கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 14, 2025
பார்வையிட்டோர்: 5,865 
 
 

நல்ல தண்ணீர் எனும் சுவை மிகுந்த பவானி ஆற்று நீரையே பிறந்ததிலிருந்து குடித்துப்பழகிவிட்ட சங்கவிக்கு தனது மாமாவினுடைய கிராமத்து தோட்டத்து வீட்டில் இருந்த கிணறு மூலமாக‌ எடுத்த தண்ணீரைக்குடிக்கவே பிடிக்கவில்லை.

தனது தாய் வீடான மாமன் வீட்டிற்கு திருவிழா விற்காக சென்றிருந்த சங்கவிக்கு அந்த வீட்டினர் தண்ணீர் கொடுத்து வரவேற்றபோது வாங்கிக்குடித்தவள், “ஓய்… சுத்த சப்பை. இதையெல்லாம் குடிக்கவே பிடிக்கல. நீங்க எப்படித்தான் குடிக்கறீங்களோ….? எங்க வீட்ல நல்ல தண்ணி மட்டும் தான். சாப்பாடு செய்யறதுக்கும், குடிக்கிறதுக்கும், குளிக்கிறதுக்கும் நல்ல தண்ணிதான்….” பெருமையாகப்பேசினாள்.

“எங்களுக்கு பழகிப்போச்சு. கெணத்துத்தண்ணி, போர் தண்ணிதான் குடிக்கிறோம், குளிக்கிறோம். ஆத்து தண்ணி பைப்லைன் வசதி டவுனுக்கு மட்டும் தான். கிராமத்துல, அதுவும் தோட்டத்துல இருக்கிற எங்களுக்கு தனியா பைப் லைன் கொண்டு வர முடியாது. எங்க முன்னோர்கள் இதையே குடிச்சு வாழ்ந்தாங்க. உன்னோட அம்மா கூட கல்யாணம் ஆகிற வரைக்கும் இந்தத்தண்ணி தான் குடிச்சாங்க….” என ஆதங்கத்துடன் மாமன் மனைவி ஆனந்தி கூறிய போது கிராமத்திலிருக்கும் மாமன் குடும்பத்தினரின் நிலையை விட அனைத்திலும் நகரத்தில் வாழும் தங்களது நிலை உயர்வாக இருப்பதை நினைத்து மிகவும் பெருமைப்பட்டாள் சங்கவி.

சங்கவிக்காகவே நகரத்துக்கு சென்று ஆற்று நீரைக்கொண்டுவந்து கொடுத்தார் மாமன் சரவணன். அதன் பின்பே மகிழ்ச்சியானாள்.

திருவிழாவிற்கு வந்திருந்த மற்ற உறவுகளுக்கு கிணற்று நீரையே கொடுத்ததோடு அந்தக்குடும்பத்தினரும் குடித்தது ஆச்சரியாமாக இருந்தது. தனது தாயும் கிணற்று நீரையே குடிப்பதைப்பார்த்து ஆச்சரியப்பட்டாள்.

“நல்லதுன்னா அதுக்கு எதிரானது கெட்டது தானே….? ஆத்து தண்ணி நல்ல தண்ணீன்னா கிணத்துத்தண்ணி கெட்ட தண்ணியா…?” தனது மாமன் மகள் மஞ்சுளா கேட்ட சிக்கலான, அதே சமயம் சரியான கேள்விக்கு சங்கவியால் பதில் சொல்ல முடியவில்லை. 

அடுத்த நாள் தனது மாமன் வீட்டிலிருந்து உறவினர்களுடன் கிடா வெட்டு விருந்து நடக்கும் இடமான மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு உறவுகளுடன் சங்கவியும் சென்றாள்.

அங்கே சென்று பொங்கல் வைத்து, கிடாவெட்டு நிகழ்வு முடிந்தவுடன் மண்டபத்தில் விருந்து ரெடியாகும் வரை கோவிலின் அருகே ஓடும் பவானி ஆற்றில் குளித்து விட்டு வரலாம் என சம வயது பெண்கள் கூற, பிறந்தது முதல் இருபது வயதாகும் தற்போது வரை விரும்பி குடிக்கும், குளிக்கும் ஆற்று நீரை ஆற்றிலேயே தாகம் தீரக்குடிப்பதோடு, மனதாரக்குளித்துவிட்டும் வரலாம் எனும் ஆசையுடன் தானும் ஆற்றுப்பகுதிக்குச்சென்றாள்.

ஆற்றை நெருங்க நெருங்க தனது ‘நல்ல தண்ணீர்’ எனும் கற்பனைக்கோட்டை இடிந்து சரிவதை உணர்ந்தாள். ஆம் ஆற்றை நெருங்கிய பலரும் மூக்கைப்பிடித்துக்கொண்டு நின்றது தான் அதற்குக்காரணம்.

“செத்து நாலு நாள் இருக்கும் போலிருக்கு. தண்ணி ஆத்துல நெறைய போயிருந்தா அடிச்சிட்டு போயிருக்கும். குறைச்சலா போறதுனால தேங்கிற தண்ணில ஒதுங்கிருச்சு” என ஒருவர் கை நீட்டிப்பேசிய பக்கம் ஒரு பெண்ணின் சடலம் மிதந்து கொண்டிருந்ததை சிலர் முகத்தில் முகக்கவசம் அணிந்து கொண்டு அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர். அது தவிர படித்துறை அருகே குப்பைகளும், பாலிதீன் காகிதங்களும் மிதந்து தண்ணீரை சாக்கடை நீராகக்காட்டின‌. அதற்குள் கால் வைத்து இறங்கவே பலரும் தயங்கினர்.

சங்கவிக்கு பாடம் கற்பிக்க இது தான் சமயம் என புரிந்த அவளது மாமன் மனைவி ஆனந்தி “சங்கவி…. இது தான் நீ குடிக்கிற நல்ல தண்ணி…. இங்கிருந்து தான் பைப் மூலமா உங்க டவுனுக்கு வருது…” என கூற, அடுத்த நொடியே அங்கே நிற்கப் பிடிக்காமல் மண்டபத்துக்கு ஓட்டமும் நடையுமாக வந்தவள், தனது மாமாவிடம் சென்று ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த கிணற்று நீரைக் கேட்டு வாங்கிக்குடித்தாள். நேற்று சப்பையாக இருந்த கிணற்று நீர், இன்று சுவையாக இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. 

‘நேற்று கிணற்று நீரைச்சுவைத்துப்பார்த்து ‘ஓய்….’ என குடித்ததை குமட்டிய அதே நாக்கு தானே இன்றும் சுவைத்துள்ளது…?! நாக்கு கூறும் சுவையை விட, மனம் கூறும் சுவை தான் முக்கியம் போலிருக்கிறது. மனம் தனது அனுபவத்தைப்பொருத்து ஒவ்வொன்றிலும் திருப்திப்பட்டுக்கொள்கிறது, திருப்தியில்லாமலும் போகிறது. நாக்கும் மனதின் நிலைக்கேற்ப எதிர்க்காமல் தன்னை மாற்றிக்கொண்டு சாந்தமடைந்து விடுகிறது. இந்த தண்ணீர் விசயத்திலும் மனதின் மாற்றத்திற்கேற்பவே நாக்கும் நேற்றைய தனது வெறுப்பு நிலையைக்கைவிட்டு இன்று விருப்பு நிலைக்கு மாறியிருக்கிறது. மனச்சுவையின் நிலையையே நாக்கு பிரதிபலிக்கிறது’ என்பதை தற்போது புரிந்து கொண்டாள் சங்கவி.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

2 thoughts on “மனச்சுவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *