கௌரவம்
கதையாசிரியர்: இரா.கலைச்செல்வி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 28, 2026
பார்வையிட்டோர்: 485

சங்கரிக்கு கோவம் கோவமாய் வந்தது. அந்த மாலை பொழுதிலும் , கோடைகால உச்சி வெயிலின் சூரியக் கதிர்களால், பூமி தாய் கொதிப்பது போல சங்கரியின் உள்ளம் கொதித்தது. மறுபடியும் கேட்டால் தாம் தூம்..ன்னு கத்துவார். பக்கத்து வீட்டுக்கெல்லாம் கேட்கும். குடும்ப கௌரவம் போயே போச்சு. அவர் கத்த ஆரம்பிச்சா பத்து வீட்டுக்கு கேட்கும். என்ன செய்றது மேலும் பேசாமல் மௌனமானாள் சங்கரி. அவள் தன் கணவரிடம் கேட்டது இதுதான்!
“ஏங்க… ஒரு விசயம்.”
“என்ன…? “
“எங்க பிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து, மகளிர் தினம் அன்று, ஒரு பிக்னிக் மாதிரி, வேன் ஏற்பாடு பண்ணிட்டு, குற்றாலத்திற்கு , போயிட்டு வரலாம்ன்னு இருக்கோம். இங்கே இருந்து பக்கம் தானே. அதான் உங்ககிட்ட , ஒரு வார்த்தை கேட்டு சொல்றேன்னு சொன்னேன். நானும் போயிட்டு வரவா” என்றாள் சங்கரி.
“என்ன… மகளிர் தினத்துக்கு பிக்னிக் போறீங்களா? என்ன காலேஜ் ஞாபகமா.? சின்ன பொண்ணுன்னு நினைப்பா உனக்கு.? நாற்பது வயசாகுது. உனக்கு பிக்னிக் கேக்குதா..? புள்ளைங்களை எல்லாம் விட்டுட்டு நீ பிக்னிக் போறியா..? ஊர் சுத்துற வேலையை விட்டுட்டு புள்ளைங்கள பாக்குற வேலைய பாரு.”
“ஒரு நாள் தானே. காலை பத்து மணிக்கு போயிட்டு மாலை ஆறு மணிக்குள்ள வீடு திரும்பிருவோம். என்ன ரொம்ப சின்ன பிள்ளைங்களா.? பத்து, பதினைந்து வயசு பிள்ளைங்க. பிரண்ட்ஸ் எல்லாரும் போறாங்க..ஒரு நாள் பிரண்ட்ஸ் கூட போயிட்டு வரேன். காலையில சமையல் எல்லாம் செய்து முடிச்சுட்டு, எல்லாம் டேபிள்ல எடுத்து வச்சுட்டு போறேன். மத்தியானம் ஒருவேளை மட்டும் தானே. குழந்தைங்க சாப்பிட்டுப்பாங்க. நான் சொல்லிட்டு போறேன்.”
“இந்தாடி… ஒரு தடவை சொன்னா புரியாதா உனக்கு…?”
ருக்மணி போன் செய்தாள். “என்ன சங்கரி பிக்னிக் வர்ற தானே.உன் வீட்டுக்காரர் ஓகே சொல்லிட்டாரா? ரூபாய் 300 வந்து குடுத்துட்டு போ. நல்ல ஏசி வேன் முன்னாடியே புக் பண்ணனும்.”
“இல்ல ருக்மணி நான் வரல. எனக்கு வேற வேலை இருக்கு. அவரோட தங்கச்சி ஊர்ல இருந்து வராங்க. அதனால வீட்டில நிறைய வேலை இருக்கு. வீடு எல்லாம் கிளீன் பண்ணனும் .அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்.”
“இத பாரு சங்கரி ..அடுத்த வருஷம் போறோமோ என்னமோ. இப்ப ஏதோ பிளான் பண்றோம். போயிட்டு வருவோம் .ஒரு நாள் ஜாலியா. இந்த சந்தோஷம் அப்புறம் உனக்கு திரும்ப கிடைக்காது.”
இவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. வீட்டுக்காரர் அனுமதி தரவில்லை என எப்படி கூறுவது. என்ன நினைத்துக் கொள்வார்கள் அவரைப்பற்றி. “இல்ல ருக்மணி வரல. அடுத்த வருஷம் பாத்துக்கலாம்.”
“வீட்டுக்குள்ளேயே இப்படி நாள் முழுதும் சமையல் கட்டே கதின்னு கிடக்குற நீ. பாத்திரம் கழுவுறதும் , வீடு கிளீன் பண்றதும், இது தான் உனக்கு தினம் வேலை. மகளிர் தினம் அன்றைக்கையாவது ஒரு நாள் சந்தோஷமா வரக்கூடாதா..? சரி உன் இஷ்டம்.”போனை வைத்தாள் ருக்மணி.
சங்கரிக்கு மனசுக்குள் மறுபடியும் ஒரு நெருடல். மறுபடியும் கேட்டு பார்க்கலாமா..? இந்த சாதாரண விஷயத்திற்காக இந்த மனுஷனுடன் சண்டை போடுவதா? என்ன வாழ்க்கை இது? வருஷம் முழுவதும் காபி போடுவதும் ,சமையல் பண்ணுவதும், பாத்திரம் கழுவுவதும், வீடு துடைப்பதும் இதே வேலை. ஒரு நாள் தோழிகளுடன் வெளியே போய் வருவதற்கு ஆசையாய் கேட்டா இப்படி கத்துகிறாரே. பொண்டாட்டி என்றால் கிள்ளுக்கீரை என்ற நினைப்பு அவருக்கு. அவர் கிழித்த கோட்டை மனைவி தாண்டக்கூடாது என்ற ஈகோ. சில விஷயத்திற்கு சொன்னால் சரி என ஏற்றுக் கொள்ளலாம் .இதுக்கு கூடவா..? மனதிற்குள் வெதும்பி போனாள் சங்கரி.
வேறு வழி இல்லாத நிலையில், மறுபடியும் கேட்டாள். மறுபடியும் கத்தினார். முறைத்தார். விட்டால் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிடும் என்பதால், அமைதியானாள்.. இது முதல் தடவை அல்ல. எத்தனையோ தடவை எதற்கு அனுமதி கேட்டாலும் ,எதையாவது சொல்லி தட்டிக் கழிப்பார். ஒண்ணுமே சொல்லாமல் வேலையை பாரு என்பார் .திருப்பி கேட்டால் கத்துவார். பக்கத்து வீட்டுக்கு கேட்கும் என்பதால், குடும்ப கௌரவம் பார்த்து அமைதியாவாள். இப்படியே பதினெட்டு வருட தாம்பத்திய வாழ்க்கை முடிந்து விட்டது.
எதற்காக திருமணம் செய்தோம் ..? குழந்தையை கவனித்துக் கொள்வது நம் கடமை தான் .வருடம் பூராம் தானே கவனித்துக் கொள்கிறோம். ஒரு நாள் என் மனசுக்கு சந்தோஷமாக, என் கோவில் தோழிகளுடன் ,போய் வரக்கூடாதா ..? சாகும்வரை நமக்கு இது போன்ற வாழ்க்கை தானா..? . எப்போது இவர் மனது மாறி என்னை சந்தோஷமாக போய் வா எனச் சொல்லப் போகிறார். கேட்டு கேட்டு வெறுத்து விட்டது. எனக்கு எப்போது தான் சுதந்திரம் கிடைக்கும்..? அறுபது வயசுல.. இல்ல எழுபது வயசுல..? சமீபகாலமாக வயசானவங்க தான் விவாகரத்து செய்றாங்களாம். நானும் கூட விவாகரத்து செய்து விடலாமா..? அதுதான் தீர்வா…? மனதிற்குள் இந்த எண்ணம் கூட வந்தது சங்கரிக்கு.
அம்மாடி…சொந்தக்காரர்கள் என்ன சொல்வார்கள்.?. பக்கத்து வீட்டில் என்ன நினைப்பார்கள்.?. குழந்தைகளின் கதி என்ன..? பெரிய பிரச்சனை வரும். குழந்தைகள் அம்மாவுடன் இருப்பதா..? அப்பாவுடன் இருப்பதா..? என பிரச்சனை வரும். அதையும் மீறி குழந்தைகளின் படிப்பு செலவிற்கு பணம்..?? விவாகரத்து வாங்க கோர்ட் படியேற வேண்டும் .கோர்ட்டில் ஒரு பத்து வருடம் இழுத்தடிப்பார்கள். வக்கீலுக்கு ஃபீஸ் கொடுத்து மாளாது. என்ன செய்ய…? யாரிடம் சொல்லி அழுவது. நடுத்தர குடும்பத்துப் பெண்களின் நிலைமை பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறதோ..!! யோசித்து யோசித்து சங்கரிக்கு தலைவலி வந்தது மட்டும்தான் மிச்சம்.
இரண்டு மாதங்கள் கழித்து “ஏங்க இந்த வருஷம் ஸ்கூல் லீவுக்கு குழந்தைகளை கூட்டிட்டு, எங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வரேன்.”
“என்ன… உங்க அம்மா வீட்டுக்கா. அப்புறம் யார் எனக்கு சமைச்சு கொடுக்கிறது .நான் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவேன் என்பதை பத்தி உனக்கு கவலையே இல்லையா?. அந்த நினைப்பு உனக்கு எங்கே இருக்கும் ..? இருந்தா இப்படி கேப்பியா. .?”
அவள் தோழிகள் எல்லாம் விடுமுறைக்கு குழந்தைகளுடன் அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார்கள். ஆனால் நான் மட்டும் இந்தப் பதினெட்டு வருடத்தில் ஒரு நாளும் சென்ற தில்லை. குழந்தைகளுக்கும் ஒரு மாற்றம் வேண்டாமா..? தாத்தா பாட்டியை பார்க்க வேண்டாமா..? குழந்தைகளைப் பார்ப்பதில் அவர்களுக்கும் சந்தோஷம். குழந்தைகளுக்கும் சந்தோசம். ஏன் எனக்கும் தான். அவருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக எங்களின் சந்தோஷத்தை இழக்க வேண்டுமா..?
“ஏன் நீங்களும் வாங்களேன்.”
“அங்கே எல்லாம் என்னால வர முடியாது. உங்க அப்பா எனக்கு லீவு வாங்கி தருவானா..?” வீட்ல சும்மாவே இருக்க இல்ல .அதான் அங்க போகலாம் இங்கே போகலாம்ன்னு. என் டிரஸ் எல்லாத்தையும் எடுத்து அயன் பண்ணி வை. அம்மா வீட்டுக்கு போறாளாம் . கால வெட்டிடுவேன்.
ஏன் எனக்கு மட்டும் இப்படி..? என் தலை எழுத்து. இந்த சாதாரண விஷயத்திற்கு கூட இவரிடம் கெஞ்ச வேண்டுமா..? எத்தனை தடவை சண்டை போடுவது..? பேசத் தெரியாது என்று இல்லை. அமைதியாக பேசினாலும் கேட்பதில்லை. அன்பாக பேசினாலும் கேட்பதில்லை. அவள் பேசுவதை நாம் ஏன் கேட்க வேண்டும் என்ற நினைப்பு. பொண்டாட்டினா அப்படித்தான் இருக்கணும் என்ற நெனப்பு. இந்த ஜெனரேஷன் பொண்ணுங்க எப்படி இருக்காங்கன்னு அவருக்கு தெரியும். இருந்தாலும் தன்னை மாற்றிக் கொள்வதில்லை. என்ன செய்வது எனத் தெரியாமல் குடும்பத்தின், பிள்ளைகளின் நலன் கருதி ,அவள் தன்னில் ஒடுங்கி ஒடுங்கி வாழ்ந்து கொண்டிருந்தாள்.
காலை ஐந்து மணிக்கு எழுந்தவளுக்கு இரவு பத்து மணி வரை வேலை ஓயாது. மதியம் ஒரு மணி நேரம் தான் அவளுக்கு ஓய்வு கிடைக்கும். அன்று அப்படித்தான் காலை 5 மணிக்கு எழுந்து கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கும் சங்கரி, அன்று கிச்சனில் இல்லை..
“ஏய் சங்கரி எங்கே இருக்க..? மணி ஆறு ஆச்சு. கிச்சனில் ஆளையே காணோம் .எங்கே போயிட்டா…?”
ஒரு பதிலும் இல்லை. “ஏய் சங்கரி.. சங்கரி..” என கூவிக்கொண்டே அவளின் அறைக்கு சென்றான். சென்றவன் அவள் அறையில் அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என நினைத்து, “எருமை மாடு இன்னும் தூங்கிட்டு இருக்கியா, மணி ஆறு ஆச்சு எழுந்திரு..”
ஒரு சத்தமும் இல்லை. அசைவும் இல்லை. பக்கத்தில் போய் பார்த்தால் , மூடிய கண் திறக்கவேவில்லை. அசைத்துப் பார்த்தான்.. அவள் படுத்திருந்த விதம் வித்தியாசமாய்ப்பட்டது .பிடித்து உலுக்கினான். கண் திறக்கவே இல்லை .அவனை பயம் பற்றிக் கொண்டது .கண்களை திறந்து பார்த்தான். உடனே மூடிக்கொண்டது .மூக்கின் மேல் கை வைத்தான். ஒன்றுமே இல்லை.
ஏதோ விபரீதம் நடந்து விட்டது என தனக்குள் உணர்ந்தவன், மறுபடியும் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தான். ஒரு அசைவும் இல்லை .ஆஹா போய்விட்டாளே. விக்கித்து நின்றான். கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர். பாஸ்கருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.!
பக்கத்தில் இருந்த ஒரு டாக்டருக்கு போன் செய்தான். விஷயத்தை சொன்னதால் டாக்டர் வந்தார். பரிசோதித்து விட்டு “எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர். நள்ளிரவே அவர் உயிர் போய் இருக்க வேண்டும். ஹார்ட் அட்டாக்கா இருக்கலாம்.. மனதை தேற்றிக் கொள்ளுங்கள் பாஸ்கர்..” எனக் கூறிவிட்டு சென்றார்.
குழந்தைகள் எழுந்து விட்டனர். கிச்சனுக்கு சென்ற கடைக்குட்டி பையன், அம்மாவை காணவில்லை என்றதும், அவள் அறைக்கு வந்தான். அப்பா பக்கத்தில் நின்று கண்ணீர் சிந்து கொண்டிருந்தார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை
“ஏப்பா அழறீங்க..? அம்மா என்ன… இன்னும் தூங்கிட்டு இருக்காங்க.?”
ஐயோ மகனே செந்தில், அம்மா நம்மளை விட்டுப் போய்விட்டாளடா.! கதறினான்.
விஷயம் அறிந்து பக்கத்து வீட்டிலிருந்து பெண்மணிகள் வந்து துக்கத்துடன் விசாரித்தனர். “என்ன ஆச்சு எப்படி …? நேற்று கோயில் வந்த போது கூட , நல்லா தான் பேசிகிட்டு இருந்தாங்க .எப்படி ஆச்சு இப்படி ..?” என புலம்பி தீர்த்தார்கள்.
தோழிகள் அனைவரும், மூக்கின் மேல் விரலை வைத்து ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். “எப்ப பாத்தாலும் குடும்பம் குடும்பம்னு சொல்லி அதுக்காகவே உழைச்சுகிட்டு இருந்தா ..இப்ப இப்படி .. எல்லாரையும் தவிக்க விட்டுட்டு போயிட்டாளே.”
அவள் தோழி மங்கைக்கு மட்டுமே அவளின் சோகம் புரியும். சங்கரி தன் மன வருத்தங்களை மங்கையிடம் மட்டுமே அவ்வப்போது பகிர்ந்து கொண்டிருக்கிறாள்.
சங்கரி இப்படி போய் விட்டாயே..,!! குடும்பத்துக்காகவே வாழ்ந்து எந்த சந்தோஷமும் இல்லாமல் இப்படி வாழ்க்கையை தொலைத்து விட்டாயே…! எனக் குமுறிய மங்கை வெளியே ஏதும் சொல்லவும் முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாமல், தனக்குள் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.
அன்று மாலை எல்லாம் முடிந்து விட்டது. சங்கரி போய்விட்டாள். குடும்ப கௌரவம் என பார்த்து பார்த்து, மனதுக்குள்ளையே ,வெந்து வெந்து, அவள் இதயம் நின்று விட்டது.. உயிருள்ள சடலமாய் வாழ்ந்து கொண்டிருந்த சங்கரி, இப்போது உயிரற்ற சடலமாய் போய்விட்டாள்.
சங்கரியின் மரணம் இயற்கையான மரணம் அல்ல. அவளது மன உளைச்சலின் உச்சம். வடிகால் இல்லாத மன வேதனை . விடுதலைக்கு ஏங்கிய மனசு. அந்த துக்கம் அவளது இதயத்தை பிளந்தது. ஆகவே இது பாஸ்கர் செய்த கொலை என்று நினைத்தபடி, மங்கை தன் வீட்டிற்குச் சென்றாள்.
இருபது நாட்கள் கழித்து , ஒருநாள் மங்கை சங்கரியின் குழந்தைகளை பார்த்து வரலாம் என வந்திருந்தாள். “என்ன சார் எப்படி இருக்கீங்க.. ? சங்கரி இல்லாம எப்படி வீட்டை மேனேஜ் பண்றீங்க.? அவளே எல்லா வேலையும் பார்த்துக்கிட்டு இருந்தா. அவளோட உழைப்பை யாராலும் ஈடுகட்டமுடியாது .இப்போ எப்படி சமாளிக்கிறீங்க சார்.”
“ஒரு சமையக்கார அம்மா வந்து சமைச்சிறாங்க. மற்ற வேலைக்கு ஒரு வேலைக்கார பொண்ணு வரும்.. வீடு எல்லாம் கிளீன் பண்ணி, வேலைய முடிச்சுட்டு போறாங்க . பிள்ளைங்க அவங்க வேலையை அவங்களே பார்த்துக்கிறாங்க. நானும் கொஞ்சம் கவனிச்சிக்கிறேன் ஓடுது.” சாதாரணமாச் சொன்னார் சங்கரியின் கணவர்..
மங்கை தன் மனதிற்குள் சமையல்காரம்மா சமைப்பதற்கும், மனைவி சமைப்பதற்கும் , உள்ள வித்தியாசம் இவருக்கு தெரியுமா..?
திரும்பி… பக்கத்தில் நின்று கொண்டிருந்த சங்கரியின் 16 வயது மகள் ரம்யாவை கவனித்தாள். அவள் கண்கள் கலங்கி, கடலாகி எப்போது பொங்கும் என்ற நிலையில் இருந்தது. மங்கை ரம்யாவை அணைத்துக் கொண்டாள். கண்ணீர் மலமலவெனக் கொட்டியது… அந்தக் கண்ணீரின் உள் அர்த்தம் மங்கையால் முழுவதும் உணர முடிந்தது.
“அடிக்கடி வாங்க ஆன்ட்டி” என ரம்யா கேட்டுக்கொண்டாள்.
மங்கையை வழி அனுப்ப வாசலுக்கு வந்த ரம்யா, மங்கையை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தாள். எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது ஆன்ட்டி. அம்மா இறந்ததிலிருந்து நான் ஒரு நாள் கூட நல்லா தூங்கல. ஏதோ திடீர்னு அனாதையாகி விட்டது போல ஒரு உணர்வு. எனக்கு யாருமே இல்ல அப்படிங்கிற ஒரு உணர்வு தான் நாள் முழுவதும் என் மனசுக்குள்ள இருக்கு.
ரம்யாவை எப்படி ஆறுதல் படுத்துவது என தெரியாமல் விக்கித்து நின்றாள் மங்கை.
இந்த பெண்ணின் மனநிலை அவள் அப்பாவுக்கு புரியுமா..? அம்மாவை இழந்த பதினாறு வயது பெண் குழந்தையின் மனநிலையை மங்கையால் புரிந்து கொள்ள முடிந்தது.
அம்மா இத்தனை வருஷத்துல எங்களை விட்டுட்டு ஒரு நாள் கூட எங்கேயும் போனதில்ல ஆன்ட்டி .அப்பா விடவும் மாட்டாங்க . எங்க அம்மா கடைசியா.. ஆசையா ஒரு நாள் உங்களோட, எல்லாரும் சேர்ந்து பிக்னிக் போறேன்னு கேட்டாங்க .அதுக்கு கூட அப்பா விடல. இப்போ ஒரேயடியா எங்களை விட்டு போயிட்டாங்களே ஆன்ட்டி.
இந்த வேலைக்காரம்மா மொத்த மொத்தையா தோசை ஊத்துறாங்க ஆன்ட்டி .தோசையை ஊத்தி அடுக்கி வைத்து விடுகிறார்கள். ஆறிப்போய்விடுகிறது . எங்க அம்மா கையால , சுட சுட மெல்லிசா தோசை சுட்டு சாப்பிடணும்னு ஆசையா இருக்கு ஆன்ட்டி. எங்க அம்மா மடியில தலை வச்சு படுக்கணும் என தோணுது. ரம்யா கேவி கேவி அழுவதை பார்க்க முடியவில்லை மங்கையால். எப்படி இந்த பெண்ணுக்கு ஆறுதல் சொல்வது .? யாரால் ஆறுதல் சொல்ல முடியும்..?
தினம் தினம் இப்படி செத்து செத்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற பல சங்கரிகளின் இதயம், இப்படி ஒருநாள் , பாரம் தாங்காமல் நின்று விடுகிறது. பாஸ்கரன்கள் தாங்கள் கொலைகாரர்கள் என்பது கூட தெரியாமல், உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற நினைவோடு வீடு வந்து சேர்ந்தாள் மங்கை.
மறுநாள் “அப்பா… அப்பா.. ரம்யா சாப்பிடவே இல்லப்பா .சாப்பிடாம ஸ்கூலுக்கு கிளம்புற…” என்றான் ரம்யாவின் தம்பி.
“ஏய் என்ன ரம்யா.. ஏன் சாப்பிடல.? போய் உட்கார்ந்து சாப்பிடு.”
“எனக்கு சாப்பிட பிடிக்கலப்பா. அந்த தோசையை யாரு சாப்பிடுவா? வறட்டி மாதிரி இருக்கு.”
“இருக்கிறதை சாப்பிட்டு தான் ஆகணும். வேற வழி இல்ல. பொம்பள புள்ள இப்படி வாய்ருசி எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்க கூடாது. உங்க அம்மா எப்படி இருந்தா தெரியும்ல.”
அதைக் கேட்டவுடன் ரம்யாவிற்கு கோபம் கோபமாய் வந்தது.
“எங்க அம்மாவ பத்தி ஏதாவது பேசினீங்க எனக்கு கெட்ட கோபம் வரும் . அம்மாவை மாதிரி என்னையும் இருக்க சொல்றீங்களா..? அம்மா இறந்ததே உங்களால்தான். எனக்கு இங்கே இருக்கவே பிடிக்கல. ஏன் அம்மா மாதிரி நீங்க எங்களுக்கு… தோசை சுட்டு கொடுங்களேன் .நான் சாப்பிட்டு போறேன்.”
முறைத்தான் பாஸ்கர்.
“என்னப்பா முறைக்கிறீங்க. என் ஃப்ரெண்டோட அம்மாவும் வேலைக்கு தான் போறாங்க . அவங்க தான் வீட்ல சமைச்சுட்டு எல்லாருக்கும் எல்லாம் பண்ணிட்டு ஆபீசுக்கு போறாங்க. இப்பதான் அம்மா போய் சேர்ந்துட்டாங்களே. நீங்க தானே இருக்கீங்க. அப்ப அம்மாவுக்கு பதில் நீங்க எங்களுக்கு சமைச்சு கொடுக்க கூடாதா? மெல்லிசா தோசை சுட்டு கொடுக்க கூடாதா..? ஏன் உங்களுக்கு தோசை சுட தெரியாதா ..?”
மகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பாஸ்கரன் மௌனமாய் இருந்தான்.
“அம்மா ஒருநாள் மொத்தையா தோசை சுட்டதற்கு அந்த கத்து கத்துனீங்க. சமையக்காரி செய்த வரட்டு தோசையை இப்போ சாப்பிட்டு போறீங்க. ஒரு நாளாவது அம்மா சமையலை நல்லா இருக்குன்னு பாராட்டி இருப்பீங்களா.? குறை மட்டும் நல்லா சொல்வீங்க. ஒரு நாளும் அம்மா ஓய்வா உட்கார்ந்து பார்த்ததில்லை. ஆனா எப்ப பாத்தாலும் சும்மா தானே இருக்க.. சும்மா தானே இருக்க … வேலைய பாரு. இதே பேச்சு. எத்தனை தடவை அவர்கள் யாருக்கும் தெரியாமல் அழுது கொண்டிருந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?”
“அம்மா இருக்கும்வரை ஒரு நாள் கூட ,அவர்களை அவங்க விருப்பப்படி வெளியே எங்கேயும் போக விடல . ஏதாவது கேட்டா வேலைய பாரு.. வேலைய பாரு.. அப்படின்னு ஒரு டயலாக். இப்போ ஒரேயடியா வேலைய பாக்க போய் சேர்ந்துட்டாங்க. அம்மா இல்லாம நாங்க தான் இப்ப கஷ்டப்படுறோம். அம்மா இல்லாத வீடு வீடாவே இல்லை. ஒரே வெறுப்பா இருக்கு.”
இப்ப சமையல்காரிக்கு ஒரு சம்பளம். மேல் வேலை பார்க்கும் வேலைக்காரிக்கு ஒரு சம்பளம் . டிரஸ் அயர்ன் பண்ண தனியா கொடுக்குறீங்க. எவ்வளவு காசு செலவு செய்கிறீர்கள். இவ்வளவு செலவு செய்தும் வீடு வீடா இல்ல. அம்மா இருக்கும் போது வீட்டுக்குள்ள நுழையும் போதே அப்படி ஒரு சந்தோஷமா இருக்கும் . அவ்வளவு நீட்டா வீட்டை வச்சிருப்பாங்க . எல்லாமே இருக்க வேண்டிய இடத்துல கரெக்ட்டா இருக்கும். இப்ப வீடே அலங்கோலமாக கிடக்கு. துவைத்த துணிய மடிக்க கூட ஆள் இல்லை. இப்ப அந்த வேலை எல்லாம் நான் பார்த்து கிட்டு இருக்கேன். இனிமே உங்க துணியை நீங்க தான் மடிச்சு வச்சுக்கணும். தம்பி டிரஸ்ஸை அவனே மடித்துக் கொள்ளட்டும். வீட்டுக்கு வரும்போது என் ஸ்கூல் விஷயங்கள சொல்றதுக்கு கூட ஒரு ஆள் இல்ல. என்னை ஹாஸ்டல்ல போய் சேர்த்துருங்கப்பா.”
“என்ன ரம்யா ரொம்ப ஓவரா பேசுற .எங்கே இருந்து வந்தது இந்த வாய்”
“அப்படி தாம்ப்பா பேசுவேன். அப்படிதான் பேசுவேன். அம்மா மாதிரி இருக்க மாட்டேன்”
“அன்றைக்கு என்னவோ பாட்டி கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க. ரம்யாவுக்கு கல்யாணம் செய்து கொடுத்த பிறகு இவ போயிருந்தா கூட நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன்னு .எனக்கு கல்யாணம் அப்படிங்கற விஷயத்தை ….சுத்தமா மறந்துடுங்க. நான் எவனையுமே கல்யாணமே பண்ணிக்க போறதில்லை. உங்களை மாதிரி ஆம்பிளைகிட்ட, அம்மா மாட்டிகிட்டு முழிச்ச மாதிரி, நான் யார்கிட்டயும் மாட்டிகிட்டு வாழ தயாரா இல்லை. இங்க அம்மாவை மாதிரி, என்னைய எதற்கும் அடிபணிய வைக்கலாம்ன்னு நினைக்காதீங்க. அப்படி நீங்க ஏதாவது செஞ்சீங்க. நானும் அம்மா கூட போயிருவேன். அம்மா ஹார்ட் அட்டாக் – ல இறந்திருந்தாங்கன்னா அதுக்கு நீங்க தான் காரணம். அம்மா மாதிரி குடும்ப கௌரவம் அது இது என பார்த்துக்கொண்டு, அமைதியாக இருக்க மாட்டேன். நினைவு இருக்கட்டும்” என்று கூறிவிட்டு, பள்ளிக்கு புறப்பட்டு சென்றாள் ரம்யா.
மகள் பேசியதை கேட்டு அதிர்ந்து போனான் பாஸ்கரன். மகள் ரம்யா பேசிய பேச்சு அவர் காதுகளில் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது . என்னால் தான் சங்கரி இறந்தாளா.! அவள் இறப்புக்கு நான் தான் காரணமா.? நான் இவ்வளவு தவறுகளா செய்து இருக்கிறேன்.? இதுவரை புரியாதது மகள் சொல்லி புரிகிறது. ஆம் அவளை நான் மனுஷியாய் நடத்தியதில்லை . ஏன் எனக்கு இதுவரை புரியவில்லை. ஆண் என்ற ஆணவம் அதை மறைத்து விட்டது. பாவம் சங்கரி. எனது கத்தலுக்கு பயந்து, குடும்ப கௌரவம் கருதி, குழந்தைகளின் நலன் கருதி தனக்குள்ளேயே செத்துக் கொண்டிருந்தவள், இப்போது ஒரேடியாய் போய் விட்டிருக்கிறாள். இறைவா என்னை மன்னித்துவிடு. சங்கரி என்னை மன்னித்துவிடு என மானசீகமாய் மன்னிப்பு கேட்டான்.
அடுத்த நாள் ரம்யா பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்தாள். கிச்சனில் சமையல்கார அம்மா இல்லை. அப்பா கரண்டியோடு நின்று கொண்டிருந்தார். ரம்யா சாப்பிட வா என அழைத்தார். டைனிங் டேபிளில் சூடாய் மெல்லிதாய் ,தோசை நெய் விட்டு, மொருமொருவென இருந்தது.
“என்னப்பா சமையல்கார அம்மா வரலையா.?”
“இனி வர மாட்டாங்க.”
ரம்யா ஆச்சரியத்தோடு அப்பாவை நோக்கினாள். அப்பா புன்முறுவலோடு ரம்யாவின் தலையினை கோதி, “அப்பா சுட்ட தோசை எப்படிம்மா இருக்கு?”
“நல்லா இருக்குப்பா! இன்னொரு தோசை வேணும்ப்பா. ஆனா அம்மா சுட்ட தோசைக்கு ஈடாகாதுப்பா”. ரம்யா அப்பாவின் தோள்களின் சாய்ந்து கொண்டாள்.
“சாரிம்மா ரம்யா.”
“என்னப்பா… நீங்க போயி…!” ரம்யாவின் கண்கள் கலங்கின.
![]() |
இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
குங்குமச் சிமிழ்
ஆர்.வெங்கட்ராமன்
May 28, 2026
நாவினால் சுட்ட வடு
எஸ்.மதுரகவி
May 28, 2026
திருட்டுப்பையன்
வல்லிக்கண்ணன்
May 28, 2026
