மனக்கவலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 6, 2020
பார்வையிட்டோர்: 5,179 
 
 

அலுவலகத்துக்கு போன பின்னால் தான் தெரிந்தது பாலகிருஷ்ணனுக்கு திடீரென்று “ஹார்ட்அட்டாக்” வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று. அப்பொழுதே நான்கைந்து பேர் ஒரு மணிநேர அனுமதி பெற்று போய் பார்த்துவிட்டு வந்துவிட்டார்கள். நான் போகவில்லை. போன உடன் பார்த்துவிட்டு வரும் நட்பு அல்ல எங்கள் நட்பு. அதனால் மாலை அங்கு சென்று பார்த்து விட்டு நிதானமாய் போகலாம் என்று முடிவு செய்து கொண்டேன்.

மாலை நாலு மணிக்கெல்லாம் அலுவலகத்தில் முன் அனுமதி பெற்று ஹாஸ்பிடலுக்கு சென்றேன். கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமமில்லை. படுக்கையில் படுத்திருந்தார். இப்பொழுதுதான் ஐசியூவிலிருந்து கூட்டி வந்திருக்கிறார்கள். இனி பயமில்லை என்று சொல்லியிருந்ததால், அங்கு இருந்த அவர் மனைவியும், மகனும் இறுக்கமில்லாமல் இருந்தது, என்னை மெல்லிய சிரிப்புடன் வரவேற்றதிலேயே புரிந்து கொண்டேன். பாலகிருஷ்ணன் கூட என்னை பார்த்து சிரித்து தலையசைத்தார். கையில் கொண்டு சென்ற பழங்களை அவர் மனைவியின் கையில் கொடுக்கவும் இதெல்லாம் எதுக்கு என்ற கேள்வியுடன் வாங்கிக் கொண்டார்.

பக்கத்தில் வந்த மகனிடம் எப்படியாயிற்று என்று கேட்டேன்.காலை அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தவர் சட்டென நெஞ்சை பிடித்து அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். உடனே சுதாரித்த அவர் மனைவி மகனுக்கு சத்தம் போட அவன் வந்து அப்பாவின் நிலைமையை பார்த்து வெளியில் ஓடி ஒரு டாக்சியை பிடித்து வந்து இவரை ஹாஸ்பிடலில் சேர்த்துவிட்டார்கள். அதன் பின்னரே அலுவலகத்துக்கு சொல்லி யிருக்கிறார்கள்.

நான் பாலகிருஷ்னின் அருகில்சென்று மனசை போட்டு அலட்டிக்காதே, அமைதியாய் இரு சொல்லிவிட்டு அவன் கையை பிடித்துக் கொண்டேன். களைப்பால் முணங்கிக் கொண்டே ராமகிருஷ்ணா உன்கூட பேசணும் சொன்னவனை தட்டிக்கொடுத்து இப்ப அலட்டிக்காம இரு நான் எங்கேயும் போகமாட்டேன், இங்குதான் இருப்பேன், அதனால கவலைப்பட்டுட்டு இருக்காதே. முதல்ல நல்லாகட்டும் அப்புறம் பாக்கலாம். ஆறுதல் படுத்தி இரண்டு மணி நேரம் கூட இருந்து விட்டே அங்கிருந்து கிளம்பினேன்.

ஒரு வாரத்தில் அலுவலகத்துக்கு வந்துவிட்டான். என்றாலும் முன்னர் இருந்த கலகலப்பு காணாமல் போயிருந்தது. ஒருமுறை ஹார்அட்டாக் வந்து விட்டால் அதற்கு பிறகு மனிதனுக்கு பயம் வந்து விடுகிறது. அவ்வளவுதான் இனி நமக்கு வாழ்வு எப்பவேணா முடியலாம். இந்த பயம் பாலகிருஷ்ணனுக்கும் இருந்தது நன்றாக தெரிந்தது. நான் கூடுமான வரை அவனுக்கு உற்சாகம் தரும் விசயங்களை மட்டுமே பேசிக்கொண்டிருந்தேன். ஒரு சிலர் அவனுக்கு ஆறுதல் கூறுகிறேன் என்ற பெயரில் அழுவது போல முகத்தை வைத்துக்கொண்டு அவனை மேலும் சோகமாக்கி விட்டுத்தான் சென்றார்கள்.

எப்பொழுதும் வேலை முடிந்து வீடு திரும்பும் போது பாலகிருஷ்ணனும் நானும் அதிகமாக பஸ் ஏறமாட்டோம். நிதானமாக பேசிக் கொண்டே ஒருபர்லாங் நடந்தே வீட்டுக்கு போவோம். அவன் வீடு முன்னால் வந்துவிடும். நான் அவன் வீட்டை தாண்டி கொஞ்சம் தூரம் போனால் போதும். இந்த ஒரு வாரமாக அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கருதி பஸ்ஸிலேயே ஏறி என் ஸ்டாப்பிங்கில் இறங்கி கொண்டேன். பாலகிருஷ்ணனின் பையன் இரு சக்கர வாகனத்தில் வந்து அப்பாவை கூட்டிக் கொண்டு போய் விடுவான்.

மறுவாரம் பாலகிருஷ்ணனே என்னிடம் வந்து ராமகிருஷ்ணா இன்னையிலயிருந்து நடந்தே வீட்டுக்கு போயிடலாம், அவசரப்பட்டு பஸ் ஏறிடாதே. என் டேபிளுக்கே வந்து சொல்லிவிட்டு சென்றான். ஏன் அவசரப்படறே, ஒரு மாசமாவது பையன்கூட வண்டியில போயிடு. இல்லே ராமகிருஷ்ணா உன்கூட பேசிகிட்டு நடந்தாத்தான் மனசுக்கு ஒரு ஆறுதல் கிடைக்குது.

வீட்டுக்கு நேரத்துல போயி என்ன பண்ணறதுன்னு தெரியாம உட்கார்ந்துகிட்டு இருக்கறதுக்கு காலார நடந்து போனா நல்லாயிருக்கும். நான் அவன் சொன்னதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை என்றாலும், அவன் நடப்பேன் என்று சொன்னதே எனக்கு சந்தோசமாக இருந்தது.

ராமகிருஷ்ணா ஒருவிசயம் சொன்னா அதை மனசுக்குள்ள வச்சுக்குவியா? நடந்து கொண்டிருக்கும் போது இவன் இப்படி கேட்டவுடன் எனக்கு சின்ன கோபம் வந்துவிட்டது. இதுவரைக்கும் நீ சொல்லி எதுவாச்சும் வெளியில் சொல்லி இருக்கறனா? ஐயோ கோபிச்சுக்காதே, நான் சொல்றது என்மனசுல ரொம்பநாளா உறுத்திகிட்டு இருக்கற விசயம்.

எனக்கு உடம்பு சரியில்லாம போன உடனேயே இந்த பிரச்சினைய யார்கிட்டே சொல்லியாவது முடிச்சுடணும்னு முடிவு பண்ணிட்டேன். அப்புறம் பாக்கலாம், அப்புறம் பாக்கலாம்னே நாள் ஓடிபோயிருச்சு. எனக்கு ஹார்ட்அட்டாக் வந்த பின்னாடி அதை மறைச்சு வைக்கிறதுல அர்த்தம் இல்லேன்னு தோணிப் போச்சு.

நான் அவனை பேசவிட்டு மெளனமாக வந்து கொண்டிருந்தேன். அவன் நான் கவனிக்கறேனா என்று திரும்பி என் முகத்தை பார்த்தவன் “இப்ப நான் சொல்றதை கேட்டு அதிர்ச்சி ஆயிடாதே” என்று பீடிகை போட்டான். நான் அவன் பேசட்டும் குறுக்கே எந்த கருத்தையும் சொல்ல வேண்டாம் என்று அவன் முகத்தை பார்த்து அந்த இடத்திலேயே நின்றுகொண்டேன். மெல்ல சொன்னான் ராம்குமாரை நாங்க தத்து எடுத்துத்தான் வளர்த்தறோம். அதைய முதல்லயே அவன்கிட்டே சொல்லியிருக்கலாம், அப்புறம் சொல்லலாம் அப்படீன்னு இது வரைக்கும் சொல்லாம விட்டுட்டோம். அவனுக்கு கல்யாணம் பண்ணற வயசாயிடுச்சு. இப்ப போய் இதை அவன் கிட்டே சொன்னா அவன் அதை எப்படி எடுத்துக்கு வானோன்னு பயமாயிருக்கு. இதைய நினைச்சு நினைச்சு எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது. அவன் இதை கேட்டு எங்களை வெறுத்துட்டா என்னபண்ணறது?

எனக்கு இந்த விசயம் பெரிய அதிர்ச்சியை தராவிட்டாலும் ஆச்சர்யப்பட்டேன். அவனோட அப்பா அம்மா? எங்களுக்கும் தெரியாது. ஒரு விபத்துல அவங்க இரண்டு பேரும் இறந்துட்டாங்களாம். ஆசிரமத்துல சொன்னாங்க. நாங்க சட்டபூர்வமா ஆசிரமத்துல இருந்து எடுத்து வளர்த்துட்டு இருக்கோம்.

அப்புறம் என்ன பயம்? இதைய இப்படியே விட்டுடேன். நீ உண்மைய சொல்றேன்னு அவன் நிம்மதியையும் கெடுத்து, நீங்க இரண்டு பேரும் வருத்தப்பட்டு, இதெல்லாம் எதுக்கு பாலகிருஷ்ணா, பேசாம நிம்மதியா இருந்துடு.

நானும் சில நேரங்கள்ள அப்படித்தான் நினைச்சுக்குவேன். ஆனா மனசு கேட்கமாட்டேங்குதே. சரி எங்கிட்ட சொல்லிட்டயில்லை, விடு கவலையை. நான் இத்துடன் இந்த பிரச்சினையை முடித்து வைக்க கூறினேன். இல்லே ராமகிருஷ்ணா நீதான் எப்படியாவது அவனுக்கு தெரியவச்சு எங்க மேல எந்த வெறுப்பும் இல்லாம பாத்துக்கணும். ஏன்னா நான் என்னைய பத்தி கவலைப்படலை, நாளைக்கு நான் போயிட்டேன்னா வேற யாராவது அவன் மனசை கலைச்சு என் மனைவிய அநாதையாக விட்டுடுவாங்க. சொல்லும் போதே கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது.

த்ஸொ..த்ஸோ..அழுகாதே. பிரச்சினைய எங்கிட்ட சொல்லிட்டயில்லை. கவலைய விடு. நான் பாத்துக்கறேன். ஆறுதலாய் சொன்னாலும் மனசு சுருக்கென்றுதான் இருந்தது.

என்னஅங்கிள், என்கூட பேசணும்னு வர சொல்லிட்டு என்னையே பாத்துகிட்டு உட்கார்ந்திருக்கறீங்க, ரமேஷ் சொன்னவுடன் தான் என்னை உணர்ந்தேன். சாரிப்பா உங்கப்பாவை நினைச்சுப் பார்த்தேன், அப்படியே என்னை மறந்துட்டேன்.

அப்பா எப்ப பார்த்தாலும் ஏதோ மனசை போட்டு அலட்டிக்கரறான்னு நினைக்கிறேன் அங்கிள், அதனாலதான் ஹார்ட்அட்டாக் வரைக்கும் கொண்டு போய் விட்டுடுச்சு. சொன்னா கேட்கமாட்டேங்கறாரு. அவன் வருத்த்ததுடன் சொல்லிக் கொண்டிருந்த்தை கேட்டவுடன் இதுதான் பேச்சை வளர்த்த நல்ல தருணம் என்று முடிவு செய்தவன் எல்லாம் உன்னைபத்தின விசயம்தாப்பா, உனக்கு நல்ல இடத்துல பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணனுமேன்னு. ஏன் அங்கிள் என் கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்? அதில்லைப்பா இழுத்தேன்..அவன் வேறென்ன அங்கிள், என் முகத்தை பார்த்தான்.

நான் எச்சிலை விழுங்கிக் கொண்டு சொன்னா தப்பா நினைச்சுக்கமாட்டியே? அவனிடம் பரிதாபமாய் முகத்தை வைத்து கேட்டேன். என்ன அங்கிள் இப்படி கேட்கறீங்க? நான் எதுக்கு தப்பா நினைக்கணும்? இல்லே உன்னை பத்தித்தான், உங்கப்பா நீ அவங்களை வெறுத்துடுவியோன்னு ரொம்ப கவலைப்படறாரு.

நான் எதுக்கு அங்கிள் அவங்களை வெறுக்கணும்? நான் இருக்கறது அவங்களுக்கு ஒரே பையன், அப்படி இருக்கும்போதுஅவன் சொல்லி முடிக்கும்போது, சட்டென குறுக்கிட்டு இதுதான் இதுதான் இந்தபாசம் இருந்தாபோதும், சொல்லிவிட்டு மெல்ல மறுபடி சொல்றேன் இதை கேட்டு உங்கப்பா அம்மாவை வெறுத்துடாதே, அவனிடம் மீண்டும் சொல்லிவிட்டு பாலகிருஷ்ணன் சொன்ன உண்மையை அவனிடம் சொன்னேன்.

ஐந்து நிமிடங்கள் அமைதியாகஇருந்தான். எனக்கு பயமாக இருந்தது. அப்புறம் இந்த விசயத்துக்கா அப்பா இத்தனை வருத்தப்பட்டுட்டு இருந்தாரு…அவன் சொன்னவுடன் எனக்கு ஆச்சர்யம்? ராம் ஆச்சர்யத்துடன் இழுத்தேன்.

அங்கிள் இந்த விசயத்தை அம்மா என்கிட்டே என் பதினைஞ்சுவயசுலயே சொல்லிட்டாங்க. அப்பாகிட்ட மட்டும் இதை கேட்டுடாதே, மனசு உடைஞ்சிடுவாரு அப்படீன்னு சொல்லிட்டாங்க. அதனால அந்த விசயத்தை நான் இதுவரைக்கும் நினைச்சுகூட பார்த்த்தில்லை. அவன் சொல்ல சொல்ல எனக்கு மனசு முழுக்க மகிழ்ச்சி.

அட்டா பெண்கள் எவ்வளவு புத்திசாலிகள்! இவன் இந்த கவலையை சுமையாய் நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் அவர்கள் மிக சாதாரணமாக பிரச்சினையை முடித்து வைத்திருக்கிறார்கள். பாலகிருஷ்ணன் தானாக கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் மனைவியிடம் சொல்லியிருந்தாலே விவரம் புரிந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *