மரணக் கணக்கு…




வசந்த் மிகவும் பொறுப்பாக நடந்து கொள்கிறான் இப்போதெல்லாம்.
இப்போதெல்லாம் என்றால்? என்று யோசிக்காதீர்கள்..
ஆம் அவனது தந்தை கணேசன் உயிரோடு இருக்கும் வரை 65 வயதை தாண்டிய பின்னும்..
அவர்தான் Two wheelers ஐ காலையில் வெளியில் எடுத்து இரவு கேட்டைத் திறந்து உள்ளே விட வேண்டும்.

அப்பா..எல்லா வண்டியும் reserve ஆயிடிச்சி என்று ஓட்டிவிட்டு வந்து நிறுத்தி விடுவான். இரு சக்கர வாகனங்களுக்கும், காருக்கும் பெட்ரோல் போட்டு வைக்க வேண்டும்..
டேய் வசந்த்.. காரை ஒரு நாளாவது wash பண்ணிருக்கியா? அப்பா பாரு..எவ்வளோ க்ளீனா தொடச்சி உள்ளே எல்லாம் vacuum போட்டு வெச்சிருக்காரு என்ற கேட்ட அம்மா ஜானகியை ஒரு நாளும் கண்டு கொண்டதில்லை..
வசந்த்.. நேற்றும் ஆஃபீஸ் பஸ் விட்டுட்டியாமே… அடுத்த மூன்று ஸ்டாப்பிங் தள்ளி போய் அப்பா கொண்டு விட்டாராம்.. ஏண்டா அவர டென்ஷன் பண்ற காலங்காத்தால.. திரும்பி வரும்போது மழையில வண்டி skid ஆகி கால்ல செராய்ப்பு. கொஞ்சம் சீக்கிரம் கெளம்பினா என்னவாம்.. எதற்கும் பதிலே வராது அவனிடம்..
ஆன்லைன்ல கரன்ட் பில் கட்டுடான்னு எத்தனை முறை சொல்றது வசந்த்.. அவருக்கு தெரிஞ்சா பண்ணமாட்டாரா? EB office போய்ட்டு க்யூவில நின்னு கட்டிட்டு வரும்போது மணி 2.. மயக்கம் வராமாதிரி ஆயிடிச்சாம் அப்பாவுக்கு..
பேரனை ஸ்கூல் கூட்டுட்டு போய் கூட்டிட்டு வருவது.. மளிகை, பால், LIC, ரேஷன், காய்கறி, டாக்டர் அது இதுன்னு காலையில எழுந்தா நைட் படுக்கப்போற வரைக்கும் ஒரு நாளைக்கு எத்தனை முறை வெளியில போவாரு பாவம..
நீ கொஞ்சம் லீவு நாளிலாவது அவருக்கு ஹெல்ப் பண்ணக்கூடாதா? என்று கேட்காத நாளில்லை மகனிடம். பதிலே வராது. (வழக்கம் போல)
உலகத்தின் மிகப் பெரிய உண்மை சாகப்போகிறவர் கண்களில் தெரியும் என்பார்கள்.. மருத்துவ மனையில் திறந்த நிலையில் இருந்த அவரது உயிரற்ற கண்கள் இன்னும் ஜானகி முன்னே தெரிகிறது. ஆம் ஒரு நாள் கணேசன் காற்றில் கரைந்தே போனார்..
இப்போது எல்லா வேலைகளும் நேரத்துக்கு தானாக நடக்கிறது..
நாளை அவர் இறந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. ஜானகி அவர் படத்துக்கு முன்பு கண்ணீருடன்.. இந்த வேலை எல்லாவற்றையும் அவர் உயிரோடிருக்கும் போது வசந்த் செய்திருந்தால் இன்னும் கொஞ்ச நாள் உயிரோடு இருந்திருப்பாரோ என்னவோ.. என்று மகனிடம் கேட்க வேண்டும் போல் தோன்றியது.
சித்திரகுப்தனின் கணக்கை மாற்றவா முடியும்.