மனக்குரங்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2025
பார்வையிட்டோர்: 360 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராமசந்திரன் கையில் கடிதம் இருந்தது. அதைப் படித்து வரும்போது அவனுடைய முகத்தில் கொஞ்சங் கொஞ்சமாகப் பயத்தின் அறிகுறியும் கவலை யின் நிழலும் படர்ந்தன. படர்ந்த பின் அவை மீண்டும் கலையத் தொடங்கின. கடிதத்தை முடித்து, அவன் ஒரு பெருமூச்சு விட்டபொழுது, பெரும் புயல் அடித்து ஓய்ந்தது போல் ஆயிற்று அவன் மனம். 

அவன் தாய் எழுதியிருந்த கடிதம் அது. அதில் அவன் தமக்கை சாவித்திரி தவறிக் கிணற்றில் விழுந்துவிட்டாள் என்றும், அகஸ்மாத்தாக அவர்கள் வீட்டிற்கு வந்திருந்த அவன் மாமா கிணற்றில் குதித்து அவளைக் காப்பாற்றினார் என்றும் கடிதம் சொல்லியது. விஷயம் சுருக்கமாக இருந்தாலும், ஒரு பெரும் புயலைக் கிளப்புவதற்கு அது போதுமானதாக இருந்தது. 

ராமசந்திரன் பெருமூச்சு விட்டபோது அவனுக்கு இருந்ததெல்லாம் ஒரே ஓர் உணர்ச்சிதான். “இந்த மட்டும் சாவித்திரி பிழைத்தாளே, பிழைக்கும்படி பகவான் அருள் செய்தாரே!” என்று கடவுளிடத்தில் நன்றியறிவு ஏற்பட்டது. 

தன் மனத்துக்குள் அந்த விபத்தை அவன் கற்பனை செய்து கொண்டிருந்தான். மனம் ஒருவாறு சமாதானம் அடைந்திருந்தாலும் கடிதம் முதலில் ஒரு கலக்குக் கலக்கி விட்ட தல்லவா? அதன் விளைவு இன்னும் முற்றும் நீங்கின பாடில்லை. அப்போது சிவராமன் வந்து அவன் மன எழுச்சிகளை முற்றும் வேறு வழியில் திருப்பி விட்டான். சிவராமன் ராமசந்திரனோடு பி.ஏ. வகுப்பில் படிப்பவன். ஹாஸ்டலில் இருவரும் ஒரே அறையில் இருப்பவர்கள். மனஸ்தத்துவ சாஸ்திரத்தில் நிபுணனென்று சிவராமன் சொல்லிக் கொள்வான் ராமசந்திரன் போன்ற நண்பர்களும் அதை ஆமோதிப்பார்கள். 

அவனோடு சேர்ந்து இவ்விஷயங்களை விவாதிக்க ராமசந்திரனுக்கு ஆசை அதிகம். அவனுக்கும் சொந்தத்தில் கொஞ்சம் கற்பனாசக்தி உண்டு. இப்போது கடித சமாசாரம் தெரியவுமே சிவராமன், “சாவித்திரி தவறி விழுந்தாளென்று நிச்சயமாகத் தெரியுமா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டான். பலத்த சந்தேகம் ராமசந்திரன் மனத்தில் கிளம்பி விட்டது. “பின் எதுவாயிருக்கும்?” என்கிற சர்ச்சையில் அவன் மனம் அலைபாயத் தொடங்கிவிட்டது. “தவறி விழுவதானால், கிணற்றின் கைபிடிச்சுவர் மிகவும் தாழ்வாக இருக்கவேண்டுமே?” என்றான் சிவராமன். 

“அதுதான் இல்லை, சுவர் உயரம் மார்பு மட்டுமாவது இருக்கும்; அதற்குக் குறையாது.” 

“அப்படியானால் தவறி எப்படி விழுகிறது!” 

“தண்ணீர் எடுக்கக் கிணற்றண்டை போனவள் மயக்கம் போட்டு விழுந்துவிட்டாளாம். ‘ஹிஸ்டீரியா’ என்று டாக்டர் சொல்லுவதாக அம்மா எழுதியிருக்கிறாள்.” 

‘ஹிஸ்டீரியா’ வியாதி உள்ளவர்கள் உயிருக்கு ஆபத்து வரக்கூடியது எதையும் செய்யமாட்டார்களென்று சிவராமன் எனன சொல்லுகிறது? ராமசந்திரன் முதல் உதவிக்காக வைத்திருக்கிற சிறு வைத்தியப் புத்தகத்தில் கூடப் படித்திருக்கிறான். பலவீனத்தினால் மயக்கம் போட்டு விழுந்தால் கிணற்றுக்கு வெளியேதான் விழ நியாயம் உண்டு. இடுப்பளவு கைபிடிச்சுவருள்ள கிணற்றுக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தா லொழிய அதற்குள்ளே விழ இடமில்லையே! – இப்படி ஒவ்வொன்றாகக் காரணங்களையும், சந்தர்ப்பங்களையும், எடுத்துச் சொல்லி அவர்கள் விவாதித்து, ஒவ்வொன்றாக விலக்கினார்கள். 

“சாவித்திரி சந்தோஷமாகத்தானே இருந்தாள்?” என்று நடுவில் சிவராமன் ஒரு கேள்வியைப் போட்டான். அந்தக் கேள்வி எதற்காக? அவன் என்ன நினைக்கிறான்? ஒரு வேளை சாவித்திரி தற்கொலை செய்து கொள்ள நினைத்தா ளென்று அவனுடைய ஊகம் சொல்லுகிறதோ? ராமசந்திரன் இருதயம் ஒரு நிமிஷம் அடித்துக் கொள்வதே நின்றது. மறுநிமிஷம் அவ்வளவுக்கு அவ்வளவு வேகமாய் அடித்துக் கொண்டு உடம்பு முழுவதும் குபீரென்று வேர்வை ஆறாகக் கொட்டிவிட்டது. 

“சீசீ, அதற்குக் காரணம் வேண்டாமா? என்ன, கண்டபடி பிதற்றுகிறாயே!” என்று தன்னையும் சேர்த்துச் சொல்லிக் கொள்வது போலச் சிவராமனைக் கடிந்து கொண்டான். 

சிவராமனும், இம்மாதிரியான சந்தேகங்களைக் கிளப்பும் படியாகத் தான் பேசியது பிசகென்று உணர்ந்து பேச்சை மாற்றிக் கொண்டான். ஆனால் மனிதனுடைய மனம் அப்படி லேசில் அடங்கி விடக் கூடியதா? ஒரு சிறு துரும்பை ஆதாரமாகக் கொண்டு அது செய்கிற வேலை தான் எவ்வளவு? பிறகு தனிமையில் இருந்த நேரமெல்லாம் ராமசந்திரன் அதைப் பற்றியே எண்ணித் தவிக்கலானான். 

சாவித்திரியும் அவள் கணவனும் ஒற்றுமையாகவும் இன்பமாகவும் வாழ்ந்தார்களா? இந்தக் கேள்வி இது வரையிலும் அவன் மனத்திலே எழுவதற்குக் கடுகளவு கூட இடமில்லை. வீட்டில் அவள் அம்மாவோ அண்ணாவோ அப்படிச் சந்தேகங் கொள்ள இடமே ஏற்படவில்லை என்பது நிச்சயம். 

இதை ராமசந்திரன் நன்கு அறிவான். கணவன் நல்ல இளமையில், எடுத்ததும் முந்நூறு ரூபாய் சம்பளமுள்ள சர்க்கார் உத்தியோகத்தில் சிம்லாவில் இருக்கிறா னென்றால், அங்கே சந்தோஷக் குறைவை யார் தாம் எதிர்பார்ப்பார்கள்? அதுவும், சாவித்திரியின் முழுச் சம்மதத்தின் பேரிலேயே அவளுக்கு விவாகம் நடந்தது. அப்போது அவள் அறியாச் சிறு பெண் அல்ல. அவளுக்குப் பதினெட்டு வயசு நடந்து கொண்டிருந்தது. 

தந்தை உயிரோடு இருந்தவரையிலும் அவர் தம் பெண் கல்யாணத்தைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை. சென்னைப் பெண்கள் கலாசாலையில் அவளைச் சேர்த்துப் படிக்க விடவேண்டும் என்பதுதான் அவர் விருப்பம். இது விஷயத்தில் அவருக்கும் அவர் மனைவிக்கும் பலத்த அபிப்பிராய பேதம் ஏற்பட்டதால் அது நிறைவேறாமலே இருந்தது. தனியாக வெளியூரில் வயசு வந்த பெண்ணை விடுவதற்கு அவள் சம்மதிக்கவில்லை. ‘ஸ்கூல் பைனல்’ பரீக்ஷை கொடுத்து விட்டுச் சாவித்திரி வீட்டிலேயே இருந்தாள். திடீரென்று தந்தை இறந்து போகவே, பிறகு ஒரு நிமிஷமும் பெண்ணைக் கல்யாணமில்லாமல் வைத்துக் கொள்ளத் தாய் சம்மதிக்கவில்லை. 

சாவித்திரியின் அதிருஷ்டம் நல்ல வரனாய்க் கிடைத்தான். அதில் அவளுக்கு இருந்த சந்தோஷம் ராமசந்திரனுக்கு நன்றாகத் தெரியும். அவளுக்கும் ராமசந்திரனுக்கும் ஒன்றரை வயசுதான் வித்தியாசம். இந்தச் சொற்ப வயசு வித்தியாசத்தினாலோ என்னவோ, அவர்கள் இருவருக்குள்ளும் அன்பு அதிகமாக இருந்தது. ஐந்தாறு வயசு மூத்தவனான அவர்கள் தமையனைத் தனி என்றுதான் சொல்லவேண்டும். 

ராமசந்திரன் மனத்தில் இவ் விஷயங்க ளெல்லாம் ஓடின. அவனுக்குத் தெரிந்த வரையில் சாவித்திரிக்கு மன வருத்தம் ஒன்றும் ஏற்படவில்லை; ஏற்பட்டால் அவனை அறியாமல் இருக்க முடியாது. சாவித்திரிக்கு ஏதாவது மன வருத்தம் இருந்தால் அவனிடம் சொல்லாமல் இருப்பாளா? ஒரு போதும் மாட்டாள். பேருக்குச் சாவித்திரி மூத்தவள். ஆனாலும், ராமசந்திரன் தான் அவளை விடப் பெரியவன் போல நடந்துகொள்வான். சிறு வயசிலிருந்து விளையாட்டுக்களில் கூட அவன் சொற்படிதான் நடப்பாள். அப்படி இருக்கிறவள் உயிரை வெறுக்கக் கூடிய மனவருத்தம் இருந்தால், அவனிடம் தெரிவிக்காமல் இருக்க மாட்டாள் என்பது நிச்சயம். 

ஆனால் அவள் கல்யாணமான பிறகு, இந்த இரண்டரை வருஷ காலமாக அவர்கள் இருவரும் அதிகமாகச் சேர்ந்தே இருக்கவில்லை. அவன் காலேஜ் படிப்புக்காகச் சென்னை வந்துவிட்டான். அவள், கணவன் வீடு போய்விட்டாள். கல்யாணத்தின் போது ஆறு மாதம் கழித்து அழைத்துப் போவதாக அவள் கணவன் சொல்லி யிருந்தான். ஒரு மாதமானவுடனே அவளைக் கொண்டு வந்து விடும்படி கடிதத்தின் மேல் கடிதம் போட்டு வருவித்துக் கொண்டான். இப்போது அந்த நிகழ்ச்சி வேறு விதமான ரூபத்தில் வந்து புகுந்தது. அதோடு அந்தச் சமயத்தில், “சொன்ன சொற்படி நடக்கமாட்டான் போலிருக்கிறதே. இதுதான் முன்பின் தெரியாத இடத்துச் சம்பந்தத்தின் பலன். நல்லவர்கள், கெட்டவர்கள் என்பது கூடத் தெரிகிறதில்லை” என்று அம்மா வருந்தினதும் நினைவுக்கு வந்தது. அது மட்டுமா? சாவித்திரிக்கு முதல் பிரசவமாகி மூன்றாம் மாதத்தில் அவளையும் குழந்தையையும் பார்க்க வந்த அவள் கணவன் அவளை உடன் அழைத்துப் போவேனென்று பிடிவாதம் பிடித்து அழைத்துச் சென்றானே! 

சாவித்திரி குழந்தையுடன் ஊருக்குப் போன அன்று அவர்கள் வீடு இருந்த காட்சி அவன் மனக்கண் முன் அப்படியே வந்தது. “இப்படித் தான் நீக்குப்போக்குத் தெரியாமல் ஒருவன் நடப்பானே! உத்தியோகம் செய்து விட்டால் போதுமா?” என்று அவன் மாமாவும் அம் மாமியும் பேசி அம்மாவின் வருத்தத்தை அதிகப் படுத்தினார்கள். “ஒரு மாதம் கழித்து நான் படிக்கப் போகு முன் கொண்டு வந்து விடுகிறேன்” என்று ராமசந்திரன் சொன்னதற்கு அத்திம்பேர் ஒப்புக் கொள்ளவில்லை. “சிறு குழந்தையையும் அவளையும் அழைத்துக் கொண்டு அவ்வளவு தொலைவு தனியே பிரயாணம் செய்ய உன்னால் முடியாது; அதுவும் இந்த யுத்த காலத்தில்” என்று சொல்லிவிட்டார். சாவித்திரிகூட, “எப்படிடா சின்னக் குழந்தையை அம்மா இல்லாமல் என்னால் தனியாக அந்தத் தூரதேசத்தில் வைத்துக் கொண்டிருக்க முடியும்?” என்று ராமசந்திரனிடம் சொல்லிக் கவலைப் பட்டாள். இவ்வளவுக்கும் அண்ணா பேசாமல் தான் இருந்தான். 

இன்று இந்த நிகழ்ச்சிகளை நினைத்தபோது ராமசந்திரனுக்குக் கோபம் பொங்கி வந்தது. “பெரியவனா யிருந்தும் ஒரு வார்த்தை சொல்லாமல் இருக்கிறானே, ‘நான் எப்படியாவது ஆபீசில் லீவு கேட்டு அழைத்து வருகிறேன். பிரசவித்த உடம்பு கொஞ்சம் தேறட்டும்’ என்று சொல்லக் கூடாதா?” என்று அவர்கள் தாய் அவனிடம் சொல்லிச் சொல்லி வருந்தினாள். அண்ணாவின் வேலை பாங்கி வேலைதான். லீவு கிடைக்காமல் போய் விடாது. ஆனால் அவன் எப்போதுமே ஒரு மாதிரி தான். ஒன்றிலும் அதிகமாகப் பட்டுக் கொள்ள மாட்டான். அதுவும் அவனை எதிர்பார்க்கும் சமயத்தில் மூக்கை உடைப்பது போலச் செய்வது அவன் வழக்கம். அண்ணா இருக்கும் பொழுது சிறுவனான ராமசந்திரன் சொல்லுக்கு மதிப்பு ஏது? 

சாவித்திரியை அவள் கணவன் அழைத்துப் போனான். ஆறு மாதத்திற்கெல்லாம் அவள் மறுபடியும் கர்ப்பம் தரித்தாள். உடம்பு பலஹீனம் ஏற்படுவதற்கு நியாயம் இருக்கிறது. ஆனால், உயிரை எதற்காக மாய்த்துக் கொள்ள வேண்டும்? அந்த மாதிரி அவளுக்குச் சங்கடம் இருப்பதற்குச் சிறிதும் இடமில்லையே. 

இந்தச் சமயத்தில் அவன் சமீபத்தில் படித்த புத்தக மொன்று நினைவிற்கு வந்து மனத்தைச் சிறிது கலக்கியது. அது ஸ்திரீ புருஷர்களின் சரீர சம்பந்தமான இச்சைகளைப் பற்றின புத்தகம். ஆண் பெண் இருவரில் ஒருவருடைய அசாதாரண வேட்கையினால் மற்றொருவருக்கு ஏற்பட்ட பொறுக்க முடியாத கஷ்டத்தைப் பற்றி அதில் விரிவாக வர்ணித்திருந்தது. ஏதோ ஜோடனைக் கதை; உண்மை வாழ்க்கையில் நடக்கக் கூடியதல்ல என்று தான் ராமசந்திரன் அதைப் படித்துக் கொண்டிருந்த பொழுது நினைத்தான். இப்பொழுது சாவித்திரியைப் பற்றிய நினைவோடு அந்தப் புத்தகத்தில் இருந்த செய்திகளும் பக்கத்தில் நின்றன. அதில் கூறியவை ஏன் உண்மையாக இருக்கக் கூடாது? சாவித்திரியின் செய்கை அதற்கு உதாரணமாக இருப்பதில் என்ன தவறு? – இந்தச் சந்தேகம் எங்கிருந்தோ அவனையும் அறியாமல் உதித்தது. மிகுந்த சந்தோஷத்தில் தொடங்கிய வாழ்க்கை கூட ஒன்றிரண்டு பிரசவத்திற்குப் பிறகு துன்பத்தில் முடிந்ததாக அதில் சொல்லப் பட்டிருந்தது. அப்படி ஏதாவது இருந்தால் சாவித்திரி அதை எப்படி யாரிடம் சொல்லுவாள்? பிரசவித்த பலஹீனமான உடம்புடன் சாவித்திரி அவன் அகக் கண்முன்னே நின்றாள். அவளுக்கருகில் ஆரோக்கியமான திடகாத்திரத்தோடு அவள் கணவன் நின்றான். மாறி மாறிக் காட்சியளித்த இருவரிடையே ஏன் அந்த மாதிரி ஒரு சிக்கல் இருக்கக் கூடாது? இந்தக் கேள்வி அவனைப் பொறுக்க முடியாத வேதனைக்கு உள்ளாக்கியது. ‘வெளியிலே நாம் கண்ணாரப் பார்ப்பதை நம்பக்கூடாது. உள்ளே, மனத்துக்குள்ளே மனிதர்கள் நேர் விரோதமாக இருக்கிறார்கள்’ என்ற தத்துவம் அவன் சந்தேகத்துக்குத் துணை செய்தது. 

அத்திம்பேர் கிறிஸ்துமஸ் லீவுக்கு வரப் போவதாக அம்மா எழுதியிருந்தாள். முதலில், சாவித்திரி பிரசவித்து நான்கு மாதங்கள் ஆகிறபடியால் அழைத்துப் போவதாக இருந்தாராம். இப்பொழுது இந்தச் சமாசாரத்தை அண்ணா அவருக்கு எழுதி யிருக்கிறானாம். முக்கியமாக ஓய்வு வேண்டு மென்று டாக்டர் சொல்லுகிறாராம். அதனால் அவர் அழைத்துப் போக மாட்டாரென்று நினைப்பதாக அம்மா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாள். அவர் வரப் போவதற்கும் சாவித்திரி கிணற்றில் விழுந்ததற்கும் சம்பந்தம் ஏதாவது இருக்குமோ? இவ்விதம் நினைக்கவுமே. ஏதோ ஆபத்தான விஷயத்தில் நுழைவதாக அவனுக்குத் தோன்றிற்று. கண்டபடி மனத்தை அலைய விடக் கூடாது என்று தீர்மானித்தான். இன்னும் ஒரு வாரத்தில் அவனே கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ஊர் போகப் போகிறான். சாவித்திரியோடு மனம் விட்டுப் பேச வேண்டும். ஏதாவது சிறிது சந்தேகம் தான் நினைத்தபடியே தோன்றினாலும், தக்க பரிகாரம் செய்ய வேண்டும். சாவித்திரியைத் தங்கள் வீட்டிலேயே என்றும் வைத்துக் கொள்ளும்படி நேர்ந்தால், அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை, அண்ணா செய்யா விட்டால் கூடத் தான் செய்யவேண்டும். இன்னுமா சிறு பிள்ளை? பட்டணத்தில் தனியே ஹாஸ்டலில் வசித்ததில் அவனுக்கு நல்ல தைரியம் ஏற்பட்டிருக்கிறது. 

இப்படி ஒரு வகையான முடிவுக்கு வந்த பிறகு தான் அவனுக்குத் தன் நினைவு வந்தது. அன்று ஞாயிற்றுக் கிழமை: காலேஜ் இல்லை ; பாதிப் பகலைப் படிக் காமல் கண்டபடி யோசனையில் அலையவிட்டது அசட்டுத் தனம் என்று எண்ணினான். 

சிவராமன் வேண்டுமென்றே நம்மைத் தனியே விட்டுப் போயிருக்கிறான். இருக்கட்டுமே, நாமும் எங்காவது வெளியில் போய் வந்தால் போகிறது. உடனே தன் மாமாவின் பெண்ணும் அவள் அகமுடையானும் மயிலாப்பூரில் வசிப்பது அவன் நினைவிற்கு வந்தது. அவன் மாமா மாப்பிள்ளை ஒரு டாக்டர். டாக்டர் போர்டு தொங்க விட்டுச் சில வருஷங்கள் ஆனாலும், வரும் படி அதிகம் இல்லாதவன். ராமசந்திரனோடு அவனுக்குப் பேச அவகாசம் நிறைய இருக்கும். ‘நாம் படித்த அந்தப் புத்தகத்தைப்பற்றி டாக்டரான அவன் அபிப்பிராயத்தைத் தெரிந்து கொண்டால் என்ன?’ இந்த எண்ணம் தோன்றினதுதான் தாமதம்; அவன் உடனே மயிலாப்பூரை நோக்கிச் சென்றான். 

சாவித்திரி கிணற்றில் விழுந்தது, காப்பாற்றப்பட்டது எல்லாம் அவர்களுக்கும் முன்பே தெரிந்திருந்தன. அவனுடைய மாமா தம் பெண்ணுக்கு எல்லாவற்றையும் எழுதியிருந்தார். ராமசந்திரனைக் காணவுமே அவன் மாமா பெண், “சாவித்திரி பிழைத்தது புனர் ஜன்மமாமே! நல்ல வேளை! அப்பா அங்கிருந்தது நல்லதாய்ப் போச்சு” என்றான். 

“ஆமாம்” என்றான் ராமசந்திரன். அந்தப் பேச்சைத் தொடர்ந்து பேச அவன் விரும்பவில்லை. சாவித்திரிக்கு நல்ல வரன் கிடைத்ததில் அவன் அம்மாமிக்கு, ஏன் அவன் அம்மங்காளுக்குக் கூடப் பொறாமை இருந்த தென்பது அவனுக்குத் தெரியும். ‘ஏதோ ரொம்ப இரங்குவது போலத்தான் நடிக்கிறாள்!’ என்று நினைத்துக் கொண்டான். 

“இந்தப் பக்கமே வருகிறதில்லையே! உட்காரு; புதுப் பால் வந்திருக்கு ; நல்லதாய்க் காபி கொண்டு வருகிறேன். சாப்பிட்டு விட்டுப் போகலாம்” என்று எழுந்து உள்ளே சென்றாள். அதுதான் சமயமென்று தான் நினைத்து வந்த பேச்சை மாமா மாப்பிள்ளையுடன் தொடங்கினான் ராமசந்திரன். பிறகு பேச்சு ஸ்வாரஸ்யத்தில் மாமா பெண் காபி கொண்டு வைத்ததையும், தானே அதை எடுத்து அருந்தினதையுங் கூட அவன் தெரிந்து கொள்ள வில்லை. மணி ஏழு அடித்த பிறகுதான் ஹாஸ்டலுக்கு நாழிகையானது தெரிந்து விடைபெற்றுச் சென்றான். 

ஒரு மணி நேரம் டாக்டரோடு செய்த சம்பாஷணையில் அவன் தெரிந்து கொண்டது அதிகம் இல்லை. “வைத்தியப் புத்தகத்தை எல்லாம் கதைப் புத்தகமாக அடித்துச் சமூகத் தொண்டிற்குப் பதில் சமூகக் கெடுதல்களைச் செய்கிறார்கள். ஜனங்களுக்கு அரைகுறை அறிவினால் கெடுதியும், வைத்தியத் தொழிலுக்குப் பெருத்த அபகாரமுமே ஏற்படுகின்றன” என்று அவன் வெகு ஆத்திரத்தோடு பேசினான். தான் தெரிந்துகொள்ள வேண்டுமென்று எண்ணிய விஷயத்தில் அவன் சந்தேகம் தீரவே இல்லை. 

ஹாஸ்டலுக்கு வந்தபின், இந்த விஷயத்தைப் பற்றிச் சிந்தனை செய்யவே கூடாது என்று சங்கற்பம் செய்து கொண்டான். ஆகவே, ஊருக்குப் போகும் வரையில் சிவராமனோடு இது விஷயமாகப் பேசவே இல்லை. அடியோடு மறந்துவிட வேண்டு மென்றே ராமசந்திரன் பேசாதிருந்தான். 

டாக்டரோடு விவாதித்ததில் தனக்கு உண்டான சந்தேகத்தை வேறிடத்திலும் பரவ இடம் கொடுத்திருப் போமோ என்று அவன் சிறிதும் சிந்திக்கவில்லை. ஆனால் அவன் மாமா பெண், “என்ன, ராமுவோடு பேச்சுப் பலமாயிருந்ததே? என்னை நீங்கள் இருவரும் கவனிக்கவே இல்லையே?” என்று கணவனைக் கேட்ட பொழுது, “சிறு பிள்ளைகள் படிக்கக் கூடாத புத்தகத்தைப் படித்துவிட்டு ஏதேதோ நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மூளைக் குழப்பத்தில், சாவித்திரி கூடத் தவறித்தான் விழுந்தாளோ, வேறு ஏதாவது காரணம் இருக்குமோ என்று இவனுக்குச் சந்தேகம் போலிருக்கிறது” என்று அவன் சொன்னதிலிருந்து அவள் ஒருவாறு இவன் சந்தேகத்தை ஊகித்திருந்தா ளென்று தெரிந்தது. அவள் சும்மா இருப்பாளா? மறுநாளே ஊரிலிருந்த தன் தாய்க்கு எழுதின கடிதத்தில் அது மாதிரி நினைக்க இடமுண்டா என்று கேட்டதோடு நில்லாமல், ராமு சந்தேகிக்கிறா னென்றும் எழுதி வைத்தாள். அவள் அம்மாவுக்கு நாத்தனாரிடத்தில் என்றுமே பொறாமை உள்ளூறப் புகைந்து கொண்டிருந்தது. நம் மாப்பிள்ளை அவ்வளவு பரீக்ஷை களையும் கொடுத்துவிட்டு, வரும்படி இல்லாமல் திண் டாடும்பொழுது, நாத்தனாருக்கு மட்டும் சர்க்கார் உத்தியோகத்தில் நல்ல மாப்பிள்ளை கிடைத்து விட்டானே என்கிற பொறாமை. ‘மீனாவைவிடச் சாவித்திரி என்ன விதத்தில் மேல்?’ என்று அவள் நினைத்து நினைத்துப் புழுங்கிக் கொண்டிருந்தாள். 

