மனைவியை அடக்க ஒரு திட்டம் – ஒரு பக்க கதை





ஒரு வாளித் தண்ணீரையும் ஹாலில் கொட்டி விளையாடிக் கொண்டிருந்தான் சுரேஷ்.
“ஏண்டா கடங்காரா! சனியன் பிடிச்சவனே! திருட்டுக் கழுதை! ஒரு பக்கெட் தண்ணீரையும் வீடு பூராக் கொட்டி வச்சிருக்கியே! வழுக்கி விழுந்தா கை கால் முறியாதா?” ராதிகா, பிள்ளையை ‘மடேர் மடேர்’ என்று இரண்டு அடி வைத்தபோது கிருஷ்ணன் ஓடி வந்து தடுத்தான்.
“இதோ பார் ராதிகா! கண்டபடி திட்டாதே.அக்கம் பக்கம் இருக்கிறவங்க என்ன நினைப்பாங்க?”
“இது ஒண்ணும் மெட்றாஸ் இல்லே! ஹைதராபாத்..” வெடுக்கென்று சொன்னாள் ராதிகா.
“அவன் சின்னக் குழந்தை. விஷமம் செய்யறான். கொஞ்சம் புரிஞ்சு போனால் தானா நிறுத்திடுவான்,” கிருஷ்ணன் அடுத்த அஸ்திரத்தைப் பிரயோகித்துப் பார்த்தான்.
“உங்களுக்கென்ன? சொல்லுவீங்க. கொஞ்சம் போனா ஆபீசுக்கு கிளம்பிப் போயிடுவீங்க. யாரு இந்தப் பிசாசைப் பார்த்துக்கறது? சனியன்! சனியன்!”
அவள் இப்போதைக்கு ஓய மாட்டாள்.
கிருஷ்ணன் ஒரு முடிவுக்கு வந்தான்.
அடுத்த வாரத்தில் ஒரு நாள்.
“என்ன இது? திடீர்னு வேறு வீட்டுக்கு மாத்திட்டீங்க? பழைய வீடு எவ்வளவு வசதியாயிருந்தது?”.
“எல்லாம் இதுவும் வசதியாகத் தான் இருக்கு”.
“டேய் சுரேஷ்! போடா அப்பால, கழுதை, பீடை! அந்த டப்பாவைத் தூக்காதேடா, சனியனே!”
திட்டிக் கொண்டே சுரேஷைப் பார்த்துக் கையை ஓங்கிய ராதிகா, வீட்டுக்காரம்மாள் உள்ளே நுழைவதை பார்த்து அடங்கினாள்.
“என்னம்மா, எல்லாம் சௌகரியமா இருக்கா? குழந்தை சுட்டியாயிருக்கானே! ஏன் கண்டபடி திட்டுறீங்க? உன் பேர் என்ன கண்ணா?”
“சுரேஷ்!”
“நல்ல பையனா இருக்கானே! இந்த பிளாட்டில் எல்லோருமே தமிழர்கள்தான். உங்களுக்கு உதவியா இருப்பாங்க!” சொல்லிவிட்டுப் போகிறாள் வீட்டுக்காரம்மாள்.
அன்று முதல் ராதிகா கப்சிப் ஆனாள்.
வீட்டைத் தமிழ் ஏரியாவுக்கு மாற்றிய திட்டம் கொஞ்சம் கொஞ்சமாகப் பலிக்க ஆரம்பித்தது. நாலு பேர் கவனிக்கிறார்கள் என்பது தெரிந்ததும் ராதிகா அடங்கிவிட்டாள். தன்னைத் தானே மெச்சிக் கொண்டான் கிருஷ்ணன்.
-குமுதம் ஒருபக்கக் கதை – 26-9-1991ல் பிரசுரமானது.
It’s really aassam because it is a good choice for a silent husband to control their wife