கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 15, 2026
பார்வையிட்டோர்: 3,403 
 
 

மரகதம் எல்லா பெண்களையும் போலத்தான் தன் கணவன் தன் குழந்தைகள் என்று வீட்டையே சுற்றிச் சுற்றி வருகிறாள். தன் வாழ்க்கையை அதற்குள்ளேயே மையப்படுத்தி மகிழ்ந்து கொள்கிறாள். தன் தனிப்பட்ட விருப்பம் ஆசைகள் அத்தனையையும் திரைபோட்டு மறைந்துக் கொண்டாள்.

ஆனால் சுற்றங்களில் யாரோ ஒருவருக்கு ஏதோ ஒன்று என்றால் சும்மா இருந்து விட மிட்டாள். ஓடிச் சென்று உதவிவிட்டு வருவாள். பிரசவ நேரங்களில் சொந்தமோ நெருக்கமோ சுகப்பிரசவம் ஆகும் வரை அங்கேயே இருந்துவிட்டுதான் வருவாள்.

ஒருநாள் என்றோ வீட்டில் வேலைபார்த்த சவுரியம்மாள் கைக்குழந்தையோடு வருகிறாள். அவள் கேட்காமலேயே அவளுக்காவே எடுத்ததுபோல் இரண்டு பழைய சேலையும், கைக்குழந்தைக்கு ஒரு கவுனும் தேடிப்பிடித்து எடுத்துக் கொடுக்கிறாள். பிறகு காலைப் பார்க்கிறாள். அவள் காலில் செருப்பில்லை. தன் பழைய ஒரு ஜோடி செருப்பைத் தூக்கிக் கொடுக்கிறாள். பிறகு அவள் ஊருக்குப் போக பஸ் சார்ஜையும் கைக்குழந்தைக்கு ஒரு தூக்கில் பாலையும் கொடுத்தனுப்புகிறாள். மரகதத்தின் இரக்கத்திற்கு அளவேயில்லை.

நோட்டுப் போட்டு கோயில் வசூல் என்று நன்கொடைக்கு தெருவழியாக வருபவர்கள் யார் என்றும் நிஜமா பொய்யா என்றும் தெரியாது, உடனே நோட்டில் பெயரை எழுதி ஜம்பது ரூபாய் கொடுத்துவிடுவாள். இப்படி எத்தனையோ ஏமாந்திருக்கிறாள்.

கணவர் ராமநாதன் பலதடவை கண்டித்திருக்கிறார். ஆனாலும் ஏமாந்துபோவது அவள் சுபாவமாக இருந்தது. இவளைப் போல் அனுதாபமும், இரக்கமும் கொண்டவர்கள் தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். புதிது புதிதாய் சேலை எடுத்துக் கொண்டேதான் இருப்பாள். ஆனாலும் அதை அடுக்கி அழகுபார்க்கமாட்டாள். நான்கு தடவைதான் உடுத்தியிருப்பாள் பழசாகுவதற்கு முன்னே அதை யாருக்காவது கொடுத்துவிடுவாள்.

மனதிற்கு மகிழ்வைத் தரும் அத்தனையும் இதில்தான் இருக்கிறது என்பதுபோல் வாழ்ந்து வருகிறாள்.

மாதத்தில் கடைசி வெள்ளி, மரகதம் மாரியம்மன் கோயிலுக்குப் போவதை வழக்கமாக கொண்டிருந்தாள். வீட்டை விட்டு கிளம்பி விட்டால் எங்குமே எதற்கும் நிற்கமாட்டாள். யாரையும் துணைக்கும் வைத்துக் கொள்ள மாட்டாள். தெரு ஓர நிழலிலேயே வாடியான் தெரு, காசுகடை பஜார் என்று வீதிகளின் வழியே விறுவிறுவென்று நடந்து கோயில் வாசலில் நின்றுவிடுவாள். அன்றும், பூக்கடையில் செருப்பைக் கழட்டிப்போட்டு விட்டு சாமிக்கு இரண்டு முழம் பூ வாங்கிக் கொண்டாள்.தரிசனம் முடித்து பூசாரி கொடுக்கும் திருநீறை தன் சேலை முந்தானையில் முடிந்து கொண்டாள். பிறகு கோயில் பிரகாரத்தை மூன்று முறை சுற்றி விட்டு , நெற்றியில் வழிந்தோடிய வியர்வையைத் துடைத்தபடியே கோயிலை விட்டு வெளியேறுகிறாள். பங்குனி தன் உக்கிரத்தை இரக்கமின்றி உமிழ்ந்து கொண்டிருந்தது. விடுவிடுவென நடந்த அவள், பூக்கடை வாசலில் கிடந்த தன் செருப்புக்குள் காலை நுழைத்துக் கொண்டாள். அவள் பூக்கடையில் உள்ள விதவிதமான பூக்களைப் பார்க்கிறாள். அது வெயிலின் வெக்கை தாங்காது முகம் சுளித்துக் கொண்டிருந்தன. தண்ணீரில் மடக்கிய விரல்களில் ஈரம் தொட்டு, விரல்கள் வழியே பூக்களின் மீது சிதறியபடியே இருந்தாள் பூக்காரி. கடைக்குள் ஓரமாய் பாவாடை சட்டை போட்ட சிறுமி ஒருத்தி கதம்ப மாலை ஒன்றை கோர்த்தபடி உட்கார்ந்திருந்தாள். அழகழகாய் தொங்கிக் கொண்டிருக்கும் ரோஜா மலர்களையும், கதம்ப மாலைகளையும், மல்லிகைச் சரங்களையும் கண்ணுற்று பார்க்கையில், உலகிலேயே அலங்காரமும் ஜோடனையும் தேவைப்படாத கடை இந்த பூக்கடை தானோ என்று எண்ணத்தோன்றிற்று.

“என்ன பாப்பா எப்படியிருக்க” என்ற குரல் கேட்டு மரகதம் திரும்பிப் பார்த்தாள். அது காமாட்சி பாட்டி.

“யாரு காமாட்சியக்காவா நீங்க எப்படியிருக்கீங்க” என்று பதிலுக்கு மரகதம் நலம் விசாரித்தாள். தன் தாய்வழி தூரத்து உறவு காமாட்சி பாட்டி என்பது மட்டும் தான் மரகதத்திற்குத் தெரியும். அது எப்படி என்பதையெல்லாம் அவள் தெரிந்து கொள்ள விரும்பியதில்லை.

“ஏதோ இருக்கேம்மா… இன்னும் போய் சேர வழியக்காணும்…. “

காமாட்சிப் பாட்டியின் சலிப்பான வார்த்தைகளைக் கேட்ட மரகதம் இப்படி வாங்க என்று வெயிலில் நின்று கொண்டிருந்த அவளை தன் பக்கம், பூக்கடை நிழலுக்குள் இழுத்துக் கொண்டாள்.

“ஏன் அப்படி சொல்றீங்க அப்படி என்ன உங்களுக்கு வயசாயிருச்சி”

“எம்பதுக்கு மேல ஆயிருச்சில…. உங்கம்மா தேனம்மா எப்பயோ போய் சேந்துட்டா புண்ணியவதி நான் கிடந்து இழுபடறேன்”

“அதுக்கு என்ன செய்ய அவங்க விதிமுடிஞ்சி போச்சி, சரி உங்களுக்கு இப்ப என்ன செய்யுது சொல்லுங்க” மரகதம் கொஞ்சம் பொறுமையிழந்தவளாய் இருந்தாள்.

“கால்ல ஒரே நோவு, டாக்டர்கிட்ட கேட்டா முட்டி தேஞ்சி போச்சிங்கிறான். இத கேளு… போனமாசம் தெருவுல ஒரு கூவப்பய சைக்கிள கொன்னாந்து இந்த நொட்டாங்கால்ல ஏத்திட்டுப் போயிட்டான். அது ஒரு பக்கம் வலிச்சிக்கிட்டு கிடக்கு. நாலு நாளா மருந்து கடைல தைலம் வாங்கி தேச்சிக்கிட்டு கிடக்கேன். என்ன செய்ய வயசானாலே இப்படித்தான். காஞ்ச மரம் தளுக்கய போது”

யாரைப் பார்த்தாலும் காமாட்சிப் பாட்டி இப்படி தன் துயரத்தை சொல்லிக் கொண்டேதான் இருக்கிறாள்.

மரகதம் தன் கையிலிருந்த பத்து ரூபாயைக் காமாட்சி பாட்டியிடம் கொடுத்துவிட்டு நகன்று விட நினைத்தாள். காமாட்சி விடுவதாய் இல்லை.

“செத்த நில்லு மரகதம், உன்ன பாத்து வேற ஒரு விசயமா பேசனும்னு நினைச்சேன்… கும்பிடப்போன சாமி குறுக்க வந்த மாறி நீயே வந்துட்ட… இதக் கேளு, என் மவா குட்டியோட கத பெரிய கதயா இருக்கு. அவ வீட்டுகாரரு ஒரு வருஷமா எந்த வேல வெட்டிக்கும் போகாம வீட்லயே கிடக்காரு. எந்த கவலயுமில்ல மனுஷனுக்கு. எந்த நேரமும் பீடி. நாலு இடத்துக்குப் போயி சம்பாதிக்கிறதுக்கு வக்கில்ல… வீட்ல ரெண்டு பொட்டப் பிள்ளைங்க அதுகல படிக்க வைச்சி கரையேத்தனும்கிற சிந்தனையே கிடையாது. அதுகல படிக்க வைக்க குட்டிதான் கஷ்டப்பட்டுகிட்டு கிடக்கா. என்ன செய்ய சோதன தான். அவளுக்கு நீ பாத்து ஏதாவது வேல குடு. அந்த மனுசனுக்கு புத்திவந்து எங்கையாவது வேலைக்கி போறவர அவ உங்கிட்டயே இருக்கட்டும்.”

அவளின் இக்கட்டைப் புரிந்து கொண்ட மரகதம் கணவன் ராமநாதனிடம் இது பற்றி பேசி வைக்கிறேன், நீங்க நாளைக்கு வரும் போது அவளையும் கூட்டிக்கிட்டு வாங்கனு சொன்னாள்.

“சரிதாயே… நீ ஓரமா பாத்துப்போ தங்கம்”

ஒரு பக்கமாய் சாய்ந்தபடி காலை இழுத்து இழுத்து நடந்து சென்ற காமாட்சிப் பாட்டியை பார்த்தபடி மரகதம் நின்று கொண்டிருந்தாள் . அப்போது உச்சி வெயிலின் அகங்காரம் கண்ணைக்கட்டியது. பளீர் என்ற வெளிச்சத்தில் சில நொடிகள் வீதியே காணாமல் போய் விட்டதைப் போல் மரகதம் உணர்ந்தாள்.

காமாட்சிப் பாட்டியின் இளமைக்காலம் எத்தனை அழகானது என்பதை மரகதம் தன் அம்மா தேனம்மாள் பலதடவை சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறாள். வீட்டுக்காரர் மாடசாமி பட்டாளத்திலிருந்து ஊருக்கு வரும் போதெல்லாம் அவர் பின்னால் காமாட்சி பட்டுச் சேலை உடுத்தி மிடுக்காய் தெருவில் அலங்காரத் தேர் போல் அசைந்து வருவதைப் பார்த்து ரசிக்காதவர்கள் இருந்திருக்கமுடியாது. பருவம் வன்மையானது, அழகையையும் வனப்பையும் அள்ளிக் கொடுப்பது போல் கொடுத்து விட்டு, குறுகிய காலத்திலேயே அதைப் பறித்துக் கொள்கிறது.

கணவனை இழந்த பிறகு, பிற்காலம் காமாட்சி போன்ற பெண்களின் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டு விடுகிறது. நிற்கதியாய் கைக்குழந்தையோடு நின்ற அவள் வாழ்க்கை திசை தெரியாது தத்தளித்தது. அதில் வேதனையும், துயரமும் போட்டி போட்டப்படியே அவளை விரட்டியது. மரகதம் இப்படி காமாட்சி பாட்டியின் இளமைக்கால நினைவுகளைச் சுமந்தவாறே வீடு வந்து சேர்ந்தாள். மரகதம் ராமநாதன் தம்பதிகள் வாழும் அந்த வீட்டைப் பற்றி சொல்லியாக வேண்டும். அன்று கட்டிய வீடுகளில் கொள்ளைப்புறம் ஒன்று இருக்கும், அதில் கிணறு ஒன்றும், அத்தோடு கழிவுநீர் தடையின்றி செல்ல ஜலதாரையும் அமைக்கப் பட்டிருக்கும். மரம் ஒன்று இருந்தால் துவைத்த துணிகளை காய போட கயிறு ஆதாரமாக தொங்கிக் கொண்டிருக்கும். இதமாய் உச்சி வெயிலின் பார்வையும் , வீசி வரும் பருவக்காற்றும் , தெரித்து விழும் மழைநீரும் இணைந்து உறவாடும் முற்றமும் அந்த வீட்டிற்கு நடுவே சொந்தம் கொண்டாடும். உள்ளே உத்திரங்களும் தூண்களும் வீட்டின் வயதைச் சொல்லும். முன்னோர்களின் தடம்பதிந்த, ராமநாதனும் மரகதமும் வாழும் இந்த வீடும் அதுபோல் அத்தனை பாரம்பரியத்தையும் சுமந்திருந்தது, இரட்டைக் கிளிகள் பொறிக்கப்பட்ட ‘மரகத இல்லம்’ என்ற செவ்வக வடிவிலான எழுத்துக்கல் வீட்டின் திண்ணைச் சுவற்றை அலங்கரித்துக் கொண்டிருந்தது.

மதியம் ஒரு மணியாகிவிட்டால் தலை வாசலை திறந்தே வைத்துவிட்டுவாள் மரகதம். களைப்போடும் பசியோடும் வரும் கணவனுக்கு கதவைத் தள்ளுவது கூட பாரமாகி விடக்கூடாது என்பதில் கவனமாயிருந்தாள்.

தன் வேஷ்டியை மிடுக்காய் தூக்கிக்கட்டி விட்டு, தன் கட்சூவை வாசலில் கழட்டிவிட்டு காலைக்கழுவாமல் ராமநாதன் வீட்டிற்குள் வரமாட்டார். துடைத்துக் கொள்ள துண்டையும் தண்ணீரை நிரப்பியும் மரகதம் தயாராக வைத்திருப்பாள். ராமநாதன் உண்டபின் , அவர் ரேகை பதிந்த தட்டிலேயே கழுவாமல் தானும் உண்டு மகிழ்கிறாள்.

சரமாரியாக கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது என்பதாலேயே மரகதம் ராமநாதனிடம் எதையும் நிதானமாகத்தான் சொல்வாள். கோயிலில் காமாட்சி பாட்டியைப் பார்த்ததும், குட்டியைப் பற்றி அவள் கூறியதையும் சொல்லிமுடிக்கும் முன் ராமநாதன், “சரி நீ உதவி செய்யனும்னு நினைச்சிட்ட, குட்டி உனக்கு உதவியா இருப்பானா கூப்பிட்டுக்கோ” என்றவுடன் மரகதம் அத்தோடு நிறுத்திக் கொண்டாள். அதற்கு மேல் ஏதும் அவள் பேசவில்லை.

ஒரு பாசமிகு தந்தை எதையெல்லாம் தன் குடும்பத்திற்கென்று செய்வாரோ அதில் சிறிதேனும் குறைவின்றி ராமநாதன் செய்து வந்தார். அது போல் எது செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று மரகதத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தார்.

குட்டி வீட்டிற்குள் வந்த சில நாட்களிலேயே எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்ய ஆரம்பித்தாள். மரகதத்திற்கு சமையலில் ஒத்தாசையாக இருப்பது, பலகாரங்கள் செய்வது, சட்டை துணிமணிகளைத் துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது என்று எதையுமே குட்டி விட்டுவைக்கவில்லை. குறிப்பாக சமையல் அவளோடு பிறந்ததா என்று கேட்கத் தோன்றும். சிலருக்கு சமையல் என்பது ஒரு சங்கீதம் போல இசைந்தே வாழ்வோடு பயணிக்கும். அப்படித்தான் குட்டி. ஆரோக்கியத்தின் வாசல் சமையற்கட்டுதான் என்ற உண்மை தெரியாமலயே அவள் அதில் வாழ்ந்து வந்தாள்.

யாராவது இவள் உங்க வேலைக்காரியா என்று கேட்டுவிட்டால் மரகதத்திற்கு கோபம் வந்துவிடும். தூரத்து உறவாய் தனக்குத் துணையாய் வந்தவளை மரகதத்தால் அப்படியெல்லாம் நினைத்துப்பார்க்க முடியவில்லை. ஒரு நாள் அப்படித்தான் பக்கத்துத் தெரு பரவதம் குட்டியைப் பார்த்து புது வேலைகாரியா என்று கேட்டுவிட்டாள்.

வந்ததே கோபம் . அப்போது ஏதும் பேசாமல் , அவள் போன பிறகு அவளை திட்டித் தீர்த்தாள் மரகதம்.

தன்னையும் ராமநாதனையும் சின்னம்மா, சின்னய்யா என்று உறவைச் சொல்லி அழைத்துவந்தாள் குட்டி. கிட்டதட்ட குட்டி குடும்பத்தில் ஒருத்தியாகவே ஆகியிருந்தாள். வீட்டில் எது ஒன்றானாலும் குட்டியில்லாமல் நடக்காது. அவளுடைய தயவு எல்லாருக்குமே தேவைப்பட்டது. சரியில்லாத கணவனையும், தன் இரண்டு குழந்தைகளையும் கவனிக்க எப்படித்தான் நேரம் ஒதுக்கிக் கொள்கிறாளோ தெரியாது. பிள்ளைகள் படிப்பிலிருந்து எந்தவொரு தேவைக்கும் மரகதம் தன்னாலானதை மரகதத்திற்கு உதவிக்கொண்டேயிருந்தாள்.

என்றைக்கு குட்டியை குமார் “குட்டியக்கா” வென்று அழைக்க ஆரம்பித்தானோ அது முதலே அவள் எல்லோருக்கும் குட்டியக்காவாகிவிட்டாள். செல்வி என்ற அவள் உண்மையான பெயரையே அவள் மறந்து பல காலமாகி விட்டது.

குட்டியக்கா அடிக்கொரு தரம் மரகதத்திடம் குமார் செய்யும் சேட்டையைச் சொல்லி புலம்பிக் கொண்டேயிருப்பாள்.

“சின்னம்மா இங்க பாருங்க குமாரு தம்பிய…. துணி துவைச்சிக்கிட்டுயிருக்குறப்ப சோப்ப தூக்கிக்கிட்டு ஓடிருச்சி… நேத்து அப்படித்தான்… பாலக்காச்சி காச்சாம இருக்கிறப்ப டம்பளர்ல மோக்கிறேனு அம்முட்டு பாலையும் கொட்டி அடுப்படி பூராத்தையும் நாசமாக்கிருச்சி… போனவாரம் தயிறு கடஞ்சிக்கிட்டு இருந்தப்ப தயிறு மத்த தூக்கிட்டு போயி கொள்ளபக்கத்து ஜலதாரையில போட்டு வச்சிருச்சி… தேடு தேடுனு தேடி கண்டுபிடிச்சேன் “

அத்தனையும் கேட்டுக் கொண்ட மரகதம்,

“என்னைய என்னடி பண்ணச் சொல்ற.. அவே சொன்னா கேக்கனும்ல… அது என்னவோ நீனா அவனுக்கு எப்படித்தான் இருக்குமோ… உங்கூட சரிமல்லுக்கு நிக்கிறான்.. ” இப்படி சொல்வதும் தொடர்ந்து கொண்டே இருந்தது. குழந்தைகள் சிறு வயதிலேயே யாரோ ஒருவரிடம் மட்டும் முரண்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். கிண்டல் செய்வதும், வம்பிழுப்பதும் பின் அதனால் அவர்கள் படும் அவஸ்தையைப் பார்த்து சிரித்து மகிழ்வதுமாய் இருப்பார்கள். தாவி அணைத்து முத்தமிட்டுக் கொள்வது மட்டுமே அன்பைச் சொல்லிவிடுவதில்லை. இதுபோன்ற செய்கைகளில் கூட அன்பின் கசிவு தெரிகிறது.

தனக்கொரு ஆண் வாரிசு வேண்டும் என்ற ராமநாதனின் நிர்பந்தத்தால் இளையவளுக்குப் பிறகு எட்டு வருடங்கள் கழித்து, குமாரைப் பெற்றாள் மரகதம். அவன் கிடைப்பான் என்று மரகதம் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இளம் பருவத்திலேயே தொடங்கிய தன் மணவாழ்க்கையில் பிள்ளைகளையும் பெற்று
படுக்கை படுக்கையாய் கிடந்த ராமநாதனின் தாயரையும் சுமந்ததால் வந்த துயரம் காலப்போக்கில் சுவடு தெரியாது கரைந்து போனது.

மூத்தவள் வசந்தா இளையவள் சங்கீதா இருவரின் திருமணத்திற்குப்பின் தன்னை எத்தனை பொறுப்பானவளாய் மாற்றிக் கொண்டிருக்கிறாள் என்பதை அடிக்கடி நினைத்துக் கொள்வாள்.

மரகதம் தன் குடும்பம் என்றவுடன் தன் சுயத்திற்குள் தன்னைச் சுறுக்கிக் கொள்வாள். அதில் தனக்கே உரிய தனித்துவமான உணர்வுகளோடு போராடுவாள். தனக்குள்ளேயே எதற்கும் தீர்வு காண விடை தேடுவாள். கணவனைக் கூட துணை தேட மறந்து விடுவாள். எது ஒன்றும் தவறாய் நடந்துவிட்டால் அதை அபசகுணமாய் எண்ணி வருந்துவாள். உடனே அதற்கான பரிகாரத்திற்கு ஓடுவாள். இது ஏதோ நடக்கப்போகும் கெட்ட செய்தியைச் சொல்கிறது என்றுதான் நம்புவாள்.

அன்று மார்கழி மலர்ந்த காலை. மரகதம் வாசலில் கோலம் போட்டு விட்டு, வீட்டிற்குள் வருகிறாள். வாசலில் ஒரு குடு குடுப்பைக்காரன். அவன் குடுகுடுப்பையை உருட்டியவாறு நல்ல காலம் பிறக்குது ஜக்கம்மா அம்மாவுக்கு நல்லவார்த்த சொல்லு என்று கத்த ஆரம்பித்தான். மரகதம் சமையற்கட்டிலிருந்தபடி பயந்து கொண்டே ஜன்னல் இடுக்கின் வழியே அவனைப்பார்த்தாள். அவன் முண்டாசு அணிந்து முகத்தில் ஒரு மச்சம் வைத்திருந்தான். குடுகுடுப்புக்காரன் என்றால் சிறுவயதிலிருந்தே அவளுக்கு பயம். அவன் ஏடா கூடமாய் ஏதாவது சொல்லிவிடுவான். பிறகு அவன் சொன்னது மனசுக்குள் கிடந்து எதிரொலித்துக் கொண்டேயிருக்கும். சாமத்தில் தூக்கத்தைக் கூட கெடுத்துவிடும். குட்டியக்காவைக் கூப்பிட்டாள். குட்டி இந்தாடி எட்டணா இதையும் இந்த பழசையும் போட்டு அவன உடனே பத்திவிடு…. நிக்கவிடாத, எதையாவது சொல்லித் தொலைச்சுருவான். குட்டி வேகமாய் போனாள். அவன் ஏதோ அடுத்து சொல்லப் போனவனிடம் போதும்ப்பா இந்தா என்று எட்டணாவைக் கொடுத்து அவனை விரட்டிவிட்டுத் திரும்பினாள். மரகதம் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

அன்று ஹெட்மாஸ்டர் ஜோசப் வழக்கம்போல் பிரயர் ஹாலில் மேடை மீது நின்று கொண்டிருந்தார். கடவுள் வாழ்த்திற்குபின் பள்ளியின் மாணவத் தலைவன் பிரேம்சந்தர் அன்றைய சிந்தனை துளிகளை சொல்லிமுடிந்தான். அதன் பிறகு ஹெட்மாஸ்டர் பேச ஆரம்பித்தார். “எல்லாவனும் நா சொல்றத நல்லா கவனியுமிலே… திங்க கிழமையிலிருந்து அரைப் பரிச்ச ஆரம்பிக்குது. அன்னையிலிருந்து பரிட்ச முடியுறவர ஒரு வாரம் எவனும் மதியம் வீட்டுக்கு சாப்பிட போகக் கூடாதுலே… மத்தியான சாப்பாட்ட கொண்டு வந்திரனும்…. வீட்டுக்கு போயி சாப்பிட்டு வர நேரமிருக்காது புரிஞ்சதாலே”

பிரயர் ஹாலில் இப்படி அவர் தெக்கத்தி தமிழில் பேசியதைக் கேட்ட குமார், அம்மாகிட்ட வந்து அப்படியே அதை ஒப்பித்தான்.

திங்கள்கிழமை வந்தது. நீ பன்னிரண்டு மணிக்கெல்லாம் சாப்பாட்டை டிபன் கேரியரில் தயாராக வைத்துக்கொள் நான் கடையிலிருந்து யாரையாவது அனுப்புகிறேன் . பிறகு குமாருக்கு கொடுத்துவிடு என்று ராமநாதன் சொல்லியபடி மரகதம் சாப்பாட்டுடன் டிபன் கேரியரை தயாராக திண்ணையில் வைத்தாள். கடையிலிருந்து யாரையாவது சைக்கிள் எடுத்து வரச் சொல்கிறேன் என்று ராமநாதன் கூறியபடி யாரும் வரவில்லை. காலையிலேயே குமாரிடமும் மரகதம் உனக்கு சாப்பாடு பள்ளிக்கூடத்திற்கே வந்துவிடும் என்று சொல்லி அனுப்பியிருந்தாள்.

நேரம் ஆக ஆக மரகதத்திற்கு இருப்பு கொள்ளவில்லை எல்லாவற்றையும் குட்டியக்கா பார்த்தபடியே இருந்தாள்.

“ஒத்த எட்டு அத கொடுங்க சின்னம்மா, நான் போயி கொடுத்துட்டு வந்துருவேன் ” என்று சொல்லிவிட்டு மரகத்தின் பதிலை எதிர்பாராது டிபன்கேரியரை குட்டியக்கா தூக்கிக் கொண்டு படியிறங்கி தெருவில் வேகமாக நடக்க ஆரம்பித்தாள். மரகதம் இதை எதிர்பார்க்கவில்லை.

“குட்டி பார்த்து பாத்துப்போ” என்று மட்டும் சொல்லிவிட்டு வீட்டிற்குள் வந்துவிட்டாள்.

வகுப்பு இன்னும் முடியவில்லை. எழுதி முடித்த பரிட்சைப் பேப்பர்களை ஆசிரியர் ஒவ்வொன்றாக சரிபார்த்து வாங்கிக் கொண்டிருந்தார். சில வகுப்புகளில் மாணவர்கள் கலைந்து வெளியே ஓடிய வண்ணம் இருந்தனர்.

ஜன்னல் வழியாக ஊடுருவிய குமாரின் கண்கள் யாராவது தனக்காக சாப்பாட்டுடன் வருகிறார்களா என்று தேடிக் கொண்டிருந்தன. குட்டியக்கா பள்ளிக்கூட கேட்டிற்குள் நுழைவதற்கும் மணியடிப்பதற்கும் சரியாக இருந்தது.

குமார் குட்டியக்கா வருவதை கவனித்துவிட்டான். பாத்தியாடா எனக்கு சாப்பாடு வந்திருச்சினு பக்கத்திலிருந்த செல்வராசிடம் கையை காண்பித்து சொன்னான். “உனக்கென்னப்பா அதுஅதுக்கு ஆளிருக்கு உங்கவீட்ல…. எங்க வீட்ல என்ன அப்படியா..”

இப்படி செல்வராசு குறைபட்டான். குழந்தைகள் வார்த்தைகள் சில நேரங்களில் பாகுபாடை உணர்த்தி விடுகின்றன. ஆனால் ஒரு போதும் அதில் கபடம் இருப்பதில்லை.

எல்லா பசங்களும் கூட்டுக்குள் இருக்கும் குஞ்சிப் பறவைகள் சிறகடித்து விண்ணில் பறப்பது போல வெளியே ஓடிவந்தார்கள். எல்லோருடைய கையிலும் சாப்பாட்டு கேரியர் இருந்தது. மரத்து நிழலுக்காக அவர்கள் அங்கும் இங்கும் ஓடுவது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. குமார் குட்டியக்காவை பார்த்தவுடன் கையைத் தூக்கியபடி கூட்டத்தை விளக்கிக் கொண்டு ஓடி வந்தான்.

பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் உட்கார்ந்து சாப்பிடுவதற்கென்று ஏதும் சாப்பாட்டுக் கூடம் கிடையாது. குடைபோல் கிளைகளை விரித்து நின்று கொண்டிருந்த வேப்பமரங்களும், புங்கை மரங்களும் சிறுவர்களின் வருகைக்காக ஏக்கத்தோடு காத்திருப்பது போல் இருந்தன. அந்த மரங்கள் ஜம்பது ஆண்டுகளுக்கு மேலாக அங்கேதான் நின்று கொண்டிருக்கின்றன. குமாரைப் போல் எத்தனையோ சிறுவர்களை சந்தித்த வண்ணமே, அதன் நிழலுக்கும் அவர்களுக்குமான உறவை நீடித்து வருகின்றன.

நிறைந்து நின்ற தண்ணீர் தொட்டி அருகில் குமாரை அழைத்துச் சென்று அவன் கைகளை கழுவச் செய்தாள் குட்டியக்கா. தண்ணீர் தொட்டியின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த பியூன் ஒருவன் தண்ணீர் அதிகம் சிந்தாதே என்று எல்லோரையும் விரட்டிக் கொண்டே இருந்தான்.

“டேய் குமாரு …. சொல்ல மறந்துடேன். எங்கம்மா எனக்கு பருப்பு சோறும், தயிர் சோறும் கொடுத்து விட்டாங்கா” என்று சொல்லியவாறு செல்வராசு தன் டிபன் கேரியரைத் தூக்கிக் காண்பித்து ஒருபக்கம் ஓடிக் கொண்டிருந்தான்.

கொண்டுவந்திருந்த ஒரு விரிப்பை தரையில் விரித்து மரத்தடியில் உட்கார்ந்து கொண்ட குட்டியக்கா, டிபன் கேரியரை பிரித்தாள். உனக்கு சாப்பாடு எடுத்துவர யாருமே வரல… அதனால நானே ஒடியாந்துட்டேன் தம்பி என்று சொல்லிக் கொண்டே அவனுக்கு எடுத்து வைக்க ஆரம்பித்தாள். குமாருக்குப் பிடித்த உருளைக்கிழங்கு பொறியல், வத்தக்குழம்பு, அப்பளம் சின்னதாக மூடி போட்ட கிண்ணத்தில் சவ்வரிசிப் பால் பாயாசம். இதையெல்லாம் தான் மரகதம் அதனுள் அடுக்கியிருந்தாள்.

சாப்பிட்டவுடன் அவனுடைய கையை கழுவிவிட்ட குட்டியக்கா, பித்தளைக் கூசாவிலிருந்த தண்ணீரை டம்பளரில் ஊற்றி அவனை குடிக்க வைத்தாள். அவள் குமாரின் வாயை தன் முந்தானையால் துடைத்து விட்டாள். அவன் ஒரு போதும் வீட்டில் கூட இப்படி உணவை ருசித்துச் சாப்பிட்டிருப்பானா தெரியாது. அன்று குட்டியக்கா பரிமாறும் போது அம்மாவின் சமையலில் ஏதோ புரியாத சுவை ஒன்றை உணர்ந்தான் குமார்.

குட்டியக்கா தினமும் இனிமே நீங்களே சாப்பாட கொண்டுவந்துருங்கனு சொல்லியபடி அவன் அவள் சேலைத்தலைப்பை உருவி கையையும், வாயையும் மீண்டும் ஒரு முறை துடைத்துக் கொண்டான். வேலை செய்து செய்து அவள் வேர்வை படிந்த அந்த முந்தானையின் நெடி அவனுக்குப் பிடித்திருந்தது.

அன்று பிற்பகல், குட்டியக்கா மரகதத்தின் வீட்டின் கொள்ளைப் புறத்து கிணற்றடியில் பாத்திரங்களை எல்லாம் கழுவி , கவிழ்த்து வைத்துக் கொண்டிருந்தாள் . இப்படி தொடர்ந்து வேலைக்குள் மூழ்கியிருந்தால் எந்த துயரமும் அவளை அண்டுவதில்லை. சொல்லப்போனால் அது மட்டும் தான் அவளுக்கு உண்மையான துணையாயிருந்தது. அன்று ஏனோ வேலை முடிந்த உடன் நீண்ட வெறுமை அவளை வாட்டியது.

ஒன்றுக்கும் உதவாத தன் கணவனையும், வளர்ந்துவரும் தன் இரண்டு பெண் குழந்தைகளைப் பற்றிய கவலையும் அப்போது அவளைத் தொற்றிக் கொண்டன.

ஆனாலும் மனம் தனக்கு சாதகமாகவே பேசிக் கொண்டிருந்தது.

உனக்குத்தான் மரகதம் இருக்கிறாளே பற்றிக் கொள்ள…. அவள் கிடைப்பாள் என்று நீ நினைத்தாயா…. அன்பெனும் சுழற்சிக்குள் நீ இப்படி வீழ்வாய் என்று எப்போதாவது எண்ணிய துண்டா ‘ என்று சொல்லிக் கொண்டேயிருந்தது.

உண்மையில் வாழ்க்கை , நாம் தட்டாமலேயே புதிது புதிதாய் கதவுகளை திறந்து கொண்டு தான் இருக்கிறது. நாம் தான் அதை கண்டுகொள்வதில்லை.

குட்டியக்கா அடுக்கடுக்காய் வரும் தன் சிந்தனைகளுக்கு தடைபோட்டவளாய் , பாத்திரங்களை எல்லாம் எடுத்துவந்து சமையற்கட்டில் அடுக்கி வைக்க ஆரம்பித்தாள்.

மாலை கருகி நின்றது. வீட்டின் பின் கட்டிலிருந்து தூரத்தில் பார்க்கிறாள் , நிழல்போல் ஒரு உருவம் திண்ணையில் உட்கார்ந்திருப்பது போல் தெரிந்தது.

கொஞ்சம் நெருங்கி வந்து பார்க்கிறாள். பிறகு திண்ணயில் விளக்குகளைப் போடுகிறாள். அது அவள் அம்மா காமாட்சிப் பாட்டி. அவளைப் பார்த்தவுடன் எரிச்சலடைந்தாள்.

“இப்ப எதுக்கு வந்த நீ”

“என்னடி குட்டி….மணி என்ன ஆச்சி… ஆறாகப்போகுது. மத்தியானம் சோறு பொங்கல. உன் புருசே இருந்த பழச சாப்பிட்டுக்கிட்டான். என்னைய விடு, ஸ்கூல் விட்டு பிள்ளைங்க வந்துட்டாங்களே என்ன செய்ய. வரும் போது அரிசி வாங்கீட்டு வந்துருவேனு சொல்லீட்டு வந்த . வரக்காணுமே. உலையில என்னத்த வைக்க. என்கிட்டயும் காசில்லேல …. பாவம் பிள்ளைக . நான் அதுகளுக்கு என்னத்த போட சொல்லு “

“ஏமா… கத்தித் தொலைக்கிற . நீ முத இங்கயிருந்து போயிறு. சின்னம்மா வேலை இல்லனதும் கிளம்பிருவேன். நீ முத போய் தொல பிள்ளைகள வந்து நான் பாத்துக்குவேன்….”

குட்டியக்கா காமாட்சியை விரட்டுவதிலேயேயிருந்தாள். எந்த காரணத்திற்காகவும் சாக்கு போக்கு சொல்லி தேடி வரக்கூடாதுனு பல தடவை காமாட்சியிடம் சொல்லியிருக்கிறாள்.

அதற்குள் ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது என்பதாய் புரிந்து கொண்ட மரகதம், “பிள்ளைகள பட்டினி போட்டு வந்து நீ இங்க வேல செய்ய அவசியமில்ல. மாசக் கடைசியாயிருச்சினா என்ன…. என் கிட்ட கேக்க வேண்டியது தான அதுக்காக அரிசி வாங்கிப் போடக்கூட கையில பணம் இல்லேனா என்கிட்ட சொல்ல வேண்டாமா….”

மரகதம் ஆவேசப்பட்டாள். விடுவிடுவென்று சமையற்கட்டிற்கு போய் ஒரு பையில் இரண்டு படி அரிசியை எடுத்துப் போட்டாள். பிறகு ஒரு தூக்கில் மத்தியானம் சமைத்து மீதமான குழம்பு காய்களை எடுத்து வைத்தாள். பிறகு ஒண்ணாம் தேதி கொடுக்க வேண்டிய சம்பளக்காசையும் எண்ணி எடுத்துக் கொண்டாள்.

“இந்தா முதல்ல பிள்ளைகளுக்கு ஆக்கிப் போடு…. அதுகல பட்டினி போடாத. மரகதம் சரியா சம்பளம் கொடுக்கலேனு யாராவது சொல்லித் தொலைக்கவா …….” குட்டியக்கா முகம் சுறுங்கிவிட்டது.

தன் துயரம் தன்னோடே இருந்து விட்டுப் போகட்டும் என்று எண்ணினாள். அதனாலேயே எதுவும் சொல்லாது இருந்து விட்டாள்.

மரகதம் அவளை தேற்றி , அவள் கையில் சம்பளக் காசையும் கொடுத்து விட்டு ” போயி முதல்ல பிள்ளைகல சாப்பிட வையி… எப்பயும் போல பிள்ளைகள கிளப்பி விட்டுட்டு காலையில வேலக்கி வா …. போ..”

மரகதம் அப்போதுதான் மணியைப் பார்க்கிறாள். தானும் இன்னும் சீக்கிரமாகவே அவளை வீட்டிற்கு அனுப்பியிருக்கலாமோ என்று சிந்தித்தவாறே வீட்டிற்குள் போனாள்.

குட்டியக்கா மரகதத்தின் வீட்டை விட்டு வெளியேறும் போது அந்தி மயங்கி வீதியெங்கும் மங்கிய வெளிச்சம் பரவி நின்றது. தெரு முனையில் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. குட்டியக்கா மரகதம் கொடுத்திருந்த பையை தோளில் சுமந்துபடியே வந்தாள்.

அவள் நடையில் பிள்ளைகள் பசியோடு இருப்பார்களே என்ற ஏக்கம் பின்னியிருந்தது. வழியெங்கும் குட்டியக்கா காமாட்சியை திட்டிக் கொண்டே வந்தாள். என்னைவிட என் பிள்ளைகளின் மீது உனக்கு அக்கரை வந்து விட்டதோ, வயசாகியும் உனக்கு புத்தியில்லை என்று கோபித்துக் கொண்டவளாய் கத்தியவாறே நடந்தாள். காமாட்சி பாட்டி அவள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் காலை இழுத்து கொண்டே ஏதும் பேசாமல் திராணியற்று மகளைத் தொடர்ந்தாள். காமாட்சி பாட்டி சிரமப்பட்டு நடந்து வருவதைப் பார்த்த பக்கத்து வீட்டு பெட்டி கடை நாராயணன் மகன், பாட்டி பின்னால ஏறிக்கொங்க நான் வீட்டில இறக்கி விடுறேன் என்று சொல்லிக் கொண்டு தன் சைக்கிளின் பின்னால் அவளை ஏற்றிக்கொண்டான்.

வீட்டிற்குள் நுழைந்த குட்டியக்காவை, கணவன் மாரிமுத்து பணத்திற்காக நச்சரிக்க ஆரம்பித்தான். ஏற்கனவே போன வாரம் வீட்டிற்கு மளிகை வாங்குகிறேன் என்று சொல்லி குட்டியக்கா கொடுத்த ஐந்து ரூபாய்க்கு மளிகை சாமான்கள் வாங்காது பொறுப்பற்று நடந்து கொண்டான்.

எந்த வேலையும் செய்யாது வெட்டியாக பொழுதைப் போக்கும் மாரிமுத்திற்கு காசு வைத்து சீட்டாட்டமும் , ஆடு புலி ஆடுவதுமே குறிக் கோளாய் இருந்தது. குட்டியக்கா பணத்தோடு வருகிறாள் என்று தெரிந்து அவளை முற்றுகையிட்டான். குட்டியக்கா எவ்வளவோ போராட்டியும் அடா தடியாய் பத்து ரூபாயை பறித்து விட்டுச் சென்றான். போன மாசம் பெட்டிக்கடை பெரியசாமி அண்ணாச்சி வீடு தேடியே வந்து விட்டார். அவரிடம் மாரிமுத்து வைத்த பழைய பாக்கி ஐம்பது ரூபாயை வேறு வழியின்றி தன் சம்பளத்தில் எடுத்துக் கொடுத்தாள்.அண்ணாச்சி இனிமேல் உங்க கடையில் அவர் பாக்கி வைத்தால் நான் பொறுப்பேற்க முடியாது என்று கண்டிப்பாக சொல்லி அனுப்பினாள் குட்டியக்கா. இதுவரை வெளியிலிருந்த போராட்டம் வீட்டிற்குள்ளேயே வந்து தாண்டவமாடியது.

குட்டியக்கா அப்போதுதான் கொள்ளை பக்கம் மண்பானையைக் கழுவி ஜலதாரையில் ஊத்தி விட்டு புதிதாக தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தாள்.

“கூப்டிங்களா சின்னம்மா” னு குட்டியக்கா குரல் கொடுத்தாள்.

“இந்தாடி… இவளுகளுக்கு நாளைக்கி மத்தியானம் மீன் கொழம்பு வைக்கனுமாம்…. “தண்ணிய நிரப்பிக் கொண்டு இடுப்பில் பானைய தூக்கி வைத்தவாறு குட்டியக்கா “வச்சிறலாம் சின்னமா” என்றாள்.

“இங்க வச்சிலாம் ஆயக்கூடாது… அந்த வாடேலாம் எனக்கு ஆகாது. நீயே வீட்ல ஆஞ்சி இங்க வந்து கொழம்பு வச்சிறு. மாப்ளைங்க, பிள்ளைங்க, ரெண்டு பேத்திக, குமாரு அவ்வளவுதான் எதுனாலும் ஒன்ட்ரை கிலோ எடு போதும். எனக்கும் இவருக்கும் சைவத்துக்கு எதாவது நா வச்சிக்கிறேன். போகும் போது மறந்துராம ரூவா வாங்கிக்கோ…”

மரகதம் அத்தோடு அவளை “சீக்கிரமா வந்துரு” என்றும் சொல்லி அனுப்பினாள்.

வீட்டில் பிள்ளைகள் மரகதத்தின் சமையலை ருசித்து சந்தோஷபட்டதைவிட, குட்டியக்காவின் கைப்பக்குவத்திற்கு தான் அதிகம் ஏங்கினர். சமைத்து சமைத்து தழும்பேறிப்போன அவள் கைகள் ஒரு போதும் பக்குவம் தவறியதில்லை.

ஓய்வின்றி இயங்கும் தொழிற்சாலை நம் நாட்டுப் பெண்களின் சமையற்கூடமாகத் தான் இருக்க முடியும். ஞாயிற்றுக் கிழமைகளில் கூட அதன் சுறுசுறுப்பு குறையாது.

மரகதம் மருமகன்கள் வீட்டிற்கு வருகிறார்கள் என்றால் அவர்களுக்கென்று குறையின்றி சமைக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பாள். அதனலேயே பரபரப்பாகி விடுவாள். அதிலும் பெண் பிள்ளைகள் உள்ளூர்வாசிகளாக இருந்து விட்டால் ஞாயிற்றுக்கிழமைகள் அம்மா வீடாகத்தான் இருக்கும். வசந்தாவும், சங்கீதாவும் அதற்கு விதிவிலக்கல்ல.

குட்டியக்கா இப்போதே பம்பரமாகி விட்டாள். மறுநாள் வைக்க வேண்டிய குழம்பின் பக்குவம் எப்படியிருக்க வேண்டும் என்ற சிந்தனை அவளைப் பீடித்திருந்தது. இனிதாய் புலர்ந்த அன்றைய விடிதலில், குட்டியக்காவிற்கு சோதனைகள் பல பரிசாய் காத்திருந்தன.

மணி காலை 11.30. மரகதம் ஏதும் புரியாது தவித்துக் கொண்டிருந்தாள்.

“என்னடி இது இன்னும் இவள காணும் … அவ வந்து அதுக்கு பிறகு தான் குழம்பு வைக்கணும்….”

“சும்ம லவலவங்காதிங்க. கொஞ்ச நேரம் பொறுமையா இருங்கமா… குட்டியக்கா எப்படியும் வந்துருவாங்க “

சின்னைவள் சங்கீதி இப்படி சொன்னாலும் நிமிஷத்துக்கு ஒரு தடவை மரகதம் வாசலைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அது ஞாயிற்று கிழமை என்பதால் அவளைத் தேடிப் போகக் கூட யாரும் இல்லை.

“என்ன செய்ய … இப்பவே மணி 12.30 ஆயிருச்சி. இனிம அவ வந்து மீன் குழப்பு வச்சி…ம்ம் ” என்று நம்பிக்கையற்றவளாய் மரகதம் புலம்பினாள்.

குமார் வாசல் கம்பி கேட்டைத் திறந்து நின்று கொண்டு குட்டியக்கா வருகிறாளா என்று தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தான். தூரத்தில் அவள் வருவதைப் பார்த்த அவன்…

“அம்மா குட்டிக்கா வர்றாங்க…. வர்றாங்க”னு சத்தம் போட்டான்.

“சரி போதும் நீ வீட்டுக்குள்ள வா… அவா வரட்டும் அவள என்னெனு கேப்போம்….” மரகதத்தின் ஆத்திரம் கட்டுக்குள் இல்லை.

மணி ஒன்று.

வெளிக்கேட்டை வேகமாக திறந்து கொண்டு, வேர்த்து விறுவிறுத்து கையில் ஒரு தூக்குவாளியும், தோலில் ஒரு பையையும் சுமந்தபடி குட்டியக்கா விடுவிடுவென்று நடந்து வந்தாள். கருத்த அவள் தேகம் கடும் வெம்பை கொண்ட வெயிலில் காயந்து துவண்டிருந்தது. அவளின் தடித்த உதட்டுகள் மழையின்றி வற்றிய கரிசல் நில வெடிப்பைப் போல் வரண்டிருந்தன. எண்ணெயின்றி காய்ந்த அவளின் பரட்டை தலைமுடி சிக்குண்டு கிடந்தது. அவள் நடையில் கூட ஏதோ ஒரு பதட்டம் தென்பட்டது.

மரகதமோ எதையுமே கண்டு கொள்ளும் நிலையில் இல்லை.

அவள் கோபமும் ஆவேசமும் அவள் இயல்பின் எல்லை மீறியிருந்தது.

“எங்கடி போய் தொலஞ்ச… என்ன ஆச்சிடி உனக்கு. முடியாதுனா முடியாதுனாவது சொல்லி ருக்கலாமுல நா வேற எதாவது செஞ்சிருப்பேன்ல…”

தூரத்திலிருந்து இத்தனையும் கவனித்து நின்ற குமாரின் சிறிய கண்கள் மிரட்சி கொண்டு விரிந்த படியிருந்தன. அம்மாவின் கோபம் நியாயமானதுதானா, குட்டியக்கா என்ன பதில் சொல்லப் போகிறாள் என்ற கேள்விகள் அவனுக்குள் சூழ்ந்தது.

குட்டியக்கா குனிந்து பார்த்தவாறு மரகதத்திற்கு நேரிடையாக பதில் ஏதும் சொல்ல முடியாது தவித்தாள்.

“பிள்ளங்க பசில இருப்பாங்கனு வேகமா வந்தே சின்னமா” அவள் சொல்லிக் கொண்டே கையிலிருந்த தூக்குவாளியை அடுப்படியில் வைத்தாள். மரகதம் பொறுமையிழந்து அதை தொட்ட போது அது அனலாய் சுட்டது.

“நேரமாயிறுச்சினு நானே வீட்ல வச்சி கொண்ந்துட்டேன் சின்னமா” குட்டியக்கா மூடியைத் திறந்தாள். மறு நிமிடம் மீன் குழம்பின் வாசம் காற்றில் கலந்து சமையற் கட்டில் பரவி நின்றது.

“..இத ஏண்டி முதல்லயே சொல்லியிருக்கலாம்ல…. எல்லாரையும் லவலவங்க வச்சிட்டயே”

இதுவரை கடுகடு வெனயிருந்த மரகதம் குளிர்ந்து விட்டதைப் பார்த்த குட்டியக்காவின் உலர்ந்த உதட்டில் ஈரம் கசிந்தது.

ஆனாலும் குட்டியக்கா மனது எதையோ மறைத்து கொண்டிருந்தது. மனதின் கனம் அவள் அசைவுகளுக்குள் தொனித்தது. உணர்ச்சிகள் சொல்லத் துடித்தாலும் மனம் தடுத்து நின்றது. மரகத்தின் கண்கள் கூர்மையானவை… இங்கிதம் புரிந்திருந்தன. குடியக்காவின் எண்ண அலைகளின் ஓசை அவளுக்கு புரிந்திருக்க வேண்டும். ஒரு முறையேனும் மரகதம் அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்திருந்தால் அத்தனையும் கொட்டியிருப்பாள் குடியக்கா. ஆனால் அவள் நிமிர்ந்து பராது குனிந்தபடியே மறுநாள் சமையலுக்கென்று வாங்கி வந்த காய்கறிகளை பையோடு விட்டுவிட்டு வேகமாய் நகன்றான்.

போகும் போது.” சின்னமா . சீக்கரமா பிள்ளகல சாப்பிட வச்சிருங்க குழம்பு ஆறிரும்…” சொல்லிக் கொண்டே குட்டியக்கா பீறிட்ட அழுகையை மறைத்தபடி படியிறங்கிச் சென்றாள்.

ராமநாதன் மரகதம் தவிர எல்லோருமாய் பேசியபடி மாட்னி ஷோவிற்கு சென்றிருந்தனர். குமாரும் அவர்களோடு ஒட்டிக் கொண்டான். மதிய உணவிற்குப் பின் ஓய்வெடுத்திருந்த ராமநாதனிடம் மரகதம் குட்டியக்காவின் செய்கையைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தாள். பதிலுக்கு ராமநாதன் பெரிதாய் நீயாக ஏதும் கற்பனை பண்ணாதிரு என்று கூறிவிட்டு தரையில் பாயை விரித்தபடி தலை சாய்ந்தார்.

மணி மாலை 4.30.

சுவர் கடிகாரம் சொல்லிற்று.

கதவு தட்டும் சத்தம் கேட்டு மரகதம் விரைகிறாள். கதவைத்திறந்த அவளுக்கு அதிர்ச்சி தரும் செய்தி காத்திருந்தது. குட்டியக்காவின் இளைய மகள் சாந்தி பாவாடை சட்டை அணிந்தவளாய் நின்று கொண்டிருந்தாள். அவள் சலனமுற்றவளாய் காட்சியளித்தாள். அவள் எதற்காக வந்திருப்பாள் என்று மரகதத்தால் ஊகிக்க முடியவில்லை.

“என்னடி நீ வந்திருக்க… உன் அம்மாவ எங்கே”னு மரகதம் படபடத்தாள்.

“அய்யா செத்துட்டாரு ஆச்சம்மா… அம்மா சொல்லிட்டு வரச் சொன்னாங்க” ஆனால் சிறுமி சாந்தியின் முகத்தில் சோகத்தின் சுவடு துளியேனும் இல்லை. அவள் பருவம் இன்னும் அதைக்கற்றுக் கொடுக்கவில்லை.

“என்னடி சொல்ற…. மத்தியானமா வந்து மீன் குழம்ப கொடுத்துட்டு போனவா அப்பக்கூட எதுவும் சொல்லலியே… எப்படி…டி செத்தாரு.” மரகதத்தின் பதட்டம் அவளின் வார்த்தைகளில் தெரித்தன.

“எனக்குத் தெரியாது ஆச்சம்மா, அய்யாவ ஆஸ்பத்திரிலயிருந்து தூக்கிட்டு வந்தாங்க…. வீட்ல வந்து செத்துட்டாரு” குழந்தைத்தனமான அவளுடைய பதில் மரகதத்தை மிரட்டியது.

“அடப் பாவமே…. சரி நீ போ நா பின்னாலயே வர்றேன்”

“வேல வெட்டி இல்லாம வீட்லயே கிடந்தவனுக்கு ஏன் இப்படி ஒரு சாவு..” இதைக் கேட்டுக் கொண்டிருந்த ராமநாதனும் அதிர்ச்சியானார்.

“தெரியலயே…. வருஷம் பூராவும் இந்த குட்டிக்கி இப்படி சோதனை தான்…. மனுசே ஏன் செத்தான் எதுக்கு செத்தான் ஒண்ணுமே புரியல….சரி நான் முதல போறேன். நீங்க பின்னால வாங்க”

உடுத்தியிருந்த உடுமாத்து சேலையோடு அப்படியே மரகதம் வீட்டை விட்டு கிளம்பினாள்.

ரிக்சாவை பிடித்துபோக நேரமாகும் என்று நினைத்து, மரகதம் ஓட்டமும் நடையுமாக கிழக்கு தெப்பத்தின் படித்துறைக்கு நேரே ஒடுக்கமாய் போகக்கூடிய சந்துக்குள் நுழைந்தாள். அங்கிருந்த ஒரு பெட்டிக்கடைக்கு அடுத்த காம்பவுண்டுக்குள் குட்டியக்காவின் வீடு இருந்ததாய் ஒரு நினைவு. சமீபத்தில் இதுபோன்ற சந்துக்குள் அவள் சென்றதேயில்லை. முந்தாநாள் பெய்த மழையில் தெருக்களில் தண்ணீர் அங்கங்குமிங்குமாய் கட்டிக் கிடந்தது. அவள் கால்கள் அதில் படாதபடி விலகியபடியே சென்றாள். குழாயடியில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த நான்கு பெண்கள் இவள் பரபரப்பாக நடந்து வருவதை கேள்விக்குறியோடு பார்த்தார்கள். குட்டியக்காவின் வீட்டின் முன் இரண்டு மூன்று சைக்கிள்கள் நின்று கொண்டிருந்தன. முகம் தெரியாத ஒரு நான்கு நபர்கள் அங்கு நின்று கூடி பேசிக் கொண்டிருந்தார்கள். வீட்டிற்குள் இருந்து ஒரு பலகை பெஞ்சை இரண்டு பேர் தூக்கிக்கொண்டு வாசலின் ஓரத்தில் போட்டுக்கொண்டிருந்தனர். மரகதம் அதுதான் குட்டியக்கா வீடாக இருக்க வேண்டுமென்று யூகித்துக் கொண்டாள். நெருங்கிய போது சாவு வீட்டின் அழுகுரல் அவளை வரவேற்றது.

மரகதம் செருப்பை கழட்டிவிட்டு தனிவாக இருந்த அந்த வாசலுக்குள் குனிந்தபடி சென்றாள். கோழிக்கூண்டு போல மிகத் தனிவாயிருந்த அந்த வீட்டிற்குள் எப்படித்தான் குட்டி இரண்டு பிள்ளைகளோடு வாழ்கிறாளோ என்று க மரகதம் சிந்தித்தவாறே உள்ளே நுழைந்தாள்.

மரகதத்தின் கண்கள் உள்ளே நுழைந்தவுடன் குட்டியக்காவைத் தேடின. சுவரில் சாய்த்துக் கிடந்தி வைத்திருந்த மருமகன் காலுக்கடியில் உட்கார்ந்து காமாட்சிப் பாட்டி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள். குடியக்காவின் பெண் பிள்ளைகள் இருவரும் செய்வதறியாது காமாட்சிப்பாட்டியின் அருகில் சோகமாய் அமர்ந்திருந்தனர்.

மாரிமுத்து, வெள்ளை வெளேர் என்று புது சட்டை, புது வேட்டி போட்டப்பட்டு கம்பீரமாய் அமர்ந்திருந்தான். அவன் உயிரோடு இருக்கும்போது இப்படி நல்ல உடையணிந்து ஒரு போதும் யாரும் பார்த்திருக்க முடியாது. நன்றாக சவரம் செய்து சேக்கிழுத்து அவன் புதுமாப்பிள்ளை போல் காட்சியளித்தான். ஒத்த ரூபாய் காசு மட்டும் அவன் நெத்தியில் ஒட்டப்பட்டிருந்தது.. சம்பிரதாயத்திற்காக போடப்பட்ட ஒரு ரோஜா மாலை அவன் கழுத்தில் தொங்கியது. அதில் இரண்டொரு தேனீக்கள் மகரந்தத்தைத் தேடிக் கொண்டிருந்தன.

மாரிமுத்துவின் முகத்தில் கலவரத்தின் சுவடுகள் தெரியவில்லை. சொல்லப்போனால் கொஞ்சம் சிரித்தபடிதான் இருந்தான். வாழ்க்கையில் முறையற்று எந்த பொறுப்பும் இல்லாமல் வாழ்ந்தவர்கள் முகம் செத்த பிறகு இப்படித்தான் இருக்குமோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது.மரணத்தின் கலை துளியேனும் அந்த முகத்தில் இல்லை.

மனிதன் மரணித்த மறு வினாடி எங்கோ இருந்து வந்த சுற்றங்கள் ஈமச்சடங்குகள் செய்ய முன் நிற்கிறார்கள். இவர்களில் எவரும் வாழும் காலங்களில் அவன் துயரத்தை கண்டு கொண்டதாக சரித்திரமே இல்லை.

மரகதம் வந்தது தெரிந்து அறைக்குள் இருந்து கதறியபடி வந்தாள் குட்டியக்கா. மரகதம் அவளை அரவணைத்து கொண்டாள். ஓவென்று தேம்பித் தேம்பி அழுத அவள் அழுகை அடங்க சில நிமிடங்கள் ஆயிற்று. அவள் மரகத்தின் கரங்களை இருகப் பற்றிக் கொண்டாள்.

“ஏண்டி என்னடியாச்சி… இந்த மனுசே இப்படி போயிட்டான்” என்றாள் மரகதம்.

“ஏற்கனவே நெஞ்சி வலிக்குதுனு சொல்லுவாரு சின்னமா …. பிறகு யாரையாவது விட்டு சோடா வாங்கி குடிச்சிட்டு, இப்ப சரியாருச்சினு சொல்லிட்டு அத மறந்துருவாரு. நானும் பல தடவ டாக்டர்ட காமிகனு சொல்லி பாத்துட்டேன். கேட்டா தான மனுசன்.. பீடியா குடிச்சி உடம்ப அவரா பாழாக்கிட்டாரு பாவி மனுசன். இன்னிக்கி காலேல யே நெஞ்ச பிடிச்சிட்டு , வேர்த்து விறுவிறுத்து அப்படியே உக்காந்துட்டாரு. பிறகு ரிச்சாவ பிடிச்சி கெளவுர்மென்ட் ஆஸ்பித்திரிக்கி கூட்டிட்டு போயிட்டேன். டாக்டர் ஒரு ஊசிய போட்டரு. வலி குறைஞ்சி பிறகு கொஞ்ச நேரத்துல தூங்கிட்டாரு”

“கூடவே இருந்திருக்கலாம்ல பிறகு என்னத்துக்கு குழம்ப வைக்கிறேனு வந்துட்ட….” மரகதம் ஆத்திரப் பட்டாள்.

“என் தம்பி செல்வராச ஆஸ்பத்ரில அவருக்கு துணைக்கி வச்சிட்டுத்தான்.. வந்தேன்…. சின்னம்மா”

“வீட்டுகாரன இப்படி விட்டுட்டு வர உனக்கு எப்படி டி மனசு வந்துச்சி”

“சமைச்சி கொடுக்றேன்னு உங்ககிட்ட சொல்லிட்டேன்ல சின்னமா. பிறகு நீங்க என்ன பண்ணுவிங்களோனு நினச்சேன்….” மனசு கேட்கவில்லை, மரணிக்கும்தருவாயில் இருக்கும் கட்டியவன் கூட அவளுக்கு ஒரு பொருட்டாயில்லை.

“அப்பவே பத்தாயிருச்சி… அய்யோ நேரமாயிறுச்சேனு அதுக்கு பிறகு போயி மீன வாங்கிட்டேன்… உடனே நானே மீன ஆஞ்சி , குழம்பும் வச்சி கொனாந்துட்டேன். நம்ம வீட்டுக்கு வரும் வழிலயே என் தம்பி செல்வராசு எதுக்க வந்துட்டான்…என்னடான்னேன்… மச்சான காப்பாத்தறது கஷ்டமுனு டாக்டர் சொல்லிட்டாங்க…. பல்ஸ் ரொம்ப இறங்கிருச்சி. வீட்டுக்கு தூக்கிட்டு போங்கன்டாங்க…. னு அவன் சொன்னதும் எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. இந்த மனுசே சட்டுனு இப்படி போகுமுனு நா நினக்கல சின்னமா…” குட்டியக்காவின் குமுறல் கட்டுக்கடங்காது வெடித்தது.

“வீட்டுக்கு வந்தியே… ஆஸ்பத்திரியில இப்படி கிடக்காரு, சீரியஸாகி வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லிட்டாங்கனு ஒரு வார்த்த சொன்னியா….”

“எப்படி சின்னமா சொல்றது…. வீட்ல மருமகன்களும் பிள்ளைகளும் சந்தோசமா இருக்கிறப்ப அபச குணமா… இத போயி இப்ப சொல்ல வேண்டாம் பெறகு சொல்லிக்கிடலாமுனு… சட்டுனு நிக்காம ஓடியாந்துட்டேன்” என்று சொல்லிய அவள், “ஆஸ்பத்திரில்லயிருந்து வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு 3 மணிக்கெல்லாம் மூச்சு நின்னு போச்சி சின்னமா… அதுக்கு அப்புறந்தான் சின்ன பிள்ள சாந்திகிட்ட உங்களுக்கு சொல்லி அனுப்புனேன். என்ன செய்ய சின்னமா… எதுக்குமே உதவாத இந்த மனுசனுக்கு அற்ப ஆயிசுனு இருந்திருக்கு” என்று மேலும் தொடர இயலாதவளாய் மெளனமானாள்.

இவள் ஏன் என்னிடமும், என் பிள்ளைகளிடமும் இப்படி தன்னை அர்பணித்திருக்கிறாள். அப்படி அவளுக்கு எதை செய்திருக்கிறேன். தன் துயரத்திலும், என் குடும்பத்தின் மீது ஏன் இத்தனை அக்கறை… மரகதம் பெருமூச்சு விட்டாள்.

சில நொடிகள் நிலவிய நிசப்தத்தை தொடர்ந்து மீண்டும் குட்டியக்கா விம்பி விம்பி அழ ஆரம்பித்தாள். பின் துவண்டு, மரகதத்தின் மடியில் முழுவதுமாய் தன்னை புதைத்துக் கொண்டாள். வளிந்தோடிய கண்ணீரின் ஈரம் மரகத்தின் மடியை நனைத்தன. மரகதம் அவள் நெற்றியில் சிதறிக் கிடந்த தலைமுடியை தன் விரல்களால் நீவியபடியே இருந்தாள். அந்த விரல்களின் ஸ்பரிசத்தில் அன்பும் ஆதரவும் இழைந்து கிடப்பதை குட்டியக்கா உணர்ந்தாள். அவள் விம்பலின் ஓசை மெதுவாய் அடங்கத் தொடங்கியது…

கணவன் என்றாவது மாற்றி விடுவான் என்று நம்பிக் காத்திருந்தாள். ஆனால், அவன் முடிவு அடுத்த அத்தியாயத்தைத் தொடக்கி வைத்தது. அதில் மரகதத்தின் விசாலமான மனமும், மரகத இல்லத்தின் வாசலும் குட்டியக்காவிற்காக திறந்தே கிடந்தன.

– காலச்சித்திரங்கள் புத்தகத்திலிருந்து ஒரு கதை, மழைமான் பதிப்பகம்.

அம்பாள் ஆர்.முத்துமணி விருதையில் 'அம்பாள்' என்று அழைக்கப்படும், பிரபல வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை அம்பாள் ராமசாமி அவர்களின் வழியில் வாழ்ந்து தொழிலும், தன் வாழ்விலும் உயர்வு பெற்றவர்.  தன் தந்தை வழி இலவச யோகா பயிற்சி மையப் புரவலர், யோகா பயிற்றுனர், ஆரோக்கிய விழிப்புணர்வுப் பேச்சாளர், தந்தை நிறுவிய அறக்கட்டளை மூலம் நல்ல பல இலவச சேவைகள் செய்து, விருதை மக்கள் போற்றும் சமூக ஆர்வலர் என்று இப்படி பன்முக ஆளுமை கொண்டவராய்…மேலும் படிக்க...

1 thought on “மரகத இல்லம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *