மன்னர் மகள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: July 6, 2024
பார்வையிட்டோர்: 1,568 
 
 

அரண்மனையின் பின் பக்கம் வெளி தேசத்து மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்ட நந்தவனத்தில் மகள் மாளவிகா ஊஞ்சலில் அமர்ந்து பூக்களை ரசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து ‘தனக்கு கிடைத்த மகள் தேவலோகவாசி போல் இருக்கிறாள்…!’ என நினைத்து மகிழ்ந்தாலும், அழகே ஆபத்தாகிவிடும் என கனவிலும் நினைக்காதவர், தற்போது தனக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையை எடுத்துச்சொல்ல மனைவியைத் தேடிச் சென்றார் பவள நாட்டின் முக்கிய மந்திரி பரமன்.

“மரகத நாட்டின் மன்னர் மகேந்திர வர்மனுக்கு நமது மகள் மாளவிகாவை மிகவும் பிடித்துப்போனதாம். நேற்று அவளைப்பார்த்ததிலிருந்து பித்துப்பிடித்தவர் போல நடந்து கொள்கிறார். அவள் கிடைக்கவில்லையேல் செத்துப்போவதாக வேறு பயமுறுத்துகிறார்” கூறிய மந்திரி கண்களில் பயத்தின் ரேகை சிவந்து காணப்பட்டது.

“ராஜாங்க விசயமாக நான் மட்டும் மரகத தேசத்துக்கு போய் வருவதாகக்கூறிய போது என் மீது சந்தேகப்பட்டு நீயும் வருவதாகக்கூறியதோடு, பிடிவாதமாக மகள் மாளவிகாவையும் அழைத்து வந்தது எவ்வளவு பிழை என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பாய். ஏற்கனவே மன்னனுக்கு பல மனைவியர் அந்தபுரத்தில் இருக்கும் போது நம் மகளோடு எத்தனை நாட்கள் வாழ்ந்து விடப்போகிறார்…?அதோடு மரகத நாட்டிற்கு நம் பவள தேசம் தவிர மற்ற மூன்று திக்கில் உள்ள நாடுகளும் கடும் பகையாளிகளாக உள்ள நிலையில் எந்த நேரம் போர்வரும்? மன்னர் எப்போது மடிவார்? என தெரியாத நிலையில் எப்படி தவமிருந்து பெற்ற பெண்ணைக்கொடுப்பது? உயிரையே விட்டு விடலாம் போலிருக்கிறது. இல்லையேல் இரவோடு இரவாக சொல்லாமல், கொள்ளாமல் இந்த அரண்மனையை விட்டு வெளியேற வேண்டும்” பேசியவர் உடல் நடுங்கியது.

“நீங்கள் பேசுவதைக்கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். நீங்கள் இவ்வளவு கோழையாக இருப்பீர்கள் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. வில்லை எடுத்து அம்பு விடும் ராமனின் தைரியம் உங்களுக்கு இருக்குமென நினைத்தேன். ஒரு நாட்டின் மன்னன் ஒரு சாதாரண மந்திரியின் மகளைப் பிடித்துப் போனதாகப் பேசியது எவ்வளவு பெரிய அதிஷ்டம் தெரியுமா உங்களுக்கு? நமது பவள நாட்டின் இளவரசி பவளக்கொடியின் நிலைக்கு நானும் உயர்வதை நினைத்தாலே மனம் மகிழ்கிறது. என்னை மன்னருக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றால் எனது விருப்பங்களுக்கு கட்டுப்பட்டால் நாளையே அவரை மணந்து கொள்ளத் தயாராக உள்ளேன். அவர் மூலம் எனக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு தாயாராகவும் உள்ளேன்” எனப்பேசியது பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

“மகளே… நீதான் பேசினாயா…? உனது விருப்பங்கள் என்ன?”

“முதலில் அவருக்கு ஆயிரம் மனைவியர் இருந்து விட்டுப்போகட்டும். என்னை மனைவியாக்கி ராணியாக அறிவிக்க வேண்டும். மன்னர் மூலம் எனக்குப் பிறக்கும் குழந்தைகள் தான் நாடாள வேண்டும். இது தான் எனது விருப்பம்” என்றாள் உறுதியாக.

“நம்மை இந்த நாட்டிற்கு நம் மன்னர் பராந்தகன் அனுப்பியதன் நோக்கமே தனது ஒரே மகளான பவளக்கொடியை இந்த நாட்டு மன்னருக்கு ராணியாக்குவதை உறுதிப்படுத்துவதற்குத்தான். நம் மகளை ராணியாக்கப்போகும் இந்த செய்தியைக் காதில் கேட்டால் எனது மந்திரி பதவியைப்பறித்து விடுவதோடு நமது மகளையும் கொன்று விட உத்திரவிடக்கூடும். அந்த பயம் தான் வீரனான என்னை உங்களுக்கு கோழை போல் காட்டுகிறது” என்றார்.

“தந்தையே சாமார்த்தியம் இருக்கும் அளவுக்கு உங்களிடம் சாணக்யம் இல்லை. மரகத நாட்டின் மகாராணியாக நான் ஆன பின்பு உங்களுக்கு மந்திரி பதவி எதற்கு? தவிர மரகத நாட்டின் மகாராணியை பவள நாட்டின் படைகளால் நெருங்க முடியுமா?”

“இது நமது நாட்டிற்கு நாம் செய்யும் துரோகம் இல்லையா?”

“துரோகம் என்பது ஆட்சியாளர்களுக்கு பிடித்தது தானே…? நட்பு, உறவு என்பதைத்தாண்டி பதவி, வெற்றி தானே முக்கியம். நீங்களும் உங்களது மூத்த சகோதரரைக்காட்டிக்கொடுத்து விட்டு குறுக்கு வழியில் மந்திரி ஆனவர் தானே?” என மகள் கூறுவதைக்கேட்டு பேச வார்த்தையின்றி வாயடைத்து நின்றார் மந்திரி.

“இப்படித்தனியா வாங்க. உங்க கிட்ட ஒரு ரகசியம் சொல்ல வேண்டும்” என அழைத்த மனைவியுடன் தனியறைக்குச்சென்று “என்ன ரகசியம்?” என கேட்டார் மந்திரி.

“நம் குழந்தை பிறந்த போது போர் நடந்துகொண்டிருந்தது. தளபதியான நீங்களும், மன்னரும் போர்களத்துக்குச்சென்று விட்டீர்கள். அப்போது எனக்கு குழந்தை பிறந்த நேரத்தில் மகாராணிக்கும் பெண் குழந்தை பிறந்தது. போரில் எதிரி நாட்டினர் அரண்மனையை சுற்றி வளைத்ததைக்கேள்விப்பட்ட மகாராணி தனது மகளை எதிரிகள் அழித்து விடுவார்கள் என பயந்து நம் குழந்தையை அவர்கள் எடுத்துக்கொண்டு இளவரசியை என்னிடம் கொடுத்துச்சென்று விட்டனர். இந்த விசயம் பிறகு மன்னருக்கும் தெரிந்து விட்டது. மாளவிகா நமது மகள் கிடையாது. பவளக்கொடிதான் நமது மகள்….” என மனைவி சொல்லக்கேட்ட போது தான் வந்த காரியம் சிறப்பாகவே முடிந்து விட்டதாக நினைத்து மகள்…. இல்லை மன்னர் மகள் மாளவிகாவை மரகத நாட்டு மன்னருக்கு மணம் முடிக்க சம்மதம் தெரிவித்தார் பவள நாட்டின் மந்திரி பரமன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *