மனம் உறுத்துகிறது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 16, 2025
பார்வையிட்டோர்: 4,270 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பளபளக்கும் ‘பென்சு’ குலுங்கி நிற்கிறது. ஓட்டுநர் இறங்கி பின்பக்கக் கதவைத்திறக்கிறார். உள்ளே சாய்ந்த வாறு செய்தித்தாளைப் புரட்டிக்கொண்டிருந்த மாயவர் வெளியே பார்க்கிறார். வீட்டுவாசலில் உள்ள பூஞ்செடி கள் கண்களில் படுகின்றன. வீடு வந்துவிட்டதை உணர் கிறார். நேரம் கிடைக்காமல் வண்டியில் செய்தித்தாளைப் புரட்டிப்பார்க்கும் அவர் அதை மடிக்கிறார். கதவு திறந் ததும் கைத்தடியை எடுத்துக்கொண்டும் மூக்குக் கண்ணா டியைச் சரிசெய்துகொண்டும் குனிந்து மெல்ல இறங்குகிறார்.

வேலைக்காரர் வண்டியைப் பார்த்ததும் ஓடி வருகின் றார். கைத்தடியையும், விசிறி மடிப்பு மேல்துண்டை யும் வேலையாள் வாங்கிக்கொள்கிறார். மாயவர் நிமிர்ந்து ஏறுபோல் நடந்து செல்கிறார் ஐம்பதைத் தாண்டிவிட்ட வயது அவர் நடையில் தெரியவில்லை.

சோபாவில் அமர்ந்தபடி, “மரகதம்!” என்கிறார்.

மரகதம், “இதோ வந்திட்டேன்” என்றவாறு முன் றானையைத் தோளோடு சுற்றிக்கொண்டு வருகிறாள் தலை யைத் தாங்கிக்கொண்டு நிற்கும் கழுத்து இருப்பதே தெரியவில்லை. அவள் தலையெழுத்து நன்றாக இருப்பதால் அந்த அளவுக்கு நகைகள் கழுத்தை மறைத்துக்கொண்டிருந்தன.

அவள் அருகில் வந்ததும், “படம் பார்க்க போக ணும்னு சொன்னாயே! அதான் நானும் வெள்ளென வந்தேன் கிளம்பு” என்கிறார் மாயவர்.

“இதோ வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு அவள் தன் அறைக்குள் விரைந்து செல்கிறாள்.

கால்மேல் கால் போட்டுக்கொண்டிருந்த மாயவர் கால்களை ஆட்டிக்கொண்டும், தொடையில் தாளம் போட்டுக்கொண்டும் இருக்கிறார். விரலில் அணிந்திருந்த வைர மோதிரத்தின் ஒளிக்கீற்று கண்களைப் பறிக்கிறது. காலையில் வெளியே செல்லும்போது நெற்றியில் வைத் திருந்த சந்தனப்பொட்டு அப்படியே இருந்தது. மேனி அலுங்காமல் குளுமை (ஏர்கண்டிஷன்) அறையில் இருப் பவர் என்பதை அது காட்டியது. வழுக்கைத் தலை பிறை வடிவு முடியும் வெள்ளிக் கம்பியை நினைவுகூர்கிறது. செழுமையாக வாழ்பவர் என்பதை முகப்பொலிவு பளிச் சிட்டுக்காட்டுகிறது.

அறைக்குள் சென்றிருந்த மாயவரின் மனைவி மரகத மும் வருகிறாள். பட்டுப் புடவையில் தங்கக்கரை மினு மினுக்கிறது. ஊடுநரை ஓடிய கொண்டையில் செவ் வந்திப்பூ சிரிக்கிறது. மாயவர் அருகில் வந்ததும், “போகலாங்க” என்கிறாள். மாயவர் மூக்குக் கண்ணாடி யைச் சரிசெய்துகொண்டு ஏதோ நினைவில் இருந்து விடு பட்டவரைப்போல், “ம்… கிளம்பு” என்கிறார். அவள் புடவையை மேலும் சரிசெய்துகொண்டு, ‘புடவை மட மடனு இருக்கு” என்கிறாள். “இருக்கும் இருக்கும்” என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு, “ம்… பிள்ளைகளைக் காணோமே” என்கிறார்.

“அவங்க படம் பார்க்க வரலியாம். கிழநடிகர்கள் நடிக்கும் காதல் காட்சியையும், ‘கும் கும்’ சண்டையை யும் பார்த்தாலே சகிக்காதாம். அதை நாமதான் பார்க் கணும்னு சொல்லிட்டாங்க” என்கிறாள்.

“ஓ அப்படியா சேதி! கிழ நடிகர்களுனா சொல்லுறாங்க? அந்த நடிகர்கள் வயசு வரும்போது இவங்க கோல் ஊன்றி நடக்காமல் இருந்தாலே பெரிய காரியம். இதில் வேறே நடிகர்களையே குறை கூறுறாங்களே” என்கிறார். மாயவர்க்கு நடிகர்கள் என்றாலே அவ்வளவாகப் பிடிக்காது. இருந்தாலும் கிழம் என்று சொல்லியதால் நடிகர்களுக்குப் பரிந்து பேசினார்.

பிள்ளைகளும் வந்துவிடுகின்றனர். அவர்கள் முகத் தில் முல்லைப்பூ கொட்டிக்கிடக்கிறது; அப்படிச் சிரிக்கின் றனர் அந்தச் சிரிப்பில் மற்றொன்றும் மறைந்துகிடக் கிறது. அறுபதாம் திருமணக் காட்சிதான் அது.

இளமை திரும்பிய பெண்ணு மாப்பிள்ளைபோல் நின்றிருந்த மாயவரும், மரகதமும் புறப்படுகின்றனர். பென்சு அவர்களைச் சுமந்துகொண்டு பறக்கிறது. வேலைக்காரர்கள் பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். புதிதாக வேலைக்கு வந்தவர் “இப்போதே இப்படி. இருக் கிறாங்களே! சின்னஞ்சிறுசா இருக்கும்போது எப்படி இருந்திருப்பாங்க?” என்கிறார் அதைச் செவிமடுத்த பிள்ளைகளுக்கு, மேலும் மகிழ்ச்சி. “இந்த வயசிலும் படம் கேக்குது” என்று சுட்டித்தனமாகச் சொல்கிறது கடைக்குட்டி.

பறந்து சென்ற வண்டி திரையரங்கு முன் குலுங்கி நிற்கிறது. மாயவர் இறங்குகிறார். பலரின் பார்வை அவர் மேல் விழுகிறது. நடிகர்களைப் பார்ப்பதைப் போல் பலர் பார்க்கின் றனர்.

“மாயவர் வந்திருக்கிறார்” என்கிறார் ஒருவர்.

விரலில் இருந்த சுண்ணாம்பை முன்பல்லில் உத்தினி வைத்துக்கொண்டு “அவருக்கு என்ன இதைப் போல எத்தனையோ கார் வாங்கலாம்” என்கிறார் மற்றொருவர்

“பணம் இருந்து என்ன செய்ய கருமி” என்கிறார் குதியுயர்ந்த நடையன் அணிந்த பெல்பாட்டம் போட்ட இளைஞர்.

“அவருக்கென்ன சுக்கிரதிசையில நடக்குது!” என்று காலத்தைக் கணித்துக் கணித்து சம்பாத்தியத்தில் கோட்டை விட்டவர் தொந்தியைத் தடவிக்கொண்டு சொல்கிறார். இப்படி பலரும் பலவாறு பேசிக்கொண்டு நிற்கின்றனர். மரகதத்தைப் பார்க்கும் பெண்கள் பெரு மூச்சு விடுகின்றனர் ‘இவ்வளவு நகையும், இப்படிப்பட்ட புடவையும்’ அணிந்திருக்கிறாளே என்றுதான்.

வண்டியைவிட்டு இறங்கியதும் இருவரும் அரங்கு நுழைவாயிலை நோக்கி நடக்கின்றனர். அவர்கள் நடந்து செல்லும் வழியெல்லாம் கூட்டத்தினர் கண்கள் மொய்க் கின்றன.

உள்ளே போய் அமர்ந்ததும் அரங்கு விளக்குகள் அணைகின்றன. வெண்திரை மின்னுகிறது. மாயவர் கால்மேல் கால் போட்டுக்கொண்டு திரைக்காட்சியைப் பார்க்கிறார். மரகதம் நகைகளைத் தாங்கிக்கொண்டு நிற் கும் கழுத்துக்கு முட்டுக் கொடுப்பதைப்போல் தாடை யில் கையை வைத்துக்கொண்டு வண்ணத் திரைக்காட்சி யைப் பார்க்கிறாள்.


படத்தில் அய்யாக்கண்ணு வருகிறார். அவர்தான் முதலாளி. அவர் கல்லாப்பெட்டி முன் அமர்ந்தபடி கணக்கைச் சரிப்பார்த்துக்கொண்டிருக்கிறார்.

வாடிக்கையாளர்கள், “பருப்பு, சீனி, மிளகாய், மல்லி, அரிசி” என்று கேட்பதும், சரக்குப்போடுபவர் விலையைச் சொல்லி ‘வேண்டுமா?’ என்று கேட்பதும் அவர் காதுகளில் விழுகின்றன. இடையிடையே வேலை செய்கிறவர்களையும் பார்த்துக்கொள்கிறார். கணக்கெழு தும் கணக்கப்பிள்ளையையும் பார்க்கத் தவறவில்லை. வாடிக்கையாளர்களின் தோற்றத்தையும், அவர்கள் பேசும் பேரத்தையும் வைத்தே அவர்களின் குடும்ப நிலை யையும், வரவுக்கு மீறிச் செலவு செய்யும் ஆடம்பரப் பேர்வழிகளையும், கருமிகளையும்கூட அளந்து விடுகிறார்.

பரம்பரைப் பணக்காரரான அய்யாக்கண்ணு விரல் களில் மோதிரங்கள் மின்னுகின்றன. சந்தன நிறப் பட்டுச்சட்டை அணிந்திருக்கிறார். வியர்வையால் நனைந்து உடம்போடு ஒட்டி இருக்கும் சட்டைக்குள் கிடந்த தங்கச்சங்கிலி நன்கு தெரிகிறது மோதிர விர லின் கணுவரைக்கும் வந்துகொண்டிருந்த மோதிரத்தை இடையிடையே தள்ளிவிட்டுக் கொள்கிறார்.

சரக்குப் போடுபவர் குரல் “சாமான் சீட்டைப் போடுங்க” என்று ஓங்கி ஒலிக்கிறது.

“ம்… சரி… சொல்லு!” என்று கணக்குப்பிள்ளை, காதில் வைத்திருந்த கரிக்கோலை எடுத்துச் சீட்டை போடுகிறார்.

“கடுகு காக்கட்டி”

“ம்…”

“வெந்தயம் காக்கட்டி…”

“ம்…”

“சீரகம் காக்கட்டி”

“ம்…”

“மிளகாய் ஒரு கட்டி”

“ம்…”

“மல்லி இரண்டு கட்டி”

“ம்…”

சரக்குக் கட்டுபவர் மேலும் சொல்லிக்கொண்டே இருக்கிறார். கணக்குப்பிள்ளையின் கையில் இருந்த கரிக் கோல் பம்பரமாகச் சுழல்கிறது.

“எல்லாம் எட்டுச் சாமான்” என்கிறார் சரக்குக்கட்டுபவர்.

“ம் .. சரி மொத்தம் பதிமூன்று வெள்ளி இருபத் தைந்து காசு” என்று சற்று நேரத்திற்குள் கணிப்பானைப் போல் (கம்பியூட்டரைப்போல்) கணக்குப் போட்டுவிடுகி றார். சில்லறை கேட்பவர்களுக்கும் மாற்றிக்கொடுக்கிறார்.

முதலாளி கணக்குப்பிள்ளையின் திறமையைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறார்.

காலையில் பசியாறியபின் இடையில் ஒரு காப்பியை மட்டும் குடித்துவிட்டு, சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். பசி மணி பன்னிரண்டு என்று உணர்த்துகிறது பன்னிரண்டு மணியளவில் யாருக்குப் பசிக்காவிட்டாலும் முதலாளிக்குப் பசித்துவிடும்.

கணக்குப்பிள்ளையிடம், “நான் போய்ச் சாப்பிட்டு விட்டு வருகிறேன்” என்று சொல்லியவாறு நாற்காலி மேல் கிடந்த துண்டை உதறித் தோளில் போடுகிறார். முதலாளி சொல்லியதில் இன்னொரு பொருளும் இருக்கி றது. கடையைப் பார்த்துக்கொள் என்பதுதான் அது. கணக்குப்பிள்ளையிடம் ‘கடையைப் பார்த்துக்கங்க’ என் றால் கடையில் வேலைசெய்யும் ஊழியர்கள் மனம் வருந் தக்கூடும் என்று எண்ணியே பரிபாசையில் ‘போய்ச் சாப்பிட்டுவிட்டு வருகிறேன்’ என்கிறார்.

கணக்குப்பிள்ளை, “சரி” என்கிறார். அதில் நான் பார்த்துக்கொள்கிறேன் எனும் உட்பொருளும் மறைந்து கிடக்கிறது. முதலாளி நம்பிக்கையோடு சாப்பிடச் செல் கிறார் கணக்குபிள்ளை கைகளை உயர்த்தி நெட்டி முறித் துக்கொண்டு கடிகாரத்தைப் பார்க்கிறார். மணி பன்னி ரண்டு அடித்து ஐந்து நிமிடம் ஆகிறது.

வியாபாரத்தில் பரபரப்பு சற்றுகுறைகிறது. வெயில் நேரமாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் அரிதாக வந்துக்கொண்டிருக்கின்றனர்.

மணி ஒன்றரை நெருங்குகிறது. கணக்குப்பிள்ளை யின் வயிற்றைப் பசி கிள்ளத்தொடங்குகிறது மீண்டும் கடிகாரத்தைப் பார்க்கிறார். ஊழியர்களும் பார்க்கின்றனர்.

கணக்குப்பிள்ளை சிரித்தவாறு, “இனி வந்துடுவார்” என்கிறார். முதலாளி சாப்பிடச் சென்றால் ஒருமணி நேரம் ஆகும் என்பது அனைவருக்கும் தெரியும்.

யானைவரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதைப்போல் அய்யாக்கண்ணு முதலாளி சாப்பிட்டு விட்டு வருவதை ‘ஏவ்’ எனவிட்ட ஏப்பம் உணர்த்து கிறது. அதைச் செவிமடுத்ததும் எல்லார் முகத்திலும் முல்லைப்பூ மலர்கிறது.

முதலாளி வந்ததும் துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொள்கிறார். பிறகு அதை நாற்காலி விளிம் பில் போட்டுவிட்டு அமர்கிறார். பற்களுக்கு இடையில் குச்சி விளையாடிக் கொண்டிருக்கிறது; கணக்குப்பிள் ளையை நோக்கி “நீங்க போயிச் சாப்பிட்டுவிட்டு வாங்க” என்கிறார். அதில் நான் கடையைப் பார்த்துக்கொள்கி றேன்’ எனும் உட்பொருளும் ஒளிந்துகிடக்கிறது.

கணக்குப்பிள்ளை சாப்பிடச் செல்கிறார்.

பசியோடு சென்ற கணக்குப்பிள்ளை தம் முதலாளி யின் மனைவியைப் பார்க்கிறார். அவள் சிரித்த முகத் தோடு நிற்கிறாள், அவள் முகத்தைப் பார்த்ததும் பசி சற்று அடங்கியதைப் போன்ற உணர்வு! இருந்தாலும் கையைக் கழுவிவிட்டு வருகிறார். அவள் போட்ட வாழை யிலை முன் அமர்கிறார்.

தலைவாழையிலைத் தலைப்பில் உப்பு, அதையடுத்து வாழைக்காய்ப் பொறியல், தக்காளிப்பச்சடி, கீரை மசி யல், புடலங்காய்க் கூட்டு, உருளைக்கிழங்கு அவியல் இப் படி எடுத்து வைக்கிறாள் முதலாளியின் மனைவி. அது கணக்குப்பிள்ளையின் கண்களுக்கு விருந்தாகப் படுகிறது. பரிமாறியதில் இருந்தே கணக்குப் பிள்ளைக்கு அன்று அமாவாசை என்று புரிந்து விடுகிறது; அன்று அமாவா சையாக இருந்தாலும் அவருக்குப் பவுர்ணமிதான். இறுதியில் தும்பைப் பூ நிறத்தில் சோறுவைத்து நெய் வார்க்கிறாள். அவள் பேச்சும் நெய் மணக்கிறது. வெண் முத்துப் பற்களைக் காட்டி சாப்பிடுங்கள், என்கிறாள். “இவ்வளவுதானா வேறெதுவும் இல்லையா?” என்று கணக்குப்பிள்ளை பகடிமேலிடவினவுகிறார். அவர் கேள்வி யில் மற்றொன்றும் தொக்கி நிற்கிறது. அவளுக்குப் புரிந்தும் விடுகிறது. “அதுக்கு இப்ப என்ன சும்மா சாப்பிடுங்க” என்று உதடுகளில் புன்னகை நெளிய, அவர் சாப்பிடுவதை முதலாளியின் மனைவி பார்த்துக் கொண்டே இருக்கிறாள்.

இப்படி எத்தனையோ நாட்கள். அவள் தன் கணவ னைவிடக் கணக்குப்பிள்ளையைக் கவனித்து வருகிறாள்.

இறுதியில் பாயாசம் ஊற்றுகிறாள். அப்பளம் எடுத்து வைக்கிறாள். கணக்குப்பிள்ளை அப்பளத்தை நொறுக்கி பாயாசத்தோடு பிசைந்து வாயில் வைக்கிறார். தம் வாயில் மட்டும் வைக்கவில்லை அவள் வாயிலும் வைக்கிறார். இருவருக்கும் பாயாசம் இனிக்கிறது.

ஒருவழியாக அறுசுவை உண்டி முடிகிறது.கணக்குப் பிள்ளை கடைக்குச் செல்கிறார்.

கடையில் வேலை செய்கிறவர்கள் சாப்பிடச் செல் கின்றனர். அவர்களைக் கண்டதும் அவள் சோறு கறிகளை எடுத்துவைத்துவிட்டு தன் அறைக்குள் சென்றுவிடு கிறாள். வேலைக்காரர்கள் தாங்களே சோறு கறி எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடுகின்றனர்.

“நம் முதலாளி மனைவி ரொம்ப நல்லவங்கடா! நாம வந்ததும் எல்லாம் எடுத்து வச்சிட்டுப் போயிடுறாங்களே” என்கிறார் ஒருவர்.

“அதுதாண்டா குடும்பப்பொண்ணுக்கு அழகு. நம்ம எதுக்கச் சிலதுக பல்லைக் காட்டுதே அதைப்போலவா இருக்கச்சொல்லுறே” என்றார் மற்றவர்.

“அதுசரி கணக்கப்பிள்ளை வரும்போதும் இப்படித் தான் செய்வாங்களோ”

“இதெல்லாம் ஏன் நமக்கு. சாப்பிடு!”

“அவருக்கிட்டேயும் இப்படித்தான் நடந்துகிடு வாங்கணு நினைக்கிறேன்”

“சரி சரி சாப்பிடு”

ஒரு வழியாக அவர்கள் சாப்பாடு முடிகிறது. அவர் கள் கடைக்குச் செல்கின்றனர்.

நாட்கள் நகர்கின்றன. மகிழ்க்கிடையில் தேர் ஓடிக் கொண்டிருக்கிறது. கணக்கப்பிள்ளை த ம் கைவரிசை யைக் காட்டாமல் இல்லை. அவர் பெயரில் உள்ள வங்கிக் கணக்குப் புத்தகத்தில் எப்படியோ தொகை கூடிக் கொண்டே இருக்கிறது. கடைக் கணக்கில் ஒதுங்குவது போக முதலாளியின் மனைவி மூலமும் கொஞ்சம் ஒதுங்கு கிறது. இந்நிலையில் வெறிச் சோடிக்கிடந்த வீட்டில் “வீயா வீயா” என்னும் கத்தல். அது அவர்கள் காது களில் விசை பாய்ச்சுகிறது. திருமணம் ஆகி நீண்ட நாட் களாகப் பிள்ளையே இல்லாமல் இருந்த வீட்டில் பிள்ளை பிறந்திருப்பதை நினைக்கும்போதும், தந்தையாகிவிட் டோமே என நினைக்கும்போதும் முதலாளி நெஞ்சில் பன்னீர் கொட்டியது; அத்தனை மகிழ்ச்சி அவருக்கு.

அய்யாக்கண்ணு மனைவியும் பிள்ளையைப் பார்த்துப் பார்த்து மகிழ்கிறாள். வாழ்வில் இன்பம் சேர்த்த கணக் குப்பிள்ளையை நினைக்கும்போது அவள் உள்ளம் இனிக்கி றது. அவர்மேல் உள்ள அன்பும் கூடுகிறது. அதே நேரத் தில் அய்யாக்கண்ணுக்கு மனைவிமேல் மேலும் அன்பு கூடு கிறது. கேட்டதை இல்லை என்று சொல்லாமல் வாங்கிக் கொடுக்கிறார். கணக்குப்பிள்ளைக்குச் சுக்கிரதிசை நடக்கி றது என்றாலும் நெஞ்சில் சுமை ஏறுகிறது.

எனக்குப் பிறந்த பிள்ளை, அய்யாக்கண்ணை அப்பா என அழைப்பதா?’ என்று நினைக்கும்போது அவருக்கு வேதனையாக இருக்கிறது ‘தாயையும் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு போய்விட்டால்!’ என எண்ணு கிறார். எந்தக் கணக்கையும் எளிதில் போட்டுவிடும் அவர்க்கு இந்தக் கணக்கைப் போட்டுப் பார்க்க முடிய வில்லை. தலையே சுற்றுகிறது.

‘பிள்ளை பிறந்தால் போதும்’ என்று எதற்கும் அணியமாகி விட்டிருந்த அய்யாக்கண்ணு மனைவிக்கும் ஞானம்’ பிறக்கிறது. கணக்குப்பிள்ளைக்குப் பிறந்த பிள்ளை என் கணவரை அப்பா என்றுதான் அழைக்கப் போகிறது. அது அவரை அப்பா என்று அழைக்கும்போது எனக்கு கணக்குப்பிள்ளை நினைவுதானே வரும்!’ என நினைக்கிறாள். அவள் நெஞ்சம் துணுக்குறுகிறது.

அய்யாக்கண்ணுக்கு எந்தக் கவலையும் இல்லை. அவர் பிள்ளைக்குப் பெயர் வைப்பதில் ஈடுபடுகிறார்; தம் பெயரையும், மனைவியின் பெயரையும், பிள்ளை பிறந்த நேரத்தையும் கணியரிடம் சொல்லி பெயர்ப் பொருத் தம் பார்க்கிறார். கணியர் கணக்குப் போடுகிறார். கணக் கப்பிள்ளையின் கணக்கு அதில் வரவில்லை. எப்படியோ ஒரு பெயரைத் தெரிவு செய்கிறார்.

பெயரும் சூட்டப்படுகிறது. பிறப்புச் சான்றிதழும் எடுக்கப்படுகிறது. பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் அய்யாக்கண்ணு என்று இருக்கிறது. அந்தச் சான்றிதழைப் பார்த்த கணக்கப்பிள்ளையின்

உறுத்துகின்றன. ‘தொந்திப்பயலுக்கா பிறந்தது?’ என்று முணுமுணுத்தபடி நேராகப் பிள்ளையைப் பார்க்கும் சாக் கில் முதலாளி மனைவியிடம் போகிறார். அவரைக் கண்ட தும் அவளுக்கு நெஞ்சம் குளிர்கிறது. ஆனால் இனம் புரி யாத அச்சம் அவளை ஆட்டிப்படைக்கிறது. கணக்கப் பிள்ளையின் சுருங்கிப்போயிருந்த முகத்தைப் பார்த்ததும் அவள் முகமும் சுருங்குகிறது. அவரையே பார்க்கிறாள்.

“இந்தா பாரு நான் ஒருமுடிவுக்கு வந்திருக்கிறேன்” என்கிறார். — “என்ன முடிவு?” என்கிறாள்.

“நாம் இரண்டு பேரும் இனிமே இங்கே இருக்கக் கூடாது?” என்கிறார். – “ஏன்?”என்கிறாள்.

“எனக்கென்னவோ பிடிக்கலே. என் பிள்ளை என்னை அப்பா என்று கூப்பிடாமல் அவரைத்தானே அப்பா என்று அழைக்கப்போகிறது! அதை என்னால் பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது” என்கிறார்.

“அதுக்காக…?”

“நாம் எங்கேயாகிலும் போய்விடுவதுதான் நல்லது”

“இந்தா பாருங்க. நாம் போன குட்டு வெளிப்பட் டுப்போகும். பலரும் பலமாதிரி பேசுவாங்க. உங்களுக் கும் கெட்ட பேரு! நீங்க வேணும்னா போங்க. போய் உங்களுக்குப் பிடிச்ச பெண்ணாப்பார்த்துத் திருமணம் செஞ்சுகிட்டு இருங்க” என்கிறாள்.

கணக்கப்பிள்ளை அவளையே கூர்ந்து பார்க்கிறார் “ஓ அவ்வளவு தூரத்துக்கு வந்திட்டியா? காசு இல்லாத என்னை இப்போது பிடிக்கலியா? அப்படியா! பிள்ளையை எனக்கிட்டக் கொடுத்துடு” என்கிறார். கணக்குப்பிள்ளை இதைச் சொல்லியதும் அவள் துடிக்கிறாள். அவள் நெஞ் சில் தீத்துண்டே விழுந்துவிடுகிறது. “என் உயிரை வேண்டுமானாலும் கொடுப்பேனே தவிர பிள்ளையை மட் டும் கொடுக்கமாட்டேன்” என்கிறாள்.

கணக்குப்பிள்ளை கையைக் கட்டிக்கொண்டு அங்கு மிங்குமாக நடக்கிறார். அவர் மனக்கண்முன் அய்யாக் கண்ணுக்கு உள்ள வீடு-வாசல், கடை எல்லாம் தெரிகின் றன. நீண்ட பெருமூச்சு விடுகிறார். “இங்கே வளர்ந்தா லும், அய்யாக்கண்ணையே அப்பா என்று கூப்பிட்டாலும் பிள்ளை என் பிள்ளைதானே! இது அவருக்கும் தெரிந்த உண்மைதானே!” என்று அவர் மனத்தில் ஓடுகிறது.

“சரி உன் விருப்பப்படியே பிள்ளை இங்கேயே இருக் கட்டும்! ஆனா ஒண்ணு நான் இங்கே இருக்கமாட்டேன்” என்கிறார். அவள் கணக்குப்பிள்ளையைக் கூர்ந்து பார்க் கிறாள். அவள் கண்களில் நீர்த்திவலை கட்டுகிறது. கணக் குப்பிள்ளையும், அவளைப் பார்க்கிறார். இருவர் சிந்தனை யும் இருவேறு திசைகளில் கிளைவிட்டுப் பாய்கின்றன.

அவள் கண்ணீரைத் துடைத்தவாறு, “ஏன் அழு றீங்க? நீங்க ஒரு பொண்ணைப் பார்த்துத் திருமணம் செஞ்சுக்கங்க” என்கிறாள். பிறகு அங்கிருந்து செல்கிறாள் அலமாரியைத் திறக்கிறாள். நகை கைநிறைய வருகிறது. தங்க நகைகளைக் கணக்குப்பிள்ளையிடம் கொடுக்கிறாள். “உங்களுக்குத் தொழில் தெரியும். நான் முன்பு கொடுத்த பணத்தைக்கொண்டு ஏதாகிலும் கடை வையுங்கள். இந்த நகைகளை உங்களுக்கு வரப்போகும் மனைவிக்குக் கொடுங்கள்” என்கிறாள்.

கணக்குப்பிள்ளை சிறிது நேரம் சிலையாகிவிடுகிறார், பிள்ளை அழுகிறது. உணர்வுபெற்று பார்க்கிறார். அவள் கைகளில் கணக்குப்பிள்ளையின் பிள்ளை இருக்கிறது. இல்லை இல்லை அய்யாக்கண்ணுவின் பிள்ளை இருக்கிறது.

– குங்குமக் கன்னத்தில் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.

Elangkannan 1938இல் சிங்கப்பூரில் பிறந்தார். இவருடைய  தாயார் சிங்கப்பூரில் பிறந்தவர். தந்தை தமிழ் நாட்டில் பிறந்தவர். கலைமகள் தொடக்கப் பள்ளியில் கல்வியைத் தொடங்கிய இவர் இண்டர்மீடியட் வரை படித்தார். பின்னர் தகவல் கலை அமைச்சில் தமிழ்ச் தட்டச்சராக அரசுப் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றார். இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் பாலகிருட்டிணன். பரிதிமாற்கலைஞர்     (சூரியநாராயண சாஸ்திரி) மறைமலையடிகளைப் பின்பற்றி இளங்கண்ணன் என்று பெயரை தமிழ்ப் படுத்தி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *