சொன்னது. பரபரப்புச் செய்தி!
அந்த விபத்தில் ஆயிரத்துக்கும் மேலானோர் மூழ்கி மாண்டனர் என்ற அந்தச் சோகச் செய்தி பரவி நாடே பரபரத்தது. அந்தக் கப்பலின் பெயர் ‘டைட்டானிக்!’. அந்தக் கப்பலில்தான் அமெரிக்கா செல்ல க்ளார்க் தன் குடும்பத்தினர் அனவருக்கும் ரிஸர்வ் செய்திருந்தார். அவருக்கு எப்படி இருக்கும்?
தன் சின்னப் பையனுக்கு நாய் கடித்ததால் அவர் ஸ்காட்லாந்து நகரத்திலேயே இருக்க வேண்டி வந்தது.
கண்களில் நீர் பொங்க க்ளார்க் ஓடோடி வந்து தன் குழந்தையை அள்ளி அணைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டார். அவர்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயம் ஆரம்பித்தது போல குடும்பத்தினர் அனைவருமே மகிழ்ந்தனர்.
ஒருமுறை நம் பாரதப் பிரதமர் ஒருவர் ஒரு சிறிய விமானத்தில் மூன்று விமானிகளுடன் உத்திரப் பிரதேசம் வழியாக பயணித்தார். திடீரென விமானம் பழுதாகிவிட்டது. விமானத்தின் இரண்டு இஞ்சின்களுமே இயங்கவில்லை.
அந்த விமானம் வயக்காட்டின் நடுவே விழுந்து நொறுங்கியது. மூன்று விமானிகளுமே அந்த இடத்திலேயே மரணமடைந்தனர். நம் பிரதமர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து, சிரமத்துடன் எழுந்து நின்று வயக்காட்டில் நடக்க ஆரம்பித்தார்.
விபத்தின் கோரத்தில் பிரதமருடைய சட்டைகள் பிய்ந்து கசங்கி; போட்டிருந்த தொப்பியும் எங்கோ பறந்துவிட்டது.
மெதுவாக நடந்துசென்று அருகிலுள்ள ஒரு கிராமத்தை அடைந்து அங்கிருந்த போலீஸ் ஸ்டேஷன்[SK1] சென்று, தன்னை ‘பாரதப் பிரதமர்’ என்று அறிமுகப் படுத்திக் கொண்டார்.
“யோவ், எந்த ஊருய்யா ஒனக்கு? இருக்கிற வேலையில இந்த ஆளு ஒருத்தன்… பைத்தியம் போலிருக்கு, இடத்தைக் காலி பண்ணு…”
“ஐயா, ஒரே ஒரு போன் மட்டும் பண்ணிக்கொள்ள அனுமதி மட்டும் கொடுங்கள்… அது போதும்.”
“சரி சரி, ஒழி…”
பிரதமர் டெல்லிக்கு போன் செய்து நிலைமையை விளக்கிச்சொல்ல. அடுத்த இரண்டு நிமிடங்களில் யு.பி போலீஸ் ஐ.ஜி அலறியடித்தபடி லோக்கல் போலீஸுக்கு ஆர்டர் போட, ஒரு பெரிய போலீஸ் படையே அங்கு குவிந்தது. பிரதமரை பாதுகாப்புடன் லக்னோ அழைத்துச்சென்று அங்கிருந்து அவரை டெல்லிக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
அந்தப் பிரதமரின் பெயர் மொரார்ஜி தேசாய். (1977-1979).
அதேபோல ‘படையப்பா’ படத்தின் ஹீரோயின் செளந்தர்யா உப்பு பெறாத விஷயத்திற்காக பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டர் பயணம் மேற்கொண்டார். பெங்களூரை அந்த ஹெலிகாப்டர் தாண்டும் முன்னேயே கீழே விழுந்து தீப்பிடித்தது. அங்கேயே செளந்தர்யா உடல் கருகி இறந்தார். அவர் அப்போது மூன்று மாத கர்ப்பம் என்பது மிகப்பெரிய சோகம்.
1980 ல் அகமாதாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மானேஜ்மென்ட் ஒரு மானேஜ்மென்ட் ப்ரோக்ராம் நடத்தியது. அதற்கு பூனேவில் உள்ள அட்லாஸ் காப்கோ (Atlas Capco) நிறுவனம் தனது மேனேஜர் ஒருவரை பணம் கட்டி ஸ்பான்சர் செய்தது. அவர் விமானத்தில் அகமதாபாத் கிளம்பும் அன்று திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, அவருக்கு பதிலாக வேறு ஒரு மேனேஜர் அந்த ப்ரோகிராமுக்கு அனுப்பப் பட்டார்.
ஆனால் அன்று அந்த விமானம் பெரிய விபத்துக்குள்ளாகி அனைவரும் இறந்து போயினர். போக வேண்டிய மானேஜர் பிழைத்துக்கொள்ள, அவருக்குப் பதிலாக பயணித்த மானேஜர் இறந்து போனார். ஆள் மாறாட்டத்தால் இன்ஷூரன்ஸ் கூட பாவம் கிடைக்கவில்லை.
நம் அனைவருக்குமே நம்முடைய மரண விதிகள் முற்றிலும் தெரியாதவை. மூப்பினால் மரணித்தால் அது நம்முடைய கொடுப்பினை.
‘மற்றொன்று சூழினும் தான் முந்துறும்’ என்கிற விதி சில சமயம் விபத்தையும் கூட வேண்டத்தக்கதாகி விடுகிறது.