தன் பெண் எழுதிய கடிதம் அவள் பொறாமை உள்ளத்தில் விசித்திரமான விளைவை உண்டாக்கியது. ‘ஏன் இந்தச் சந்தேகம் உண்மையாய் இருக்கக் கூடாது?’ என்று தான் அவள் கூசாமல் நினைத்தாள். ‘ராமுவுக்கே சந்தேகம் என்றால் இருக்கத்தான் இருக்கும்’ என்று நிச்சயித்தாள். தன்னிடம் சாவித்திரியைப் பற்றி விசாரிக்க வந்தவர்களிடமெல்லாம், “என்னவோ, ஏதோ, யார் கண்டா?” என்கிற பாணியில் பேசினாள். வைக்கோல் போருக்கு வேண்டுவதெல்லாம் ஒரு பொறி நெருப்புத்தானே? நல்ல சொல் பரவுவது கஷ்டமாயிருக்கலாம்; அபவாதத்திற்குக் கேட்பானேன் ? விஷயத்தைக் குறிப்பாகக் கேள்விப் பட்ட அவர்கள் பந்துக்கள், தெரிந்தவர்கள், யாரும் தங்களுக்குத் தோன்றினபடி பேசி அவரவர்கள் மனம் போல் ஜோடனை செய்து கொண்டார்கள். சாதாரண மனிதர்களுக்கும் கற்பனை உணர்ச்சி இல்லையா? கவிகளுக்கும் எழுத்தாளர்களுக்குந் தான் இது சொந்தமா என்ன? 

கடைசியாக ராமசந்திரன் ஊர் போனபோது, அம்மாவுக்கும் அண்ணாவுக்கும், பிறகு சாவித்திரிக்குங் கூட விஷயம் எட்டி, மிகுந்த வருத்தத்தைக் கொடுத்திருந்தது. சாவித்திரி இருந்த பலஹீன நிலைமையில் அவளால் அதைத் தாங்கவே முடியவில்லை. என்றைக்கும் அவளுக்கு அந்தரங்கமானவன் ராமசந்திரன். அவனைக் காணவும் அவள் தாங்காமல் கண்ணீர் விட்டுப் புலம்பி விட்டாள். “என் வாழ்வைக் கண்டு யாருக்குப் பொறாமை தாங்க வில்லையோ தெரியவில்லை. இந்த மாதிரி அபாண்டமான பழியைக் கட்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்” என்றாள். “ஐயோ ராமு, உங்கள் அத்திம்பேரைப் போல அன்புள்ள கணவர் உலகில் உண்டா? என் காலில் கல் உறுத்தச் சகிக்கமாட்டாரே. அவர் கொடுமை தாங்காமல் நான் பிராணனை விடப் பார்த்ததாக ஊரெல்லாம் சொல்லுகிறார்களாமே?” என்று அவள் சொல்லி அழுத போது ராமசந்திரனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அம்மாதிரி நினைத்தவர்களில் தானும் ஒருவனாயிற்றே என்று நினைத்த போது பிராணனையே விட்டு விட வேண்டும்போல் இருந்தது. அவன் என்ன நினைத்திருந்தான்? இங்கே விஷயம் எப்படி இருக்கிறது? இங்கு இப்படி இருப்பதை அறிந்து அவனறியாமலே அவனுக்குப் பெருமூச்சு மேலும் மேலும் எழுந்தது. தான் கொண்ட சந்தேகத்திற்குச் சிறிதும் இடமில்லை என்பதை அறிந்த போது அவனுக்குப் பெரிய ஆறுதல் ஏற்பட்டது. “உண்மை வேறாக இருக்கும் பொழுது ஊரார் எதைச் சொன்னால் நமக்கென்ன? சூரியனைப் பார்த்து நாய் குரைப்பது போன்றது அவர்கள் செய்கை” என்று தேற்றினான். தன் சந்தேகம் தெளிந்ததில் உண்டான திருப்தியிலே அவன் பேசினான். அந்தப் பெண்மை யுள்ளத்தில் அடாப் பழியினால் எழுந்த புயலைச் சிந்தித்துப் பார்க்க அவன் முன் வரவில்லை. “நாளைக்கு உன் அத்திம்பேர் வருகிறாரே. அவர் காதில் இது விழுந்தால் அவர் எவ்வளவு வருந்துவார்?” என்று சொல்லி அவள் மறுபடியும் அழுதாள். 

“அவருக்குத் தெரியும்படி விடக்கூடாது. நீ அவரிடம் சொல்லி வருந்தாதே” என்று சாவித்திரிக்குப் புத்திமதி சொன்னான். அவள் உடம்பு மெலிந்து பலஹீனமாக இருப்பதைப் பார்த்தபோது அவனுக்குச் சகிக்கவே இல்லை. உடம்பு ஏன் இப்படிப் போயிற்று?” என்று அங்கலாய்த்தான். ”உடம்பு தானே இன்னும் தேறவில்லை? பலஹீனம் ரொம்ப அதிகம். அதனால் தான் ஜலம் எடுக்கப் போனவளுக்கு மயக்கம் வந்து சமாளித்துக் கொள்ளத் தெரியாமல், கயிற்றைப் பிடிக்கப் போய்க் கிணற்றுக் குள்ளேயே சாய்ந்து விட்டேன்” என்றாள். 

“எங்காவது, சமாளித்துக் கொள்வதற்காகத் தொங்கும் கயிற்றைப் பிடிப்பார்களா?” என்று ராமசந்திரன் கேட்டான். 

“இல்லாவிட்டால் இவ்வளவு அபக்கியாதியை எப்படிச் சம்பாதித்துக் கொள்ளுகிறது!” என்றாள் சாவித்திரி அங்கலாய்ப்போடு. 

இந்தச் சிறிய சமாசாரம் தெரியாமல், தெரிந்து கொள்ளவும் முயலாமல், குருட்டு யோசனையில் அவன் என்ன பாடுபட்டுப் போனான்! சிவராமன்தான் இவ்வளவுக்கும் காரணம். மனஸ்தத்துவமென்று சொல்வதெல்லாம் பிதற்றல்! அவனிடத்தில் இப்பொழுது ராமசந்திரனுக்குப் பொறுக்க முடியாத கோபம் வந்தது. ‘மனஸ் தத்துவ ஆராய்ச்சியாவது! மண்ணாங்கட்டியாவது!’ என்று வைதான். 

பட்டணம் போய் முதலாவதாக அதை மறக்கும்படி அவனுக்குச் சொல்லவேண்டும். ‘இல்லாவிட்டால் உனக்கும் எனக்கும் இனி முகாலோபனம் இல்லை யென்று சொல்லி விடவேண்டும்’ என்று தீர்மானித்துக் கொண்டான். 

சாவித்திரி வரையில் விஷயம் எட்டும் படியாக விட்டதற்கு அம்மாவை ராமசந்திரன் கோபித்துக் கொண்டான். “நான் சொல்லாமல் தான் இருந்தேன். உங்க அம் மாமி இருக்காளே. அவள் தான் சாவித்திரியிடம் நேரில் அங்கலாய்க்க ஆரம்பித்து விட்டாள். ஊரார் சொல்லிக் கொள்வதை யெல்லாம் முடிந்து கொண்டு வந்து சொன்னாள். என்ன பண்ணுகிறது?” என்று அவன் தாய் சொன்னதை அவன் ஒப்புக்கொள்ளவில்லை. 

“அம்மாமி அப்படிப் பேசுவாளென்று தெரிந்தால் அவளைச் சாவித்திரியிடம் அணுகவே விட்டிருக்கக் கூடாது!” 

“போடா, நீ என்னமோ சொல்லுகிறாய்! ஊர் அபவாதத்துக்கே அம்மாமிதான் காரணமென்று எனக்குச் சந்தேகம். அதற்கு என்ன பண்ணுகிறது? அதை யெல்லாம் நம்மால் தடுக்க முடியாது. காதில் போட்டுக் கொள்ளாமல் இருந்தால் எல்லாம் தானே ஓய்ந்துவிடும்” என்று அவன் அண்ணா மத்தியஸ்தத்துக்கு வந்தான். “ஊர் அபவாதத்திற்கே அம்மாமிதான் காரணம்” என்பதைக் கேட்கவுமே ராமசந்திரனுக்கு என்ன சொல்வ தென்றே தெரியவில்லை. 

“அம்மாமிதான் காரணமானால் பேசாமலா இருக்கிறது? அவளைச் சண்டைப்பிடித்துத் தீர்க்க வேண்டாமா? எதையுமா பொறுத்துப் போவது? எதற்கும் ஓர் அளவு இல்லையா?” அவனுக்குக் கோபம் தாங்காமல் வந்தது. “நீ வேதாந்தி. தர்மபுத்திரர் அவதாரம். பொறுத்துக் கொண்டு சும்மா இருப்பாய். என்னால் முடியாது. நான் போய்க் கேட்டு விட்டு வருகிறேன் பார்” என்று ஆத்திரத்துடன் கூறிக் கிளம்பினான். 

“இந்தா அவசரப்படாதே” என்று அவன் தமையன் அவனை அமர்த்தினான். “இவைகளையெல்லாம் கேட்கப் போனால் விபரீதத்தில் முடியும். நமக்கு உண்மை தெரியாது. ஏதோ ஊகந்தான். சாவித்திரிக்குக் கல்யாண மானதிலிருந்து அவர்களுக்குப் பொறாமை. அவ்வப் பொழுது ஏதேதோ சொல்லுகிறார்கள். எத்தனை நாளைக்கு இதெல்லாம்? தானே ஓய வேண்டியது தான். பந்துக்களுக்குள் கண்டபடி பேச்சுக்கு இடம் வைத்துக் கொள்ளக் கூடாது” என்று கண்டிப்பாகக் கூறினான். 

ஆனால் ராமசந்திரனால் சும்மா இருக்க முடியவில்லை. சாப்பாடான பிறகு சகஜமாகப் போகிறது போல மாமா வீட்டிற்குப் போனான். அம்மாமியோடு பேசினான். பேச்சுக்கு நடுவில், சாதாரணமாகக் கேட்பது போல, “மாமி, நீங்கள் சாவித்திரியைப் பற்றி நினைத்துக் கொண்டதே தப்பு. அதற்கு மேல், அதை ஊர் அறியும்படி விடலாமா?” என்று அங்கலாய்த்த வண்ணம் கேட்டான். அம்மாமி லேசுப்பட்டவளா? சும்மா இருந்து விடுவாளா? “விளையாட்டுப் போல் என்னவோ என் மேல் பழி போடுகிறாயே. ஐயோ, அப்பா, நான் என்னத்தைக் கண்டேன்! தேமேன்னு இருக்கேன். என்னைச் சந்தியில் இழுக்காதே. நீதான் என்னமோ சந்தேகப்படுகிறாப் போல இருக்குன்னு மீனா எழுதினாள். அதைக்கூட, ‘அசட்டுப் பிள்ளை’ என்று நான் காதில் போட்டுக் கொள்ளவில்லை” என்று ஒரு போடு போட்டாள். 

ராமசந்திரனுக்கு இடி இடித்துக் காலடியில் விழுந்த அதிர்ச்சி ஏற்பட்டது. சேற்றில் கல்லை எறிந்து சேறு முழுவதும் தன் பேரிலேயே தெறித்திருப்பதைக் கண்டான். அந்த நிமிஷத்தில் அவனுக்கு யாரைக் கோபிப்ப தென்றே தெரியவில்லை. என்ன அபவாதம்! அவன் ஆத்திரம் இருந்த இடம் தெரியாமல் மங்கியது. பேசாமல் வீடு வந்தான். 

தன்னைத் தானே அவன் வெறுத்தான். இவ்வளவு வீண் பழிக்கும் தானே வித்து என்பதை எண்ணிய போது அவன் உடல் நடுங்கிற்று. முதல் முதலாகத் தமையனிடத்தில் அவனுக்கு மதிப்பு ஏற்பட்டது. ‘அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு’ என்பதற்கேற்ப அவன் நடந்து கொண்டிருக்கிறான். அவன் அன்புள்ள சாவித்திரியின் வருத்தம் முழுவதற்கும் அவனே காரணமாயிருக்கிறான். அவனை விடக் குற்றவாளி உலகில் வேறு யார்? – இந்தச் சிந்தனையில் மூழ்கியிருந்த அவன் மனம் புண்பட்டு வருந்திற்று. சாவித்திரியின் குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டுவதில் தான் அவனுக்குச் சிறிது ஆறுதல் ஏற்பட்டது. 

மறுநாள் அவனுடைய அத்திம்பேர் வந்தார். அவரைக் காணவுமே சாவித்திரி கொஞ்சம் உத்ஸாகம் கொண்டாள். அவர் இருந்த பத்து நாட்களும் சந்தோஷமாகவே கழிந்தன. ராமசந்திரனால் கூட வருந்திக் கொண்டிருக்க முடியவில்லை. சாவித்திரியின் சந்தோஷம் அவனையும் தன்னை மறந்து சிறிது சந்தோஷமாயிருக்கச் செய்தது. அவன் அத்திம்பேர் ஊருக்குப் புறப்படும் பொழுது சாவித்திரியும் அவரோடு போவேனென்று பிடிவாதம் பிடித்தாள். அவள் கணவன் சொல்லிப் பார்த்தான்; மற்றவர்களும் சொன்னார்கள். யார் சொல்லியும் அவள் கேட்கவில்லை. ‘இங்கிருந்தாலே என் உடம்பு தேறாது’ என்று சாதித்துவிட்டாள். ராமசந்திரன் ஏதேதோ நடத்தப் போவதாக வந்தவன், அவரவர்கள் மனம் போல நடந்து கொள்ளட்டும் என்று பேசாமல் இருந்து விட்டான். இது விஷயத்தில் அண்ணாவைப் பின்பற்றச் சந்தேகமற நிச்சயித்து விட்டான். சாவித்திரியோடு அவன் தாயும் போவதென்று ஏற்பாடாயிற்று. சாவித்திரியின் பயணத்தை நிறுத்திவிட எண்ணி வந்த அவன், அம்மாவுக்கும் சேர்த்து மூட்டை கட்டினான்! எல்லோரும் ஒன்றாகப் பட்டணம் வந்து, பிறகு சாவித்திரி, அவள் கணவன், அம்மா மூவரும் சிம்லா சென்றார்கள். 

ஒரு நாள் அவர்களை ஒருங்கே பார்த்த சிவராமன், “உன் அத்திம்பேர் உன் தமக்கையிடத்தில் உயிராய் இருப்பார் போல் இருக்கிறதடா!” என்றான். 

“உன் மனஸ்தத்துவ சாஸ்திர ஆராய்ச்சியால் கண்டு பிடித்தயோ? இதைப் பார் : அதைப்பற்றிப் பேசுவதா யிருந்தால் உனக்கும் எனக்கும் சிநேகம் நின்று போன தென்று தெரிந்து கொள். அதனால் எனக்கு ஏற்பட்ட கஷ்டமும் அவமானமும் ஜன்ம ஜன்மத்துக்கும் போதும்” என்றான் ராமசந்திரன் ஆத்திரத்துடன். 

“நீயாகக் கற்பித்துக் கொண்டு கஷ்டப்பட்டதற்கு யார் என்ன செய்கிறது? நான் மட்டும் உன் அத்திம் பேரையோ அக்காவையோ முன்பே பார்த்திருந்தேனானால் உன் சந்தேகத்தை அடியோடு தொலைத்திருக்க மாட்டேனா!” என்று ஒரே அடியாக அடித்தான் சிவராமன். மன இயல்பைப் பற்றிப் படித்தவனோ இல்லையோ? உலக இயல்பை அவன் தெரிந்துகொள்ளவில்லையே! 

– தெய்வத்திற்கு மேல், முதற் பதிப்பு: பெப்ரவரி 1947, கலைமகள் காரியாலயம், சென்னை.

– இந்தப் புததகத்தில் வந்திருக்கும் கதைகள் கலைமகள், குமரிமலர், கல்கி தீபாவளி மலர், ஆனந்த விகடன், மங்கை ஆகிய பத்திகையில் வெளியானவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *