மண்ணுளிப் பாம்புகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 30, 2017
பார்வையிட்டோர்: 8,536 
 
 

கதிரேசனின் மனைவி சரோஜாவுக்கு கேன்சர் முற்றிய நிலை. கடந்த இரண்டு வருடங்களாக அதனுடன் போராடிக் கொண்டிருக்கிறாள். கீமோதெரபியினால் அவளது தலைமயிர் முற்றிலும் உதிர்ந்துவிட்டது. கண்கள் வறட்சியுடன் முகம் பொலிவிழந்து அவளைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.

கதிரேசனுக்கு வயது முப்பத்தி எட்டு. திருமணமாகி பத்து வருடங்கள் ஆகியிருந்தாலும் மனைவிமீது பாசத்தையும், அன்பையும் மட்டுமே பொழிபவர். அதிர்ந்து பேசாதவர். சரோஜாதான் வாழ்க்கையே என்றிருந்த நிலையில், மனைவிக்கு ஏற்பட்ட இந்தக் கொடிய நோயினால் இரண்டு குழந்தைகளுடன் தற்போது தவித்துக் கொண்டிருக்கிறார். மூத்த பையன் நரேனுக்கு எட்டு வயது. அடுத்தவள் அர்ச்சனாவுக்கு ஐந்து.

கதிரேசன் சென்னையின் ஒரு பிரபல ஐடி கம்பெனியில் ப்ராஜெக்ட் மானேஜர். அவருக்கு பக்க பலமாக இருப்பது டீம் லீடர் ஆனந்தி. மிகவும் கெட்டிக்காரி. முப்பத்தி நான்கு வயது. இன்னமும் திருமணமாகவில்லை. ப்ராஜெக்ட் பற்றி கதிரேசனைவிட ஆழமாக தெரிந்து வைத்திருப்பவள்.

ப்ராஜெக்ட் தொடர்பாக அடிக்கடி அமெரிக்கா பறப்பவள் என்றாலும் நேரம் கிடைக்கும்போது வீணையில் ‘சின்னஞ்சிறு கிளியே’ வாசிப்பவள். வித்தியாசமாக எதையும் யோசிப்பவள். ரசனையுணர்வு அதிகம்.

அவளுக்கு கடந்த ஐந்து வருடங்களாக கதிரேசனின் மனைவி சரோஜாவையும் குழந்தைகளையும் நன்றாகத் தெரியும். சரோஜாவுக்கு ஒரு நல்ல நண்பியாக இருப்பதுடன், அவ்வப்போது அவர்கள் வீட்டிற்கு வந்து குழந்தைகளுடன் விளையாடுவாள். அமெரிக்கா போகும்போது குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கி வருவாள்.

ஆனந்தி வேலையில் எவ்வளவு கெட்டிக்காரியோ அதே மாதிரி பேச்சு, செயல்களிலும். அவளது பேச்சுக்கள் தண்ணீர் தெறிப்பாகத்தான் இருக்கும். யாரிடமும் எதற்காகவும் தாட்சண்யம் காட்டமாட்டாள். இரக்கமே படமாட்டாள். அவளது அபிமானம் குறியீடு அற்றது. சமூக அர்த்தங்கள் இழந்தது. எந்தத் தனிநபருக்கும் என்ற பிரத்யேகத் தளங்கள் இல்லாத பிரபஞ்ச வீச்சு அவள்.

டாக்டர் அன்று கதிரேசனிடம் தனிமையில் மெல்லிய குரலில் “உங்க மனைவிக்கு கேன்சர் முற்றிவிட்டது. மிஞ்சிப்போனால் இன்னும் இரண்டு மாதங்கள் தாங்கும்….அவசியமான உறவினர்களை அவ்வப்போது வந்து பார்த்துவிட்டுப் போகச் சொல்லுங்கள்…நீங்களும் உங்க மனைவியிடம் என்ன பேசவேண்டுமோ அதை அனைத்தையும் மனம்விட்டுப் பேசிவிடுங்கள்…” என்றார்.

அடுத்த வாரத்தில் ஒருநாள் சரோஜா தனிமையில் கதிரேசனிடம், “எனக்கு எல்லாம் தெரியும், நானும் படிச்சவதான்…சாவை எதிர்நோக்கி நான் காத்திருப்பது எனக்கும் புரிந்துதான் இருக்கிறது….என்னுடைய கடைசி வேண்டுகோளை நிறைவேற்றுவீர்களா?” என்றாள்.

“கண்டிப்பா சரோ…” அவன் கண்கள் கலங்கியது.

“நீங்க நான் உயிருடன் இருக்கும்போதே ஆனந்தியை கல்யாணம் பண்ணிக்கணும். அதுதான் உங்களுக்கும் நம் குழந்தைகளுக்கும் நல்லது.
நானும் ஆனந்தியும் இதைப் பத்தி நிறைய பேசியாச்சு…அவளுக்கும் இதில் விருப்பம் இருக்கு… இன்பாக்ட் இந்தக் கல்யாணத்தை ப்ரொப்போஸ் பண்ணதே நான்தான். உங்க சம்மதம்தான் எங்களுக்கு இப்ப தேவை. அவ ரொம்ப நல்ல பொண்ணுங்க…”

கதிரேசன் சுத்தமாக அதிர்ந்தான். அவனுக்குத் தெரியாமலும் இந்த வீட்டில் ஏதோ நடக்கிறது…. இதை அவன் சற்றும் எதிர் பார்க்கவில்லை.

“சரோம்மா உனக்கு ஒண்ணும் ஆகாது. எத்தனையோபேர் கான்சர் பைனல் ஸ்டேஜ்ல இருந்து மீண்டு வந்திருக்காங்க. நீயும் வருவ. அவ வளர வேண்டிய பொண்ணு. படிச்சவ, பெரிய வேலைல இருக்கா. எல்லாம் தெரிஞ்ச மாதிரி எடுத்தோம் கவுத்தோம்னு பேசுவா. எனக்கு இதில் சம்மதமில்லை. வேற எதுவன்னாலும் கேளு சரோம்மா…ப்ளீஸ்”

“அவசரப்படவேண்டாம்…..நிதானமா யோசிங்க.”

தொடர்ந்து பேசியதாலோ என்னவோ சரோஜா சற்று அயர்வுடன் கண்களை மூடிக்கொண்டாள்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. குழந்தைகள் பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஆனந்தி சரோஜாவைப் பார்க்க வந்தாள். சரோஜா தூங்கிக் கொண்டிருந்தாள்.

கதிரேசன் உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு, “ஆனந்தி, என்னைப் பற்றிய விஷயத்தை என்னிடம் பேசு….சரோவ கஷ்டப்படுத்தாதே…
அவளோட நிலைமை உனக்குத் தெரியும்” என்றான்.

ஆனந்தி உடனே புரிந்துகொண்டாள்.

“ஓ… சரோக்கா உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாங்களா? இந்த டாப்பிக்கை ஆரம்பிச்சதே சரோக்காதான்… எனக்கும் இதில் முழு சம்மதம். டு பி வெரி ப்ராங்க் எனக்கும் இந்த அரேஞ்ச்மென்ட் ரொம்ப நல்லதாகப் பட்டது கதிர். அதுக்கு கரணம் என் சிறுவயது வாழ்க்கை சோகங்கள்…

“இந்தச் சமூக அமைப்பில் ஒரு குழந்தைக்கு அதன் வாழ்க்கையில் முதல் பாதுகாப்பாக விளங்குபவன் ஓர் ஆடவன்தான். அந்த ஆடவன் தந்தை என்கிற ஸ்தானத்தில்தான் அனைவருக்கும் முதலில் அறிமுகமாகிறான். ஒரு தந்தை பாதுகாப்பு என்கிற போது, அம்மா என்பவள் அன்பு என்பதாக அமைகிறாள். இந்த இரண்டு அச்சுக்களில்தான் நம் எல்லோருடைய வாழ்க்கையும் தொடக்கத்தில் ரம்மியமாகச் சுழல ஆரம்பிக்கிறது, அச்சுக்கள் செம்மையாக இருக்கும் வரையில்….

“இவற்றில் ஏதேனும் ஒரு அச்சு சீர்கெடும் பொழுது அதற்கேற்ப எதிர் விளைவுகளும் குழந்தைகளின் மனநிலையில் ஏற்படுகின்றன. என் விஷயத்தில் அந்தச் சீர்கேடு என் அப்பா. நான் சிறுமியாக இருந்தபோதே என் அப்பா வேறு ஒருத்தியுடன் ஓடிப்போனார். ஸோ, பாதுகாப்பு என்பதே என் வீட்டில் ஒளி குன்றிப்போனது. அதன் தொடர்ச்சியாக என் அண்ணன் தறுதலையாக சுத்த ஆரம்பித்தான். நிறைய குடித்தான். அவனும் ஒருநாள் கடிதம் எழுதி வைத்துவிட்டு பம்பாய்க்கு ஓடிவிட்டான்.

“………………….”

“ஆதர்ஸ ஆடவன் என்பது ஆதர்ஸ தந்தையில்தான் தொடங்க வேண்டும். அனால் எனக்கு அது கசப்பாக அமைந்துவிட்டதால் ஆண்கள் மேலேயே எனக்கு ஒரு நம்பிக்கையின்மை ஏற்பட்டு விட்டது கதிர். நல்லதொரு ஆடவன் எங்கள் குடும்பத்தில் இல்லாது போய்விட்டதால் எனக்கும் அம்மாவுக்கும் ஏற்பட்ட இம்சை மிக்க வலி, ரணம், சீழ் கொட்டும் காயம் இவைகளை நான் சொல்லி விளக்க முடியாது கதிர். இந்த ரணத்திலும் நல்லவேளையாக நான் போராட்டத்துடன் படித்து முடித்து ஒரு நல்ல வேலையை தேடிக் கொண்டேன்.

“அதற்கு அப்புறம்தான் ஒரு பொறுப்புள்ள ஆண்மகனாக என் வாழ்க்கையில் முதன் முதலில் உங்களைப் பார்த்தேன். ஒரு பெண்ணிற்கு நல்ல கணவனாக, இரண்டு குழந்தைகளுக்கு பாதுகாப்பான அப்பாவாகத்தான் நீங்கள் எனக்கு அறிமுகமானீர்கள். தவிர நம் கம்பெனியில் நீங்கள் பெண்களிடம் மரியாதையோடு பண்புடன் நடந்துகொள்ளும் விதத்தையும் நான் அருகிலிருந்து பார்க்கிறேன். ஒரு சீலம் மிக்க பொறுப்புள்ள குடும்பஸ்தனாக உங்களை நான் நன்கு அறிவேன்.”

“எல்லாம் சரி ஆனால் நான் என் வாழ்க்கையில் சலனமற்ற ஒரு நேர்கோட்டில் பயணிக்கத்தான் விரும்புகிறேன் ஆனந்தி.”

“அது உங்க இஷ்டம், எனக்கு உங்கமேல காதல், கத்தரிக்கா என்றெல்லாம் கிடையாது. உங்க மூலமா எனக்கு ஒரு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்னு நெனச்சேன்…இதை சரோக்காகிட்ட மனம்விட்டு பேசினேன். அவங்க என்னை நல்லா புரிஞ்சுகிட்டாங்க…. இதை நீங்க ஒரு இன்டரெஸ்டிங் லைப் ப்ரப்போசலா மட்டும் பார்த்தீங்கன்னா நமக்கு மியூட்சுவல் பெனிபிட் என்று உங்களுக்கும் புரியும்…..அதர்வைஸ் ஐ டோன்ட் வானட் யுவர் பிட்டி ஆன் மி.”

“இனிமே இந்த டாப்பிக்க எங்கிட்ட பேசாத ஆனந்தி, எனக்கு இது சுத்தமா பிடிக்கல.”

“ஓகே நீங்க வாழ்நாள் முழுதும் மண்ணுளிப் பாம்பாக ஒரே இடத்தில்தான் இருப்பேன்னா அது உங்க சாய்ஸ் கதிர்.”

சொன்னவள் எழுந்து வெளியேறத் தயாரானாள்.

“ஒன் மினிட் ஆனந்தி….மண்ணுளிப் பாம்பு ஒரே இடத்துல இருந்தாலும், அது விவசாயிக்கு உதவியா நிலத்தை அதே இடத்தில் மெதுவாக உழுது கொண்டிருக்கும். அதுமாதிரி நானும் என் இரண்டு குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா பொறுப்புடன் இருந்து அவர்களை பாதுகாக்கணும்னு ஆசைப்படறேன்.”

ஆனந்தி விருட்டென்று வெளியேறினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *